விருதுகளின் பெறுமதிகள்



தைமாதம் தமிழ்நாட்டின் அறுவடைக்காலம். அதனைத் தொடர்வது கொடையின் காலம். கொடை நடைபெறுகிறபோது கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது. உடல் உழைப்பில் ஈடுபடும் தமிழக விவசாயிகளுக்குத் தை மாதம் கொண்டாட்டத்தைக் கொண்டு வரும் மாதமாக இருந்த நிலை இப்போது இல்லை. அதற்குப் பதிலாகத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் போன்ற புத்திஜீவிகளுக்கு தை மாதம் அறுவடைக்காலமாக மாறிவிட்டது.

ஆங்கில ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் கடைசி அல்லது ஜனவரி மாதத்தில் தான் எழுத்தாளர்களின் கனவாக இருக்கும் சாகித்ய அகாடெமி விருது அறிவிக்கப் படுகின்றது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை, இயல் இசை நாடகமன்றம், கலை பண்பாட்டுத்துறை, சென்னைப் புத்தகக் கண்காட்சியை நடத்தும் பாபாசியின் இலக்கிய விருதுகள் எனத் தையில் விருது அறிவிப்புகளும், விழாக்களும் களைகட்டவே செய்கின்றன. அரசு நிறுவனங்களோடு போட்டி போடுவதில்லை என்றாலும் தனியார் அமைப்புகள் தரும் விருது அறிவிப்புகளும் விழாக்களும் கூடத் தை மாதத்தில் நிகழ்கின்றன. ஆகத் தைமாதத்தில் எழுத்தாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் ஏதோ ஒரு வழி திறக்கத் தான் செய்கிறது. வழி பிறந்து விட்டால் கொண்டாட்டங்கள் தானே. சரி கொண்டாடுவோம். கொண்டாடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் சில கேள்விகளையும் கேட்டு வைப்போம்.
 
2010-க்கான சாகித்ய அகாடெமி விருது நாஞ்சில் நாடனுக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகம் சர்ச்சைகள் எழவில்லை. கடைசியாக வந்த அவரது, ’சூடிய பூ சூடற்க‘ சிறுகதைத் தொகுதியை ஆண்டின் சிறந்த படைப்பாகக் கருதி அகாடெமி விருதை வழங்கியுள்ளது. ஐந்து கட்டுரைத் தொகுப்புகளும் ஒரு கவிதைத் தொகுப்பும் அவரது எழுத்துக்கணக்கில் இருக்கின்றன என்றாலும் அவரது அடையாளங்களில் முதன்மையானது புனைகதையாளர் முகமே.தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்,வாக்குப்பொறுக்கிகள், உப்பு, பிராந்து,முதலான சிறுகதைத் தொகுதிகளின் வழியாகவும் தலைகீழ் விகிதங்கள்,மாமிசப்படைப்பு, மிதவை, எட்டுத் திக்கும் மதயானை, ‘என்பிலதனை வெயில் காயும்,’ ‘சதுரங்கக் குதிரை’ முதலான ஆறு நாவல்கள் வழியாகவும் அவர் உண்டாக்கிக் கொண்டுள்ள அடையாளம் தனித்துவமான புனைகதையாளர் என்ற அடையாளத்தைத் தான். பிறந்து வளர்ந்து இளமைப் பருவத்தைக் கழித்த நாஞ்சில் நாட்டுப் பேச்சு மொழியின் வழியாகத் தனது படைப்புலகத்தை உருவாக்கும் நாஞ்சில் நாடன் நம் காலத்தின் உலகம் தழுவிய மனித நெருக்கடியைத் தனது புனைகதைகள் மூலம் விசாரணைக்குட்படுத்தியிருக்கிறார்.
 
’தான் பிறந்த கிராமமே உலகம்’ என்று கருதி வாழ்ந்த மனிதர்களில் பலர், தொடர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர். அவர்கள் செல்லும் புதிய வெளி அவர்களுக்குப் புதிர்கள் நிறைந்த ரகசியங்களையும், அதற்குரிய மனிதர்களையும் சந்திக்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. ஆனால் மனம் என்னவோ பழைய வெளியைச் சிக்கலற்றதாகக் கருதிக் கொண்டு அதை நினைத்தே அலைந்து கொண்டிருக்கிறது. நாஞ்சில் நாடனின் புனைகதைகளுக்குள் அலையும் மனிதர்களின் பெரும் வடிவம் தான் புலம் பெயர்தல். புலம் பெயர்தல் என்னும் பெருநிகழ்வாக அறியப்படும் வடிவத்தின் இன்னொரு வடிவம் இடம் பெயர்தல்.
 
