பெயரிலும் இருக்கிறது; முகவரியிலும் இருக்கிறது



முன்குறிப்பு:
இந்தக்கட்டுரையில் இடம்பெறும் பெயர்களும் தகவல்களும் உண்மையானவை; உண்மையத் தவிர வேறில்லை; உண்மையை உறுதி செய்வதற்காகக் கற்பனை தவிர்க்கப் பட்டுள்ளது.
=============================================
உலக நாடக இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற பெயரைத் தமிழில் ‘செகசுப்பியர்’ என்று ஒருவர் மொழிபெயர்த்து எழுதி இருந்தார் ஒருவர். செகப்பிரியர், செகசிற்பியர் என்ற மொழிபெயர்ப்புகள் எல்லாம் அந்தப் பெயருக்குத் தமிழில் உண்டு.
எனக்கோ பொல்லாத கோபம். பெயரை மொழிபெயர்க்கலாமா? பெயரின் உச்சரிப்பை – ஓசையை மாற்றலாமா?
இதற்காகப் பலரிடம் சண்டை போட்டதுண்டு. பலர் சொன்ன சமாதானங்கள் எதிலும் நான் உடன்பட்டதில்லை. பெயர் என்பது ஒருவரின் தனிப்பட்ட அடையாளம்.; அவனது அந்தரங்கம். அதில் நுழைந்து பார்க்கவும், கேலி செய்யவும் விமரிசனம் செய்யவும் இன்னொருவருக்கு உரிமையில்லை. அதனை மாற்றிச் சொல்லவோ, எழுதவோ இன்னொருவருக்கு அதிகாரம் இல்லை என்று நம்பியிருந்தேன். அதே நேரத்தில் ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட் கதாபாத்திரத்தின் பெயரை, ‘அமலாதித்தன்’ என மொழி மாற்றம் செய்து எழுதி இருக்கிறார் ஒருவர். இதைப் படித்தபோது எனக்குக் கோபம் வரவில்லை. இந்த மாற்றம் தேவையென்று கூட நினைத்ததுண்டு. ஒரு கதாபாத்திரம் அதன் மூலமொழிப் பெயருடன் வருவதைவிட, வாசகனின் சொந்த மொழிச் சாயலுடன் வரும்பொழுது வாசகனின் ஈடுபாடு கூடுகிறது என்றே நம்பினேன்; நம்புகிறேன். இந்த நம்பிக்கை குழப்பமானதாகக் கூடத் தோன்றலாம்.
ஷேக்ஸ்பியரும் பெயர்தான்; ஹேம்லெட்டும் பெயர்தான். ஒன்றை மாற்றலாம்; இன்னொன்றை மாற்றக்கூடாது என்றால் குழப்பமாகத் தானே இருக்கும். ஆனால் இதற்குச் சமாதானமும் இருக்கிறது. ஷேக்ஸ்பியர் நபரின் பெயர்; ஹேம்லெட் ஒரு கதாபாத்திரத்தின் பெயர். முதல் பெயர் உண்மை; இரண்டாம் பெயர் புனைவு. இந்த அடிப்படையில் தான் வடமொழிப் பெயர்களான ராம், லக்ஷ்மண்கள் முறையே இராமன், இலக்குவன் என்று கம்பனால் மாற்றப்பட்டன. முதலில் நிற்பன. இரண்டாவது நிற்பன தமிழ்ச் சாயல் கொண்டன மற்றுமல்ல; தமிழ் இலக்கணத்தையும் தழுவியது.

இன்று பெயர் வைப்பதும் வைத்த பெயரை மாற்றம் செய்வதும் வெறும் சாயலுக்காகவும் இலக்கணத்திற்காகவும் மட்டுமல்ல. அதன் பின்னணியில் இருப்பது அரசியல். ஒரு பேரடையாளம், தன் கீழ் உள்ள சிறுசிறு அடையாளங்களை விழுங்கிக் கொண்டு , வீங்கிப் பெருக்க முனைகிறபோது அதனைத் தடுத்தாக வேண்டும் என்ற உணர்வு கொண்ட ஒரு முன்னணிப் படையின் வீரம் செறிந்த நடைப்பயணம் இது. ‘ நீ தரும் அடையாளங்கள் எதுவும் வேண்டாம்’ என்பதும், ‘ எனது மொழியிலேயே எனது அடையாளத்தை உருவாக்கிக் கொள்வேன்’ என்பதும் இதன் பின்னே இருக்கிறது. அந்த விதத்தில் மொழி அரசியல்.

