அறம்:அரசதிகாரத்தின் குற்றமனம்

அண்மையில் திரைக்கு வந்து வணிக வெற்றியடைந்துள்ள அறம் என்ற சினிமா கவனிக்கத்தக்க சினிமாவாக ஆகியிருக்கிறது. வணிகரீதியான வெற்றிக்காக மட்டுமல்லாமல் பொறுப்புள்ள சினிமாவின் அடையாளமாகவும் ஆகியிருக்கிறது. அச்சினிமா கவனம் பெற்றதால், அதன் இயக்குநர் கோபிநயினார் முதல் படத்திலேயே கவனம் பெற்ற - வெற்றிப்பட இயக்குநராக ஆகியிருக்கிறார். அந்தப் படத்தின் மையக்கதாபாத்திரமான மதிவதினி என்று பெயரிடப்பட்ட பாத்திரத்தை ஏற்று நடித்த நடிகை நயன்தாரா ஏற்கெனவே கவனம் பெற்ற நடிகை என்ற போதிலும், இப்போது புதுவகையான கவனிப்பைப் பெற்றுள்ளார். கவனிக்கப்படுவதின் காரணங்களும் முன்வைக்கப்படும் சொல்லாடல்களும் வெகுமக்கள் ஊடகமான சினிமாவிற்கும், அதன் முதன்மையான நடிக, நடிகையருக்கும் மட்டுமல்லாமல் அதன் இயக்குநருக்கும் முக்கியம். ஏனெனில் தமிழ்ச் சினிமா ஒன்றின் வெற்றி அதன் முதன்மை நடிகர் அல்லது நடிகைவழியாகவே இங்கு அறியப்படுகிறது. இல்லையென்றால் அதன் இயக்குநர் வழியாகவும் அறியப்படுகிறது. முதன்மை நடிகர் அல்லது இயக்குநர் வெற்றியின் காரணி என அறியப்பட்டால் அடுத்த பட வாய்ப்பு கிடைக்கும்; அதனால் அவர்களோடு வேலைசெய்த மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் முதலானவர்களுக்கும் முக்கியம்; தெம்பளிக்கக்கூடியன; தொடர்ந்து செயல்படத்தூண்டுவன. அவர்களுக்கு மட்டுமல்ல இதுபோன்ற படங்களைத் தயாரிக்கலாம் என்ற நம்பிக்கையில் முதல்போட்டுத் தொடங்கிய தயாரிப்பாளர்களுக்கும் ஊக்கமளிப்பவை; இன்னும் சில தயாரிப்பாளர்களையும் இதுபோன்ற போடங்களைத் தயாரிக்கத் தூண்டும். இவ்வளவு காரணங்களும் எதிர்பார்ப்புகளும் அறம் படத்தின் வெற்றியின் பின்னணியில் - கவனம் பெற்றதின் பின்னணியில்-இருக்கின்றன.

வெகுமக்களைக் கவர்ந்திழுக்கும் வெற்றிச்சூத்திரங்கள் ஒரேமாதிரியானவை என வணிக சினிமாவின் எல்லாத்தரப்பும் நம்புவதில்லை. ஆனால் இப்படித்தான் வெற்றிச் சூத்திரங்கள் இருக்கின்றன; அவற்றைச் சரியாகச் செய்துவிட்டால் வணிகவெற்றி சாத்தியம் என்ற நம்பிக்கை தமிழ்ச் சினிமாவில் இருப்பவர்களுக்கு உண்டு. அத்தகைய சூத்திரங்களில் ஒன்றைக் கைப்பற்றிக்கொண்டு அல்லது கற்றுக்கொண்டு போடப்பட்ட பாதையில் பயணம் செய்வதில் முழுத்திருப்தி அடைவது தமிழ்ச்சினிமா உலகம். அந்தப் பாதையிலிருந்துச் சின்னச்சின்ன விலகல்கள் வழியாகப் புதிய இயக்குநர்கள் அவ்வப்போது நுழைந்து தங்களின் முதல் சினிமாவைக் கவனித்தக்க சினிமாவாகக் காட்டிவிடுகிறார்கள். அறம் படத்தின் இயக்குநர் கோபிநயினார் சின்னச்சின்ன வித்தியாசங்களைக் கைக்கொண்டவராக இல்லாமல் அடிப்படையான வேறுபாடுகளைக் கடைப்பிடித்து வித்தியாசமான சினிமாவைத் தந்துள்ளார். சில வெற்றிப்படங்களின் கதைக்குச் சொந்தக்காரர் என்ற உரிமையைக் கோரியவராகவும், தமிழ்ச் சினிமாவுக்குள் அறியப்படாத நபராக நீண்டகாலம் இயங்கியவர் என்பதாலும் அதன் பழையபாதையை முற்றிலும் நிராகரிக்க முயன்றுள்ளார். கதாநாயக நடிகர் என்ற ஆண்மையத்தைத் தவிர்த்ததிலிருந்து தொடங்கும் அவரது மாற்றுப் பாதை நகைச்சுவைக்காட்சிகள், சண்டைக்காட்சிகள், பாடல்காட்சிகளின் வழியாக உண்டாக்கப்படும் காட்சியின்பத் துணுக்குகள் என எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்துள்ளதின் வழியாக நீண்டுள்ளது. 

