விபத்துகள் அல்ல; ஆபத்துகள்
முகம் தெரிந்த மனிதர்களும் முகம் தெரிந்திராத மனிதர்களும் சந்திக்க நேரும்போது விவாதிப்பதற்கான நிகழ்ச்சி நிரல்களில் ஒன்று வாகன விபத்துகள். தினசரி ஒன்றிரண்டு பேருந்து விபத்துகளைக் காணொளியாகக் காண்கிறோம். சராசரியாக மாதத்திற்கு இரண்டுக்கும் குறையாமல் பெரும் ரயில் விபத்துகளைக் காட்சி ஊடகங்கள் தங்கள் செய்திகளில் காட்டுகின்றன. அடுத்த நாள் கூடுதல் விவரங்களாக இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் பெயர்கள், புகைப்படங்கள் ஆகியவற்றைத் தருவதோடு இத்தகைய விபத்துகளின் வரலாற்றையும் தருகின்றன செய்தித்தாள்கள். பொறுப்போடு இருப்பதாக நினைக்கும் அதன் ஆசிரியர்கள் ஆலோசனைகளைக் குறிப்பிட்டுத் தலையங்கம் ஒன்றை எழுதிவிட்டு அடுத்த பெரும் நிகழ்வொன்றிற்காகக் காத்திருக்கிறார்கள்.