September 26, 2011

தமிழ் ஊடகங்களில் ஒடுக்கப்பட்டோர் நிலையும் விடுதலையும்தமிழக எல்லைக்குள் வாழ நேர்ந்த ஒருவன் அல்லது ஒருத்தி தன்னையொரு தமிழ் உயிரியாகக் கருதிக்கொண்டாலும்சரி அல்லது இந்திய மனிதனாகக் கருதினாலும் சரி கடந்த பதினைந்து ஆண்டுகளில்-1990 முதலான பதினைந்து ஆண்டுகளில்- இரண்டு முக்கியமான நிகழ்வுளுக்காகத் தன் கவனத்தைத் திருப்பியிருக்கவேண்டும். முதலாவது நிகழ்வு ஊடகப் பெருக்கம் என்னும் சர்வதேச நிகழ்வு.
இரண்டாவது ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான குரல்களும் போராட்டங்களும் என்னும் தேசம் தழுவிய அலை. இவ்விரு நிகழ்வுகளுக்கும் பின்னணியாகவும் பின்னணியாக இல்லாமலும் இருந்த இன்னொன்றும் உண்டு.அந்த ஒன்று உலக நாடுகளின் பொருளாதார அடித் தளத்தில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள் ஆகும். உலகமயம், தாராளமயம்சீர்திருத்தம் என்ற சொல்லாட்சிகளுடன் தன்னை இணைத்து வெளிப் படுத்திக் கொண்ட இந்தப் பொருளாதார ஒழுங்கமைவு ஏற்கெனவே இருந்து வந்த தேசிய நலன், மனிதநேயப் பார்வை என்பதான சொல்லாட்சி களை இடம்பெயர்க்க முயன்று வருகிறது. இது போன்றக் காரணங்களால் இந்தக் காலகட்டத்து மனிதத் தன்னிலையுருவாக்கம் என்பது மிகுந்த சிக்கல்கள் நிரம்பியதாகத் தோன்றுகிறது. ஆனால் அதே நேரத்தில் குழப்பங்கள் அற்ற நேரடிப் பயணங்களாகவும் தோன்றுகின்றன.

"ஊடகப் பெருக்கத்திற்கும் ஒடுக்கப்பட்டோர் விடுதலையென்னும் சுழல்காற்றுக்கும் தமிழ் உயிரி ஒன்று தனது கவனத்தைத் திருப்பி இருக்கத்தான் வேண்டும்;தனது புலனுணர்வைத் திருப்பி எதிர்வினையாற்றாமல் சிந்திக்கின்ற ஒருவன்/ஒருத்தி கடந்து வந்திருக்க முடியாது; எதிர்வினை என்பது அந்த உயிரியின் தன்னிலையுருவாக்கம் எத்தகையது என்பதற்கேற்ப  ஆதரவு நிலைப்பாட்டுடனோ அல்லது எதிர்ப்பு நிலைப்பாட்டுடனோ அமைந்திருக்கும்; ஒருவன் எதிர்வினையெது வுமின்றிக் கடந்து வந்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது. அப்படி யொருவன் 'கடந்து வந்திருக்கிறான்' என்றால் அவன் நிகழ்காலப் பிரக்ஞை யற்ற சிந்தனைகளினூடாகவே கடந்து வந்திருக்க முடியும்"
என்றெல்லாம் நமது  கருதுகோள்களை அல்லது நம்பிக்கைகளை  முன் நிறுத்தலாம். ஆனால் இக்கருது கோள்களையெல்லாம் நிரூபித்து விடுவதற்கான சான்றுகளை இந்தியச் சமூகத்தின் உள் ஒழுங்கு களிலிருந்து பெற்றுவிட முடியுமா என்று கேட்டால்..?முடியும் என்று உடனடியாகப் பதில் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் இந்தியச் சமூகச் சாதிக் கட்டமைப்பிற்குள் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக நம்பும் மேல் அடுக்குவாசிகள் எல்லாவற்றையும் எதிர்கொள்ளத் தயாரில்லாதவர்களாக-தேவையில்லாதவர்களாகத் தொடர்வதற்கான சலுகைகள் அளிக்கப் பட்டுள்ளவர்களாக நினைக்கின்றனர். அவர்களுக்கு விருப்பமானவற்றை மட்டும் தேர்வு செய்து கொண்டு அவற்றில் மட்டும் பங்கேற்கும் சாத்தியங்கள் அவர்களுக்கு இருப்பதாகவே கருதுகின்றனர். இத்தகைய சலுகைகள் சட்டப்படியானவைகள் தானா என்றால்  இல்லை. அப்புறம் எப்படி இவை சாத்தியாமாகிறது என்றால் மரபின் கொடை என்பதுதான் பதில். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது உறுதி செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆனபின்னும் இவை தான் நிலைமை என்பது தான் இந்தியாவின் சோகம். அத்தகைய வாய்ப்புக்கள் வழங்கப்படும் நிலைமையே இன்னும் இங்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அச்சு ஊடகங்கள்
தமிழில் அச்சு ஊடகங்களின் பெருக்கம் எழுபதுகளின் இறுதியாண்டு களிலேயே நிகழ்ந்து விட்டது. எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறு களிலும் அதன் தன்மை வேறொரு வடிவத்தை நோக்கி நகர்ந்தது. உலகப் பொருளாதாரமும் தகவல்களும் சர்வதேச மயமாகிக்கொண்டு வந்த சூழலில் தமிழ் அச்சு ஊடகங்கள் தங்கள் எல்லையைச் சுருக்கிக் கொண்டே வந்தன.அன்றாட உலக நடப்பைச் சொல்லவேண்டிய நாளிதழ்கள் தமிழக எல்லைக்குள் மாவட்டச் சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும் வட்டார நாளிதழ்களாக மாறி வந்தன. வார மாத இதழ்களில் பணியாற்றியவர்களோ அரசியல், பொருளாதாரப் பண்பாட்டுச் சிக்கல்களை விவாதிக்கத்தொடங்கியதை விலக்கிவிட்டு அவற்றின் தகவல்களை ரகசியங்களென உருவகப்படுத்தி அதனைத் திறந்து காட்டும் அற்புதப் பணிகளைச் செய்யும் மந்திரக்கோல் விற்பன்னர்களாக உலாவரத் தொடங்கினர்.
