கேள்விகளா? குற்றச்சாட்டுகளா?
எழுத்தாளர் இமையம் 22-10-2013 தேதியிட்ட தி இந்து நாளிதழுக்கு எழுதி அனுப்பிய கட்டுரையை அப்படியே தருகிறேன். அதில் நிகழ்காலத் தமிழ் எழுத்தாளர்களை நோக்கி எழுப்பும் கேள்விகள் மிக முக்கியமானவை. அவைகளைக் கேள்விகள் என நினைப்பதை விடக் குற்றச்சாட்டுகள் என்றே கொள்ள வேண்டும். சொரணையுள்ள கதைக்காரர்கள் முன் வந்து விவாதிக்க வேண்டும். அப்படியெல்லாம் நமது புனைகதை எழுத்தாளர்கள் முன் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்றாலும் ஆசை தான்.
நல்ல விவாதங்கள் எழுப்பப் பட வேண்டும் என்ற ஆசை. இனி அவரது கட்டுரை:
=========================================
எழுத்தாளர்களின் கவனத்திற்கு.
-------------------------------------------------------------------
தமிழ் எழுத்தாளர்களே ! கடந்த இருபது
ஆண்டுகளில் தமிழ்ச்சமூகம் அடைந்த வளர்ச்சி, பெற்ற முன்னேற்றங்கள், மாற்றங்கள்
அளப்பரியது. மனமாற்றம், சிந்தனை மாற்றம் என்பது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு
மாறியிருக்கிறது. உணவில், உடையில், தனிமனித, குடும்ப, சமூக வாழ்வில் பெரிய மாற்றங்கள்.
நேற்றைய ஒழுக்கங்கள், மதிப்பீடுகள் இன்று கேலிக்குரியவையாக மாறியிருக்கின்றன.
நம்முடைய புனிதங்கள் இன்று தெருச்சாணியாக்க்கிடக்கிறது. தொழிற்நுட்பமே வாழ்க்கை.
செல்ஃபோன்,
சாட்டிங், முகநூல், கம்ப்யூட்டர், இணையம், ஈமெயில்,
ஹெட்போன், ஆங்கிலம், அமெரிக்க கனவு இல்லாத வாழ்வை இன்று நினைத்துப் பார்க்கமுடியுமா? நகரம் முதல்கிராமம்வரை – கிழவிகள் முதல் குழந்தைகள்வரை- நைட்டிதான் பொது உடை. சென்னையில் நாளுக்கு நாள் பெண்களுக்கான விடுதிகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. அடுக்குமாடி குடியிருப்புகள், மண்ணில் காலை பதிக்காத குழந்தைகள், தங்க நாற்கர சாலை, ஐந்தாம் வகுப்பு மாணவன் சாட்டிங் செய்தல். முகநூலில் அவனுக்கு ஆயிரம் நண்பர்கள் இருக்கிறார்கள். அதிநவீன தொழிற்நுட்ப செல்போன் குழந்தைகளின் கையில்- விளையாட்டு பொருளாக. கட்டிட வேலை செய்கிற சித்தாள் முதல் கிராமத்தில் ஆடுமேய்க்கிற பையன்வரை எல்லாருடைய கையிலும் செல்ஃபோன். ஹலோ என்ற சொல்லை உச்சரிக்காத மனிதர்கள் தமிழ் நாட்டில் இருப்பார்களா? ஆக தமிழ்ச்சமூகத்தின் முகமும், வாழ்வும் முற்றிலுமாக மாறியிருக்கிறது. குலைந்து போயிருக்கிறது.