புதிய இடங்களுக்குள் பெயர்த்து வீசப்படும் மனிதர்கள் அவர்களின் அகம் சார்ந்தும், புதியதான புறவெளி சார்ந்தும் அடையும் மனநிலையையும் தத்தளிப்புகளையும் பேசும் அவரது நாவல்கள் வட்டார எழுத்து என்னும் வகைப்பாட்டைச் சுலபமாகத் தாண்டுபவை. இந்திய மனிதர்களின் மனப்படிமம் மேற்கத்திய வாழ்க்கை முறையின் சாயல்கள் உருவாக்கும் புதிய படிமங்களுக்குள் அடைபடாமல் தவிக்கும் கொதி நிலையைச் சொல்வதன் மூலம் உலக இலக்கியத்தின் வரைபடத்திற்குள் இடம் பிடித்துக் கொள்ளும் சாத்தியங்கள் கொண்டவை. அத்தகைய படைப்புகளுக்குச் சொந்தக்காரரான நாஞ்சில் நாடன், இந்த ஆண்டு தேர்வுக்குழுவில் இருந்த நபர்களின் இலக்கியம் சார்ந்த பொறுப்புணர்வால் அடையாளம் காணப் பட்டுள்ளார். இதே மாதிரியான பொறுப்புணர்வு இனிவரும் ஆண்டுகளில் இடம் பெறும் தேர்வுக் குழுவிற்கும் இருக்கும் எனச் சொல்ல முடியாது. ஏனென்றால் தமிழ்நாட்டு மக்களால் கவிஞர்களாக அறியப்பட்ட பாரதிதாசனை நாடகாசிரியருக்கான விருதாலும், கண்ணதாசனையும் வைரமுத்துவையும் நாவலாசிரியர்கள் என்ற அடையாளத்தோடும் முன்னிறுத்தி விருது அளித்தது இதே சாகித்ய அகாடெமி தான். நாஞ்சில் நாடனைக் கூட நாவலாசிரியர் என்ற அடையாளத்துடன் முன்னிறுத்தி இருக்க வேண்டும் என்றே என் மனம் சொல்கிறது.
 
நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள் சொல்லி விட்டு கேள்விகளைத் தொடரலாம். இயல் இசை நாடகம் என முத்தமிழ் வளரும் செந்தமிழ் நாட்டில் ‘இயல்’ தமிழுக்கான சாகித்ய அகாடெமி விருது மட்டுமே கனவாக நினைக்கப்படுகிறதே? இது ஏன்? மைய அரசின் அரவணைப்பில் இயங்கும் அமைப்பால் வழங்கப்படும் விருது என்பது காரணமாக சாகித்ய அகாடெமி விருது மீது அதிகப்படியான கவனமும், தரத்தைப் பேண வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது எனக் காரணங்களைக் கற்பித்துக் கொள்ளலாம். ஆனால் வேறு சில நிகழ்வுகள் அதற்குத் தடையாக இருக்கின்றன. சாகித்ய அகாடெமியைப் போன்றே இன்னும் இரண்டு அமைப்புகள் மைய அரசின் துணையோடு இயங்குகின்றன. நாடகம், நடனம், இசை போன்ற நிகழ்த்துக்கலைகளை வளர்ப்பதற்காக அமைக்கப் பட்ட சங்கீத்நாடக அகாடெமி ஒன்று. இன்னொன்று ஓவியம்,சிற்பம்,வரைகலை போன்ற நுண்கலைகளை வளர்ப்பதற்குப் பொறுப்பான லலித்கலா அகாடெமி. இவைகளும் ஆண்டுதோறும் விருதுகளை வழங்குகின்றன.

