இடிந்தகரை X கூடங்குளம் : நிரந்தரத்தைத் தற்காலிகமாக்கும் எத்தணிப்புகள்
”ஆத்துக்குப் போனயா?
அழகரைச் சேவிச்சயா?” – இந்தச் சொற்றொடரை மதுரை மாவட்டத்துக்காரர்கள் தன் வாழ்நாளில் பல தடவை
உச்சரிக்க நான் கேட்டிருக்கிறேன். வாயால் சொல்லியிருக்கா விட்டாலும் யார் வாயாவது
சொல்லத் தங்கள் செவி வழியாகவாவது பலரும் கேட்டிருப்பார்கள். செவிக்கும் வாய்க்கும்
பழக்கப்பட்ட இந்தச் சொற்றொடர் தரும் அனுபவத்தை நேரில் பெற விருப்பம் காட்டுவது
வட்டாரம் சார்ந்த வாழ்தலின் அடையாளம்.
அந்த வாக்கியம் இன்று சின்னஞ் சிறியதாகப்
போய்விட்ட மதுரை மாவட்டத்துக்கு உரியது மட்டுமல்ல. மேற்குத் தொடர்ச்சி மலையில்
உற்பத்தியாகித் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் எனப் பல
மாவட்டங்களின் வழியாக ஓடி வங்கக் கடலில் கலக்கும் வைகை ஆற்று நீரோடு கொள்வினையும்
கொடுப்பினையும் கொண்டுள்ள மாவட்டங்கள் அனைத்திற்கும் பொதுவான மரபுத் தொடரும்
கூட.
சித்திரை மாதத்துப்
பௌர்ணமிக்கு முன்னும் பின்னுமாக மதுரையில் நடக்கும் மீனாட்சி- சுந்தரேஸ்வரர்
திருமணம் பல நூறு ஆண்டுகளாக நடக்கும் பெருவிழா. அவ்விழாவின் ஒரு பகுதியாக
நடப்பதுதான் அழகர் ஆற்றில் இறங்கும் காட்சி. மதுரை நகர மக்களால்
எதிர்கொண்டழைக்கப்படும் எதிர்சேவை முதல்நாள் நாள் நிகழ்வு. அதில் பங்கேற்பவர்கள்
பெரும்பாலும் மதுரையின் நகரக் குடிமக்கள். ஆனால் மதுரையச் சுற்றியுள்ள
கிராமங்களின் மனிதர்கள் வந்து குவியும் நேரம் அடுத்த நாள் காலை தான். அவர்கள்
அனைவரும் வந்து ஆற்றில் நிற்க அழகரும் ஆற்றுக்கு வந்து சேருவார். தங்கக் குதிரை வாகனத்தில், பட்டாடை கட்டிக்
கொண்டு, குதித்துக் குதித்து வரும் அழகரைத் தரிசிக்கக் கூடும் கூட்டத்தைப்
பார்த்துத் தான் எள்ளைப் போட்டால் எண்ணையாகி விடும் கூட்டம் என்ற இன்னொரு மரபுத்
தொடர் உருவானதோ என நினைக்குமளவுக்குக் கூட்டம் நெருங்கி நிற்கும். ஒவ்வொரு ஆண்டும்
லட்சக் கணக்கான மக்கள் மதுரையில் வந்து குவிந்து கொண்டிருக்கிறார்கள். அழகரைத்
தரிசிக்க வரும் கூட்டமா? அல்லது அந்தக் கூட்டத்தைப் பார்க்க வரும் கூட்டமா? எனச்
சொல்ல முடியாத அளவுக்கு ஒவ்வொரு ஆண்டும் கூடும் கூட்டம் எனக்கு விவரம் தெரிந்த
இந்த 25 ஆண்டுகளில் குறையவே இல்லை.