ஹெட்போன், ஆங்கிலம், அமெரிக்க கனவு இல்லாத வாழ்வை இன்று நினைத்துப் பார்க்கமுடியுமா? நகரம் முதல்கிராமம்வரை – கிழவிகள் முதல் குழந்தைகள்வரை- நைட்டிதான் பொது உடை. சென்னையில் நாளுக்கு நாள் பெண்களுக்கான விடுதிகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. அடுக்குமாடி குடியிருப்புகள், மண்ணில் காலை பதிக்காத குழந்தைகள், தங்க நாற்கர சாலை, ஐந்தாம் வகுப்பு மாணவன் சாட்டிங் செய்தல். முகநூலில் அவனுக்கு ஆயிரம் நண்பர்கள் இருக்கிறார்கள். அதிநவீன தொழிற்நுட்ப செல்போன் குழந்தைகளின் கையில்- விளையாட்டு பொருளாக. கட்டிட வேலை செய்கிற சித்தாள் முதல் கிராமத்தில் ஆடுமேய்க்கிற பையன்வரை எல்லாருடைய கையிலும் செல்ஃபோன். ஹலோ என்ற சொல்லை உச்சரிக்காத மனிதர்கள் தமிழ் நாட்டில் இருப்பார்களா? ஆக தமிழ்ச்சமூகத்தின் முகமும், வாழ்வும் முற்றிலுமாக மாறியிருக்கிறது. குலைந்து போயிருக்கிறது.
குழந்தைகளுக்கு பெயர்
வைப்பதில்தான் எவ்வளவு மாற்றங்கள்? பாவம் குலதெய்வங்கள். சினிமா-நடிகர் நடிகைகளின்
பெயர்களுக்குப் பின்னால் அடிப்பட்டுப் போய்விட்டன. தெருவில் விளையாட வேண்டிய
குழந்தைகள் கம்ப்யூட்டரில் விளையாடுகின்றன. தொழிற்நுட்ப குழந்தைகள். கிரஷ்கள்
மட்டுமல்ல முதியோர் இல்லங்களும் நாளுக்கு நாள் அதிகரித்தவாறு இருக்கின்றன.
வாடகைத்தாய்- வாடகைக் கர்ப்பபைகளின்-வியாபாரம் அமோகமாக நடைபெறுகிறது. வாழ்க்கை
என்பது ஓட்டம் பரபரப்பு என்றாகிவிட்டது. பொருள்களை வாங்கி மடியில் கட்டிக்கொள்வது
எத்தனை ஆண்டுகால பழக்கம்? இன்று எல்லாரும் பிளாஸ்டிக், பாலிதீன் பைகளில்
வாங்குவதுதான் நாகரீகம். ஒரே ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கினாலும் பாலிதீன் பையில்
போட்டுத்தான் வாங்குகிறோம்.
பெண்கள்
குறித்த எல்லாவகையான கற்பிதங்களும், கற்பனைகளும், பழமொழிகளும் பொசுங்கிப்போய்விட்டன.
பெற்றோர்கள்தான் இன்று தங்கள் குழந்தைகளை பெண்கள் விடுதியில் சேர்க்கிறார்கள்.
குழந்தைகள் வெளிநாடு செல்ல வேண்டும் என்று ஏங்குகிறார்கள். வழியனுப்பி
வைக்கிறார்கள். நவீன உடைகளையும், ஆன்ட்ராய்டு போன்களையும் அவர்கள்தான்
வாங்கித்தருகிறார்கள். பஸ், ரயில், விமானம், சாலையில் என்று தனியாக பயணம்
செய்கிறார்கள். பள்ளி, கல்லூரி, எல்லா இடத்திலும் பெண்களின் ஆதிக்கம் மேலோங்கி
வருகிறது. நகரங்களில், பெரு நகரங்களில் ஐந்து வயது குழந்தைகள்கூட தனியாக வீட்டில்
கதவைப் பூட்டிக்கொண்டு கார்ட்டூன் பார்த்தப்படி உட்கார்ந்திருக்கிறார்கள் அப்பா
அம்மாவின் வருகைக்காக காத்திருந்தபடி.
தமிழர்கள்
இன்று பேசும்மொழி ஊடக- சினிமா மொழியாக இருக்கிறது. தமிழர்களின் உடை தமிழ் சினிமா
நடிகர் நடிகைகளின் உடையாக இருக்கிறது. பெரும் கலாச்சார விழாவாக நாம் கொண்டாடும்
பொங்கல்-தீபாவளிகூட இன்று தொலைக்காட்சியைப் பார்த்தபடிதான் கொண்டாடுகிறோம். பிறந்த
நாள், கல்யாண நாள் கொண்டாடாதவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம். பிறந்த நாளுக்கு,
கல்யான நாளுக்கு வெளியில் அழைத்து செல்லாததால், புதுத்துணி எடுத்துத்தராததால்
தற்கொலை செய்துகொள்ளும் தமிழ்ப்பெண்களின் எண்ணிக்கை பெருகியபடி இருக்கிறது.
