நினைவில் நின்ற நூல்கள்


எழுத வேண்டியதை முடிவு செய்து விட்டு எழுத உட்கார்ந்தால் எழுதி விடலாம் என்ற பயிற்சியை உருவாக்கிக் கொண்டு விட்ட என்னைப் போன்றவர்களை இடைநிலைப் பத்திரிகைகளின் பெருக்கம், அதிகமாக எழுதும்படி தூண்டியுள்ளது. அதே நேரத்தில் அதுவரை இருந்து வந்த வாசிக்கும் பழக்கத்தையும் அடியோடு மாற்றி விட்டது.

பத்திரிகை வந்து சேரும் தினத்தில் படிக்கத் தொடங்கி அந்த மாத இறுதிக்குள் வாசித்து முடிக்கும் கட்டுரைகள், கவிதைகள் பின்னர் நூலாகத் தொகுக்கப்படும் போது உடனே வாசித்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தைத் தருவதில்லை. அத்தகைய நிர்ப்பந்தம் இல்லாததால் ஒரு நூலை வாசித்த அனுபவம் என்னும் முழுமையைத் தொடர்ந்து இழந்து வருகிறேன் என்றே தோன்றுகிறது. அநேகமாக இந்தப் பிரச்சினை என்னுடைய பிரச்சினை மட்டுமல்ல. ஒவ்வொரு மாதமும் வந்து சேரும் பத்துக்கும் அதிகமான மாத இதழ்களைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் பலருடைய பிரச்சினையாகவும் இருக்கும் என்றே நினைக்கிறேன். இதிலிருந்து தப்பிப்பதற்காக நாவல்களை எப்போதும் பையில் வைத்திருப்பது எனது வழக்கம்.
பெரும் கனத்தோடு அதிகமான பக்கங்களில் எழுதப்படும் நாவல்கள் கடந்த பத்தாண்டுகளில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பக்கம் அதிகம் என்ற போதிலும் அவை அழைத்துச் செல்லும் பிரதேசங்களும், முன் நிறுத்தும் பாத்திரங்களும், விவாதிக்கும் காலமும் புதிது,புதிதாக இருக்கின்றன. அதனால் வாசித்த நாவல்களின் எண்ணிக்கை குறைந்து விட்டன. அண்மை வருடங்களில் செடல், கூகை, யாமம், ஆழிசூழ் உலகு, வார்ஷாவில் கடவுள், ஏழாவது உலகம், கொற்றவை போன்ற நாவல்களை வாசித்த போது அவை விரித்த கதைப் பரப்புகள் புத்தம் புதியனவாக இருந்தன. பல மடிப்புகளைப் பலவண்ணச் சேலையை மடிப்புக் குலையாமல் விரித்துக் காட்டும் துணிக்கடைப் பணியாளின் லாவகத்துடன் அந்நாவல்களின் ஆசிரியர்கள் விரித்த புத்தம் புது உலகம் என் முன்னால் இப்போதும் விரிந்து கிடக்கின்றன. அப்படியான தொரு நாவல் இந்த ஆண்டு வரவில்லை என்று என் மனம் சொன்ன போதும், தோப்பில் முஹம்மது மீரானின் அஞ்சு வண்ணம் தெரு முக்கியமான நாவல் என்பதையும் மறுக்கவில்லை.

பேச்சு மொழியை அதிகம் பயன்படுத்தி விட வேண்டும் என்ற விருப்பம் காரணமாக வட்டார மொழிக்குத் தரும் அதிக முக்கியத்துவத்தால் மீரானின் எழுத்துக்கள் எப்போதும் வாசிப்பு வேகத்தை மட்டுப் படுத்தி தடைகளை எழுப்பும் இயல்பு கொண்டவை. ஒரு கடலோர கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி என்ற இரண்டிலும் அந்த அனுபவத்தை நான் உணர்ந்திருக்கிறேன். ஆனால் இப்போது அடையாளம் வெளியீடாக வந்திருக்கும் அஞ்சு வண்ணம் தெரு நாவலிலும், ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் சிறுகதைத் தொகுப்பிலும் மொழிரீதியான மாற்றத்தை மீரான் அடைந்திருக்கிறார் என்பது உறுதியாக வெளிப்பட்டுள்ளது. அந்த மாற்றத்தை அவராகவே வந்தடைந்தாரா? அல்லது தீவிரமான வாசகர்களின் கோரிக்கைக்குச் செவி மடுத்ததின் மூலம் அடைந்தாரா என்று தெரியவில்லை.

