எது ஆறு? எது சேறு? இப்பவாவது சொல்லுங்கள் பிரதமர் அவர்களே!
.jpg)
நேருவின் இந்தக் கொள்கை அப்போதே அறிவுஜீவிகளாலும், எதிர்க் கட்சியினராலும் முழுமனதாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அது ஆற்றில் ஒரு கால்; சேற்றில் ஒருகால் என்ற விமரிசனத்தைச் சந்தித்தது என்பது பழைய வரலாறு. பண்டித நேரு தன்னாலான விளக்கங்களையும் பதிலாகச் சொன்னார் என்பதைப் பழைய தலைமுறை மனிதர்கள் அறிவார்கள். அந்தப் பதில்களையும் விளக்கங்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் அவரைக் கொண்டாடினார்கள்; ஏற்காதவர்கள் அவரை விட்டு விலகிப் போனார்கள்.
அதே விமரிசனத்தை – ஆற்றில் ஒரு கால்; சேற்றில் ஒருகால் – என்னும் விமரிசனத்தை இன்னும் அழுத்தமாகக் கடந்த இருபது ஆண்டுகளாகச் சந்திக்கும் டாக்டர் மன்மோகன்சிங் தன் மீதான விமரிசனங்களுக்கு எந்தப் பதிலும் சொன்னதில்லை; விளக்கங்களையும் விவரித்ததில்லை. அதே நேரத்தில் தான் நம்பும் ’பன்னாட்டு மூலதனத்தை அனுமதிக்கும் முதலாளித்துவ –தாராளவாத- தனியார்மயப் பொருளாதார உறவு’ இந்திய நாட்டை முன்னோக்கி நகர்த்துவதாக நம்பிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரைச் சுற்றி இருக்கும் சொந்தக்கட்சி அரசியல்வாதிகளும், எட்ட நின்று அவ்வப்போது ”வாழ்க!” எனவும் ”ஒழிக!!” எனவும் மாறிமாறிக் கூச்சலிடும் எதிர்க்கட்சிக்காரர்களும், கூட்டணிக் கட்சிக்காரர்களும் இருபதாண்டுகளுக்கு முந்திய நிலையில் பயணம் செய்தால் கூடப் பரவாயில்லை; இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்திய வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அதே விமரிசனத்தை – ஆற்றில் ஒரு கால்; சேற்றில் ஒருகால் – என்னும் விமரிசனத்தை இன்னும் அழுத்தமாகக் கடந்த இருபது ஆண்டுகளாகச் சந்திக்கும் டாக்டர் மன்மோகன்சிங் தன் மீதான விமரிசனங்களுக்கு எந்தப் பதிலும் சொன்னதில்லை; விளக்கங்களையும் விவரித்ததில்லை. அதே நேரத்தில் தான் நம்பும் ’பன்னாட்டு மூலதனத்தை அனுமதிக்கும் முதலாளித்துவ –தாராளவாத- தனியார்மயப் பொருளாதார உறவு’ இந்திய நாட்டை முன்னோக்கி நகர்த்துவதாக நம்பிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரைச் சுற்றி இருக்கும் சொந்தக்கட்சி அரசியல்வாதிகளும், எட்ட நின்று அவ்வப்போது ”வாழ்க!” எனவும் ”ஒழிக!!” எனவும் மாறிமாறிக் கூச்சலிடும் எதிர்க்கட்சிக்காரர்களும், கூட்டணிக் கட்சிக்காரர்களும் இருபதாண்டுகளுக்கு முந்திய நிலையில் பயணம் செய்தால் கூடப் பரவாயில்லை; இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்திய வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அரசமைப்பை மையப்படுத்திய பொருளாதார உற்பத்தி முறைகளும் உறவுகளும் பண்டித நேருவின் மகள் இந்திராவின் ஆட்சியிலும் நீண்டது. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் முழுமையான நம்பிக்கை கொண்ட கட்சிகளின் கூட்டணியான ஜனதா ஆட்சியிலும் கூட நேருவின் கொள்கை பெரும் மாற்றத்தைச் சந்திக்கவில்லை. நேருவின் பேரன் ராஜீவ் காந்தி, தான் பிரதமராக ஆனவுடன் அந்தப் பாதையிலிருந்து தடம் விலகினார் என்றாலும் முழுமையான விலகல் ஏற்பட்ட ஆட்சிக் காலம் திருவாளர் பி.வி.