May 31, 2008

முதலில் இல்லை; முழுமையில் இருக்கிறது

உலக அளவில் அதிகம் பேர் பேசும் மொழி ஆங்கிலம் என்பதை நாம் அறிவோம். அந்த மொழியில் அதிகம் மதிக்கப்படும் இலக்கிய ஆசிரியன் யார் எனக் கேட்டால் ஷேக்ஸ்பியர் என்ற பெயரைக் குறிப்பிடுவார்கள்.
இங்கிலாந்தில் பிறந்து (1564-1616) ஆங்கில இலக்கியத்தின் முக்கியமான சானட் என்னும் கவிதை வடிவத்தில் 154 கவிதைகளையும், கதை தழுவிய இரண்டு நீள்கவிதைகளையும் எழுதியிருந் தாலும் உலக நாடக இலக்கியத்தின் பிதாமகனாகச் ஷேக்ஸ்பியரை அறியச் செய்தவை அவரது 38 நாடகங்கள் தான். இன்பியல் நாடகங்களாகவும், துன்பியல் நாடகங்களாகவும் அவரது படைப்புக்களைப் படிப்பது என்பதுதான் ஆங்கில இலக்கியத்தின் முக்கியமான பகுதி என்று கூடச் சொல்வார்கள். அவரது வரிகளை மேற்கோளாகச் சொல்வதை ஆங்கில மொழிக்காரர் களும், ஆங்கில இலக்கியம் கற்றவர்களும் விரும்பிச் செய்வதுண்டு.
அதிக எண்ணிக்கையில் பேசும் மொழியாகத் தமிழ் இல்லையென்றாலும், அதிக நாடுகளில் ஆட்சி மொழியாகவும், அங்கீகரிக்கப்பட்ட தொடர்பு மொழியாகவும் இருக்கும் இந்திய மொழி தமிழ் என்று சொல்லலாம். இந்தியாவைத் தவிர, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அரசாங்க அலுவல்கள் நடக்கும் மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இருக்கிறது. இலங்கையின் உள் நாட்டுப் போர் காரணமாக இன்று தமிழர்கள் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி, தமிழ் என்னும் மொழியின் இருப்பை உலக நாடுகளின் பார்வைக்குக் கொண்டு போய்விட்டனர்.
அகதிகளாகத் தமிழர்கள் அலையும் படி ஆகி விட்டது என்ற வருத்தம் ஒரு புறம் இருக்கிறது என்றாலும், குடியேறிய ஒவ்வொரு நாட்டிலும் தமிழ் என்னும் மொழி பேசும் மனிதக் கூட்டத்தின் இருப்பை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. துன்பத்தில் விளைந்த இன்பம் இது எனச் சொல்லிக் கொள்ளலாம்.
செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே உலகப் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் மொழியாகவும், கற்பிக்கும் மொழியாகவும் தமிழ் இருக்கிறது. தென்னாசியக் கல்வி மையங்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகள் துறை, இந்திய மொழிகள் துறை, கீழைத்தேசங்களின் பண்பாட்டுத் துறை என்னும் பெயர்களில் உலகப் பல்கலைக் கழகங்களில் இயங்கும் துறைகள் தமிழ் மொழி அல்லது தமிழக வரலாற்றை ஒரு பாடமாகக் கற்பிக்கின்றன. அவ்வாறு கற்பிக்கவில்லை என்றால், கற்பிக்கப்படும் இந்தியாவின் பண்டைய வரலாற்றில் முக்கியமான பகுதியாகவாவது தமிழ் அறிமுகம் செய்யப்படுகிறது என்பதை நினைத்துத் தமிழர்கள் பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.அத்தகைய பெருமையுடைய தமிழ் மொழியில் அதிகம் மேற்கோள் காட்டப்படும் இலக்கியம் அல்லது இலக்கியவாதி யார் எனக் கேட்டால் சரியான புள்ளி விவரங்களோடு நம்மால் பதில் சொல்ல முடியாது.
