கமல்ஹாசனின் விஸ்வரூபம்- விமரிசனம் அல்ல; விவாதம்
லண்டனிலிருந்து வெளிவரும் இணைய இதழ் எதுவரை?. கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் வெளிவருவதில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து ஏற்படுத்திய தாக்கம் குறித்து வினாக்களை அனுப்பி பதில்களைப் பெற்று வெளியிட்டது. அந்த வினாக்களும் விடைகளும் இங்கே தரப்படுகிறது. என்னைப்போலவே திரைப்படங்கள் குறித்துக் கருத்துக்கள் கூறும் ஜமாலன், கலைஅரசன், ராஜன்குறை ஆகியோரும் இந்த வினாக்களுக்கு விடைகள் சொல்லி இருந்தார்கள். மொத்த விவாதத்தையும் படிக்க அங்கே செல்லலாம். அதற்கான இணைப்பு: http://eathuvarai.net/?p=2776 இங்கே எனது விடைகள் மட்டும்
01."விஸ்வரூபம்" திரைப்படத்தினையொட்டி நடைபெற்று வருகின்ற, படைப்பின் சுயாதீனம், கலைஞனின் உரிமை, படைப்பு சுதந்திரம், கலைஞனுக்குள்ள சமூகப் பொறுப்பு
போன்ற விடயங்களை எப்படி பார்க்கிறீர்கள்?
ஏற்கெனவே பலரும்
பலவிதமாக விவாதித்த விடயங்கள் தான். இந்த விடயங்களைக் கமல்ஹாசனின் விஸ்வரூபத்தை
முன் வைத்து விவாதிக்கிறோம் என்பது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது. கலையின்
அடிப்படைக் கூறுகள் எதனையும் கொண்டிருக்காத வியாபாரச் சினிமாவை முன் வைத்து
இதையெல்லாம் தமிழ்ச் சமூகம் விவாதிக்க நேர்வதை எப்படி விளங்கிக் கொள்வது? என்றாலும் திரும்பவும் விவாதிக்கலாம். ’கலைஞனுக்குள்ள சமூகப் பொறுப்பு’ என்று கடைசியாகக்
குறிப்பிட்ட வார்த்தைக் கூட்டத்திலிருந்தே அதற்கு முன்பிருக்கும் சொல்லாடல்களைப்
புரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பவன் நான். கலைஞன் என்ற சொல்லுக்குள்
எந்தவிதக் கட்டுப்பாடுகளும் அற்ற மனிதனின் இருப்பு இருப்பதாக நான் நம்புவது இல்லை.
அதனால் அப்படி நம்புகிறவர்களின் கலை இலக்கிய வெளிப்பாடுகள் தான் சரியானவை என
நினைப்பவர்களோடு எனக்கு உடன்பாடும் இருந்ததில்லை. இப்படிச் சொல்வதால் அத்தகைய கலை
இலக்கிய வெளிப்பாடுகளைத் தடை செய்ய வேண்டும்; ஒதுக்க வேண்டும் என்று வாதிடுபவன் என
நினைக்கவும் வேண்டாம். அத்தகைய கலை இலக்கிய முயற்சிகளில் எதிர்மறைக் கூறுகள்
இருப்பதைவிட நேர்மறைக்கூறுகள் அதிகம் இருக்கின்றன என்பதால் அவற்றால் ஆபத்துகள்
அதிகம் இல்லை என்றும் கூடச் சொல்வேன்.