தமிழ்நாட்டிலிருந்தும் இவை வழங்கிய விருதுகளைப் பெற்றவர்கள் இருக்கிறார்கள். ஒரே வருடத்தில் இரண்டு மூன்று பேர் கூட சங்கீத் நாடக அகாடெமியின்- லலித் கலா அகாடெமியின் விருதைப் பெற்றிருக்கிறார்கள். அதைப் பற்றிய தகவல்களைக் கூடத் தமிழ்ப் பொதுமனம் தனக்குள் நுழைத்துக் கொள்வதே இல்லை. பொதுப்புத்தி சார்ந்த தமிழ் மனம் கேட்டுக் கொள்வதில்லை என்பதைக் கூடப் பொருட்படுத்தாமல் விட்டு விடலாம். படைப்பு மனம், தத்துவ விசாரம், கலையின் நோக்கம் என அல்லாடும் தீவிர இலக்கியவாதிகளும் அவர்கள் இயங்கும் பத்திரிகைகளும் கூட அக்கறை காட்டுவதில்லை என்பது தமிழ் நாட்டின் விநோதம். இவையல்லாமல் இன்னும் சில விநோதங்கள் இருக்கின்றன.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனமான சாகித்ய அகாடெமி விருதைக் கொண்டாடும் தமிழ் வாசிப்பு மனம்,அதற்கீடான தொகையையும், சிலவற்றிற்கு அதற்கும் கூடுதலான தொகையையும் வழங்கும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழ் வளர்ச்சித்துறை, கலை பண்பாட்டுத்துறை, செம்மொழி நிறுவனம் போன்றன வழங்கும் விருதுகளைப் பொருட்டாகவே நினைப்பதில்லை. விளக்கு, இயல், சாரல், திருப்பூர் தமிழ்ச் சங்கம் போன்ற தனியார் அமைப்புக்கள் வழங்கும் விருதுகளைப் பொருட் படுத்த வேண்டிய விருதுகளாக முன்னிறுத்தும் சொல்லாடல்கள், ஆண்டுக்கு இருபத்தைந்து பேருக்குக் குறையாமல் அள்ளி வழங்கும் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றத்தின் கலைமாமணி விருதுகளையும், தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூல்களுக்கான பரிசுகளையும், முக்கியமான “கௌரவங்கள்” என்று கூட நினைப்பதில்லை. அதற்குப் பதிலாக தேர்தலை மனதில் வைத்து அளிக்கப்படும் அரசின் நலத்திட்ட உதவிகளில் ஒன்றைப் போலவே நினைக்கச் செய்கின்றன. இத்தகைய நினைப்பின் பின்னணிக்காரணிகள் எவை? காரணங்கள் எங்கே இருக்கின்றன.?
 
தான் வழங்கும் விருதுகள் பெறுமதியான விருதுகள் என்று நம்பப்பட வேண்டும் என்ற அக்கறை அதனை வழங்கும் நிறுவனத்திற்கு இருக்க வேண்டுமா? வேண்டாமா? தமிழக அரசின் அமைப்புகள் அந்த அக்கறையைக் கைவிடும் தருணங்கள் எதனால் நிகழ்கின்றன? இந்த இடத்தில், தங்கள் இயக்கம் சார்ந்த எழுத்தாளர்களையும் ஆதரவு சக்திகளையும் மட்டுமே கவனப்படுத்தும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தமிழக முற்போக்குக் கலைஞர்கள் எழுத்தாளர் சங்கம் போன்றவை வழங்கும் விருதுகளையும் இந்த வகைப்பாட்டில் சேர்த்துத்தான் பேச வேண்டும். ஆனால் அவற்றை தனியார் அமைப்பு என்று வரையறை செய்வதா? கூட்டுறவு நிறுவனம் என்று சொல்வதா என்று குழப்பமாக இருப்பதால் அவற்றின் விருதுகளைப் பற்றிப் பேசுவதை விட்டு விடலாம்.
 