நிகழ்காலத் தமிழில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட வாக்கியம் பாரதியின் வரிகளாக இருக்கலாம். ஆனால் மொத்தத்தில் தமிழர்கள் அதிகம் மேற்கோள் காட்டும் வரிகளுக்குச் சொந்தக்காரன் அய்யன் திருவள்ளுவர் என்றே நினைக்கிறேன். பேருந்துகள் தொடங்கி, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் என எங்கும் திருக்குறளின் ஆட்சி இருக்கிறது என்பதை நாம் அறிவோம். பொதுக் கட்டுரைகளிலும் சரி மேடைப் பேச்சிலும் சரி திருக்குறளை மேற் கோள் காட்டவில்லை என்றால் அது சிறந்த கட்டுரையாகவோ, சிறந்த மேடைப் பேச்சாகவோ கருதப்படும் வாய்ப்பில்லை என்றே தமிழர்கள் நம்புகிறார்கள். தொடர்பு இருந்தாலும் இல்லை யென்றாலும் முன்னுரையிலோ முடிவுரையிலோ ஒரு குறளைச் சொல்லி முடித்து விட்டு முழுத் திருப்தி அடையும் பலரை நான் பார்த்திருக்கிறேன். தனிமனித வாழ்க்கைக்குத் தேவையான யோசனைகள் என்றும், பொது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் எனவும் கருதி வள்ளுவர் எழுதிய 1330 குறள்களில் ஏதாவதொன்றைத் தமிழர்கள் மேற் கோளாகக் காட்டுவதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
வெறும் பதின்மூன்றே வரிகளை எழுதியதற்காக ஒரு தமிழ்க் கவிஞன் தமிழில் அதிகம் மேற்கோள் காட்டப்படுபவனாக இருக்கிறான் என்று சொன்னால் பலர் ஆச்சரியம் அடையலாம். ‘’ யாதும் ஊரே; யாவரும் கேளிர்’’ இந்த வாக்கியம் மேடைகளிலும் எழுத்துக்களிலும் தமிழர்கள் மேற்கோள் காட்டும் வாக்கியம், திருக்குறளுக்கு அடுத்து அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட கவிதை வரியாகக் கூட இதைச் சொல்லலாம். இந்த வரியை முதல் வரியாகக் கொண்ட கவிதையை எழுதியவன் கணியன் பூங்குன்றன் , அதன் 13 வரிகளைத் தவிரக் கணியன் பூங்குன்றன் எழுதிய பாடலாக இருப்பது நற்றிணையிலுள்ள 226 ஆவது பாடல்.அதன் வரிகள் 9. இந்த 21 வரிகளைத் தாண்டிக் கணியன் எந்த இலக்கியத்தையும் எழுதவில்லை. இரண்டு கவிதைகளை எழுதித் தமிழ் பரப்பையே தனதாக்கிக் கொண்டவன் பூங்குன்றன்
கணியன் பூங்குன்றனின் முதல் வரியான ‘யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ‘ என்ற புறநானூற்று வரியைச் சொல்லி விட்டு, ‘’உலகத்தில் உள்ள எல்லா ஊரையும் தனது ஊராகவும், அங்கு வாழும் எல்லா மக்களையும் தனது உறவினர்களாகவும் கருதி வாழ்ந்தவன் பண்டைத் தமிழன் என முழக்கமிடும் மேடைப் பேச்சுக்களை நான் பலதடவை கேட்டிருக்கிறேன். நீங்களும் கேட்டிருக்கலாம். அப்படிப் பேசுபவர்கள் எப்போதும் அதன் அடுத்தடுத்த வரிகளுக்குள் நுழைவதே இல்லை. திடீரென்று ‘’ பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’’ என அகக்கவிதையின் கடைசி இரண்டு வரிகளுக்குத் தாவி ,பண்டைத் தமிழர்கள்,’’ பெரியவர்- சிறியவர் என்று பாகுபடுத்திப் பார்க்கும் குணங்கள் இல்லாதவர்கள்; அனைவரையும் சமமாக மதிப்பதே அவர்களது பொதுக்குணம் என்று கூறி முடிப்பார்கள்.