சமூகத்தின் தாக்கம் இன்றிச் சுயாதீனமாகப் படைப்பு உருவாகிறது என்ற
அடிப்படையற்ற சொல்லாடலோடு எனக்கு எப்போதும் உடன்பாடு இல்லை. அப்படிச் சொல்பவர்கள்
கலையின் தோற்றம், கலைக்கும் கலைஞனுக்கும் உள்ள உறவு, கலைப்படைப்புக்கும் அதன்
நுகர்வோர்களுக்கும் உள்ள தொடர்புநிலை, அதனால் விளையும் தாக்கம் பற்றியெல்லாம்
புரியாமல் இருக்கிறார்கள். அதையெல்லாம் புரிந்து கொண்டால் அப்படிச் சொல்ல
மாட்டார்கள். புரியாமல் பேசுகிறவர்களோடு பேசிப் பயன் எதுவும் ஏற்பட்டு விடப்
போவதில்லை. கலைஞனின் உரிமைக்கும் சாதாரண மனிதர்களின் உரிமைக்கும் பெரிய
வேறுபாடுகள் இருப்பதாக நான் நம்பவில்லை. அதுவும் இந்தியா போன்ற பன்மைத்துவ
சமூகத்தில் ஒவ்வொரு மனிதர்களும் பொறுப்போடு இயங்க வேண்டியதை வலியுறுத்துவதைப்
போலக் கலைஞன் எனக் கருதிக் கொள்பவனுக்கும் பொறுப்புகள் இருக்கின்றன. பொறுப்பை
உணராத நிலையில் அதனைச் சுட்டிக் காட்ட வேண்டிய கடமையும் இருக்கிறது. அந்தக் கடமையை
தடைகளின் வழியாக உருவாக்க முடியாது..
பொறுப்புடனோ, பொறுப்பின்றியோ வெளிப்படும் கலைப் படைப்பை அல்லது ஊடகச்
செயல்பாட்டை அல்லது கருத்தைத் தடுத்து விடுவதன் மூலம் அதைப் பற்றிய விமரிசனத்தை
–விவாதத்தைத் தடுத்துவிடும் வேலையைச் செய்யக் கூடாது. வெளிப்பாட்டுக்குப் பின்பு
தான் அந்த வெளிப்பாடு ஏற்படுத்தக் கூடிய சாதக – பாதகங்களைப் பேச முடியும். வெளிப்
படுவதற்கு முன்பே தடுத்து விட்டால், உருவாக்கியவனுக்குச் சாதகமான கருத்துக்களே
இங்கு உருவாகும். கமல்ஹாசனின் விஸ்வரூபத்தைத் தடை செய்ததின் தொடர்ச்சியாக அதுதான்
நடந்துள்ளது. அந்தப் படத்தின் உள்ளடக்கம், முன் வைத்த மையக்கருத்தின் நோக்கம்,
அதன் சார்புநிலை, நிகழ்கால இந்தியா மற்றும் உலக நிகழ்வுகளின் மீதான கமல்ஹாசனின்
பார்வை ஆகியன முழுமையாக விவாதிக்கப் படக்கூடிய வாய்ப்பை இந்தத் தடையும்
தொடர்ச்சியான எதிர்ப்பும் திசைமாற்றியிருக்கின்றன. உன்னைப் போல் ஒருவன் படத்தைப்
போல அதிகப் பார்வையாளர்களைச் சென்றடையாமல் ஒதுக்கப்படும் வாய்ப்புடைய ஒரு சினிமாவை
பெரும்பான்மையான பார்வையாளர்களும் பார்த்தே ஆக வேண்டிய படமாக
ஆக்கப்பட்டிருக்கிறது.
02. முஸ்லீம் அமைப்புகள் இத்திரைப்படம் தொடர்பாக எடுத்த நிலைப்பாடுகளைப் பற்றி நீங்கள்
என்ன நினைக்கிறீர்கள்?
