என்னவாக ஆகப்போகிறாய் பெண்ணே

‘நீ என்னவாக ஆகப் போகிறாய்.? ’ 

இந்தக் கேள்வி மனிதர்கள் ஒவ்வொருவரும் சந்திக்க நேர்ந்த கேள்விதான். பள்ளிப் பருவம் தொடங்கி, பல தடவை இந்தக் கேள்வியைச் சந்திக்கும் வாய்ப்புக்கள் மாணாக்கர்களுக்குக் கிடைக்கின்றன. வகுப்புக்கு வரும் ஆசிரியர்கள் மட்டும் அல்லாது, அவர்களது பள்ளிக்கும், கல்லூரிக்கும் வரும் விருந்தினர்கள், பேச்சாளர்கள், தலைவர்கள் என ஒவ்வொருவரும் இத்தகைய கேள்விகளை ஒவ்வொரு மாணாக்க ரிடத்திலும் எழுப்பத்தான் செய்கிறார்கள். அவர்களின் வருகையும் பேச்சும் நேரடியாக இந்த வினாவை எழுப்பாமல் போயிருக்கலாம். அவர்களின் வருகையின் சாரம் உணர்த்தும் உண்மை அது தான்.
‘நீ என்னவாக ஆகப் போகிறாய்.? ’ 

இந்தக் கேள்வியைச் சந்திக்காத மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தனது தந்தை செய்த தொழிலைத் தனக்கு விதிக்கப்பட்ட தொழில் எனக் கருதிக் கொண்டு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். பரம்பரைத் தொழில், கைவிட்டுப் போகக் கூடாது என நினைத்துக் கொண்டு செக்கு மாட்டுப் பயணமே சுகமானது என்பது அவர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால், பாரம்பரியத் தொழிலின் பெருமைகளைப் பேசும் வித்தையோடு, அதனை அங்கேயே கை கழுவி விட்டு, வீடு, தெரு, ஊர்¢, நாடு என எல்லாவித எல்லைகளையும் தாண்டித் தாவித் தாவிப் பறந்த கூட்டம் ஒன்றும் கெட்டுப் போனதில்லை என்பதை உணர்ந்தால் மனித வாழ்க்கையின் பயணம் புரியக்கூடும். பள்ளிக் கூடத்தின் நிழலை அறியாதவன் விவசாயக் கூலியாகவே செத்துப் போகிறான். பாய் முடைபவர்களும்¢, மண்கலையம் செய்தவர்களும், கக்கூஸ் கழுகிறவர்களும் அதிலேயே தங்கிப் போகக் காரணம் இந்தக் கேள்வியைச் சந்திக்காததும், அதற்கான விடைகளைத் தேடாததும் தான்.
‘நீ என்னவாக ஆகப் போகிறாய்.? ’ 

புதிய புதிய மனிதர்களைச் சந்திக்கும் போதெல்லாம் ஒரு மனித உயிரி இந்தக் கேள்வியைப் புதிதாகவே சந்திக்கிறது. புதிய சந்திப்புகள,¢ புதிய வினாக்களை மட்டுமல்ல; புதிய விடைகளையும் கூடவே கொண்டு வந்து சேர்க்கின்றன. ஒரு மனிதன், இந்தக் கேள்வியைச் சந்திக்கும் போதெல்லாம் ஒவ்வொரு விடையைச் சொல்ல நேர்ந்தால் நல்லது என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விடை சொல்ல முடிகிறது என்றால், அவரது அறிவுப்பார்வை பல திறப்புகளில் பயணம் செய்திருக்கிறது என்பது தானே உண்மை. புதிய வெளிகள், எல்லைகள், தடைகள், தடைகளைத் தாண்டல் எனச் செல்லும் பயணமே பல வாய்ப்புக்களை உருவாககுகின்றன.
‘நீ என்னவாக ஆகப் போகிறாய்.? ’ 

