எந்த மொழியின் வழியாகக் கல்வி கற்க வேண்டும்?

  

இந்தக் கேள்விக்குத் தாய்மொழியின் வழியாகக் கல்வி கற்பதே சிறந்த கல்வி எனப் பலரும் உடனடியாகப் பதில் சொல்கிறார்கள். மொழிகளின் இயல்புகள், மாற்றங்கள், வளர்ந்த வரலாறு, தேய்ந்து காணாமல் போனதன் காரணங்கள் எனப் பலவற்றையும் ஆய்வு செய்து முடிவுகளைச் சொல்லும் மொழியியல் (Linguistics) துறையைச் சார்ந்த அறிஞர்களும் ஆய்வாளர்களும் தாய்மொழியின் வழியாகக் கற்றலே இயல்பானது; எளிமையானது; சரியானது எனச் சொல்கின்றனர்.
இந்தக் கூற்றில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நானும் ஒவ்வொருவரும் தாய்மொழி வழியாகக் கற்க வேண்டும்; கற்பிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறேன் என்றாலும் எனக்குக் கொஞ்சம் தயக்கமும் இருக்கிறது. அந்தத் தயக்கத்திற்கு நான் படித்த நூல்கள் காரணம் என்று சொல்வதைவிட எனது சொந்த அனுபவங்களே அதிகக் காரணம் என்று நினைக்கிறேன்.

நான் எனது பள்ளிக் கல்வியைத் தமிழ் வழியிலேயே கற்றேன். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் பட்டங்களில் தமிழ் இலக்கியத்தைப் படித்தேன். எனது முழுக்கல்வியும் தமிழ் தான். தமிழ் இலக்கியம் கற்றேன் என்றாலும் என் தாய்மொழியில் கற்றேனா என்று கேட்டால் சரியான பதிலைச் சொல்ல என்னால் முடியாது. இன்று தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் கட்சிகளும் வாய்ச் சவடால் வீரர்களும் சொல்லும் வாதப்படி எனது தாய்மொழி தமிழ் அல்ல; தெலுங்கு. எனது குழந்தைமைப் பருவத்தில் எனது குடும்பம் மற்றும் உறவினர்களில் மூத்தவர்கள் தெலுங்கிலேயே பேசுவதைக் கேட்டிருக்கிறேன். திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்வுகளில் தெலுங்குமொழி புழங்கு மொழியாக –பயன்பாட்டு மொழியாக இருந்தது என்பதும் எனக்குத் தெரியும். தெலுங்குச் சொற்கள் எனது பேச்சுகளில் பல நேரங்களில் இடம் பெற்றிருந்தது என்றாலும், என் வாழ்நாளில் ஒரு வாக்கியத்தைக் கூடத் தெலுங்கில் முழுமையாகச் சொன்னவன் இல்லை. அதேபோல் தெலுங்கைப் பயன்பாட்டு மொழியாகக் கொண்டிருக்கும் குடும்பத்தினர் ஒருவருக்கும் தெலுங்கு வரிவடிவத்தில் எழுதவோ பேசவோ தெரியாது என்றே நினைக்கிறேன்.