நரசிம்மராவின் ஆட்சிக் காலம் என்பதை விவரம் அறிந்தவர்கள் நம்புவார்கள். அந்த மாற்றத்தைக் கொண்டு வந்தவர் நரசிம்மராவ் என்பதை விட யாரும் எதிர்பார்க்காத நிலையில் அவரது அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக ஆக்கப் பெற்ற டாக்டர் மன்மோகன்சிங் தான் அந்த மாற்றத்தின் காரணி என்பதும் விபரமறிந்தவர்களுக்குத் தெரிந்த ரகசியம் தான்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற மன்மோகன் சிங், சில காலம் அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆசிரியராக இருந்து விட்டு இந்திய அரசுப் பணிக்கு 1970 இல் வந்தார். வெளிநாட்டு வர்த்தகத்தில் தனக்கு ஆலோசனை சொல்வதற்காக அவரை அழைத்து வந்தவர் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த லலித் நாராயணன் மிஸ்ரா. அந்த நுழைவுக்குப் பின் இந்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் பல பதவிகளில் –முதன்மைப் பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கியின் ஆளுநர், திட்டக்குழுத் தலைவர் என முக்கியமான பதவிகளில் இருந்து அரசதிகாரத்தின் நகர்வைப் பின்னின்று இயக்கியவர் 1996 முதல் முன்னின்று இயக்கும் தளகர்த்தகராக அறிமுகம் செய்யப்பட்டார். அறிமுகம் செய்த பி.வி. நரசிம்மராவ் முழுமனதோடு மன்மோகன்சிங் முன் வைத்த தாராளவாத பொருளாதார உறவுகளுக்குத் தடைகளின்றிக் கதவுகளைத் திறந்து விட்டார். அப்போதே மன்மோகன்சிங் செய்திருக்க வேண்டிய ஒரு முக்கியமான வேலையைச் செய்யத் தவறினார் என்பதற்கான காரணம் யாருக்கும் தெரியாது. அன்று செய்யத் தவறிய அதே தவறை இன்னமும் இருபதாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்பது அதைவிட வேடிக்கையாக இருக்கிறது.
நரசிம்மராவ் திறந்துவிட்ட வாசல் வழியே வெளியே வந்த மன்மோகன்சிங் முதலில் செய்திருக்க வேண்டிய வேலை அதுவரை பின்பற்றப் பட்ட நேருவின் பொருளாதாரக் கொள்கைகளின் மீது –பொதுத்துறையை மையப் படுத்திய உற்பத்தி உறவுகளின் மீதான தனது விமரிசனத்தைச் சொல்லியிருக்க வேண்டும். விமரிசனம் செய்திருக்க வேண்டும் என்று சொல்வதை விடக் கண்டித்திருக்க வேண்டும் என்று சொல்வதே சரியாக இருக்கும். இனி அந்தத் தடத்திலிருந்து இந்திய தேசம் மாறிப் புதிய பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றிப் புதிய திசையில் செல்லப் போகிறது என்பதைத் தெளிவு படுத்தியிருக்க வேண்டும். செல்லும் போது கிடைக்கும் நன்மைகளைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்க வேண்டும். இதுவரை கிடைத்த சலுகைகள் இனிக் கிடைக்காது; அதற்குப் பதிலாக எத்தகைய வாழ்க்கைமுறை கிடைக்கும்; அமையும் என்பதையும் சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் சொல்வதின் மூலம் மக்களைத் திசை திருப்பித் தனது அரசாங்கத்தோடும் பொருளாதாரக் கொள்கையோடும் பயணிக்கத் தூண்டியிருக்க வேண்டும். அந்தப் பயணத்திற்காக மக்கள் எதையெல்லாம் கைவிட வேண்டியதிருக்கும் என்ற அறிவுரையை வழங்கும் பொறுப்பும் அவருக்கு இருந்தது. மக்களுக்கான ஆலோசனைகளை வழங்கும்போதே அரசு நிர்வாகத்தில் பங்குபெற்றுள்ள அதிகார வர்க்கத்தினரின் மந்தத்தனத்தையும் போக்கியிருக்க வேண்டும். அவர்கள் செய்ய வேண்டிய பணிகள் எவை? கற்றுக் கொள்ள வேண்டிய உத்திகள் எவை? கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கைகள் எப்படிப் பட்டவை என்பதையெல்லாம் விளக்கிக் காட்டியிருக்க வேண்டும். நிதியமைச்சராக இருந்தபோதே செய்திருக்க வேண்டிய இதையெல்லாம் நாட்டின் பிரதமராக ஆன பின்னும் டாக்டர் மன்மோகன் சிங் செய்யவில்லை என்பதுதான் வேடிக்கையைவிட விநோதமாக இருக்கிறது.