இந்தக் கேள்வியைத் தூண்டும் விதமாக நான் சந்திக்கும் இளையோர்களிடம் பேசுவதை எப்பொழுதும் விரும்புபவன் நான். அதிலும் குறிப்பாகக் குழந்தைமைப் பருவத்திலிருந்தே பெண்களிடம் இந்தக் கேள்வி கேட்கப் பட வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பதிலைச் சிந்திக்கும் படி தூண்ட வேண்டும். நான் சந்திக்கும் மாணவிகளிடம் மட்டுமே என்றில்லை, நண்பர்கள் வீட்டிற்கோ, உறவினர்கள் வீட்டிற்கோ சென்றால் அங்கிருக்கும் பெண் குழந்தையிடம் இந்தக் கேள்வியை மறைமுகமாகக் கேட்டு விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.
‘நீ என்னவாக ஆகப் போகிறாய்.? ’ 

இந்தக் கேள்வியை அவளிடம் இன்றைக்குக் கேட்க முடியுமா..? என்று தெரியவில்லை. ஆனால் இதுவரை பத்துப் பன்னிரண்டு தடவையாவது கேட்டிருப்பேன். ஒவ்வொரு முறையும்¢ ஒவ்வொரு பதிலைச் சொல்லு வாள். முதல் தடவை அவள் சொன்ன பதில் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. கன்னி யாஸ்திரியாகப் போகிறேன் என்று சொன்னாள். ஏழு வயதுப் பெண்ணிடம் அந்தப் பதிலை நான் எதிர் பார்க்கவில்லை. கொஞ்சம் பேசிப் பார்த்ததில் அவள் கடைசியாகப் படித்த கட்டுரை ஒன்றுதான் அப்படிச் சொல்ல வைத்தது என்று புரிந்தது.

அன்னை தெரேசாவின் முகமும் தன்னலமற்ற சேவைக்குணமும், அவருக்குக் கிடைத்த பெருமைகளும் சேர்ந்து அப்படிச் சொல்ல வைத்திருக்கிறது. அவளது கன்னியாஸ்திரிக் கனவைக் கலைக்கும் படியான கேள்விகள் சிலவற்றைப் போட்டு விட்டு வந்தேன். இரண்டாவது முறை நாட்டின் தலைமை அமைச்சர் என்றாள்; அடுத்த முறை விஞ்ஞானி என்றாள். இன்னொரு முறை கவிஞர் என்றாள்; மற்றொரு முறை விண்வெளி வீராங்கனை என்றாள்.
ஆனால் கடைசியாகச் சொன்னது டாக்டராகப் போகிறேன் என்று. இந்தக் கூற்று அவளைக் கனவுகளி லிருந்து நடப்பு வாழ்க்கைக்குக் கொண்டு வந்து சேர்த்து விட்டது என்பதை உணர்த்தியது. பத்தாம் வகுப்பில் நுழைந்தவுடனேயே சுற்றமும் நட்பும் சேர்ந்து அந்த உணர்வை உண்டாக்கி விடுகின்றன. தமிழகத்தில் நகரவாசிகளின் பிள்ளைகள் காலையில் ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியரிடம் ட்யூசன்; மாலையில் இன்னொரு பாடத்திற்கு வேறொரு ஆசிரியரிடம் தனிப்பயிற்சி என அலையத் தொடங்குவதன் இலக்கு மருத்துவர் ஆவது தானே.

‘நீ என்னவாக ஆகப் போகிறாய்.?
நாளைக்குத் திரும்பவும் அந்தச் சுட்டிப் பெண்ணைச் சந்திக்கும் போது இந்தக் கேள்வியைக் கேட்க முடியுமா..? என்று தெரியவில்லை. ஏனென்றால் என் கையில் இருப்பது அவளுக்குப் பூப்புனித நீராட்டு விழா என்ற தகவலைச் சொல்லும் பத்திரிகை. இப்பொழுதெல்லாம் பெண்களின் பூப்பு வயது பதினைந்துக்கு முன்பாகவே இருக்கிறது. நல்ல உணவும், அதன் தொடர்ச்சியான உடல் வளர்ச்சியும் விரைவிலேயே பூப்படையச் செய்கிறது என்று மருத்துவ நண்பர் சொன்னது நினைவுக்கு வந்தது.
இந்தப் பெண்ணும் கூட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அந்தப் பருவத்தை அடைந்திருப்பாள் என்றுதான் நினைக்கிறேன். நான் பார்க்க அவளின் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் அதனைச் சொல்லியிருந்தன. ஆனாலும் அதனை ஒரு விழாவாக்கிக் கொண்டாட நினைக்காத அவளது பெற்றோரை மனதிற்குள் பாராட்டவும் செய்திருந்தேன். ஆனால் அந்தப் பாராட்டுப் பொய்த்துப் போனது. பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்து வரும் விடுமுறைக் காலத்திற்காக அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை அந்தப் பத்திரிகை எனக்குச் சொன்னது.
விழா மண்டபத்தில் வண்ண விளக்குகள் ஜொலித்தன. மண்டப வாசலில் அவளது புகைப்படம் பெரிதாக்கப் பட்ட போஸ்டரில் அனைவரையும் வரவேற்கும் வாசகங்களுடன் இருந்தது. மண்டப மேடையிலும் அவளது பெரிதாக்கப் பட்ட படம். அவளே உடல் முழுவதும் நகைகளால் அலங்கரிக்கப் பட்டு அமர்த்தி வைக்கப் பட்டிருந்தாள். அவளிடமிருந்த துறுதுறுப்பும் சுட்டித் தனமும் கழண்டு கொண்டு நாணமும் வெட்கமும் ஒட்டிக் கொள்ள வழி விட்டிருந்தன.
ஆம் அவள் பெரிய மனுஷியாக ஆக்கப்பட்டிருந்தாள்.