பெரியவனான பின் தென்னிந்திய மொழிகளில் மலையாளத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது; கற்றுக் கொண்டேன். வாசிக்கவும் ’கொறச்சு’ பேசவும் தெரியும். ஆனால் தெலுங்கு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்ததே இல்லை. என்ற போதிலும் எனது தாய்மொழி தெலுங்கு எனப் பலரும் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் அரசாங்கப் பதிவுகள் அனைத்திலும் எனது தாய்மொழி தமிழ் என்றே பதிந்து வைத்துள்ளேன். நான் மட்டுமல்ல என்னைப் போன்றவர்கள் தமிழ் நாட்டில் குறைந்தது ஒரு கோடிப் பேராவது இருப்பார்கள் என நினைக்கிறேன். சில பத்தாண்டுகளுக்கு முன்பு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்ப் பேசும் நன்னிலத்தில் வந்து தங்கித் தொழில் செய்து, ஊர் உண்டாக்கி வாழும் மனிதர்கள் தங்களைத் தமிழர்கள் என்றே அடையாளப் படுத்திக் கொண்டாலும் மன அளவில் கன்னடம், தெலுங்கு, சௌராஷ்ட்ரம், மலையாளம், குஜராத்தி, இந்தி, போன்ற மொழிகள் தான் தங்கள் தாய்மொழி எனக் கருதிக் கொண்டும் இருக்கின்றனர். இப்படியாகத் தங்களின் மொழி அடையாளத்தில் இரட்டைநிலை இருக்கும் மனிதர்கள் எந்த மொழியில் கற்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. மனத்திற்கும் இருக்கும் தாய்மொழியிலா? புழக்கத்தில் –பயன்பாட்டில்- இருக்கும் தாய்மொழியான தமிழிலா? இந்தச் சிக்கலான கேள்விக்குச் சரியான பதிலாகச் சொல்வதென்றால், ஒவ்வொருவரும் அவர்களின் பெரும்பாலான நேரங்களில் பயன்படு மொழியாக எது இருக்கிறதோ அதன் வழியாகக் கற்றலே சரியானது எனச் சொல்லலாம். ஒருவரின் பயன்பாட்டு மொழியில் கற்கும் வாய்ப்பு வழங்கப்படும்போது தான் எளிமையாகக் கற்கவும், கற்றதைப் பயன்படுத்தவும் முடியும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நான், போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறையில் தமிழை முதன்மைப் பாடமாகத் தேர்வு செய்து கற்க விரும்பும் மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் தமிழ் மொழியின் அடிப்படைகளைக் கற்பித்துக் கொண்டிருக்கிறேன். இந்த அனுபவத்திலிருந்து மட்டுமல்லாமல் எனது முந்தைய அனுபவங்களையும் சேர்த்துச் சொல்ல விரும்புகிறேன். போலந்தின் கற்றல் – கற்பித்தல் மொழி போல்ஸ்கி. ஐரோப்பாவில் இருக்கும் எல்லா நாடுகளிலும் கற்றல் மொழி அல்லது கற்பிக்கும் மொழி என ஒன்று இருக்கவே செய்கிறது. அதே நேரத்தில் அந்த நாடுகளில் கற்பிக்கும் மொழியாக இருக்கும் மொழி மட்டுமே எல்லாருக்கும் தாய்மொழியாக இருக்கிறது என்றும் சொல்ல முடியாது. போலந்தில் போல்ஸ்கியைத் தவிர இன்னும் இரண்டு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட சிறுபான்மையினர் இருக்கவே செய்கின்றனர். ஆனாலும் அவர்களும் போல்ஸ்கி மொழியையே கற்றல் மொழியாகக் கொண்டுள்ளனர். போல்ஸ்கி, போலந்தின் தேச மொழி. தேசத்தின் மொழியே பயன்பாட்டு மொழி. பயன்பாட்டு மொழியின் வழியாகக் கற்றலைத் தவிர வேறு வழியில்லை. முழுமையாக வளர்ச்சி அடையாத ஒரு தேசம் ஏதாவது ஒரு மொழியை மட்டுமே முழுமையான கற்றல் மற்றும் கற்பித்தல் மொழியாக வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்த முனைகின்றது. போலந்து அரசாங்கம் 7 வயது முதல் 30 வயது வரை- பாலர் பள்ளி முதல் முனைவர் பட்டம் வரை= தொடர்ச்சியாகக் கற்கும் வாய்ப்பை ஒருவருக்கு வழங்குகிறது. அறிவியல், தொழில் நுட்பம், சமூக அறிவியல், கலையியல் என எந்தப் படிப்பையும் ஒருவர் போல்ஸ்கி மொழியின் வழியாகக் கற்றுத் தேர்ந்து விட முடியும். அதற்குத் தேவையான அடிப்படைப் பாட நூல்களும் பார்வை நூல்களும் போல்ஸ்கி மொழியில் கிடைப்பதைப் போலந்து அரசும், அரசுத்துறையாக இருக்கும் கல்வி நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.

