மாய யானையின் ஊர்வலம்
ஒரு மாநிலம் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் பெரியதாக இருப்பது மாநில வளர்ச்சிக்கு நன்மை தருமா என்று கேட்டால் நிர்வாகவியல் சார்ந்தவர்கள் சொல்லும் பதில் ‘இல்லை’ என்பது தான். பரப்பளவில் சிறியதாக இருப்பதே நிர்வாக வசதிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்ற நிலை என்பது நவீன அரசியல் அறிவு சொல்லும் உண்மை . பழைய வரலாறும் கூட அதைத் தான் சொல்கிறது. சோழப் பெருமன்னர்கள், தங்கள் நாட்டை மண்டலங்களாகவும் துணை மண்டலங்களாகவும் பிரித்து ஒவ்வொன்றிற்கும் பொறுப்புடையவர்களாக மண்டலாதிபதிகளை நியமித் திருந்தார்கள் என்று வரலாற்றுப் புத்தகங்களில் படித்திருக்கிறோம். இந்தியாவில் ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்கள் இருந்ததாகவும் அவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட மாமன்னர்கள் இருந்ததாகவும் வரலாற்று ஆதாரங்கள் சொல்கின்றன.
நிகழ்கால அரசியல் அறிவையும் வரலாற்று நிகழ்வுகளையும் பொய்யாக்கும் விதத்தில் இந்தியாவில் ஒரு மாநிலம் இருக்கிறது. அதன் பெயர் உத்தரப் பிரதேசம். மக்கள் தொகை அளவிலும் நிலப்பரப்பு அடிப்படையிலும் மிகப் பெரிய மாநிலம்அவ்வாறு இருப்பது அந்த மாநிலத்துக்குப் பெருமையே அல்ல; அம்மாநிலம் பொருளாதார வளர்ச்சியடையாமல் இருப்பதற்குக் காரணமே பெரிதாக இருப்பது தான் என்று ஒருவர் வாதிடலாம். ஆனால் ஜனநாயக அமைப்பில் பெரும்பான்மைக்கு உள்ள வலிமையை உணர்ந்த வர்கள் அப்படிச் சொல்ல மாட்டார்கள். இந்தியாவின் தலைமை யமைச்சர் களாகப் பல ஆண்டுகள் அதிகாரம் செலுத்திய நேரு குடும்பத்தின் சொந்த மாநிலம் உத்திரப் பிரதேசம் என்பது மட்டுமல்ல; காங்கிரஸ் அல்லாத கூட்டணிக் கட்சிகளின் ஆட்சிக்குத் தலைமை தாங்கிய சௌத்திரி சரண்சிங், விஸ்வநாத் பிரதாப் சிங், அடல்பிகாரி வாஜ்பாய் போன்றவர்களைத் தேர்வு செய்து அனுப்பிய மாநிலமும் உத்திரப்பிரதேசம் தான். இந்தியப் பாராளு மன்றத்திற்கு அதிகப் படியான உறுப்பினர்களைத் தேர்வு செய்து அனுப்பும் அந்த மாநிலம் இந்திய தேசத்தின் நிகழ்கால அரசியலில் வகிக்கும் பங்கு எப்பொழுதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கிறது.
நிகழ்கால அரசியல் போக்கின் திசையைத் திருப்பி விடும் நிகழ்வுகளும் இயக்கங்களும் உத்தப்பிரதேசத்திலிருந்து கிளம்பி இருக்கின்றன. சுதந்திர இந்தியாவின் அரசியல் திசையைத் திருப்பிய பெரும் நிகழ்வுகள் பல உள்ளன என்றாலும் முதலிடத்தை பிடிக்கக் கூடிய நிகழ்வு பாப்ரி மஜ்ஜித் இடிப்பு என்பதே அரசியல் நோக்கர்களின் கணிப்பு. அயோத்தி நகரத்தில் இருந்த அந்தக் கட்டிடப் பகுதிதான் புராண நாயகன் ராமர் பிறந்த இடம் என்ற சர்ச்சையை மையப் படுத்தி 1992-இல் ஏற்பாடு செய்யப்பட்ட ரத யாத்திரையும் கட்டிட இடிப்பும் இந்தியாவில் ஏற்படுத்திய அதிர்வலைகள் கடந்த பத்தாண்டு களாக கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. மதப் பெரும் பான்மையின் ஆட்சி என்ற அடிப்படையில் இயக்கம் நடத்தும் பாரதீய ஜனதாகட்சியின் எழுச்சிக்குக் காரணம் அந்த நிகழ்வுதான்.1992 ல் ஏற்பட்ட அதிர்வலை களுக்குச் சற்றும் குறையாத அதிர்வலைகளை கடந்த மாதத்தில் நடந்த உத்திரப் பிரதேச தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. சமயச் சார்பற்ற அரசியல் என்பதையும், மதப் பெரும்பான்மையின் அதிகாரம் என்பதையும் ஓரங்கட்டி விட்டு எழுந்துள்ள இந்த அதிர்வலைக்குப் பின்னணியில் இருப்பது சாதிப் பெரும்பான்மையின் அதிகாரம் என்னும் கருத்தியல் ஆகும்.
