பிரசந்ந விதனகேயின் இரண்டு சினிமாக்கள் : வித் யூ வித் அவுட் யூ, பூர்ணமை நாளில் ஒரு மரணம்

மன்னிப்பதிலிருந்து அல்ல; மன்னிப்புக் கேட்பதிலிருந்து தொடங்கலாம்.

பேரினவாதக் கருத்தியலும் மேட்டிமைவாத- உயர்சாதிக் குறுங்குழுவாதமும்- மோதிக் கொண்ட ஒரு பூமியாக இலங்கையை விரித்துக் காட்டிப் பேசத்தொடங்கும் பிரசன்ன விதனகேயின் சினிமா ஒன்றைப் பார்க்கும் வாய்ப்பு இந்தமுறை சென்னை சென்ற போது கிடைத்தது. படத்தின் ஆங்கிலத் தலைப்பு With You Without You. ஆங்கிலத் தலைப்பை அப்படியே நின்னோடா? நீயின்றியா? என மொழி பெயர்க்காமல் பிறகு எனத் தலைப்பிட்டு இருந்தார் அதன் இயக்குநர். அவரது தாய்மொழியான சிங்களத்தில் வைத்துள்ள தலைப்புக்கு என்ன பொருள் எனத் தெரியவில்லை.


திரைக்கதையின் பின்னல்களையும் விடுவிப்புகளையும் மட்டும் வைத்துப் படம் பார்க்கும் பிறநாட்டு மனிதர்களுக்கு வித் யூ வித் அவுட் யூ என்ற ஆங்கிலத் தலைப்பு உருவாக்கும் அர்த்தமே போதும். ஆனால் 30 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போருக்குப் பின் தன் தேசத்து மனிதர்கள் புதியதொரு வாழ்க்கையைத் தெரிவு செய்ய வேண்டும் எனச் சொல்ல விரும்பும் ஒரு கலைஞனுக்கு - அவன் உண்டாக்க விரும்பிய கருத்தியலுக்குப் பொருத்தமான தலைப்பாக இருப்பது தமிழில் வைக்கப்பட்டுள்ள “ பிறகு” என்னும் தலைப்பே. அந்தப் படத்தின் கதை மிகச் சிறியது; எளிமையானது.

திரும்பத்திரும்பத் தனது அடகுக் கடையில் தன் வசமுள்ள சின்னச் சின்ன நகைகளை அடகு வைக்க வரும் ஒரு இளம் தமிழ்ப் பெண் மீது மத்திய வயதில் இருக்கும் சிங்கள அடகுக்கடை முதலாளி காதல் கொள்கிறான். அந்தக் காதல் ‘அவளது இதழில் வழியும் புன்னகையாலும் கண்களில் தெறிக்கும் சுடரொளியாலும் உண்டானது’ என அவன் சொன்னாலும், மறக்க அல்லது மறைக்க நினைக்கும் முந்திய வாழ்க்கைக்கான பரிகாரம் என்பதாக உள்மனம் நினைத்திருக்க வேண்டும். அந்த இளம்பெண்ணோ தனது உறவினர்களைப் பிரிந்து - அல்லது உள்நாட்டுப் போரில் பறிகொடுத்துவிட்டு மலையகத்தமிழ் குடும்பம் ஒன்றிற்கு அனாதையாக இடம்பெயர்ந்தவள். அவளுக்குள் சிங்கள ராணுவம் உண்டாக்கிய அழிவுகளும் பாலியல் வல்லுறவுகளும் நேரடி அனுபவமாக - உடன் பிறந்த சகோதரர்கள் கொல்லப்பட்டதாக, கூட்டுப் பாலுறவால் அழிக்கப்பட்ட இளம்பெண்களைக் காவு கொடுத்த காட்சிகளாக பதிந்து கிடக்கின்றன. என்றாலும் அவளுக்குள் இருக்கும் ஆசை இந்தியாவுக்குப் போகவேண்டும்; விஜய் நடித்த சினிமாக்களைப் பார்க்க வேண்டும் என்பதான ஆசைதான். தொடக்கத்தில் ஒரு சிங்களப் பணக்காரனின் பச்சதாப உணர்வினால் உண்டான காதலை ஏற்க அவளுக்கு மனம் இல்லை. அவனைவிட வயது கூடிய தமிழ்க் கிழவர் ஒருவரோடு மனைவியாக அனுப்பப்பட்டுவிடும் ஆபத்து இருக்கிறது என்ற நிலையில் - அந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க நினைத்து அவனது காதலை ஏற்றுச் சிங்கள நடுத்தர வயதுக்காரனின் மனைவி ஆகிறாள். புரிந்து கொள்ளுதலோடு தொடரும் அவர்களது குடும்ப வாழ்க்கையில் தமிழ்ப் பெண்ணின் தாலியை மையமிட்டு ஒரு விரிசல் உண்டான நிலையில் அவளது கணவனின் பழைய வாழ்க்கையைச் சொல்ல வந்தவன் போலக் கதைக்குள் வந்து செல்லும் காமினியின் வரவு முரண்பாட்டைத் திசை திருப்பிவிடுகிறது.