வட்டார இதழ்களாக மாறியதும் ரகசியங்களைத் தேடுவதும் ஒருவகையில் ஒடுக்கப்பட்டோர் விழிப்புணர்வுக்குத் தேவையான ஒன்றுதான்.ஏனெனில் ஒடுக்குதலுக்குத் தத்துவத்தளத்தை உருவாக்கி நம்பச் செய்துள்ள சாதியமைப்பே ஒரு விதத்தில் வட்டாரத்தன்மையும் ரகசியங்களும் கொண்டது தான்.இந்தியாவில் ஒடுக்கப் பட்டோர் விடுதலையின் தடைக்கல் இந்து மதத்தின் அடித்தளமான சாதீயக் கட்டமைப்பே என்பது திரும்பவும் விளக்கிச் சொல்லப்படவேண்டிய ஒன்றல்ல. சாதீய க்கட்டுமானம் இந்துமதத்தின் அடித்தளம் என்று சொல்வதால் இந்து மதத்திற்கு மட்டும் உரியது என்று கருதிவிடவேண்டியதில்லை. இந்து மதத்தின் வெளிக்குள் பாரதூரமாகவும் பிறசமய நடவடிக்கைகளின் கருத்தியல் தளத்திலும் பரவிக்கிடக்கும் சாதீயப்படிநிலைசார்ந்த எண்ணங்களும் நம்பிக்கைகளுமே சிதைத்து வெற்றி கொள்ளவேண்டிய தடைக் கற்களாகும். இத்தடைக் கற்களின் இயங்குதளத்தைச் சரியாகக் கணித்தால் அதுவும் வட்டாரத்தன்மையோடும் உள்ரகசியங்கள் நிரம்பிய தாகவும் இயங்கிக் கொண்டிருப்பது புரியவரலாம். விடுதலையைப் பற்றிச் சிந்திக்கின்ற ஓர் இயக்கம் சாதியின் இயங்குதளமான வட்டாரத்தையும் அதன் கருத்தியலான மூடுண்ட-ரகசிய நம்பிக்கைகளையும் புரிந்து கொள்ள வேண்டியதும் முக்கியமான ஒன்று தான். எதனையும் புரிந்து கொள்ளவும் எதிர்த்துப் போராடவும் குறுகிய பரப்பு என்பது  ஏற்புடைய ஒரு சோதனைக் களம். குறுகிய பரப்பிற்குள் எந்தவொரு நிகழ்வையும் சரியாக விளங்கிக் கொள்ளவும் விளக்கவும் முடியும்.எதிர்ப்பு நிலைபாடுகள் எவையென அடையாளப் படுத்தவும் இந்தப் பரப்பளவுக்குறுக்கம் அவசியமும்கூட. ஒரு வட்டாரத்தில் கிடைக்கின்ற அனுபவத்தைப் பிற வட்டாரங்களுக்குப் பொருத்திப் பார்ப்பதையும் சாத்தியமாக்கலாம்.
தொண்ணூறுகளில் மாவட்டத்தலைநகர் தோறும் தனிக் கிளைகளைத் தொடங்கிய நாளிதழ்கள் சேகரிக்கும் தகவல்கள், வெளியிடும் விளம்பரங்கள், விவாதிக்கும் நிகழ்வுகள் என அனைத்திலும் வட்டாரத் தன்மையைக் கொண்டுவந்தன என்றாலும் அவற்றின் நோக்கம் சாதீயக் கட்டமைப்புக்கு ஆதரவாக இருந்தது என்பதை மறந்துவிடவோ மறுத்து விடவோ முடியாது. எல்லாருக்கும் இலவசக் கல்வி என்னும் சலுகையைப் பயன்படுத்திக் கல்வி கற்றவர்கள் எல்லாக் கிராமங்களிலும் இருக்கிறார்கள் எனச் சரியாகவே கணித்துச் செயல்பட்ட அச்சு ஊடக முதலாளிகள், அவர்களையே தங்களின் இலக்கு வாசகர்களாகவும் கணித்துச் செயல் பட்டனர். தங்கள் இதழ்களில் எல்லாக்கிராமங்களின் பெயர்களும் இடம்பெற வேண்டும் என்பதில் குறியாகவும் இருந்தனர்.
