பரப்பியம் : ஒரு விவாதம்

ஜெயமோகனின் இணையதளத்தில் பரப்பியம் என்ற சொல்லைக் கலைச்சொல்லாகப் பயன்படுத்துவது குறித்து நிதானமான விவாதம் ஒன்று நடந்திருக்கிறது. பொறுப்பாகத் தன் கருத்தை முன் வைக்கும் ராஜன்குறையின் முன் மொழிவைக் காது கொடுத்துக் கேட்டுத் தன் பக்க நிலைபாட்டை முன் வைத்துள்ளார் ஜெயமோகன். இதையெல்லாம் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம் இது போன்ற ஆரோக்கியமான விவாதச் சூழல் தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் சாத்தியமில்லை என்பது போலத் தோற்றம் இருப்பதுதான்.  
இந்த விவாதத்தில் நானும் கலந்து கொண்டு கருத்துச் சொல்ல வேண்டும் என்பது போல ஜெயமோகன் எழுதியிருந்தார்.  எனது சோம்பேறித்தனத்தால் உடனே எழுத முடியாமல் போய்விட்டது. ஆனால் அங்கும் இங்குமாகப்
பல இடங்களில் இதைப் பற்றி எழுதியிருப்பது நினைவுக்கு வருகின்றன. சில இடங்களை இங்கே தருகின்றேன்:
 நிகழ்கால ஊடகங்களின் அடிப்படைத் தத்துவமாக பாப்புலிசம் ( populism )  என்னும் பெருந்திரள் வாதம் தான் இருக்கிறது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. பாப்புலிசம் என்ற சொல் லத்தீன் மொழியிலிருந்த - populus- என்ற சொல்லிலிருந்து உருவான ஒரு சொல். ஆங்கிலத்தில் பீயூப்பிள்- People-என்பதே மூலச்சொல். அதன் பொருள் மக்கள் என்பதுதான். தேசத்தின் மக்கள் என்ற அர்த்தத்தில் தேசப்பற்றையும் சேர்த்துக் கொள்ளும் இயல்புடையது.மக்கள் ஆட்சி, மக்கள் கலை, மக்கள் சினிமா என ஒவ்வொன்றோடும் அது சேரும் போது பெருந்திரளின் சார்புடையது என மாற்றம் அடைந்து பொது மக்கள் என்னும் கவசத்தைத் தனதாக ஆக்கிக் கொள்ளும் இயல்புடையது.  அப்படியொரு கவசம் கிடைத்தவுடன்  அதன் உதவியுடன் ஏற்கெனவே இருக்கும் அடையாளங்களையும் அர்த்தங்களையும் அழித்துவிட்டுப் புதிய அர்த்தங்களை எழுதுவதில் தயக்கம் காட்டுவதே இல்லை.
பெருந்திரளை வசப்படுத்துவது என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பாப்புலிசம் உறுதியான தத்துவத்தையோ, இலக்குகளையோ வைத்துக் கொள்வதில்லை. மக்கள்கலை எனச் சொல்லிக் கொண்டாலும் மக்களின் ரசனையுணர்வையும் வாழ்க்கை முறையையும் மாற்றுவதற்கு உறுதியான கலை இலக்கியக் கோட்பாடு எதனையும் பின்பற்றுவதும் இல்லை. இதில் ஆச்சரியமான ஓர் உண்மை என்னவென்றால் பெருந்திரள் வாதம் என்பதை வலதுசாரிகளும் விரும்புகின்றனர்; இடதுசாரிகளும் விரும்புகின்றனர் என்பதுதான்.  இடதுசாரிகள் சொல்லும் பெருந்திரள்வாதமும், வலதுசாரிகள் பயன் படுத்திய பெருந்திரள் வாதமும் அடிப்படையான வேறுபாடுகள் சிலவற்றைக் கொண்டிருந்தாலும் மைய நோக்கம் அதிகாரத்தை நோக்கி நகர்தல் என்பதும், ஏற்கெனவே இருக்கும் அடையாளங்களை அழித்துவிட்டுப் புதிய அடையாளங்களை எழுதுதல் என்பதுமாகத் தான் இருக்கிறது.