அழகர் ஆற்றில் இறங்கும்
இந்த நிகழ்வு மதுரையின் குறுக்கே ஓடும் வைகை ஆற்றில் நடக்கும் நிகழ்வு மட்டும் என
நினைத்து விட வேண்டாம். மதுரை நகரில் நடப்பது போல மதுரை மாவட்டத்தின் பல இடங்களில்
சித்திரா பௌர்ணமியன்று அழகர் ஆற்றில் இறங்கும் சடங்கின் நகல்கள் நடந்து
கொண்டிருக்கின்றன. மதுரைக்குப் போக முடியாதவர்கள் தங்கள் ஊருக்குப்
பக்கத்திலிருக்கும் சின்ன நீரோடையையே வைகை ஆறாகவும், தங்கள் ஊரில் இருக்கும்
கிருஷ்ணனின் உற்சவ மூர்த்தியையே அழகரின் வடிவமாகவும் ஆக்கிக் கொள்கிறார்கள்.
நம்பிக்கையாகத் தொடங்கி, சடங்காக மாறி, நிகழ்வாக நடத்தப்பட்டு, விழாவாகப் பரிமாணம்
கொள்ளும் சமய நடவடிக்கைகள் பெருங்கூட்டத்தை ஈர்க்கும் காரணிகள் என்பதை உலக நாடுகள்
பலவற்றிலும் காண முடிகிறது. இந்தியா சமயங்களின் நாடு. சமய நடவடிக்கைகள் பெருங்கூட்டத்திற்கான
தின்பண்டம்; ஈர்ப்புக் குவியல்.
”ஆத்துக்குப் போனயா?
அழகரைச் சேவிச்சயா?” போன்றதொரு வாக்கியம்; நந்தனைப் போன்றதொரு பக்தன்; நாகூர் தர்ஹா
போன்றதொரு இடம், அன்னை வேளாங்கன்னி
போன்றதொரு பெயர்; ஜல்லிக்கட்டு போன்றதொரு விளையாட்டு கூத்து
போன்றதொரு கலைவடிவம் மக்களால்
திரும்பத்திரும்ப உச்சரிக்கப்படும் ஒன்றாக அல்லது திரும்பத் திரும்பச் செவிகளில்
விழுந்து விழுந்து உருவாகும் பிம்பங்களின் அடுக்காக மாறுவதற்குப் பழைய நாட்களில்
இருந்த காரணங்கள் பெரும்பாலும் சமயநம்பிக்கைகளோடும் சடங்குகளோடும் தொடர்புடையன.
ஆண்டுக்கொரு முறையே அப்பிம்பங்கள் தொடர்புடைய சடங்குகள் நிகழ்த்தப்பட்டன;படுகின்றன
என்றாலும், அவை தொடர்பான நம்பிக்கைகள் அவை
உச்சரிக்கப் படும் ஒவ்வொரு நாளும் உயிர் பெற்றுக் கொண்டே இருக்கின்றன. அப்படி
உயிர் பெறுவதின் வழியாகவே பண்பாட்டுக் கூறுகளாக ஆகி நிரந்தரத் தன்மை பெற்றுள்ளன.