இருபத்தி நான்கு
மணிநேர செய்தி சேனல்கள் வந்துவிட்டன. நகைச்சுவை சேனல்களுக்கும் பஞ்சமில்லை. ரியல்
எஸ்டேட் தொழில் இன்று அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. ஆயிரக்கணக்கான ஏரி,
குளங்கள் குப்பைகளாக மண்ணில் புதையுண்டுபோயிருக்கின்றன. இன்று ஒரு லிட்டர் தண்ணீர்
பதினைந்து ரூபாய். கல்விக்கூடங்கள் தொழிற்சாலைகளாக மாறிவிட்டன. கருங்கல், செங்கல்,
மணல்மாதிரி, எல்.கே.ஜி. ஒருலோடு, பிரி.கே.ஜி. ஒரு லோடு என்ற கணக்கில் கொண்டுவந்து
குழந்தைகளை கொட்டுகிறார்கள். ஜனநாயக விரோத செயலை, அடக்குமுறையை பள்ளியின்
பெருமையாகப் பேசும் பெற்றோர்கள். கல்விக்கூடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கோவில்களின்
எண்ணிக்கை எப்படி அதிகரிக்க முடியும்? கல்வி வள்ளல்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி
இருக்கின்றன. மருத்துவம் தனியாரிடம் போய்விட்டது. இன்று தமிழகத்தில் இருக்கிற ஐ.டி
கம்பெனிகளின் முதலாளிகள் யார், எந்த நாட்டைச் சார்ந்தவர்- என்று அந்த கம்பனியில்
வேலைப் பார்க்கும் தொழிலாளிக்குத் தெரியுமா? சந்தேகம்தான். 1970-80 காலம் வரைகூட
முதலாளி என்பவர் தொழிலாளியின் வீட்டு வைபவங்களில் பங்கேற்கக்கூடிய நபராக
இருந்திருக்கிறார்.
தமிழச்சமூகம்
பெற்றிருக்கும் வளர்ச்சி நல்லதா-கெட்டதா? நவீன தொழிற்நுட்பத்தால் ஏற்பட்டுள்ள
முன்னேற்ம் நல்லதா கெட்டதா? தனிமனித வாழ்வில், குடும்ப வாழ்வில்- சமூக வாழ்வில்-
என்பது குறித்து தமிழ்க்கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் அக்கறைப் பட்டிருக்கிறதா?
எழத்தாளர்கள் கவலைப் பட்டிருக்கிறார்களா? இதுகுறித்து வெகுசன இதழ்கள் எழதிய
அளவுக்குக் கூட இலக்கிய இதழ்கள், இலக்கிய எழுத்தாளர்கள் கவலைப் படவில்லை.
அப்படியென்றால் நம்முடைய இலக்கிய கர்த்தாக்கள் எந்த உலகில் இருந்துகொண்டு
தங்களுடைய அதி உன்னதமான இலக்கிய ஆக்கங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற
கேள்வியும், அவர்கள் எப்போது தங்களுடைய கண்களைத் திறந்து நிஜ உலகத்தைப்
பார்ப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. நிஜத்தைப் பாருங்கள், நிஜத்தை
எழுதுங்கள். சினிமா நடிகரை நேரில் பார்த்ததை வாழ்வின் பயன் என்று கூறாதீர்கள்.
மனிதனுக்காக
தொழிற்நுட்பம் என்பதற்குப் பதிலாக, தொழிற்நுட்பத்திற்காக மனிதன் என்றாகிவிட்டது.