கவி கணியன் பூங்குன்றன் உண்மையிலேயே இந்த அர்த்தத்தில் தான் அந்தக் கவிதையை எழுதியிருக்கிறானா?. முழுக் கவிதையையும் நிதானமாக வாசிக்கும் ஒருவர் அப்படிச் சொல்ல மாட்டார். இதோ கவிதை,
யாதும் ஊரே யாவருங் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவதன்றே;வாழ்தல்
இனிதென மகிழ்ந்தென் றும் இலமே;
முனிவின்,இன்னா தென்றலும் இலமே;
‘மின்னொடுவானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்
முறைவழி படூஉ மென்பது திறவோர்
காட்சியின் தௌ¤ந்தனம், ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமோ!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
[கணியன் பூங்குன்றன்/ புறநானூறு / பாடல் எண்.192.]
இந்தக் கவிதையின் அடுத்தடுத்த வரிகளின் பொருளை விளக்கிக் கொண்டே வந்தால் அதன் சாராம்சம் இதுவரை நாம் மேடைகளில் பேசியதல்ல என்பது புரிந்து போகும்.
இந்தக் கவிதையின் மையமே அதில் வரும் , நீர்வழிப் படூஉம் புணைபோல் என்ற உவமையில் தான் இருக்கிறது. மனித உடலுக்கும் உயிருக்கும் இடையே உள்ள உறவு என்பது எப்படிப் பட்டது என்றால் ‘’மல்லல் பேரியாற்று நீரில் அடித்துக் கொண்டு வரப்படும் புணை அதாவது தெப்பம் போன்றது. அதற்கு நிரந்தரம் என்று எதுவும் கிடையாது. நீர் போகும் போக்கில் புணை போவது போல் , உயிரும் இருக்கும் அல்லது போகும்’. இதைச் சொல்வதுதானே கணியன் பூங்குன்றனின் மைய நோக்கமாக இருக்கிறது.
இந்த மைய நோக்கம் அவன் காலத்தில் எழுச்சி பெற்ற பௌத்தத்தின் நிலையாமைத் தத்துவத்தின் சாரம் என்று கூடச் சொல்லலாம். ஒவ்வொருவரும் இந்த உலக வாழ்க்கை தரும் இன்ப துன்பங்களைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும் ; தப்பித்தல் என்பது சாத்தியமில்லை எனப் பேசும் நவீன இருப்பியல் வாதமும் கூட இதைத் தான் சொல்கிறது. நிலையாமையை அல்லது இருப்பியலின் சாரத்தைப் பேசும் கணியன் பூங்குன்றனின் கவிதை மேடைப் பேச்சுகளுக்கான மேற்கோள் வாக்கியமாக மாறி, மொத்த அர்த்தத்தையும் இழந்த ஆச்சரியம் எப்படி நடந்தது ?
இந்தக் கேள்விக்கு எனக்குத் தெரிந்த பதில் முழுமையைத் தேடுவது தமிழர்களின் வேலையாக இல்லை என்பதுதான். ஒரு தலைவனை அல்லது ஒரு இயக்கத்தை ஆதரிப்பதானாலும் சரி , எதிர்ப்பதானாலும் சரி தமிழர்களுக்கு ஒரேயொரு காரணம் போதும். இப்படித்தான் தமிழர்களின் பொதுப்புத்தி பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பழக்கம் ஆபத்தானது. ஒரு படைப்போ அல்லது இயக்கமோ அதை முழுமையாகப் புரிந்து கொண்டு, சாராம்சமாக என்ன இருக்கிறது எனப் பார்ப்பதுதான் முழுமையான மனிதனின் அடையாளம். அதை நோக்கித் தமிழர்களின் பொதுப்புத்தையைத் திருப்பும் வரிகளை எழுதும் படைப்பாளிகளே நிகழ்காலத்தின் படைப்பாளிகளாக இருக்கப் போகிறவர்கள்.

No comments :