ழான் க்ளோத் இவான் யர்மோலாவுக்கு அஞ்சலி
ஊடக நண்பர்களே!
ஒவ்வொருவரும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரிந்திருந்த போதிலும் இந்தத் தகவலைச் சொல்லாமல் மறைப்பது சரியாக இருக்காது.
நமது அருமை நண்பன் ழான் க்ளோத் இவான் யர்மோலா (1918 - 2014) தனது தொண்ணூற்று நான்கு முடிந்து தொண்ணூற்றைந்து நடந்து கொண்டிருக்கும்போது இறந்து விட்டான் என்பதை உறுதியான தகவலின் வழியாக உறுதி செய்கிறேன்.
சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு நமது ஊடகம் இதழுக்காக விரிவான நேர்காணலை வழங்கிய அவனுக்கு ஒரு அஞ்சலிக் கட்டுரையை எழுதுவது நம்முடைய
கடமை. நம்மில் யார் அந்தக் கடமையைச் செய்வது என்று தீர்மானிக்கும் பொறுப்பை வழக்கம்போல்
உங்கள் ஒவ்வொருவரிடமும் விட்டுவிடுகிறேன். என்னுடைய பொறுப்பு, நீங்கள் எழுதியனுப்புவதைத்
தொகுத்து வெளியிடுவது மட்டும் தான் என்பதை நான் மறுக்கவில்லை. அல்லது வெளியாள் பங்கேற்பாக(out
sourcing) யாராவது ஒருவர் நீண்ட அஞ்சலிக் கட்டுரை எழுதி வைத்திருந்தால் வாங்கிப் போடலாமா?
நீங்களே அப்படியொன்றை வாங்கி அனுப்பினால் ஏற்றுக் கொள்வதில் எனக்கு ஆட்சேபணை இல்லை.
அஞ்சலிக் கட்டுரைக்குப் பதிலாகக்
கவிதை தான் வெளியிட வேண்டுமென்றால் அதை மற்றவர்களிடம் வாங்கிப் பிரசுரம் செய்வது யர்மோலாவுக்கு
மரியாதையாக இருக்கலாம்; ஆனால் கவிதைக்கு மரியாதையாக இருக்காது. தங்களுக்கு ஒருவரும்
கண்ணீர் அஞ்சலிக் கவிதைகள் எழுதாதால் நம்முடைய
பிசாசுகளும் பேனாவை எடுக்க மறுக்கின்றன. எனவே, ஆசிரிய உரையாகச் சில சொற்களைச் சொல்ல
விரும்புகிறேன்.
ஏக்கங்களின் ஆய்வாளன் யர்மோலாவின் நோபெல் கனவு
ஏக்கத்திலேயே முடிந்துவிட்டது.
ஆமாம் நண்பர்களே அந்த ஏக்கத்தையே
எனது குறிப்புகளாகத் தர விரும்புகிறேன். அதனைத் தொடர்ந்து ஊடகத்தில் நாம் வெளியிட்ட
குறிப்புகளையும் நேர்காணலையும் ஒரு தொடராக முகநூலில் பதிவேற்றம் செய்யலாம் என நினைக்கிறேன்.
உங்களது அஞ்சலிக் கட்டுரைகளும் மொழிபெயர்ப்புகளும் வந்து சேர்ந்தால் ஊடகத்தைத் திரும்பவும்
அச்சில் கொண்டுவருவதைப் பற்றி நாம் கூடிச் சிந்தித்து முடிவு எடுக்கலாம்.
இந்த ஆண்டின் தத்துவத்திற்கான
நோபெல் விருதுப் பட்டியலில் யர்மோலா பெயர் இருந்தது. எனவே, அதைப் பெற்றுக் கொண்டு அவன்
ஆற்ற இருந்த உரையைக் கைப்பட எழுதி பிடிஎப் வடிவில் அனுப்பி வைத்துள்ளான். அதைக்கூட
அவனது நினைவாக வெளியிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அவன் இந்த முறை பிரெஞ்சிலும் எழுதவில்லை;
ஜெர்மானிய மொழியிலும் எழுதவில்லை. நேரடியாக நார்வேஜியனில் எழுதியிருப்பதால் ஓஸ்லோவிலிருக்கும்
புலம் பெயர்ந்த நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவரும் அவரது நார்வேஜியக்
காதலியின் உதவியுடன் விரைவில் தமிழாக்கித் தருவதாக உறுதி அளித்துள்ளார். அமைப்பியல்
கோட்பாடுகளைக் கொண்டு ஸ்லோவாக்கிய நாடுகளின் மொழி மற்றும் அரசியல் உறவுகளை ஆய்வு செய்து
புகழ்பெற்ற க்ராக்கோ பல்கலையில் யர்மோலா அளித்த ஆய்வேட்டிற்கும், அதன் மீது நடந்த பொதுவாய்மொழித்
தேர்வுக்கும் நிகழ்த்துகலை அல்லது நிலவியல் இயங்கியல் என்னும் துறைக்கான நொபெல் விருது கிடைக்கும் என 1999 இல் சொல்லப்பட்டது. அந்த விருதைக்
கொடுத்து ஒரு ‘கலைஞனைக் கொல்ல விரும்பவில்லை’
என விருதுக் குழு எடுத்த முடிவால் யர்மோலா ஏமாற்றத்திற்குப் பதிலாக உற்சாகமே அடைந்தான்.