இன்று ஒரு மனிதனால் செல்ஃபோன் இல்லாமல் ஒரு நாள் வாழமுடியுமா? கற்பனை
செய்துப்பார்க்க முடியவில்லை. தொலைக்காட்சியைப் பார்காமல் ஒரு மனிதனால் ஒரு நாள்
பொழுதை கழிக்க முடியுமா? சாத்தியமில்லை. கம்பிபூட்டர் இல்லாமல், இணையம் இல்லாமல்,
ஈமெயில், எஸ்.எம்.எஸ் அனுப்பாமல் இருக்க முடியுமா? இவையெல்லாம் எப்படி மனித உடலின்
உறுப்புகளாக மாறின என்பது குறித்து ஏன் தமிழ்க்கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள்
இதுவரை பேசவில்லை. நடைமுறை வாழ்விலிருந்து எழுத்தாளர்கள் அந்நியப்பட்டு
நிற்கிறார்களா? நிகழ்கால வாழ்வுக் குறித்து அதன் நெருக்கடிகள், வலிகள், செளகரியங்கள்
குறித்து, தனி மனித வாழ்வில், குடும்ப வாழ்வில், சமூக வாழ்வில் தொழிற்நுட்பம்
ஏற்படுத்திய விளைவுகள் குறித்து எப்போது எழுதுவார்கள்? தமிழில் ஏன் அறிவியல்
கவிதை, சிறுகதைகள், நாவல்கள் இல்லை?
2100ஆண்டுளுக்கு
மேலாகியும் சங்ககால இலக்கியங்கள் இன்னும் எப்படி உயிருடன் இருக்கின்றன? நம்முடைய
காவியங்கள் எப்படி இன்னும் உயிருடன் இருக்கின்றன? ஆனால் நவீன கால நவீன மகா
கலைஞர்கள் போன ஆண்டு எழுதிய கவிதை, சிறுகதை, நாவல் இந்த ஆண்டு அதை உருவாக்கிய மகா
கலைஞனாலேயே படிக்க முடியாமல் போனதற்கு எது காரணம்? இதை நம்முடைய மகா கலைஞர்கள்
அறியமாட்டார்களா? உயிரோட்டமான கதை இல்லை. உயிரோட்டமான வாக்கியங்கள் இல்லை, தன்
அனுபவத்தை வாசக அனுபவமாக மாற்றத் தெரியவில்லை. வாழ்விலிருந்து உருவாகாமல் வாழ்வின்
மீது ஊன்றி நிற்காத படைப்புகளின் கதி என்னாகும்? படைப்பை உருவாக்கிய படைப்பாளியாலேயே
படிக்க முடியாத படைப்பாகத்தானே இருக்கும்? கவிதைகளற்ற கவிதைகளை, கதைகளற்ற கதைகளை,
நாவல்களற்ற நாவல்களை- உருவாக்கினால் அது எப்படி சமூகத்தின் பிரதிபலிப்பாக
கலைப்படைப்பாக இருக்கும். வெறும் சொற்களை-சொற்களின் கூட்டு சேர்க்கையை அச்சடித்த
காகிதமாகத்தான் இருக்கும்.
சுநாமி வந்தது.
ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தனர். அது குறித்து தமிழ் இலக்கியத்தில் எந்தப் பதிவும்
இல்லை. அழிந்த கலைகள் எதுவும் ஆவணமாகவில்லை. எந்த வரலாறும் படைப்பாகவில்லை.
காதலியை இழப்பது, குடும்பத்தை இழப்பது மட்டும்தான் சோகமா? இலக்கியமா? எழுத்து-
இலக்கியம் எதிலிருந்து எப்படி உருவாக வேண்டும்-என்ற கேள்வி எழுகிறது.
எழுத்தாளர்களின் கண்ணில் எது படுகிறது என்ற கேள்வியும் வருகிறது.
கோயில்
கும்பாபிஷேகம் மாதிரி திருமணங்கள் எப்படி மாறின. திருமண நிகழ்வுகளை தீர்மானிக்கும்
அதிகாரத்தை வீடியோக்காரனிடமும், போட்டோக்காரனிடமும் ஒப்படைத்தது யார்?