வெற்றிகரமான மூன்றாவது வாரம் என்ற விளம்பரம் வந்தபின்னரே அறம் படம் பார்க்கச் சென்றேன் (திருநெல்வேலி- ரத்னா திரையரங்கு-பின்னிரவுக்காட்சி) படம் ஆரம்பிக்க 15 நிமிடங்களே இருந்தன. நான் போனபோது அரங்கில் பாதியளவுகூட நிரம்பவில்லை. தேசியகீதம் போடுவதற்கு முன்னால் ஒருகூட்டம் திமுதிமுவென வந்து ஏறியது. இரண்டு வாகனங்களில் பிதுங்கிக்கொண்டு வந்து இறங்கியவர்களின் அடையாளம் நடுத்தரவர்க்க மாதச்சம்பளக்காரர்கள் என்பதுதான். அரசிடம் தங்களின் கோரிக்கைக்காகச் சங்கக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு நகரத்து வருகையின் ஒரு பகுதியாக இந்தச் சினிமாவையும் பார்த்துவிடவேண்டும் என்பது அவர்களின் பயணத்திட்டமாக இருந்துள்ளது. 1960-80-களில் தீபாவளி அல்லது பொங்கலன்று வண்டிகட்டிக்கொண்டு எம்ஜியார் படம் பார்க்கப் போகும் கிராமத்துக்காரர்களில் ஒருவனாக இருந்திருக்கிறேன். அதுமாதிரியான ஒருமனநிலையில் இந்தக் கூட்டமும்- பெருங்கூட்டமாக அறம் சினிமாவைப் பார்க்க வருகிறார்கள் என்பது மனதிற்குள் ஓடியது. இப்படித் திரள்திரளாகச் சென்று நாடகங்களையும் சினிமாவையும் பார்த்தவர்கள் உருவாக்கியது தமிழக அரசியல்; தமிழக ஆட்சியதிகாரம் . வெகுமக்கள் சினிமாவும் வெகுமக்கள் அரசியலும் இணைந்த பயணம் என்பதும் நினைவுக்கு வந்தது.

அறம் என்ற சினிமாவைப் பார்க்க நினைப்பவர்களும் பார்த்துவிட்டுப் பேசுபவர்களும் அது எழுப்பும் அரசியல் விவாதத்தையே பேசுகிறார்கள். கலை, இலக்கியம், சினிமா போன்றன அரசியலை நேரடியாகப் பேசுவதைத் தவிர்க்கவேண்டும் என விமரிசகர்களும் சினிமாவின் அழகியலை முதன்மைப்படுத்தும் சினிமாக்காரர்களும் சொல்வதுண்டு. ஒருபடம் பேசும் அரசியல் வெளிப்படையாக இல்லாமல் மறைமுகமானதாக- ரகசியமானதாக -குறியீடுகள் வழியாக வெளிப்படுவனவாக இருக்கவேண்டுமேயொழிய நேரடியாக இருக்கக்கூடாது என்பதைத் திட்டவட்டமாக மறுதலித்துவிட்டு நேரடியாக அரசியல் பேசுகிறது கோபிநயினாரின் அறம் என்ற சினிமா. அமெரிக்கர்களைப்போல வல்லரசு நாட்டில் வாழும் கெத்துடையவர்களாக இந்தியர்களை நம்பவைக்க முன்னெடுக்கும் ராக்கெட் அடையாளத்தைக் கேள்விக்குள்ளாக்குவது அறம் படத்தின் அரசியல் விமரிசனம். தேச வருமானத்தில் பெருந்தொகையைப் பாதுகாப்பின் பெயரால் ஆயுதங்களை வாங்கிக் குவித்துவந்த அரசுகள், இப்போது தேச வளர்ச்சி என்ற பெயரில் அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்காகப் பெருந்தொகையைச் செலவழிக்கின்றன; ஆனால் அக்கண்டுபிடிப்புகள் அடித்தட்டு மக்களுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் எந்தவிதத்திலும் பயனளிக்கக்கூடியன அல்ல என்று வெளிப்படையாகப் பொருளாதார அரசியலைப் பேசும் படமாக வந்துள்ளது அறம்.

