July 08, 2009

சுகமான சுமைகள்


படித்தவன் சூதும் வாதும் செய்தால்
போவான் போவான் ஐயோ என்று போவான்
-சி.சுப்பிரமணிய பாரதி.

முன்னுரையாக சில கேள்விகள்

இந்திய/ தமிழகக் கல்விமுறை மேற்கத்திய மயமாகி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகி விட்டது. மேற்கத்தியமாகி விட்டது என்பதற்காகப் பெரிதாக வருத்தப்பட வேண்டிய தில்லை. மேற்கத்தியக் கல்விமுறை வெறும் கணக்குப்போடுகிறவர்களையும் கங்காணி களையும் மட்டும்தான் உருவாக்கியது என்று சொல்லப்படும் வாதங்கள் எல்லாம் உள்நோக்கங்கள் கொண்டன.மேற்கத்தியக் கல்விதான் எல்லோரும் கற்கலாம் எனச் சொன்னது; ஒருசாதிக்குள்ளேயே ஆசானையும் சீடனையும் வைத்திருந்த குருகுலக் கல்விமுறையை ஒழித்தது.ஒவ்வொரு மனிதனும் மதிக்கத்தக்கவன் என்ற சுயமரியாதை யுணர்வு உண்டாகக் காரணமாக இருந்தது. எதனையும் பகுத்து ஆராய்ந்து கேள்விகள் எழுப்பும் அறிதல் முறையை நமக்கு அளித்ததும் அந்த மேற்கத்தியக் கல்விமுறைதான். இந்திய சுதந்திரத்திற்குமுன்பே மேற்கத்தியக் கல்விமுறை இவற்றைச் சாத்தியமாக்கியிருந்தது.ஆனால் சுதந்திர இந்தியாவில் நமக்குத் தேவையென வரித்துக்கொண்ட சில பாடங்களின் நோக்கம் இந்திய மனிதனின்/ சமூகத்தின் தேவை கருதியது தானா..? சமூகவியலின் பகுதிகளான மொழியியில், மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல் போன்றன இந்திய சமூகத்தை முன்னெடுத்துச் செல்லும் முறையியலோடு உள்வாங்கப்பட்டிருக்கின்றவா...? அல்லது ஒரு நூற்றாண்டுக்கு முந்திய இந்திய வாழ்க்கைமுறைக்குத்திரும்பிப் போகும் நோக்கங் களோடு வந்து சேர்ந்திருக்கின்றவா...? என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்பட வேண்டி யுள்ளன. கேள்விகள் கேட்கவேண்டியுள்ளன.
ஒரு நிழல் படத்தை வைத்துச் சில குறிப்புக்கள்
1999-ம் ஆண்டில் எங்கள் பல்கலைக்கழகத் தொடர்பியல் துறையில் படித்துக் கொண்டிருந்தாள் ஒரு மாணவி. அவள் எடுத்த ஒரு நிழல்படம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை நிழற்படத்துறை சார்ந்த உலகவரைபடத்திற்குள் இடம் பிடிக்கச் செய்தது. யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்திருந்த ஒரு போட்டியில் ஆகச் சிறந்த படமாக அவள் எடுத்த படம் தேர்வு பெற்று பெருந்தொகை அவளுக்குக் கிடைக்கக் காரணமாயிற்று.