ஏனென்றால் அவன் தன்னை ஒரு கலைஞனாகவே நிலைநிறுத்திக் கொள்ள விரும்பி யிருந்தான். அப்போதிருந்து
ஆரம்பித்து, யோசித்து உருவாக்கிய இன்னொரு உரையை
- யூ ட்யூப்- பில் பதிவு செய்து வைத்திருந்தான். 2003 இல் டான் நதிக்கரையோரக்
குடில் ஒன்றில் அமர்ந்து பதிவு செய்து நிலக்காட்சிகளை பற்றிய குறிப்புகளையும் தனியாக
எழுதி வைத்திருந்தான். ஆஸ்திரியத் தலைநகரிலிருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் மலைச்
சுரங்கம் ஒன்றில் 3 மாதம் தங்கித் தன் பழைய நண்பனின் -ஹிட்லரின் நினைவுகளில் மூழ்கி
இருந்தபோது எழுதிய கவிதைகளை டச்சு மொழியிலும், அச்சுரங்கத்தி லிருந்து சுரண்டி எடுக்கப்பட்ட
துத்தநாகத்தையும் மெழுகையும் குழைத்து உருவாக்கிய “போர்க்காலக் கூட்டு வாழ்க்கை” என்னும்
சிற்பத்தையும் தடை செய்யாமல் வெளியிட வேண்டும் என கோபன் ஹேகனின் மணல் சிற்பத் திருவிழாவின்போது
ஆற்றிய சிறப்புரையில் கேட்டுக் கொண்டான். கலைஞனாக அங்கீகரித்து விருதளிக்க இதுவே போதும்
எனவும் நினைத்துக் கொண்டிருந்தான். கலைஞனுக்கான விருதைத் தட்டிக் கழிக்க விரும்பிய
குழு யர்மோலாவை இந்த யுகத்தின் ஒப்பற்ற தத்துவஞானி என்று கௌரவிப்பதே சரி என்று கூறிவிட்டது.
ஏக்கங்களின் பரிமாணங்களைப்
பற்றிய ஆய்வுகளை விரிவாகச் செய்த யர்மோலாவின் நோபெல் கனவு ஏக்கத்திலேயே முடிந்துவிட்டது.
ஊடகத்தில்
அவனைப் பற்றி அச்சிட்ட குறிப்புகள் இனி:
ழான் க்ளோத் இவான் யர்மோலா (1918 - )
கலைஞனா?
மொழியியல்
வல்லுநரா?
தத்துவவாதியா?
கலாசாரக்
குறியீட்டாளரா?
எப்படி
இவரை
விவரிப்பது
என்று
தெளிவாகத்
தெரியவில்லை.
இருந்தாலும்
ஆதியிலிருந்து
துவங்கி
முயற்சித்துப்
பார்க்கலாம்.
1918 இல்
கார்ஸிகாவில்
தன்வயப்பட்ட
வறுமை
சார்ந்த
பிரஞ்சு
குடும்பத்தில்
பிறந்தவர்.
தந்தை
புகைபோக்கி
துடைப்பவராக
வேலை
பார்த்தவர்.
தாய்
தெருக்களில்
மலர்கள்
விற்றவர்.
‘ புகைக்கும்
மலர்களுக்கும்
இடையே
மூச்சுத்திணறியவனாய்ச்
சிறுவயதிலேயே
வீட்டை
விட்டு
வெளியேறி
விட்டேன்’ என்று ஒரு பேட்டியில் ( ENCOUNTER/ APRIL/63) குறிப்பிட்டிருக்கிறார். வீட்டை விட்டு வெளியேறியவர் பிரான்ஸுக்குச் சென்றார்(ஓடினார்). உடலுறவு தொழிலாளர்களின் கைத்தடியாக இவர் பாரீஸ் வீதிகளில் அலைந்த காலகட்டத்தில் பிரெஞ்சுக் கவிஞரான ஹான்றி மிஷோவின் நட்பு கிடைத்தது. ஹான்றி மிஷோ இவர் படிப்பதற்கு உதவி செய்தார்.