கணவன் x மனைவி முரண்பாடு, தமிழ் x சிங்கள இன மோதலின் விரிசலாக மாறி விடுகிறது. போர்க்குற்றம் செய்து ராணுவத்திலிருந்து விலகிப் புதுவாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் அவனது கடந்தகாலத்தை அறியாமல் கணவனாக ஏற்றுக் கொண்டு சிங்கள ஆணோடு குடும்ப வாழ்க்கையைத் தொடர முடியாமல் தவிக்கும் ஒரு தமிழ்ப் பெண்ணின் பார்வையாகவும், தனது முந்திய காலத்துக் குற்றச் செயலுக்கான பரிகாரத்தை - மன்னிப்பைக் கோரிப்பெற்றுப் புதிய வாழ்க்கையைத் தொடங்கித் தொடர நினைக்கும் சிங்கள ஆடவனின் மன உறுத்தலாகவும் மாறிமாறி நகரும் திரைக்கதையைக் கொண்டிருக்கும் இந்தப் படம் சினிமாவின் அனைத்துவிதமான அழகியல் கூறுகளையும் கச்சிதமாகக் கலந்து தந்துள்ளது. ஒவ்வொன்றையும் விளக்கி விவரித்தால் திரைப்பட ரசனை வகுப்பாக மாறிவிடும். இரண்டு கதாபாத்திரங்களின் விருப்பம் அல்லது மனஓட்டத்தைக் காட்ட இயக்குநர் தனித்தனியான குறியீட்டுப் பின்னணையைத் தந்துள்ளார். டெலிவிஷனில் ரெஸ்ஸிலிங் காட்சிகளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பவன் நாயகன். தமிழ்ச் சினிமாவின் கற்பனாவாதக் காதல் பாடல்களை - குறிப்பாக விஜய் நடித்த சினிமாக்களின் மீதும் பாடல்களின் மீதும் விருப்பம் ஒண்டவள் பெண். தனிநபர் சார்ந்த இந்த விருப்பங்களுக்குப் பின்னால் இலங்கையின் 30 ஆண்டுக்கால இனவாத அரசியல், பயங்கரவாதத்தடுப்பு யுத்தம், அதில் நேரடியாக ஈடுபட்ட பழைய வாழ்க்கையைக் கொண்ட நாயகனின் பின்புலம், யுத்தத்தால் தனது இரண்டு சகோதரர்களை இழந்த நாயகியின் துயரம் எனக் கதை பின்னப்பட்டு அரசியல் படமாக மாற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் இப்படியெல்லாம் நடந்து முடிந்துவிட்ட நிலையில் பிறகான - போருக்குப் பிறகான- வாழ்க்கையை ஒரு சிங்களக்கணவனும் ஒரு தமிழ்ப் பெண்ணும் தொடர வேண்டும் என்றால் என்ன செய்வது? என்ற கேள்விக்குள் நுழைகிறது படம். அதற்கான ஆகப்பெரும் வழிமுறை ஒன்றே ஒன்றுதான். மன்னிப்புக் கோருவது மட்டுமே இணக்கத்தை உண்டுபண்ணும் என்பதை இயக்குநர் தீர்வாக வைக்கிறார். தனிநபர்களாக அந்தப் பெண்ணும் ஆணும் மாறிமாறி ஒருத்தரிடம் இன்னொருவர் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறார்கள். அவளது ஆசையை - இந்தியாவிற்குப் போய் தமிழ்ச் சினிமாவையும் நடிகர் விஜய்யையும் காட்டிவிடும் முடிவோடு அடகுக்கடையை ஒரு தமிழ் முஸ்லீமிடம் விற்றுவிடுகிறான். உச்சகட்டமாகத் தன்மீது இவ்வளவு அன்பு கொண்ட கணவனைக் காயம்படுத்திவிட்டோமே எனத் தவித்துப் புலம்பும் தமிழ்ப் பெண், மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள். படம் முடிந்து விடுகிறது. சிங்களக் கணவனின் முடிவுகள் ஒவ்வொன்றும் நிதானமாக நகர, தமிழ்ப்பெண்ணின் முடிவுகள் ஒவ்வொன்றும் உணர்ச்சிவசப்பட்டு எடுப்பனவாகவே இருக்கின்றன. அவள் எடுத்த தற்கொலை முடிவு உள்பட. 