அந்நாவலை வாசித்து முடித்தவுடன் ‘இதுசமகால வாழ்வை விசாரிக்கும் நாவல்’ என்று வகைப்படுத்திப் புரிந்து கொள்ள வேண்டும் என நினைத்ததை விட ‘அஞ்சு வண்ணம் தெரு சமகால அரசியலை - அதன் நுட்பமான இயங்குநிலைகளை ஆழ்ந்த கரிசனத்தோடு விவரிக்கும் நாவல்’ எனச் சொல்வதே சரியாக இருக்கும் எனத் தோன்றியது. ஒவ்வொரு நாவலையும் சாதாரணமாக வாசித்து விட்டுப் போய்விடலாம். ஆனால் அது எழுப்பும் தொனியோடும், விவாதிக்க விரும்பும் அரசியல் சமூகப் பின்புலத்தோடும் வாசிக்கிற போதுதான் படைப்பாளியின் அக்கறைகள் மீது விமரிசனத்தை முன் வைக்க முடியும் என்பது எனது கருத்து.

அஞ்சு வண்ணம் தெருவில் வந்து போகும் பாத்திரங்கள் இரண்டு விதமானவர்களாக இருக்கின்றனர். தங்களின் முன்னால் நடக்கும் மாற்றங்கள் சரியில்லை; மோதல்களையும் முரண்பாடுகளையும் வலியத் தேடிச் செல்லும் நோக்கத்தோடு அடுத்த தலைமுறை வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது; அதனால் இதுவரை பிடிமானத்துடன் இருந்த பழைய வாழ்க்கை முறை ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது என்பதை இயலாமையுடன் பார்த்துக் காலம் கடத்திக் கொண்டிருப்பவர்கள் முதல் வகையினராக உள்ளனர். இரண்டாவது வகையினர் உருவாக்கப் படும் அச்ச உணர்வுக்குள் தங்களை இணைத்துக் கொண்டு, முன் வந்து நிற்கும் வழிகாட்டுதல்களால் ஈர்க்கப்பட்டு அதனை நோக்கிப் பயணம் செய்யும் நிலையினர். இவ்விரு வகையினரும் சந்திக்கும் பரப்பாக அஞ்சுவண்ணம் தெரு நகர்கிறது. அது நகர்கிறது என்பதை விடக் காலம் அப்படி நகர்த்துகிறது; மாற்றுகிறது என்பதை மீரான் தனது எளிய கதை சொல்லல் மூலம் எழுதிக் காட்டியுள்ளார்.
பழைமை வாதத்திலிருந்து இயல்பாக மாறிக் கொண்டிருந்த இந்தியப் பன்முக சமுதாயத்தின் சகல தளங்களிலும் இந்த முரண்பாடு தீவிரமாகி ஓரளவு ஏற்கத்தக்க அந்த மாற்றத்தைக் குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக உருவாக்கப்படும் மத அடிப்படை வாதம் இந்திய இசுலாமியர்களின் பிரச்சினை மட்டும் அல்ல. பெரும்பான்மையினர் எனத் தங்களைக் கருதிக் கொள்ளும் இந்துக்களின் பிரச்சினைகளும் தான். இந்து, இசுலாம், கிறித்தவம் என