பெயரெனும் அடையாளம்

எனது பெயரை நான் அ.ராமசாமி என்று எழுதுகிறேன். ஆனால் மற்றவர்கள் எழுதும்போது இவ்வாறு எழுத மறுக்கின்றனர். சிலர், ‘இராமசாமி’ எனவும், வேறு சிலர் ‘ ராமசுவாமி’ எனவும் எழுதுகின்றனர். இன்னும் சிலரோ, ‘ராமஸ்வாமி’ எனவும் எழுதுகின்றனர். இகரம் சேர்த்து எழுதுகிறவர்களுக்கு இலக்கணம் முக்கியம். தமிழில் ரகர ஒற்று மொழிமுதல் வாரா; அதனால் தான் கம்பன் இராமன் என்று எழுதினான் என வாதிடுவர். சாமியைச் சுவாமியாகவும், ஸ்வாமியாகவும் ஆக்குபவர்களுக்குக் கடவுளின் அவதாரம் முக்கியம். அதனால் வெறும் சாமி அல்ல; சுவாமி அல்லது ஸ்வாமி.

எனக்கு என் பெயர் முக்கியம். நான் எழுதுவது அ.ராமசாமி. ஒரு நபர் ஏற்கெனவே உள்ள விதிகளுக்கு முழுவதும் ஒத்துப் போவதும், மாற்றத்தக்கது எனக் கருதும்பொழுது மாற்ற முயல்வதும் அவரது விருப்பம் சார்ந்தது. விதிகள் எழுதப்படுவதும் உண்டு; மீறப்படுவதும் உண்டு. மீறினால்தான் மாற்றம் நிகழும். இலக்கண விதிகள் மாறும்பொழுதே புதிய சொற்கள் வந்து சேரும். அந்த மொழி வளரும். ராமசாமியை ராமசாமி என்றே எழுத வேண்டும் என விருப்பம் காட்டியது போல அந்தப் பெயரை விரும்பாமல் போன தருணங்களும் பல உண்டு. பெரியார் ஈ.வெ.ராமசாமியின் பெயரை நமக்கு வைத்திருக்கிறார்கள் என்பதற்காகப் பெருமையும், துக்ளக் ஆசிரியர் சோவின் பெயரும் இதுதான் என்பதால் சிறுமையும் அடைந்ததுண்டு. எழுத்தாளர் சுந்தரராமசாமியை அவரது நண்பர்கள் ‘ராமசாமி’ என அழைக்கும்பொழுது என்னுடைய பெயரும் ‘அதுதான்’ என்று மகிழ்வேன். அவர் ‘சுரா.,’ எனக் கையெழுத்திடுவது போல நானும் ’அரா’ எனப்போடுவதும் உண்டு. ஆனால் புதுவை மாநில அமைச்சர் ஒருவர் அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டுகளில் மாட்டிக் கொண்டு முழித்தார். அதைப்பேப்பரில் படிப்பவர்கள் என்னைப் பார்ப்பார்கள். நான் குறுகிப்போவேன்; கூச்சம் கொள்வேன்.

