சுந்தரராமசாமியின் புளிய மரத்தின் கதை : முன்னிலைச் சொல்முறையின் சாத்தியங்களும் பலவீனங்களும்

இலக்கியப்பிரதிகள் செய்யுளைக் கைவிட்டு உரைநடைக்கு மாறியதின் வழியாகவே இக்கால இலக்கியங்கள் தோன்றின. அவற்றுள் நிகழ் காலத்தின் வாசிப்புத் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவது புனைகதை வடிவமே. புனைகதையின் அழகியல் கூறுகளுள் முதன்மையானது சொல்முறை உத்தி. சொல்முறையின் வழியாகவே புனைகதையாசிரியர் புனைவுவெளியையும், புனைவுக்காலத்தையும் புனையப்பட்ட மனிதர்களையும் உருவாக்குகிறார்.அவற்றின் முக்கூட்டு ஓர்மையில் கதை இலக்கியம் உருவாகிறது என்றாலும் சொல்முறையே படைப்பாளியின் நோக்கத்தையும் பார்வைக் கோணத்தையும் உருவாக்கும்.