ஆஸ்லோவில் பொங்கல் விழா

பங்கேற்ற பொங்கல் விழாக்களில் இப்போதும் நினைவில் இருக்கும் இன்னொரு பொங்கல் விழா நார்வே நாட்டுத் தலைநகர் ஆஸ்லோவில் கொண்டாடப்படும்  தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள். தங்கள் அடையாளமாக இருக்கும் மொழியின் வழியாக மட்டும் அல்லாமல் அதன் மையமான கொண்ட்டாட்டத்தின் வழியாகவும் தமிழ் அடையாளத்தைத் தக்க வைக்க வேண்டும் என நினைக்கும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள், தாங்கள் வாழும் நாடுகள் ஒவ்வொன்றிலும் பொங்கல் விழாவினைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடுகின்றனர். ஆஸ்லோவில் நடந்த இந்த விழாவில் (2013, ஜனவரி, 19) கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

2000 வரை   கலந்து கொண் 5 மணி நேர நிகழ்வை ஆடல், பாடல், பொங்கல் இடுதல், பொழிவு, வாழ்த்து, நாடகம், கூத்து என எல்லாவகையான உடல்மொழியையும், குரல்மொழியையும் பயன்பாட்டில் கொண்டு வந்தனர். தமிழராய்த் தொடர்ந்து புவியெங்கும் வாழ்வோம் என்பதைச் சொல்லவே கணியன் பூங்குன்றன் நமக்கொரு வரியை- யாதும் ஊரே; யாவரும் கேளிர்- என்ற வரியைச் சொல்லிச் சென்றுள்ளான் எனக்கூறி அன்றைய வாழ்த்துரையில் வாழ்த்தினேன். ந்த வாய்ப்புக்காக அங்கிருக்கும் பலருக்கும் நன்றி சொல்ல வேண்டும். குறிப்பாக லண்டனில் இருக்கும் நண்பர் பால. சுகுமாருக்கும் நிகழ்வுப் பொறுப்பாளராக இருந்த சனாகாந்துக்கும்.  

பால.சுகுமார் அந்த விழாவிற்காக தான் மட்டக்களப்பில் பணியாற்றியபோது வடிவமைத்த இன்னிய வடிவத்தை ஆஸ்லோ பிள்ளைகளை வைத்துச் செய்திருந்தார். இன்னியம் என்பது பேராசிரியர் மௌனகுருவும் சுகுமாரும் உருவாக்கிய தமிழ் மரபு ஆடல் வடிவம். பரதநாட்டியத்தைச் சின்னஞ்சிறு வடிவத்தில் அரங்கேற்றுவதுபோலத் தமிழ்க் கூத்துவடிவத்தைச் சின்னச்சின்ன வடிவமாக்கி மேடையேற்றலாம் என்ற கருத்தியல் மூலம் உருவாக்கப்பட்டது இன்னியம். கூத்தின் பின்னணியில் இருக்கும் அனைத்து இசைக்கருவிகளின் இசைக்கோர்வையோடு மனித உடல் தனித்தும் சேர்ந்தும் அசையும் நடன அசைவைத் திரளான பெண்களைக் கொண்டு செய்திருந்தார் சுகுமார். அதைப் பார்க்கவும் மேலும் வளப்படுத்தும் நோக்கில் விவாதிக்கவும் என்னை ஆஸ்லோவிற்கு வருமாறு அழைத்தார். அங்கு தங்கும் ஏற்பாடுகளைப் பொங்கல் விழாக் குழுமம் ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்தார். ஆஸ்லோவிற்கும் வார்சாவிற்கும் சாதாரணக் கட்டணத்தில் விமானங்கள் உண்டு என்பதால் ஏற்றுக்கொண்டேன்.

நார்வே நாட்டில் புலம்பெயர்ந்துள்ள தமிழ்க்குடும்பங்களில் இருக்கும்  வயதிலும் உடல் உயரத்திலும் வேறுபாடுகள் கொண்ட பெண்களுக்கு நடனத்திற்கான பொது வண்ணங்களாலான உடையமைப்பைத் தந்து உடலசைவுகளையும் உருவாக்கியிருந்தார். மாடுகளின் அசையும் திமில்களின் சாயல் கொண்ட அசைவுகளோடு கூடிய அந்த நடன அசைவுகளும் இசைப்பின்னணியும் ஒருங்கிணைந்து நகரும் அந்தக் காட்சிகள், தமிழ்த் திரள் மனதின் அசைவாக வடிவம் கொண்டிருந்தன.