நிகழ்காலத்தில் சமயங்களால்
மறு உற்பத்தி செய்யப்படும் பிம்ப அடுக்குகளும் அவை உருவாக்கும் மன எழுச்சிகளும்
பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால்
அவற்றுக்கு இணையான இடத்தை வேறு வகையான பிம்ப அடுக்குகளும் அவற்றினால் உருவாகும் மன
எழுச்சிகளும் நிரப்பி வருகின்றன. கூடங்குளம் என்ற இடம் சார்ந்து எழுந்து
நின்ற பிரமாண்ட பிம்பங்களும் அதன் வழியாகக் கிடைத்த மன எழுச்சிகளும் உருவாக்கிய
நிரந்தரத்தை இடிந்தகரை என்னும் சின்னக் கிராமமும் அங்கு திரளும் மனிதத்
தலைகளும் தற்காலிகப் பரிமாணம் கொண்டவையாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தப்
போராட்டம் வாழ்க்கையின் பண்பாடாக ஆகப் போகிறதா? என்ற அச்சம் வளர்ந்து
கொண்டிருக்கிறது. இந்த அச்சத்தின் பின்னணியில் ஊடகங்களின் வலைப்பின்னலும் அவை
அடுக்கிக் காட்டும் பிம்பங்களும் வந்து வந்து போகின்றன. நிரந்தரத்தை நிலை குலையச்
செய்யும் கற்பனையின் அளவுகளை அதிகமாக்கிக் காட்டுகின்றன. கூடங்குள அணு உலை
நிரந்தரமா? அல்லது தற்காலிகமா? என்பதைப் போல இடிந்தகரை என்னும் கிராமம் நிரந்தரமாக
இருக்கப் போகின்றதா? அங்கு எழுந்துள்ள போராட்டங்கள் தற்காலிகமானவையாக ஆக்கப்பட
இருக்கின்றனவா? இதை முடிவு செய்வதில் போராட்டக்காரர்களுக்கு இருக்கும் அதே அளவு
பங்கு ஊடகங்களுக்கும் இருக்கப் போகின்றன. இவ்விரண்டில் யார் நினைத்தாலும் ஒன்றை
தற்காலிகமானதாக ஆக்கி விட முடியும். இன்னொன்றை நிரந்தரம் என நிறுவிட முடியும்.எது
நடக்கப் போகிறது? இன்று தமிழகத்தின் முன்னுள்ள முக்கியமான கேள்வி.
கூடங்குளம் என்னும் இடப்
பெயர், அணு உலை என்னும் கற்பனையோடு சேர்க்கப்பட்ட 1988, நவம்பர் 20 முதல் நிகழ்கால
வாழ்வின் தேவையாக- தமிழக மக்களின் சொகுசு வாழ்க்கைக்குத் தேவையான மின்சாரத்தைத்
தரப்போகும் நம்பிக்கையாக முன் நிறுத்தப்பட்டது. அந்த நம்பிக்கையோடு கூடவே
கூடங்குளம் அமைந்துள்ள கடற்கரை கிராமங்கள் எல்லாம் வளம் கொழிக்கும் பகுதியாக
மாறும் என்ற கூடுதல் நம்பிக்கையும் சேர்த்தே தரப்பட்டது. ஆனால், நம்பிக்கைகள்
நேர்மறை நிகழ்வுகளாக ஆவதற்கு முன்பே அதனையொத்த நிகழ்வுகளின் எதிர்மறை பிம்பங்களால்
அசையத் தொடங்கியது. கூடங்குளத்திற்கு அணு உலைகளை அனுப்பி வைத்த ரஷ்யாவின்
செர்நோபில் விபத்து உண்டாக்கிய அதிர்வுகளை விட ஜப்பானின் புகுஷிமா உண்டாக்கிய
அசைவுகள் அதிர்ச்சிகரமானவை.

