தமிழ்ச்சிந்தனை மரபைத்தேடும் பயணத்தில்

பிரிட்டானிய இந்தியாவில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் பலவும் பின்காலனிய இந்தியாவில் விவாதப்பொருளாக மாறியுள்ளன. இந்தியர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியோடு முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் என்ற குற்றச்சாட்டையும் சந்தித்துவருகின்றன.
குறிப்பாகக் கால்டுவெல் முன்வைத்த திராவிட மொழிக்குடும்பம் என்ற கருத்தை முகச்சுளிப்போடு அணுகும் பலரைப் படித்திருக்கிறேன்; பார்த்திருக்கிறேன். மொழிக்குடும்பம் பற்றிய கருத்தாக்கம் மட்டுமல்லாமல், பல்சமய இருப்பு, பலநிலைப்பட்ட சடங்குமுறைகள் இருப்பதையும், நாட்டார் மரபு வேறு, வைதீகமரபு வேறு என்ற வாதங்களையும் முகச்சுளிப்போடு எதிர்கொள்பவர்கள் இப்போது அதிகமாகிவிட்டார்கள். முன்பு இதனை வலியுறுத்தி வளர்த்தெடுத்த அரசியல் இயக்கங்களும் அறிவியக்கங்களும்கூடப் பின்வாங்கிவிட்டன. அதனை ஒற்றை இந்தியாவின் ஆதரவாளர்களின் வெற்றி என்று சொல்லத்தோன்றுகிறது.  
நிலப்பரப்பு அடிப்படையில் ஒரு தேசத்தில்லவிதமான மொழி, இனம், பண்பாடு கொண்டதாக இருப்பவர்கள் இணைந்து வாழ்வதில் சிக்கல் இல்லை என்பதை உணரவேண்டும். அவை ஒவ்வொன்றுக்குமான இடத்தையும் இருப்பையும் அங்கீகரிக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டால் போதும். இந்த அடிப்படையில் தான் பிரிட்டானியர்கள் இந்தியாவைப் புரிந்துகொள்ள முயன்றார்கள். அந்த முயற்சியின் பின்னணியில்தான் இந்தியாவைப் படிக்கமுயன்றார்கள். கல்விப்புலம் சார்ந்த படிப்பாகமட்டும் இல்லாமல், சமயப்பரப்பல், நிர்வாகத்தகவல் சேகரிப்பு, வியாபார உத்தியை உருவாக்குவதற்கான கண்டுபிடிப்புகள் எனப் பலவகையாக அவர்களது கற்கை முறை இருந்தது. எல்லாவற்றையும் இணைத்துப் பிரிட்டானிய ஆட்சியை - அமைச்சகச் செயல்பாடுகளைச் செம்மையாக நடத்திட விரும்பினார்கள். அவை பின்னர் கருத்தியல்களாக வளர்ச்சிபெற்றன.  ஆனால் அக்கருத்தியல்கள்   பிரிட்டானியர்களின் அதிகாரத்திற்கு முந்திய ஆட்சிகளில்  கருத்தியல் ரீதியாக அதிகாரம் செலுத்திவந்த பிராமணர்களுக்கெதிராக இருந்தன என்பதை உணர்ந்த நிலையில்தான், ‘பிரித்தாளும் சூழ்ச்சிஎன்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
மொழி, இலக்கியம், இயற்கை இவை மூன்றும் சிந்தனை உருவாக்கத்தில் முதன்மையானவை, இயற்கையோடு மனிதனுக்குள்ள உறவு, மனிதர்களோடு மனிதர்கள் கொள்ளும் உறவு, அதன்வழி உருவாகும் குடும்ப அமைப்பு, அவையினைந்து உருவாகும் சமூக அமைப்பு, அதனை வழிநடத்திடத் தேவையான அரசு, அதன் உருவாக்கம், அதன் உறுப்புகள், அவை பின்பற்றவேண்டிய நடைமுறைகள் போன்றவற்றைத் தொகுக்கும்போது அதுவே ஒருமொழியைப் பயன்படுத்தியவர்கள் கொண்ட சிந்தனையாக அறியப்படும். இவையனைத்தையும் தொகுத்துத் தந்த