பொங்கலோ பொங்கல் :குமரி முதல் வார்சா வரை

மதுரை மாவட்டக்கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன் நான். சல்லிக்கட்டு தனியான விளையாட்டு அல்ல. போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் என 3 நாட்கள் கொண்டாடப்படும் விழாவொன்றின் பகுதி அது.

மாடுகளும் ஆடுகளும் கோழிகளும் வளர்க்கப்பட்ட வீடுகளில் - கிராமங்களில் சாதிகள் வேறுபாடுகளை நினைக்காமல் கொண்டாடிய விழா பொங்கல் திருவிழா. வெள்ளையடித்தல், வீடு மெழுகுதல், புது அடுப்புப்போடுதல் தொடங்கி ஆடுமாடுகளும் கன்று காலிகளும் உழவுகருவிகளும் வண்டிகளும் கழுவிச் சுத்தமாக்கப்படும்போது பழையன கழிக்கப்படும். அந்தநாள் போகி.
போகியன்று மாலை கண்ணுப்பிளைச்செடி, மாவிலை, ஆவரம்பூ, வேம்பு சேகரித்து வைத்துத் தை முதல்நால் ஒவ்வொரு பொருளிலும் கட்டித்தொங்கவிடப்படும். வீடுகளின் நிலைப்படிதொடங்கி வண்டியின் ஆரக்கால், ஏரின் மேழி, கிணற்றின் படி, கமலையின் குறுக்குவட்டம் என ஒவ்வொன்றிலும் கட்டிமுடித்து வரும்போது வீட்டில் பொங்கல் வைக்கத் தொடங்கிவிடுவார்கள். அன்று மாலை கபடி போன்ற விளையாட்டுப்போட்டிகள் நடக்கும்.

அடுத்த நாள் மாட்டுப்பொங்கலன்றுதான் - எங்கள் கிராமத்தில் பொங்கல் கலைகட்டும். ஆடு மாடுகளுக்கு கொம்பில் வண்ணம் தீட்டுதல், மேனியெங்கும் புள்ளிக்கோலம் வைத்தல், வண்டிக்கு வர்ணமடித்தல் நடக்கும். பிற்பகலில் கொட்டத்தில் பொங்கல் வைக்கப்படும். பொங்கலும் தேங்காய் பழமும் மாடுகளுக்கு ஊட்டப்படும்.
பொங்கலோ பொங்கல்;
பால்பானை பொங்கல்
பட்டி பலுக;
பாரதம் படிக்க
மூதேவி போக;
சீதேவி வர
என்ற வரிகள் சொல்லப்பட்டு நீர் தெளித்து கொட்டங்களைச் சுற்றிவருவோம். அதுமுடியும்போது ஒவ்வொரு வீட்டிலிருந்து ஒரு மாடென வாடிவாசலில் கூடும். சல்லிக்கட்டுக்காக வளர்க்கப்பட்ட மாடுகள் முதலில் அவிழ்த்துவிடப்படாது. உழவுமாடுகள் முதலில் வெளியேறும். அதை அடக்கும் முனைப்பில் யாரும் வீழ்த்தமாட்டார்கள். தொட்டு ஒரு தட்டுத்தட்டி அனுப்பிவிடுவார்கள். அடுத்துவருவன சல்லிக்கட்டுக்காளைகள். அப்போது சிறுவர்களும் பெண்களும் வீட்டுமெத்துகளில் ஏறிக்கொள்ள இளைஞர்கள் அவற்றை அடக்குவார்கள். கொம்பில் கட்டப்பட்ட பரிசுப்பொருட்களை எடுத்துத் தனது காதலிகளையும் மனைவிகளையும் பார்க்கும் ஆண்களின் வீரம் அங்கே விளையும். பொங்கல் விழாவின் பகுதியான சல்லிக்கட்டு எல்லா ஊர்களிலும் இப்படி தையின் இரண்டாம் நாள் தான் நடக்கும். திரும்பவும் முன்னிரவில் ஊரில் இருக்கும் அனைத்து விலங்குகளும் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டு முன்னர் சொல்லப்பட்ட வரிகளைச் சொல்ல ஒவ்வொருவரும் சொல்லும் அந்தக்குரல் ஒரு பாடலாக மாறி ஒலிக்கும் முடியும்போது எழும் கரவொலியும் குழவையொலியும் இப்போதும் காதுகளில் ரீங்காரமிடுகின்றன

 எங்கள் கிராமத்திற்குப் பக்கத்திலிருக்கும் எழுமலையில், கிருஷ்ணாபுரத்தில் நடந்த சல்லிக்கட்டுகளுக்காக எங்கள் ஊரின் மாடுகளோடு எனது பள்ளிப்பருவக் காலத்தில் அண்ணனோடு சேர்ந்து போயிருக்கிறேன். அலங்காநல்லூரிலும் அவனியாபுரத்திலும் பாலமேட்டிலும் நடந்த சல்லிக்கட்டுகளை எனது கல்லூரிக்காலத்தில் சென்று பார்த்திருக்கிறேன். சிங்கம்புணரிக்கருகே நடக்கும் மஞ்சுவிரட்டுக்கு எனது வகுப்பு மாணவர்கள் அனைவரும் சேர்ந்து போயிருக்கிறேன். சின்னச்சின்னக் குன்றுகளுக்கிடையில் நடக்கும் மஞ்சிவிரட்டில் நூற்றுக்கணக்கான மாடுகள் ஒரே நேரத்தில் அவிழ்த்துவிடப்படும். அங்கு வாடிவாசல் எதுவும் கிடையாது.

அந்தக் கிராமத்திலிருந்து நான் வெளியேறிப்பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் வெளியேறும்போதே ஆடுகளும் மாடுகளும் குறைந்துவிட்டன. சேவல் கூவும் அதிகாலைகள்கூட இல்லாமல் போய்விட்டன. ஆனால் பொங்கல் கொண்டாடப்படுகிறது. 3 நாட்கள் விழா இன்னும் இருக்கிறது. சல்லிக்கட்டு இல்லை. அடையாளமாக ஒன்றிரண்டு மாடுகள் ஓடுகின்றன.
மனிதர்கள் இருக்கும் வரை விழாக்களும் அவற்றின் அடையாளங்களும் இருக்கும். தேவையற்றவை எனக் கருதப்படுபவை கைவிடப்படும். அதைச் செய்யவேண்டியவர்கள் அவர்கள்தான். இன்னொரு பண்பாட்டைச் சேர்ந்தவர்களோ, அல்லது இன்னொரு பண்பாட்டுக்குள் இருப்பவர்களோ, மற்றமைக்குள் நுழைந்துவிட்ட நானோகூட அதைத் தடைசெய்ய அனுமதிக்க மாட்டார்கள். அப்படி நினைத்தால் நானும் வேற்று ஆளாகத்தான் நினைக்கப்படுவேன். இது நபர்களுக்கு மட்டும் பொருந்துவதல்ல; அமைப்புகளுக்கும் அரசுக்கும்கூடப் பொருந்தும். கிராமம் அவர்களுடைய வெளி; அது வெறும் மண்ணாலான வெளியல்ல; பண்பாட்டு நடவடிக்கைகளால் ஆனவெளி. அதைப் புரியாதபோது ஏற்படும் கலவரங்களுக்குக் காரணம் இன்னதென்று விளக்கமுடியாதனவாக இருக்கும்.