இந்நிகழ்வுக்காக நான் மூன்று நாள் பயணமாக நார்வே சென்று திரும்பிய பயணமே சுவாரசியமானது. ஆஸ்லோ நோக்கிய பயணத்திற்காகக் காலை 8 மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பினேன். டிராம் நிறுத்தத்திற்குப் பக்கத்தில் வழுக்கி உட்கார்ந்து விட்டேன். முதுகிலும் குதப்பகுதியிலும் கொஞ்சம் வலி இருந்தது. தலையில் வலி இருந்திருந்தால் பயணம் தடை பட்டிருக்கக்கூடும். கிளம்பிய பயணத்தைத் தொடர்ந்தேன். ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நடத்தப்படும் சாதாரணக் கட்டண விமானங்களில் பயணம் செய்வோர் மூன்று மணி நேரம் முன்னதாகப் போக வேண்டியதில்லை. ஒருமணி நேரம் முன்னதாகப் போனால் போதுமாம். அது தெரியாமல் போய்க்காத்திருந்தேன். 11.10 –க்குக் கிளம்ப வேண்டிய விமானம் 11.40 -க்குக் கிளம்பி 01-20 –க்கு ஸ்ட்ரான்போர்டு டர்ப் என்ற விமான நிலையத்தில் இறக்கி விட்டது. ஆஸ்லோவின் முதன்மை விமான நிலையம் அல்ல அது. குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் விமானங்கள் இறங்கும் விமான நிலையம். நகரத்தை விட்டு வெகுதூரத்தில் இருக்கும். ஐரோப்பாவில் அப்படியான நிலையங்கள் பெருநகரங்கள் ஒவ்வொன்றிலும் உண்டு. அந்நியனை உள்ளே அனுமதிக்கத் தயாரில்லை என்பதுபோல வெளிநாட்டு வரித்துறைப் பெண் கேள்விகளையும் சோதனைகளையும் தொடுத்தாள். எப்படிப் போவாய்? யார் கூப்பிடுவது?, எங்கே தங்குவாய்? என்று கேட்டுத் துளைத்து எடுத்தாள். சோதனை செய்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. ஒரு நாள் தங்குவதற்கான ஆடைகளோடு ஒரேயொரு புத்தகம் மட்டும் தான் பயணப்பொதியாக இருந்தது. இணையக் கடிதம் வழியாக அனுப்பப்பட்டிருந்த அழைப்பிதழைக் காட்டினேன். வார்சா பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியர் என்ற அடையாள வில்லையைக் காட்டினேன். இப்போது எல்லாம் அன்பு மயமானது.  இனிப்பான வார்த்தைகளாகப் பேசி அனுப்பிவைத்தாள்.

ஆஸ்லோ நகர் நோக்கிச் செல்லும் பேருந்தில் போகும்போது வழியெங்கும் பனிக்கட்டி. விமான நிலையத்தில் இறங்கியபோது – 46 டிகிரி. இரவில் இன்னும் குறையலாம். வெண்பனி போர்த்தப்பட்ட சாலையோரங்களையும் மரங்களையும், மலைகளையும் பார்த்தபடி ஒன்னே முக்கால் மணி நேரப் பயணம்.   ஆஸ்லோ நகர் மையத்திற்குப் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டது பேருந்து.  40 கிலோமீட்டர் தூரம் தான் என்றாலும் பனிப்பொழிவில் வேகமில்லாமல் நகர்ந்துநகர்ந்து வந்தது வாகனம். இடையில் போகும்போது சுகுமார் தொலைபேசியில் பேசினார். சனாகாந்த் என்பவர் வந்து உங்களை அழைத்து வருவார் என்று சொன்னார். இறங்கியதும் தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வைத்திருந்தேன்.

