தேசிய நாடகத்தை உருவாக்குதலின் ஒரு பரிமாணம்

மாதய்யா தி காப்ளர் நவம்பர் 17,18,19 தேதிகளில் சென்னை அரசுஅருங்காட்சியகத்திற்குள் இருக்கும் ம்யூசியம் அரங்கில் நிகழ்த்தப்பெறும் என்றதகவலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் ப்ரசன்னா ராமஸ்வாமி.அவரது இயக்கத்தில் மேடையேறிய பெரும்பாலான நாடகங்களைப் பார்த்தவன் என்றவகையில் இந்த நாடகத்தைப் பார்க்கவேண்டிய நாள்:18-11-2017 
எனக்குறித்துக் கொண்டேன். நான் போன இரண்டாவது நாள் ம்யூசியம் அரங்கு பார்வையாளர்களால்நிரம்பியது. முந்திய நாளும் நிரம்பியது என்றே அறிந்தேன். மூன்றாவது நாளும்நிரம்பியிருக்கும். நான் போன அன்று நாடகத்தைக் கன்னடத்தில் எழுதிய நாடகஆசிரியர் எச். எஸ். சிவப்பிரகாஷும் நாடகம் பார்க்க வந்திருந்தார் என்பது கூடுதல்சிறப்பு. 
மிக நீண்டகாலமாக ஆங்கிலத்தில் நாடகங்களை மேடையேற்றும் மெட்ராஸ் ப்ளேயர்ஸ் என்ற அமைப்புக்குரியதொடர்ச்சியான பார்வையாளர்கள் சென்னையில் உண்டு. உலக அரங்கிலும் இந்திய அளவிலும் நன்கு அறியப்பெற்றநாடகப்பிரதிகளை மேடையேற்றிப் பார்க்கும் மெட்ராஸ் ப்ளேயர்ஸ் அரங்க வெளிப்பாட்டு மொழியை அறிந்தவர்கள்.இந்த நாடகத்தில் அவரவர் பாத்திரங்களை ஏற்று லாவகமாக மேடையை நிரப்பியபோது அது வெளிப்படவேசெய்தது. ஆங்கிலத்தில் மேடையேற்றப்பட்ட மாதய்யா தி காப்ளர் நாடகத்தின் கன்னட மூல வடிவமான மாதாரிமாதய்யாவை சங்கீத் நாடக அகாடெமியின் மண்டல நாடகவிழாவொன்றில் பார்த்திருக்கிறேன். புராணக் கதைகளைநாடகப்பிரதிகளாக ஆக்கும்போது கையாளும் பிரதியாக்க முறையைக் கையாண்டு எழுதப்பெற்ற நாடக வடிவம் அது.புராணப் பாத்திரங்களுக்குள் நடக்கும் மோதல்களின் பரிசோதனைப் பாத்திரங்களாகப் பூமியில் வாழும் மனிதர்களைஅடையாளப்படுத்தும் உத்தி. இதே உத்தியைத் தமிழில் சங்கரதாஸ் சுவாமிகள் சில நாடகங்களில் கையாண்டுபிரதியாக்கம் செய்துள்ளார். அந்த உத்தி கிராமப்புற வெகுமக்களிடம் சென்றடைவதற்கான எளிமையான உத்தி. 