அப்பாவுடைய பெயருக்குப்பதிலாக சினிமா
நடிகரின் பெயரைப் போட்டுக்கொள்ளும் மனோபாவம் இளைஞர்களிடம் தொற்று வியாதியாக எப்படி
பரவியது? தமிழ்ச்சமூகம் எப்போது, எப்படி, ஏன் சினிமா சமூகமாக மாறியது? மழை வேண்டி,
நோய் நீங்க வேண்டி, கொள்ளை நோய் பரவுவதை தடுக்க வேண்டி, பஞ்சம் நீங்க வேண்டி,
வழிபாடு நடத்திய தமிழர்கள்- இன்று சினிமா நடிகர் உடல் நலம்பெற வேண்டி ஒரே நேரத்தில்
நூறுபேர் மொட்டைப் போட்டுக்கொண்டு பிரார்த்தனை செய்யும் மனிதர்களாக மாற்றியது எது?
இதுபோன்ற- இன்ன பிற கேள்விகளை உள்ளடக்கியதாக தமிழ்க் கவிதைகள், சிறுகதைகள்,
நாவல்கள் எப்போது உருவாகும்?
கிராமம்
புனிதமானது. கிராமத்து மனிதர்கள் புனிதமானவர்கள். கிராமத்தில் மட்டுமே மனித
உறவுகள் பேணப்படுகின்றன. கிராமத்துப் பெண்களே கண்ணியமானவர்கள் என்பது மிகை கற்பனை.
அந்த மிக் கற்பனையை கவிதை, சிறுகதை, நாவலாக, புனைவாக மாற்றினாலும் - அதற்கான மொழி
நகரத்து மொழியாகவும் இல்லாமல் கிராமத்து மொழியாகவும் இல்லாமல் செயற்கையாக
உருவாக்கப்பட்ட ‘தக்கை‘ மொழியாக இருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள் கிராமத்தைவிட்டு
வந்து முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு
முன் வாழ்ந்த வாழ்க்கையைதான் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும்,
அப்போது பேசிய மொழியைத்தான் இப்போதும் பேசுகிறார்கள் என்று எண்ணிகொண்டு எழுதுவது
நம்முடைய எழுத்தாளர்களின் போலித் தன்மைக்கு ஒரு சான்று. எதார்த்தமும் இல்லை.
முற்றிலும் கற்பனையும் இல்லை. அறிவுத்தனமும் இல்லை. இந்த மூன்றும் இல்லாமல் தமிழ்
சினிமாவைப்போல்வே கவிதை, சிறுகதை, நாவல் எழுதுகிறார்கள். தமிழ்ச்சினிமாக்காரர்கள்
வியாபாரிகள். கலை ரசனை இல்லாதவர்கள். ஆனால் நம்முடைய எழுத்தாளர்கள் தூய இலக்கிற
வாதிகள். நம் காலத்தின் மகா கலைஞர்கள், கலாச்சாரக் காவலர்கள்.
பிறருடைய படைப்புகளை
படிக்காதவர்களாக, முந்தைய காலத்து இலக்கிய ஆக்கங்களை அறியாதவர்களாக
இருக்கிறார்கள். அதனால் நவீன கவிதைகள், நவீன கவிஞர்களுக்கே புரிய மாட்டேன் என்கிறது. கவிதை
நூல்கள் அதிகம் விற்பதில்லை என்று புலம்புகிற கவிஞர்களுக்கு தங்களுடைய கவிதைத்
தொகுப்பு சிறப்பாக இல்லை என்பது மட்டும் தெரியவில்லை. அதே மாதிரி முக நூலிலும்,
பிளாக்கிலும் அக்கப்போர் எழுதுவதில்தான் முழுமூச்சாக இருக்கிறார்கள் என்பதும்
மறந்துபோய் விடுகிறது. இணையத்தில் இளைஞர்கள் மட்டுமல்ல எழுத்தாளர்களும் தொலைந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.