சிங்களர்கள், தமிழர்கள், தமிழ் முஸ்லீம்கள் என மூன்றுதரப்பினரும் இருப்பையும் மனநிலைகளையும் கட்டமைத்துள்ள போர் நடவடிக்கைகளின் ஓசையும் போர்மேகங்களும் கரியமுகமும் தூரத்தில் நகர்ந்து கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கிறது. சின்னச் சின்னக் குறிப்புகளால் தனது தேசியத்தின் - தேசத்தின் -நகர்வை -நிகழ்கால வரலாற்றைச் சொல்லியிருக்கும் இந்தப் படம் போருக்குப் பின்னான வாழ்வை, மன்னிப்புக் கோருதலிலிருந்து தொடங்கவேண்டும் என்கிறது. அவர் முன்வைக்கும் மன்னிப்புக் கோரல் என்னும் நிலைப்பாடு அரசின் அல்லது அதிகாரத்தின் நிலைபாடு அல்ல. சில லட்சம் தமிழர்களை அழித்துக் கறைபடிந்த கரத்தோடு இருக்கும் சிங்களப் பேரினவாத அரசு மன்னிப்புக் கோரும் நிலைக்கு இறங்கிவரும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. குறைந்த பட்சமாகக் குற்றவுணர்வு கொண்ட ஓர் அறிக்கையைக் கூட அது வெளியிடாது. சிங்களப் பேரினவாத அரசு மட்டுமல்ல; பயங்கரவாதத்தை ஒடுக்குவதாகச் சொல்லிக் கொண்டு சொந்தநாட்டு மனிதர்களைக் கொன்றுகுவித்த எந்த அரசாங்கமும் குற்றவுணர்வால் தூண்டப்பட்டு மன்னிப்புக் கோரியதாக வரலாற்றில் குறிப்புகள் இல்லை. ஆனால் அந்த அரசுகளின் மனச்சாட்சியாக மாறி ஒவ்வொரு நாட்டுப் படைப்பாளிகளும் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறார்கள் என்பதை உலகக் கலை இலக்கியவரலாறு நமக்குச் சொல்கிறது. பிரசன்ன விதனகேயின் இந்தப் படம் அப்படிப்பட்ட படைப்பாளியின் மனச்சாட்சியின் குரல் என எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.

பிரசன்ன விதனகே தனது மனச்சாட்சியைச் சரியான திசையில் செலுத்தியிருக்கிறார். மன்னிப்புக் கேட்பதை எங்கிருந்து? எப்படித் தொடங்கலாம்? என்பதைத் தயக்கங்களற்று- குழப்பங்கள் இல்லாமல் சிங்களர்களே தொடங்க வேண்டும் எனக் கூறுவதின் நீட்சியாகக் காலில் விழுந்து கதறி அழும் கணவனைப் போல மாறியாக வேண்டும் என்று காட்சிப்படுத்தியிருக்கிறார். பொறுப்புள்ள படைப்பாளியின் மனச்சாட்சி இதனையே வலியுறுத்தும். போர்களின் வழியாகத் துயரங்களை அனுபவித்த இனங்கள் போர்களுக்குப் பிறகான வாழ்க்கையைத் தொடங்க ஒரே வழி மன்னிப்புக் கோருதலும் மன்னித்தலும் அன்றி வேறென்னவாக இருக்க முடியும். இணக்கங்களை ஏற்படுத்த விரும்பும் படைப்பாளிகளின் குரலோடு தமிழ்ப் படைப்பாளிகள் தங்களை இனங்காண வேண்டிய தருணம் இது.