ப்ரசன்னாவின் பெரும்பாலான நாடகங்கள் எழுதப் பெற்ற நாடகப்பிரதியை அப்படியே மேடையேற்றிக் காட்டிய நிகழ்வுகள் அல்ல.தன்னுடைய நெறியாளர் அடையாளமாகச் சிலவற்றைக் கடைப்பிடிப்பதின் வழியாகத் தனது நாடகம் என்பதை உருவாக்குவதில் அக்கறை காட்டும் ப்ரசன்னா, மேடையேற்ற எடுத்துக்கொள்ளும் நாடகப்பிரதி, அவர் பேச நினைக்கும் சமகாலப்பார்வைக்கு - அரசியல்விமர்சனப்பார்வைக்குப் பொருத்தமானதா இருக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்துபவர். நடிகர்களின் உடல்மொழியின் வெளிப்பாட்டை இசைக்கூறுகளும் நடனக்கூறுகளும் கலந்து உருவாக்கவேண்டுமெனநினைப்பவர். முழுமையான மரபு ஒப்பனைகளைத் தவிர்த்துவிட்டுச் சமகால மனிதர்களாகவே - பல நேரங்களில்நாங்கள் நிகழ்த்துபவர்கள் என்ற தன்னுணர்வுடன் நிகழிடத்தில் உலவும் விலகல் தன்மையைத் தொடர்ந்துகாட்டுபவர். இந்த நெறியாள்கை அடையாளம் (directorial touch) அவருக்குச் சமகாலத்தின் மீதான விமரிசனங்களைமுன்வைக்க உதவியாக இருக்கிறது. இந்த நாடகத்திலும் அவருக்குப் பெரிதும் உதவியிருக்கிறது. நிலவளத்தையும்நீர்வளத்தையும் பெரும் முதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் அரசுகள் உருவாகிக் கொண்டிருக்கும் சூழலில் இயற்கைவளங்களைக் காக்கவேண்டிய இயக்கங்களின் தேவையைக் கோடிட்டுக் காட்டுவதின் வழியாக நாடகம் நமது சமகாலநாடகமாக ஆகியிருக்கிறது. இந்த நாடகத்தில் இடம் பெறும் அரசனின் உடையலங்காரம், பேச்சுமொழியின் த்வனிபோன்றன பார்வையாளர்களுக்கு நடப்பு அதிகார அரசியல் தலைமையை மனதிற்குள் அடையாளப் படுத்தவேண்டும்எனத் திட்டமிட்டது என்பதாகச் சொல்லமுடியும். படச்சட்டக மேடையை முற்ற மேடையின் தன்மையோடுபயன்படுத்தியிருந்தது நாடகம். ப்ரொசீனிய அரங்கின் நுழைவு, வெளியேற்ற வசதிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்வையாளர்களுக்குள்ளிருந்து பாத்திரங்களின் நுழைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒருபிரதியின் கட்டமைப்பில்அத்தகைய தேவைகள் இல்லாதபோது இத்தகைய உத்திகளைக் கையாள்வது அவசியமா? என்பதுயோசிக்கவேண்டிய ஒன்று. 
ப்ரசன்னா ராமஸ்வாமி இந்த நாடகத்தை மேடையேற்றத் தொடங்கியமுதல் தந்த தகவல்களும் நாடகத்தைப் பார்த்தபின் கிடைத்த அனுபவமும் எனக்கு இரண்டு விதமான எண்ணங்களைக் கிளறிவிட்டது. முதல் எண்ணம் நமதுகாலச்சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவது தொடர்பானது; இரண்டாவது தேசிய நாடகமென்னும் கருத்துருதொடர்பானது.இரண்டுமே விரிவாக விவாதிக்க வேண்டியன. 
இணையம் வழங்கியுள்ள அதிகப்படியான சாத்தியப்பாடுகளைத் தனது துறைசார்ந்த செயல்பாடுகளுக்குப்பயன்படுத்தமுடியும் என்ற நம்பிக்கை எனக்கும் உண்டு. நாடகத் தேர்வு தொடங்கி, நடிகை, நடிகர்கள் தேர்வு,ஒத்திகைகளில் சந்திக்கும் சிக்கல்கள் என எல்லாவற்றையும் வெளிப்படையாகத் தனது சமூக வலைத்தளப்பக்கமானமுகநூலில் சொல்லிக்கொண்டே இருந்தார் ப்ரசன்னா. அந்தக் குறிப்புகளும் படங்களுமே நாடகத்தைப்பார்த்துவிடவேண்டுமென்ற ஆர்வத்தை உண்டாக்கிக்கொண்டே இருந்தன. அதே நேரத்தில் மேடை நிகழ்வுஉண்டாக்கும் ரகசிய மகிழ்ச்சியைக் குறைத்துவிடுமோ என்ற அளவுக்குத் தகவல்களும் படங்களும் அளிக்கிறாராரேஎன்றுகூட நினைத்தேன். நாடகத்தைப் பார்த்தபின் அந்த எண்ணம் விலகிச்சென்றுவிட்டது. மேடை நிகழ்வின்ரகசியம் காக்கப்பட்டிருந்த்து. அதன் வழியாகக் கிடைத்த மகிழ்ச்சி அதற்கே உரியதாக இருந்தது. 

இரண்டாவது எண்ணமான தேசிய நாடகமென்னும் கருத்துரு 1990 களில் அதிகமாக விவாதிக்கப்பட்டுப் பின்னர்கைவிடப்பெற்ற ஒன்று. அப்போதைய விவாதங்களில் பலரும் - குறிப்பாக மாநில மொழிகளின் வழியாகத் தேசியஇனங்களின் அரங்க அடையாளத்தை உருவாக்க நினைத்தவர்கள், “தேசிய நாடகத்தை உருவாக்குவது என்பதுபலவண்ணத்துணிகளால் ஆன ஒட்டுப்போட்ட சட்டையைத் தைத்து இந்திய நாடகம் எனப் போட்டுக்கொள்வதுபோன்றது” என்று சொல்லாடினார்கள். நானும்கூட அந்தக் கருத்தோட்டத்தோடு இணைந்தே பேசிவந்தேன். கர்நாடகஇசையின் ஆலாபனைகள், நாட்டார் ஆட்டமரபுகளின் உடல் அசைவுகள், நவீன இசைக்கருவிகளின் உலோகச் சத்தம்ஆகியவற்றைத் தனதாக்கிக்கொண்டு, ஆங்கில உரையாடல்கள் வழியாக வெளிப்பட்ட மாதய்யா தி காப்ளரும் கூடஅப்படியொரு கலவையான வெளிப்பாடு என்பதாகவே தோன்றியது. நாடகம் முன்வைத்த விவாத்தின் வழியாகவும் சமகால அரசுகளின் மீதான விமரிசனப்பார்வைப் பார்வையாளர்களுக்குக் கடத்தியதின் மூலமும் நிகழ்கால இந்தியத்துயரத்தைப் பேசுபொருளாக்கித் தன்னை நிறுவிக்கொண்டதன் மூலமும் அந்த எண்ணத்தை விலகிப்போக வைத்துவிட்டார் இயக்குநர். 






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்