December 27, 2009

இன்னும் சில நாசகாரக்கும்பல்கள் :இந்திரா பார்த்தசாரதியின் கதை


தினசரிச் செய்தித்தாள்களை வாசிக்கிறவர்களுக்கு நாசம் என்ற சொல்லை விளக்கிச் சொல்ல வேண்டி யதில்லை. ‘பயங்கரவாதிகளின் நாசவேலை’ என்ற சொற்றொடர் தினசரிகளின் அன்றாடப் பயன்பாட்டுச் சொற்றொடர்களில் ஒன்றாக மாறிப் பல ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த வாரம் பயங்கரவாதிகளின் இடத்தைப் புயல் மழை பிடித்துக் கொண்டு விட்டது. ‘புயல் மழையால் பயிர்கள் நாசம்; வீடுகள் சேதம்’ எனச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.


நாசம் பயங்கரவாதிகளோடு சேர்க்கப் படுவதும், மழைக்குப் பின்னால் சேர்க்கப்படுவதும் ஒன்றல்ல. இரண்டுக்கும் பாரதூரமான வேறுபாடுகள் உண்டு. மழை இயற்கையின் வேலை. தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளின் நாசவேலை திட்டமிடப்பட்ட ஒன்று. திட்டமிட்டுக் காரியத்தை நடத்திப் பேரழிவை ஏற்படுத்துவது நாசவேலை. இப்படிப் பட்ட நாசவேலைகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வதாகவும், திடீர்த்தாக்குதல்களாகவும், கட்டுப் பட்டுக் கிடக்கும் இயற்கையின் கட்டுப்பாடுகளை நீக்கி விடுவதாகவும் உலகம் முழுவதும் அறியப்படுகின்றன.

இவைகளைப் படைப்பாளிகள் நாசவேலை எனக் கருதிப் படைப்பாக்கம் செய்வதில்லை. அதற்கு மாறாகத் திட்டமிட்டு அப்பாவிகளை மேலெழ விடாமல் தடுக்கும் நிகழ்வுகளையே நாசவேலை என்று வரையறை செய்ய முற்படுகின்றனர். சமூகத்தில் அப்பாவிகளாக இருக்கும் மனிதர்களைக் கெடுப்பதற்குச் சதித்திட்டங்களைத் தீட்டுபவர்களைக் ‘கும்பல்’ என்ற சொல்லால் குறிப்பதோடு, நாசம் என்ற சொல்லுடன் இணைத்து நாசகாரக்கும்பல் என்றொரு சொற்கூட்டத்தை உருவாக்கித் தந்துள்ளது நவீன இலக்கிய உலகம். அப்படி உருவாக்கித் தந்த முன்னோடி, தமிழ்ச் சிறுகதையின் முன்வரிசை எழுத்தாளரான புதுமைப்பித்தன் என்பதைப் பலரும் அறிந்திருக்கக் கூடும்.

தன்னிடம் நிலபுலமோ , சொத்தோ இல்லாததால் தான் இந்த ஊர் தன்னை மதிக்கவில்ல; உதாசீனப் படுத்துகிறது. அதை மாற்றம் வேண்டும் என்றால் தன்னைச் சிறுமைப் படுத்திய சொந்தக் கிராமத்திலிருந்து வெளியேறி, வெளிநாட்டுக்குச் சென்று பணம் சம்பாதித்துக் கொண்டு திரும்பவும் வந்து சொந்த ஊரில் ஒரு நிலம் வாங்க வேண்டும் என நினைக்கிறான் ஒரு நாவிதன். அவனது எண்ணம் நிறைவேறவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

கையில் பணத்தோடு வேறு பெயரில் திரும்பவும் வந்தவன் அந்த ஊரில் நிலம் ஒன்றை வாங்க விலைபேசி முடிக்கிறான். ஆனால் பத்திரம் முடிப்பதற்கு முன்னால், அவன் யார் என்ற உண்மை ஊரில் உள்ள ஆதிக்கசாதிகளான வேளாளர்களுக்கும் மறவர்களுக்கும் தெரிந்து விடுகிறது. அதைத் தெரிந்து கொண்டதால், அவனை அந்த நிலத்தை வாங்க விடாமல் தடுத்து விடுகின்றனர். அப்படித் தடுத்த அந்த வேலையைச் சதி என்றும், அப்படிச் செய்தவர்களை நாசவேலைக் கும்பல் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார் புதுமைப்பித்தன். அவர் வைத்த நாசகாரக்கும்பல் என்னும் தலைப்பு பல பேரை ஈர்த்த ஒரு தலைப்பு.