இருபது ஆண்டுகள் ஆனபின்பும் அதைச் செய்யாமல் வாய்மூடி மௌனியாக இருப்பதன் பின்னணியில் அவருக்கு இருப்பது குழப்பமா? தெளிவா? என்ற சந்தேகம் எழாமல் இல்லை. மைய அரசின் அதிகாரத்தைக் கைப்பற்ற உதவும் கருவியாக மன்மோகன் சிங்கின் புதிய தாராளவாதக் கொள்கைகள் இருக்க முடியாது; நேருவின் ஏழைப்பங்காளன் பாத்திரமே ஓட்டு வாங்கும் சூத்திரமாகப் பயன்படும் என்று காங்கிரஸின் தலைவர் சோனியா காந்தி நம்புவது போலவே மன்மோகன் சிங்கும் நம்புகிறாரோ என்ற ஐயம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. நேரு, தான் நம்பிய கொள்கையை எந்தத் தயக்கமும் இல்லாமல் பின்பற்றினார்; விளக்கினார். அவரது கொள்கையிலிருந்து விலகிச் செல்லும் மன்மோகன் சிங்கிற்கு அந்தத் தைரியமும் அறிவுத்திறனும் இல்லாமல் இருப்பது தான் நிகழ்கால இந்தியாவின் பெருந்துயரமாக இருக்கிறது.

இந்த இடத்தில் நான் இரண்டு ஆண்டுகளாக வாழ்ந்த போலந்து நாட்டில் சந்தித்த சில நிகழ்வுகளையும் புரிதல் களையும் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. போலந்தும் 1991 இல் பொதுவுடைமைக் கட்டமைப்பிலிருந்து தாராளவாதப் பொருளாதாரக் கட்டமைக்குள் நுழைந்த நாடு என்பதால் இந்த ஒப்பீடு பொருத்தமாக இருக்கும் என்றும் நினைக்கிறேன். 2011 அக்டோபரில் போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகத்தில் இருக்கும் தமிழ் இருக்கைக்கான வருகைதரு பேராசிரியராகச் சென்றேன். வார்சா விமான நிலையத்தில் இறங்கிய முதல் நாளே என் கண்ணில் பட்ட வரவேற்புப் பதாகைகளில் ஒன்று 14 ஆவது ஈரோ கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் பற்றிய அறிவிப்புகள் 2012, ஜூன் 8 முதல் ஜூலை 1 வரை நடக்க இருந்த ஈரோ கோப்பைக் கால் பந்து போட்டிகளைப் போலந்தும் அதன் அருகில் இருக்கும் உக்ரைனும் சேர்ந்து நடத்த இருப்பதாக அறிவிப்புகள் காட்டின. அப்போட்டியின் தொடக்க விழா நடைபெற இருந்த போலந்து தேசிய விளையாட்டு மைதானம் நான் வேலை பார்த்த வார்சா பல்கலைக்கழக வளாகத்திற்குப் பின்புறம் தான் இருந்தது. இரண்டையும் பிரிப்பது அந்நகரின் நடுவில் ஓடும் விஸ்துலா ஆறு.
