தொலைந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிய கதைகள்
சுஜாதாவை நினைவுகூரும் விதமாக உயிர்மை பதிப்பகம் சுஜாதா அறக்கட்டளையுடன் இணைந்து ஒவ்வொரு வருடமும் நவீன இலக்கியப் போக்குகளை அடையாளப்படுத்தும் படைப்பாளிகளுக்கு விருதுகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. 2014 இல் அதன் ஆறாவது ஆண்டு நிகழ்வில் சிறுகதைக்கான விருதைப் பெற்றுள்ளது என் ஸ்ரீராமின் மீதமிருக்கும் வாழ்வு என்ற சிறுகதைத் தொகுப்பு. கதைகள் எழுதப் பெற்ற முறையிலும் சரி, அளவிலும் சரி ஒரு சிறுகதைத் தொகுப்பின் வரையறைகளைத் தவிர்த்துள்ள தொகுப்பு இது. மொத்தம் 80 பக்கங்கள். கூறு, மீதமிருக்கும் வாழ்வு, விசுவாசம், மூன்று மழைக்காலங்கள் என 4 கதைகள் . இந்தத் தொகுப்பை இந்த ஆண்டின் சிறந்த தொகுப்பாக நான் தேர்வு செய்யவில்லை. ஆனாலும் வாசிக்கத் தக்க / வாசிக்க வேண்டிய கதைகளைக் கொண்ட தொகுப்பு எனச் சொல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.