சில கவிஞர்கள் அந்தத் தலைப்பைத் தங்கள் கவிதைக்குச் சூட்டியுள்ளனர்; சில கட்டுரையாளர்கள் தங்கள் கட்டுரையை இதே தலைப்பில் எழுதியுள்ளனர். புனைகதை யாசிரியரும் நாடகாசிரியருமான இந்திரா பார்த்தசாரதி தான் எழுதிய சிறுகதை ஒன்றிற்கே அதே தலைப்பைத் தந்துள்ளார். அந்தத் தலைப்பு புதுமைப்பித்தனின் சிறுகதைத் தலைப்பு என்று தெரிந்தே கொடுத்த தலைப்பு அது. அவர் காட்டிய கும்பலுக்குப் பதிலாக வேறுவகையான நாசகாரக் கும்பல் ஒன்றைத் தனது கதையில் காட்டுகிறார்.
புதுமைப் பித்தனின் நாசகாரக்கும்பல் வேளாண்மை சார்ந்த நிலமானிய மதிப்புகளில் ஊறிய ஆதிக்கசாதி மனப்பாங்கு கொண்ட நாசகாரக் கும்பல் என்றால், இந்திரா பார்த்தசாரதியால் அடையாளப்படுத்தப்படும் கும்பலை பணம் சார்ந்த முதலாளிய வாழ்க்கையால் மதிப்பீடுகளை இழந்த கும்பல் என அடையாளப்படுத்தலாம்.

விபத்தில் சிக்கிய எவருக்கும் முதலில் தர வேண்டியது மருத்துவ உதவி என்பதை உணராமல், எவ்வளவு நஷ்ட ஈடு வாங்குவது என்பதில் தொடங்கி விரியும் இந்தக் கதை, அதிகார வர்க்கத்திற்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையேயுள்ள உறவு எப்படிப்பட்டது என்பதையும், எல்லாவற்றையும் தீர்மானிக்கும் இடத்தில் பணம் இருக்கிறது என்பதையும் காட்ட முயல்கிறது. தன்னிடம் உள்ள பணத்தின் வலிமையாலும் அரசியல் அதிகாரத்தின் மூலமும் முறையான நடைமுறைகளை நடக்கவிடாமல் தடுப்பதோடு, பாதிக்கப்பட்டவரின் ரத்த உறவுகளைக் கூட தரப்போகும் பணத்தின் மூலம் மனம் மாறச் செய்யும் நிலைமைகள் இருக்கின்றன என்பதைச் சொல்லும் விதமாகக் கதையின் நிகழ்வுகளை அமைத்துக்காட்டுகிறார் காட்டுகிறார் இ.பா. அடிப்படையில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியைத் தொடங்கிய ஆர்.பார்த்தசாரதி, தனது படைப்பு களுக்கான அடையாளமாகச் சேர்த்துக் கொண்ட அவரது மனைவியின் பெயரோடு சேர்த்தே அறியப்படுபவர்.

தொடக்ககாலத்தில் சமூக விமரிசனமும், அரசியல் விமரிசனமும் கொண்ட புனைகதைகளுக்காக அதிகம் கவனிக்கப்பட்டவர். தனது பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவி காரணமாக டெல்லி என்னும் அதிகார வர்க்க நகரத்தில் மனிதர்கள் இயங்கும் மனநிலையையும் நெளிவு சுளிவுகளையும் நுட்பமாகக் கவனித்து எழுதியவர். அந்த வகையில் அவரது தந்திரபூமியும் சுதந்திர பூமியும் கவனிக்கத்தக்க நாவல்கள் எனச் சொல்ல வேண்டும். அவரது சாகித்ய அகாடெமி விருது பெற்ற குருதிப்புனல் நாவலும், நிலமென்னும் நல்லாள் நாவலும் தஞ்சை மாவட்ட நிலம்சார் பிரச்சினைகளை மையப்படுத்தி விவாதிக்கும் முக்கிய நாவல்கள்.