முஸ்லீம்
அமைப்புகள் விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக எடுத்த நிலைப்பாடுகள் கண்டிக்கப்பட
வேண்டியவை மட்டும் அல்ல. தவறான பாதையும் கூட. அவர்கள் எதிர்பார்த்த விளைவுகளுக்கு
எதிரான விளைவுகளை இந்த முன்னெடுப்பு தந்திருக்கிறது. எதிர்பாராத நிலையில் திடீர்த்
தாக்குதல் நடத்தும் தீவிரவாதம் போலவே விஸ்வரூபத்திற்குத் தடை வாங்கிய நிகழ்வு
பார்க்கப்படும்; பார்க்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில். இப்படியொரு கடுமையான போக்கை எந்த ஒரு அமைப்பும்
எடுக்கக் கூடாது என்பதே எனது நிலைப்பாடு. சிறுபான்மையினரோ, பெரும்பான்மையினரோ
அவர்களுக்குள் இருக்கும் பன்முகத்தன்மையை ஒத்துக் கொள்ள வேண்டும். அவற்றுள்
எத்தகைய அடையாளங்கள் நிகழ்காலத்தின் தேவை எனக் கருதி அவற்றை வளர்த்தெடுக்க
வேண்டும். அதற்குப் பதிலாகப் பன்முகத்தன்மையை அழித்து ஒற்றைத் தன்மைக்குள்
ஐக்கியமாகி விடும் ஆபத்தைச் செய்துவிடக் கூடாது.;
அடிப்படைவாதக்
கருத்தியல்கள் எல்லாச் சமய நம்பிக்கைகளுக்குள்ளும் இருக்கவே செய்கின்றன. அடிப்படை
வாதம் முற்றித் தீவிரவாதமாக மாறும் போக்கை விமரிசனம் செய்வதை சமயத்தை விமரிசனம்
செய்வதாகப் பார்ப்பது சரியான பார்வை ஆகாது.
இசுலாமியர்கள் தீவிரவாத ஆதரவாளர்கள் என்று படம் பேசும் கருத்தியலை மேலும்
உறுதி செய்யும் விதமாக அதனைத் தடுக்க முயன்ற இச்சூழலும் ஆகி விட்டது.
03. இத்திரைப்பட விவகாரத்தின்பின் நிகழ்ந்துவரும் உரையாடல்கள் தமிழ் முஸ்லீம் உறவில், அவர்களுக்கிடையிலான புரிதலில் எந்தளவிலான பாதிப்பினை, முரண்களை நிகழ்த்த வாய்ப்புள்ளது ?
.jpg)
1990 களில்
பேசப்பட்ட தலித் கருத்தியல்களை 2000 –க்குப் பின் பேச முடியாத –விவாதிக்க முடியாத
சூழல்களை நான் சந்தித்திருக்கிறேன்.கோட்பாட்டளவிலும், சிந்தனைத் தளத்திலும்
விளக்கக் கூடியனவற்றை நடப்பு நிலைமைகள் சிதைத்துவிடும் ஆபத்தை நேரடியாக உணர்ந்தவன்
நான். தங்களுக்குக் கிடைத்த உரிமையைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகளையே அதிகம்
கைக்கொள்ளும்போது எதிர் விளைவுகளே உண்டாகும் என்பதைத் தலித்துகளும் அவர்களை வழி
நடத்திய இயக்கங்களும் உணராதபோது எதிர்விளைவுகளைச் சந்தித்தனர். அதன் ஆகப் பெரும்
வெளிப்பாடு தான் மருத்துவரால் ராமதாஸால். ஒன்றிணைக்கப்படும் சமூக இயக்கங்களின்
கூட்டமைப்பு. அக்கூட்டமைப்பின் எதிர்வாக இருப்பவர்கள் தலித்துகள் என்பதை மறந்து
விடக்கூடாது. பிராமணர்கள் – பிராமணரல்லாதார் என ஆதிக்கத்திற்கெதிராக
ஒன்றிணைக்கப்பட்டதற்கு மாறாக இன்று தலித்துகள்- தலித் அல்லாதார் என