பொங்கல் கொண்டாட்டம் எப்போதும் விரும்பப்படும் ஒன்று. மதுரையை விட்டு பாண்டிச்சேரிக்கு வந்த பிறகுதான் பொங்கல் கொண் டாட்டம் வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டாடப்படும் பண்டிகையாக மாறியது. அதற்கு முன்பு மூன்று நாள் கொண்டாட்டத்தில் ஒருநாளா வது பக்கத்து ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளுக்குப் போய் வருவேன். அமெரிக்கன் கல்லூரியில் படித்த காலத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும் சிங்கம் புணரிக்குப் பக்கத்தில் நடக்கும் மஞ்சு விரட்டிலும் கலந்துகொண்டிருக்கிறேன். இரண்டுக்கும் அழைத்துப்போனவர்கள் வகுப்புத்தோழர்களே..
அலங்காநல்லூருக்கு அழைத்துப் போனவர் குலமங்கலம் பண்ணையார் மகன் கணேசன். எங்கள் வகுப்பில் இருந்த பெரும் நிலக்கிழாரின் மகன் அவர். குலமங்கலம் அம்பலகாரக் குடும்பத்தைச் சேர்ந்த கணேசன் கல்லூரியின் தலைவர் தேர்தலில் நின்று கணிசமான ஓட்டுகள் வாங்கியவர். இப்போது வழக்குரைஞராக இருக்கிறார். சிங்கம்புணரிக்குக் கூட்டிப்போனவர் இமயவரம்பன். இரண்டிலுமே மாடணைதல் உண்டு என்றாலும் இரண்டுமே வெவ்வேறானவை. அலங்காரநல்லூரில் நடப்பது ஜல்லிக்கட்டு. வாடிவாசலுக்குள்ளிருந்து ஒவ்வொரு மாடாக வெளியேறும்போது வாடிவாசலுக்கு வெளியே நிற்கும் காளையர்கள் தாவிப்பாய்ந்து திமிலில் தொங்கிக்கொண்டே போய் அதன் ஓட்டத்தை நிறுத்துவார்கள். சில மாடுகள் வாடிவாசலிலிருந்து வெளியேறி நின்று ‘ யார் வருகிறார்கள்; வாங்க பார்க்கலாம்’ எனத் திரும்பி நின்று காலை வாரி கொம்புகளை ஆட்டி நிற்கும்.
ஆனால் சிங்கம்புணரி மஞ்சிவிரட்டு அப்படியல்ல. பெரும்பாறைகளுக்கு நடுவில் இருக்கும் மைதானத்தில் எல்லா மாடுகளும் அவிழ்த்துவிடப்படும். ஒவ்வொரு மாட்டைச் சுற்றியும் கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் நின்று அணைத்து, விரட்டிக் கொண்டாடுவார்கள்.

கணேசனின் அழைப்பின் பேரில் அலங்காநல்லூருக்குக் கிளம்பிய அதே உற்சாகம் வார்சாவிற்கு வந்தபின் கொண்டாடிய பொங்கலிலும் இருந்தது. வார்சாவுக்கு வந்த ஒருமாதத்திற்குள் வந்து போன தீபாவளியைக் காட்டிலும் மூன்று மாதங்கள் கழித்து வந்த பொங்கல் மீது ஏற்பட்ட ஈடுபாட்டிற்குக் காரணம் தமிழ்நாட்டைப் பிரிந்த காலநீட்சியாக இருக்கலாம். அல்லது எப்போதும் மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் பொங்கல் தான் தமிழர்கள் கொண்டாட வேண்டிய நாள் என்ற சிந்தனையோட்டமுமாகவும் இருக்கலாம். தீபாவளிக் கொண்டாட்டத்தை விடவும் பொங்கல் கொண்டாடும் காலம் கிராமத்துப் பொருளாதாரத்தில் மகிழ்ச்சியான காலம். அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெல்மணிகளுக்குத் தோட்டத்தில் பொங்கல் வைத்து விட்டு, அடுத்த நாள் வீட்டில் பொங்கல் வைப்போம். இது மாட்டுப் பொங்கல். அறுவடைக்கு நாள் குறித்துப் பொங்கல் வைப்பதற்கும் தை முதல் தேதிக்குப் பொங்கல் வைப்பதற்கும் பெரிய வேறுபாடுகள் இருந்ததில்லை. மஞ்சள் சேலையை மடித்து மடித்து அடுக்கிய நெல் மணிகள் பரப்பிய தோட்டக்காடு போல வெண்பனி பூசிய வார்சா தெருக்கள் கண் முன் விரிகின்றன. இரண்டு நாட்களாகப் பனிபொழிவு தொடர்ச்சியாக இருக்கிறது.

எங்கள் கிராமத்தில் பொங்கலுக்கான வேலைகள் ஒருவாரத்திற்கு முன்பே தொடங்கி விடும். காரை வீட்டை வெள்ளையடிப்பதற்காகச் சுண்ணாம்புக்கல் வாங்கிப் பானையில் வேக வைப்பதில் தொடங்கும் ஆர்வம், மாடுகளின் கொம்புகளில் வண்ணம் தீட்டுவதிலும் நீண்டு வாளில் புள்ளி வைப்பது வரை தொடரும். வண்டியையும் மாடுகளையும் தாழங்குளத்தில் இறக்கிக் கழுவிக் கொண்டு வந்து வண்ணம் தீட்டுவோம். மாட்டுக் கொம்புகள் கூர்மைப்படுத்தப்பட்டு எண்ணெய் தடவிப் பிறகு வண்ணம் தீட்டப்படும்.