அண்மைக்காட்சியாக (க்ளோஸ் அப்) உயர்ந்து நிற்கும் ராக்கெட்டை ஒன்றிரண்டு தடவையும், குழந்தையை உள்வாங்கிக்கொண்ட மூடப்படாத போர்வெல் குழியைப் பலதடவையும் காட்டிப் பேசும் காட்சி அடுக்குகள் முன்வைக்கும் அரசியல் பார்வையாளர்களுக்குப் புரியாமல் போய்விடும் வாய்ப்பிருக்கிறது என்று இயக்குநர் கருதியிருக்கிறார். தூரக்காட்சிகளில் (லாங்வ்யூ) இரண்டையும் இணைத்தும் காட்சிப்படுத்தும் குறியீடுகளை வைத்துள்ள இயக்குநர் அதுமட்டும் போதாது என்று நினைத்தது ஏனென்று தெரியவில்லை. தனது படம் பேசும் அரசியலை விரிவாகப் பேச்சுமொழியிலும் அதை விவாதிக்கச் செய்துள்ளார். [ நியூஸ் -18 அலைவரிசையில் குணசேகரன் நடத்தும் விவாதத்தில் இளங்கோ கல்லாணையும் முத்துகிருஷ்ணனும் விவாதமாகவும் முன்வைக்கின்றனர் . இருவரின் முகபாவங்களும் பேச்சுமொழியும் இணையவில்லை என்ற குறை வெளிப்படையாக உள்ளது. தொடர்ச்சியாகத் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுக்கும் இருவரும் சினிமா என்ற ஊடகத்தின் காமிராக் கண்ணைக் கண்டு பயந்து திணறியிருக்கிறார்கள். ஒருங்கிணைப்பாளர் குணசேகரனும் அவர்களோடு சேர்ந்துகொண்டு முகபாவங்களைத் தவறவிட்டுள்ளார்.ஆனால் கிராமத்து மனிதர்களாகவும் அரசாங்க அதிகாரிகளின் வரிசைகளாகவும் நடித்துள்ள துணை நடிகர்கள் பலரும் அவரவர் பாத்திரங்களை வெளிப்படுத்துவதில் மனரீதியிலும் உடல் ரீதியிலும் குரல்பாவங்களோடு இணைத்துள்ளனர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. மையப்பாத்திரத்தை ஏற்றுள்ள நயன்தாராவும் இதுவரை காட்டிய நடிப்புக்கூறுகளைக் கைவிட்டு வேறுவிதமான நடிப்புமொழியைக் காட்டியுள்ளார்.]

புறக்கணிப்பின் அரசியல், அறிவியல் தொழில் நுட்ப அரசியல் என்ற எதிரிணையில் புறக்கணிப்பு அரசியலை அம்பலமாக்கும் நோக்கம் கொண்ட அறம் படம், பொருளாதாரத்தைக் கையாளும் இரண்டு அமைப்புகளை அம்பலமாக்கி, ஒன்றின் பக்கம் சாய்வுநிலையை மேற்கொண்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் என்ற அரசியல்வாதிகளை விடவும் மக்களாட்சியின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டு செயல்படும்-செயல்படுத்தும் வாய்ப்புள்ளவர்கள் அதிகாரிகளென்னும் அதிகாரவர்க்கம்தான் என்பதைச் சொல்கிறது. போட்ட முதலை எடுக்கும் தொழிலாக அரசியலைக் கருதும் அரசியல் கட்சி உறுப்பினர்களைவிடவும் கற்ற கல்வியும் வாங்கும் சம்பளமும் உண்டாக்கும் குற்ற உணர்வு அதிகார வர்க்கத்தைச் செயல்பட வைக்கும் எனவும் விவாதிக்கிறது. மக்களுக்குச் செய்யும் சேவைக்காகத்தான் தனது பதவியும் படிப்பும் என உணரும் அதிகார வர்க்கம் அல்லது படித்த வர்க்கத்தின் வழியாக அடித்தள மக்களுக்கானச் சலுகைகளும் விடியல்களும் கிடைக்கக்கூடிய வெளிச்சத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது. போராடாமலேயே கிடைத்திருக்கவேண்டிய குடிநீர், மருத்துவம், போக்குவரத்து போன்ற அடிப்படை உரிமைகளையேகூட தரமறுக்கும் மக்களாட்சிமுறை அடித்தட்டு மக்களுக்கானதாக மாறுவது அரசியல்வாதிகளின் கையில் இல்லை எனச் சொல்லும் அறம் பொறுப்பான அதிகாரிகளின் குற்றமனத்தைத் தூண்டப்பார்த்துள்ளது. அந்தவிதத்தில் இதுவரையிலான பொருளியல் விவாதப்படங்களிலிருந்து வேறுபட்டதாகத் தன்னை நிறுவிக்கொண்டுள்ளது அறம்.