1930 களில் ஹான்றி மிஷோவுடன் ஒரு முறை இந்தியாவுக்கு, தமிழ்நாடு வரை வந்திருக்கிறார். ஆனால் அப்பயணத்திற்குப் பிறகு ஹான்றி மிஷோ எழுதிய A BARBARIAN IN ASIA என்ற நூலில் இவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. 1930 களில் எல்லாரும் ஜெர்மனியை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த காலத்தில் இவர் ஜெர்மனிக்குச் சென்றார். 1950 வரை இவர் ஜெர்மனியில் கழித்த நாட்களைப் பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. யூதர்களுக்கான வதை முகாம்கள் நடத்தியவராகவும், நாஜிகளுடன் நெருங்கிய தொடர்புடைய வராகவும் இருந்தார் என்றும் பலர் கூறுகின்றனர்.( ஹிட்லரின் பேச்சுக்களை எழுதியவர் இவர்தான் என்றும் கூறுகிறார்கள்) ஆனால் நுரெம்பர்க் விசாரணைகளின் போது இவர் மீதான எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. 1957 இல் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக FACINATING FACISM: A RADICAL HUMANISM என்ற தலைப்பில் இவர் சமர்பித்துப் பின்னர் நூலாக வெளிவந்த போது ( TRANSLATION IN ENGLISH / BOSTON UNIVERSITY PRESS/1963) மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. 1960 களில் ஆரம்பத்தில், கியூபாவுக்குச் சென்றார். காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பராகவும் மாறினார். 1964 இல் ஓர் அமெரிக்கப் பெண் பத்திரிகையாளர் ஒரு பேட்டியில் காஸ்ட்ரோ, ‘ வரலாறு உன்னை விடுதலை செய்யும்’ என்று கூறியதைப் பற்றிக் கேட்ட கேள்விக்கு, “ காஸ்ட்ரோ வரலாறு வேண்டுமானால் ஒருவேளை உன்னை விடுதலை செய்யலாம்; ஆனால் புவியியல் நிச்சயமாக அதைச் செய்யப் போவதில்லை” என்று இவர் குடிவெறியில் கூறிய பதில், மறுமாதம் இவரைப் பிரெஞ்சு தூதரகத்தில் தஞ்சம் புக வைத்தது. கியூபாவிலிருந்து அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளுக்குச் சென்றுவிட்டு 1967 இல் பாரிஸ் திரும்பிய இவர், 1968 இல் நடந்த கொந்தளிப்பில் முழுமையாகப் பங்கு கொண்டார். (நடு இரவில், பாரிஸ் லத்தீன் குடியிருப்பின் வீதிகளில் உரக்க அலறிக் கொண்டு ஓடியதும், வீடுகளின் கதவுகள் கழற்றியதும் இவர் தலைமையிலான ஒரு மாணவர் குழு தான்.)
1971 இல் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பதவி பெற்றார்(மொழி அரசியலுக்கு உரிய பேராசிரியராகப் பணி புரிந்தார்) இக்கால கட்டத்தில் இவர் எழுதிய ESCAPE FROM STRUCTURALISM என்ற நூல், உலகப் பல்கலைக்கழக வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது (TRANSLATION IN ENGLISH / CHICAGO UNIVERSITY PRESS/1976) 1977 இல் இவர் எழுதிய மற்றொரு புத்தகம் தெரிதாவின் ஆடைகளை அவிழ்த்தல் ஒரு காமக் குளறுபடி UNDRESSING DERRIDA: AN EROTIC CHOAS- ( TRANSLATION IN ENGLISH / THE
FREE PRESS/ A DIVISION OF MACMILLAN/ INC/ NEWYORK-1980). 1970 களின் இறுதியில் தான் ஐரோப்பிய மொழிகளால் களைப்படைந்ததாக கூறும் இவர் செக் தமிழ் அறிஞர் கமில் சுவலபில் மூலமாகத் தமிழ் கற்றுக் கொள்ளத் துவங்கினார். ‘ தமிழ்ச்சமூகம் இரண்டாயிரம் ஆண்டுகளாக சுமந்து கொண்டிருக்கும் ஒடுக்கு முறை மரபு மரணமென எனை ஈர்க்கிறது’ என்று கூறுகிறார். 1980 களின் ஆரம்பத்திலிருந்து இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை, தொடர்ந்து தமிழ் நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார். தற்போது பிரான்சில் வசிக்கவில்லை. ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில், A PATTERNS OF MARGINAL/PRACTICAL THOUGHT SYSTEMS என்ற சிறப்புத் தலைப்பின் கீழ் பல்கலைக்கழகப் பேராசிரியராக -UNIVERSITY PROFESSOR- இருக்கிறார். கடந்த மாதம் தமிழ் தொழுநோயாளிகளின் பாடல்களைத் தொகுத்து FACTAL GEOMETRY மற்றும் CATASROPE THEORY அடிப்படையில் ஆராய்ச்சி செய்வதற்காக தமிழ்நாடு வந்திருந்தார்.
