பண்பாட்டின் பெயரால்.. ..

ராமாயணம் என்னும் பேரிலக்கியம் எப்போதாவது அரசாங்கத்தின் ஆதரவு இலக்கியமாக இருந்ததா? என்று கேட்டால் இலக்கிய வரலாறு சரியாகத் தெரிந்தவர்கள் இல்லை என்றுதான் பதில் சொல்வார்கள். வால்மீகி எழுதிய ராமனின் கதையை வடமொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதினார் கம்பர் என இலக்கிய வரலாறு கூறினாலும், கவி கம்பனின் இலக்கிய ஆளுமையால் புதுக் காப்பியமாக-பேரிலக்கியமாகக் கம்பனின் இராமாயணம் திகழ்கிறது என்பதை அதை வாசிப்பவர்களும் வாசிக்கக் கேட்பவர்களும் உணரக் கூடும். தமிழில் மட்டுமல்ல; ராமனின் கதையை மலையாளத்தில் எழுத்தச்சனாக இருந்தாலும் சரி, ராமசரித மானஸை எழுதிய துளசி தாசனும் சரி அதை ஒரு மூல இலக்கியமாகவே ஆக்கியிருக்கிறார்கள். எழுத்தில் வந்த ராமனின் கதைகள் மட்டுமல்ல; வாய்மொழி வழக்காறுகளில், அரங்கியல் பிரதிகளில் என எதிலுமே ராமனின் கதை தழுவலாக இல்லாமல் மூலப் பிரதியாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ராமனை எதிர்க் கதாநாயகனாக்கி ராவணனை நாயகனாக ஆக்கிக் காட்ட முயன்ற புலவர் குழந்தையின் இராவண காவியமே ஒரு வாசகனுக்குக் காவியத்தின் சுவையைத் தரவல்ல தாகவே இருக்கிறது. ஒட்டு மொத்த இந்தியாவிலும் ராமாயணம் எப்போதும் அரசாங்க இலக்...