ஒவ்வொரு சமயங்களிலும் செயல்படும் சாமியார்களும் , போதகர்களும், ‘ஒவ்வொருவரும் தங்கள் அடையாளத்தைப் பேணுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும்’ எனச் சொல்லி அடிப்படைவாதத்தை நோக்கி அடுத்த தலைமுறையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இவற்றை மறுப்பவர்கள் போலத் தோற்றம் தரும் அரசியல்வாதிகள் மத அடிப்படை வாதத்தை விடவும் ஆபத்தான சாதீய அடிப்படை வாதத்திற்குள் சமூகங்களை பிரித்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதே நேரத்தில் இந்திய தேசம் பொருளாதாரத் தளத்தில் நாலுகால் பாய்ச்சலில் முன்னோக்கிப் பாய்வதாகவும் சொல்லப்படுகிறது. அந்தப் பாய்ச்சலை முன் வைக்கும் அரசுகளும், அவற்றின் திட்டமிடும் வல்லுநர்களும் கவனித்து முன்னுரை தர வேண்டிய அடைப்படை வாதங்களின் பரிமாணங்களை உணர்ந்ததாகத் தெரியவில்லை. அது முதலில் உணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வேலையைப் படைப்பாளி செய்ய முடியும் என்பதை மீரான் இந்த நாவல் வழியாகச் செய்துள்ளார். இந்தப் பின்னணியில் தான், மீரானின் அஞ்சு வண்ணம் தெரு சரியான அரசியல் நாவலாக வந்திருக்கிறது எனக் கருதுகிறேன் . மிகுந்த கரிசனத்தோடும், சமூக அக்கறையோடும் மீரான் இந்த நாவலை எழுதியுள்ளார் என்று நான் வாசித்துப் புரிந்து கொண்டிருக்கிறேன். வாசிக்கிற ஒவ்வொருவரும் அதை உணர வேண்டும்; உணர முடியும் என்றே தோன்றுகிறது.
*********************************
நாவல்களை வாசிக்கும் போது புத்தம் புதிதாக நாவல்களை நமது பதிப்பகங்கள் நமக்குத் தருகின்றன. ஆனால் சிறுகதைத் தொகுதிகளை அப்படித் தருவதில்லை. இரண்டு மூன்று தொகுதி அளவுக்குக் கதைகள் எழுதிய சிறுகதைக்காரர் கூட முதலில் பத்திரிகைகளில் எழுதி வெளியிட்டு விட்டுப் பின்பு தான் தொகுப்பாகக் கொண்டு வர வேண்டிய நிலை இன்னும் இருக்கிறது. நேரடியாக-பத்திரிகைகளில் வராமல் புத்தகமாக வந்து ஆச்சரியமூட்டும் சிறுகதைத் தொகுப்பை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