சென்னைக்கும் செங்கல்பட்டுக்கும் இடைப்பட்ட நெடுஞ்சாலையின் ஓர் ஓரப்பகுதியில் அமைந்திருக்கும் சிறிய தொழுநோயாளிகள் குடியிருப்பில் தங்கி பாடல்களை சேகரித்து கொண்டு இருந்த இவரை சில ஊடக நண்பர்கள் சந்தித்து (நண்பர்கள் அரசுத்துறைகளில் வேலை பார்ப்பவர்கள் பெயர் தரப் பயப்படுகின்றார்கள்) உரையாடினர்
பிற்பகல் இரண்டரை மணியிலிருந்து எட்டு மணிவரை உரையாடல் நடைபெற்றது. மடக்கப் பட்ட விரல்கள் மூலமான சைகைகளுடன் மிக மென்மையாகப் பேசுகிறார் யர்மோலா. தமிழ் மெதுவாகப் பேசினால் புரிந்து கொள்கிறார். உரையாடலின் போது தொடர்ந்து பீடி ( கணேஷ் பீடி) புகைக்கிறார் யர்மோலா. சப்பாத்தி வர்ணத்தில் சட்டை அணிந்திருக்கிறார். பீடிச் சாம்பலை உள்ளங்கையில் சுட்டிக் கொள்கிறார். பெரும்பான்மை ஆங்கிலத்தில் நடந்த உரையாடலின் சில பகுதிகள் கீழே தமிழில் தரப்பட்டுள்ளன.
மன்னிக்கவும். முக்கியமான ஒரு தகவல் விடுபட்டு விட்டது. அது இங்கே. 1930 களில் பாரிஸில் அந்தோனின் அர்த்தோ நிகழ்த்திய நாடகங்களில் நடித்துமிருக்கிறார் யர்மோலா. இனி உரையாடலிலிருந்து சில பகுதிகள்:
நேர்காணல்:
உங்கள் தனிப்பட்ட
ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றிக் கூறமுடியுமா?
என்னுடைய வாழ்க்கை சுவாரஸ்யமானதல்ல. அதைத் தெரிந்து கொள்வதன்
மூலம் என்னைப் பற்றி மட்டுமல்ல எதனைப்பற்றியும் நீங்கள் ஒரு முடிவுக்கு வர முடியாது.
அது சுவாரஸ்யமானதாக இல்லை என்பதாலேயே அதை நான் மறைப்பதுமில்லை. அதைப் பற்றிக் கூறுவதுமில்லை.
நான் வாழ்ந்த ஒவ்வொரு நாளையும் அடுத்த நாளால் நிராகரிக்க முற்படுகிறேன். அதே சமயம்
எந்தவொரு இருமை எதிர்வுகளுக்குள்ளும் நான் சிக்கிக் கொள்ளாமலிக்கவும் விரும்புகிறேன்
ஹிட்லரோடு உங்களது நெருக்கம் பற்றிப் பேசப்படுவதெல்லாம் உண்மைதானா?
போர்க்காலக் குற்றங்களுக்காக நான் தண்டிக்கப் பட வேண்டும்
என்பது உங்கள் விருப்பமா.? ஹிட்லர் விளைவித்த மரணங்களுக்காக நான் தண்டிக்கப்பட வேண்டுமென்றால் இன்று உலகில் நிகழும் கொலைகளைச்
செய்தியாகக் கூட தெரிந்து கொள்ள விரும்பாத ஒவ்வொரு மனிதரும் தண்டிக்கப் பட வேண்டும்.
போஸ்னியாவில், எத்தியோப்பியாவில், ஏன் உங்கள் அருகாமையில் உள்ள இலங்கையில் நடக்கும்
படுகொலைக்காக ஐ.நா. செயலரைத் தண்டிக்க வேண்டுமா? வேண்டாமா? நான் ஒரே துருவ ( ) உலகத்தை வற்புறுத்தும் நோக்கில்
இதைக் கூறவில்லை. அமைதி என்பது அதிகாரம் உள்ளவர்களால் திணிக்கப்படுகிற ஒன்று என்ற அர்த்தத்திலும்
இதைக் கூறவில்லை
அப்படியானால் ஹிட்லரோடு நீங்கள் உடன்படவில்லையா? தேசிய கீதமெல்லாம்
எழுதித் தந்தீர்களென நாங்கள் அறிந்திருக்கிறோம்.
தேசிய கீதம்.. அது ஒரு பெரிய ஜோக். நான் அன்றைய ஜெர்மனியைக் கேலி செய்து எழுதிய கவிதை. அவன் பாராட்டுவதாக நினைத்துக்
கொண்டு தேசிய கீதமாக்கி விட்டான் . யார் கண்டது உங்களது தேசிய கீதம் கூட அப்படிப் பட்டதாக
இருக்கலாம். அதைக் கட்டவிழ்த்துப் பார்க்கும்போது
உங்களுக்குச் சிரிப்பு வராமல் இருந்தால் நீங்களும் நாஜியென நான் சொல்வேன்.