குடும்பச் சண்டை, கள்ளக்காதல் தகராறு, கணவனைக் கொன்ற இளம்பெண் அல்லது மனைவியை வெட்டிய வாலிபர் எனத் தனிநபர் நிகழ்வுகளையே கிராமங்களின் செய்திகளாகத் தந்து கொண்டிருந்த தினத்தந்தியின் பாணியில் மாற்றத்தைக் கொண்டுவரச் செய்தது தினமலர் நாளிதழின் செய்திகள். எம்.ஜி.ராமச்சந்திரனின் அதிமுக தோற்றத்தைத் தனது வியாபார வளர்ச்சியின் உடன்நிகழ்வாகவும் அதன் வளர்ச்சியின் தனது வளர்ச்சியும் இருப்பதாகக் கணித்துச் செயல்பட்ட தினமலரின் கிராமீயச் செய்திகள் நவீனத்துவ வாழ்க்கைக்கு எதிராகக் கிராமீயப் பண்பாட்டை நிலை நிறுத்தும் உள்நோக்கம் கொண்டவை என்பதை இப்பொழுதும் கூட உறுதி செய்யலாம். இந்தியக்கிராமீயப் பண்பாடு என்பது சாதீயப் பண்பாடு என்பது கவனிக்கவேண்டிய ஒன்று. தேரோட்டம், திருவிழாக்கள், கொடைகள், கும்பாபிஷேகம் எனத்தொடங்கி கிராமம்சார்ந்த சமய நிகழ்ச்சிகள் அனைத்தும் செய்திகளாகியுள்ளன. திருவிளக்கு பூஜைகிராமக் கோயில் பூசாரிகள் கூட்டம், சாமியார்களின் அற்புதம் எனத் தனது ஆதரவுத் தளமான  இந்துத்துவச் செயல்பாடுகளைத் தூக்கிப்பிடித்தாலும் தனது வியாபார வெற்றி கருதி அனைத்துச் சமய நிகழ்ச்சிகளும் இடம் பெறுவதில் கவனம் செலுத்தி வருகிறது தினமலர்.தினமலரின் தத்துவார்த்தத்தளம் இன்று அனைத்து நாளிதழ்களின் அடிப்படை நோக்கங்களாக மாறிவருகின்றன.தினகரன், தினபூமி,கதிரவன் எனக்காலைப் பத்திரிகைகளின் பக்கங்களிலும் அதே நிறுவனங்களிலிருந்து வெளிவரும் மாலைப் பத்திரிகைகளின் பக்கங்களிலும் நிறைந்து கிடப்பன வட்டாரஞ் சார்ந்த சமயச் செய்திகளே.
தினசரிகளின் கவனம் வட்டாரச் செய்திகளாக இருக்கப் பருவ இதழ்களின் கவனம் முழுவதும் அரசியல் மற்றும் திரைப்படத்துறை சார்ந்த ரகசியங்களைத் தேடுவதாக இருக்கின்றன. அரசியல்வாதிகளின் குற்றப் பின்புலம், ஊழல் நடவடிக்கைகள்,திரைப்படத்துறையினரின் அந்தரங்கங்கள்நட்புகள், ஆடம்பர வாழ்க்கை எனக் காட்சிப்படுத்தும் பருவ இதழ்களின் நோக்கம் அவற்றைக் களைய வேண்டும் என்பதாக இல்லை. அதற்கு மாறாக அவற்றைக் காட்சிப்படுத்தி அவற்றையே இயல்புநிலையாகக் காட்டி நம்பச் செய்வதாக இருக்கிறது. எதனையும் தொடர்ந்து கவனிக்கும்/ அனுபவிக்கும் நிலையில் அதுவே வாழ்வின் ஒரு பகுதியாக - இயல்பாக ஆகி விடும் என்பது நடைமுறை. தமிழ் அச்சு ஊடகங்களுக்குக் காட்சிப்படுத்திக் களிப்பூட்டுவதில் உள்ள ஆர்வம் அளவற்றது என்பதற்குப் பருண்மையான இரண்டு உதாரணங்களைச் சொல்லலாம்.
முதல் உதாரணம் சென்னை சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலினால் நான்காவது மனைவியாக இருக்கும்படி வற்புறுத்தப்பட்ட ஜீவஜோதி. இன்னொரு உதாரணம் தனது காரில் கஞ்சா கடத்தியதாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களை நோக்கி நெடும் பயணம் செய்து கொண்டிருக்கும் செரீனா. இவ்விரு பெண்களைப்பற்றிய செய்திகளைத் தரும் நமது அச்சு ஊடகங்களின் நோக்கம் காட்சிப்படுத்திக் களிப்பூட்டுவதைத்தாண்டி வேறு எதேனும் இருக்குமா என்பது சந்தேகமே. இவ்விரு பெண்களும் செய்திகளான பின்பு இவ்விருவர்களின் நிழல் படங்கள் அச்சிடப்பட்ட அளவிற்கு தமிழகத்தின் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் படமோ தமிழ்த் திரையுலகின் முதலிட நடிகையாக இருந்த சிம்ரனின் படமோகூட அச்சிடப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. புலனாய்வு இதழ்களில் ஊகங்களும் கேள்விப்பட்டவைகளுமே முன்னோட்டத் தகவல்களாகத்(ஸ்கூப்) தரப்படுகின்றன. அந்த முன்னோட்டத் தகவல்கள் பலநேரங்களில் வதந்திகள் என்ற அளவில் காணாமல் போய்விடுவதே நடைமுறையாக இருக்கிறது.குமுதம், விகடன், நக்கீரன் போன்ற பல நிறுவனங்கள் வெளியிடும் வார இதழ்களின் உள்ளடக்கங்கள் இத்தகையன தான்.இத்தகைய செய்திகள் எழுப்பக்கூடிய உணர்வுகள்இருக்கின்ற அமைப்பைக்கட்டிக்காக்கவும் அவற்றின் மீதான நம்பிக்கைகளைத் தக்கவைக்கவும் தான் உதவும் என்பதும் விளங்கிக்கொள்ளவேண்டிய ஒன்று.