(அந்தப் படம் யுனெஸ்கோ சார்பு வெளியீடுகளிலும், சில தேசிய ஆங்கில இதழ்களிலும், நிழல் படக்கலை சார்ந்த சர்வதேச இதழ்களிலும் இடம் பெற்றது.) அந்தப் படத்தில் ஒரு சிறுமியும் ஒருசிறுவனும் அழுக்கடைந்த சட்டை களுடன் கையில் வைத்திருக்கும் சிலேட்டில் எழுதிக் கொண்டிருப்பார்கள். பக்கத்தில் சில புத்தகங்கள், கொஞ்சம் தள்ளி ஓர் ஆட்டுக்குட்டி மதிலின் நிழலில் படுத்திருக்கும். இந்தப் படம் எடுக்கப்பட்ட கிராமம் திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டுக்கருகில் உள்ள ஒரு சிறிய கிராமம்.ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் நிழல் படத்தில் இருந்த அந்தச் சிறுமியைச் சந்திக்கும் வாய்ப்பு இன்னொரு மாணவருக்குக் கிடைத்தது. கண்ணன் என்னும் பெயருடைய அவர் அதே தொடர்பியல் துறையில் இந்த ஆண்டு -2004 இல்- பயிலும் மாணவர். அவருக்குக் கிடைத்த இந்த வாய்ப்புத் தற்செயலான வாய்ப்புத்தான். திட்டமிட்டுக்கொண்டு போய்ப் பார்த்தாக வேண்டும் என்றெல்லாம் போனவர் இல்லை.
அவருடைய பயணத்தின் பின்னால் ஒரு நம்பிக்கை மட்டும் இருந்தது. உண்மையான பாரததேசத்தின் நாகரிகமும் பண்பாடும் கிராமங்களில் படிந்து கிடக்கின்றன; அவற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் பதிவு செய்து விடவேண்டும் என்கிற நம்பிக்கைதான் அது. அந்தப் பயணத்தின் முடிவில் அவருடைய நம்பிக்கை ஈடேறியிருக்கலாம்; அவரும் இந்தியப் பண்பாட்டின் அல்லது தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்களைப் பதிவு செய்து கொண்டுவந்து நகரவாசிகளுக்குக் காட்டலாம்;பரிசுகள் வாங்கலாம். அல்லது அவளுக்குக் கிடைத்தது போல அச்சு ஊடகத்திலும் தனியார் தொலைக்காட்சி அலைவரிசையிலும் பணிகள் தேடி வந்தது போல தேடிவரலாம். அப்புறம் அவர் அந்தக் கிராமத்தையும் அதன் மனிதர்களையும் அவர்களின் வாசனையையும் -பண்பாட்டின் வாசனையை-மறந்து போகலாம் ஆனால் முதலில் படம் எடுத்துவிட்டு வந்த அந்தப்பெண்ணுக்காக இவர் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் நேர்ந்தது என்பதை மறுத்து விடமுடியாது.
"இப்பிடித்தே ஒரு அக்கா வந்து படம் புடிச்சிட்டுப் போச்சு; பரிசெல்லாம் வாங்குச்சாம் ; உடனிக்கெ ஒருக்காவந்துச்சி; அப்பொறம் எங்கிருக்கின்னு தெரியல; மவராசி நல்லா இருக்கணும்."