பிம்ப அடுக்குகளை
உருவாக்குவதில் இன்று அபரிமிதமாக வளர்ந்துள்ள காட்சி ஊடகங்கள் – அதிலும் தொலைக்
காட்சி அலைவரிசை என்னும் காட்சி ஊடகங்கள் முன்னணியில் இருக்கின்றன. அவை
உருவாக்கும் பிம்ப அடுக்குகளும் அதன் தொடர்ச்சியான மன எழுச்சிகளும் ஒருவிதத்தில்
சமயங்கள் எழுப்பிய மன எழுச்சியோடும் பிம்ப அடுக்குகளோடும் நெருங்கிய
உறவுடையனவாக-ஒத்த தன்மையுடையனவாக இருக்கின்றன. அந்த ஒத்த தன்மையாக- உறவாக நான்
நினைப்பதை விளக்க நிலையாமையின் பரிமாணம் என்ற சொற்சேர்க்கையைப் பயன்படுத்த
விரும்புகிறேன். நிலையாமையின் எதிர்வாக இருப்பது நிலை. இதனை தற்காலிகம் X
நிரந்தரம் என்ற எதிர்வுச் சொற்களால் சுட்டிக்காட்டவும் முடியும். நிரந்தரமானவை
என்பன காலத்தின் கட்டுக்குள் இருப்பன. காலத்தின் கணக்குகளான வினாடிகள்,
நிமிடங்கள், மணிகள், நாட்கள் வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் என்பனவே நிரந்தரத்தின்
அடையாளங்கள். வினாடிகள் தொடங்கிப் பெருகும் காலக்கட்டு ஆண்டுகளில் முடிந்து
யுகங்களில் நிலைபெறுகின்றன. ஆனால் தற்காலிகங்கள் காலக் கணக்குக்குக்
கட்டுப்படாதவை.
யுகங்கள் தோறும்
நிலைத்திருப்பதாக நம்பப்படும் கடவுள் அல்லது பிரபஞ்சம் அல்லது பூமிப்பரப்பு
எப்படியான நிரந்தரம் என்பதை, எப்படி விளக்கினாலும் நமது மனம் கற்பனையின் உதவியோடு
தான் பற்றிக் கொள்கிறது. அந்தப் பற்றுதலை நம்பிக்கையின்மையின் மீதான நம்பிக்கை
எனக் கொள்ளலாம். ஆம் இந்தப் பூமிப்பரப்பு இப்படியாக இருக்கிறது என்பதையும், இந்தப்
பிரபஞ்சம் இப்படித்தான் தோன்றி வளர்ந்தது என்பதையும், இதற்கெல்லாம் காரணமாக
இருக்கும் கடவுள் இப்படியாகத்தான் இருக்கிறார் என்பதையும் நாம் நம்புகிறோம். அதே
நேரத்தில் நம்பாமலும் இருக்கிறோம். நம்பிக்கையின்மையின் மீது உருவாகும் இந்த
நம்பிக்கை பெருமளவில் தற்காலிகத்தன்மையோடு கூடியன. இன்று இருக்கும் நம்பிக்கை
போன்றதல்ல; நேற்று வைத்திருந்த நம்பிக்கை. நாளை வைக்கப்போகும் நம்பிக்கையும்
அப்படியே. அதன் அளவு களும் பரிமாணங்களும் நிச்சயம் கூடுதலானவையாக அல்லது குறைவானவையாக
இருக்கப் போகின்றன.
கூடங்குளம் என்ற இடம்
சார்ந்து உருவாக்கப்பட்ட நம்பிக்கையை ஊடகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தற்காலிகத்தை
நோக்கி நகர்த்தி விட்டு,இடிந்தகரை மக்களின் போராட்டத்தை நிரந்தரம் என நிலை
நிறுத்தும் வேலையைத் தானாகவே செய்யும் என எதிர்பார்க்க முடியாது. அப்படியான ஒரு
நோக்கம் அவைகளை நிர்வாகம் செய்யும் முதலாளிகளுக்கும், அவற்றில் பணிபுரியும்
பணியாளர்களுக்கும் இருக்கும் என எதிர்பார்ப்பது நியாயமும் இல்லை. ஆனால் ஊடகங்களின்
இயங்குமுறையையும் அதனைத் தீர்மானிக்கும் ஊடகப்பசியும் அப்படியொரு நெருக்கடியை
நோக்கி நகர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்பதையும் தள்ளி விட
முடியாது. மன எழுச்சிகள் நிரம்பிய அல்லது எழுச்சிகளைத் தணிக்கின்ற பிம்ப
அடுக்குகளை உருவாக்கி அதன் நுகர்வோர்களான நடுத்தர வர்க்கத்திற்குத் தின்னக்
கொடுக்கும் ஊடகங்களும் அவற்றில் பணியாற்றும் பணியாளர்களும் நிரந்தரமான
நம்பிக்கைகளை நாடி அலைவதை விடத்
தற்காலிகமான பிம்ப அடுக்குகளைத் தேடியே அலைகின்றனர். பழையனவாகப் போன அரசியல்
முகங்களுக்குப் பதிலாகப் புதிய முகங்களைத் தயார்படுத்துகின்றன. ஊழல் முகங்களைக்
காட்டுவதற்குப் பதிலாக, அம்முகங்களைக் கிழித்துக் காட்டும் புதிய பிம்பங்களை முன்
வைக்கும் நோக்கத்தோடு விவாதங்களையும், விசாரணைகளையும் விரித்துக் காட்டுகின்றன.