ஒன்றிணைக்கப்படும் சூழல் தோன்றிவிட்டது. ஆனால் இன்றைக்கும் தலித்துகள் ஒடுக்கப்படுபவர்கள்
தான். சட்டப் பாதுகாப்பும், சமூகப் பாதுகாப்பும் அற்றவர்கள் என்பதை மறுக்க
முடியாது. அதே நேரத்தில் கருத்தியல் ரீதியாக தலித் இயக்கங்கள் தொடங்கி வைத்த
விடுதலையை நோக்கிய பயணம், அராஜகம் நோக்கிய பின்னடைவாக ஆனதின் பின் விளைவுகள் என்ற
உண்மையைச் சொல்லவும் எனக்குத் தயக்கம் இல்லை. சட்டம் தரும் பாதுகாப்பை
எதிர்நிலையில் பயன்படுத்தும்போது இத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதைத் தலித்
இயக்கங்கள் உணர வேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றன. அதேபோல் சிறுபான்மைச் சமூகம் என்ற நிலையில்
கிடைத்துள்ள உரிமையைச் சரியாகப் பயன்படுத்தாமல் தவற விட்டால் சாதகங்களைவிடப்
பாதகங்களே அதிகம் உண்டாகும். விஸ்வரூபத்தால் உண்டாகியுள்ள பாதகம் தொடர்ச்சியான
எதிர்நிலைகளையே உருவாக்கும். வெளியில் சொல்லப்படாத காரணங்களுக்காக சிக்கல்களைச்
சந்திக்க இருந்த விஸ்வரூபம் படத்திற்குத் தடை கோரியதன் மூலம் மாநில அரசின்
கையாட்களாக இசுலாமியர்கள் கருதப்படும் சூழலுக்கும் இடம் தந்து விட்டனர். விஸ்வரூபம் அப்படியொரு நிலையை நோக்கி
இசுலாமியர்களைத் தள்ளிவிட்டுள்ளது. அதிலிருந்து மீண்ட வர வேண்டும்; அதற்கான
உரையாடல்களை இசுலாமியச் சிந்தனையாளர்கள் முன்னெடுக்க வேண்டும்.
04. இந்தவிவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?
.jpg)
வன்கொடுமைச் சட்டத்திற்காகச் சாதிக்குழுக்களை ஒன்றிணைக்கும்
மருத்துவர் ராமதாஸின் போக்கு, இசுலாமியர்களுக்கு எதிரான மனோபாவத்தை உருவாக்குவதில் இந்திய
சினிமாத் துறையினரின் போக்கு போன்றவை தடுக்கப் பட வேண்டியவை. ஆனால்
இவற்றைச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மாற்றிக் கட்டமைக்க முயலும் அரசின்
போக்கும் ஏற்கத் தக்கதல்ல. ஒவ்வொன்றையும் அதனதன் வழியாகவே அணுக வேண்டும்; தடுக்க
வேண்டும். அதுதான் பொறுப்பான அரசு நிர்வாகத்தின் நிலைபாடாக இருக்க முடியும்.
அப்படிச் செய்யாமல் தடை செய்வதன் மூலம் பொதுச் சமூகத்தின் மன உருவாக்கத்தில்
எதிர்மறை விளைவுகளை உருவாக்கப் பார்க்கிறது அரசு
இந்த முகநூல்
குறிப்பை அப்போதும் யாரும் கவனிக்கவில்லை; இப்போதும் கவனிக்கவில்லை. எப்போதும்
எதிரெதிர் நிலைப்பாடுகளில் ஏதாவது ஒன்றின் ஆதரவான கருத்தை மட்டுமே எதிர்பார்க்கும்
நிலையில் பாசிசத் தன்மை கொண்ட அரசுகளின் நுண்ணிய நோக்கத்தை முன் வைக்கும்
குறிப்புகளை முகநூல் போன்ற சமூகத் தளச் செயல்பாட்டாளர்கள் கவனப்படுத்த மாட்டார்கள்
என்று நான் புரிந்து கொண்டேன். முகநூல் கட்சி கட்டி சண்டை போடும் இடமாக இருப்பது
வருத்தமாகவே இருக்கிறது.