மாமா காங்கிரஸ்காரராக இருந்த காலத்தில் மூவர்ணம் தீட்டிக் கொண்ட மாட்டின் கொம்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கறுப்பு சிவப்புக்கு மாறியதை மாமா மௌனமாக ஏற்றுக் கொண்டதை நினைத்தால் இப்போது ஆச்சரியமாக இருக்கிறது. சுதந்திரப் போராட்ட அனுபவம் கொண்ட மாமா எம்ஜியார் ரசிகராக இருந்து அ இ அதிமுகவின் ஒரு பிரிவுக்கு ஒன்றியத் தலைவராக உயர்ந்த நடு அண்ணனைக் கோபமாகத் திட்டினாலும் கொம்புகளில் தீட்டிய வண்ணங்களைக் களையச்சொல்லவில்லை. மாற்றி மூவர்ணங்களைப் பூசச் சொல்லவில்லை வீட்டில் நடக்கும் மாற்றம் நாட்டில் நடக்கப்போகும் மாற்றத்தின் அறிகுறி என்பதை அமைதியாக ஏற்றுக் கொண்டார். அடுத்து வந்த தேர்தலில் அவர் சார்ந்து காங்கிரஸ் தோல்வி அடைவதை வானொலிப் பெட்டியில் கேட்டுக் கொண்டிருந்ததைப் போலவே மாட்டுக் கொம்புகளில் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். மாட்டுப் பொங்கலன்று சலங்கை ஒலிக்கச் சினிமா தியேட்டரை நோக்கிக் கூட்டு வண்டிகளில் போன காலம் அது; எனக்கு நினைவாகவாவது இருக்கிறது. எனது சந்ததிக்கு அதுவும் இல்லாமல் போய்விட்டது. தமிழர்கள் எதையெதையோ தொலைக் கிறார்கள். ஆனால் ஐரோப்பியர்கள் பண்பாட்டு நகரங்கள் சிலவற்றை அப்படியே பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் நடக்கும் விழாக்களின் அடையாளத்தோடு. .

கணேசனின் அழைப்பின் பேரில் அவரது சொந்த ஊரான குலமங்கலத்தில் தங்கி விட்டு அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டுக்குப் போனது போலவே இன்னொரு முறை, இமயவரம்பனின் சொந்த ஊரான சிங்கம்புணரிக்குப் போயிருந்தோம். அங்கிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் நடந்தது ஜல்லிக்கட்டு அல்ல; மஞ்சு விரட்டு. பாறைகளுக்கு நடுவில் இருக்கும் மைதானத்தில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு எல்லாப் பக்கங்களிலும் ஓடிக் கொண்டிருக்கும். பார்வையாளர்கள் பாறைகள் மேல் இருந்து பார்த்துக் கொண்டிருக்க பங்கேற்பாளர்கள் களத்தில் இருங்கி மாடுகளை விரட்டுவார்கள். ஆனால் அலங்காநல்லூரில் ஒரு வரன்முறைப்படி ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக வெளியேறிப் போகும்போது அடக்கும் ஆசை கொண்டவர்கள் அவற்றின் மீது பாய்ந்து தழுவுவார்கள். ஏறு தழுவுதல் தமிழர்களின் அடையாளமாக இருந்தது; இருக்கிறது என்பதை மறந்து விட முடியாது. மாற்றும் முயற்சிகள் எவ்வளவு தூரம் வெற்றி பெறும் எனத்தெரியவில்லை

பள்ளி மாணவனாகவும் கல்லூரியில் படிக்கும்போதும் மதுரை மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டுகளில் பார்வையாளனாக மட்டுமே இருந்தவனல்ல. எங்கள் வீட்டில் எங்கள் அம்மாவின் சின்னம்மாக்களுக்கு மட்டுமே கட்டுப்படும் ஜல்லிக்கட்டு காளை ஒன்று இருந்தது. அவர்கள் இருவரும் இருபுறமும் நிற்க அந்தக் காளை திமில் உயர்த்தி நிற்கும் புகைப்படம் இன்னும் இருக்கிறது. நான் பிறக்காததற்கு முன்பு எடுத்த படம் அது. எனது பூர்வீகக் கிராமங்களான அதிகாரிபட்டி (தந்தையின் கிராமம்) யிலும்,தச்சபட்டி (அம்மாவின்கிராமம்) யிலும் நடக்கும் ஜல்லிக் கட்டுகளிலேயே நூறு மாடுகள் கலந்து கொண்ட காலங்கள் காணாமல் போய்விட்டன. பெரியண்ணனோடு சேர்ந்து எழுமலை, கிருஷ்ணாபுரம், வடக்குப் பட்டி, ஆத்தாங்கரைப் பட்டி, உத்தப்புரம் எனச் சுற்றுவட்டாரக் கிராமங்களில் நடக்கும் ஜல்லிக் கட்டுகளைப் போய்ப் பார்த்தும் இருக்கிறேன். சின்னக் காளைகளின் திமில்களைத் தழுவவும் செய்திருக்கிறேன்.

வார்சாவில் பொங்கல் கூடுகை

வார்சாவில் கொண்டாடப் போகும் தலைப்பொங்கலுக்கான வேலை களையும் ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கி விட்டோம். காரணம் இந்தத் தைப் பொங்கலை ஒரு கூட்டு நிகழ்வாக ஆக்கி விடுவது எனத் தீர்மானித்து வார்சாவில் இருக்கும் தமிழர்களை திரட்ட முடிவு செய்தோம். பொங்கல் தினத்தன்று விடுமுறையெல்லாம் கிடையாது என்பதால் கூட்டுப் பொங்கல் சாத்தியமா என்ற கேள்வி முதலில் எழுந்தது. ஆனால் பொங்கல் ஞாயிற்றுக் கிழமையில் வந்ததால் அந்தச் சிக்கல் எழாமலேயே போய்விட்டது. அதிகக் கூட்டத்தைக் கூட்டுவதால் ஏற்படும் சிக்கலும் ஒருபக்கம் இருந்தது. பன்னிரண்டு பேர் வரை கூடும் வாய்ப்பு ஏற்பட்டது. இருபது பேர்வரை இருக்கலாம் என நினைத்துப் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்க விரும்பும் இந்திய நண்பர்களையும் போலந்து நண்பர்களையும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தபோது நான் எனது மூன்றாமாண்டு மாணவிகள் காஸ்சாவையும் மரிஸ்யாவையும் அழைத்திருந்தேன்.