தனிநபர்சார்ந்த ரகசியங்களுக்கும் சமயநடவடிக்கைகள் சார்ந்த பொது நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் தரும் இதே பத்திரிகைகள் கிராமஞ் சார்ந்த சாதிமோதல்கள், சண்டைகள், கலவரங்கள் நடக்கின்ற பொழுது எவ்வாறு செய்திகள் வெளியிடுகின்றன என்பது கவனித்துப் பரிசீலனை செய்ய வேண்டிய ஒன்று.அத்தகைய தருணங்களின் பெரும்பாலும் ஆதிக்க சாதி ஆதரவுடனோ அல்லது நடுநிலையில் இருப்பதாகவோதான் அவை வெளிப்பட்டுள்ளன. 1995-1997-களில் கொடியங்குளம் நிகழ்வைத் தொடர்ந்து நடந்த கலவரங்களின் செய்திகளை வெளியிட்ட நாளிதழ்களில் சில உள்நோக்கத்தோடு செயல்பட்டதை ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன
(மணிக்குமார்,கொடியங்குளம் கலவரங்கள், வல்லினம்,2003 ). தொல். திருமாவளவன், டாக்டர் கே.கிருஷ்ணசாமி போன்ற  தலித் தலைவர் களைப்பற்றிய கட்டுரைகளை வெளியிடும்போது வார இதழ்கள் தரும் தலைப்புக்களும் மொழியும் ,அதில் வெளிப்படும் தொனியும் சாதீய உள்நோக்கம் கொண்டன என்பதை வெகுசில உதாரணங்கள் மூலமே விளக்கிவிட முடியும்.2004 ஏப்பிரல்-மேயில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருவரும் இணைந்ததையும் அதன் பிறகு அவர்கள் இருவரும் பிரிந்ததையும் செய்திகளாக வெளியிட்ட விகடன் நிறுவன இதழ்களையும் குமுதம் நிறுவன இதழ்களையும் திரும்பவும் எடுத்து வாசித்துப் பார்த்தாலே போதுமானது.
அதேபோல மேலவளவுப் படுகொலைகள்(1997), சிதம்பரந்தொகுதி தேர்தல் கால வன்முறைகள் (1999),கண்டதேவித்தேரோட்டம் ( 2002) , திண்ணியம் அவமானச் செயல்கள் (2003) சிவகங்கையின் ஜனநாயகக் கடமை மறுப்பு (2004)   போன்ற நிகழ்வுகளில் செயல்பட்ட சாதீய வன்முறையைச் சுட்டிக் காட்டி விமரிசனம் செய்வதைத் தவிர்த்துவிட்டு வெறும் தகவல்களாகவும், தனிநபர்களின் செயல்களாகவும் மட்டுமே அவை வெளியிடுகின்றன. மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் போன்ற கிராமங்களில் உள்ளாட்சித்தேர்தல்கள் நடத்தமுடியவில்லை என்பதை வெறும் சட்டம், ஒழுங்குப் பிரச்சினை என்ற அளவிலேயே கணிக்கின்றன இப்பத்திரிகைகள்.ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தீவிபத்து, கும்பகோணம் கல்விக்கூடத் தீவிபத்து போன்றவற்றில் ஊடகங்கள் உருவாக்கிய அனுதாப அலை, சிதம்பரத்தில் அப்பாவித் தலித்துக்களை ஆதிக்கசாதியினர் தீவைத்துக்கொளுத்தியபோது உருவாக்கப் பட்டதில்லை.தாமிரபரணியில் தள்ளிக் கொன்ற போது உருவாக்கப்படவில்லை; கொடியங்குளத்தில் குடிதண்ணீர் கிணற்றில் விஷத்தைக்கொட்டியபோது உருவாக்கப் படவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. வெட்டப்படுவதும், தீவைத்துக் கொளுத்தப்படுவதும், ஆற்றில் தள்ளிக் கொலை செய்யப் படுவதும் இயற்கை நிகழ்வுகள் என்பதுபோலச் செய்திகள் வெளியிடுகின்றன அல்லது வெளியிடாமலேயே தவிர்த்து விடுகின்றன.
மாற்று இதழ்கள்
வெகுமக்களைச் சென்றடையும் நாளிதழ்களும் வார, மாத இதழ்களும் இவ்வாறு செயல்படும் நிலையில் ஒடுக்கப்பட்டோர் உரிமைகளையும் விடுதலையையும் முன்வைக்கும் இயக்கங்கள் தங்களின் செயல்பாடுகளையும் இலக்குகளையும் பயணங்களையும் வெளிப்படுத்தத் தங்களுக்கான இதழ்களைத் தாங்களே தோற்றுவிப்பது என்பதைத் தவிர வேறு இல்லை.தலித் இயக்கங்களாகவும் அம்பேத்கர் இயக்கங்களாகவும் ஒடுக்கப் பட்டோர் இயக்கங்களாகவும் தனித்தனி அடையாளங்களில் செயல் படும் இயக்கங்கள் தங்களுக்கான இதழ்களை நடத்திக் கொண்டு தான் வருகின்றன. மருத மலர், தலித் முரசு, புதிய கோடாங்கி, தாய் மண், மள்ளர் மலர், தலித், என வரும் இதழ்கள் அத்தகைய மாற்று நோக்கத்தோடு வருகின்ற இதழ்களே. இவ்விதழ்கள் சிலவற்றிற்குத் திராவிட இயக்கங்களும் இடதுசாரி  இயக்கங்களும் நடத்திய  "இயக்க இதழ்கள்" என்ற வடிவம் முன்னோடி வடிவம்.இன்னும் சிலவற்றிற்கு "சிற்றிதழ் பாரம்பரியம் "என்ற அடையாளம் முன்மாதிரி. வெளி வருகின்ற மாற்று இதழ்களில் சில இவ்விரண்டின் கூறுகளையும் உள்ளடக்கிக் கொண்டதாகவும் வருகின்றன. முன்மாதிரிகள் எவையாக இருந்தாலும் இம்மாற்று இதழ்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் ஒன்று உண்டு. அவை தனது இலக்கு வாசகர்கள் யார் என்பதைத் தீர்மானித்துக் கொண்டு செயல்பட்டாக வேண்டும். ஒடுக்கப்படுகிறவர்களின் குரலாக இம்மாற்று இதழ்கள் வெளிவருவதை உறுதி செய்யும் அதே நேரத்தில் ஒடுக்கும் பிரிவைச்சேர்ந்தவர்கள் தேடல் காரணமாகவோ, விருப்பம் காரணமாகவோபயம் காரணமாகவோ இவ்விதழ்களை வாசித்தாகவேண்டும் என்பதையும் உறுதி செய்ய வேண்டும். சகலதரப்பினரும்  வாசிக்கின்ற இதழ்களாக மாற்று இதழ்களை வெளியிடுவதும் அதில் பிறசாதியினர் பங்கேற்பதற்கான வாய்ப்புக்களை உருவாக்குவதும் உறுதி செய்யப்படவேண்டிய ஒன்று. இந்த உறுதி இல்லாத நிலையில் இத்தகைய மாற்று இதழ்கள் ஒரு சாதியின் பத்திரிகைகளாக அடையாளப்பட்டுக் குறுகி விடுவதைத் தடுத்து விடமுடியாது.