தொடர்ந்து அரசியல் விமர்சனத்திற்குப் புனைகதைகளைக் கருவியாகக் கொள்ளும் இந்திரா பார்த்தசாரதி, நவீனநாடகப் பிரதிகள் பலவற்றை எழுதிக் காத்திரமான பங்களிப்பு செய்ததன் மூலம் இந்தியாவின் முக்கியமான நாடகக்காரராக அறியப்படுபவர். 15 நாடகங்கள் வரை எழுதிய இந்திரா பார்த்தசாரதி அவரது நாடகப் பங்களிப்பிற்காகச் சரஸ்வதி சம்மான் என்னும் பிர்லா பவுண்டேஷன் விருதையும் பெற்றவர்.

இ.பா., சிறுகதைக்கான இலக்கணங்களையோ வரையறைகளையோ குறித்துக் கவலைப் படுபவரல்ல. விசாரணைக்குட்படுத்த விரும்பும் மனப்பாங்கு மட்டுமே அவருக்கு முக்கியம்.. அவரது சிறுகதைகள் ஒரு மையப்புள்ளியில் தொடங்கித் தனி மனிதப் பிரச்சினைக்குள் செல்வது போல் தோன்றினாலும், கதை முடியும் போது சமூகத்தின் பொதுவியாதிகளில் ஒன்றை விசாரணைக்குட் படுத்தும் நோக்கத்தை நிறைவேற்றும் தன்மை கொண்டவைகளாகவே விளங்குகின்றன. அம்பி என்ற ஒரு சிறுவனுக்கு ஏற்படும் ஒரு விபத்தைச் சித்திரித்துக் காட்டுவதன் மூலம், அதில் பங்கேற்கும் பாத்திரங்களின் மனப்பாங்குகளை விவரித்துக் காட்டுகிறது இ.பா.வின் நாசகாரக் கும்பல்.

மையப் புள்ளியிலிருந்து விலகிச் செல்லுவது இ.பா.வின் புனைகதை எழுத்துக்கள் அனைத்திலும் காணப்படும் பொதுத் தன்மை. பாத்திரங்களின் அறிமுகம், அவை உலவும் இடம், அவர்களுக்கிடையே ஏற்படும் முரண் என விரியும் தன்மை கொண்ட கதைகளை அதிகம் எழுதியுள்ள கதாசிரியர் அவர் என்பதைப் பல கதைகள் காட்டுகின்றன. இந்த அம்சங்கள் அடிப்படையில் ஒரு நாடகத்தின் அம்சங்கள் என்பதையும் சுட்டிக் காட்டுவதோடு, இந்த அம்சங்களிலிருந்து வளர்ந்தே பின்னர் நாடகாசிரியராக மாறினார் என்று கூடச் சொல்லலாம் நாசகாரக் கும்பல் கதையில் இடம் பெறும் பாத்திரங்களும் அவர்களுக்கிடையே உள்ள உறவுகளும் இப்படி இருக்கிறது:

அவனது கவனப்பிசகால் கால்கள் நசுக்கப்படும் அம்பி, படிப்பில் கெட்டிக்கார அக்கிரகாரப் பையன் – அப்பா இல்லாதவன்; அம்மா மட்டும் உண்டு; ஜானகி – கல்யாணமாகிக் கணவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்பியின் அக்கா. ஸ்கூல் டீச்சர்; பெயரிடப்படாத அவளது கணவன்; அம்பியின் அத்திம்பேர்; தாலுகா ஆபிஸ் கிளார்க். அம்பியின் காலை நசுக்கிய பஸ்ஸின் டிரைவர் வேலு; ராஜூ- கண்டக்டர். அந்தப் பஸ்ஸின் ஓனர் கருணு. அது ஒரு டூரிஸ்ட் பஸ் . அந்த விபத்தை விசாரிக்க வந்த இன்ஸ்பெக்டர், அம்பியைப் பரிசோதித்து அறிக்கை கொடுக்க வேண்டிய ரவி என்னும் டாக்டர் (வயது30). அவருடன் பணியாற்றும் மிஸஸ் தாமஸ் என்னும் நர்சு. அம்பியின் பக்கத்துவீட்டில் வசிக்கும் வக்கீல் குமாஸ்தா பாலு அய்யர் என ஒரு சிறுகதைக்கு இருக்க வேண்டிய எண்ணிக்கை அளவை விடக் கூடுதலான பாத்திரங்களைப் படைத்துள்ளார்.