எனது பெயர் குறித்து நான் அடைந்த பெருமிதங்களை விடக் குற்ற மனப்பான்மைகளே கூடுதலானவை.1992 டிசம்பர் 6–ந் தேதி அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்ட நாள்.டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவுநாள் என்ற வரலாறு அழிக்கப்பட்டு , பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்ற புதிய தகவல் அதன் மேல் எழுதப்பட்டது. இந்தப் பின்னணியில் இருந்த பெயர் ராமன். அந்தப் பெயர் எனது பெயரில் பாதியாக இருக்கிறதே என்பதில் எனக்கு ஆற்ற முடியாத வருத்தமும் இருந்தது. அதைப் போக்க ‘ராம’ என்ற முன்னொட்டு கொண்ட ஒரு நூறு பேரைத் திரட்டி மேடையில் ஏறி, ஒரே முழக்கமாகக் கூவி , அந்தப் பெயரை விட்டுவிடலாம் என்று திட்டம் போட்டதுண்டு. நூறு பேர்களைத் திரட்டும் திராணி இல்லாமல் போனதால், ‘ பெயரில் என்ன இருக்கிறது?’ என்று சமாதானம் செய்து கொண்டேன். பெரியார் ஈ.வெ.ராமசாமியே தனது பெயரை மாற்ற வேண்டும் என நினைக்கவில்லை; நாம் என்ன அவரைவிடப் பெரிய ஆளா..? என்று கூடுதல் சமாதானம் வேறு. ‘அ.ராமசாமி’ என்ற பெயர் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது. நானாவது எனது அப்பாவின் பெயருக்கான முதல் எழுத்தை (initial) சேர்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எனது நண்பர்களில் சிலர் அதைச் சேர்த்துக் கொள்ள விரும்பியதே இல்லை.’ தான் இன்னாருடைய மகன்’ என்ற அடையாளமும் , பாதுகாப்பும் பல நேரங்களில் தொல்லையாக இருக்கிறது என்பார் அருணன். புதுவையில் உள்ள அவருக்கு அவரது தந்தை மீதும், அவரது அதிகாரத்தின் மீதும் கோபம். இன்னொரு நண்பரோ அந்த எழுத்தைத் தனது பெயருக்குப் பின்னால் மட்டுமே போடுவார். கண்ணன். எம். என்று. அவரைப் பொறுத்த மட்டில் முன்னேற்றத்தில் –இருத்தலில் தந்தையின் பங்கு எதுவும் இல்லை எனச் சொல்ல வேண்டும். என்றாலும் அந்த இனிஷியலும் இருந்துவிட்டுப் போகட்டும் என்பார்.

பெயரின் அதிகாரம்.

நீங்களும் உங்கள் பெயரைக் குறித்து யோசித்துப் பாருங்கள். வைக்கப்பட்ட பெயர் ஒன்றுதானா..? அழைக்கப்படும் பெயரும் அதுதானா..? உங்கள் பெயரை உங்கள் காதலனோ , காதலியோ நண்பனோ சுருக்கிச் சொன்னதில்லையா..? நிச்சயம் இதில் ஒன்று நடந்துதான் இருக்கும். நான் பலதடவை யோசித்திருக்கிறேன். ஒருவனுக்கோ ஒருத்திக்கோ நிரந்தரமான பெயர் சூட்டுதலில் அதிகாரம் ஒன்று இருக்கத்தான் செய்கிறது. இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என எம்மதத்தைச் சேர்ந்தவராயினும் பெயரிடுவதில் குடும்ப உறவும், அதன் சுமையும் தூக்கி வைக்கப்படுகிறது. ஆனால் இந்து மதத்தில் அதன் ஊடாக மதத்தின் அதிகாரமும் சாதியின் சிந்தனைகளும் பயணம் செய்கின்றன.

ராமசாமி என்ற பெயரில் இருப்பது அவனது தாத்தாவின் பெயர். அவரைப் போலவே அவனும் விளங்க வேண்டும் என்பது அந்தப் பெயரிடுதலின் நோக்கம். தாத்தாவுக்கு தாத்தா.. அவருக்குத் தாத்தா என்று பின்னோக்கிப் பார்த்தால் அந்தப் பெயர் சாமியிடம் போய் நின்று விடும். சாமி, குலதெய்வமாகவோ, பலமுடைய பெருந்தெய்வமாகவோ இருப்பது புரியும். ‘ நீ கடவுளிடமிருந்து வந்தவன்; கடவுளைப் போல விளங்க வேண்டியவன்; கடவுளிடம் போய்ச் சேர வேண்டியவன்’ என்று அந்தப் பெயரே ஒருவனை வற்புறுத்திக் கொண்டே இருக்கிறது. இந்த வற்புறுத்தலை- சுமையைத்  தவிர்ப்பது எப்படி? அந்தப் பெயர்களை விட்டுவிடுவது தான் ஒரே வழி. ஆண்களுக்கு மட்டும் தான் இந்தச் சுமையும் வற்புறுத்தலும் என்று கருத வேண்டியதில்லை. பெண்களுக்கும் அதுதான். காந்திமதியின் பேத்தி காந்திமதிதான். காந்திமதியின் மூலம் காந்திமதியம்மன். இசக்கியம்மாளின் பெயர் இசக்கி அம்மன். பெயரில் இருக்கிறது மதம்; பெயர்களின் வழி வாழ்கிறது மதம்.