மரிஸ்யாவின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே வர இயலவில்லை. காஸ்சா வந்ததோடு சேலையெல்லாம் கட்டி அசல் தமிழ்ப் பெண்ணாகவே மாறி விட்டதில் அசல் தமிழர்கள் எல்லாம் அசந்து போனார்கள். நானும் சந்திரசேகரும் வடைச் சட்டியில் உளுந்த வடை போட்டுக் கொண்டிருந்த போது அருகில் வந்தாள். சந்திரசேகர் அவளது தமிழ் அறிவை சோதிக்க நினைத்தாரோ என்னவோ, என்னது இது என்றார். மெதுவடை என அவள் சொன்ன போது நானே அசந்து விட்டார்.. சொல்லி விட்டு வடைகளின் பெயர்களாக மசால் வடை, ஆமை வடை, தயிர்வடை, ரச வடை என அடுக்கியபோது கொஞ்சம் கலங்கித் தான் போனேன். நாமே உளுந்த வடை, பருப்பு வடை என்பதை மட்டும் தானே சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்பதே எனது கலக்கத்திற்குக் காரணம்.


சந்திரசேகர் மும்பையின் நவீன் குடும்பத்தை அழைத்தார். மற்ற வர்கள் எல்லாம் தமிழர்கள் தான். தமிழர்கள் என்பதை விடத் தமிழ்ப் பூர்வீகம் கொண்டவர்கள் என்று மட்டும் தான் சொல்ல வேண்டும். தமிழ் பேசுகிறார்கள். ஆனால் எழுதத் தெரியாது. எங்கள் மாணவிகள் பேசுவது போலக் கொஞ்சம் கொஞ்சம் எழுத்துக் கூட்டி வாசிக்கக் கூடத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். சந்திரசேகர், அப்பா ராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் வட இந்திய நகரங்களில் படித்து விட்டு வடமாநிலங்களிலும் இலங்கை, இங்கிலாந்து, போலந்து எனப் பணியாற்றிக் கொண்டிருப்பவர். சொந்த ஊர் லால்குடி. அவருடைய மனைவியும் அதே ஊர்தான்.விக்னேஷின் அப்பா தஞ்சாவூர்; அம்மா பாலக்காடு. சிட்டி வங்கியின் மென்பொருள் பொறியாளர். அர்ச்சனா இந்தியைப் பகுதி ஒன்றில் படித்த சென்னைப் பொண்ணு. ராய் சுப்பிரமணியம் போலந்திலேயே பள்ளி, கல்லூரிப் படிப்பைப் படித்தாலும் தமிழ் எழுதத் தெரிந்த கன்யாகுமரிக்காரர். என்னைப் போல இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் போன தமிழ்ப் பேராசிரியர் சுப்பிரமணியனின் மகன். ராஜகோபால் க்ராக்கோ பல்கலைக் கழகத்திற்கு வந்திருக்கும் இன்னொரு தமிழ்ப் பேராசிரியர்; டெல்லி யிலிருந்து வந்திருக்கிறார். சொந்த ஊர் திருத்தணி.

சந்திரசேகர் வீடு தான் தனி வீடு. அதனால் அங்கேயே கொண்டாட்டம். காலை முதலே ஒவ்வொருவராக வந்து சேர்ந்து கொண்டிருந்தார்கள். மதியம் ஒரு மணிக்குள் எனது மனைவி விஜயலட்சுமியும் சந்திர சேகரின் மனைவி அகிலாதேவியும் சேர்ந்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளைப் பொங்கல், பொரியல், கூட்டு, அவியல், இட்லி, வடை என வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். பொங்கலின் அடையாளங்களான கரும்பு, மஞ்சள், மாவிலை, கண்ணுப்பீழைப்பூ என எதுவும் இல்லை. மாடு குளிப்பாட்டவில்லை; காப்பு கட்டவில்லை; போங்கலோ பொங்கல் எனக் குலவையிட்டுப் பாடவில்லை என்றாலும் மனம் திருப்தியில் களித்தது.

பொங்கலைப் படைத்துச் சாப்பிட்ட போது ஒரு திருப்தி இருந்தது. அதைச் சாப்பிட்ட திருப்தி என்பதை விட சேர்ந்து கொண்டாடிய திருப்தி எனச் சொல்வதுதான் சரியாக இருக்கும். திருத்தணியைச் சேர்ந்த ராஜகோபாலும் குமரிமாவட்டத்தைச் சேர்ந்த ராயும் இருந்ததைக் கொண்டு வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்துத் தமிழர்களின் கொண்டாட்டம் என ராஜகோபால் சொன்ன போது, ”இல்லை குமரிமுதல் வார்சாவரை இருக்கும் உலக மனிதர்களின் பொங்கல் கொண்டாட்டம்” எனச் சொன்னேன். மகாராஷ்டிரத்தின் நவீன் குடும்பமும் போலந்தின் காஸ்சாவும் ஒதுங்கி நிற்காமல் கலந்து நின்ற நாள் ; திரும்பத் திரும்ப எத்தனை ஆண்டுகளுக்கு நினைவில் இருக்கப் போகும் நாளோ. இந்த நினைவை அழிக்க இன்னொரு பிடித்தமான நிகழ்வு நிகழ வேண்டும்.

சமய நம்பிக்கை சார்ந்து கொண்டாடப்படும் தீபாவளி, ஏகாதசி, சிவராத்திரி போன்ற பண்டிகைகள் எப்போதும் குடும்பப் பண்டிகைகளாக இருக்க, பொங்கல் பண்டிகையின் நிகழ்ச்சி நிரல் குடும்ப எல்லையைத் தாண்டி சமூக நிகழ்வின் குணங்களுக்குள் நகர்வதைக் காணலாம். குறிப்பான கடவுளுக்கு நன்றி சொல்வதோ, ’என்னை ஈடேற்று’ என வேண்டுவதோ பொங்கலின் போது நடப்பதில்லை. தொடர்ந்து மனிதர்கள் மாற வேண்டும்; உழைப்புசார்ந்த உயிரினங்களின் உறவும் பொருட்களின் பயன்பாடும் உணரப்பட வேண்டும் என்பதோடு, தனி மனிதர்களாக இருப்பதைக் குறைத்துச் சமூக பிணைப்புக்குள் நுழைய வேண்டும் என்ற இயங்கியல் நியதிகளைப் பொங்கலில் காண முடியும்.