ஏற்கெனவே பத்திரிகைகளில் வந்த போது வாசித்த கதைகளே ஆயினும், கட்டுரைத் தொகுப்புகள் போல அவை அலுப்பூட்டுவதில்லை. மொத்தமாக ஒரு ஆசிரியரின் கதைகள் அடங்கிய தொகுப்பைக் கையில் எடுத்து ஒவ்வொரு கதையாக வாசிக்கும் போது அந்தச் சிறுகதை ஆசிரியரின் பல்வேறு நுட்பங்கள் ஒவ்வொரு கதையிலும் வெளிப்படத்தொடங்கும். அப்படியான தேடலோடு கதைகளை வாசிக்க வாசிக்க ஒவ்வொரு கதையிலும் உயிர் பெறும் பாத்திரங்கள் வழியாகப் படைப்பாளியின் படைப்பு வெளி விரிந்து கொண்டே போவதை உணர முடியும். க்ரியா பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள இமையத்தின் வீடியோ மாரியம்மன் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளை அவை பத்திரிகைகளில் வந்த போதே வாசித்திருக்கிறேன். நாவல்களின் வழியாக அவரது படைப்பு வெளியை ஊகம் செய்யும் ஒரு வாசகனைச் சுலபமாக ஏமாற்றி விடக்கூடியது அவரது சிறுகதைகள். துக்கத்தின் உச்சத்தில் உறையும் பாத்திரங்களை வாசகன் முன்னால் நிறுத்த விரும்பும் இமையம் ஆரம்பத்திலேயே அந்தச் சோகத்தை உருவாக்கு வதில்லை. ‘உழைக்கிறோம்; துன்பத்திலிருக்கிறோம்; இப்படியான வாழ்க்கை நமக்கு நேர்ந் திருக்கிறது; அதை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’ என்ற தன்னுணர்வுகள் ஏதுமற்ற மனிதர்களின் மகிழ்ச்சியான தருணங்களை விவரித்து விட்டு, அவர்கள் சந்திக்கும் துக்க நிகழ்வுகளுக்குள்- வலிக்குள்- வாசகனை அழைத்துச் செல்லும் இமையத்தின் சிறுகதைப் பாணியை இத்தொகுப்பில் உள்ள பதினோரு கதைகளில் முக்கால் வாசிக்கதைகள் கொண்டுள்ளன. பொதுவாக இமையத்தின் கதைகளில் வரும் மனிதர்கள் கடந்த காலத்தின் மனிதர்கள். அவர்களை நிகழ்காலத்திற்குள் இழுத்து வந்து நிறுத்தும் வேலையை இமையம் செய்வதில்லை. இந்தப் பொதுத் தன்மையிலிருந்து அண்மையில் அவர் எழுதியுள்ள கதைகள் மாறத் தொடங்கியுள்ளன என்பதை உணர முடிகிறது. பாத்திரங்களின் செயல்பாடுகளை நுட்பமாக விவரிக்கும் போக்கிலிருந்து விலகி வந்துள்ள இமையம் இத்தொகுப்பில் உள்ள உயிர்நாடி, வீடியோ மாரியம்மன் தொகுப்பின் வழியாக அந்த மாற்றத்திற்குள் நுழைந்துள்ளார் எனச் சொல்லலாம். அந்த மாற்றம் காரணமாக அவரது கதைகளும் நிகழ்கால அரசியல் கதைகளாக மாறியுள்ளன. அதற்காகவே அவரது கதைத் தொகுப்பான வீடியோ மாரியம்மன் நினைவில் இருக்கிறது
இதுவரை எழுதிக்காட்டிய முறையிலிருந்து தோப்பிலும் இமையமும் நகர்ந்துள்ளது போலவே ரவிக்குமார் தனது சமீபத்திய நூல் ஒன்றின் வழியாகப் புதிய நகர்வைச் செய்துள்ளார். தனது அரசியல்வாதி வாழ்க்கையோடு, வாரம் தோறும் ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகளை எழுத வேண்டிய நிர்ப்பந்தத்தைத் தேடிப்பிடித்து உருவாக்கிக் கொண்டுள்ள ரவிக்குமாரால் இப்படியொரு ஆராய்ச்சி நூலை உருவாக்குவதும் சாத்தியமாகி இருக்கிறது என்பது ஆச்சரியமளிக்கும் ஒன்று. அவர் புதிதாக நகர்ந்துள்ள அந்த வெளி ஏறத்தாழ கல்வித்துறையின் ஆய்வு வெளி. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவின் முழுமையான பிரதியாக, மீளும் வரலாறு : அறியப்படாத நந்தனின் கதை என்ற தலைப்பில் நூலொன்று வந்துள்ளது. ஏற்கெனவே அவர் தாய் மண் இதழில் எழுதிய தொடரின் விரிவாக்கமான அந்த நூலில்,தேர்ந்த கல்வித்துறை ஆய்வாளரின் கவனத்துடன் தரவுகளைச் சேகரித்து, முறையியல் பிசகாமல் அடுக்கிக் காட்டுவதன் மூலம் இதுவரை நாம் அறிந்த நந்தனின் வரலாற்றை வேறு கோணத்தில் தருகிறார். ஆய்வு நூலொன்றில் வெளிப்பட வேண்டிய தர்க்கங்களுடன் விவாதங்களையும், அதற்கான சான்றுகளையும் நிரல் படுத்தி ஆச்சரியம் ஊட்டியுள்ளார் ரவிக்குமார்.