பெண்களுக்கு , கல்யாண பெண்களுக்கு மதம் மட்டுமல்ல ஆணின் ஆதிக்கமும் சேர்ந்து கொள்கிறது. அவளது பெயருடன் கணவனின் பெயரையும் சேர்த்துக் கொள்ளும்படியாக வலியுறுத்தப்படுகிறாள். அல்லது அவளது பெயரே காணாமல் போக இன்னாரின் ‘திருமதி’ என்பது மிச்சமாகிறது.செல்வி ஜானகி, திருமணத்திற்குப் பின்னால் ‘ஜானகி விஸ்வநாதன்’ என்றாகி, திருமதி விஸ்வநாதன் ஆகும்பொழுது நடப்பது ஆணின் அதிகாரம். ஆணின் அதிகாரத்திற்கு மதம், சாதி, தேசம் என்ற எல்லைகளே கிடையாது. எல்லா மதங்களிலும் எல்லா தேசங்களிலும் ஆண்கள், மீது அதிகாரம் செலுத்தத்தான் செய்கின்றனர். ஹிலாரி, திருமதி ஹிலாரிதான். சந்திரிகா,சந்திரிகா குமாரதுங்காதான். பெண்களும் ஆண்களும் சேர்ந்து வாழ்வதில் அதிகாரம் பெயர்களின் வழியே அதன் வேலையைச் செய்து கொண்டே இருக்கிறது.

சுமையாகும் பெயர்கள்.

மதம்சார்ந்த பெயர்கள் தான் சுமையாகும் என்று சொல்வதற்கில்லை. எல்லாவிதமான நம்பிக்கைகள் சார்ந்து வைக்கப்படும் பெயர்களும் ஒரு கட்டத்தில் சுமைகளாக ஆகக்கூடியனதான். கம்யூனிஸ்டாக வாழ விரும்பிய ஒரு தோழர் தன் மகனுக்கு ‘ஸ்டாலின்’ என்றோ,’லெனின்’ என்றோ பெயர் வைத்திருப்பார். ஆனால் அவன் பெரியவனாகி, மார்க்சிய விரோதியாகவும், சமதர்ம சமுதாயத்திற்கு எதிரியாகவும் ஆகி விடக்கூடும். அப்பொழுது அந்தப் பெயர்கள் சூட்டியவருக்கு மட்டுமல்ல, சூட்டப்பட்டவனுக்கும் சுமைதான். ரஷ்ய நாவலொன்றில் வரும் ’தான்யா’வைத் தன் மகளின் பெயராக வைத்தார் நண்பர் ஒருவர். அவளது முதலாவது பிறந்த நாளுக்கு நண்பர்கள் அனைவருக்கும் அந்த நாவலை வாங்கிப் பரிசாகவும் அளித்தார். ஆனால் இன்று இந்தப் பெயருக்குரியவள் பெரியவள் ஆகி விட்டாள். அவளோ அந்த நாவலை ஒரு தடவை கூட வாசிக்கவில்லை. அவளது விருப்பமோ உயிரி-தொழில்நுட்பம் சார்ந்த அறிவியல்.

