ஈழம்:மாற்றுவிவாதங்களை முன் வைக்கும் கருத்துரைகள்
1.ஈழம்:தேவை- ஒரு நேர்மறையான மீளாய்வு,
புதிய ஜனநாயகம் வெளியீடு, இரண்டாம் பதிப்பு, ஜுன்,2009
110.இரண்டாம் தளம், 63,என்.எஸ்.கே.சாலை,கோடம்பாக்கம், சென்னை-600 024
2.ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும் நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்
புதிய ஜனநாயகம் வெளியீடு, இரண்டாம் பதிப்பு, ஜுன்,2009
110.இரண்டாம் தளம், 63,என்.எஸ்.கே.சாலை,கோடம்பாக்கம், சென்னை-600024
3.இந்திய அரசே நியாயந்தானா?
முதல்பதிப்பு: ஏப்ரல், 2009,சி.மகேந்திரன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142,ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600 014
ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக இருந்து அரசியல் விடுதலை அடைந்துள்ள பின்காலனிய நாடுகளில் இன்றளவும் தொடரும் உள்நாட்டுப் பிரச்சினைகளின் மூலத்தைத் தேடிப் போனால் அவற்றின் தொடக்கப் புள்ளியாக, காலனிய ஆதிக்கவாதிகளின் தேச உருவாக்கமே காரணமாக இருப்பதை அறியலாம். காலனிய ஆதிக்கவாதிகள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஒன்றிணைத்து ஏற்படுத்திய தேசம் என்னும் ஒற்றைக் கட்டுமானம் தொடர்ந்து தன்னைத் தக்க வைக்க முடியாமல் தவிக்கும் தவிப்பின் விளைவுகள் பலவிதமானவை.
ஐரோப்பியக் காலனி ஆதிக்கவாதிகள் வருவதற்கு முன்பு செயல்பட்டுக் கொண்டிருந்த நூற்றுக் கணக்கான அரசர்களும் சிற்றரசர்களும் தந்திரங்கள் மற்றும், படைபலத்தின் மூலமும் அடக்கித் தனி நாடுகள் உருவாகின. அரசுரு வாக்கம், நிர்வாகம் என்ற அளவில் உருவாக்கப் பட்ட தேசம் என்னும் ஒற்றை அடையாளம் அக்காலனி ஆதிக்கவாதிகளின் வெளியேற்றத்திற்குப் பின்பு கேள்விக்குள்ளாகின. கேள்விக்குள்ளாக்குவதின் பின்னணியில் பருண்மையான காரணங்களும் கருத்தியல்களும் இருந்தன. அத்தகைய காரணங்களுள் முதன்மையானதும் முக்கியமானதுமான வெளிப்பாடு பெரும்பான்மை x சிறுபான்மை முரண்பாடுகள்.
பெரும்பான்மை x சிறுபான்மை என்ற முரண்பாட்டின் பின்னணியில் இந்தியா, பாகிஸ்தான், பர்மா, இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் இன்றளவும் தொடரும் உள்நாட்டுப் பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரே காரணம் இருக்க வில்லை. பாகிஸ்தானில் மொழி காரணமாக இருந்தது. அதனால் பாகிஸ்தான், வங்க தேசம் என இரண்டு நாடுகள் உருவாகின. இந்தியாவில் பல மொழிகள், பல சமயங்கள், பல இனங்கள் இருப்பதால் முரண்பாடுகள் முற்றாமலும், முழுமை அடையாமலும், ஒற்றை அடையாளம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. என்றாலும் சமயம் சார்ந்து முரண்பாடுகள் அண்மைக் காலங்களில் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றன என்பதும் உண்மை. இலங்கையில் மொழியும் சமயமும் முக்கிய காரணிகளாக இருந்து அம்முரண்பாட்டைக் கூர்மைப் படுத்தி முப்பது ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப் போராட்டத்தைத் தூண்டி விட்டது.
சாத்வீகப் போராட்டங்களில் தொடங்கி ஆயுதம் தாங்கிய யுத்தமாக மாறி, தங்களுக்கான நிலப்பரப்பாக ஈழம் என்பதை அடையாளம் கண்ட இலங்கைத் தமிழர்களின் வெற்றி, அண்டை மற்றும் உலக நாடுகளின் அங்கீகாரம் இல்லாததால் திரும்பவும் ஆரம்பக்கட்டத்திற்குப் போய்விட்டது. ஏறத்தாழ இலங்கையின் விடுதலைப் போராட்டமும், அதனை முன்னணிப் படையாக நின்று நடத்திக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளும் இன்று ஒடுக்கப் பட்டுள்ளனர்.