போல்ஸ்கி மொழி வழியாகக் கற்றுக் கொண்ட தனது அறிவைத் தனது நாட்டில் மட்டுமே பயன்படுத்தாமல் உலகத்தில் உள்ள வேறு எதாவது நாட்டிலும் பயன்படுத்தும் வாய்ப்பு வேண்டும் என நினைத்தால், அதற்கான மொழி ஊடகமாக ஒரு அந்நிய மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்பையும் கல்வி முறைக்குள்ளேயே ஏற்படுத்தித் தந்துள்ளது போலந்து அரசாங்கம். தேச மொழிவழியில் பாடங்கள், தேச மொழி ஒரு பாடம், அந்நிய மொழியாக இன்னொரு மொழி என்ற பாடத்திட்டக் கட்டமைப்பில் முதல் இரண்டும் கட்டாயம். மூன்றாவது பகுதி மாணாக்கரின் விருப்பம் சார்ந்தது. அந்த விருப்பம் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தொடர்கிறது. ஆங்கிலம், ஜெர்மனி, ப்ரெஞ்சு என நிகழ்காலத்தில் பொருளாதார உறவுகளோடு தொடர்புடைய மொழிகள் மட்டுமல்லாமல், க்ரீக், லத்தீன், ஸ்பானிஷ் என இலக்கிய வளம் சார்ந்த மொழிகளும் அந்த விருப்பப் பட்டியலில் இருக்கின்றன. 1990-க்கு முன்னால் போலந்து சோசலிச நாடுகளில் ஒன்றாக இருந்த போது முதன்மை விருப்பமாக ரஷ்யன் இருந்தது. அதன் பயன்பாடு இப்போது இல்லை என்பதால் பின்வாங்கிக் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

போலந்தும் இந்தியாவைப் போலவே வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நாடு. அதே நேரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் வேறுவிதமான நிலைமைகள் இருக்கின்றன. உலகத்தின் பணக்கார நாடுகளுள் ஒன்றாக இருக்கும் சுவிட்சர்லாந்து நான்கு மொழிகளை அரசு மொழியாகக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டின் அரசாங்கம் நான்கு மொழிகளின் வளர்ச்சியையும் கவனத்தில் கொள்கிறது. மிகச் சிறுபான்மை மொழியாக இல்லாமல் ஒரு தேசத்திற்குள் எண்ணிக்கையில் சம அளவாக இரண்டு அல்லது மூன்று மொழி பேசுகிறவர்கள் இருக்க நேரிடும் போது அந்த தேசம் முக்கிய மொழிகள் எல்லாவற்றையும் வளர்த்தெடுக்கும் வேலைகளைச் செய்ய வேண்டிய நெருக்கடி இருக்கிறது. அதற்கு உதாரணம் செக்கோஸ்லாவோக்யா. வளர்ச்சி அடைந்த நாடுகள் ஒவ்வொரு மொழியையும் முழுமையாக வளர்ச்சி அடைந்த மொழியாக வளர்த்தெடுக்க முயன்று வெற்றி பெற்றுள்ளன.
எந்த ஒரு தேசமும் தனது தேசத்தின் மொழியைக் கற்றல் மொழியாக ஆக்குவதை முதன்மை விருப்பமாக நினைக்க வேண்டும். அதற்கு முதலில் தேசத்தின் மொழியைக் கற்றலை நிறைவேற்றத் தக்க தகுதியுடைய மொழியாக ஆக்க வேண்டும். இந்தியா ஒற்றைத் தேசமாக இல்லாமல் மொழிசார்ந்த அடையாளங்களால் பல தேசங்களின் தொகுப்பாக இருப்பதால் அதன் கல்விமொழி பிரச்சினையும் அவிழ்க்க முடியாத சிக்கல்களோடு தொடர்கிறது. தேச அரசின் பிரச்சினையா? மாநில அரசின் பிரச்சினையா? என்ற கேள்விக்குள் நுழையாமல் மாநில அரசின் பிரச்சினையாகவே கவனப்படுத்துகிறோம்.

இப்போது எனது தமிழ் நாட்டு அனுபவங்களுக்கு வருகிறேன். போலந்துக்கு வருவதற்கு முன்பு, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாரில் 14 ஆண்டுகள். தமிழ் மொழி, இலக்கியம் படிக்கவும் ஆய்வு செய்யவும் வந்தவர்களுக்குக் கற்பிக்கும் தமிழ்ப் பேராசிரியராக இருந்தேன். அதற்கு முன்பு 8 ஆண்டுக் காலம் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைப் பள்ளியில் நாடகவியலைக் கற்பிக்கும் ஆசிரியனாக இருந்தேன். அதற்கும் முன்பு 2 ஆண்டுகள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர். இந்தக் கால் நூற்றாண்டுக் கால ஆசிரியப் பணியில் முழுமையான திருப்தியும் மனநிறைவும் எப்போதாவது இருந்ததா? எனக் கேட்டால் “ நிச்சயம் இல்லை” என்றே சொல்வேன். இந்தத் திருப்தி மற்றும் மனநிறைவின்மைக்குச் சொந்தப் பிரச்சினைகளோ உழைக்கத் தயாராக இல்லாத மனநிலையோ காரணமில்லை என்பதை நானறிவேன்; என்னைத் தெரிந்தவர்களும் இதை அறிவார்கள்.