அரசியல் ஈடுபாடு காரணமாக வைக்கப்படும் பெயர்கள் என்றில்லை. திரைப்பட நடிகை, நடிகன் மீது கொண்ட பற்றினால் வைக்கப்படும் பெயர்களுக்கு இதைவிடக் கூடுதல் சிக்கல்கள் உண்டு. எனக்குத் தெரிந்த ஒரு தம்பதியர் தனது முதல் குழந்தைக்கு ஒரு நடிகையின் பெயரை வைத்தனர். நடிகையின் பெயர் என்பதைத் தெரிந்தே வைத்தனர் என்பது முக்கியமானது. காரணம் முதன் முதலாக அந்த நடிகை நடித்த படத்திற்குத் தான் இருவரும் சேர்ந்து போனார்களாம். பிறந்தது ஆணாக இருந்திருந்தால், அந்தப் படத்தின் நாயகன் பெயரை வைத்திருக்கக்கூடும். தன் மனைவியோடு முதன்முதலாகப் பார்த்த படத்தின் நாயகியின் பெயரைச் சூட்டிய அந்த நபர், அவளைப் பள்ளியில் சேர்க்கும்போது பெயரை மாற்றிவிட்டார். இடைப்பட்ட காலத்தில் நடிகையின் மார்க்கெட் சரிந்துவிட்டதுதான் காரணம். இப்பொழுது அந்தப் பெண்ணின் பெயராகி நிற்பது நிற்பது அவளது பாட்டியின் பெயர். ஆக புதுமை கசப்பானால் திரும்பவும் போவது பழமைக்கு. நவீனம் பயம் காட்டினால் ஒளிந்து கொள்ள நமக்கு மரபுப்போர்வை இருக்கத்தான் செய்கிறது. இங்கே ஆரியச் சாயல் கொண்ட- வடமொழிச் சாயல்கொண்ட பெயர்களுக்கு மாற்றாகச் சூடும் தமிழ்ப் பெயர்களும் மரபுப் போர்வைகள் தானா.? சிந்தித்துக் கொள்ள வேண்டிய ஒன்று.

பட்டப்பெயர்களும் பட்டாப் பெயர்களும்

பெயர்கள் ஒருவனை/ளை அழைப்பதற்கான – அடையாளப்படுத்துவதற்கான – தனித்துவம் அல்லது வெறும் குறியீடு என்று கருதினால் தயவுசெய்து அந்தக் கருத்தை மறுபரிசீலனை செய்யுங்கள். தமிழ் நாட்டுக் கிராமங்களில் பெயர்கள் வெறும் குறியீடுகளாகவும் இல்லை; தனித்துவமாகவும் இல்லை. ‘சேரி’யின் மனிதர்கள் பெயர்கள் சூடிக் கொண்டால், ‘ஊரின் மாக்கள்’ அந்தப் பெயர்களைச் சொல்லுவதே இல்லை. கலியன் மகன் கலியன் மகன் என்றே பாவிக்கிறார்கள்.கலியனாக இருக்கும் ஒருவன் தன் மகனுக்கு ‘ராமசாமி’ என்று பெயரிட அனுமதிப்பதில்லை. அதேபோல் ஊர் மனிதர்களின் பெயர்களைச் சேரியின் மனிதர்கள் சொல்வதற்கும் அனுமதியில்லை. ஊரின் மனிதர்கள் எல்லாருமே அய்யாக்கள், அம்மாக்கள்தான். சின்ன அய்யா, பெரிய அய்யா; சின்னவர் அல்லது பெரியவர்; சின்னம்மா அல்லது பெரிய அம்மா. மடங்களின் –பீடங்களின் வாரிசுகள் போல ஊரின் மனிதர்கள் பட்டங்கட்டிக் கொள்கிறார்கள். ஆனால் சேரியின் மனிதர்களுக்கு மிஞ்சுவது பட்டப்பெயர்கள் மட்டும் தான். பட்டப் பெயர்களுக்கும் பட்டாப் பெயர்களுக்கும் இடையில் இருப்பது சொற்களுக்கிடையில் இருக்கும் ஒரு மாத்திரை அளவு ஒலி வேறுபாடுதான். ஆனால் நடைமுறைச் சமூகத்திலோ இடியோசையின் அளவு வேறுபாடுகள் உண்டு.
கிராமங்களில் பட்டப்பெயர்கள் வைப்பது அவர்களின் உயர்ந்த பண்பாட்டுக் கூறு என்று நமது நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் சொல்லக்கூடும். ஆனால் அதற்குள் செயல்படுவது அடுத்தவனை முழுமையாக ஏற்றுக் கொள்ள விரும்பாத அதிகாரத்தின் குரல் என்பதையும் மறந்து விடக்கூடாது. கருப்பசாமி என்ற பெயரைக் ’கருப்பன்’ என்று கூறுவது சுருக்கிச் சொல்லும் மனோபாவம் மட்டும் அல்ல; அந்தப் பெயருக்குரியவன் ‘சாமி’ என்ற மரியாதைப் பின்னொட்டுடன் சொல்லத் தக்கவனல்ல என்பதும் அதில் இருக்கிறது. மூக்கம்மாளை ‘ மூக்காயி’ ஆக்குவதும் அதன்பாற்பட்டதுதான். ஆனால் பட்டாப்பெயர்கள் அப்படி அல்ல; ஒருவனது நிலத்தின் / சொத்தின் வாரிசு இவன். பாட்டனின் சொத்து பேரனுக்கு உரியது என்பது இந்துச் சட்டம்; பாட்டனின் பெயரும் பேரனுக்குரியது. அவன் வெறும் பேரன் மட்டும் அல்ல; பெயரான சொத்தைப் பெயர்த்துத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியவன்;அதிகாரத்தைப் பெயர்த்துத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியவன். நிலத்தைப் பட்டா மாற்றம் செய்வது போல தாத்தாவின் பெயரும் அதிகாரத்தைப் பட்டா மாற்றம் செய்து தருகிறது. இவைதான் இந்தியக் கிராமங்கள். அங்கே பெயரிலும் இருக்கிற்து சாதி. சாதிப் பட்டங்களைத் தாங்காத பெயர்களிலும் சாதி இருக்கத்தான் செய்கிறது.