இந்தச்சொற்கள் கேள்விகள் இல்லை. கேள்வியாக இருந்தாலும் அதற்கான பதிலைச் சொல்ல வேண்டியவர் கண்ணனும் இல்லை. அந்தச் சொற்களுக்குப் பின்னால் இருப்பது வேறொன்று. அதுதான் கிராமத்து அப்பாவிகளின் வாழ்க்கை.
ஏழு வயசுச் சிறுமியாகத் தன்னுடைய குடிசையின் நிழலில் ஆட்டுக் குட்டியோடு சேர்ந்து பாடம் படித்த அந்தப் பெண்ணுக்கு இப்பொழுது வயது பதினாலு. உடம்பு நோஞ்சானாக இருந்தாலும் குமரியாகி விட்டாள். அவளுடன் சேர்ந்து பாடம் படித்த ஆட்டுக்குட்டி மட்டும் இப்பொழுது அவளுடன் இல்லை என்று நினைத்து விடவேண்டாம்; அவளது கைகளில் இருந்த சிலேட்டும் புத்தகங்களும் காணாமல் போய் சில ஆண்டுகள்கிவிட்டன. அவற்றை அவள் கைவிட நேர்ந்த அந்தவருடத்தில் யுனெஸ்கோ எடுத்த "இடையில் படிப்பை நிறுத்தியோர் (drop outs) எண்ணிக்கைப் பட்டியலில் " அவளும் ஒருத்தியாகக் கணக்கிடப் பட்டிருக்கக்கூடும். அந்தப் பட்டியலை வைத்துக் கொண்டு, 'மூன்றாம் உலகநாடுகளில் கல்வி' என்ற தலைப்பில் ஒரு கல்வியியல் துறை அறிஞர் சர்வதேசக் கருத்தரங்கில் கட்டுரையொன்றை வாசித்திருக்கக் கூடும். அதே தகவல் 'வளரும் நாடுகளில் பெண் கல்வி 'என்ற ஆய்வேட்டிலோ, 'தமிழகக் கிராமங்களில் மகளிரின் குடும்பப் பொறுப்புகள்' என்ற தலைப்பிலான ஆய்வுத் திட்டத்திலோ கள ஆய்வில் சேகரிக்கப்பட்ட முதன்மை ஆதாரமாகக் காட்டப் பட்டிருக்கலாம். இந்த முதன்மை ஆதாரம் பின் வரும் ஆய்வுகளுக்குத் துணைமை ஆதாரமாக ஆகவும் கூடும். ஆம், அவளின் முகமும் வாழ்க்கையும் நிழல்படத்தில் பதிவு செய்யப்பட்ட கணத்திலிருந்து -மின்னணுச் சாதனங்களுக்குள் அடக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து - கலைப் பொருளாகவும் ஆதாரங்களாகவும் ஆகிக் கொண்டுவிட்டன; புகைப்படக்கலை சார்ந்த கலைஞனுக்கு கலைப்பொருளாக இருக்கும் அதே படம் சமூக வியலாளனுக்கும் நாட்டார் வழக்காற்றியலாளனுக்கும் தரவுகள். ஆனால் அந்தப் படத்தில் இருந்த பெண்ணுக்கும் ஆணுக்கும் தங்கள் முகங்களைத் தாங்களே பார்த்துக்கொண்ட சந்தோசமான தருணங்கள்.அவ்வளவுதான்.
தகவல்கள்-நுகர்பொருட்கள்-பணமதிப்பு.
மனிதவாழ்க்கையும்,பண்பாடும் அதன் கூறுகளும் களஆய்வுச்சேகரங்களாக ஆகின்றபொழுது தகவல்களாக ஆக்கப்படுகின்றன என்பதைச் சமுதாய வியலின் பகுதிகளான மொழியியல், மானிடவியல், நாட்டுப்புறவியல் துறைசார்ந்த ஆய்வாளர்களில் பலரும் மறுத்துவிட மாட்டார்கள். அதுவும் இன்று மின்னணுத் தொழில் நுட்பக் கருவிகளின் வழியே சேகரிக்கப்படும் பொழுது அவை நம்பகமான தகவல்கள். இந்தத் தகவல்கள், இன்றைய தகவல் வலைப் பின்னலில் மிகச் சுலபமாக இடம்பெயரத்தக்கன. இடப்பெயர்ச்சி என்பதை வெறும் ஊர் விட்டு ஊர் பெயர்வதாகக் கருதிவிட வேண்டிய தில்லை. தேசம்விட்டுத்தேசமும் கண்டம் விட்டுக் கண்டமும் கடந்து போகும் வாய்ப்புக்கள் கணம் தோறும் உள்ளன.