பல்கலைக்கழகத்தின் பின்புற வாசல் வழியாக வெளியேறிப் பாலத்தின் வழியாக நடந்தால் விளையாட்டு மைதானத்தை அடைந்து விடலாம். தொடக்கவிழாவின் காட்சிகள் நகர் மையத்தில் நடந்தது தூரத்தில் இருந்து பார்த்தேன். வார்சாவில் நடந்த எல்லாப் போட்டிகளையும் நேரில் சென்று பார்க்க வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் போலந்து அணிக்கும் ரஷ்ய அணிக்கும் இடையே ஜூன் 12 இல் நடக்க இருந்த போட்டியை மைதானத்திற்குச் சென்று பார்க்க நினைத்து அனுமதிச் சீட்டு வாங்க முயன்றேன். எல்லாவிதமான உதவிகளையும் செய்யும் என் மாணவி போட்டியைக் காண நேரில் செல்ல வேண்டாம் எனத் தடுத்து விட்டாள். நிச்சயம் தகராறு நடக்கும். உங்களால் இரவு வீடு திரும்ப முடியாமல் போகலாம்; தேவையில்லாமல் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக ஒரு பெரிய ரெஸ்டாரெண்டின் புல்வெளியில் அகன்ற திரையில் வோட்கா குடித்தபடியே ஆட்டத்தைக் காணலாம். அதற்கான டிக்கெட் வாங்கித் தருகிறேன் என்று சொன்னாள்.
அவளது எச்சரிக்கையை நான் மீறவில்லை. எச்சரிக்கையில் அவள் சுட்டிக் காட்டியபடி போலந்து –ரஷ்ய அணிகள் மோதிய ஆட்டத்திற்கு முன்னும் பின்னும் கூச்சல் குழப்பங்களும், கலவர உணர்வும் எழுந்து அடங்கியது என்பதும் உண்மை. கலவர உணர்வுக்குக் காரணம் கால்பந்து மீதான வெறியும், வெற்றி பெற்றாக வேண்டும் என்ற ஆவேசமும் மட்டும் இருக்கவில்லை. போலந்து நாட்டுக்காரர்களுக்கு ரஷ்யர்கள் மீதும் சோசலிச அமைப்பின் மீதும் இருக்கும் அடக்க முடியாத கோபமும் சேர்ந்து தான் அப்படித் தூண்டியது. சோசலிச ஆட்சிக் காலத்தில் அன்றாட உணவும் குளிருக்குக் குடிக்க வேண்டிய வோட்காவுக்குமே திண்டாட்டம் இருந்ததாகவும், அவற்றை வழங்கும் கடைகளின் முன் நீண்டு வளர்ந்த மனித வரிசைகளே சோசலிசத்தைத் தூக்கித் தூர எறிந்ததாகவும் பலரும் சொன்னார்கள். வயிற்றுப் பாடுகள் அடிப்படையான உணர்ச்சிகளை எழுப்பும் என்பது உண்மை என்றாலும், அரசியல் மாற்றத்துக்கு அது ஒன்று மட்டுமே போதாது. சித்தாந்த முகம் ஒன்றும் அதற்கு எப்போதும் தேவை. அதை வழங்கிய அமைப்பாக 1980 களில் தோன்றி வளர்ந்த ஒற்றுமைக்கும் வலிமைக்குமான இயக்கம் (Solidarity movement) இருந்துள்ளது. சுதந்திரத்தின் தேவை என்ற முழக்கத்தைச் சித்தாந்தமாக முன் வைத்துப் போராடியுள்ளது. நான் பணியாற்றிய வார்சா பல்கலைக் கழகத்தின் முன் செல்லும் அந்த நெடுஞ்சாலையில் தான் லெக்வலேசா போன்றவர்கள் விடாப்பிடியாக ஊர்வலங்களையும் போராட்டங்களையும் நடத்தி மாற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
உடைக்கப்படாத பனிக்கட்டிகள் நிரம்பிய சாலைகளில் அவற்றை உடைத்து வழி ஏற்படுத்த முடியாமல் தவித்த- சோசலிசக் கட்டு மானத் தின் பேரால் அதிகாரத் தைக் குவித்துக் கொண்ட -அரசு துகள்களாக்கப் பெற்ற பனிக்கட்டிகளைப் போலச் சிதறிப்போய் இரண்டு பத்து ஆண்டுகள் ஆகி விட்டன. அன்று தொடங்கிய சோசலிச எதிர்ப்புப் பரப்புரை இன்று போலந்தின் எந்த இடத்திலும் சோசலிசத்தின் அடையாளம் எதுவும் இருந்துவிடக் கூடாது என்ற எல்லையைத் தாண்டி விட்டது. முன்னால் சோசலிச நாடான போலந்தில் இன்று சோசலிசக் கட்டுமானம் ஒரு கொடுங்கனவு. தூக்கத்திலும் வந்து விடக்கூடாத கொடுங்கனவு. அதன் வெளிப்பாடாகவே ஈரோ கோப்பைக் கால்பந்து விளையாட வந்த ரஷ்ய அணியையும் அதன் ஆதரவாளர்களையும் விளையாட்டு நடக்க இருந்த தேசிய மைதானத்துக்கு 600 அடிக்கு முன்னால் இருந்து தான் ரஷ்யாவின் சிவப்புக் கொடியுடன் செல்ல வேண்டும் என்ற நெருக்கடியை உண்டாக்கியது.