பெயர் மாற்று அரசியல்
பெயர் மாற்றம் செய்வதால் சாதி மாற்றம் போய்விடுமா..? என்று கேட்டால் போகாது என்பதுதான் பதில். அதற்காக ‘பெயரை மாற்றிக் கொள்ளலாம்’ என்ற தனிமனித விருப்பத்தையும், அரசியல்சார் விருப்பத்தையும் எதிர்ப்பது எல்லாவித மாற்றங்களையும் எதிர்ப்பது என்பதில் போய் நிறுத்தும் என்பதையும் மறந்து விடக் கூடாது. இன்று வடமொழிப் பெயர்களுக்கு மாற்றாகத் தமிழ்ப் பெயர்களைச் சுடிக்கொள்பவர்களுக்குத் தமிழ்ப் பெயர்களும் சுமையாக ஆகக் கூடும். பழைமையின் பிடிமானமும் ரசிப்பதற்கான சுவாரசியமும் கூடிய தமிழ்ப் பெயர்கள் எல்லாக் காலத்திலும் உவப்பாக இருப்பதற்கு என்ன உத்தவாதமிருக்கிறது? தொல்காப்பியன் என்ற பெயர் ஓர் அறிஞனின் பெயர் என்ற அளவில் உவப்பானதாகத் தோன்றலாம். ஆனால் ‘காப்பியக்குடி’யில் தோன்றிய மூத்தவன் என்ற பொருள்தான் அதன் உண்மையான அர்த்தம் என்று நம்பினால், உவப்பில்லாமல் போகலாம்.

மதம் சார்ந்தும் சாதி சார்ந்தும் வைக்கப்பட்டுள்ள இந்தப் பெயரை நான் விரும்பவில்லை. இதை இன்றோடு விட்டுவிடுகிறேன் எனச் சொல்லிவிட ஒவ்வொருவனுக்கும் உரிமையுண்டு. தனியாகச் சொல்வதற்கு மட்டுமல்ல, கூட்டாகச் சொல்வதற்கும் உரிமையுண்டு. இது ஒரு தற்காலிக மகிழ்ச்சிதான் என்று ஒருவர் கூறலாம். தற்காலிக மகிழ்ச்சிகள் சரியெனப் பட்டால் பெயர்களை மாற்றிக் கொள்ளலாம். அந்தப் பெயரும் இன்னும் பல தடவை மாற்றப்பட வேண்டியது என்ற நம்பிக்கையுடன்.

நமது பெயர்களில் வெளிப்படும் மனோபாவங்கள் பழையன என்றால், நாம் எழுதும் முகவரிகளில் வெளிப்படும் மனோபாவமோ மிகப்புதியன. ஆனால் பின்பற்றத்தக்கன அல்ல. நமது பழந்தமிழ்ப் புலவர்கள் தங்கள் பெயர்களை எழுதியுள்ளதைக் கவனியுங்கள். மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தன்; மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார். இதில் அவர்களது பெயருக்கு முன்னால் ஊர்ப்பெயர், தந்தை பெயர், தொழில்பெயர் என்ற வரிசை உள்ளது. அந்தக் காலத்தில் அதுதான் முகவரி. மதுரைக்கு வரும் ஒருவர், கூலவாணிகர் தெருவில் நுழைந்து, சீல் தலையுடைய சாத்தனைத் தேடிப்பிடிக்க அந்த முகவரி போதும். ஆனால் இன்று நாம் எழுதும் முகவரியோ தலைகீழாக உள்ளது.

