June 23, 2016

க்யூபெக் : தனி அடையாளம்பேணும் முன்மாதிரி


மாண்ட்ரியால் நகரத்திலேயே முழுமையும் பிரெஞ்சு எழுத்துகள் தான் எழுதப்பெற்றிருந்தன. 10 மாநிலங்கள் கொண்ட கனடா ஒன்றியத்தில் அண்டோரியா மாநிலத்திற்கு அடுத்துப் பெரிய மாநிலம் க்யூபெக் தான். இயற்கைவளமும் தொழிற்சாலைகளும் நிரம்பிய க்யூபெக் மாநிலத்தில் 80 சதவீதம் பிரெஞ்சு மொழிக்காரர்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றிலும் பிரெஞ்சு அடையாளத்தைத் தக்கவைப்பதில் ஆர்வத்தைக் காட்டிய க்யூபெக் மாநிலத்தின் அண்மைக்கால வரலாறு தமிழக வரலாற்றோடும் ஈழப்போராட்டத்தோடும் உறவுடையதாக இருக்கிறது.


ஒரு நாட்டிற்குள்ளிருந்து மொழியை முன்வைத்துத் தனிநாடு கோரிக்கையைப் போராட்டமாக்கும் அமைப்புகளும் தேசியவாதிகளும் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய அரசியல் வரலாறு அது. நான்கில் மூன்றுபங்குப் பெரும்பான்மையினர் பேசும் பிரெஞ்சுமொழியை முன்வைத்து அடையாள அரசியல் உருவான காலகட்டம் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் உற்சாகமான போராட்டங்களை முன்வைத்த  1960- கள். ஈழத்திலும்கூட அதே காலத்தில் போராட்டத் துளிகள் உருவாகிவிட்டன.  மொழியை முன்வைத்து உருவான அடையாள அரசியல் கட்டடங்கள், கலை, இலக்கியங்கள் எனத் தொடங்கி வெகுமக்கள் அரசியலாக மாறிக் கட்சிகட்டி ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். 
க்யூபெக்கைப் பெயரில் கொண்ட அக்கட்சி மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றதின் பின்னால், தனிநாடு கோரிக்கைக்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது.  2003 இல் தனிநாட்டிற்காக வாக்கெடுப்பு நடத்தியபின், தனிநாடாகப் பிரிய வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். ஆனால் தனித்துவமான சமூகம் என்ற அடையாளத்தைத் தக்கவேண்டும் என்பதில் உறுதியைக் காட்டியிருக்கிறார்கள். மக்கள் தனிநாட்டிற்காகத் தயாராக இருக்கிறார்கள் என்றாலும், தனித்துவமான சமூகம் என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் கனடா ஒன்றியத்துடன் இணைந்திருக்க முடியும் எனச் சட்டமன்றத்தீர்மானம் முன்மொழிந்திருக்கிறது. 2006 இல் மாநில ஆட்சிமன்றம்  நிறைவேற்றிய சட்டத்தை ஏற்று ஒன்றிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அன்று முதல் க்யூபெக் மாநிலத்தில் பிரெஞ்சு மட்டுமே ஆட்சிமொழியாக இருக்கிறது. கல்வி, கலை, சட்டம், நிர்வாகம் என அனைத்தும் பிரெஞ்சில் மட்டுமே நடக்கிறது போக்குவரத்து விதிகள் கூடத் தனியான விதிகள் தான். வாகனத்தின் இடது இருக்கையில் அமர்ந்திருக்கும் வாகன ஓட்டி சாலையின் வலதுபக்கம் உடனே திரும்பமுடியாது.