ஏழைக் கதாநாயகன் X பணக்கார வில்லன் என்பதான பொருளாதார எதிரிணைகளைக் காட்டிய படங்கள் ஏராளமாக வந்துள்ளன தமிழில். அவையெல்லாம் கதாநாயகன் பணக்காரனாகி, மனிதாபிமானத்தோடு ஏழைப்பங்காளனாக மாறிய சமரச அரசியலுக்குள் நின்றுபோனவை. அதிலிருந்து முற்றிலும் விலகி, புனைவுக் காட்சிகள் வழியாக அல்லாமல் நடப்பியல் காட்சிகள் வழியாகவும், பாத்திரங்களின் வசனங்கள் வழியாகவும் அரசியல் விவாதத்தை முன்வைத்த அறம், அரசியல் விவாதத்தின் வழியாகவே கவனிக்கப்பட்ட படம் என்பதாக நான் நினைக்கவில்லை. கதை சொல்லும் முறை, ஒரு சினிமா என்னும் கலைக்குத்தேவையான புனைவுவெளி, அவ்வெளியின் நிகழ்வுகளைக் குறிப்பாகக் காட்டும் புனைவுக் காலம் என்னும் கலையின் கூறுகளையும் சினிமாவின் மொழியையும் உத்திகளையும் கச்சாவாகப் பயன்படுத்தியதின் வழியாகவும் அறம் வேறுபட்ட சினிமாவாக ஆகியிருக்கிறது.

அறம் தனது கதைசொல்லல் உத்தியாக விசாரணை என்னும் வடிவத்தைக் கைக்கொண்டுள்ளது. ஒரு நிகழ்வை அரசதிகாரத்தின் சார்பில் நின்று- பொதுப்போக்கிலிருந்து-அணுகாமல் திரளான மக்களின் உணர்வுகளின் சார்பில் நின்று அணுகிய மாவட்ட ஆட்சித்தலைவர் மீது துறைசார்ந்த விசாரணை என்னும் கட்டமைப்புக்குள் மொத்தப் படமும் நகர்த்தப்பட்டுள்ளது. பொதுவாக இரண்டுபேர் மட்டும் இடம்பெறும் விசாரணை என்ற வடிவத்தில் அவரவர் நிலைபாட்டை நிறுவிக்கொள்ள - நிரூபித்துக்கொள்ளும் வாய்ப்பே உண்டு. தன் மீது அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் முன் தன் தரப்பை விளக்கிவிட்டு வெளியேறும் மதிவதினி, அரசதிகாரப் பொறுப்பிலிருந்து வெளியேறி மக்களின் பக்கம் - அவர்களுக்குச் செய்யப்போகும் சேவைகளை முன்னெடுக்கும் நபராக நிலைநிறுத்தப்படுகிறார். விசாரிக்கப்படும் காலம்‘ஒருநாள்’ என்றால், விசாரிக்கப்படும் நிகழ்வுகள் நடந்த காலமும்‘ஒருநாள்’தான். மூடப்படாத போர்வெல் குழிக்குள் ‘ஹன்சிகா’ விழுந்ததும் கடமையை உணர்ந்த அரசதிகாரியான மதிவதினி முழுப்பொறுப்பேற்று அக்குழந்தையைக் காப்பாற்றித்தரும் முடிவுகளை எடுத்ததும்தான் விசாரிக்கப்படுகிறது.

ஒருநாளும் இன்னொருநாளும் என்ற காலத்தைக் குறிப்பாகத் தனது சினிமாவின் காலமாக ஆக்கிக்கொண்ட இயக்குநர் கோபிநயினார், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கிராமம் என புனைவற்ற வெளியைக் குறிப்பாகப் படத்தின் வெளியாக ஆக்கியிருக்கிறார். இதன்மூலம் தனது சினிமாவைப் புனைவு சினிமா என்ற வகைப்பாட்டிலிருந்து பிரச்சினை சினிமா(Problem Film) என்ற வகைப்பாட்டிற்குள் நகர்த்தியிருக்கிறார். இந்நகர்வு தமிழ்ச் சினிமா வரலாற்றில் இதுவரை நடக்காத ஒரு நகர்வு. இப்புதிய நகர்வைத் தமிழ்நாட்டின் வெகுமக்கள் ஏற்றுக்கொண்டு ரசிக்கிறார்கள்; கொண்டாடுகிறார்கள் என்பதும் நம்பிக்கைதரும் மாற்றம். மாற்றுப்படங்களின் வருகைக்காகத் தமிழின் திரள் காத்திருக்கிறது.

.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்