அ.ராமசாமி
மனை எண்.10, செந்தில்நகர்,
7 வது தெரு, கட்டபொம்மன் நகர்,
திருநெல்வெலி -627011
என்று எழுதுகிறோம். இந்த வரிசை ஆளை நேரடியாகத் தேடுபவர்களுக்கும் கடிதம் கொண்டுவருபவர்களுக்கும். ஏற்ற வரிசை அல்ல. சென்னையிலிருந்து கடிதம் எழுதும் நண்பருக்கு முதலில் நினைவுக்கு வருவது நான் திருநெல்வேலியில் இருக்கிறேன் என்பதுதான். எனவே அதிலிருந்து தொடங்கி,
627011- திருநெல்வெலி
கட்டபொம்மன் நகர், 7 வது தெரு,
செந்தில்நகர், மனை எண்.10,
அ.ராமசாமி
என எழுதுவதே நினைப்பின் வழிப் பயணம் ஆகும். ஆனால் நாம் மேற்கத்திய மன அமைப்பில் எல்லாவற்றையும் நினைக்கப்பழகி வருகிறோம். மேற்கத்தியச் சிந்தனை ‘ நபர்மையச் சிந்தனை’. எனவே மனிதனை முதலில் சொல்லி, அவனின் அருகிலிருந்து விரிகிறது அவனது முகவரி. முகவரிகள், கடிதங்கள் மூலமான நிதானமான தொடர்பு கொள்ளலுக்குத் தான். இன்று நமது தொடர்புகள் பெரும்பாலும் தொலைபேசிகள் வழியாகவே நடக்கின்றன. அதில் உள்ள வரிசையைக் கவனியுங்கள். அந்த வரிசை கடித முகவரியின் வரிசையில் இல்லை.
91-462-2520879 இந்த எண்ணில் இருப்பது வெளிவட்டத்திலிருந்து உள்மையம் நோக்கிய பயணம்.
91 - இந்திய தேசத்திற்கான எண்
462 -நான் வாழும் ஊருக்கான எண்
2520879 - எனது வீட்டு எண். இதிலும் கூட முதலில் இருக்கும் 252 என்பது நான் வாழும் பாளையங்கோட்டையின் தொலைபேசி மைய எண் என்கிறார் அதன் ஊழியர்.
நம்மை நாமே அழைக்க வேண்டும். நம்மை நாமே எழுத வேண்டும். பழையனவோ, புதியனவோ. கொள்வன கொள்ளலாம். தள்ளுவன தள்ளலாம். பற்றுதலும் பற்றின்மையும் தேவை குறித்த என்றால் குழப்பங்கள் இருந்திட வாய்ப்பில்லை.
=============================================== பின்குறிப்பு:
தொல். திருமாவளவன் பெயர் சூட்டும் அரசியலை முன்னெடுத்த போது அவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தாய்மண் இதழில் எழுதிய கட்டுரையில் நிகழ்காலத் தேவைக்கேற்பச் சின்னச் சின்னத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள்

gnani இவ்வாறு கூறியுள்ளார்…
எஸ்.ராவின் (எஸ்.ராமசாமி அல்ல, ராமகிருஷ்ணன் !), ராமசாமிகளின் வம்ச சரித்திரம் கதையையும் இங்கே நினைவு கூரலாம். நல்ல அலசல். முகவரி வெளிவட்டத்தில் இருந்து தொடங்கி தனி நபருக்கு விரிவது பற்றி : அஞ்சல் துறையில் கடிதம் பிரிப்பது எப்போதுமே அந்த அடிப்படையில்தான்.சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு பொது மக்களே கடிதங்களில் அப்படித்தான் முகவரி எழுதவேண்டுமென்ற விதியை ஏற்படுத்தலாமா, அதற்காக, பின் கோட் கட்டத்தை கீழே அச்சிடாமல் மேலே அச்சிடலாமா என்றெல்லாம் அஞ்சல் துறையில் உள்விவாதம் நடந்து அந்த மாற்ற திட்டம் கைவிடப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்