உடைக்கப்படாத பனிக்கட்டிகள் நிரம்பிய சாலைகளில் அவற்றை உடைத்து வழி ஏற்படுத்த முடியாமல் தவித்த- சோசலிசக் கட்டு மானத் தின் பேரால் அதிகாரத் தைக் குவித்துக் கொண்ட -அரசு துகள்களாக்கப் பெற்ற பனிக்கட்டிகளைப் போலச் சிதறிப்போய் இரண்டு பத்து ஆண்டுகள் ஆகி விட்டன. அன்று தொடங்கிய சோசலிச எதிர்ப்புப் பரப்புரை இன்று போலந்தின் எந்த இடத்திலும் சோசலிசத்தின் அடையாளம் எதுவும் இருந்துவிடக் கூடாது என்ற எல்லையைத் தாண்டி விட்டது. முன்னால் சோசலிச நாடான போலந்தில் இன்று சோசலிசக் கட்டுமானம் ஒரு கொடுங்கனவு. தூக்கத்திலும் வந்து விடக்கூடாத கொடுங்கனவு. அதன் வெளிப்பாடாகவே ஈரோ கோப்பைக் கால்பந்து விளையாட வந்த ரஷ்ய அணியையும் அதன் ஆதரவாளர்களையும் விளையாட்டு நடக்க இருந்த தேசிய மைதானத்துக்கு 600 அடிக்கு முன்னால் இருந்து தான் ரஷ்யாவின் சிவப்புக் கொடியுடன் செல்ல வேண்டும் என்ற நெருக்கடியை உண்டாக்கியது.
போலந்து உதாரணத்தின் வழி நான் சொல்ல நினைப்பது இதுதான். சரியோ! தவறோ! கடந்த காலத்தில் நாம் கடந்து வந்த பாதை தவறானது என முடிவு செய்து விட்டால், அதன் மீதான விமரிசனங்களையும் கண்டனங்களையும் முழுமையாகச் சொல்லி மக்களைத் தங்கள் பாதைக்குத் திருப்ப வேண்டியது மாற்றத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டிய பணி. அதைச் செய்யாமல் பொருளாதார அடித்தளத்தை மாற்றி விட்டால் அதன் மேல் கட்டப்படும் அனைத்தும் மாறிவிடும் என நினைப்பது இடதுசாரிகளின் அடிப்படை அரசியல் அணுகுமுறை. இடதுசாரிகளின் கொள்கைகளின் மீதும், அணுகுமுறைகளின் மீதும் எதிர்ப்பு நிலையைக் கொண்டுள்ள மன்மோகன் சிங் இடதுசாரிகளின் அரசியல் அணுகுமுறையையே பின்பற்றுவது எப்படி சரியாக இருக்க முடியும்?