அப்படி விரிப்பது முடிவைகளை நோக்கி நகர்த்துவதற்காக அல்ல என்பதைத் தொடர்ந்து
அவற்றைக் கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சுலபமாகப் புரியும்.
பல லட்சம் கோடிகளில்
நடக்கும் நிதி முறைகேடுகள் வெளி வரும்போது ஊடகங்கள் காட்டும் ஆர்வம் எப்படிப்
பட்டவையாக இருக்கின்றன. நிலம், ஆறும், தாதுக்கள், மணல் என அனைத்திலும் நடக்கும்
முறைகேடுகளை அம்பலத்தி அலசும் விவாதங்களில் வெளிப்படும் உற்சாகமும் வாதத்திறமையும்
அவற்றைத் தடுக்கும் நோக்கம் கொண்டவையாக இல்லை. அப்படி இருந்தால் இந்த ஊடகங்கள்
கேட்க வேண்டிய கேள்விகளை வல்லுநர்களிடம் விவாதத்துக்கான கேள்வியாக மட்டும்
வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. உற்சாகமாகி பேசிக் காட்ட முடியும் என்பதற்கான
ஆர்வத்தைத் தள்ளி வைத்து விட்டு, பொறுப்பான அதிகாரிகளையும் ஆட்சியாளர்களையும்
பொறுப்பாக்கும் முயற்சியில் இறங்கியாக வேண்டும்.
ஒரு கொலைச்
செய்தியிலிருந்து இன்னொரு கொலைச் செய்திக்குத் தாவுவதைப் போலவே ஒரு விபத்தைப்
பற்றிப் பேசி விட்டு இன்னொரு விபத்துக்குத் தாவி விடுகின்றன. தனிநபர்களைப்
பாதிக்கும் மோசடிகளுக்குத் தரும் அதே முக்கியத்துவத்தையே தேசத்தின் ஒட்டு மொத்த
வாழ்க்கையையும் பாதிக்கும் ஊழலுக்கும் தருகின்றன. நமது பொருளாதாரத்தின்
அடித்தளத்தைக் குலைக்கும் ஒப்பந்தங்கள், விதிமீறல்கள், சலுகைகள் என்பனவற்றைக் கூட
விவாதிப்பதற்கான பேசுபொருளாகவும், நேரடிக் காட்சிகளுக்கான பிம்பங்களாகவும்
மாற்றிக் கொண்டிருக்கின்ற ஊடகங்கள் இடிந்த கரைப் போராட்டத்தையும் கூட அப்படியே
பார்க்கின்றன.