நீங்கள் ஜெர்மனிக்குப் போனது உண்மையில் நடந்தது தானே ,,?
நான் 1938 –ன் இலையுதிர் காலத்தில் பெர்லினுக்குச் சென்றது
கவிதை எழுத என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். பெர்லின் நகரின் இருள் பொதிந்த
சந்துகளில் அலைந்தபடி, இரவு கஃபேக்களிலும், நெடுஞ்சாலை சுரங்கப் பாதைகளிலும் இரவைக்
கழித்தேன்.கவிதை எழுதக் காகிதமும், எழுதுகோலும் வாங்கக் காசில்லாததால் – எழுத வேண்டிய ஆயிரக்கணக்கான வரிகளை எனது மூளையில் பதிந்து வைத்திருந்தேன்.
காசுக்காக, ஓவியக் கடைகளில் தூரிகைகளைத் திருடித் தன்னார்வ ஓவியர்களிடம் விற்றுப் பிழைத்துக்
கொண்டிருந்த போதுதான் ஜெர்மானிய கட்டிடங்களை வரைந்து கொண்டிருந்த ஹிட்லர் பழக்கமானான். தூரிகைகளை வாங்க அவனிடம் காசில்லாததால்,
அதற்குப் பதிலாக எனது கவிதைகளை அவனுடைய கேன்வாஸின் வெட்டப்பட்ட பகுதிகளில் படியெடுத்துக்
கொடுத்திருக்கிறான். அந்த இலையுதிர் காலத்தில் ஆரம்பித்த நட்பு, ஹிட்லர் ரஷ்யாவின்
மீதான ஆக்கிரமிப்பு உத்தரவில் கையெடுத்திடும் கணம் வரை உயிர்த்திருந்தது. எந்தவொரு
சிந்தனையும் அது தோற்றம் கொள்கிற இடத்தில் அதன் சக்தி வெடித்து வெளிக்கிளம்பும் இடத்தில்
சென்று பார்க்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம். எந்தவொரு சிந்தனையையும் அதைச் சிறைப்படுத்தி
வைத்துள்ள புத்தகங்களின் பக்கங்களிலிருந்து மட்டுமே தெரிந்துகொள்ள முடியாது. அந்தச்
சிந்தனை தன்னை தனது சக்தியை வெளிப்படுத்துகிற நிகழ்வுகளை அருகிலிருந்து பார்க்க வேண்டும்.
அந்தச் சிந்தனைக்குச் சார்பாகவோ எதிராகவோ நடத்தப்படும் போராட்டங்களைக் கவனிக்க வேண்டும்.
இது.. இதுதான் என்னை ஜெர்மனிக்குப் போக வைத்தது. இங்கேயும் வரவைத்தது.
பொருளாதாரரீதியாகவும், அரசியல்ரீதியாகவும்
விளிம்புக்குத் தள்ளப்பட்ட ஒரு பிரதேசம் - தமிழ்நாடு- சமூகரீதியில் விளிம்புக்குத்
தள்ளப்பட்ட மனிதர்கள் - தொழுநோயாளிகள் - உங்கள் தேர்வு வியப்பு தருவதாயிருக்கிறது.
சிதைந்து
பரவிக் கொண்டும் சேர்ந்து இறுகிக் கொண்டும் உள்ள பிரபஞ்சத்தில் விளிம்பு, மையம் என
எதுவுமே தீர்மானமில்லை. அமைப்பியல் சிந்தனையின் அடிப்படைகளை முதன்முதலில் உலகுக்கு
வழங்கிய மொழி - இப்படித்தான் தமிழின் - மீதான ஈர்ப்பு துவங்கியது. சென்னை பெசண்ட் நகரிலுள்ள
ஒரு சல்லாப விடுதியொன்றில் நான் சந்தித்த பிம்ப் -ஒருத்தியின் மூலம்தான் எனக்குத் தமிழ்த்
தொழுநோயாளிகளுடன் பழக்கமேற்பட்டது. கணுக்கால்வரை தொழுநோயால் கரைந்து போயிருந்த ஒருவனை
அவள் தன் கணவனென்று எனக்கு அறிமுகப்படுத்தினாள். மெல்ல அழுகி உதிர்ந்து கொண்டிருந்த
அவனது தொழுநோய் உதடுகள் மூலம் உயிர்த்துக் கொண்டிருந்த அவனது தொழுநோய் உதடுகள் மூலம்
உயிர்த்துக் கொண்டிருந்த தமிழ்மொழியின் வசீகரத்தில் ஆட்பட்டு, ஒருவித மிதப்பில் அவனுடன்
செங்கல்பட்டுக்குப் பக்கத்திலுள்ள அந்த தொழுநோயாளிகள் குடியிருப்புக்குச் சென்றேன்.