திரைப்பட ஊடகம்   

மனிதத் தன்னிலைகளை  மக்கள் திரளாகக் கட்டமைப்பதிலும் அதனைக் கையகப்படுத்தியுள்ள குழுவிற்குச் சாதகமாக மக்கள் திரளைத் தகவமைப்பதிலும் ஊடகங்கள் முக்கியமான பங்கினைச் செலுத்துகின்றன என்பதை உலகம் முழுக்க நடந்துள்ள ஊடக ஆய்வுகள் பல நிரூபித்துள்ளன.
நிகழ் காலத் தமிழக அரசியல் நிகழ்வுகளும், பண்பாட்டு நடவடிக்கைகளும் ஊடகங்களின் வலைப் பின்னல்களிலிருந்து விலகி இருப்பன அல்ல. திரைப்படங்களுடனும் அவற்றின் துணைச் சாதனங்களான தொலைக்காட்சி அலைவரிசைகளுடனும் கொடுக்கல் வாங்கல் செய்யும் இயல்புடனேயே இவை வளர்ச்சி பெற்றுள்ளன. இக்கொடுக்கல் வாங்கல் சில நேரங்களில் நேரடியாகவும் சில நேரங்களில் மறைமுகமாகவும் உள்ளன.
திரைப்படம் என்ற வடிவம் அதன் தொடக்க நிலையான தயாரிப்ப்¢ல் ஒரு கலைச்சாதனமாகத் தோற்றம் அளிக்கிறது.கதாசிரியர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கவிஞர், இசையமைப்பாளர், நடிக நடிகையர் எனக் கலை சார்ந்த மனிதர்களின் பங்கேற்பில் உருவாகும் ஒன்றே. ஆனால் இவர்கள் அனைவரும் சம்பளம் பெற்றுக்கொண்டு அக்கலைப்படைப்பில் ஈடுபட்டு விட்டு தயாரிப்பு முழுமையடையும்பொழுது தயாரிப்பாளரிடம் அதனைக் கையளித்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளும்நிலையே இங்கு நிலவுகிறது. தயாரிப்பு முழுமையடையும் நிலையில் அதனைப் பார்வையாளனிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் பொருப்பைத் தயாரிப்பாளர் மட்டுமே செய்ய வேண்டியதுள்ளது. இந்தத் தன்மைதான் திரைப்படத்தைக் கலைப்படைப்பு என்ற நிலையிலிருந்து இறக்கிவிட்டு அதனை லாபத்திற்கு விற்கவேண்டிய பண்டமாக மாற்றுகிறது.தயாரிப்பாளர் லாபநோக்கத்தை முதன்மைப்படுத்தும் நிலையில், பார்வையாளர் பங்கேற்பு நுகர்வோரின் பங்கேற்பாக மாறிவிடுகின்றது. இந்த அடிப்படை மாற்றம்தான் திரைப்படம் மற்றும் சின்னத்திரைத் தயாரிப்புக்கள் போன்ற ஊடகத்தயாரிப்புக்களைக் கலைக் கோட்பாடுகளை அதிகம் சாராமல் வியாபாரக் கோட்பாடுகளை அதிகம் சார்ந்து நிற்கும்படி செய்து விடுகின்றன.
தமிழ்த்திரையுலகம் வெளிப்பார்வையில் ஒடுக்கப்பட்டோர் விழிப்புணர் வையும் விடுதலைக்குரல்களையும் கண்டு கொள்ளாமல் அதன் போக்கிலேயே பயணம் செய்து கொண்டிருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் முழுமையும் அப்படிச் சொல்ல முடியாது. நேரடியாகவும் மறைமுகமாகவும் சில பதிவுகள் நடந்துள்ளன.சில பதிவுகள் ஒடுக்கப் பட்டோர் ஆதரவு நிலைப்பாட்டையும், சிலபதிவுகள் அவர்களுக்கு எதிரான நிலைபாட்டையும் வெளிப்படுத்தியுள்ளன. அவற்றைச் சில உதாரணங்களைச் சொல்வதன்மூலம் விளக்கி விட முடியும். பாரதிராஜாவின் முதல் மரியாதை, கமல்ஹாசனின் தேவர் மகன்,சேரனின் பாரதி கண்ணம்மா, சுகாசினி மணிரத்னத்தின் இந்திரா போன்றன ஒரு வகையான உதாரணங்கள். கண் சிவந்தால் மண் சிவக்கும், கோவில்பட்டி வீரலெட்சுமி, இரணியன், மனுநீதி போன்றன இன்னொரு வகையான உதாரணங்கள்.
