கலை அடையாளங்களும் காமத்தின் ஈர்ப்பும்
கலைகளில் ஒன்றை உருமாற்றம் செய்து ஒரு மொழி சார்ந்த குழுமத்தின் அல்லது நிலம் சார்ந்த பண்பாட்டின் அடையாளமாக மாற்றமுடியும் என்பதை இந்திய மாநிலங்களின் கலை பண்பாட்டு அமைப்புகள் செய்து காட்டியுள்ளன. தமிழ்நாட்டின் பண்பாட்டு அமைப்புகளும் பல்கலைக்கழக அழகியல் சார்ந்த துறைகளும் அதனைச் செய்ய முயற்சிக்கவில்லை என்றே தோன்றுகிறது. நாடகம், நடனம், இசை, இலக்கியம் எனப் பலவற்றில் நாம் இத்தகைய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
தமிழ் பேசும் ஈழத்து நாடகக்காரர்கள் குறிப்பாக மட்டக்களப்பு விபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவனத்தில் ‘இன்னியம்’ என்ற அணிவகுப்புக் கலையாக ஓர் அடையாளத்தை ஆக்கியிருக்கிறார்கள். முன்னோடியாக அதனைச் செய்த நாடகக்கார ர் பாலசுகுமார், இப்போது புலம்பெயர்ந்த நாடுகளிலும் அதனை உருவாக்கிக் காட்டிக்கொண்டிருக்கிறார். நானே பாலசுகுமாரின் பயிற்சிகளையும் நிகழ்வுகளையும் இலங்கையிலும் நார்வேயிலும் பார்த்திருக்கிறேன். அண்மையில் கூட மட்டக்களப்பு பயணத்தின்போது மோகனதாசன் அளித்த ஒத்திகைகளைக் கண்டதுண்டு.
தமிழ்நாட்டில் தங்களுக்கானதை உருவாக்காமல் அண்டை மாநில அடையாளங்களை ஏற்றுக் கொள்வதைத் தமிழர்களின் தாராளமன நிலை என்று சொல்லலாம். அல்லது புத்தாக்கத்திற்குத் தயாரில்லாத சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடு என்றும் சொல்லலாம். தமிழ்நாட்டின் திருமண நிகழ்ச்சிகளில் கேரளத்துச் செண்டெ மேளத்தின் ஓசையையும் ஆட்டத்தின் அசைவுகளையும் 10 ஆண்டுகளுக்கு முன்பே கேட்டிருக்கிறேன்; பார்த்திருக்கிறேன். அது தனிநபர் விருப்பமாக இருந்தது மாறி, தமிழ்நாட்டுத் தமிழர்களின் குடும்ப விழாவிலும் ஊர்த்திருவிழாக்களிலும் இடம்பெறும் ஒன்றாகச் செண்டெ மேளம் பங்களித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது அரசு விழாக்களின் ஆரம்பம், விருந்தினர் வரவேற்பு அணிவகுப்பு, கல்வி நிறுவனங்களின் இளையோர் விழாக்கள் எனத் தமிழ்நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவே மாறிவிட்ட து. அயலவர் அடையாளம் என்று தள்ளிவைக்காமல் ஏற்றுக்கொண்ட தமிழ்த் திரள் உளவியலின் நீட்சியாக ஓணம் பண்டிகையும் இப்போது மாறிக் கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களில் ஓணம் பண்டிகைப் பதிவுகள் தமிழ்க்குடும்பங்களில் காட்சிப்படுத்தும் ஒன்றாக இருக்கின்றன. இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் இதைப் பார்க்க முடிகின்றது. செண்டெ மேளம் கேரளத்தின் வன்மையின் முரண்நிலை ஈர்ப்பு என்றால் ஓணத்தின் மீதான ஈர்ப்பு மென்மையின் முரண்நிலை மோகம்.
மெல்லின ஓசை கொண்ட மூக்கொலிகளால் பேசும் ஆண்களின் குரலோடு
தமிழ்ப் பெண்களுக்கும் பொன்னிறத் தோலின் வனப்போடு கூடிய கேரளப் பெண்களின்
உடல்மீது தமிழ் ஆண்களுக்கு உள்ளார்ந்த ஈர்ப்பொன்றிருக்கிறது.
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே எனக் கவி பாரதி உருவாக்கிய படிமம் அது. மலையாள சினிமாக்களின் வழியாக உறுதிப்படுத்தப்பட்ட படிமங்கள் இவை. மோகத்தின் – காமத்தின் காரணமாக இருக்கும்
பெண்ணுடல் மென்மையானது என நம்புவது பொது உளவியல். அந்நினைப்பைத்
தூண்டும் தோலின் நிறமும், பின்னப்படாத கூந்தலின் விரிவும் என முரண்படும்
வண்ணச்சேர்க்கையின் படிமமே கேரளப் பெண்களின் வெளிப்பாடாகப் படிந்திருக்கிறது தமிழ்
ஆண்களிடம். ஈரம் சொட்டுவதைப் போல மினுமினுக்கும்
கூந்தலுக்கு நறுமணம் கூட்டும் வாசனை இருப்பதாக நம்பவும் செய்கிறது அப்பொது மனம். அதனை மிகுவிக்கும் இயல்போடு அவ்வுடல் மீது பொருந்திப் போவதுபோல
பொன்னிறங்கூடிய சேலைகளுக்கு, அடர்த்திய கூடிய ஓரப்பட்டைகள் உருவாக்கும் வண்ணக்கலவை
இன்னொரு முரண் அழகியலின் சேர்க்கையாக மாறிக்கொள்கிறது. பெண்ணுடலும்
உடல் மீதான ஆடைகளின் வண்ணக்கலவையின் முரண் மட்டுமல்லாமல்,
அதிகமும் மூக்கொலிகளால்
பேசும் மலையாள மொழியும் சேர்ந்து, மாபலிச் சக்கரவர்த்தியைத் தண்டிக்க, வாமன
அவதாரம் எடுத்த திருமாலின் அவதாரக்கதையைத் தமிழர்களிடம் கொண்டுவந்து சேர்க்கவில்லை.
