கி.ரா.வின் புதிய வரவு: பெருங்கதை


முன்பெல்லாம் நண்பர்களின் எழுத்துகள் கையெழுத்தில் வாசிக்கக்கிடைக்கும். நீலவண்ண எழுத்துகள், கறுப்பு வண்ண எழுத்துகள் அதிகம் என்றாலும் பச்சை, சிவப்பு, ஊதா வண்ணங்களிலெல்லாம் எழுதும் பேனாக்கள் வந்தபோது அவற்றில் எழுதிப் பார்க்கும் எழுத்தாளர்கள் உண்டு. எழுத்தாளர்களின் கையெழுத்திலேயே வாசிக்கக் கிடைக்கும் பிரதிகள் இப்போது குறைந்துவிட்டன. அப்படிக்கிடைத்தாலும் டைப் செய்யப்பட்டு கணினி வழியாகவே வந்துசேர்கின்றன. அப்படிப் படித்த எழுத்துகளையும் பிறகு அச்சில் வாசிக்கும் ஆசை விலகுவதில்லை.
சமீபத்தில் பாண்டிச்சேரிக்குப் போனபோது கி.ராஜநாராயணன் தான் எழுதிமுடித்த ஒரு குறுநாவலொன்றை வாசித்துப் பார்க்கும்படி தந்தார்பெருங்கதை என்னும் பெயரிட்டு எழுதப்பெற்ற அப்பிரதி 100 பக்கங்களில் பெண்களின் உலகத்தைத் திறந்துகாட்டியது. மரபான கிராமிய வாழ்க்கைக்குள்ளேயே பெண்களின் மொழியும் அவர்களின் வினைகளும் அதற்குள் அவர்கள் உருவாக்கும் விளையாட்டுகளும் காதல்களும் அதனைச் சொல்வதற்கெனக் கையாளும் சொல்முறையுமென நீண்ட அந்தப் பிரதியை வாங்கிவந்த உடனே படித்துவிட்டேன் என்றாலும் உடனே அனுப்பி வைக்கவில்லை. திரும்பவும் ஒருமுறை வாசித்துவிட்டு அனுப்பிவைத்தேன்எப்போதும் ரசிக்கத்தக்க சொல்முறையைக் கொண்டிருக்கும் கி.ரா.வின் எழுத்துபாணி இன்னும் தொடர்கிறது. 95 வயதிலும் பேனாவால் தானே எழுதும் அந்தக் கதைக்காரரிடம் சொல்வதற்கும் எழுதுவதற்கும் இன்னும் நிறைய இருக்கிறது. இந்தப் பெருங்கதை நேரடியாக நூலாக வருமா? வேறெதாவது இதழில் தொடராக வருமா? தெரியவில்லை. வரும்போதும் வாசிப்பேன்.

தமிழ்ப் புனைகதையின் நவீனத்துவம் பெண்ணை எழுதுவதின் வழியாகவே நிகழ்ந்தது. மங்கையர்க்கரசியின் காதல் தொகுப்பிலிருக்கும் குளத்தங்கரை அரசமரத்தை முதல்புள்ளியாகக் கொண்ட சிறுகதை வரலாறாகட்டும், ஞானாம்பாளை எழுதிவிட்டுப் பிரதாபமுதலியார் சரித்திரமெனப் பெயர் வைத்த வேதநாயகம்பிள்ளை என்னும் நாவலிலக்கியத் தொடக்கமாகட்டும் பெண்களை -புதுவகைப் பெண்களை எழுதுவதின் வழியாகவே நவீனத்துவத்தை நகர்த்தியது. பின்னர் வந்த பலர் பெண்களின் அறிவார்ந்த செயல்பாடுகளை எழுதுவதாக நினைத்துக்கொண்டு நடைமுறையில் சந்திக்கமுடியாத சாகசக்காரிகளை எழுதியிருக்கிறார்கள். ஆண்களால் எழுதப்பெற்ற சாகசக்காரிகளைப் போலப் பெண்கள் அதியற்புதச் சாகசக்காரிகளை எழுதவில்லை என்பதே எனது கணிப்பு.

பெண்களை எழுதுவதிலும் முன்னிறுத்துவதிலும் மற்றவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கோணத்தை முன்வைப்பவர்களாக இரண்டுபேரைச் சொல்வேன். முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணன் என்றால் பின்னத்தி ஏராக இமையம் நிற்கிறார். இவ்விருவரின் புனைகதைகளுக்குள் வரும் பெண்கள் வலிந்து அறிவூட்டப்பட்ட பாத்திரங்கள் அல்ல. அவர்களின் நடப்பு வாழ்க்கையை நகர்த்துவதற்கான அறிவும் தெளிவும் முடிவெடுக்கும் திறனும் இருக்கின்றன என்பதை எழுதிக்காட்டுகிறார்கள். மரபான வாழ்க்கையின் நெருக்கடிகளைச் சந்திக்கும்போதே ஆரோக்கியம் எடுத்த முடிவுகளும் (கோவேறு கழுதைகள்) சந்தித்த துயரங்களும் விதிப்பயனால் ஏற்பட்டதல்ல என்பதை உணரும்படியாக எழுதிக்காட்டியதின் நீட்சியாகச் செடலைத் தந்த இமையத்திற்குக் கோபல்ல கிராமத்தில் வந்த மங்கத்தாயாரம்மாள் முன்மாதிரியாக இருந்திருக்க வாய்ப்புண்டு என நினைப்பதுண்டு. கரிசல்காட்டு பின்புலத்திற்கு மாறாக நடுநாட்டுப் பின்புலத்தில் எழுதும் இமையமும் கி.ரா.வும் நாவலாக எழுதும் பெருங்கதைகளில் மட்டுமல்லாமல், சிறுகதைகளிலும் விதம்விதமாகப் பெண்களை எழுதுவதில் இரட்டைச்சால் ஓட்டுகிறார்கள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்