எந்தவொரு பிரதியும் அதன் தாக்கத்தை உணரும் மக்கள் கூட்டம் வாழும் நிலப்பரப்பிற்குள் இருக்கும் ஒட்டு மொத்த மக்களுக்கும் உரியதாக- ஏற்றுக் கொள்ளக்கூடியதாக- இருக்கும் எனச் சொல்ல முடியாது. வெவ்வேறு கருத்தோட்டங்களும், வாசிப்பு நோக்கங்களும் செயல்படும் ஒரு பல்நிலைச் சமூகத்தில் ஒரு பிரதியை எல்லாக் குழுக்களும்,சமூக அடுக்குகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கவும்கூடாது எனச்சொல்லி, அரசுத் துறையின் விருதுகள் அறிவிக்கப்படும்போது எந்தவிதக் கேள்விகளும் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் எனச் சொல்வதாகக் கருதி விடக்கூடாது.
சாகித்ய அகாடெமி விருது அறிவிக்கப்படும்போது உருவாகும் சர்ச்சைகள், மாநில அரசின் விருதுகள் அறிவிக்கப்படும் போது எழாமல் போவது ஏன்? என்று கேட்கும் அதே நேரத்தில் உருவாக்கப்படும் சர்ச்சைகள் இலக்கியப் படைப்பு சார்ந்த சர்ச்சைகளாக எப்போதும் முன் வைக்கப்பட்டதில்லை என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். தான் நம்பும் இலக்கியக் கோட்பாட்டின் பிரதிநிதி ஒருவருக்கு விருது வழங்கும்போது கொண்டாடுவதும், எதிர்நிலைப் பட்ட இலக்கியக் கோட்பாட்டின் -குழுவின்- பிரதிநிதியின் பெயர் அறிவிக்கப்பட்டால் சர்ச்சைகளை உருவாக்குவதும் தான் இங்கே வாடிக்கை. ஒரு பிரதியுருவாக்கத்திற்கான அடிப்படைக் கூறுகள் இல்லாத படைப்புகள் விருதுகளைப் பெரும்போது அந்த அடிப்படைக் கூறுகளை முன் வைத்து விமரிசனம் செய்வதே முதன்மையான தேவை. அப்படியான எதிர் கொள்ளல்கள் தமிழ்நாட்டில் கடந்த காலத்திலும் நடக்கவில்லை; எதிர்காலத்தில் நிகழ்ந்துவிடும் என்பதற்கான அறிகுறிகளும் தெரியவில்லை.
 
கலை இலக்கியங்களுக்கான அங்கீகாரம் தொடங்கிய நிகழ்வின் உடன் நிகழ்வாகவே அதனை மறுதலித்த சர்ச்சைகளும் எழுந்துள்ளன என்பதை நமது இலக்கிய வரலாறு சொல்கிறது. கவிகளுக்கும் அவர்களை ஆதரித்த அல்லது நிராகரித்த புரவலர்களுக்கும் இடையே இருந்த உறவுகள் பற்றிய கதைகள் தான் “விருதுகள் அவற்றை வழங்கும் அமைப்பின் அல்லது நபர்களின் நலனில் அக்கறை கொண்டவர்களுக்கே அளிக்கப்படுகின்றன” என்ற வாக்கியத்தை உண்டாக்கியுள்ளன. இந்த வாக்கியம் தோன்றிய போது என்ன அர்த்தம் இருந்ததோ, அதே அர்த்தம் இன்றும் தொடர்கிறது. அதன் அர்த்தத்தை மாற்றுவதற்கு எந்த அமைப்பும் முனையவே இல்லை. மக்கள் நலனின் அக்கறை கொண்டதாகவும், நடுநிலையோடு செயல் படுவதாகவும் பாவனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஜனநாயக அரசுகளுக்கும், அதன் கலை பண்பாட்டு அமைப்புகளுக்கும் கூட அந்த முயற்சி இல்லை என்பதுதான் நடைமுறை உண்மை. அதிலும் தமிழக அரசின் அரவணைப்பில் இயங்கும் எல்லா அமைப்புகளும் அந்த வாக்கியத்தின் அர்த்தத்தை மாற்றும் முயற்சியை யாரும் செய்துவிடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகின்றன என்றே தோன்றுகிறது.
 