அதற்குப் பதிலாக ஓணம்
பண்டிகையை கேரளப் பெண்களின் உடல் வெளிப்பாட்டோடு இணைத்துப் பார்த்துக் குதூகலிக்கும்
ஒன்றாகத் தமிழ்த் திரளை
மாற்றியிருக்கிறது.
வெளியிலிருந்து வரும் உணவு, ஆடைகள், கலைகள் போன்றவற்றை ஏற்கும் மனநிலையை எதிர்கொள்ளும் பலரும், ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்ற பழமொழியைச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். செண்டெ மேளத்தைத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டதாகப் பலர் சொல்வதைப் பலரும் கேட்டிருக்கலாம். ஆனால் அப்படிச் சுருக்கிப் பார்த்துக் கொள்ளக்கூடாது. வல்லோசை அடுக்குகளை உருவாக்கும் தாளக்கட்டுகள் கொண்ட செண்டெ மேளம் அதன் தாளக்கட்டுகளால் மட்டுமே தமிழ்நாட்டிற்குள் தாக்கம் செலுத்தியது என்றும் சொல்லப்பட்டது.
செண்டெ மேளத்தின் அழகியல் இருப்பும் செய்யப்பட்ட மாற்றங்களுமே சமகாலக் கேரளத்தின் அடையாளமாக மாற்றியது. செண்டெ மேளம் வாசிக்கும் கலைஞர்களின் உடல் அசைவுகளின் செக்குத்து அசைவும், கிடைநிலைப் பரவலும், கைகளில் இருக்கும் கோள்கள் உருவாக்கும் காட்சி வேகமும் என்பது அதன் காட்சி அழகியல் . அக்காட்சி அழகியலை மிகுவிப்பதுபோலப் பங்கேற்கும் கலைஞர்கள் அணியும் ஆடைகளில் மென்மையும் வன்மையும் என இரட்டை நிலைக்கலவை உருவாக்கப்பட்டுள்ளது. அதிகமான வண்ணங்கள் இல்லாமல் வேறுபாட்டைத் துல்லியமாகக் காட்டும் பரப்பு அதன் வெளிப்பாடு. ஆடையற்ற ஆண்களின் பாதி உடலும் கூடிய வன்மையின் திரட்சியாகவே இருக்கும்.
இவ்வகை வெளிப்பாட்டின் ஈர்ப்பை ஆண் உடல் சார்ந்த வன்மையின் தாக்குதல் எனச் சொல்லலாம். இவையெல்லாம் சேர்ந்தே அதனைத் தமிழ்த் திரளுக்குள் நகர்த்தியிருக்கிறது. எதிரெதிர் நளினத்தோடு கூடிய ஆணுடலின் காட்சிப்படுத்தல் தமிழின் நாட்டார்கலைகளில் குறைவு. கரக ஆட்டம், கும்மியாட்டம், காவடி ஆட்டம், ராஜாராணி ஆட்டம், கணியான் ஆட்டம், சேவையாட்டம், பொய்க்கால் குதிரை, சிலம்பு ஆட்டம், தெருக்கூத்து எனப் பலவகையான ஆட்டங்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆடப்படுகின்றன. தமிழ்நாட்டு ஆட்டங்களில் இருக்கும் வண்ணக்கலவை நெருக்கம் கூடியது. சிறியதும் பெரியதுமாகப் பலவண்ணங்களின் சேர்க்கையால் ஆனது. பாடல்களோடு கூடிய ஆட்டங்களில் மணிக்கச்சம், தாளக்கட்டு, இசைக்கருவிகளின் கலவை எனத்தனியாக அடையாளப்படுத்த முடியாத சேர்க்கை . இதனை ஒழுங்குபடுத்திப் புதிய பார்வையாளர்களுக்கான மாற்றும் முயற்சியில் இங்கு நாடகக்காரர்கள் இறங்கவில்லை. இவை எல்லாவற்றின் பொதுக்கூறுகளை உள்ளடக்கிய நவீன ஆட்டம் ஒன்றை உருவாக்கவோ, இருப்பதில் ஒன்றைத் தமிழ்நாட்டின் அடையாளம் ஆக்கவோ தமிழகப்பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களும், தமிழ் நாட்டில் இயங்கும் இயல் இசை நாடகமன்றமோ முயற்சி எடுக்கவில்லை. ஆனால் கேரளத்தில் தொடர்ந்து செய்தார்கள்.
கருத்துகள்