தொடர்ந்து இடம்பெயரும் இந்தத் தகவல்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஆக்கப்பட்டுக் கச்சாப் பொருளின் கூறுகளாக ஆகிவிடுகின்றன என்று சொன்னால், கல்வித்துறைசார் ஆய்வாளர்கள் பலரும் ஒத்துக்கொள்ளத்தயக்கம் காட்டக்கூடும். ஆனால் இவர்கள் தயங்குகிறார்கள் என்பதற்காக தகவல்கள் கச்சாப்பொருட்களாக ஆக்கப்படுவதோ அதன் தொடர்ச்சியாக பண்டமாக மாற்றப்படுவதோ நிறுத்தப் படுவதில்லை. தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆய்வாளர் களில் பலரும் நேரடியாகத் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ஒலி, ஒளிநாடாக்களிலும் கச்சாப்பொருள்களாகவே விற்றுக்கொண்டு இருப்பது கண்கூடு. 'மன்மத ராசா.. மன்மதராசா...' என்பதாகவோ,' சின்ன வீடா வரட்டுமா..? பெரியவீடா வரட்டுமா..?' என்று கேட்பதாக விற்பது வேறொரு வகை வியாபாரம்.
நாட்டார் தெய்வங்களின் ஆக்ரோசமும் கோபமும்தான் தமிழ்நாட்டுக் கிராமமக்களின் உடைகளின் வண்ணங்களாக உறுதிசெய்யப்படுகின்றன என்பதைக் கூட்டல் வாய்ப்பாட்டில் 'இரண்டும் இரண்டும் நாலு
என விடைகாட்டுவதுபோல் காட்டிவிடமுடியாது. பெருந்தொழில் நிறுவனங் களில் செயல்படும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவுகளின் விஞ்ஞானிகள் இத்தகைய வேலைகளில் தான் ஈடுபட்டுக் கொண்டிருக் கிறார்கள் என்பது தேசபக்தி நிரம்பிய இந்தியனுக்குச்சொல்லப்பட்ட செய்திகள் அல்ல. ஆனால் தற்போதைய உலகின் பொருளாதார உறவுகள், அதற்குள் உள்ளிழுக்கப்படும் பண்பாட்டுக் கூறுகள், பண்பாட்டு அமைப்புகளைக் கையகப் படுத்தியிருக்கிற ஊடகவலைப்பின்னல்களின் சாத்தியங்கள், அதன் வழிக் கட்டமைக்கப்படும் தனிமனிதத் தன்னிலையும் கூட்டுத்தன்னிலையும் செயல்படும்விதம் என அடுக்கடுக்காக யோசித்தால் இந்த உறவுகள், தகவல்கள்>> நுகர்பண்டம்>> பணமதிப்பு என்கின்ற உறவு புரியாமல் போகாது. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளுக்கான ஆதாரங்களைச் சேகரித்தல் என்ற பெயரில் அவற்றைக் குறுந்தகடுகளில் பதிவு செய்து பாதுகாத்தல் என்பது பன்னாட்டு மூலதனக் குழுமங்களின் வியாபாரத்தயாரிப்புகளுக்கும் அவர்களின் முகவர்களான தேசிய முதலாளிகளின் விளம்பர உத்திகளுக்கும் தொடர்ந்து பயன்படுவது என்பது தான்.
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் :இதுவரை நடந்தவைகளின் பின்னணிகள்.
இலக்கியத் துறைகளின் ஒரு பகுதியாகவும் சமுதாயவியல் ஆய்வுகளின் ஒரு பகுதியாகவும் கடந்த கால் நூற்றாண்டுக்கால ஆய்வுலகில் நாட்டார் வழக்காறுகள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு ஆய்வு செய்யப் பட்டுள்ளன. நாட்டார் இலக்கியங்கள் பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள் போன்றவற்றைத் தொகுக்கும்போதும் ஆய்வுக்குட்படுத்த முயன்ற போதும் சொல்லப்பட்ட/ நம்பப்படும் காரணங்களைக் கொஞ்சம் நினைவுக்குக் கொண்டு வாருங்கள். எழுத்துமரபு நகர்ப்புற, உயர்,உயர் நடுத்தர மக்களின் விருப்பங்களையும் வாழ்க்கையையும் அறிவையும் மட்டுமே காட்டுவனவாக உள்ளன; கிராமப் புற அப்பாவிகளின் ஆசைகளையும் வாழ்க்கை யையும் அறிவாற்றலையும் காட்டுவனவாக இல்லை. அவர்களின் உணர்வுகளும் கோபங்களும் அறியப்பட வேண்டும்; அவர்களின் வாழ்க்கை மாற்றப்பட வேண்டும் எனவாதிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டு அச்சிடப்பட்டன. காற்றில் கரைந்து கொண்டிருந்த ஏட்டில் எழுதா இலக்கியங்கள் அச்சுக்கு வந்ததால் கிராமப்புற அப்பாவிகளின் இருப்பும் வாழ்க்கையும் திசைமாறி விடவில்லை. கிராமப்புறத்தை பிரதிநிதித்துவப் படுத்தச் சில அறிவாளிகள் உருவானார்கள் என்பதைத் தவிர. சில பதிப்பகங்களின் வணிகலாபத்திற்கும் அவை காரணமாக இருந்தன என்பது கூடுதல் பலன். நாட்டார் இலக்கியங் களின் உரிமையாளர்களுக்குக் கிடைத்தன என்ன? என்று பார்த்தால் எதுவுமில்லை.
