தலித் அல்லாதார் பார்வையில் தலித் எழுச்சி
.jpeg)
தமிழ்ச் சிந்தனைத்தளம் -அரசியல், பொருளாதாரம், கலை இலக்கியம், போராட்டம் - என அனைத்துத் தளங்களிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. அது வரை பிராமணர்கள்/ பிராமணரல்லாதார் எனப்பிளவுபடுத்திப் புரிந்து கொண்ட எல்லாவற்றையும் இன்று தலித்/ தலித் அல்லாதார் என எதிர்வு களை நிறுத்தி விவாதிக்கவும் விளக்கவும் புரிந்து கொள்ளவும் வேண்டும் எனக்கோருகிறது இந்த நெருக்கடி. இந்த நெருக்கடியின் விதைகள் தூவப்பட்டு பத்துப் பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டிய தலித் எழுச்சியின் விதைகள் தான் இன்றுள்ள நெருக்கடிக்கான காரணங்கள். பிராமணரல்லாத இடைநிலைச் சாதி உயிரி ஒன்று இந்த நெருக்கடியை எப்படி எதிர் கொள்கிறது என்பதில் தான் அதன் தன்னிலையும் நிலைப்பாடும் அடங்கியிருக்கிறது எனக் கருதிட வேண்டும்.