புதிய தொழிற்நுட்பம்
புதியபுதிய சொற்களையும் உருவாக்குகிறது. குறிப்பாக- இணையம், முகநூல்,
குறுஞ்செய்தி, கைபேசி இப்படி பல. இது நகரத்திற்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்பது
நம்முடைய தமிழ் எழுத்தாளர்கள் இன்று வரை உணரவில்லை. அவர்களுடைய கற்பனையில் தமிழக
கிராமங்கள் இன்னும் 17வது நூற்றாண்டிலேயே இருப்பதாக
நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். டிஜிட்டல் பேனர் தொழிற்நுட்பம் நகரங்களைவிட
கிராமங்களில்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அந்த தொழிற்நுட்பத்தால் லட்சக்
கணக்கான சுவரில் விளம்பரம் எழுதுகிறவர்கள் தொழிலை இழந்தார்கள். இதுபோன்ற விசயங்கள்
குறித்தும் தமிழ் இலக்கியத்தில் பதிவுகளைக்காண முடியாது. அப்படியென்றால் நம்முடைய
எழுத்தாளர்கள் எந்த வாழ்க்கைக் குறித்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்?
நகர வாழ்வின்
நெருக்கடிகளையும் எழுதுவதில்லை. கிராம வாழ்வின் அசலான முகத்தையும் பதிவு
செய்வதில்லை. அப்படியென்றால் நம்முடைய எழுத்தாளர்கள் இல்லாத ஒன்றை- கற்பனையான
ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அது காத்திரமான இலக்கியப்
படைப்பாக இருக்கிறதா என்றால் அதுவுமில்லை. அதற்கு காரணம் இலக்கிய படைப்புகள்
மனதிலிருந்து, வாழ் அனுபவத்திலிருந்து உருவாகாமல்- தட்டையான ஒரு கற்பனைபிலிருந்து
உருவாகிறது- உருவாக்கப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் படைப்புகள் எப்படி இலக்கியப்
படைப்புகைளாக இருக்க முடியும்? இவ்வளவு காட்சி ஊடகங்கள் பெருகிய பிறகும்
இலக்கியங்கள் ஏன் எழுதப்படுகின்றன, ஏன் படிக்கப்படுகின்றன? என்ற நோக்கம்
புரியாமையின் வெளிப்பாடு இது?
கம்யூனிஸ்ட் எழுத்தாளர்களையும் குற்றம்
சொல்லமுடியாது. பாவம் அவர்கள், இன்னும் பண்ணையார்கள், வர்க்கம், விடியல், உதயம்,
என்ற குளத்தில் மூழ்கிக்கிடக்கிறார்கள். அந்தக் குளத்திலிருந்து மீண்டுவர
அவர்களுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டாகும. அவர்களால் ஒரு போதும் நிஜ வாழ்க்கைக்கு
வரமுடியாது. தூய எழுத்தாளர்கள், மகா கலைஞர்கள்- தங்களுடைய இளமைக்கால வாழ்க்கைக்குறித்தே
‘அந்த பொன்னுலகம்‘ குறித்தே இருபது முப்பதாண்டுகள் கழிந்த பின்னும்
எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமே வாழ்க்கை இல்லை. அது மட்டுமே இலக்கியமில்லை.
தமிழக கலாச்சாரத்தின் உன்னதம் என்று எதை உங்கள் கவிதைகளில், கதைகளில், நாவல்களில் எழுதுகிறீர்களோ.
அதை நீங்களே கேலி செய்கிறீர்கள் என்பதை மறந்து விட்டீர்கள். நீங்கள் மறக்க நினைக்கும்
பாழும் பழைய நினைவுகள்தான் உங்களுடைய கவிதையாக, சிறுகதையாக, நாவலாக இருக்கிறது
என்பதாவது தெரியுமா? இன்றைய தமிழ் இலக்கியப் படைப்புகள் என்பது பழைய ஞாபகங்கள்.
நினைவுகள் மட்டுமே.
தமிழ் எழுத்தாளர்களே! மூடுண்டிருக்கும்
உங்களுடைய கண்களைத் திறவுங்கள். நிகழ்காலத்தைப் பாருங்கள்.
தமிழ்ச்சமூக வாழ்க்கை மின்னலைவிட வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.
காற்றைவிட வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கருத்துகள்