அறுபதுகளில் தொடங்கி எண்பதுகள் வரை தொடர்ந்த நாட்டார் ஆய்வுகளின் கதைக்குப் பின்னிருந்த அடியோட்டம் இதுவென்றால் எண்பதுகளின் கதை வேறானது. வாய்மொழி இலக்கியங்களை அடுத்து நாட்டார் கலைகளை நோக்கி ஆய்வாளர்களின் கவனம் திசை திருப்பப்பட்டது. ஆட்டங்கள், கூத்துக்கள், நாடகங்கள், கச்சேரிகள் என நிகழ்த்துக்கலைவடிவங்கள் கவனம் பெற்றன. செவ்வியல் கலைளுக்கெதிரான யுத்தமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அவை தேடிச்சேகரிக்கப்பட்டன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாட்டார் கலைகளின் எடுத்துரைப்பு முறை (narrative method ), உடை, ஒப்பனை, பயன் படுத்தப்படும் பொருட்கள், அடவுகள்,அளவுகள்,அவற்றிற்கான இசைப் பின்னணிகள், அவற்றை எழுப்பும் இசைக்கருவிகள் என நாட்டார் அழகியல் வெளிப்பாடுகள் முன்னிறுத்தப்பட்டன. முன்னிறுத்தலின்போது , செவ்வியல் வடிவங்களை விடவும் சிறப்புற்று விளங்கும் அம்சங்கள் என ஆய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியதை மறந்து விடக்கூடாது. அப்படி ஆய்வுக் கட்டுரைகள் வழங்கப்பட்டதன் பலன் என்ன ?நாட்டார் நிகழ்த்துக்கலைகளுக்கு மேடைகள் கிடைத்திருக்கின்றன; ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருக் கின்றன.திரைப்படங்களின் கச்சாப் பொருளாகவும் ஆகியிருக் கின்றன .தேசிய அரங்கக்கலையை (National theatre ) உருவாக்குவதில் நாட்டார் கலைக்களுக்கும் பங்கு தர வேண்டும் என்பது கூட ஒத்துக்கொள்ளப்பட்ட சங்கதியாக ஆகி யிருக்கிறது. இந்தப் பின்னணியில் - அப்படி ஆனதால் பயன் பெற்றொர்-அதிகப் பயன்பெற்றோர் யாரெனக் கணக்கிட்டால் நாட்டார் கலைகளின் உரிமை யாளர்கள்-கலைஞர்கள் அடைந்த பலன்களைவிட அதனை ஆய்வுசெய்த ஆய்வாளர்கள் அடைந்த பலன்கள் தான் அதிகம். தெருக்கூத்தை ஆய்வு செய்தவர் பல்கலைக்கழகப் பேராசிரியானதால் தெருக்கூத்துக் கலைஞர் களுக்கு ஆனதென்ன ? நாட்டார் அரங்கவடிவங்களான தேவராட்டம் , கணியான் ஆட்டம், கும்மியாட்டம், பறைமேளம் என எல்லாம் ஆய்வுக் குரியனவாக ஆகி-கருத்தரங்க விவாதப் பொருள்களாக ஆகிச் சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அந்தக்கலைகளின் இருப்பும் நிலையும் மாற வில்லை; இன்னுஞ்சொல்வதானால் முன்னர் இருந்ததைவிடக் கூடுத லான அழிவை நோக்கியே சென்றுள்ளன.
இந்தக் கூற்றுக்களைத் தனிநபர்களின் மீதான விமர்சனமாகக் கொள்ளத் தேவையில்லை. விற்கத்தக்க பண்டமாக மாறும் எதுவும் உற்பத்தி செய்தவனி டமிருந்து அந்நியமாகிவிடும் சாத்தியங்கள் கொண்டது என்பதையும் அதன் மூலம் முதலீடு செய்தவனும் இடையிலிருக்கும் தரகர்களும் அதிகப் பலன் அடைவார்கள் என்பதையும் விளங்கிக் கொண்டாலே போதுமானது; அப்புறம் இதற்கு உடந்தையாக இருப்பதா ? எதிர் நிலைப்பாடு எடுப்பதா? என்பதை அவரவர்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.