நிலவின்
ஒளியற்ற இருள் இரவுகளில் தங்களது கூடாரங்களுக்கு வெளியே கூட்டமாக அமர்ந்தவாறு அவர்கள்
பாடுவதைக் கேட்பது எனக்குப் பிடித்தமானது. பாடல் சத்தத் துணுக்குகளுக்கும், இருட்டின்
அசைவுகளுக்கும் இடையே அலைந்து கொண்டிருக்கும் கஞ்சாபுகை நெருப்பு முனைகளுடன் அவர்களது
மொண்ணை விரல்கள், பாடலினூடே அழுகி ஒழுகும் புண்ணின் வலி உச்சத்தை அடையும்போது, எரியும்
சுருட்டின் ஒளிர் நெருப்புச் சுடரால் புண்ணில் வைத்து அழுத்திக் கொண்டு, அந்த வலியானந்தத்தில்
பாடும் அவர்களின் குரல் பரிமாணங்கள் விரிவடைவதைக் கேட்கும்போது கம்யூட்டர் இசையின்
போலித்தனம் எனக்கு ஞாபகத்தில் உரசும்
தொழுநோயாளிகளின்
மனோநிலை எனக்கு வியப்புத் தருவதாயுள்ளது. தங்களின் அழுகிச் சிதையும் உடலுக்கு எதிர்நிலையில்,
எதிர்விசையில் அவர்களது மனம் இறுகி, உறுதியாய் நிற்கிறது. அழிவை, மரணத்தைக் கடந்த ஒரு
மனோநிலை, அவர்களது அந்த மனோநிலை பாடல்களில் கசிகிறதா எனப் பார்க்கிறேன்.
தமிழ்நாட்டு அரசியல் சூழல் பற்றி
உங்கள் அபிப்பிராயம் என்ன/
இங்கே
ஆளுபவர்கள் ஏக்கத்தின் இடத்தை அதிகாரத்தால் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆளப்படுபவர்கள்
அதிகாரத்தின் இடத்தை ஏக்கத்தால் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். மிக அருகாமையில் ஏராளமான
உதாரணங்களிருக்க உங்களைப் போன்ற அறிவுஜீவிகள் இன்னமும் ஹிட்லரையே உதாரணம் காட்டிப்
பேசுவது எனக்கு வியப்பாக இருக்கிறது. பாவம் ஹிட்லர் அவன் காலத்தில் இருந்தவர்கள் அவனோடு
ஒப்பிட யாரையும் அறிந்திருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் ஹிட்லர் சிலவேளை வெற்றிகூடப்
பெற்றிருப்பான்.
ஹிட்லரோடு
இருந்ததைப் பற்றிக் கேட்டீர்களில்லையா? நமக்கு எதிரான ஒரு ஆக்கிரமிப்பிற்குச் சரியான
தீர்வு அதிலிருந்து துண்டித்துக் கொள்ளவில்லை. அதன் கூடவே செல்வது அதையே சாதகமாக மாற்றுவது;
அதையே நம்முடைய அடுத்த கட்டப் பயணத்துக்கான தொடக்கப் புள்ளியாக ஆக்கிவிடுவது.
ஒரு தத்துவ அறிஞராக அறியப்படும்
நீங்கள் பத்திரிகையாளரென சொல்லிக் கொண்டு இங்கு வந்திருப்பது எந்த ரகசியத்தைக் காப்பாற்ற?
ஒருமுறை ஃபூக்கோ சொன்னான்.1956 இல் சோவியத் துருப்புகள் ஹங்கேரியை
ஆக்கிரமித்ததற்குப் பிற்பாடு தத்துவவாதிகளுக்கு வரலாற்றைச் சிந்திப்பது கடினமானதாகிவிட்டது.
எனவே தத்துவ அறிஞர்கள் கட்டாயமாக பத்திரிகையாளர்களாக மாறியே ஆக வேண்டும் என்றான். அவனுக்கு
ஹங்கேரி என்ற ஒரு உதாரணம் மட்டும் தான் கிடைத்தது. இன்று கிழக்கு ஐரோப்பா, சீனா எல்லாமே
உதாரணங்களாகி விட்டன.
ஃபூக்கோ உங்களைப் பாதித்தது எந்த விதத்தில்..?
தன்னை ஒரு அமைப்பியல்வாதி அல்ல எனக் கூறிக் கொண்ட விதத்தில்..
கலகக்காரராக இருந்து கொண்டே எப்படி ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும்
இருக்கிறீர்கள். இது முரண்பாடாகத் தோன்றவில்லையா உங்களுக்கு?