போகிப் பண்டிகை பழையன கழித்துப் புதியன ஏற்றலின் நாளென்றால், விவசாய சமூகம் தனது அடிப்படைக் கருவிகளான நிலம், நீர், மாடு, வீடு, வாசல் என ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்து அதனைக் காத்துக் கொள்ளும் பொருட்டுக் காப்புக் கட்டிப் பொங்கல் வைத்துப் பூரிக்கும் நாளாக இருக்கிறது. மாட்டுப் பொங்கலோ மனிதனும் மாடும் கொள்ளும் நட்பு முரணின் அதியற்புத அடையாளம். அதிலும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் நடக்கும் கொடுக்கல்-வாங்கல் தக்க வைக்க வேண்டிய ஒரு தத்துவ இழை. அடக்க முயல்வதும், அடக்கிக் களிப்பதும் மட்டுமல்ல அதன் வினைகள். தன்னை இழப்பதும், இழப்பை ஏற்பதும் கூட அதன் வினையின் பகுதிகள். தொடர்ந்து வரும் காணும் பொங்கலன்று கடல், ஆறு, குளம் என நீரைத் தேடிக் காண்பதும், சிறுவர்கள் பெரியவர்களைக் கண்டு வணங்கி அவர்கள் தரும் சிறு பரிசைக் கொண்டு மகிழ்வதும் என அந்த நிகழ்ச்சி நிரல் வரிசைக்குள் வாழ்வின் பல அடையாளங்கள் இருக்கின்றன என்பதைக் கடந்த பத்தாண்டுகளாகத் தான் புரிந்து கொள்கிறேன் என்று சொல்லலாம்.

கூட்டாகப் பொங்கல் கொண்டாடுவதைத் தடுக்க நினைத்ததா என்று தெரியவில்லை. வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி பனி பெய்யத்தொடங்கி விட்டது. வெண்பஞ்சு மேகங்கள் தரைக்கு இறங்கி வரும் காட்சி போலக் கட்டியாக இல்லாத பனிப் பொழிவுகள் அசைந்து அசைந்து தரையிறங்கிப் படிந்தன. சனிக்கிழமைக் காலையில் தெருவெங்கும் வெண்போர்வை போர்த்தியிருந்தது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் வண்ணங்கள் காணாமல் போய்விட்டன. பனியின் பாலங்கள் படிகமாகப் பூசியிருந்தன. கிறிஸ்துமஸ் மரங்களின் உச்சியில் பனிப்பூக்கொண்டைகள் அசைந்தன. பெருஞ்சாலைகளில் உப்புக்கரைசலைக் கொண்டு பனிக்கட்டிகள் உடைக்கப்பட்டு வழி ஏற்படுத்தும் வேலைகளும் நடந்தன. வேகம் குறைத்து வாகனங்கள் நகர்ந்தன. தடிமனான காலணிகளைத் தரையில் ஊன்றி நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


வரிசையாக வைக்கப்பட்டிருந்த உணவுப் பண்டங்களின் பொருட்களின் பெயர்களைக் காஸ்சாவுக்குச் சொல்லிக் கொண்டே வந்தேன். வெள்ளைப் பொங்கல் என்று சொன்னபோது அவளுக்கு வெள்ளைக் கிறிஸ்துமஸ் நினைவுக்கு வந்து விட்டது. வார்சாவுக்கு வந்தபோது கிறிஸ்துமஸ் வெண்பனி பூசிய கிறிஸ்துமஸாக இருக்கும் எனச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு வென்பனி இறங்கவில்லை. மழையும் தூறலும் தான் கிறிஸ்துமஸின் அடையாளமாக இருந்தது. அதனை ஈடு செய்யும் விதமாகப் போலந்தில் பொங்கல் வெள்ளைப் பொங்கலாக மாறிவிட்டது எனச் சொன்னேன். வண்ணமற்ற வண்ணமான வெண்மை போர்த்திய போலந்துத் தெருக்களில் பனியின் தகடுகள் இன்னும் கூடலாம் என்றே வானிலை முன்னறிவுப்புகள் சொல்லிக் கொண்டிருந்தன.

கண்மூடித்தனமான ஈடுபாடும்சரி, முரட்டுத்தனமான வெறுப்பும்சரி ஒரு கட்டத்தில் நெகிழ்ந்து நொருங்கிச் சரிவதை நான் என்னுள் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இதை நேரடியாகச் சொல்லும் மரபுத் தொடராகப் பலரும் என்னிடம் சொன்னதைத் திரும்பவும் இப்போது நினைத்துக் கொள்கிறேன். “நாற்பது வயது வரை கம்யுனிசத்தில் ஈடுபாடு கொள்ளாமல் இருந்தால் அவனைச் சந்தேகிக்க வேண்டும்; நாற்பது வயதுக்கு மேலேயும் ஈடுபாடு காட்டினாலும் அவனைச் சந்தேகிக்க வேண்டும்” என்பதுதான். அந்த மரபுத் தொடர். இதனை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்குள் வர மனம் தயங்கினாலும், நகரும் நிலையை எனது அனுபவங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

காலம் சார்ந்த அனுபவங்கள் மட்டுமே இப்படி மாற்றுகின்றன என்பதல்ல. நம் ஊரையும் உறவினர்களையும் சொந்த அடையாளங்கள் என நினைத்த வற்றை விட்டு விலகிச் சென்று புதியபுதிய இடங்களுக்குள்ளும், புதியபுதிய மனிதகளுக்குள்ளும், புதிய பண்பாட்டுக்குள்ளும் நுழைந்து நம்மைத் தொலைத்தும் நம்மைத் தேடியும் கண்டுபிடிக்கும் போது நம் அடையாளம் என்னவாக மாறுகிறது என்ற ரசாயன மாற்றம் அனுபவிக்க வேண்டிய ஒன்று.
நான் பிறந்த தச்சபட்டி என்னும் மிகச் சிறிய கிராமத்திலிருந்து உத்தப்புரம், எழுமலை, திண்டுக்கல், மதுரை எனக் கல்விக்காக நடந்த பயணங்களும் நகர்வுகளும் கற்றுத்தந்த அனுபவங்கள் ஒருவிதம் என்றால், பணியின் பொருட்டு பாண்டிச்சேரி, திருநெல்வேலி, போலந்தின் வார்சா என வாழ நேர்ந்துள்ள வாழ்நிலை அனுபவங்களும் வேறுவிதமானவை. ஆய்வுக்காகவும் நினைப்பதைக் கட்டுரையாக எழுதும் எழுத்தாளனாகவும் ஆசிரியனாகவும் தமிழ்நாட்டுக் கிராமங்களினூடாகவும் இந்தியப் பெருநகரங்களின் வழியாகவும் செய்ய நேர்ந்த பயணங்கள் தந்த அனுபவங்கள் எழுதித் தீர்க்க வேண்டியவை.