முதல் வகை உதாரணங்கள் ஆதிக்கச் சாதி மனிதர்களுடன் ஒடுக்கப்படும் மனிதர்களுக்கிருந்த நெருக்கமான உறவையும் வேறுபாடற்ற தன்மை யையும் மனிதநேயத் தேன்கலந்து தந்த படங்கள். பெரும்பாலும் ஆதிக்கச் சாதிக்கதாபாத்திரங்களின்கோணத்திலிருந்து சொல்லப்படும் இப்படங்களின் நிகழ்வுகளில் ஒடுக்கப்படும் சாதியைச் சார்ந்த கதாபாத்திரங்களின் தியாகம் முன்னிறுத்தப் பட்டுள்ளன. அத்தியாகத்தை ஆதிக்க சாதிக் கதாபாத்திரம் மதித்து நடந்தது என்பதான சித்திரங்கள் தீட்ட ப்பட்டுள்ளன.முதல் மரியாதையில் செருப்புத்தைக்கும் தொழிலாளி (சக்கிலியன்)யின் பணிவுக்கும் மரியாதைக்கும் ஈடாகப் பெரிய தேவர் (சிவாஜி கணேசன்) தன் உறவுக்காரப்பையனுக்கு அத்தொழிலாளியின் மகளைத் திருமணம் செய்யவும் தயாராக இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. தேவர் மகனில் பெரிய தேவர் வீட்டு வேலைக்காரனான இசக்கி (வடிவேலு), தன் கைவெட்டப்பட்ட பின்பும் விசுவாசமாக இருப்பதாகவும் அதற்கீடாக அவரது மகன் சக்திவேல் அளவுக்கதிகமான அன்பு காட்டு வதாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளது. முதல் மரியாதையும் தேவர் மகனும் சாதி முரணை மையப் படுத்திய படங்கள் அல்ல; அவற்றின் மைய நோக்கம் ஆதிக்க சாதியின் இயல்பையும் இருப்பையும் சொல்ல வந்த படங்கள். ஆனால் சேரனின் பாரதி கண்ணம்மாவும் சுகாசினியின் இந்திராவும் நேரடியாகச் சாதீய முரண்களை மையப்படுத்திய படங்கள்.
ஆதிக்கச் சாதிப்பெண்ணின்( மீனா நடித்த கண்ணம்மா பாத்திரம்)  காதலை ஏற்றுக்கொள்ள முடியாத ஒடுக்கப்பட்ட சாதி இளைஞன்( பார்த்திபன் நடித்த பாரதி பாத்திரம்) அவளது மரணத்தில் உடன்கட்டை ஏறியதன் மூலம் தன் விருப்பத்தையும் அவளது ஆசையையும் நிறைவேற்றினான் என்பதாக வடிவமைக்கப்பட்டிருந்த சேரனின் பாரதி கண்ணம்மா ஓரளவு தமிழ்நாட்டில் நிலவும் சாதி வேறுபாடுகளையும் தீண்டாமை நிகழ்வையும் சுட்டிக்காட்டிய படம் . இந்தப்படத்தின் நோக்கமும் கூடச் சமரசம் தான் என்றாலும் நடப்பில் சாதீய முரண்களும் , மோதல்களும் எத்தகைய வடிவங்கள் எடுக்கக் கூடியன என்பதையும் கோடிகாட்டிய படம் எனலாம்.ஆதிக்க சாதிகளின் வன்முறைக் கெதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் ஆயுதந் தாங்கிப் போராடவும் தயாராவார்கள் என்ற செய்தியும் அப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதேபோல்  இந்திராவும் சாதீய முரணை வேறொரு கோணத்தில் முன் வைத்த படம் என்பதையும் நினைவு படுத்திக் கொள்ளலாம். ஆதிக்கம் செலுத்துபவர்களின் ஆதிக்கமும் வன்முறையும் இனியும் தொடர்ந்து கொண்டிருந்தால் ஒடுக்கப் படுகிறவர்கள் தனி ஊர்களை உருவாக்குவதும் அங்கு  அவர்களது சுதந்திரத்தைப் பேணிக் கொள்வதும் சாத்தியமாக் கப்படலாம் எனக்காட்டியதில் நேர்மறை அம்சமாகத்தோற்றம் தந்த படம் அது. ஆனால் அதன் கதைப்பின்னலில் இருந்த குழப்பமும் தேர்தல் ஜனநாயகத்தில் ஒடுக்கப் படுகிறவர்களின் உரிமைகள் காப்பாற்றப்படும் வாய்ப்புகள் உண்டு எனக்காட்ட விரும்பிய உள்நோக்கமும் சேர்ந்து விடுதலைப் போராட்டங்களுக்கெதிரான நிலைபாடுடைய திரைப்படமாக ஆக்கியிருந்தது என்பதையும் மறந்து விடமுடியாது.

இரண்டாவது வகை உதாரணங்களான கண் சிவந்தால் மண் சிவக்கும்இரணியன், கோவில்பட்டி வீரலெட்சுமி, மனுநீதி போன்ற படங்கள் சாதீய முரண்களை மையப்படுத்தி நடந்த நிகழ்வுகளை நினைவூட்டிய படங்கள் என்ற அளவில் குறிப்பிடத்தக்க படங்கள். இந்நான்கு படங்களில் இரணியன், கோவில்பட்டி வீரலெட்சுமி என்ற இரண்டு படங்களும்  ஆதிக்க சாதி மனிதர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த தனிநபர்களைப்பற்றிய படங்கள்.தனக்கிழைக்கப்பட்ட அநீதிக் கெதிராகக் கொலை, தலைமறைவு வாழ்க்கை, சட்ட ஒழுங்கை மீறுதல் என வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வீரமரணம் அடைந்த இரணியன், லெட்சுமி  என்ற வரலாற்றுக் கதாபாத்திரங்களே இதன் நாயக பிம்பங்கள். தனிநபர் சாகசங்கள் எப்பொழுதும் தமிழ்த்திரையுலகினரின் கவனத்துக்குரிய ஒன்றாகவும் வியாபார வெற்றிக்கு உத்தரவாதம் தரவல்லது என்பதும் நினைவு படுத்திக் கொள்ளவேண்டிய ஒன்றுதான். சீவலப்பேரி பாண்டி என்ற கொள்ளைக்காரனின் கதையைப்படமாக எடுத்த இயக்குநர் ராஜேஷ்வர் தான் கோவில்பட்டி வீரலெட்சுமி படத்தையும் இயக்கினார் என்பதும் கவனத்தில் இருக்க வேண்டியது.அதனால்  இரணியன், கோவில்பட்டி வீரலெட்சுமி போன்ற படங்களை எடுத்தவர்களுக்கு ஒடுக்கப் பட்ட மக்களின் பிரதிநிதியைப் பற்றிய திரைப்படம் எடுக்கிறோம் என்ற தன்னுணர்வு இருந்திருக்கும் என்று சொல்வதற்கில்லை.