பகுஜன் கட்சியின் தலைவியான மாயாவதி தனது சின்னமான யானையை முன்னிறுத்தி அடைந்துள்ள இந்த வெற்றி இந்தியாவிற்குப் புது வகை அரசியலை அறிமுகப் படுத்தியுள்ளது என்று தேசியப் பத்திரிகைகள் விவாதித்துக் கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சிகளின் கூட்டணி என்பதற்கு மாறாகச் சாதிகளின் கூட்டணியால் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பதும், சாதி அமைப்பில் அடிநிலையில் உள்ள ஒருவரின் தலைமையை அதிகாரத்தின் உச்சியிலேயே இருந்து பழக்கப் பட்ட ஆதிக்க சாதியினர் தொடர்ந்து ஏற்றுச் செயல்பட மாட்டார்கள் எனவும் ஆருடம் கூறப்பட்டாலும் மாயாவதியின் அரசியல் எதிர்கால இந்தியாவின் அரசியலாக இருக்கப் போகிறது என்பதை மறுக்கவும் முடியாது.
மாயாவதியின் தலைமையை ஏற்று வெற்றி பெற்றுள்ள 206 சட்டமன்ற உறுப் பினர்களில் தலித்துகள் 61 பேர்தான். பிராமணர்களின் எண்ணிக்கை 34. ஆக மொத்தம் 95 தான். மீதமுள்ள 111 பேரில் இசுலாமியர்கள் 30; இதரப் பிற்பட்ட சாதியினர் 51; ஆதிக்க சாதிகளான ராஜ்புத், ஜாட், குர்மி,யாதவ்கள் 30 பேர் தேர்வு பெற்றுள்ளனர் எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.இந்தப் புள்ளி விவரங்களைச் சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ளும் ஒருவர் இந்தக் கூட்டணியை வெறும் பிராமணர் -தலித் கூட்டணி என்று சொல்லி விட முடியாது. சாதி அமைப்பில் இடையில் உள்ள பிற்பட்ட வகுப்பினரும் மிகப் பிற்பட்ட வகுப்பினரும் கூட பகுஜன் சமாச கட்சியின் உறுப்பினராகி, அக்கட்சியின் சின்னமான யானையை ஏற்றுக் கொண்டு தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை மறந்து விடவும் மறுத்து விடவும் முடியாது. ஆனால் தேசியப் பத்திரிகைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் திரும்பத் திரும்பப் பிராமணர் -தலித் கூட்டணி என்றே சொல்கின்றன.
உத்திரப் பிரதேச அரசியலைக் கடந்த இருபதாண்டுகளாகக் கவனித்து வரும் யாரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள் . இன்று மாயாவதி தனியொரு கட்சி யின் தலைவியாக வெற்றி பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்துத் தரக் கூடிய கருத்தியல் தளத்தையும் செயல் தளத்தையும் ஏற்படுத்தியவர் அவரது அரசியல் முன்னோடி கன்சிராம் என்பதை வரலாறு மறக்காது.. ஏற்கத் தக்க கூட்டணி அல்ல என்ற போதிலும் பாரதீய ஜனதாக் கட்சியோடு கூட்டணி சேரும்படியும் , விரும்பத் தகாத விளைவுகள் ஏற்படும் என்ற தெரிந்த நிலை யிலும் முலயாம் சிங்கின் சமாஜவாதிக் கட்சி யோடும் கூட்டணி வைத்து அரசியல் அதிகாரத்தைப் பெறுவது பற்றி வழிகாட்டியவர் கன்சிராம். தலித் துகளுக்கு அரசியல் அதிகாரத்தின் ருசி என்ன என்பதை அறியச் செய்ய வேண்டும் என்ற ஒரே குறிக் கோளோடு கன்சிராம் எடுத்த முடிவுகள் தான் இன்று தனியொரு கட்சியின் வெற்றியாக மாற்றிக் காட்டியிருக்கிறது. மாயா வதியின் வெற்றிக்குக் காரணமான அந்த மாய யானையின் தும்பிக்கைக்குக் கூட்டணி வலிமையை எவ்வாறு உருவாக்குவது என்னும் சிந்தனையைப் பலவிதமாக யோசித்துச் சொன்னவர் அவர்.1970-களுக்குப் பின் தனக்கான கொள்கையையும் இலக்குகளையும் தீர்மானித்துக் கொண்டு செயல்பட்ட அரசியல் சிந்தனையாளர்களில் முதன்மையானவர் கன்சிராம் என்பதை வரலாறு எழுதிக் காட்டத் தான் போகிறது.