தமிழக அரசு பற்றி
மட்டுமல்லாமல், மைய அரசு பற்றியும் ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
இந்தியாவில் செயல்படும் அரசுகள் – மைய, மாநில அரசுகள் சுதந்திரமானப் பல்வேறு
அமைப்புகளின் செயல்பாடுகளைக் கேள்விக் குள்ளாக்குவதன் மூலம் தங்கள் அதிகாரத்தைப்
பெருக்கிக் கொள்ளப்பார்க்கின்றன. சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி திரைப்படத்
தணிக்கைக் குழுவின் செயல்பாடுகளைக் குலைத்து விட்டால் அதன் பங்களிப்பு
அர்த்தமற்றதாகி விடும். அரசின் கொள்கை முடிவு எனச் சொல்லி விட்டால் நீதிமன்றம்,
வாயைத் திறக்க முடியாமல் ஆகிவிடும். மக்களின் பணத்தை விரயமாக்க முடியாது எனச்
சொல்லி கலை இலக்கிய அமைப்புகள், நூலகச் செயல்பாடு போன்றவற்றை நிறுத்தி விட
முடியும் என்றெல்லாம் நினைப்பது அரசுகள் வரம்பற்ற அதிகாரத்தைக் கைப்பற்ற
நினைக்கின்றன என்பதைத் தான் காட்டுகின்றன. தணிக்கைக் குழு அனுமதித்த படத்தை மாநில
அரசு தடை செய்து விட்டது எனக் காரணம் காட்டி மைய அரசு மாநில அரசின் எல்லைக்குள்
நுழையப் பார்க்கிறது. ஜனநாயக அமைப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அமைப்பு இருக்கிறது.
அந்த எல்லைகள் காக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் அரசதிகாரத்தைப் பயன்படுத்தி
எல்லை தாண்ட நினைப்பது நுண்ணிலைத் தீவிரவாதம் தான்.
05.இதனுடன் தொடர்பாக மேலும் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
இசுலாமிய
அமைப்புகள் எதிர் நிலை எடுத்துத் தடை கோரியதைத் தவறு எனச் சுட்டிக் காட்டும் அதே
நேரத்தில் அவர்களின் எதிர்ப்புணர்வின் நியாயம் பற்றியும் சொல்ல வேண்டும். இந்தியச்
சினிமா தொடர்ந்து முஸ்லீம்களை இந்த நாட்டின் இரண்டாம் நிலைக் குடிமக்களாகக்
காட்டுவதில் கவனம் செலுத்தி வந்துள்ளது. தமிழ்ச் சினிமாவும் விலக்கல்ல. இசுலாமியக்
கதாபாத்திரங்களை அதிகமும் எதிர்நிலையில் நிறுத்தும் போக்கு சுதந்திரத்துக்குப்
பிந்திய இந்திய சினிமாவின் மையமான போக்கு.. தமிழ் சினிமாவில் முஸ்லீம்கள் ஒன்றும்
தெரியாத அப்பாவியாகச் சித்திரிக்கப் பட்டதைச் சில படங்களில் பார்த்துள்ளேன் அந்த
எண்ணிக்கை மிகவும் குறைவு மட்டுமல்ல. அந்தப் படத்தின் மையமாக இல்லாத பாத்திரமாக
அது வந்து போயிருக்கும், ஆனால் பொதுச் சமூகம் வெறுத்து ஒதுக்கும் குற்றச்
செயல்பாடுகளோடு தொடர்புடையவர்களாகக் காட்டப்பட்ட இசுலாமியப் பாத்திரங்கள்
ஏராளம்.. இந்தியா –பாகிஸ்தான்
பிரிவினையைத் தொடர்ந்து இசுலாமியர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டியவர்கள் எனப்
பேசப்பட்ட அரசியலின் தொடர்ச்சியாகவே இத்தகைய காட்சிகள் திரைப்படங்களில் இடம்
பெற்றுக் கொண்டிருக்கின்றன. ”நாங்கள் பாகிஸ்தானிற்குச் செல்ல வேண்டியவர்கள் அல்ல;
இந்தியா தான் எங்கள் நாடு; இந்தியர்களாகவே பிறந்தோம்; வளர்ந்தோம்; எங்கள்
முன்னோர்களும் அப்படித்தான் இருந்தார்கள். இசுலாமியர்களாக ஆனதற்கு இன்றுள்ள