தனிநாடாகப் பிரிந்துவிடத் தேவையான நிலப்பரப்பும் பொருளாதார வளமும் இருக்கும் பண்பாட்டுத் தனித்துவமும் கொண்ட ஒரு கூட்டம் தங்களின் தனித்துவத்தைப் பேணும்படி கோரிக்கைவிடுவதும், அதனை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிப்பதும் இந்த உலகத்தில் சமாதான வாழ்க்கையை விரும்புபவர்கள் பின்பற்றவேண்டிய முன்மாதிரி என்பதில் யாருக்கேனும் மாற்றுக்கருத்து இருக்குமா? என்று தெரியவில்லை. நீண்டகாலமாகக் கனடாவில் வாழும் இலங்கைத் தமிழ் அறிவுஜீவிகளும் மக்களும் க்யூபெக் மாதிரியை முன்வைத்துத் தமிழர்களை அரசியல் மயப்படுத்தும் முயற்சியை ஏன் முன்னெடுக்கவில்லை என்பது தெரியவில்லை.
மாண்ட்ரியாலிலிருந்து க்யூபெக்கு வரும் பாதை 250 கிலோமீட்டர் தூரம். 100 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்லவேண்டிய சாலைகள். சாலையோரங்களில் சிறுநகரங்களும் தூரத்தில் தனித்தனி வீடுகளோடுகூடிய விவசாயப்பண்ணைகளும் தெரிகின்றன. இடையில் வளமான நீர்நிலைகள், மரங்களடர்ந்த காடுகள், தோட்டங்கள் என மாறிமாறி நகர்கின்றன. பெரும்பாலும் மக்காச்சோளம் விளையும் தோட்டங்கள். இல்லையென்றால் அடர்த்தியான மரங்கள் வளர்ந்த காடுகள்.  சாலைப் பயணத்தைவிடுத்து பெரும்படகுப் பயணம்கூட மேற்கொள்ளலாம். புனித லாரன்ஸ்நதி இரண்டு நகரங்களையும் இணைத்துச் செல்லும் பேராறு. படகுகளும்கூட மூன்றுமணிநேரத்தில் போய்ச்சேர்ந்துவிடும் என்றே பயணத்திட்டங்கள் சொல்கின்றன.