மதுரையில் செயல்பட்ட நிஜநாடக இயக்கத்தில் ஒரு நாடகக்காரனாக தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களிலும் கிராமங்களிலும் பயணம் செய்தது போலவே பாண்டிச்சேரிக்குப் போன பின்பு பெங்களூர், மைசூர், ஐதராபாத், விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், கள்ளிக்கோட்டை, திருச்சூர், மும்பை, டெல்லி எனப் பெருநகரப் பயணங்கள் வாய்த்தன. . ஒரு பேராசிரியராக அலுவலகப் பயணங்களை ஏற்பாடு செய்து கொண்டு கேரளாவுக்குள்ளும் கர்நாடகத்திற்குள்ளும் நுழைந்து விட்டு மறதியை உறவாக்கி அதன் சிறு கிராமங்கள் சிலவற்றைப் பார்த்துத் திரும்பியிருக்கிறேன். அவசரப் பயணம் என்றாலும் அரேபியத்தலைநகர் ரியாத்துக்கும் தம்மாமுக்கும் போய் வந்த அயல்நாட்டுப் பயணங்களும் சொல்லித் தந்தவை ஏராளம். ஆம் பயணங்களும் வெளிகளும் நினைக்க நினைக்கப் பக்கத்தில் வருவதும் விலகிப் போவதுமாக விரிந்து கொண்டே இருப்பன. இன்னும் இருக்கப் போகின்றன. போலந்தில் இருக்கப் போகும் நாட்கள் பயணங்களின் படிகமாகத் தங்கப் போகின்றன.

ஆஸ்லோவில் பொங்கல் விழா

பங்கேற்ற பொங்கல் விழாக்களில் இப்போதும் நினைவில் இருக்கும் இன்னொரு பொங்கல் விழா நார்வே நாட்டுத் தலைநகர் ஆஸ்லோவில் கொண்டாடப்படும் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள். தங்கள் அடையாளமாக இருக்கும் மொழியின் வழியாக மட்டும் அல்லாமல் அதன் மையமான கொண்ட்டாட்டத்தின் வழியாகவும் தமிழ் அடையாளத்தைத் தக்க வைக்க வேண்டும் என நினைக்கும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள், தாங்கள் வாழும் நாடுகள் ஒவ்வொன்றிலும் பொங்கல் விழாவினைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடுகின்றனர். ஆஸ்லோவில் நடந்த இந்த விழாவில் (2013, ஜனவரி, 19) கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
2000 வரை கலந்து கொண்ட 5 மணி நேர நிகழ்வை ஆடல், பாடல், பொங்கல் இடுதல், பொழிவு, வாழ்த்து, நாடகம், கூத்து என எல்லாவகையான உடல் மொழியையும், குரல்மொழியையும் பயன்பாட்டில் கொண்டு வந்தனர். தமிழராய்த் தொடர்ந்து புவியெங்கும் வாழ்வோம் என்பதைச் சொல்லவே கணியன் பூங்குன்றன் நமக்கொரு வரியை- யாதும் ஊரே; யாவரும் கேளிர்- என்ற வரியைச் சொல்லிச் சென்றுள்ளான் எனக்கூறி அன்றைய வாழ்த்துரையில் வாழ்த்தினேன். அந்த வாய்ப்புக்காக அங்கிருக்கும் பலருக்கும் நன்றி சொல்ல வேண்டும். குறிப்பாக லண்டனில் இருக்கும் நண்பர் பால. சுகுமாருக்கும் நிகழ்வுப் பொறுப்பாளராக இருந்த சனாகாந்துக்கும்.

பால.சுகுமார் அந்த விழாவிற்காக தான் மட்டக்களப்பில் பணியாற்றியபோது வடிவமைத்த இன்னிய வடிவத்தை ஆஸ்லோ பிள்ளைகளை வைத்துச் செய்திருந்தார். இன்னியம் என்பது பேராசிரியர் மௌனகுருவும் சுகுமாரும் உருவாக்கிய தமிழ் மரபு ஆடல் வடிவம். பரதநாட்டியத்தைச் சின்னஞ்சிறு வடிவத்தில் அரங்கேற்றுவதுபோலத் தமிழ்க் கூத்துவடிவத்தைச் சின்னச்சின்ன வடிவமாக்கி மேடையேற்றலாம் என்ற கருத்தியல் மூலம் உருவாக்கப்பட்டது இன்னியம். கூத்தின் பின்னணியில் இருக்கும் அனைத்து இசைக்கருவிகளின் இசைக்கோர்வையோடு மனித உடல் தனித்தும் சேர்ந்தும் அசையும் நடன அசைவைத் திரளான பெண்களைக் கொண்டு செய்திருந்தார் சுகுமார். அதைப் பார்க்கவும் மேலும் வளப்படுத்தும் நோக்கில் விவாதிக்கவும் என்னை ஆஸ்லோவிற்கு வருமாறு அழைத்தார். அங்கு தங்கும் ஏற்பாடுகளைப் பொங்கல் விழாக் குழுமம் ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்தார். ஆஸ்லோவிற்கும் வார்சாவிற்கும் சாதாரணக் கட்டணத்தில் விமானங்கள் உண்டு என்பதால் ஏற்றுக்கொண்டேன்.

நார்வே நாட்டில் புலம்பெயர்ந்துள்ள தமிழ்க்குடும்பங்களில் இருக்கும் வயதிலும் உடல் உயரத்திலும் வேறுபாடுகள் கொண்ட பெண்களுக்கு நடனத்திற்கான பொது வண்ணங்களாலான உடையமைப்பைத் தந்து உடலசைவுகளையும் உருவாக்கியிருந்தார். மாடுகளின் அசையும் திமில்களின் சாயல் கொண்ட அசைவுகளோடு கூடிய அந்த நடன அசைவுகளும் இசைப்பின்னணியும் ஒருங்கிணைந்து நகரும் அந்தக் காட்சிகள், தமிழ்த் திரள் மனதின் அசைவாக வடிவம் கொண்டிருந்தன.