வலதுசாரிப் பெருந்திரள் வாதம் தேசியம், புனித இனம், கலப்பற்ற பண்பாடு, கடவுளால் உருவாக்கப்பட்ட நினைவுச் சின்னம் என்பதான அடிப்படைவாதச் சொற்களை உத்திகளாகப் பயன்படுத்தி அதிகார மையங்களைக் குறி வைக்கின்றன என்றால், இடதுசாரிப் பெருந்திரள்வாதம் அதிகாரத்தை நோக்கி நகர உழைக்கும் வர்க்கம், நடுத்தர வர்க்கம், விவசாயக் கூலிகள், ஏழைகள், பாமரர்கள், பாட்டாளி வர்க்கம் என்பதான  சொல்லாடல்களை உற்பத்தி செய்கின்றன. 
காலச்சுவடுவில் எழுதிய ஊடகவெளி தொடரில் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடிக்க சிவாஜி என்ற திரைப்படம் வந்த போது எழுதியது இது. அதைவிடவும் கூடுதலாகத் திரள்மக்கள் வாதப் பின்னணியில் விவாதிக்க வேண்டிய எந்திரன் வந்துள்ளது. இன்று அல்லது நாளை பார்த்து விட்டு எழுத வேண்டும். இன்னொரு தடவையும் பரப்பியல்வாதம் பற்றி எழுதியிருக்கிறேன். குஷ்புவின் அரசியல் நுழைவு பற்றி  அண்மையில் எழுதிய அந்தக் கட்டுரை உயிர்மை இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்தது. இவ்வாறு விளக்கியிருக்கிறேன்:
அரசியல் விஞ்ஞானத்தில் பரப்பியல் வாதம் (பாப்புலிசம்) என்ற கலைச்சொல் ஒருவித எதிர்மறைத் தன்மையோடு விளக்கப்படும் கலைச்சொல் என்றாலும் பொதுப்புத்தி சார்ந்த வெற்றிக்குப் பல நேரங்களில் உத்தரவாதமான ஒன்று. வெகுமக்களிடம் தங்கள் இயக்கத்தை வேகமாகக் கொண்டு போய்ச் சேர்க்க விரும்பும் இயக்கம், புனைவான சில செய்திகளையும், நிகழ்வுகளையும் உருவாக்கி அவற்றைக் கதைகளாக மாற்றிக் கட்டமைப்பது பரப்பியல் வாதத்தின் முக்கியமான போக்கு. கட்டமைக்கப்பட்ட புனைவுகளைப் பேச்சுகளாகவும், காட்சிகளாகவும் முன்னிறுத்திப் பெருங்கூட்டத்தை ஏற்கச் செய்ய இயலும் என்ற நம்பிக்கை அதன் அடிப்படை. அத்தகைய நம்பிக்கையில் செயல்படும் இயக்கத்தைப் பரப்பியவாத இயக்கம் (Populist movement) என அரசியல் விஞ்ஞானம் சுட்டும். செய்திகள், நிகழ்வுகள் மட்டுமே புனைவுகளாக ஆக்கப்படும் என்றில்லை. ஓர் இயக்கம் முன் வைக்கும்  கொள்கைகள், கொள்கைகளை  முன் வைக்கும் நபர்கள் போன்றனவும் கூடப் புனைவுகளாகவே கட்டமைக்கப் படுவது பரப்பியவாதத்தின் அம்சங்களே. இந்திய அரசியல் கட்சிகள் பெரும்பாலும் பரப்பியல் வாதத்தைத் தங்களது கருத்தியல் அடிப்படையாகக் கொண்டவையே என்றாலும், திராவிட முன்னேற்றக் கழகமே அதில் முன்னோடியாக இருந்த இயக்கம் என்பதை அதன் கடந்த கால வரலாற்றின் பக்கங்கள் தெரிவிக்கின்றன.