ஆதிப் பனுவல் தொல்காப்பியம். அதில் சூத்திரங்களாகவும் முன்வைப்புகளாகவும் எழுதப்பெற்றவைகளுக்கு விளக்கம் தரும் இலக்கியப் பனுவல்களாக இருப்பவை செவ்வியல் பனுவல்கள் எனப்படும் அகப்புறக் கவிதை மரபுகள். இவ்வகப் புறக் கவிதை அப்படியே பின்பற்றவில்லையென்றாலும் தமிழின் அறநூல்களில் அதனைவிட்டு விலகிடக் கூடாது என்ற விருப்பம் இருப்பதை உணரலாம். அதேபோல் தொடர்நிலைச்செய்யுள்களாக இருக்கும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழ்ச் சிந்தனை மரபை உள்வாங்கிய கதைதழுவிய உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்கள். இவைகளுக்குள் இருக்கும் சிந்தனை மரபிலிருந்து விலகிய போக்கைப் பக்திக் கவிதைகளிலும் அவற்றிற்குப் பின்வந்த காப்பியங்களிலும் காணலாம். அவ்விலகல் வைதீகசமயத்தின் தாக்கம்பெற்ற சிந்தனையால் உருவானவை. பல்லவர்கள் காலத்தில் தமிழ்நிலப்பரப்பிற்குள் நுழைந்த வைதீக சமயமும் சம்ஸ்க்ருதக் கல்வியும் பிந்திய தமிழ் இலக்கிய மரபைப் பெரிதும் மாற்றியுள்ளன.
வைதீகமதச் சிந்தனையை உள்வாங்கிய பின்னணியில் பின்னர் வந்த உரையாசிரியர்கள் செவ்வியல் இலக்கண, இலக்கியங்களுக்கு உரையெழுதியதன் விளைவுகளும் பாரதூரமானவை. தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள் போன்றவற்றிற்கு எழுதப்பெற்ற உரைகளில் முதன்மையான உரைகளாக முன்வைக்கப்படும் இளம்பூரணர் உரை, அடியார்க்கு நல்லார் உரை, பரிமேலழகர் உரை போன்றவை சம்ஸ்க்ருத மரபை உள்வாங்கியன என்பதை இப்போதுகூட நிரூபிக்கமுடியும். அம்மரபை அறிந்த்தனால், அதனைக் கொண்டு விளக்கம் சொல்ல முயன்றதை முழுமையாகத் தவறென்று சொல்ல முடியாது. ஆனால் அந்த விளக்கங்களால் - விலகலால் உண்டான சொல்லாடல்கள் இன்றளவும் தமிழ், சம்ஸ்க்ருத முரண்பாடுகளாக நீண்டுகொண்டிருக்கின்றன. குறிப்பாகத் திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரையை முழுமையாக மறுப்பவர்கள் உண்டு. அந்த வரிசையில் தனது நூலை முன்வைத்துள்ளார் பேரா. விஸ்வேஸ்வரன்.  ஓய்வுபெற்ற கணிதப்பேராசிரியரான அவர் இந்தியத் தத்துவ மரபுகளைக் கற்று ஆரியவேதப்பண்பிலான சிந்தனைமரபும் தமிழின் பண்பிலான மரபும் வேறானவை என்பதை நம்பிக்கையோடு ஏற்றுத் தனது திருக்குறள் உரையைத் தந்துள்ளார். வேதமரபை விளக்க பகவத் கீதையையும் தமிழ்மரபை விளக்கத் திருக்குறளையும் அருகருகே வைத்துக் கற்றதன் பயனாகப் பரிமேலழகரின் உரை திருத்தப்படவேண்டிய உரை என்பதை விரிவாக எழுதியுள்ளார்.  திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் எங்கெல்லாம் விலகிச்செல்கிறார்; அதற்குக்காரணமாக இருந்த வேதமரபு எவை போன்றவற்றைக் காரண காரியங்களோடு முன்வைத்துள்ளார். தமிழுக்கென்றிருக்கும் அறிவுப்பாதையை -சிந்தனை மரபைத் தேடி முன்னெடுக்க வேண்டிய காலகட்டமிது. அதற்கொரு வழித்துணை நூலாக இந்நூலைப் பரிந்துரை செய்கிறேன்.