படைப்பாளியைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கும் போது வாதப் பிரதிவாதங்கள் தோன்றும் என்பதை முன் கூட்டிய உணர்ந்தனவாகத் தனியார் நிறுவனங்கள் உள்ளன. அதனால் எச்சரிக்கை உணர்வுடன் செயல் படுகின்றன. அதனால் ’ஆண்டின் சிறந்த படைப்புக்கான விருது’ என்று முன்மொழியும் போக்கைக் கைவிட்டுவிட்டுத் தமிழ் இலக்கியப் பரப்பில் இவர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பிற்காக இந்த மரியாதை என்பதாகவே இயல், விளக்கு, சாரல் போன்ற அமைப்புகள் முன் மொழிகின்றன.அந்த முன்மொழிவு களையும் அமைப்புகளில் இருக்கும் நபர்கள் தாங்களே செய்யாமல்,அவ்வமைப்புகளுக்குத் தொடர்பில்லாத ஒரு குழுவை-தேர்வுக் குழுவைக் கொண்டு முன் மொழிகின்றன. அந்த எச்சரிக்கை உணர்வு முன் மொழியப்படும் நபர்கள் சார்ந்த பங்களிப்பு பற்றிய சர்ச்சைகளைத் தவிர்க்கின்ற அதே நேரத்தில் வேறுவிதமான கருத்தோட்டங்களை உருவாக்கி வருகின்றன. இவ்வமைப்புகள் தரும் விருதுகள் எழுதிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளுக்கு ஊக்கமளித்துத் தொடர்ந்து செயல்படத் தூண்டும் விதமாக அமையாமல் ஓய்வூதியம் போலவோ, கருணைத்தொகை போலவோ தரப்படுகின்றன என்பது ஒரு கருத்தோட்டம். அந்தக் கருத்தோட்டத்தைப் புறந்தள்ளி விட முடியாது.
 
தனியார் அமைப்புக்களில் செயல்படும் தேர்வுக்குழு என்ற நடைமுறை எல்லா விருதுகளுக்குப் பின்னாலும் இருக்கின்றன என்றாலும் தமிழக அரசின் அமைப்புகளில் வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதில்லை. அரசதிகாரத்தின் கண்ணிகளால் இயக்கப்படும் அக்குழுக்கள், நம்பகத்தன்மை சார்ந்த கலையியல் விதிகளைத் தேர்வுக்கான அடிப்படைகளாகக் கொள்ளாமல் புறக்காரணிகளை ஏற்கும் மனநிலையில் செயல்படுகின்றன என்பதை அக்குழுவின் தேர்வுப் பட்டியல்கள் எப்போதும் வெளிப்படுத்துகின்றன. அதிலும் ஓய்வு பெற்ற நீதிபதிகள், அரசுத் துறைகளின் இயக்குநர்கள் அடங்கிய நடுவர் குழுக்கள் தேர்வு செய்து அளிக்கும் விருதுப் பட்டியல்கள் அரசின் நலத்திட்ட உதவிகளின் தோற்றத்தையே தருகின்றன என்பது கூட இங்கே உணரப்படவில்லை.
 
ஒரு பிரதியில் நம்பகத்தன்மையை உருவாக்குவதன் மூலமே அப்பிரதியைத் தரமான படைப்பாக ஆக்க முடியும் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு நம்பகத்தன்மை தான் ஒரு விருதைப் பெறுமதியான விருதாக ஆக்குவதிலும் செயல்பட வேண்டும். அது நடக்கவில்லையென்றால் அவ்விருதுகளால் முன் மொழியப்படும் படைப்புகளும் படைப்பாளிகளும் வெற்று அங்கீகாரம் பெற்றவர்களாக மட்டுமே நினைக்கப் படுவார்கள். படைப்பாளி உருவாக்கும் பிரதியில் நம்பகத்தன்மை எதிர்பார்க்கப்படுவது போலவே தேர்வுக்குழு முன் வைக்கும் விருதுக்குரிய பெயர் சார்ந்து நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டியது தேர்வுக்குழுவின் கடமை.அதற்கான வழிமுறைகளைத் தேர்வுக்குழுவின் உருவாக்கத் திலிருந்து தொடங்க வேண்டும். அத்தகைய சங்கிலித்தொடர் நிகழ்வுகள் இருப்பது போலத் தோற்றம் கொண்டது சாகித்திய அகாடெமியின் தேர்வு முறை.அதனாலேயே அது எழுத்தாளர்களின் கனவாக இருக்கிறது போலும். அந்தக் கனவு நாஞ்சில் நாடனுக்கு நனவான இந்த வருடத்திலேயே கலைமாமணி என்னும் கொடுங்கனவின் பாரமும் அவர் மீது இறக்கி வைக்கப்பட்டுள்ளது. அதை அமுதெனக் கொள்வதும் நஞ்சென விலக்குவதும் அவர் வசமே இருக்கிறது.

நன்றி: அம்ருதா, மார்ச், 2011


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்