தமிழைக் கற்பிக்கத் தேவையான அடிப்படை நூல்களே தமிழில் இல்லை என்பதே எனது திருப்தி இன்மைக்கு முதல் காரணம். மொழியைப் பற்றிய உலக ஆய்வுகளும் கோட்பாடுகளும் தமிழில் இல்லை. தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, வரலாறு பற்றி இந்தியப் பல்கலைக்கழகங்களிலும், உலகப் பல்கலைக்கழகங்களிலும் செய்யப்பெற்ற ஆய்வுகளும் கருத்துக்களும் கூடத் தமிழில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. முதுகலைத் தமிழில் கற்பிக்கப்படும் திறனாய்வு போன்ற பாடங்களில் உலக அளவில் பேசப்படும் அதே தரத்தில் பேச வேண்டும் என்றால் அதற்கான அடிப்படை நூல்கள் தமிழில் இல்லை. இப்போது பயன்பாட்டில் இருப்பனவெல்லாம் 40 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப் பெற்ற நூல்களே.

இலக்கியத் திறனாய்வு மாணவனாக முனைவர் பட்டம் பெற்ற நான் எனது விருப்பத்துறையாக நாடகத்தை மாற்றிக் கொண்டு புதுச்சேரி மையப் பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைப்பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன். சொந்த வாழ்க்கை மற்றும் நண்பர்கள் சூழலில் திருப்தியாக இருந்த பாண்டிச்சேரியை விட்டு வெளியேறித் திரும்பவும் தமிழியல் துறைக்குத் திரும்பியதற்கு முதன்மையான காரணமாகச் சொந்தப் பிரச்சினைகள் எதுவும் இருந்ததில்லை. துறைசார்ந்த பிரச்சினையே என்னை அங்கிருந்து நகர்த்தியது. நாடகவியலைத் தமிழ் வழியாகப் படித்து மாணவர்களுக்குக் கற்பிக்கத் தேவையான அடிப்படைப் பாட விளக்க நூல்களும், நாடகப் பிரதிகளும் தமிழில் கிடைக்கவில்லை என்பது என்னைப் பெரும் சோர்வுக்குள் தள்ளியது. இதைப் பலநேரம் நண்பர்களோடு பகிர்ந்திருக்கிறேன். ஆனால் மலையாளத்தில் நாடகத்தைக் கற்பிக்கத் தேவையான அடிப்படை நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கன்னடத்திலும் கூடச் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழில்..?

முத்தமிழ் என்று பிரித்துப் பெருமையாகச் சொல்லும் நாம் –இயல், இசை, நாடகம் என்ற இந்த மூன்று தமிழ்களையாவது ஆரம்பக்கல்வி முதல் முனைவர் பட்டம் வரை முழுமையாகத் தமிழ் வழியாகக் கற்பிக்கத் தேவையான நூல்களை இன்னும் உருவாக்கவில்லை என்பது தான் உண்மை. உயர்கல்விக் கூடங்களில் தமிழ் வழியாகக் கற்கவும் கற்பிக்கவும் தேர்வுகள் எழுதவும் உள்ள உரிமைகள் தொடர வேண்டும் என வலியுறுத்தும் அரசியல் இயக்கங்களும் அறிவாளிகளும் தமிழை அதற்குத் தகுதியுடைய மொழியாக ஆக்கும் பொறுப்பு பற்றியும் சிந்திக்க வேண்டும். அந்தப் பொறுப்பை மேற்கொள்ளும் அரசோடும், அரசு நிறுவனங்களோடும் ஒத்துழைத்துச் செயலாற்றவும் வேண்டும். ஊர்கூடித் தேர் இழுத்தால் தான் தமிழ்வழிக் கல்வி என்னும் தேர் நகரும்.