இந்நிகழ்வுக்காக நான் மூன்று நாள் பயணமாக நார்வே சென்று திரும்பிய பயணமே சுவாரசியமானது. ஆஸ்லோ நோக்கிய பயணத்திற்காகக் காலை 8 மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பினேன். டிராம் நிறுத்தத்திற்குப் பக்கத்தில் வழுக்கி உட்கார்ந்து விட்டேன். முதுகிலும் குதப்பகுதியிலும் கொஞ்சம் வலி இருந்தது. தலையில் வலி இருந்திருந்தால் பயணம் தடை பட்டிருக்கக்கூடும். கிளம்பிய பயணத்தைத் தொடர்ந்தேன். ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நடத்தப்படும் சாதாரணக் கட்டண விமானங்களில் பயணம் செய்வோர் மூன்று மணி நேரம் முன்னதாகப் போக வேண்டியதில்லை. ஒருமணி நேரம் முன்னதாகப் போனால் போதுமாம். அது தெரியாமல் போய்க்காத்திருந்தேன். 11.10 –க்குக் கிளம்ப வேண்டிய விமானம் 11.40 -க்குக் கிளம்பி 01-20 –க்கு ஸ்ட்ரான்போர்டு டர்ப் என்ற விமான நிலையத்தில் இறக்கி விட்டது. ஆஸ்லோவின் முதன்மை விமான நிலையம் அல்ல அது. குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் விமானங்கள் இறங்கும் விமான நிலையம். நகரத்தை விட்டு வெகுதூரத்தில் இருக்கும். ஐரோப்பாவில் அப்படியான நிலையங்கள் பெருநகரங்கள் ஒவ்வொன்றிலும் உண்டு. அந்நியனை உள்ளே அனுமதிக்கத் தயாரில்லை என்பதுபோல வெளிநாட்டு வரித்துறைப் பெண் கேள்விகளையும் சோதனைகளையும் தொடுத்தாள். எப்படிப் போவாய்? யார் கூப்பிடுவது?, எங்கே தங்குவாய்? என்று கேட்டுத் துளைத்து எடுத்தாள். சோதனை செய்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. ஒரு நாள் தங்குவதற்கான ஆடைகளோடு ஒரேயொரு புத்தகம் மட்டும் தான் பயணப்பொதியாக இருந்தது. இணையக் கடிதம் வழியாக அனுப்பப்பட்டிருந்த அழைப்பிதழைக் காட்டினேன். வார்சா பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியர் என்ற அடையாள வில்லையைக் காட்டினேன். இப்போது எல்லாம் அன்பு மயமானது. இனிப்பான வார்த்தைகளாகப் பேசி அனுப்பிவைத்தாள்.

ஆஸ்லோ நகர் நோக்கிச் செல்லும் பேருந்தில் போகும்போது வழியெங்கும் பனிக்கட்டி. விமான நிலையத்தில் இறங்கியபோது – 46 டிகிரி. இரவில் இன்னும் குறையலாம். வெண்பனி போர்த்தப்பட்ட சாலையோரங்களையும் மரங்களையும், மலைகளையும் பார்த்தபடி ஒன்னே முக்கால் மணி நேரப் பயணம். ஆஸ்லோ நகர் மையத்திற்குப் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டது பேருந்து. 40 கிலோமீட்டர் தூரம் தான் என்றாலும் பனிப்பொழிவில் வேகமில்லாமல் நகர்ந்துநகர்ந்து வந்தது வாகனம். இடையில் போகும்போது சுகுமார் தொலைபேசியில் பேசினார். சனாகாந்த் என்பவர் வந்து உங்களை அழைத்து வருவார் என்று சொன்னார். இறங்கியதும் தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வைத்திருந்தேன்.

இறங்கியவுடன் அவரைத் தொடர்பு கொள்ள முயன்று முடியவில்லை. சனாகாந்த் காத்திருப்பார் என்று நினைத்தேன். இடைவெளிவிட்டு சுகுமாரைத் தொடர்பு கொண்டபடி இருந்தபோது சனாகாந்த் அழைத்து இன்னும் 15 நிமிடத்தில் வந்துவிடுவேன் என்றார். ஏற்கெனவே அரைமணி நேரம் ஆகியிருந்தது. அவர் வந்தபோது மாலை 6 மணியாகி விட்டது.வெளியில் பனித்தூவல் தெரிந்தது. ஒன்றரைமணிநேரம் ஒரு புதிய நாட்டில் பேச்சுத் துணைக்கு ஒருவரும் இல்லை. கையில் வாசிக்க ஒரு பத்திரிகையும் இல்லை. மக்கள் வருகிறார்கள்; போகிறார்கள். தமிழர்கள்/ இந்தியர்கள் போன்று தெரியும் முகம் நின்று பார்த்துவிட்டுப் போகிறது. ஆனால் வாய் திறப்பதில்லை. ஆஸ்லோ நகர மையப்பேருந்து நிலையத்தில் இருந்தது புதிய அனுபவம் தான்.


பரபரப்பாக வந்த சனாகாந்துடன் காரில் போய் தமிழ்க்கலைக்கூடப் பள்ளியில் சுகுமாரைச் சந்தித்தபின் தான் கொஞ்சம் நிம்மதி வந்தது. அங்கு நடந்த ஒத்திகைகளைப் பார்த்துக்கொண்டிருந்த சுகுமார் தொலைபேசியை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டிருந்தார். இருவருக்கும் விடுதி ஒன்றில் அறை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஒத்திகைகள் முடிந்தபின் அங்கு போகலாம் என்றார். ஒன்றரை மணி நேர ஒத்திகை, மேடை ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. இரவு 10 மணி வாக்கில் அங்கே போனோம். அங்கு வரவேற்பாளினியாகத் தமிழ் முகம் ஒன்று இருந்தது. தமிழ் முகத்துக்குப் பொருந்தாத மாசுகிருதி என்ற பெயர் பொருத்தியிருந்தது. பேச்சுக் கொடுக்கவில்லை. நாங்கள் இருவரும் தமிழில் பேசிக்கொண்டபோது அவள் பேச நினைத்திருக்கலாம்.

காலையில் தங்கியிருந்த விடுதியின் உணவு. விரும்பியதை எடுத்துச் சாப்பிடும் முறைமை. இரண்டு முட்டைகளோடு பிரட், ஜாம், காய்கறி என சாப்பிட்டு விட்டுப் படங்கள் எடுத்துக் கொண்டு காத்திருந்தோம். இப்போதும் அதே பெண் தான் வரவேற்பாளினி. தமிழ் முகத்துக்குப் பொருந்தாத மாசுகிருதி என்ற பெயர் பற்றித் தொடங்கி அவளோடு தமிழில் பேச ஆரம்பித்தோம். அவள் மலேசியாக்காரி எனச் சொன்னபோது கொஞ்சம் திகைப்புதான். இலங்கை அல்லது இந்தியத் தமிழர்களை மட்டுமே ஐரோப்பிய வெளியில் சந்தித்துக் கொண்டிருக்கும்போது மூன்றாவதாக மலேசியாவிலிருந்து ஒரு தமிழ்ப் பெண். அவள் நார்வேக்காரரைத் திருமணம் செய்துகொண்டு இங்கே வந்து மூன்றாண்டுகளாக இருக்கிறாள். அவளது பெயர் மலேசிய இளவரசி ஒருத்தியின் பெயராம். கருமையின் அழகு பூரணமாக இருந்தது. வழியும் கூந்தலும் மென்மையின் சாயலும்.