 தமிழனின் தத்துவம்
திருக்குறள் அறம்
( பொருளும் விளக்கமும்)
பரிமேலழகர் இங்கே திருத்தப்படுகிறார்
 ஆசிரியர்: விஸ்வேஸ்வரன், Notion Press, Old No.38 New No.6, McNiclos Road, Chetpet, Chennai, 600031


கருத்துகள்

வன்பாக்கம் விஜயராகவன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஐயா


நீங்கள் "மொழிக்குடும்பம் பற்றிய கருத்தாக்கம் ........... ..... எதிர்கொள்பவர்கள் இப்போது அதிகமாகிவிட்டார்கள்." என்பது வேடிக்கையாக உள்ளது.


தமிழ்நாட்டில் எப்போதுதான் மொழிக்குடும்பம் , முக்கியாமா திராவிட மொழிக்குடும்பம் அல்லது ஏனைய மொழிக்குடும்பங்கள் அல்லது மொழியியல் கருத்துகள் ஏற்க்கப்பட்டுள்ளன????.


. சுந்தரம் பிள்ளை - "தமிழ்த்தாய்" வாழ்த்துப்புகழ் - மற்றைய தென்னிந்திய மொழிகள் தமிழிலிரிந்து பிறந்தவை என தவறாக புரிந்து கொண்டார். திராவிட இயக்கம், தனித்தமிழ் இயக்கம் ஆகியவை மொழியியலை ஒரு போதும் ஏற்க்கவில்லை - அவை தமிழிலிருந்து மற்ற திராவிட மொழிகள் உதித்தவை என்ற பொய்யை ஆதாரமாக கொண்டவை. கால்டுவெல் ஒரு போதும் தமிழ் திராவிட மொழிகளின் தாய் என நினைகவில்லை. கால்டுவெல் 19ம் நூற்றாண்டில் , மொழியியல் பால்ய பருவத்தில் இருந்தபோது எழுதியவர். மேலும் அவர் 19ம் ஐரொப்பிய சிந்தனையில் முக்கிய பொய்யான மொழிக்குடும்பம்=இனம் என நம்பியவர். அந்த அபத்தங்களை மொழியில் எப்போதோ கைவிட்டு விட்டது. ஆனால் தமிழ‌கத்தில் தான் தமிழ் திராவிடகுடும்பத்தின் தாய்மொழி, திராவிட மொழிகளை பேசுபவர்கள் ஒரு இனத்தவர் என்ற பொய்களை நம்பியது, இன்றும் நம்புகிறது. சுந்தரம்பிள்ளை, வேதாசலம் என்ற மறைமலை அடிகள், ஞானமுத்து தேவநேசன் போன்ற திராவிட இயக்க நக்ஷத்திரங்க‌ள் ஒரு போது மொழியியலை பின்பற்றியதில்லை, மொழிக்குடும்பம் என்பதை தமிழிலிருந்து பிறந்தவை என நம்பி , என பிரச்சாரம் செய்து தமிழ்நாட்டில் மொழிக்குடும்பம் பற்றிய தகவல்களை முழுதுமாக மறைத்தனர். தன் தாய்மொழி ஒரு தெய்வம் என நம்புவர்கள் எப்போதுமே அறிவியலின் எதிரிகள்தான்.

நீங்கள் இன்றுதான் சிலர் மொழிக்குடும்பம் பற்றிய கருத்தாக்கத்தை எதிர்கொள்பவர்கள் இப்போது அதிகமாகிவிட்டார்கள் என்பது நகைத்தத் தக்கது/.



வன்பாக்கம் விஜயராகவன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்