வாய்மொழி இலக்கியங்கள், நாட்டார்இசை, நாட்டார் நிகழ்த்துக்கலைகள் என்பதான ஆய்வுகள் ஏற்படுத்திய விளைவுகளைவிட மோசமான ஆபத்தான விளைவுகளைச் சடங்குகள் குறித்த ஆய்வுகள் ஏற்ப்படுத்தியுள்ளன. குலச் சடங்குகள், வாழ்க்கைவட்டச்சடங்குகள், வழிபாட்டுச்சடங்குகள், என எல்லாம் தொகுக்கப்பட்டு ஆவணமாகியுள்ளன.இந்த ஆவணங்கள் தொகுக்கப்பட்டதன் மேல்விளைவாக இந்திய/தமிழகச் சமூகம் மதச்சார்பற்றச் சமூகமாக மாறியிருக்கிறதா? அல்லது மதநம்பிக்கைகள் இறுக்கமும் பிடிப்பும் பெற்ற சமூகமாக மாறியிருக்கிறதா? என்று யோசித்தால் இரண்டாவதே நடந்திருக் கிறது என உறுதியாகச் சொல்லலாம். சாதிஒழிப்புப் பற்றிக்கூட வேண்டாம்; சாதிகளிடையே முரண்கள் குறைந்து இணக்கமும் அங்கீகாரமும் தனிமனிதனை மனிதனாக மதிப்பதும் என்பதையாவது ஏற்படுத்தியிருக்கிறதா? என்றால் இல்லை என்பதுதான் பதில். எல்லாவற்றையும் அதிகமாக்கி யிருக்கிறது என்பது மேலும் உணர வேண்டிய ஒன்று. இன்று இடைநிலைச் சாதிகள் ஒவ்வொன்றும் தங்கள் சாதிப்பெருமைகளைப்பட்டியல் இடுவதற்கும் வைதீகச்சமய நம்பிக்கைகளுடன் உறவுகொண்டாடுவதற்கும் சடங்குகளைக் கடைப்பிடிப்பவர்களாக ஆகியிருப்பதற்கும் இந்த ஆய்வுகள் மறைமுகப் பங்காற்றி யிருக் கின்றன என்பதை எந்த ஆய்வாளரும் மறுத்துவிட முடியாது. அதன் தொடர்ச்சியாக மத அடிப்படை வாதங்களும் சாதிப் பெருமை களும் தூண்டியும் விட்டிருக்கிறது என்பதுங்கூட உண்மைதான்.
தமிழ் அடையாளம், நாட்டார்மரபும் செவ்வியல் மரபும் இணைதலின் புள்ளிகள், வைதீக மதத்திற்கு எதிரான போராட்டவடிவம், விளிம்புநிலை மனிதர்களின் பண்பாட்டு வரலாற்று ஆவணங்கள், நகரங்களுக்கெதிரான முரண்களைக் குவித்தல் என அவ்வப்போது காரணங்கள் மாறிக் கொண்டே இருந்தாலும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளில் நடப்பதென்னவோ;பெரிதும் மாறிவிட வில்லை. தொடர்ந்து ஆய்வாளர்கள் தரவுகளைச் சேகரித்த வண்ணமே தான் உள்ளனர்.சேகரித்த தகவல்களின் மேல் பகுப்பாய்வுகளோ , அணுகுமுறை களைப் பயன்படுத்தித் திறமான-இந்தியச்சூழலுக்குகந்த முடிவுகளை நோக்கிய ஆய்வுகள் எதுவும் நடந்ததாகத்தெரியவில்லை.
முடிவுரையாகச் சில நம்பிக்கைகள்
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் குறித்து இப்படிச் சொல்வதைப் பொறுப்பற்ற அவதூறான அரசியல் சொல்லாடல் என நினைத்துப் பலரும் சுலபமாக ஒதுக்கிவிடமுடியும். அப்படி ஒதுக்கிவிடுபவர்களையோ ஒதுங்கி விடுபவர் களையோ யாரும் எதுவும்செய்து விடமுடியாது. அவர்களின் பணி அதேபாணியில் தொடரட்டும் ; பயன்படட்டும்; பயன்பெறட்டும்.ஆனால் இதனை நியாயமான குற்றச்சாட்டு எனக்கருது பவர்கள், உடனடியாகத் தங்களின் நாட்டார் வழக்காறுகள் சார்ந்த ஆய்வுப் பணிகளை மூட்டைகட்டி விடவேண்டும் என்பதுமில்லை. நாட்டார் வழக்காறுகள் பண்பாட்டின் தாரங்களாக இருக்கின்ற அதேநேரத்தில் ,அழுத்திவைக்கும் சுமைகளாகவும் இருக்கின்றன என்ற தன்னுணர்வுடன் செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. இந்தத் தன்னுணர்வு நமது நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்களிடம் அதிகம் இல்லாத ஒன்று. ஆனால் உடனடியாக கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. அத்தகைய தன்னுணர்வு இருக்கும் நிலையில் செயல்படும் ஆய்வாளர்களுக்கென்று தனியான கடமைகள் இருக்கத்தான் செய்கின்றன. அரிய பொக்கிசங்கள் என நம்பப்படும் அந்த வழக்காறுகள்¢லிருந்து பிரித்து எறிய முடியாமல் தவிக்கும் கடந்தகாலத்தின் சுமைகள் எவையெனக் கண்டறிந்து சொன்னாலே பெரிய கடமையாற்றியதாக அமையும்.
நாட்டார் வழக்காறுகள் நிறுவனமதத்திற்கு உள்ளே இருப்பதாகநம்பினாலும்சரி வெளியேயிருப்பதாக நிறுவப்பட்டாலும்சரி அவை இந்திய மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் கூறுகட்டிப் பார்க்கும் சாதியடுக்கைக் காப்பாற்று வனவாக இருக்கின்றன; தக்கவைக்க முயல்கின்றன என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அந்தச்சுமையை வழக்காறுகளிலிருந்து பிரித்துக் காட்டித் தெளிவுபடுத்தி விட்டு அவற்றின் முற்போக்குப் பாத்திரத்தைப் பேசும் ஒரு நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளனுக்காக எத்தனை ஆண்டு காலம் வேண்டுமானாலும் நாம் காத்திருக்கலாம்.
################# ################ ################