இன்று ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்கு முன்னோடியாக இருப்பது வெண்மணி நிகழ்வுகள் எனலாம். 1968 -ல் தஞ்சை மாவட்டம் கீழவெண்மணியில் 42 தலித் விவசாயக் கூலிகள் குடிசையோடு கொளுத்தப்பட்ட நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில் எழுதப்பட்ட நாவல் குருதிப்புனல். இந்திராபார்த்தசாரதியின் இந்த நாவலின் கட்டமைப்பும் நோக்கமும் மாறாமல் திரைப்படமாக எடுத்தவர் ஸ்ரீதர் ராஜன். கண் சிவந்தால் மண் சிவக்கும் எனத் தலைப்பிட்டு எடுக்கப்பட்ட அப்படத்தில் மையமாகக் கூலிப்போராட்டமும் அதனை எதிர்கொள்ளும் நிலக்கிழாரின் பாலியல்சார்ந்த உளவியலும் அதிகம் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தது.

சாதிவேறுபாடுகளும் தீண்டாமையும் கடைப்பிடிக்கப்படும் இந்த சமூக அமைப்பு காதலித்தவர்களுக்குக் கொலையை மட்டுமே பரிசாக வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் புனைவாகவே சொல்லிய படம் மனுநீதி. இந்த நான்கு படங்களும் ஒடுக்கப்பட்டோரின் நிலை குறித்த நியாயமான பதிவுகள் இல்லை என்றாலும் அந்தக்கோணத்திலிருந்து பார்க்கும்போது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படங்கள்.தங்கள் மீது நடக்கும் வன்முறைக் கெதிராக ஒடுக்கப்படும் மக்கள்  போராடினார்கள் ; உயிர்த் தியாகம் செய்தார்கள்; அடிமைகளாகவே இருந்துவிடத் தயாரில்லை எனக் காட்டிய அளவில் இந்தப்படங்களுக்கும் ஒடுக்கப்பட்டோர் விடுதலையில் பங்குண்டு.
ஒடுக்கப்படுபவர்களுக்கெதிரான சித்திரிப்புக்களைத் தரும் படங்கள் எவை யெனப் பட்டியலிடத் தொடங்கினால் அந்தப் பட்டியல் முடிவு இல்லாமல் நீண்டு கொண்டே போகக் கூடும்.தமிழ் நாட்டுக்கிராமங்களில் ஆதிக்க சாதிகளாக இருக்கும் தேவர், கவுண்டர், போன்ற சாதிகளின் பெயர்களைத் தாங்கிக் கொண்டும் பெயர்கள் தாங்காமலும் இடைநிலைச் சாதிகளான நாயக்கர், பிள்ளைகள், முதலியார், பட்டக்காரர், மணியகாரர் போன்ற சாதிகளின் பெருமைகளைப் பேசும் தமிழ்ப் படங்கள் ஒருவிதத்தில் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கெதிரான படங்கள் எனப் பட்டியலிடத்தக்க படங்கள்தான். சின்னக்கவுண்டர், தேவர் மகன்,பொண்ணுமணி, பசும்பொன், கிழக்குச் சீமையிலே, நாட்டாமை, சூரிய வம்சம்,திருநெல்வேலி என அந்தப்பட்டியலில் பலபடங்கள் இடம்பெறக்கூடியன. அதேபோல ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கிடைத்துள்ள இட ஒதுக்கீடு, இலவசக் கல்வி போன்றவற்றிற்கு எதிராக முணுமுணுப்புக்காட்டி விட்டுத் திறமை, தகுதி எனப் பேசத் தொடங்கியுள்ள ஒரே ஒரு கிராமத்திலே, ஜென்டில்மேன், ஆயுத எழுத்து போன்ற புதுவகைப்பிராமணீய முன்னிறுத்தல்களும் கூடக் கவனிக்கத்தக்க வெளிப்பாடுகளே எனலாம்.
இவற்றையெல்லாம் விட அதிகம் கவனித்து விமரிசனத்திற்குள்ளாக்க வேண்டியவை ஒடுக்கப்பட்டோரின் அடையாளங்களோடு உருவாக்கப்படும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களும் அவற்றின் உரையாடல்களும் ஆகும். அச்சித்திரிப்பின் வழி உருவாக்கப்படும் பிம்பங்களும் கருத்தியலும்  கவனமாக விமரிசிக்கப்படவேண்டியன. ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்குச் சாதகமான அமிசங்களும் அவற்றில் உண்டு; எதிர்மறையான கூறுகளும் உண்டு. அதேபோல் நகரத்துச் சேரி இளைஞர்களை நாயகனாகவும் நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கப் பெண்களை அவர்களால் காதலிக்கப்படும் பெண்களாகவும் சித்திரிக்கும் படங்களிலும் நேர்மறை அம்சங்களும் உண்டு; எதிர்மறை அம்சங்களும் உண்டு. விஜய், தனுஷ் போன்ற நடிகர்களுக்காக வடிவமைக்கப்படும் இத்தகைய படங்களின் இலக்குப் பார்வையாளர்கள் ஒடுக்கப்படும் பிரிவினைச்சேர்ந்த இளைஞர்களே என்பதும், அப்படங்கள் அவர்களுக்குப் புனைவான காதல் வாழ்க்கையையும் அதற்காகச் செய்ய வேண்டிய சாகசங்களையும் தியாகங்களையும் பரிந்துரை செய்கின்றன என்பதும் கவனிக்கவேண்டிய ஒன்று. அந்த ஆய்வு தனியாகவும் விரிவாகவும்  செய்ய வேண்டியது எனக்கருதுகிறேன்.