கிராமங்களில் சடங்கு என்ற பெயரில் நடக்கும் அந்த நிகழ்வு பெரும்பாலும் பெண்கள் சார்ந்த ஒன்றாகவே இருந்தது. சமைதல், வயதுக்கு வருதல். மங்கல நீராட்டு விழா என்ற பெயர்களால் அழைக்கப்படும் அந்த நிகழ்வு இன்றும் கூட அப்படித்தான் இருக்கிறது. ஒரு சிறுமி, அந்தப் பருவத்தைக் கடந்து இளம்பெண் என்ற பருவத்திற்குள் நுழைகிறாள் என்பதை அறிவிக்கும் நாள் அது. இவள் திருமணத்திற்குத் தயாராக இருக்கிறாள்; திருமணத்திற்குப் பின் கர்ப்பம் தாங்கி பிள்ளையைப் பெறுவதற்கேற்ற உடல்வாகு கொண்டவள் என்பது அந்த விழா மூலம் அறிவிக்கப்படும் செய்தி.
பாரம்பரியமான கிராம சமுதாயத்தில் பெண்களுக்கான பாத்திரம் மனைவி என்பதாக மட்டும் இருந்த கால கட்டத்தில் இத்தகைய சடங்குகளின் முக்கியத்துவம் புரிந்துகொள்ளக் கூடியது தான். ஆனால் இன்றைய சமூகத்தில் பெண்களின் பாத்திரம் வெறும் மனைவி மட்டும் தானா..? படிப்பும், படிப்பின் வழியாகக் கிடைத்த அறிவும், அதன் தொடர்ச்சியாகத் தேடப்படும் வேலைகளும் பெண்களின் பாத்திரத்தை விரித்துக் காட்டிப் பல பத்தாண்டுகள் ஆகி விட்டன. ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் சட்டங்கள் செய்யவும், பட்டங்கள் ஆளவும் வந்து வெகுநாட்களாகி விட்டன. ஆண்களுக்கு இல்லாத இந்தச் சடங்கும் மங்கல நீராட்டும் பெண்களுக்கு மட்டும் ஏன்?
தகவல் தொழில் நுட்பத் துறையில் ஆண்களைத் தாண்டி பல வேலைகளை நுட்பமாகச் செய்யும் வல்லமை பெற்றவர்களாகப் பெண்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். பெண்கள் செய்ய முடியாத வேலை என்று எதுவும் இல்லை என்பது இன்னும் சில ஆண்டுகளில் உறுதியாகப் போகிறது. கற்பு நிலையென்பதை மட்டும் அல்ல; சடங்குக¬ளையும் சம்பிரதாயங்களையும் கூட இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம் எனச் சொல்வது மட்டும் அல்ல; நடைமுறைப் படுத்துவதும் உடனடித் தேவை. அது சாத்தியம் இல்லையென்றால் இருவருக்கும் இல்லை என்றாவது ஆக்க வேண்டும்.
உங்கள் மகள் தாங்கப் போகும் பாத்திரம் என்ன.? மருத்துவரா..? பொறியாளரா..? வெறும் மனைவி என்பது மட்டுமா..? பெற்றோர்கள் யோசித்து முடிவு செய்வார்களாக!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்