1 comment :

ponmudivadivel Ponmudi said...

//குலச் சடங்குகள், வாழ்க்கைவட்டச்சடங்குகள், வழிபாட்டுச்சடங்குகள், என எல்லாம் தொகுக்கப்பட்டு ஆவணமாகியுள்ளன.இந்த ஆவணங்கள் தொகுக்கப்பட்டதன் மேல்விளைவாக இந்திய/தமிழகச் சமூகம் மதச்சார்பற்றச் சமூகமாக மாறியிருக்கிறதா? அல்லது மதநம்பிக்கைகள் இறுக்கமும் பிடிப்பும் பெற்ற சமூகமாக மாறியிருக்கிறதா? என்று யோசித்தால் இரண்டாவதே நடந்திருக் கிறது என உறுதியாகச் சொல்லலாம். சாதிஒழிப்புப் பற்றிக்கூட வேண்டாம்; சாதிகளிடையே முரண்கள் குறைந்து இணக்கமும் அங்கீகாரமும் தனிமனிதனை மனிதனாக மதிப்பதும் என்பதையாவது ஏற்படுத்தியிருக்கிறதா? என்றால் இல்லை என்பதுதான் பதில். எல்லாவற்றையும் அதிகமாக்கி யிருக்கிறது என்பது மேலும் உணர வேண்டிய ஒன்று. இன்று இடைநிலைச் சாதிகள் ஒவ்வொன்றும் தங்கள் சாதிப்பெருமைகளைப்பட்டியல் இடுவதற்கும் வைதீகச்சமய நம்பிக்கைகளுடன் உறவுகொண்டாடுவதற்கும் சடங்குகளைக் கடைப்பிடிப்பவர்களாக ஆகியிருப்பதற்கும் இந்த ஆய்வுகள் மறைமுகப் பங்காற்றி யிருக் கின்றன என்பதை எந்த ஆய்வாளரும் மறுத்துவிட முடியாது. //