இங்கே இன்னொரு முக்கியமான கேள்வியும் நம்முன் இருக்கிறது. கல்வி எதற்காக என்பதே அந்தக் கேள்வி? சிந்தனையையும் வாழ்முறையையும் மேம்படுத்துவதற்காகவா? வாழ்வதற்கான பொருளியல் தேவைகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் கருவியாகவா? நிச்சயமாக நிகழ்காலத்தில் இரண்டாவது நிலையில் தான் கல்வி இருக்கிறது. அந்தக் கல்வியைத் தமிழ் வழியில் கற்பிக்க வேண்டும் என்றால் தமிழ் மொழியைத் தகுதியுடைய மொழியாக – உலகத்தின் தகவல்களும் சிந்தனைகளும் நிரம்பிய மொழியாக ஆக்க வேண்டும். இவற்றையெல்லாம் தனது தாய் மொழியில் கற்கும் ஒருவனுக்கு அத்தகவல்களையும் சிந்தனைகளையும் சொந்த மொழியிலும், விருப்பத்தோடு கற்ற இன்னொரு மொழியிலும் எடுத்துச் சொல்லும் பாங்கு தானே உருவாகும். இப்படி உருவாக்கிக் கொண்ட தலைமுறை நம்முன்னே இன்னமும் இருக்கவே செய்கிறது.

கருத்துகள்

ஆயுத எழுத்துக்கள் இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழ் வழியிலான உள்ளீட்டுக் கருவிகளையும் மென்பொருள்களை கொண்டு தமிழ் வளர்ச்சியினை தூண்டலாம் என்பது என் கருத்து
vjpremalatha இவ்வாறு கூறியுள்ளார்…
தாய்மொழியை சிந்தனை மொழி என்றே கூறலாம். சிந்திக்கின்ற மொழியால் பயிற்றுவிக்கப்படும் கல்வி, எண்ணங்களை மேம்படுத்தி, நுணுக்கங்களைப் புரிய வைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு வித்திடுகிறது. இலத்தின் மொழிக்கெதிராகப் போராடிய ஆங்கிலம் 18ம் நுhற்றாண்டிற்குப் பின் அங்கீகரிக்கப்பட்டு, தாய்மொழியாக ஐரோப்பியர்களில் கல்விக் கூடங்களில் கற்பிக்கப்பட்டது. ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், அதுவரை இலத்தின் மொழியில்தான் பயிற்றுவிக்கப்பட்டார்கள். ஆனால், தாய்மொழியான ஆங்கில வழியாகவே கற்றுக் கொடுக்கப்படலாம் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்னர்தான் ஐரோப்பா பல அறிவியல் அறிஞர்களை, கண்டுபிடிப்புகளை உலகிற்குத் தந்தது. ""தாய்மொழி என்பது தாயின் மொழி-அது
தாயும் நீயும் பேசும் மொழி
ஆயிரம் மொழிகள் நீயறிந்தாலும்
ஆன்மா உணர்மொழி அந்த மொழி""
. . . . . .
தேனாய் இனித்திடக் கேட்ட மொழி – உன்
சிந்தையில் விதைகள் போட்ட மொழி
. . . . . .
உன்னுடன் இணைந்தே பிறந்தமொழி-உன்
உள்ளமும் உணர்வும் புரிந்த மொழி
எண்ணியல் என்ன மின்னியல் என்ன
எதையும் பயின்றிடச் சிறந்த மொழி-அது
இறைவன் உனக்கென வரைந்த மொழி""
என்று தாய்மொழிவழிக்கல்வியின் சிறப்பினை மறைந்த மலேசியக் கவிஞர் சி.செ. சீனிநைனா முகம்மது பாடிச் சென்றுள்ளார். சிந்தையில் விதைகளை விதைக்கும் மொழி, எண்ணியல் மின்னியல் எதையும் பயின்றிடச் சிறந்த மொழி தாய்மொழியன்றி வேறொன்றில்லை என மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். ‘அணுவைத் துளைத்து எழு கடலைப் புகட்டும்’ ஔவையாரின் அறிவு தாய்வழிக்கல்வியினால் விளைந்தது அன்றோ? “சித்த மருத்துவமே சிறந்த மருத்துவம்“ என்று உலகம் போற்ற தமிழரை தமிழ்வழிக்கல்வியைப் புறக்கணிப்பதுபோல் அதையும் புறக்கணித்து சர்க்கரை நோயினால் மடிந்து வருகின்றார்கள்.தமிழை வளப்படுத்த ஒரு பத்தாண்டு காலம் அனைத்து பல்கலைக்கழக ஆய்வுகளும் அந்தந்த துறை சார்ந்த மொழிபெயர்ப்புகளைச் செய்ய வேண்டும் என அரசு ஆணையிடலாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்