முற்பகல் 11.30 –க்குக் கிளம்பி விழா அரங்கிற்குச் சென்றோம். வால்ஹால் அரினா என்ற அந்த வளாகம் முழுமையும் மூடப்பட்ட கால்பந்தாட்ட உள் அரங்கம். காற்றுப் புகாத வண்ணம் மூடப்பட்டிருந்ததால் குளிரின் வாதை அங்கு இல்லை. அரங்கின் பாதியை வாடகைக்கு அமர்த்தி விழாவை நடத்தினர். நல்ல கூட்டம் இரண்டாயிரம் பேர் வரை வந்தார்கள். வருவதும் போவதுமாக இருந்த தால் இரண்டாயிரம் பேர்களையும் ஒரே நேரத்தில் பார்க்கமுடியாது. நார்வேயில் 17000 தமிழர்கள் இருப்பதாகச் சொன்னார்கள். ஐந்து மணி நேர நிகழ்வு. ஈடுபாட்டோடு வேலை செய்கிறார்கள். பொங்கல் வைக்கும் நிகழ்வோடு தொடங்கி மேடையில்ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். சுகுமாரின் வடிவமைப்பில் இன்னியம் தரையில் தொடங்கி மேடை, இடது வலது எனக் களமெங்கும் நிரம்பியது அசைவுகளும் வண்ணங்களும்.

நிகழ்வு முடிந்த அன்று இரவே சுகுமார் லண்டன் போவதால் என்னை ராதாகிருஷ்ணன்- அருள்நிதி தம்பியரின் பொறுப்பில் ஒப்படைத்தார். நிகழ்வுக்குப் பின் அவர்களது காரில் அவர்களின் வீட்டிற்குப் பயணம். அவர்களின் வீடு ஆஸ்லோவின் மையத்தைவிட்டுத் தூரமாகவே இருந்தது. புலம்பெயர்ந்த தமிழர்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே அதிகமோ என்று தோன்றும். புலிகளின் ஆதரவாளரான ராதாகிருஷ்ணன்- அருள்நிதி தம்பதியரோடு தமிழ்நாட்டின் ஈழ ஆதரவுக்குரல்கள் பற்றிப் பேசிக் கொண்டிருக்க ஆசை என்றாலும் காலையில் 04.00 மணிக்குக் கிளம்பினால் தான் 5 மணிக்கு விமான நிலையம் நோக்கிச் செல்லும் பேருந்தைப் பிடிக்க முடியும்; அதைப் பிடித்தால் 08.50க்கு ஸ்டர்ன்போர்ட்ரோப்பிலிருந்து கிளம்பி விஸ் ஏர் விமானத்தைப் பிடிக்க முடியும் என்பதால் 10 மணிக்கெல்லாம் படுக்கப் போய்விட்டேன்

அதிகாலை 03.30 க்கு எழுந்தால் போதும் என நினைத்து, அலைபேசியின் எழுப்பு மணியோசையை உருவாக்கிப் படுத்தேன். ஆனால் 02.20 –க்கு விழிப்பு வந்து விட்டது. எனக்கு முன்பே எழுந்துவிட்ட ராதாகிருஷ்ணன், அறையில் விளக்கு எரிவதைப் பார்த்துவிட்டு காபி குடிக்க அழைத்துப் போனார். விசாலாமான அந்த வீட்டின் ஹாலில் காத்திருந்த வேளையில் அவரது மனைவியும் எழுந்து அங்குமிங்கும் நடந்தபடியே கடந்து போய்க் கொண்டிருந்தார். மூவருமாக அமர்ந்து குடிக்க ஏதுவாக காபியோடு வந்து அமர்ந்தார். அவரவர்க்கேற்ற அளவு ஊற்றிக் குடித்துக் கொண்டே பேச்சு திரும்பவும் வைகோ, புலி ஆதரவுத்தமிழகத்தின் உண்மை நிலவரம் என்று தொடர்ந்தது.

04.00 மணிக்குக் கிளம்பினோம். சனாகாந்த் எனக்கு 1000 க்ரோன் -நார்வே நாட்டுப் பணம் தரச்சொல்லியிருப்பதாகச் சொல்லி, நகர் மையத்தில் இருக்கும் இயந்திரத்தில் எடுத்துத் தருவதாகச் சொன்னார். எந்த நேரமும் பணம் எடுக்க வங்கிகள் பொறிகளை அமைத்து விட்டதின் நல்விளைவாக யாரும் அளவுக்கதிகமாக கையிலோ வீட்டிலோ வைத்துக்கொள்வதில்லை. அங்காடிகளில் கையிலிருக்கும் பணப்பரிமாற்ற அட்டைகளைத் தேய்த்தால் போதும். திரு ராதாகிருஷ்ணன் பணம் எடுத்து வந்து தந்தபின் திருமதி. அருள்நிதி தன் கைப்பையிலிருந்து மேலும் 200 க்ரோன் தந்து பேருந்துக் கட்டணத்திற்கு வைத்துக் கொள்ளுங்கள் என்றார். அந்த நட்பு இப்போது வரை முகநூலில் இருக்கிறது. 05.00 மணி பேருந்தைப் பிடித்து. 7 மணிக்கு விமான நிலையம் வந்து சேர்ந்தேன். சரியாக 8.50 விமானம் கிளம்பி வார்சாவுக்கு வந்து இறங்கும்போது 10.30. பிற்பகல் முழுவதும் ஓய்வு.








கருத்துகள்

வழிப்போக்கன் இவ்வாறு கூறியுள்ளார்…
கட்டுரை மிகவும் அருமை.பொங்கலை அந்த ஒளி தரும் ஆதவனுக்கு அர்பணித்தல் விடுபட்டுவிட்டது. கம்யூனிசம் வேறு கம்யூனிஸ்ட் வேறு என்பதை நீங்கள் குறிப்பிட்ட வயதில் உணர்ந்தேன்.எனது ஆசிரியர் சங்க பொறுப்பு அது தந்த கசப்பான அனுபவங்கள் இவையே காரணம்.உங்களின் நகர்தல் சரியானதே.
வழிப்போக்கன் இவ்வாறு கூறியுள்ளார்…
கட்டுரை மிகவும் அருமை.பொங்கலை அந்த ஒளி தரும் ஆதவனுக்கு அர்பணித்தல் விடுபட்டுவிட்டது. கம்யூனிசம் வேறு கம்யூனிஸ்ட் வேறு என்பதை நீங்கள் குறிப்பிட்ட வயதில் உணர்ந்தேன்.எனது ஆசிரியர் சங்க பொறுப்பு அது தந்த கசப்பான அனுபவங்கள் இவையே காரணம்.உங்களின் நகர்தல் சரியானதே.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரங்கியல் அறிவோம் -2 / ஆற்றுகை (Direction)

சிறை: காவல்துறை சினிமாவின் வகைமாதிரி.

குடும்பச் சுமைகள்