ம்.. முரண்பாடு.. இல்லை. எனக்குத் தோன்றவில்லை. கலகங்களை
ஒடுக்கும் நிறுவனமாகத் தன்னை ஸ்தாபித்துக் கொண்டுள்ள பல்கலைக்கழகங்கள் தான் கலகங்களின்
தோற்றக் களனாகவும் இருக்கின்றன. இந்த முரண்பாட்டைச் சுமக்கும் பல்கலைக்கழகத்திற்கு
நானும் ஒரு சுமை. அவ்வளவுதான். நீங்களே சொன்னீர்களே, இரண்டாக இருக்கிறேன் என்று. கலகக்காரன்,
பேராசிரியன் இரண்டும் வெவ்வேறு வெளியில் இயங்கக் கூடியது.பேராசிரியனின் வெளி பல்கலைக்கழக
வளாகம்; ஆராய்ச்சி, இதழ்கள், கருத்தரங்குகள், வகுப்பறைகள், இப்படி. கலகக்காரனுடைய வெளி
பல்கலைக்கழக வளாகம் அல்ல. இவ்விரண்டும் வெட்டிக்கொள்ளாமல் இருக்கும்வரை பிரச்சினைகள்
இல்லை. சில நேரங்களில் இவ்விரண்டும் குழம்பும்; இந்த வெளியை அதற்கும், அந்த வெளியை
இதற்கும் மாற்றிவிட்டேனென்றால் பிரச்சினைதான். பிரச்சினை எனக்கு மட்டுமல்ல; எல்லாருக்கும்
தான்.
பாலியல் தேர்வின் அடிப்படையில்
நீங்கள் எப்படிப்பட்டவர்?
ஒரு
ஆண் என்றோ, ஒரு பெண் என்றோ, ஒரு அலி என்றோ, என்னைக் குறித்துக்கொள்ள நான் விரும்பவில்லை.
மொழி என்று குறிக்கப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட சத்தங்களின் மூலம் சக உயிர்களை பயமுறுத்த,
கொல்ல, தெரிந்து கொண்ட மிருகம் நான். அவ்வளவுதான்! அனைத்து உறவுகளும் வன்முறையின் இயங்கியலுக்கு
உட்பட்டவை தான். உடலுக்கும் தன்னிலைக்கும் தன்னிலைக்கும் கனவுகளுக்கும் இடையில் உள்ள்
உறவைக் கூடத் துண்டித்துவிட்ட நிலையில்தான் இக்கணம் நான் உங்களோடு பேசுகிறேன். தாந்திரீகத்தைக்
கடன் தந்த கட்டுமானத்திற்குள் பிழைப்பு நடத்தும் உங்களுக்கு இது புரியும் என்று நினைக்கிறேன்.
ஒருநாளைக்கு எத்தனைமுறை சாப்பிடுவீர்கள்.
என்ன சாப்பிடுவீர்கள்?
அப்படி
எதுவும் கணக்கெல்லாம் இல்லை. தோன்றும்போது சாப்பிடுவேன். சின்ன வயதில் பலநாட்கள் ஒருநேர
உணவுடன் அலைந்திருக்கிறேன். உணவு என்றவுடன் ஞாபகம் வருகிறது. உங்களிடம் சொல்லவேண்டும்.
எந்த
நாட்டிற்குப் போனாலும் அதன் உணவிற்குத் தயார் படுத்திக் கொள்வேன். அப்படியே தான் நெய்விட்ட
பொங்கல், தயிர்சாதம், காய்கறிகள் என என்னைத் தயார் படுத்திக்கொண்டு தமிழ்நாட்டிற்கு
வந்தேன். ஆராய்ச்சிக்கான விஷயங்களைத் தேடிப்போகும் எந்த இடத்திலும் இந்த உணவு வகைகள்
சரியாகக் கிடைக்கவில்லை.
சென்னையில்
நண்பர் உண்டு. என்னுடைய விளிம்பு நிலை மனிதர்கள் - தொழுநோயாளிகள் பற்றிய ஆய்வுக்கு
உதவியாக இருந்தார். அவர் வீட்டில் நல்ல தயிர்சாதம் கிடைக்கும். அவரது துணைவியார் தயாரிக்கும்
நெய்ப் பொங்கல் கூட பிரமாதமாக இருக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் வீட்டு முற்றத்தில்
உள்ள ஊஞ்சலில் உட்கார்ந்தபடியே இலக்கியச் சர்ச்சை செய்வோம். பிரெஞ்சு இலக்கியமெல்லாம்
படித்தவர். ஜெனேயைத் தமிழில் அறிமுகம் செய்வதில் பிடிவாதமாக இருந்தார். பிரெஞ்சு மட்டுமல்ல,
ஜெர்மன்கூட அவருக்குத் தெரியும். அவரது பையனுக்கு பூணூல் போடும் விழாவிற்கு அனுப்பி
வைத்த அழைப்பிதழ், ஒருமாதம் கழித்துத் தான் கிடைத்தது. அருமையான தமிழர் உணவு உண்மையில்
உங்கள் உணவு வித்தியாசமானதுதான். ஆனால் பெரும்பாலான தமிழர்கள் சாப்பிடுவதில்லை என்று
நினைக்கிறேன்.