மதிப்பிற்குரிய மன்மோகன்சிங் அவர்களே! இப்போதாவது சொல்லி விடுங்கள். நீங்கள் எந்தப் பாதையை ஆறாகக் கணிக்கிறீர்கள். எந்தப் பொருளாதார வழிமுறையைச் சேறாக நினைக்கிறீர்கள். உங்கள் வாயால் ஒருமுறை சொல்வது மட்டும் போதாது. பன்னாட்டு மூலதனத்திற்குத் திறப்புகளை உருவாக்கித் தாராளமயத்தையும் தனியார் மயத்தையும் அனுமதித்தால் உலகப் பொருளாதார வளர்ச்சிப் போக்கின் உடன் பயணியாக இந்தியாவும் வளர்ச்சிப் பாதையில் சென்று விடும் என்ற நினைப்பை அவ்வப்போது உதிரி உதிரியாகச் சொல்லி விட்டு மௌனமாக இருந்து விட்டால் போதாது. அதற்குத் தகுந்தவாறு மக்களைத் தயார்படுத்தும் வேலையும் உங்களுடையதுதான். அந்தக் கடும் பணியை மேற்கொள்வதற்கு முன்னால் நீங்கள் செய்ய வேண்டிய இன்னொரு பணியாக நான் ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அது சிறிய பணியா? பெரும்பணியா? என்பது உங்கள் கணிப்புக்கே விட்டு விடுகிறேன். நீங்கள் நம்பும் பொருளாதாரக் கொள்கைகளையும் எண்ணங்களையும் உங்களோடு உறவு வைத்துக் கொள்ளும் அரசியல்வாதி களுக்காகவது விளக்கிச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும் என்பது தான் அந்தப் பணி.
இந்தியாவை முதலாளித்துவ நாடாக ஆக்குவதற்கு முன்னால் இந்திய அரசியல்வாதிகளை முதலாளித்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக மாற்றிக் காட்டுங்கள். அதுவே இந்தியாவுக்கு நீங்கள் செய்த பெரும் பங்களிப்பாக இருக்கும். ஏனென்றால் முதலாளித்துவ அரசியல்வாதி தனிநபர்களின் உரிமைகளையும் நாட்டின் சட்டங்களையும் ஓரளவு மதிக்க நினைப்பான். சட்டத்திற்குக் கிடைக்கும் மரியாதை அரசு அமைப்புகளின் மீது நம்பகத்தன்மையை உண்டாக்கும். இது எதுவும் இப்போது நடக்கவில்லை. ஏனென்றால் நீங்கள் இருக்கும் காங்கிரஸ் பேரியக்கமே முதலாளித்துவ அரசியலில் நம்பிக்கை கொண்ட கட்சியாக இல்லை. அக்கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்ளும் மாநிலக் கட்சிகளோ 18 ஆம் நூற்றாண்டு நிலப்பிரபுக்களின் – ஜமீந்தார்களின் பிடியில் இருக்கும் அமைப்புகளாக இருக்கின்றன.
தலைவருக்குப் பின்னால் தலைவரின் வாரிசுகளிடம் விசுவாசத்தைக் கொட்டும் தொண்டர்களால் நிரம்பித் தளும்பி நிற்கின்றன. ஜனநாயகத்துக்கு விரோதமான சாதிய உணர்வையும் மத உணர்வையும், வட்டார உணர்வையும் தூண்டி விட்டு ஓட்டு வாங்கிவிட முடியும் என்பதில் அபாரமான நம்பிக்கை கொண்டிருக்கின்றன. முதலாளித்துவ அரசியலில் கேட்கக் கூடிய தனிநபர் உரிமை, சட்டத்தின் ஆட்சி, அரசமைப்புகளைப் பலப்படுத்துவது, அடிப்படைச் சேவைகளுக்கு உத்தரவாதம் அளிப்பது போன்ற சொல்லாடல்கள் எதுவும் எழுப்பப் படாமல் இனாம்களாலும், மானியங்களாலும், உணர்வுகளாலும் ஒன்றிணைக்கப்படும் கூட்டங்களை நோக்கிய கூப்பாடுகளே இங்கு அரசியலாக இருக்கிறது. மரியாதைக்குரிய மன்மோகன்சிங் அவர்களே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொள்வது இதுதான்: முதலாளித்துவ நாடாக இந்தியாவை ஆக்குவதற்கு முன் நிபந்தனையாக முதலாளித்துவ அரசியல்வாதிகள் நிரம்பிய அரசியல் களத்தை உருவாக்கிக் காட்டுங்கள்.