இந்தப் படத்தைப் பார்க்க வந்திருந்த சென்னையின் சில ஆயிரம் பார்வையாளர்களில் சில நூறு பேர்களிடம் இணக்கத்திற்கு மாறான வெறுப்புநிலை இருக்கிறது என்பதும் படத்திற்குப் பின்பான கேள்விகளில் வெளிப்படவே செய்தது. அந்த எண்ணிக்கை சில நூறுகள் தான். கொடுமையாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனச் சொல்லிக் கொண்டே -அதற்கான போராட்டங்களை முன்னெடுக்க அந்தச் சில நூறுபேர்கள் தேவைதான். அவர்கள் அந்தப் பாதையில் செல்லட்டும். அப்படிச் செல்லும்போது கலை இலக்கியவாதிகளின் இணக்க முயற்சிகளைத் தடுத்துவிட மாட்டோம் என்ற உறுதியையும் அவர்கள் முன் வைக்க வேண்டும். இணக்கத்திற்கான வழிமுறைகளைத் தேடுவதில் தான் ஆறாத காயங்களுக்கான மருந்துகளைத் தர முடியும். இலங்கைத் தமிழர்களுக்குத் தேவை என்ன என்பதைத் தெரிந்து கொண்டு நமது பார்வைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

=============================
நன்றி: உயிர்மை, ஜூலை, 2014

பூர்ணமை நாளன்று ஒரு மரணம்

இடையில் வந்த அந்தத் தகவல் எல்லாவற்றையும் மாற்றிப் போட்டுவிட்டது. “13 -07-2014, ஞாயிறு முற்பகல் பனுவல் புத்தகக் கடை மாடியில் ‘வித் யு வித் அவுட் யு’ படத்தின் இயக்குநர் பிரசந்ந விதனகெயின் இன்னொரு படம் திரையிடப்படுகிறது என்று தகவல் சொன்னது. படத்தின் பெயர் பூர்ணமை நாளன்று ஒரு மரணம் எனத் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. ஆங்கிலத்தில் ‘ டெத் ஆன் அ ஃபுல்மூன் டே’ (Death on a fullmoon day ) என இருந்தது. திரையிடலுக்குப் பிறகு திரையிடலை ஏற்பாடு செய்யும் அமுதனோடு உரையாடலாம் என்றும் சொன்னது அந்தக் குறிப்பு.

அமுதனைப் பார்க்கலாம்; பேசலாம் என்பதைவிடப் பிரசந்ந விதனகேயின் இன்னொரு படம் பார்க்கலாம் என்ற ஈர்ப்பே பயணத்திட்டத்தை மாற்றியது. பாண்டிச்சேரியிலிருந்து நெல்லை நோக்கிய பயணம் சென்னையை நோக்கித் திரும்பியது. அதிகாலையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பேருந்தின் ஓரத்து இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வதை அனுபவிக்க வேண்டும். பலதடவை பயணம் செய்த பாதைதான் என்றாலும், சூரியன் வருவதற்கான நேரத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலைப் பயணம் சுகமானது. ஒவ்வொருமுறையும் விதம்விதமான மனநிலையை உருவாக்கக் கூடியது. 

பயணங்களைப் போல, மனதிற்குப் பிடித்த ஒரு படைப்பைத் தந்த ஒரு படைப்பாளியின் மற்ற படைப்புகளும் புதுப்புது உலகத்தைக் காட்டிவிடும் என்று எதிர்பார்ப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன. அதிலும் தமிழ்ச் சினிமாக்காரர்கள் ஒருபட அதிசயக்காரர்களாகவே அதிகம் இருக்கிறார்கள். முதல் படத்தில் தமிழர்களுக்கான சினிமாவைத் தரப்போகிறவர் என்ற நம்பிக்கையளிக்கும் ஒரு இயக்குநர் அடுத்தடுத்த படங்களில் அடையாளம் தெரியாமல் போவதையே தமிழ்ச் சினிமா வரலாறாகக் கொண்டிருக்கிறது. 