தனியொரு முஸ்லீம் காரணமல்ல; சமூக நெருக்கடிகளும் வரலாற்றுக் காரணிகளும்
இருக்கின்றன” என விளக்கிச் சொன்னாலும்
புரியாதவர்கள் – புரிந்து கொள்ள மறுப்பவர்கள் அந்தக் கருத்தை ஆழமாகப்
பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியொரு புரிதலை உடைய இசுலாமியர்கள் இந்தியாவை
விட்டு எக்காரணம் கொண்டும் வெளியேற மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். வெளியேற
வேண்டிய அவசியமும் இல்லை. அப்படியொரு நிர்ப்பந்தத்தை இந்த நாட்டில் செயல்படும் பல
ஊடகங்கள் உருவாக்க முனைப்புக் காட்டுகின்றன. அத்தகைய முனைப்பில், வெகுமக்களின்
மனக்கட்டமைப்பை உருவாக்கும் வணிக சினிமாவில் செயல்படுகிறவர்கள் அறிந்தும்
அறியாமலும் ஈடுபடுகின்றனர். அறியாதவர்களுக்கு விளங்கச் செய்ய வேண்டும்.
அறிந்தவர்களுக்கு நிர்ப்பந்தம் தர வேண்டும்.
நீண்டகாலமாகச் செய்யப்பட்டு வரும் இத்தீவினையை உடனடியாகத் தடுத்து
நிறுத்தும் விதமாகத் தடைகளை உருவாக்கலாம் என நினைத்தால் உடனடியாகப் பலன் கிடைப்பது
போலத் தோன்றலாம். ஆனால் அப்பலன் நீண்ட காலப் பலனாக இருக்காது.
இந்திய
சினிமாவில் ஏற்கெனவே ஆழமாகப் புரையோடிப் போயிருந்த இந்த நிலைப்பாட்டை-
இசுலாமியர்களை எதிர்நிலையில் நிறுத்தும் இந்தப் போக்கை - உலக அளவில்
வளர்த்தெடுக்கப்படும் இசுலாமிய வெறுப்பு நிலைபாடு கூடுதலாக்கிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் உலகமெங்கும் தீவிரவாதிகள் இசுலாமிய
அடையாளங்களோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள் எனத் திரைப்படங்களின் வழியாகச்
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கம்யூனிச வெறுப்பின் காலம் முடிந்த போன நிலையில்
இசுலாமிய வெறுப்பு, காசு பார்க்கும் ஒன்றாக உலகசினிமாவில்
வளர்த்தெடுக்கப்படுகிறது.
கமல்ஹாசன் தன்னை எப்போதும் கலைஞன் என்றோ, சுயாதீனமாகப்
படைப்பை உருவாக்குகிறேன் என்றோ, கலைஞனுக்கு உரிய உரிமையை விட்டுக் கொடுக்க
மாட்டேன் என்று பிடிவாதம் செய்கிறவரோ அல்ல. அவர் நடிகராக நடித்த படங்கள் முழுமையும்
பொழுது போக்கு வகைப்பட்டவை. நடிகர் என்ற எல்லையைத் தாண்டி பட உருவாக்கத்தில்
அவரும் பங்கேற்றுச் செய்த பேசும்படம், தேவர் மகன், மகாநதி, ஹேராம், குருதிப்
புனல், உன்னைப் போல் ஒருவன், தசாவதாரம் போன்றன சமகாலத் தமிழ்ச் சமூகத்தில்
பொதுப்புத்தி நிலையிலும், அறிவார்ந்த தளங்களிலும் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை
விவாதப் பொருளாக்கிய படங்கள். அப்படங்கள் வழியாக வெளிப்பட்ட கருத்துக்களும்,
தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்திய- ஏற்படுத்தக் கூடிய –விளைவுகள் பற்றி நானே பல தடவை
எழுதியிருக்கிறேன். மைய நீரோட்டக் கருத்தோடு ஒத்துப் போகும் நிலைபாட்டை முன்
வைப்பவர் என்பதைத் தீவிரமாகச் சினிமாவை அணுகும் பலரும் சுட்டிக் காட்டியுள்ளோம்.