ஐயா, ஆவணங்கள் தொகுக்கப்படுவதென்பது ஒரு வரலாறாகமட்டுமேயமையக்கூடுமென்பதே எனக்கு புரிகின்ற செய்தி. அப்படியிருக்க, அந்த தொகுப்பானது எப்படி ஒரு சமூகமாற்றத்தை கொண்டுவரவியலும்?

அந்த தொகுப்பினடிப்படையில் சமூகத்தின்மீது அக்கறைகொண்டவர்கள் துணிந்து செயற்பட்டு ஒழிக்கவேண்டியவற்றை ஒழிக்கவும் மாற்றவேண்டியவற்றை மாற்றவும் பாடுபட்டால் அவர்களது உழைப்பால் சமூகத்தில் மாற்றமுண்டாவதற்கான வாய்ப்பு உண்டாகலாம்.

அரசேகூட தன்னாலான முயற்சியை சமூகமாற்றத்துக்கென செய்யலாம்.

ஆனால் ஆவணங்களை தேடித்தேடி தொகுத்தவர்கள் தொகுப்பதைமட்டுமேசெய்திருப்பார்கள். அப்படி தொகுக்கப்பட்டவை உலகமுழுவதற்கும் சென்றுவிடுவதால் சமூகத்துக்கு கேடேதும் விளைந்துவிடுமாவென்பது எனக்கு தெரியவில்லை.

ஆனால் அதனால் சமூகமே மாறியிருக்கவேண்டுமென எதிர்பார்க்கமுடியுமாவென்பது எனக்கு தெரியவில்லை.

“சாதிஒழிப்புப் பற்றிக்கூட வேண்டாம்; சாதிகளிடையே முரண்கள் குறைந்து இணக்கமும் அங்கீகாரமும் தனிமனிதனை மனிதனாக மதிப்பதும் என்பதையாவது ஏற்படுத்தியிருக்கிறதா? என்றால் இல்லை என்பதுதான் பதில். எல்லாவற்றையும் அதிகமாக்கி யிருக்கிறது என்பது மேலும் உணர வேண்டிய ஒன்று.”

ஆவணங்கள் தொகுக்கப்படுவதால் சாதி ஒழியப்போவதில்லை. அதேபோல் அதனால் அதன் பிடி மிகுதியாவதற்கும் எந்தக்காரணமுமில்லையென்பதே எனக்குத்தோன்றுவது.

இப்படியெல்லாம் எனக்கு எண்ணத்தோன்றினாலும் தங்கள் கட்டுரையின் அடிப்படையாக எதுவோ இருக்கவேண்டுமென்றே என் மனம் சொல்கிறது. ஆனால் அதை புரிந்துகொள்ளுமளவுக்கு தங்கள் கட்டுரை எனக்கு விளங்கவில்லையென்றே இப்போதைக்கு நான் எண்ணிக்கொள்கிறேன்.

”இன்று இடைநிலைச் சாதிகள் ஒவ்வொன்றும் தங்கள் சாதிப்பெருமைகளைப்பட்டியல் இடுவதற்கும் வைதீகச்சமய நம்பிக்கைகளுடன் உறவுகொண்டாடுவதற்கும் சடங்குகளைக் கடைப்பிடிப்பவர்களாக ஆகியிருப்பதற்கும் இந்த ஆய்வுகள் மறைமுகப் பங்காற்றி யிருக் கின்றன என்பதை எந்த ஆய்வாளரும் மறுத்துவிட முடியாது.”

ஆம்! தங்கள் சாதிப்பெருமைகளை அறிந்திராமலிருந்த பலரும் அவற்றைப்பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பை அந்த ஆவணங்கள் அவர்களுக்கு வழங்கினவென்பது உண்மையே.