இரண்டு பூர்ணமை நாட்களுக்கு இடையில் நடக்கும் நிகழ்வுகள் படத்தின் நிகழ்வுகள். இலங்கை ராணுவத்தில் பணியாற்றி மரணம் அடைந்த சிப்பாயின் தந்தை, அதற்கான இழப்பீட்டுத் தொகையைப் பெற மறுத்துவிடுவதன் தொடர்விளைவுகள் படக் காட்சிகளாக விரிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளோடு தேசத்தின் ராணுவம் நடத்தும் யுத்தகளத்திலிருந்து அரசாங்க முத்திரையோடு திறந்து பார்க்கக் கூடாது என்ற உத்தரவையும் தாங்கி வந்திறங்குகிறது சவப்பெட்டி. சவப்பெட்டியில் இருக்கும் உடலுக்கானவன் என நம்பப்படும் மனிதனின் சின்னப் படம் பெரியபடமாக ஆக்கப்பட்டு ஊரே கொண்டாடுகிறது. தங்கள் ஊர்க்காரன் தேசத்தைக் காக்கும் போரில் உயிர்விட்டான் என்பதால் உண்டாகும் மனநிலை சார்ந்த கொண்டாட்டங்கள். ஆனால் அவனது தந்தை அதை ஏற்கவில்லை. சவப்பெட்டியில் இருப்பது தன் மகனின் உயிரற்ற உடலாக இருக்க முடியாது என்று நம்பும் தந்தைக்குத் தன் மகன் சொல்லிச் சென்ற குரலில் நம்பிக்கை இருக்கிறது. தனக்கு வாக்களித்துச் சென்றபடி, கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் இந்தச் சிறிய வீட்டைக் கட்டி முடிக்கவும், கல்யாணமாகாமல் இருக்கும் தங்கையின் திருமணத்தை நடத்தி முடிக்கவும் தேவையான பணத்துடன் தன் மகன் வருவான் எனக் காத்திருக்கவே விரும்புகிறார் அந்தக் கண் தெரியாத வயோதிகர். 


இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக அனுப்பப் பட்ட அரசாங்கப் படிவத்தை வாங்கிப் பெட்டிக்குள் வைத்துவிட்டு அதன் மேல் தன் மகனுக்காகச் சந்தை யில் புதுப் பனியனை வாங்கி வைத்துக் காத்திருக்கிறார். அவரின் பிடிவாதத்தையொட்டிக் குடும்பத்தினரும், அந்த எளிய கிராமத்தின் அரசுத் தொடர்பு நபர்களும் சமூக அமைப்புகளும் எடுக்கும் நடவடிக்கைகளுமே படத்தின் காட்சிகளாக விரிகின்றன. மூத்தமகள், அவளின் கணவனான மருமகன், திருமணமாகாமல் இருக்கும் இளையமகள், அவளைக் கட்டிக்கக் காத்திருக்கும் உறவுக்கார இளைஞன் என எல்லோரும் இழப்பீட்டுத் தொகையை வாங்கிக் கொள்ள விரும்பினாலும் கையொப்பமிட வேண்டியவர் தந்தை. அவரது பிடிவாதத்தால் அரசின் ஆணையை நிறைவேற்றாத அதிகாரி எனத் தன்னைத் தண்டிக்கக் கூடும் என நினைக்கும் கிராம அதிகாரிக்கு, அந்தப் பணத்தைப் பெற்றுத் தருவதன் மூலம் லஞ்சமாகக் கொஞ்சம் பணம் வாங்கலாம்; அவருக்குத் தான் வட்டிக்குக் கொடுத்த பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என்ற நினைப்பு இருக்கிறது. அந்த ஊரின் பெருமைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் பொறுப்புடைய சமயத்தலைவர்களுக்குத் தங்கள் ஊரிலிருந்து ஒரு தியாகி நாட்டிற்காக உயிர் கொடுத்தான்; அவனுக்காக ஒரு பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதையெல்லாம் ஏற்க மறுக்கும் அந்த வயோதிகரின் மனத்திற்குள் தன் மகனின் உடலை ஒருமுறைத் தொட்டுப் பார்த்துவிட வேண்டும்; அதன்பின் அதனை ஏற்றுக் கொள்ளலாம் என்ற முடிவு இருக்கிறது. தன்னந்தனியாகச் சவப்பெட்டியைப் புதைத்த இடத்தில் தோண்டத் தொடங்குகிறார். அவரின் மனநிலையை ஏற்றுக் கொண்ட குடும்பத்தாரும் ஊர்க்காரர்களும் சேர்ந்து தோண்டுகிறார்கள். திறந்து பார்க்கக் கூடாது என்ற அரசின் உத்தரவை மீறித் திறந்து பார்க்கிறார்கள். உள்ளே இருப்பது மனித உடல் அல்ல; வாழை மரம். அதன் மட்டை. திறந்து பார்த்ததால் அரசின் இழப்பீடு கிடைப்பது சாத்தியமில்லை. அதைப் பற்றிய கவலை இல்லாமல் பெரியவர் திரும்பிப் போகிறார். படம் முடிந்துவிடுகிறது. 