பொதுப்புத்திக்கெதிரான மாற்றுக் கருத்துக்களைத் தீவிரமாக முன் வைத்த இயக்கமான பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகமாக உருவாகிய காலத்திலிருந்து தமிழக வரலாறு பற்றியும், தமிழ்ச் சமூகத்தைப் பற்றியும் திமுக முன் வைத்தவை பெரும்பாலும் புனைவுகள் சார்ந்தவையே. இதனைப் பல காத்திரமான ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன. அத்தகைய புனைவுகள் வழியாக முன் நிறுத்தப் பட்ட இலக்கியம் மற்றும் வரலாற்றுப் பாத்திரங்களையும் ( திருவள்ளுவர், கண்ணகி, ராஜராஜன், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்), நிகழ்வுகளையும் (இமயமலையில் கல்லெடுத்துக் கண்ணகிக்குக் கோயில் கட்டியது, மனுநீதிச் சோழன் நீதி வழங்கியது), கருத்தியல்களையும் (பொற்காலப் புனைவுகள்) நகரும் பிம்பங்களாக்கித் தேர்தல் அரசியலுக்குத் தி.மு.க.வைப் போல் வேறு எந்த அரசியல் இயக்கமும் பயன்படுத்திக் கொண்டதில்லை. வரலாற்றுப் பாத்திரங்களைப் புனைவுகளாக மாற்றியதைப் போலவே நிகழ்கால மனிதர்களுக்கும் புனைவுகளைத் தந்து பிம்ப அடுக்குகளால் நிரப்பிக் கட்டமைப்பதைத் தேர்ந்த அரசியல் செயல்பாடாகச் செய்த இயக்கமும் திராவிட முன்னேற்றக் கழகம் தான்.
தனது திரைப்படங்களில் த்துப் பேரைப் புரட்டி  எடுக்கும்  எம்.ஜி. ராமச் சந்திரனைப்  புரட்சி நடிகராகப் புனைந்து மேடைகளில் ஏற்றிய திமுக., தனது இயக்கத்தில் விதம்  விதமான பிம்பங்கள் இருப்பதை எல்லாக்காலத்திலும் உறுதி  செய்து கொண்டே இருக்கிறது. பேரறிஞர், கலைஞர், நாவலர், நாவுக்கரசர், நகைச்சுவைத் தென்றல், இலட்சிய  நடிகர் எனத் தொடக்ககாலப்  புனைவுகள் தந்த பலனை நன்கறிந்த  இயக்கம் அத்தகைய பிம்பங்களை நோக்கி உறுமீன் வருமளவும்  காத்திருக்கும் கொக்கு போலக்  கவனத்துடன் இருந்து வந்திருக்கிறது. உலக அளவில் அறியப் பட்ட கவிஞர்கள், கலைஞர்கள், தத்துவவாதிகள், சிந்தனையாளர்களோடு தொடர்பு கொண்டதாக அவ்வியக்கம் காட்டிக் கொண்டதைப் பெயரிடல் வழியாகவும், பட்டப் பெயர்களாக ஆக்கிக் கொள்ளுதல் வழியாகவும் தக்க வைத்திருக்கிறது. இப்போது சரியானதொரு மீனாக -முற்போக்கான எண்ணங்கள் கொண்ட –தனித்திறமைகள் நிரம்பிய பெண்மணியாகக் குஷ்பு நிறுவிக் கொண்ட போது கொக்கி போட்டு வளைத்துக் கொண்டு விட்டது. நடிகை குஷ்பு தி.மு.க.வால் அடையப்போகும் பலன்களை விட, அவரால் திமுகவிற்குக் கிடைக்கப் போகும் பலன்களே அதிகம் என்பது சித்தாந்தம் சாராத- கோட்பாடாத சாராத- ஆனால் வெகுமக்கள் மனநிலை சார்ந்த ஒரு கணிப்பு.
திரும்பவும் இந்த விவாதத்தை ஒட்டி யோசித்துப் பார்த்த போது வேறு ஒரு கருத்தும் தோன்றியது. Pop என்ற சொல் People  என்ற சொல்லோடு தொடர்புடையது. People என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழில் மக்கள் என்ற சொல்லால் குறிக்கிறோம். ஜனம் என்ற சமஸ்கிருதச் சொல்லும் புழக்கத்தில் இருக்கிறது. தரப்பிரிப்பு எதுவுமின்றி எல்லாரையும் உள்ளடக்கிக் குறிக்கும் போது பொதுமக்கள், பொதுஜனம் (Common people) எனக் குறிக்கிறோம்.  இப்படி குறிக்கும் போது சிக்கல் எதுவும் இல்லை என்பது போலத் தோன்றும். ஆனால் அப்படித் தோன்றுவது உண்மையில்லை. ஏனென்றால் எப்போதும் ஒரு சிறு கூட்டம் இப்படிப் பட்ட பொதுமை யாக்கலுக்கு எதிரான கருத்தோடு எல்லாத்துறையிலும் இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் தான் பொதுமைப் படுத்தலுக்கு எதிராகத் தரப்பிரிப்பை வலியுறுத்துபவர்கள்.