வெற்றியின் விளிம்பில் இருந்த ஒரு விடுதலைப் போராட்டம் ஒடுக்கப் பட்டதின் காரணங்கள் பலவாக இருக்கலாம். இருபத்தைந்து ஆண்டுகளாக ஆயுதம் தாங்கிப் போராடிய புலிகளை அடக்க முடியாமல் தத்தளித்த இலங்கை அரசு, கடந்த ஆறு மாதங்களில் தீவிரமாக யுத்தத்தை நடத்தி முடித்து விட்டது. மாறிவிட்ட உலக அடுக்குகள், உலகமயப் பொருளாதாரத்தில் வளரும் நாடுகள் தங்களுக்கான சந்தைகளை உருவாக்கிட நடத்தும் போட்டிகள், அண்டை நாடான இந்தியாவுடன் கொள்ள வேண்டிய பிராந்திய ஒத்துழைப்பு போன்றவற்றை ஓரளவு சரியாகக் கணித்து முடிவுகள் எடுத்து அதற்கேற்பச் செயல்பட்ட இலங்கையின் அதிகார மையமான ராஜபக்ஷே குழுவினரின் விட்டுக் கொடுத்தல் மற்றும் ராஜ தந்திர உபாயங்கள் மூலம் வெற்றியை அடைந்துள்ளனர். இவற்றிற்கு மாறாக, தங்களின் விடுதலை உணர்வின் தீவிரம், தங்களால் ஆயுதபலத்தைப் பெருக்கி இலங்கை அரசுக்கு ஈடாக யுத்தத்தை நடத்திட முடியும் என்ற தீர்மானமான நம்பிக்கை , தமிழ் என்னும் மொழி சார்ந்த உணர்வின் தீவிரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்ட ஆதரவு சக்திகளின் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனத்தைச் சரியாகக் கணிக்க இயலாமல் போன விடுதலைப் புலிகளும் ஈழப் போராட்டமும் தோல்வியைத் தழுவியுள்ளது.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் எல்லா நேரத்திலும் தமிழக மக்களும் இந்திய அரசில் மையமாகச் செயல்பட்டவர்களும் சம அளவு அக்கறைகளோடு இருந்துள்ளனர். ஆனால் அக்கறைகளின் நோக்கங்கள் ஒருவழிப் பட்டன அல்ல; எதிர்நிலைப் பட்டவை. நமது மொழிபேசும் உறவு, நமது இனம் படும் இன்னல்கள், ஒரே பண்பாட்டு அடிப்படைகள் கொண்ட தொப்புள் கொடி உறவு என்ற உணர்வு சார்ந்த திரளாகத் தமிழக மக்களின் ஆதரவு எப்போதும் ஈழப் போராட்டத்தின் பக்கம் இருந்துள்ளது. ஆனால் இந்திய அரசு, அப்படி ஒற்றைத் தளத்தில் இயங்காமல் தனது தேசப் பாதுகாப்பு, அண்டை நாடுகளுடான உறவும் முரணும் என்பதில் கொள்ள வேண்டிய நிலைபாடு, தென்கிழக்காசிய நாடுகளில் இந்திய முதலாளிகளுக்கு சந்தைகளை ஏற்படுத்திக் கொடுத்துத் தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவுதல் என்னும் பல தளங்களின் ஊடாகவே இலங்கைப் பிரச்சினையை அணுகியது.
இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் சுயாதிக்க உரிமைக் குரல்கள் எழாமல் அடக்கிய இந்திய அரசு,இலங்கையில் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவளித்து முதலில் பயிற்சி முகாம்கள் அமைத்திட உதவிய ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் நடவடிக்கைகளும்சரி, ஈழமக்களின் போராட்டத்தை அடக்கி ஒடுக்கி அமைதிப் பிரதேசமாக, இறையாண்மைக்குள் கட்டுப்பட்ட பிராந்தியமாக ஈழமும் இருக்க வேண்டும் என முடிவு எடுத்து இலங்கை அரசுக்குத் தீவிரமாக உதவிய அண்மைக்கால நடவடிக்கைகளும் சரி உள்நோக்கம் கொண்டவை என்பதை ஈழப் போராட்டத்தை நடத்தியவர்களும், அதனை ஆதரித்த தமிழகத் தலைவர்களும் புரிந்து கொண்டிருந்தார்களா? என்ற ஐயம் தொடர்ந்து எழுப்பப்பட்டது. இந்த ஐயத்தை எழுப்பும் குரல்களின் வெளிப்பாடுகள் அவ்வப்போது சிறு சிறு நூல்களாக வெளி வந்துள்ளன.
ஈழப்போராட்டம் அசைவற்ற நிலையை அடைந்துள்ள இத்தருணத்தில் வெளி வந்துள்ள இம்மூன்று சிறு நூல்களும் அந்நிலையை அடைந்ததற்கான காரணங்களை முன் வைத்துள்ளன. எல்லாவற்றையும் தர்க்க ரீதியாகவும், தத்துவ நோக்கிலும் புரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் வாசிக்க வேண்டிய கருத்துரைகள் இவை. இவைகளை வாசிக்கும் முகமாக ஈழப் போராட்டம் புதிய உருவில் புதிய பாதையில் செல்லும் போது அதன் ஆதரவு சக்திகள், எதிரிகள் சரியாகத் தீர்மானமாகக் கூடும்.
கருத்துகள்