இந்திரா பார்த்தசாரதியின் இந்தக் கதையில் இடம்பெறும் சில காட்சிகளை வரிசைப் படுத்திக் கவனித்தால் எத்தகைய மனிதர்களால் ஆனது இந்த உலகம் என்பதையும், அதிலும் நமது நிகழ்காலம் எப்படிப்பட்ட மனிதகளால் நிரம்பியிருக்கிறது எனக் காட்ட விரும்பும் அவரது நோக்கம் புரியக்கூடும். கதையில் அதன் ஆரம்பக்காட்சி பற்றிய குறிப்பு இப்படி இருக்கிறது:
“அம்பி, வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். எதிரே சேறும் சகதியுமாயிருந்த வராகக் குளத்தைத் தூர்த்துக் கொண்டிருந்தார்கள்” அப்பொழுது ஒரு பஸ் வரும் சப்தம் கேட்டது. அம்பி உட்கார்ந்தபடியே தலையை நீட்டித் தெருக் கோடியை நோக்கினான். கருணுடூரிஸ்ட் பஸ். ஏன் இந்தப் பக்கம் வருகிறது? அவனுக்கு ஞாபகம் வந்தது. வழக்கமான பாதையில் குழி தோண்டி வைத்திருக்கிறார்கள்.
இனித் தொடரும் சில குறிப்புகளைக் காணலாம்.

“ பையன் திண்ணையிலே உட்கார்ந்திண்டிருந்ததை நீ பாக்கலே? கண் அவிஞ்சா போச்சு? காலை சட்னியாக்கிட்டியே.. இந்த அம்மாவுக்கு ஒரு வழி சொல்லிவிட்டுப் போ..” டிரைவருக்குக் கோபத்தினால் முகம் சிவந்தது. நன்றாக அடிபட்டுக் கிடக்கும் பையனை வைத்துக் கொண்டு வியாபாரம் பேசுகிறாரே, இவர் யாராக இருக்கும்? “ இந்தப் பையனுக்கு நீங்க என்ன வேணும்?”
“ நான் பக்கத்து வீட்டில குடியிருக்கேன்.. நான் யாராயிருந்தா உனக்கென்ன?..” டிரைவர் கண்டக்டரிடம் சொன்னான். “ ராஜு, பையனைத் தூக்கி வண்டியிலே எடுத்துட்டுப் போவோம் வா.. டைம் வேஸ்ட் ஆகிக்கிட்டிருக்கு..” அம்பியின் அம்மா, அவன் உடம்பைக் கட்டிக் கொண்டு அழுதாள். இது ஒரு காட்சி.

அந்த டாக்டர் இளைஞன். பெயர் ரவி. முப்பது வயசுக்குள் தானிருக்கும். குறுந்தாடி வைத்திருந்தான். வேலு சொன்னதை அவன் அமைதியாகக் கேட்டான். சொல்லப் போனால், கேட்பது போலிருந்தான். அவன் கை வேறொரு நோயாளிக்கு மருந்து எழுதிக் கொண்டிருந்தது. “ நர்ஸைக் கூப்பிடுங்க்..” என்றான் ரவி. அதற்குள் அவளே வந்து விட்டாள். “ பையனை ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டு போங்க..” “ டாக்டர் , இது போலீஸ் கேஸ்..” “ ஐ. நோ.. டிரைவர் நீங்க.. போய் போலீசுக்குப் ஃபோன் பண்ணுங்க..” “ போலீஸ் பையனோட ‘கண்டிஷனை’ப் பார்த்தப்புறம் ஆபரேஷன் பண்ணறது நல்லது டாக்டர்.” “ மிஸ் தாமஸ், கைண்ட்லி டு வாட் ஐ ஸே..” டாக்டர் எழுந்தான்.
இது இன்னொரு காட்சி.