தலைநகரின் பெயரிலேயே மாநிலத்தின் பெயர் இருப்பதால், நகரம் என்பதை இணைத்து க்யூபெக் நகரம் என அழைக்கப்படுகிறது.  யுனெஸ்கோவின் பாரம்பரியத்திற்கான பட்டியலில் இதன் பழைய நகரம் இருக்கிறது. அங்கு இரண்டுநாள் தங்குவது என்ற திட்டமிடலுடன் பயணம்.  ஒருநாள்  உள்ளே; இன்னொருநாள் வெளியே.   நயாகராவுக்கு இணையான நீர்வீழ்ச்சியும் அதனருகில் ஓடும் ஆறும், ஆற்றங்கரைக்கிராமமும் ஆற்றைத் தாண்டியிருக்கும் ஒரு தீபகற்பமும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று அழைப்புவிடுத்திருந்தது. ஆகவே அதற்கு முழுமையாக ஒருநாளைத் தருவது என்று முடிவுசெய்யப்பட்டது. க்யூபெக்கில் நுழைந்ததும் நேராகப் போனது ஒரு மலைக்கோட்டை. சிட்டாடல் என்ற அந்த மலைக்கோட்டை திண்டுக்கல் மலைக்கோட்டையை நினைவுபடுத்தியது. பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் மூன்று ஆண்டுகள் படித்தபோது திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு அடிக்கடி போவோம். கோட்டை மாரியம்மன் திருவிழாவின்போது இரவில் தெரியும் மலைக்கோட்டைக்கும், பகலில் பார்க்கும் மலைக்கோட்டைக்கும் வேறுபாடுகள் உண்டு. கோட்டை மேல் அரண்மனையை கட்டிக்கொண்டு, சுற்றிலும் கோட்டையும் கொத்தளமாகவும் இருந்த திப்பு சுல்தானும் அவனது பிரதிநிதிகளும் மேலே கொஞ்சம் மண்கொண்டுபோய்ச் சோலைகளை உருவாக்கியிருந்தால்  முக்கியமான சுற்றுலாத்தளமாக ஆகியிருக்கும். அதை இப்போதுகூடச் செய்யலாம்.
க்யூபெக்கிலிருக்கும் சிட்டாடல் கோட்டையை அப்படித்தான் மாற்றியிருக்கிறார்கள். மேலே போகும்பாதை மலைப்பாதி. அதை ஒருவழிப்பாதையாக அமைத்து முழுமையும் கவனமாகப் போகவேண்டிய நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். திருப்பங்களில் மட்டுமே வண்டிகள் விலகும்படியான அமைப்பு. சாலைக்குறியீடுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. எதிரே வரும் வாகனத்திற்காக வழிவிட்டு நின்றுநின்று மேலே ஏறவேண்டும். அப்படி ஏறுவதிலேயே ஒரு ராணுவத்தன்மை உருவாக்கப்படுகிறது. மலைக்கோட்டைக்குள் ராணுவத் தளவாடங்களும் ராணுவ அதிகாரிகளின் அலுவலகங்களும் இருக்கின்றன. நெப்போலியன் காலத்தில் உருவாக்கப்பெற்ற பிரெஞ்சுப் படைப்பிரிவு பாதுகாப்பாகத் தங்கிய இடம் . இப்போதும் முழுமையாகப் பிரெஞ்சுப் படைப்பிரிவொன்றை வைத்திருக்கிறார்கள். அந்த வரலாற்றை நினைவுபடுத்தும் அருங்காட்சிக்கூடங்கள் இருக்கின்றன.
கனடியப் பணத்தில் 12 டாலர் வாங்கிக்கொண்டு ஒருமணி நேரம் சுற்றிக்காட்ட இரண்டு பெண்கள் உடன்வருகிறார்கள். செஞ்சட்டையில் வரும் அந்தப் பெண்களில் பழைய பிரெஞ்சுப் படைச்சின்னம் இருக்கிறது. ஒருத்தி பிரெஞ்சில் சொல்வதை இன்னொருத்தி ஆங்கிலத்தில் சொல்கிறாள். சில இடங்களில் ஆங்கிலம் முந்திக்கொண்டால் பிரெஞ்சு தொடர்கிறது. பொறுமை இருந்து அவர்களின் பேச்சையும் சிரிப்பையும் கேட்டுக்கொண்டே நின்றால் சுற்றியிருப்பனவற்றைப் பார்க்காமல் விட்டுவிடுவோம். ஒருவிதக் கதைசொல்லும் பாணிக்குள் இருக்கும் பாவனைகளும் சிரிப்பும் நடிப்பு கற்ற நங்கைகளோ என்று நினைக்கத்தோன்றுவது எனக்குமட்டும் தானாவென்று தெரியவில்லை.  கோட்டையின் ஒருமூலையில் இருக்கும் பீரங்கி வரிசைகளுக்குப் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வசதி செய்யப்பட்டிருக்கிறது. அப்படி எடுக்கப்படும் படத்தில்  பெரும்படகுகள் செல்லும் புனித லாரன்ஸ் நதியும் அதன் கரையில் நிற்கும் சிறுபடகுகளும் அடுக்கடுக்கான கட்டடங்களும்  பதிவாகிவிடும். அங்கிருந்தே தெரியும் பழைய நகரமும், ஆற்றுக்கு மறுகரையிலிருக்கும் ஊருமாக விரியும் காட்சி காணவேண்டிய ஒன்று.

கோட்டையின் கட்டடங்கள் ஒவ்வொன்றுக்கும் உள்ளே ஆயுதங்களின் வரிசைகளும் ராணுவமுகாம்களின் மாதிரிகளும் இருக்கின்றன. ஒரு அரங்கில் க்யூபெக் நகரத்திலிருந்து போருக்குச் சென்ற மரித்தவர்களின் பெயர்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் பெற்ற பட்டங்கள் இருக்கின்றன. படைவீரர்களின் ஆடைகளும் ஆடைகளில் அணியப்படும் போரடையாளச்சின்னங்களும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. கோட்டையின் மையத்தில் சிறுகுன்றுபோலக் கருங்குவியலொன்று கிடந்தது. அது பனிக்குவியல் எனச் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.  பனிக்காலம் முடிந்து மூன்று மாதங்கள் முடிந்தபின்னும் பனி உருகாமல் தூசியிட்டுப் பாதுகாக்கிறார்கள். அப்படிப்பாதுகாக்கப்படும் பனிக்குவியல்கூட ஆயுதத்தின் ஒருவகையாகப் பயன்பட்டுள்ளது.  


No comments :