இறங்கியவுடன் அவரைத் தொடர்பு கொள்ள முயன்று முடியவில்லை. சனாகாந்த் காத்திருப்பார் என்று நினைத்தேன்.  இடைவெளிவிட்டு சுகுமாரைத் தொடர்புகொண்டபடி இருந்தபோது சனாகாந்த் அழைத்து இன்னும் 15 நிமிடத்தில் வந்துவிடுவேன் என்றார். ஏற்கெனவே அரைமணி நேரம் ஆகியிருந்தது. அவர் வந்தபோது மாலை 6 மணியாகி விட்டது.வெளியில் பனித்தூவல் தெரிந்தது.  ஒன்றரைமணிநேரம் ஒரு புதிய நாட்டில் பேச்சுத் துணைக்கு ஒருவரும் இல்லை. கையில் வாசிக்க ஒரு பத்திரிகையும் இல்லை. மக்கள் வருகிறார்கள்; போகிறார்கள். தமிழர்கள்/ இந்தியர்கள் போன்று தெரியும் முகம் நின்று பார்த்துவிட்டுப் போகிறது. ஆனால் வாய் திறப்பதில்லை. ஆஸ்லோ நகர மையப்பேருந்து நிலையத்தில் இருந்தது புதிய அனுபவம் தான். 

பரபரப்பாக வந்த சனாகாந்துடன் காரில் போய் தமிழ்க்கலைக்கூடப் பள்ளியில் சுகுமாரைச் சந்தித்தபின் தான் கொஞ்சம் நிம்மதி வந்தது. அங்கு நடந்த ஒத்திகைகளைப் பார்த்துக்கொண்டிருந்த சுகுமார் தொலைபேசியை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டிருந்தார். இருவருக்கும் விடுதி ஒன்றில் அறை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஒத்திகைகள் முடிந்தபின் அங்கு போகலாம் என்றார். ஒன்றரை மணி நேர ஒத்திகை, மேடை ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. இரவு 10 மணி வாக்கில் அங்கே போனோம். அங்கு வரவேற்பாளினியாகத் தமிழ் முகம் ஒன்று இருந்தது. தமிழ் முகத்துக்குப் பொருந்தாத  மாசுகிருதி என்ற பெயர் பொருத்தியிருந்தது. பேச்சுக் கொடுக்கவில்லை. நாங்கள் இருவரும் தமிழில் பேசிக்கொண்டபோது அவள் பேச நினைத்திருக்கலாம்.

காலையில் தங்கியிருந்த விடுதியின் உணவு. விரும்பியதை எடுத்துச் சாப்பிடும் முறைமை. இரண்டு முட்டைகளோடு பிரட், ஜாம், காய்கறி என சாப்பிட்டுவிட்டுப் படங்கள் எடுத்துக் கொண்டு காத்திருந்தோம். இப்போதும் அதே பெண் தான் வரவேற்பாளினி.  தமிழ் முகத்துக்குப் பொருந்தாத  மாசுகிருதி என்ற பெயர் பற்றித் தொடங்கி அவளோடு தமிழில் பேச ஆரம்பித்தோம். அவள் மலேசியாக்காரி எனச் சொன்னபோது கொஞ்சம் திகைப்புதான். இலங்கை அல்லது இந்தியத் தமிழர்களை மட்டுமே ஐரோப்பிய வெளியில் சந்தித்துக் கொண்டிருக்கும்போது மூன்றாவதாக மலேசியாவிலிருந்து ஒரு தமிழ்ப் பெண். அவள் நார்வேக்காரரைத் திருமணம் செய்துகொண்டு இங்கே வந்து மூன்றாண்டுகளாக இருக்கிறாள். அவளது பெயர் மலேசிய இளவரசி ஒருத்தியின் பெயராம். கருமையின் அழகு பூரணமாக இருந்தது. வழியும் கூந்தலும் மென்மையின் சாயலும்.

முற்பகல் 11.30 –க்குக் கிளம்பி விழா அரங்கிற்குச் சென்றோம். வால்ஹால் அரினா என்ற அந்த வளாகம் முழுமையும் மூடப்பட்ட கால்பந்தாட்ட உள் அரங்கம். காற்றுப் புகாத வண்ணம் மூடப்பட்டிருந்ததால் குளிரின் வாதை அங்கு இல்லை. அரங்கின் பாதியை வாடகைக்கு அமர்த்தி விழாவை நடத்தினர். நல்ல கூட்டம் இரண்டாயிரம் பேர் வரை வந்தார்கள். வருவதும் போவதுமாக இருந்த தால் இரண்டாயிரம் பேர்களையும் ஒரே நேரத்தில் பார்க்கமுடியாது. நார்வேயில் 17000 தமிழர்கள் இருப்பதாகச் சொன்னார்கள். ஐந்து மணி நேர நிகழ்வு. ஈடுபாட்டோடு வேலை செய்கிறார்கள். பொங்கல் வைக்கும் நிகழ்வோடு தொடங்கி மேடையில்ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். சுகுமாரின் வடிவமைப்பில் இன்னியம் தரையில் தொடங்கி மேடை, இடது வலது எனக் களமெங்கும் நிரம்பியது அசைவுகளும் வண்ணங்களும். 