மாற்றுச் சினிமா முயற்சிகள்
அச்சு ஊடகங்களில் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான மாற்றுப் பத்திரிகை முயற்சிகள் தொழிற்பட்டுள்ளது போல ஒடுக்கப்பட்டோர் நிலையைத் தன்னுணர்வுடன் சித்திரித்துக் காட்டும் மாற்றுச் சினிமா முயற்சிகள் இங்கு தொழிற்படவில்லை என்றே கூறலாம்.சில தனிநபர்களின் ஆர்வமேலீட்டால் அல்லது போட்டியில் பரிசு பெறுவது என்பதற்காக எடுக்கப்பட்ட பறை, மாத்தம்மா, பீ  போன்ற விவரணப் படங்களின் வரவை நல்ல அறிகுறிகளாகக் குறிப்பிடலாமேதவிர அவற்றை மாற்றுச் சினிமா முயற்சிகள் என வரையறுத்து விட முடியாது.லீனா மணிமேகலையின் மாத்தம்மாவும் பறையும் அந்தக் கருக்கள் திரைப்படமாக எடுக்கப்பட வேண்டியன என்று கருதிய அளவில் குறிப்பிடப்பட வேண்டியவை.அமுதனின் பீ படம்  பார்ப்பவர்களைக் குற்றவாளிகளாகக் குறுகச் செய்துள்ளது என்ற நிலையில் ஒரு நல்ல முயற்சி.ஆனால் பதினைந்து ஆண்டுக்கால இயக்க நடவடிக்கைகளும் கலைவிழாக்களும் திரைப்படத்துறையில் ஒரு காத்திரமான பதிவுக்கு வழி வகுக்கவில்லை என்பது வேதனைப்பட வேண்டிய ஒன்றுதான். படத்தினை எடுக்கத்திட்டமிடுகிற போதே ஒடுக்கப்பட்ட மக்களை இலக்குப் பார்வையாளர்களாகத் தீர்மானித்து எடுக்கப்பட்ட கௌதம் கோஷின் மாபூமி (தெலுங்கு) போன்று ஒரு முயற்சியோ, ஒடுக்குகின்றவர்களைக் குற்றவுணர்வுக்குள் தள்ளும் காசரவள்ளியின் சோமனதுடி(கன்னடம்) போல ஒரு முயற்சியோ இங்கு இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. அத்தகைய முயற்சிகளை ஒடுக்கப்பட்டோருக்கான இயக்கங்களை நடத்தும் அமைப்புக்கள் தங்கள் பங்களிப்பாக முன்னெடுக்க வேண்டும் என்பது அவசரத்தேவையாகும்.      
முடிவுரை:

ஒடுக்கப்பட்டோர் விழிப்புணர்வையும் விடுதலையையும் பற்றி விவாதிக்கின்ற தனி நபர்களும் இயக்கங்களும் அவற்றை  மைய நீரோட்டத்திற்குள் கொண்டு வரும் நோக்கத்தோடு ஊடகங்களின் இயல்பும் அணுகுமுறைகளும் எவ்வாறு உள்ளன எனக் கணித்துச் செயல்படுவது அவசியமான ஒன்று. கடந்த பதினைந்து ஆண்டுகளில்  திரைப்படங்கள் மற்றும் மின்னலை ஊடகங்கள் ஒடுக்கப்பட்டோர் விழிப்புணர்வையும் விடுதலையையும் முக்கியமான நிகழ்வாகக் கணித்துச் செயல்பட்டுள்ளனவா என்பதை அறிய விரிவான ஆய்வுகள் செய்யப்படவேண்டும்.அத்தகைய நோக்கத்தில் வெங்கடேஷ் சக்கரவர்த்தி, ,ராமசாமி, போன்றோர் சில கட்டுரைகள் எழுதியுள்ளனர்.குமுதம் தீராநதியில்(2004,அக்டோபர், நவம்பர்) வெளிவந்த சக்கரவர்த்தியின் சினிமாவில் சாதியைப் பேசலாமா? என்ற   கட்டுரை சாதியடையாளத்துடன் வந்த திரைப்படங்களின் வரலாற்றைத் தொகுத்துத் தந்துள்ளது.ஊடகத்தில் (1995) அ.ராமசாமி எழுதிய கனவான்களின் பொதுப்புத்தி என்ற கட்டுரை திரைப்பட உள்ளடக்கத் திற்குள்  செயல்படும் ஆதிக்கசாதி மேலாண்மையடையாளங்களைக் கோடிகாட்டியுள்ளது. உயிர்மையில் (2003) வெளியிடப்பட்ட இன்னொரு கட்டுரையான தமிழ்ச் சினிமா: சொல்லப்படுவதும் காட்டப்படுவதும் என்பதில் திரைப்படத்துறை ஒடுக்கப்பட்டவர்களை நுகர்வோராகத் தீர்மானம் செய்துகொண்டு செயல்படத் தொடங்கியிருப்பதை அடையாளப் படுத்தியுள்ளது. அந்த வரிசையில் இன்னும் விரிவான ஆய்வுகள் நடத்தப்படவேண்டியதும் கூட இப்போதைய தேவைதான்.


No comments :