மறதியின் புதை சேற்றில் :பொதுத்தேர்தல்கள் குறித்த ஒரு பரிசீலனை
2011,மார்ச்,19 – நடக்கப்போகும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகாரபூர்வமான பணிகள் தொடங்கும் நாள். “தமிழகத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அதிகாரம் செலுத்தப் போகும் அரசமைப்பின் அடித்தள உறுப்பினருள் ஒருவராக இருக்க நான் விரும்புகிறேன்” எனத் தன்னை முன் மொழிந்து வேட்பு மனுத் தாக்கல் செய்யும் முதல் நாள். அன்று தொடங்கும் இந்த முன் மொழிதல்கள் ஒருவார காலத்திற்குத் தொடரும். பின்னர் விண்ணப்பித்த மனுக்கள் பரிசீலிக்கப்படும்; தகுதியுடைய மனுக்கள் ஏற்கப்படும்; தகுதியற்றவை தள்ளுபடி செய்யப்படும். தகுதியான மனுக்களையும் கடைசி நேர மனமாற்றத்தின் அடிப்படையில்- வேட்பாளரின் விருப்பத்தின் பேரில்- திருப்பி வாங்கிக் கொள்வதற்கு வாய்ப்புகளும் தரப்படும். இந்த நடைமுறைகள் எல்லாம் வெகுசுலபமாக, எந்தவிதத் தடையுமின்றி நடந்து கொண்டிருக்கும்போது இந்திய மக்களாட்சியின் அடித்தள கட்டமைப்பும் செயல்படுத்துதலின் சீர்மையும் ஒவ்வொரு இந்திய மனதிற்குள்ளும் கொஞ்சம் புளகாங்கிதத்தை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.