நிகழ்வு முடிந்த அன்று இரவே சுகுமார் லண்டன் போவதால் என்னை  ராதாகிருஷ்ணன்- அருள்நிதி தம்பியரின் பொறுப்பில் ஒப்படைத்தார். நிகழ்வுக்குப் பின் அவர்களது காரில் அவர்களின் வீட்டிற்குப் பயணம். அவர்களின் வீடு ஆஸ்லோவின் மையத்தைவிட்டுத் தூரமாகவே இருந்தது. புலம்பெயர்ந்த தமிழர்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே அதிகமோ என்று தோன்றும். புலிகளின் ஆதரவாளரான ராதாகிருஷ்ணன்- அருள்நிதி தம்பதியரோடு தமிழ்நாட்டின் ஈழ ஆதரவுக்குரல்கள் பற்றிப் பேசிக் கொண்டிருக்க ஆசை என்றாலும் காலையில் 04.00 மணிக்குக் கிளம்பினால் தான் 5 மணிக்கு விமான நிலையம் நோக்கிச் செல்லும் பேருந்தைப் பிடிக்க முடியும்; அதைப் பிடித்தால் 08.50க்கு ஸ்டர்ன்போர்ட்ரோப்பிலிருந்து கிளம்பி விஸ் ஏர் விமானத்தைப் பிடிக்க முடியும் என்பதால் 10 மணிக்கெல்லாம் படுக்கப் போய்விட்டேன்

அதிகாலை 03.30 க்கு எழுந்தால் போதும் என நினைத்து, அலைபேசியின் எழுப்பு மணியோசையை உருவாக்கிப் படுத்தேன். ஆனால் 02.20 –க்கு விழிப்பு வந்து விட்டது. எனக்கு முன்பே எழுந்துவிட்ட ராதாகிருஷ்ணன், அறையில் விளக்கு எரிவதைப் பார்த்துவிட்டு   காபி குடிக்க அழைத்துப் போனார். விசாலாமான அந்த வீட்டின் ஹாலில் காத்திருந்த வேளையில் அவரது மனைவியும் எழுந்து அங்குமிங்கும் நடந்தபடியே கடந்து போய்க் கொண்டிருந்தார். மூவருமாக அமர்ந்து குடிக்க ஏதுவாக காபியோடு வந்து அமர்ந்தார். அவரவர்க்கேற்ற அளவு ஊற்றிக் குடித்துக் கொண்டே பேச்சு திரும்பவும் வைகோ, புலி ஆதரவுத்தமிழகத்தின் உண்மை நிலவரம் என்று தொடர்ந்தது.    04.00 மணிக்குக் கிளம்பினோம். சனாகாந்த் எனக்கு  1000 க்ரோன் -நார்வே நாட்டுப் பணம் தரச்சொல்லியிருப்பதாகச் சொல்லி, நகர் மையத்தில் இருக்கும் இயந்திரத்தில் எடுத்துத் தருவதாகச் சொன்னார்.  எந்த நேரமும் பணம் எடுக்க வங்கிகள் பொறிகளை அமைத்து விட்டதின் நல்விளைவாக யாரும் அளவுக்கதிகமாக கையிலோ வீட்டிலோ வைத்துக்கொள்வதில்லை. அங்காடிகளில் கையிலிருக்கும் பணப்பரிமாற்ற அட்டைகளைத் தேய்த்தால் போதும். திரு ராதாகிருஷ்ணன் பணம் எடுத்து வந்து தந்தபின் திருமதி. அருள்நிதி தன் கைப்பையிலிருந்து மேலும் 200 க்ரோன் தந்து பேருந்துக் கட்டணத்திற்கு வைத்துக் கொள்ளுங்கள் என்றார். அந்த நட்பு இப்போது வரை முகநூலில் இருக்கிறது. 05.00 மணி பேருந்தைப் பிடித்து. 7 மணிக்கு விமான நிலையம் வந்து சேர்ந்தேன். சரியாக 8.50 விமானம் கிம்பி வார்சாவுக்கு வந்து இறங்கும்போது 10.30. பிற்பகல் முழுவதும் ஓய்வு.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்