பூர்ணமை நாளன்று ஒரு மரணம், பிரசந்ந விதனகேயின் புதிய படம் அல்ல. “ வித் யு வித் அவுட் யு” வருவதற்கு 10 ஆண்டு களுக்கு முன் வந்த படம். 1997 இல் இலங்கையின் ஜனாதிபதியாக சந்திரிகா குமாரதுங்க இருந்தபோது எடுக்கப்பட்டு அவரது அரசால் தடைசெய்யப்பட்ட படம் என இலங்கையின் கலை இலக்கிய விமரிசகர் அ.யேசுராஜாவின் குறிப்பொன்று சொன்னது. அந்தக் குறிப்பு, படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஈர்ப்பை அதிகமாக்கியது. ராணுவ அதிகாரத்தால் விடுதலை உணர்ச்சியைக் கட்டுப்படுத்திவிட முடியும் என நம்பும் ஒரு அரசை - அரசின் தலைமைப் பதவிகளில் இருப்பவர்களை- மிகமிக எளிமையான ஒரு சினிமா திக்குமுக்காடச் செய்துவிடும் என்பதற்குச் சாட்சியாக இருந்திருக்கிறது விதனகேயின் இந்தப் படம். இழப்பீடு என்ற பொருள் தரும் சிங்கள மொழித் தலைப்பொன்றையும் இயக்குநர் வைத்திருப்பார் என்றே படம் பார்த்து முடித்த பின் தோன்றியது. 

நடக்கும் யுத்தம் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக நடக்கும் யுத்தம் என்ற உண்மையை மறைத்துப் பயங்கரவாதிகளோடு நடக்கும் யுத்தமாகக் காட்டி, அதில் சேர்ந்து பணியாற்றுவது ஒவ்வொருவரின் கடமை என நம்பச் செய்து வருகிறது என்ற விமரிசனத்தை வைக்கும் விதனகே,இலங்கை அரசாங்கத்தின் முக்கியமான வேலை வாய்ப்பு உத்தரவாதமாக இருப்பது ராணுவத்துறை மட்டுமே என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார் என்பதாகப் புரிந்து கொண்டுள்ளது அரசாங்கம். அந்த வாய்ப்பு இல்லை என்று மறுக்க முடியாது ; ஆனால் அதைத் தான் முழுமையாகச் செய்திருக்கிறது படம் என்றும் சொல்ல முடியாது. 

எளிய கதையை முழுமையான நம்பகத்தன்மை கொண்டதாக எடுத்ததன் மூலம் அரசாங்கத்தின் மனச்சாட்சியை உலுக்கிப் பார்த்துள்ளார். குறிப்பான காலம், குறிப்பான வெளி, குறிப்பான மனித அடையாளங்கள் என நடப்பியலின் அனைத்துச் சாத்தியங்களையும் முழுமையாகப் பயன்படுத்தியுள்ள இந்தப் படம் போர், ராணுவம், அதன் வழியாகத் தேசவெறியைத்தூண்டுதல் என்ற நோக்கம் கொண்ட எல்லா அரசாங்கங்களும் பயப்படக்கூடிய ஒரு சினிமா என்று புரிந்தது. கார்கில் போருக்குப் பின்னால் இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் இந்த விளையாட்டை- கொண்டாட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன என்ற பின்னணியில் விதனகேயின் சினிமா இந்தியாவுக்கும், உலகத்துக்குமான சினிமாவாக ஆகிவிட்டதை உணர முடிகிறது. 

தமிழில் மாற்றுச் சினிமா பற்றி யோசிக்கும் பலரும் திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டிய படம். பார்த்துவிட்டு ஈழத்தமிழர் போராட்டம் அல்லது மும்பைக் கலவரம் அல்லது முல்லைப் பெரியாறு எனப் பேரடையாளங்களின் காட்சிகளாகப் படம் எடுக்க வேண்டும் என நினைத்துக் கொள்ளவேண்டியதில்லை. நமது தெருவில், நமது கிராமத்தில், நமது வீட்டிற்குள், நாம் பணிபுரியும் இடத்தில் நிகழும் நுண்ணரசியலைப் பேசுவதிலிருந்து உலக தேச அரசியலுக்கும், சர்வதேச அரசியலுக்கும் நகரும் கருத்தியல் கொண்ட படமாக மாற்ற முடியும் என்பதைப் புரிந்து கொண்டால் போதும். 

நன்றி: உயிர்மை. ஆகஸ்டு, 2014


கருத்துகள்

daya இவ்வாறு கூறியுள்ளார்…
Sir check out in this movie u can see kind of kerela movie trend on shooting...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்