அதற்கெல்லாம் அவரது ஒப்புதல்களோ, மறுப்புகளோ கிடைத்ததில்லை. அவரது போக்கில்
நடித்துக் கொண்டும், படங்களைத் தயாரித்துக் கொண்டும் நகர்ந்து கொண்டே
இருந்துள்ளனர். உலக
நாயகன், உலகப் படம் எடுக்கும் திறமையுள்ள நபர் என்றெல்லாம் தன்னைக் கருதிக்
கொள்ளும் கமல்ஹாசனும் அந்த வியாபாரத்தில் இந்தப் படம் மூலம் இறங்க நினைத்தார்.
அதனைத் தடுத்து நிறுத்தப் போவதாகக் கருதி இசுலாமிய அமைப்புகள் அவருக்கு உதவி
செய்து விட்டார்கள். இந்த எதிர்ப்பின் விளைவாக அவருக்கு ஏற்பட்டது நட்டத்தைவிட
லாபமே அதிகம் .
இப்போது அவரது நோக்கம் உலகச் சந்தையில் நுழைவது. அதற்கேற்ற
களமாகவும் கருத்தாகவும் நினைத்தது தான் விஸ்வரூபம். படத்தை ஆப்கனிஸ்தான்
பின்னணியில் இசுலாமியத் தீவிரவாத உள்ளடக்கத்தோடு எடுத்துள்ளார். முழுமையாக உலகச்
சந்தைக்குள் நுழைவதற்கான முயற்சியில் திட்டமிட்டுத் தேர்வு செய்து தொடங்கிய
வியாபாரத் திட்டம். இதுவரைத் தமிழக எல்லைக்குள் இயங்கிய அவரது கருத்து நிலையின்
நீட்சியாகவே இந்தப் படம் இருக்கும் என்பதில் எனக்கு எப்போதும் சந்தேகம்
இருந்ததில்லை. தமிழில் தொழில் நுட்ப ரீதியாகத் திறமைபெற்றுள்ள இயக்குநர்களாலும்,
பெருஞ்செலவில் வெற்றிப் படங்களுக்கான பங்கீடுகளைக் கலந்து படங்கள்
தயாரிக்கிறவர்களாலும் தமிழ்ச் சமூகத்திற்குப் பெரும் பாதங்கங்கள் தான்
உருவாக்கப்படுகின்றன. ஜனநாயகப் பாதையிலிருந்து விலகியவர்களாகத் தமிழர்களை ஆக்கும் ஆபத்தான
நோக்கங்களை அப்படங்கள் கொண்டிருந்தன. விஸ்வரூபம் அதன் இப்போதைய வரவு என்று
சொல்வதோடு தமிழகம் உலக வரைப்படத்திற்குள் நுழைக்கப்பட்டிருக்கிறது என்பதையும்
சொல்ல வேண்டும். உலகத் தீவிரவாதத்தோடு தொடர்புடைய பூமியாக தமிழகத்தை ஆக்கிக்
காட்டியிருப்பதை வேதனையோடு ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இது தமிழர்களுக்கு
கமல்ஹாசன் வழியாகக் கிடைத்துள்ள பெருமையெனத் தமிழர்கள் மார்தட்டிக் கொள்ளலாம்.
எல்லாவற்றையும் மார்தட்டிக் கொண்டாடுவதில் தமிழர்கள் சளைப்பதில்லை தானே.
கருத்துகள்