எல்லோரும் வெளியே வந்தார்கள்.இன்ஸ்பெக்டர் முதலாளியிடம் சொன்னான். “டாக்டர் ரிப்போர்ட் தான் சாதகமா இல்லே.” “ நான் யாரு. என்ன செய்ய முடியும்னு சொன்னீர்களா அந்த மடையன்கிட்டே?” “ சொன்னேன். அவன் கேக்க மாட்டேங்கிறான்.. கத்துக் குட்டி ராஸ்கல்..” ரவி அப்பொழுது வெளியே வந்தான். “ எல்லோரும் இப்படிப் போயிட்டீங்கன்னா யாரு இங்கே இருப்பாங்க, பையனைப் பாத்துக்க!”
“கொஞ்ச நேரம் கழிச்சு என் வொய்ப் இங்கே வருவா..” என்றார் அம்பியின் அத்திம்பேர்.
“ என்னய்யா டாக்டரே! ரிபோர்ட் இப்படிக் கொடுத்திருக்கீங்க?” என்று கேட்டான் முதலாளி. “ உங்க இஷ்டப்படி ரிபோர்ட் கொடுக்கணும்னா நான் எதுக்காக டாக்டராக இருக்கணும்?” “ நீங்க யாருன்னு நினைச்சிண்டிருக்கீங்க. இப்படிப் பேச?” என்று சீறினான்.
இது மற்றொரு காட்சி.

இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டார்: “ டாக்டர்.. கொஞ்சம் மரியாதையா பேசுங்க.” “ என்னடா மரியாதை வேண்டிக் கிடக்குது உங்களுக்கு? ஒரு உசிரு உள்ளே மன்றாடிக்கிட்டு இருக்குது... எப்பொடாப்பா பஸ்ஸை ஏத்தப் போறேன்னு காத்துக் கிட்டிருந்தாப்பலே, எல்லாரும் பொணத்தைக் கொத்தித் தின்ன வந்துட்டீங்களே, படுபாவிகளா? இதோ பாருய்யா முதலாளி.. உன் பிச்சைக் காசு எனக்கு வேண்டாம். நான் உண்மையைச் சொல்றேன்... பஸ்ஸை ஏத்தினது நான் தான்.. கோர்ட்லே கேஸ் வரட்டும்.. நாட்டை நாற அடிச்சிட்டு இருக்கிற கும்பல் யார் யாருன்னு எல்லாருக்கும் தெரிய வேணாம்? டாக்டரய்யா, வாங்க. பையனைக் கவனிச்சுக்க நான் இருக்கேன்..”என்று கூறிக்கொண்டே உள்ளே சென்றான் வேலு.
இது கதையின் கடைசிக் காட்சி.

இப்படிப் படைத்துக் காட்டுவதன் மூலம், சமூகத்தின் பல தரப்பட்ட மனிதர்களும், இயல்பான குணங்களை இழந்து பணத்திற்காகக் காரியங்கள் செய்பவர்களாகவும், அதிகாரத்தின் நெருக்கடிக்குள் சிக்கி விடக் கூடியவர்களாகவும் ஆகி விடுகின்றனர் எனக் காட்டுகின்றார். அதே நேரத்தில் இத்தகைய நெருக்கடிக்குள் ஒரு சில மனிதர்கள்- டிரைவர் வேலுவைப் போல, டாக்டர் ரவியைப் போலச் சிலர் தங்களை இழந்து விடாமல், மனிதர்களாக இருக்கவும் முயல்கிறார்கள்; அப்படிப் பட்டவர்கள் பல நேரங்களில் தோற்றுப் போனாலும், அப்படிப் பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதைச் சொல்ல வேண்டும் என்று உறுதியைக் காட்ட வேண்டியது ஒரு படைப்பாளியின் கடமை. இந்தக் கடமையிலிருந்து தான் பின் வாங்கி விடக் கூடாது என இந்திரா பார்த்தசாரதி கருதுகிறார். இதற்கு அவரது நாசகாரக்கும்பல் என்னும் இந்தக் கதை ஒரு உதாரணம் .

No comments :