சுதந்திர இந்தியாவில் அடித்தள மக்கள் ஆட்சி அதிகாரத்தின் ருசியிலிருந்து விலக்கி வைக்கப் பட்ட தந்திரத்தை இப்போது உணர்ந்து விட்டார்கள். அவர் களுக்கு எதிராக இருந்த தடைகள் எவை எனச் சரியாகக் கணிக்கும் பக்குவநிலைக்கு வந்து விட்டார்கள் என்பதும் ஓரளவு உண்மைதான். தன்னை அணுகும் ஒவ்வொருவரையும் சந்தேகத்தோடு எதிர்கொள்ளும் அறிவை ஏற்கெனவே அம்பேத்கரின் சிந்தனைகள் கற்றுத் தந்துள்ளன. என்றாலும் கன்சிராமின் வழிகாட்டுதலில் உத்திரப் பிரதேசத்தில் மாயாவதி நடத்திக் காட்டிய அந்த மாயத்தைப் போல ஒவ்வொரு மாநிலத்திலும் தலித் அரசியல் மாயங்கள் நிகழ்த்தும் எனச் சொல்லவும் முடியாது. ஏனெனில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் அதற்கெனத் தனியான குணங்களையும் சமூகவயத் தன்மைகளையும் கொண்டிருக்கின்றன.எடுத்துக் காட்டாகத் தமிழ்நாட்டின் நிலைமைமையையே கூட எடுத்துக் கொள்ளலாம்.
இங்குள்ள பட்டியல் இனத்தவர்கள் தலித் என்ற அடையாளத்தோடு ஒன்றிணைவதில் பெரும் தடைகள் இருப்பதாக நம்புகின்றனர். வடமாவட்டங்களில் செல்வாக்குப் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் பட்டியல் இனத்தில் ஆதிதிராவிடர்களை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்பு என்றே நம்பப்படுகிறது. அதே போல தென்மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் தேவேந்திர குலத்தவரைத் திரட்டும் சக்தி கொண்டதாகப் புதிய தமிழகம் கருதப்படுகிறது. இவ்விரு அமைப்புகளும் அடிப்படையில் தமிழ்த் தேசியம் பேசும் அமைப்புகளாகத் தோன்றுவதால் தெலுங்குமொழியைப் பேசும் மொழியாகக் கொண்டிருக்கும் அருந்ததியர்கள் இவ்வமைப்புகளோடு பேச்சு வார்த்தைக்கே தயாரில்லாமல் இருக்கின்றனர்.
உத்திரப் பிரதேச மாதிரியைத் தமிழகத்திற்குப் பொருத்திக் காட்டி வெற்றி பெற விரும்பும் நிலையில் இம்மூன்று சாதியினரையும் வழி நடத்தும் இயக்கங்களும் தலைமைகளும் ஒன்றிணைவது முதல் நிபந்தனையாக இருக்கிறது. அடுத்த கட்டமாக அவர்கள் தமிழகத்தில் அதிகாரத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள சாதி, மொழி, மற்றும் மதச் சிறுபான்மையினருடன் விவாதத்தைத் தொடங்க வேண்டும். அந்த விவாதங்களில் பல்வேறு விதமான புரிதல்களும் விட்டுக் கொடுத்தல்களும் நடந்தாக வேண்டும்.
இதுவெல்லாம் நடக்குமா என்று கேட்டால் உடனடியாகப் பதில் எதுவும் சொல்லி விடமுடியாதுதான்.அதிகாரத்தை நோக்கிய பயணங்கள் நேர்கோட்டுப் பயணங்கள் அல்ல என்பதை அறிந்தவர்கள் அதற்கான முயற்சிகளைக் கைவிடுவதில்லை. விளிம்புநிலை மனிதர்கள் இப்போது அதை அறிந்தவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இந்திய தேசத்தின் யதார்த்தம்.
கருத்துகள்