அந்தோனெந்
அர்த்தோவின் நாடகங்களில் கூட நடித்திருக்கிறீர்கள் இல்லையா?
எழுத்தாளனின்
கடமை ஒரு புத்தகத்திலோ, பத்திரிகையிலோ கோழையைப் போல பதுங்கிக் கிடப்பது அல்ல. அவன்
வெளிப்படையாக வெளியே வரவேண்டும். பொதுஜன அபிப்பிராயங்களைக் கடுமையாகத் தாக்கவேண்டும்;
தூண்டவேண்டும். இதைச் செய்யாவிட்டால், அவன் பிறந்து என்ன பயன்? என்று கேட்டவன் அர்த்தோ..
மெல்லிய காண்டோமால் செய்த முகமூடியைப் போலத் தோற்றம் தரும் அவனது முகத்தைப் பார்த்திருக்கிறீர்களா?
சினிமா என்பது கடந்த காலத்தின் கலைவடிவம்; அதில் பணிபுரிவது அவமானம் என்று அவன் சொன்னது
என்னை வசீகரிக்க அவனது நண்பன் ழான் பவுலான் அனுப்பிய மாணவனாக அர்த்தோவிடம் சென்றேன்.
உடலை அடியோடு மாற்றுவது பற்றிய விருப்பம் வேண்டும் என்பான். அதுவே சுதந்திரத்துக்கு
முதல் நிபந்தனை என்பான். அவனிடம் பயின்றபோதுதான் உண்மையை உணர முடிந்தது.
க்யூபாவில்
உங்கள் அனுபவங்களைப் பற்றி...
ஹிட்லருடைய
வதைமுகாம் காஸ்ட்ரோவின் வதைமுகாம் இரண்டையும் அருகிருந்து பார்த்த ஒருவன் அநேகமாக நானாகத்தான்
இருக்கும். இரண்டு இடங்களிலும் நிறைய வேறுபாடுகள்.. யூனிபார்மின் நிறம்.. ஆட்களின்
உயரம்..துப்பாக்கிகளின் பெயர், சித்ரவதை முறைகள். நல்லவேளை ‘ சே.’, பொலியா சென்று செத்தான். செய்தியாவது வெளியில் தெரிந்தது.
உங்கள்
பேச்சு க்யூபாவைப் பற்றி அமெரிக்கா செய்யும் பொய்ப்பிரசாரத்தை மிஞ்சியதாக இருக்கிறது.
சில
சமயம் உண்மை என்பது நமது கற்பனைகளை விடவும் விஞ்சியதாக அமைந்துவிடுவது உண்மைதான். க்யூபாவில்
சிறையில் அடைக்கப்பட்ட ஒரு பெண்மணியைப் பார்த்தேன். தனது இரண்டு குழந்தைகளைத் தரையில்
மோதிக் கொலைசெய்ததாக அவள் மீது குற்றம். “ முன்பெல்லாம் விபசாரம் செய்து என் குழந்தைகளுக்கு
உணவளித்து வந்தேன். புரட்சிக்குப் பிறகு விபசாரத்தையும் தடைசெய்து விட்டார்கள். என்
குழந்தைகளுக்கும் உணவு கிடைக்கவில்லை” என்றாள் அவள். ஒன்று சொல்லட்டுமா..? அமெரிக்கா
தான் க்யூபாவில் காஸ்ட்ரோவைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க மட்டும் இவ்வளவு
முட்டாள்தனமாகக் க்யூபாவை எதிர்க்கவில்லையென்றால் க்யூபா மக்களுக்கு எதிரி எனக் காட்ட
காஸ்ட்ரோவுக்கு வேறு யாரும் கிடைக்கமாட்டார்கள். அப்புறம் காஸ்ட்ரோ அங்கு இருப்பது
கடினம்.
[க்யூபா, சோஷலிசம், மார்க்சியம் என இதன் தொடர்ச்சியாக நடந்த சுமார் நான்கு மணிநேர உரையாடல்
தனி நூலாக ‘ மார்க்சியம் - மத்தியிலும் விளிம்பிலும்’ என்ற தலைப்பில் வெளியிடுவதாக
இருந்த நூல் கையெழுத்துப் படியாக விடியல் சிவாவிடம் தரப்பெற்றது. மார்க்சிய விரோதக்
கருத்துக்களை விடியல் பதிப்பக வெளியீடாகக் கொண்டு வருவதா? எனத் தாமதம் செய்து வந்தார்.
ஒரு கட்டத்தில் வெளியிட இயலாது எனச் சொன்னதோடு, அந்தக் கையெழுத்துப் பிரதியைத் தேடி
எடுக்க வேண்டும் எனத் தாமதப்படுத்தியவர் கடைசியில் தராமலேயே இறந்துவிட்டார். விடியல்
பதிப்பகத்தின் அறிவுரிமைகள் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்காமல் இருப்பதால்,
இப்போது யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை]
கருத்துகள்