Common people என்ற கலைச்சொல்லைப் பொதுமக்கள் என்பதாக அர்த்தப்படுத்தாமல், ‘ சாதாரண மக்கள்’ என அர்த்தப் படுத்திக் கொண்டு, “நாங்கள் சாதாரண மக்கள் அல்ல; எங்களை அதில் அடக்கக் கூடாது; நாங்கள் உயர்வானவர்கள்” என்பது அவர்களது நினைப்பாகவும் வாதமாகவும் இருக்கும். இந்த வாதம் அண்மைக்கால வாதமாகத் தோன்றவில்லை. 
தொல்காப்பிய நூற்பாக்கள் சிலவற்றில் ‘ உயர்ந்தோர் மேற்றே’ எனச் சொல்ல நேர்ந்ததின் பின்னணிக் காரணமாக அத்தகைய நினைப்புகளும் வாதங்களும் தான் இருந்திருக்கும் என்று சொல்லத் தோன்றுகிறது. அதைத் தான் முற்போக்குவாதம் பேசும் பலரும்  ஒரு கெட்ட வார்த்தை போல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் எலீட்டிசம் –elitism- எனக் குறிக்கப்படும் மேன்மக்கள் வாதம்.
பத்தோன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதி தொடங்கி எல்லாவகைச் சிந்தனைகளையும் அறிநிலையிலும் அறியாநிலையிலும் பாதித்துக் கொண்டிருக்கும் மார்க்சியம் தனது வரவின் போதே இந்தப் பிரிவினை நிலைபாட்டை ஒதுக்கி வைப்பதாக அறிமுகமானது. ‘எல்லாம் பொது; எல்லாரும் ஒன்று தான்’ என்பதின் மேல் எல்லாக் கருத்தியலையும் உருவாக்கி வளர்க்க முற்பட்டது. உருவாக்கப்படும் எல்லாமும்- பயன்படு பொருள் முதல் நுண்ணுணர்வுக் கலை ஈறாக எல்லாமும் எல்லாருக்குமானதாக இருக்க முடியும்; அப்படி இல்லாததாகத் தோன்றினால் அவற்றை நிராகரித்துவிட்டு எல்லாருக்குமானவைகளை மட்டும் வளர்த்தெடுப்பதே சரியானது; அவற்றை ஆதரித்தால் போதும் என்ற பயன்பாட்டு வாதத்தை முன் வைத்துப் பேசியது. 
இதுதான் மார்க்சியத்தின் ‘பெரும் சறுக்கல்’ என்பார் அதன் எதிர்நிலையாளர்கள். இல்லை அதுதான் மார்க்சியத்தின்  தான்  ‘பெருங்கொடை’ என்பார் அதன் ஆதரவாளர்கள். இதில் எந்தப் பக்கம் இருப்பது என்பதுதான் அதற்குப் பிந்திய படைப்பாளிகள், சிந்தனையாளர்கள், திறனாய்வாளர்களின் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இந்தக் கலைச்சொல் உருவாக்கத்திலும் அந்த எதிர் எதிர் கோணங்கள் தான் செயல்படுகின்றன. 
பரப்பியல்வாதம் என்ற சொல்லிற்குப் பரப்பியம் என்ற சொல் ஈடானது என்பதால் அதையே பயன்படுத்தலாம் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் பெண்ணிய வாதம், மார்க்சியவாதம், பெரியாரியவாதம், அமைப்பியல் வாதம் போன்றவற்றிலிருந்து, ‘வாதத்தை’ நீக்கி விட்டுப் பெண்ணியம், மார்க்சியம், பெரியாரியம், அமைப்பியம், எனப் பயன்படுத்துவது போலப் பரப்பியல் வாதத்தைப்  ‘பரப்பியம்’ என்ற சொல்லால் சொல்வது ஓரளவு சரியென்றே தோன்றுகிறது.

கருத்துகள்

Shan Nalliah / GANDHIYIST இவ்வாறு கூறியுள்ளார்…
pirapalyam...word is more appropriate..!!!parappiyam means propaganda...your opinion please!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
increase width of reading portion

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்