அணு உலைகளில் எரிபொருள்
நிரப்புவதைத் தடுக்கும் விதமாக இடிந்த கரை மக்கள் நடத்திய போராட்டத்தை முதல் நாள்
கண்டுகொள்ளாத ஊடகங்கள் அன்றிரவு கடற்கரையிலேயே பெருந்திரளான மனிதத் தலைகள்
படுத்துக் கிடந்த காட்சிக்குப் பின்னால் அணுகிய விதம் வேறானது. போராடும் மக்களின்
பக்கத்திலிருந்து எந்தக் காமிராவின் கண்களும் மோதலைப் பார்க்கவில்லை. காவல்
துறையின் முதுகுக்குப் பின்னால் இருந்தே காமிராவின் கண்கள் திறந்தன. வெவ்வேறு
ஊர்களில் போராட்டம் வெடித்த போது காவலர்களுக்கு இருந்த பதைபதைப்பை ஊடகங்களின்
காட்சிப் படுத்துதல் கூடுதலாக்கிக் காட்டின. போராடும் மக்களைக் கட்டுக்கடங்காமல்
திமிறும் வன்முறையாளர்களாகச் சித்திரித்தன. அந்த நாள் தொடங்கி ஒவ்வொரு நாள்
நிகழ்வையும் ஒரு சாகசக் காட்சிகள் நிரம்பிய திரைப்படத்தின் திருப்பங்களைப் போலச்
சித்திரித்து வரும் ஊடகங்கள் ஒரு நாள் ஒட்டு மொத்தமாகப் பின் வாங்கிக் கொள்ளவும்
செய்யலாம். அவர்களின் பார்வையிலிருந்து போராட்டம் விலக்கப்பட்டால் போராட்டமே
காணாமல் போய்விட்டது என்ற தோற்றத்தை உண்டாக்கிக் காட்டி விட முடியும் என்ற
நம்பிக்கையில். வீட்டின் தொலைக்காட்சியில் உலகத் தரிசனம் செய்யும் நடுத்தர
வர்க்கம் அதை நம்பவும் செய்யலாம். .
எழுச்சி பெற்றுள்ள
கூடங் குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் ஊடகங்களால்உருவாக்கப் படாத போராட்டம்
என்பது தான் அதன் வலிமை. அணு உலை அமைந்துள்ள பகுதியைச் சுற்றியுள்ள கிராமத்து
மக்களின் உயிருக்கு ஒவ்வொரு நாளும் அச்சத்தை உண்டாக்கி விடப் போகும் இத்திட்டத்தை
எதிர்க்கும் போராட்டம் வெறும் அணு உலை எதிர்ப்புப் போராட்டமாக மட்டும் இல்லாமல்
வேறு தளங்களுக்கும் நகர்ந்து கொண்டிருக்கிறது. நகர்ந்தாக வேண்டும். தனியார் மயம்,
தாராளமயம், உலகமயம் என்ற கொள்கைத் திட்டங்களின் அடிப்படையில் இந்தியாவின்
வளங்களும், வளர்ச்சியும் அந்நிய நாட்டு முதலாளிகளின் கையில் ஒப்படைக்கப் படுவதை
சுட்டிக் காட்டி, அவற்றை எதிர்க்கப் போகும் பல போராட்டங்களின் முன்னோடிப் பாதையாக
ஆக்கப்பட வேண்டும். அந்தப் பாதையில் இன்னும் பல போராட்டங்களை இந்திய மக்கள் நடத்த
வேண்டிய தேவைகள் உள்ளன.
இப்போதுள்ள அரசும் சரி, இனி வரப்போகும் அரசுகளும் சரி
இந்தப் பாதையைத் தொடர்ந்து அழித்துவிடவே பார்ப்பார்கள். அரசுகளிடம் எச்சரிக்கையாக
இருப்பதைப் போலவே போராட்டப் பாதையை உருவாக்கித் தருவதுபோலப் பாசாங்கு செய்யும்
ஊடகங்களிடமும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும். ஏனென்றால்
நிகழ்காலப் பின் நவீனத்துவ மனநிலையை –தற்காலிகத்தை நிரந்தரமென நம்பச் செய்யும்
போக்கை- ஊடகங்கள் தான் முன் நின்று உருவாக்குகின்றன.
============================================================================
நன்றி: அம்ருதா.அக்டோபர்,2012
கருத்துகள்