http://www.youtube.com/watch?v=a_3mLnS-j18
============================================== நன்றி: உயிர்மை, ஆகஸ்டு
http://www.youtube.com/watch?v=a_3mLnS-j18
============================================== நன்றி: உயிர்மை, ஆகஸ்டு
கருத்துகள்
எனக்குத் தெரிந்து எந்த முதலாளித்துவ அரசியல்வாதிகளும், இயக்கங்களும், கட்சிகளும், அரசுகளும் தங்களின் உண்மையான உள்ளக்கிடக்கைகளை பகிரங்கமாக அறிவித்து வேலை செய்வதில்லை. தாங்கள் எதை விரும்புகிறோம், எதை உருவாக்கப் போகிறோம், யார் எங்களி்ன் நண்பர்கள், யார் எங்களின் எதிரிகள் என பகிரங்கமாக அறிவித்து வேலை செய்பவர்கள் கம்யூனிஸ்ட்கள் மட்டுமே. எப்பொழுது ஒரு கம்யூனிஸ்ட் திருத்தல்வாதி ஆகிறானோ முதலாளித்துவ பாதையை நோக்கி பயணிக்கிறானோ அப்பொழுதே அவனும் முதலாளித்துவ வழிமுறைகளான உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பாணியை பின்பற்றத் துவங்கிவிடுவான்.
//கடந்த காலத்தில் நாம் கடந்து வந்த பாதை தவறானது என முடிவு செய்து விட்டால், அதன் மீதான விமரிசனங்களையும் கண்டனங்களையும் முழுமையாகச் சொல்லி மக்களைத் தங்கள் பாதைக்குத் திருப்ப வேண்டியது மாற்றத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டிய பணி. அதைச் செய்யாமல் பொருளாதார அடித்தளத்தை மாற்றி விட்டால் அதன் மேல் கட்டப்படும் அனைத்தும் மாறிவிடும் என நினைப்பது இடதுசாரிகளின் அடிப்படை அரசியல் அணுகுமுறை. இடதுசாரிகளின் கொள்கைகளின் மீதும், அணுகுமுறைகளின் மீதும் எதிர்ப்பு நிலையைக் கொண்டுள்ள மன்மோகன் சிங் இடதுசாரிகளின் அரசியல் அணுகுமுறையையே பின்பற்றுவது எப்படி சரியாக இருக்க முடியும்? //
மேலே உள்ள உங்கள் கருத்தில் குழப்பம் உள்ளது. சமூக ஆய்வில் சமூக மாற்றத்தில் அடிக்கட்டுமானம்-மேற்கட்டுமானம் என்ற கருத்துக்கும், நடைமுறையில் தாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை பகிரங்கமாக தான் வேலை செய்யும் சமூகத்தில் அறிவிப்பதையும் குழப்பிக் கொள்கிறீர்கள். கம்யூனிஸ்ட்கள் அடிக்கட்டுமானம்தான் தீர்மானகரமான பங்கு வகிக்கிறது என்று சொன்னாலும் அதையும் பகிரங்கமாக அறிவித்தே வேலை செய்கிறார்கள்.
இங்கே இந்தியாவில் மன்மோகன் தலைமையில் நடைபெற்று கொண்டிருப்பது, இந்திய முதலாளித்துவ அரசின் சொந்த முடிவுகளின் அடிப்படையிலிருந்து நடப்பதல்ல. அது உலக முலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள பொது நெருக்கடியிலிருந்து இந்தியா மீது அதன் அடிவருடிகளின் துணையோடு திணிக்கப்படுவதாகும். இங்கே இவர்களிடம் எந்தத் திட்டமும் நோக்கமுமில்லை, இவர்கள் மேலிருந்து வரும் ஆணைகளுக்கேற்ப ஆடிக்கொண்டிருக்கிறார்கள். நயவஞ்கமும், கபடமும் முதலாளித்துவத்திடமிருந்தும் ஏகாதிபத்தியத்திடமிருந்தும் பிரிக்க முடியாதவை.