கல்விப் புலம் சாராத ரவிக்குமார் கல்விப்புல ஆய்வாளராக மாறி ஆச்சரியம் ஊட்டியது போல, கல்வித்துறையைச் சேர்ந்த கே.பழனிவேலுவின் பனுவல்- எடுத்துரைப்பு-திறனாய்வு என்ற நூலையும் இந்த ஆண்டு வந்த முக்கியமான ஆய்வு நூலாகக் கருதி வாசித்தேன். மிகையில் பக்தினின் எடுத்துரைப்புக் கோட்பாடு, ரோலான் பார்த்தின் பிரதியாக்கம் போன்ற விமரிசனச் சொல்லாடலைப் புரிந்து கொண்டு தமிழ் இலக்கியத்தின் மரபான பிரதிகளுக்குள்ளும் அண்மையப் பிரதிகளுக்குள்ளும் பயணம் செய்துள்ள பழனிவேலுவின் இந்நூலும் இந்த ஆண்டில் நான் வாசித்த முக்கியமான புது வரவு. இவர்களுடைய நூல்களை வாங்கிப் படிப்பது அவர்களுக்கு மகிழ்ச்சி அல்ல; வாசிக்கிற வாசகனுக்கு மகிழ்ச்சி.

1. தோப்பில் முஹம்மது மீரான்,அஞ்சுவண்ணம் தெரு,(நாவல்) அடையாளம் வெளியீடு, 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம்,621310 , முதல் பதிப்பு , 2008, விலை ரூ.130/ -
2. இமையம், வீடியோ மாரியம்மன், சிறுகதைகள், க்ரியா வெளியீடு,திருவான்மியூர், சென்னை, முதல்பதிப்பு, டிசம்பர், 2008, விலை,ரூ.150/-
3. ரவிக்குமார்,மீளும் வரலாறு : அறியப்படாத நந்தனின் கதை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு, சென்னை,
4. கே.பழனிவேலு, பனுவல்- எடுத்துரைப்பு-திறனாய்வு, வல்லினம், 9, செந்தமிழ் வீதி, நைனார் மண்டபம், புதுச்சேரி, 605004,முதல் பதிப்பு,மே, 2009, விலை,ரூ.95/-

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
//பேச்சு மொழியை அதிகம் பயன்படுத்தி விட வேண்டும் என்ற விருப்பம் காரணமாக வட்டார மொழிக்குத் தரும் அதிக முக்கியத்துவத்தால் மீரானின் எழுத்துக்கள் எப்போதும் வாசிப்பு வேகத்தை மட்டுப் படுத்தி தடைகளை எழுப்பும் இயல்பு கொண்டவை//

படைப்பின் ஆழத்தை அதிகரிக்க, வட்டார வழக்கு என்பது முக்கியமானதாகப் படுகிறது. ஒரு முறை கி.ரா, வட்டார வழக்கிலான கட்டுரை என்றதற்கு இப்படி சொல்லியிருந்தார்:
'மொழி, பேச்சு வழக்கை தாங்கி வந்த பிறகு அது கட்டுரையாகாது. கட்டுரையின் இடையில் இடம்பெற்றாலும் அதன் வடிவம் கதையாகவே மாறிவிடுகிறது'.

-இதன் அடிப்படியில் கொள்ளாவிட்டால் கூட, மீரானின் படைப்புகள் இந்த வழக்குச் சொற்களிற்காகவே அதிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கருதுகிறேன். இது வாசிப்பு வேகத்தை மட்டுப்படுத்துகிறது என்பதை ஏற்க முடியவில்லை.

நன்றி.
அருமையான விஷயங்களை எழுதிவருகிறீர்கள். வாழ்த்துகள்.

egjira@gmail.com
ஆடுமாடு இவ்வாறு கூறியுள்ளார்…
//பேச்சு மொழியை அதிகம் பயன்படுத்தி விட வேண்டும் என்ற விருப்பம் காரணமாக வட்டார மொழிக்குத் தரும் அதிக முக்கியத்துவத்தால் மீரானின் எழுத்துக்கள் எப்போதும் வாசிப்பு வேகத்தை மட்டுப் படுத்தி தடைகளை எழுப்பும் இயல்பு கொண்டவை//

படைப்பின் ஆழத்தை அதிகரிக்க, வட்டார வழக்கு என்பது முக்கியமானதாகப் படுகிறது. ஒரு முறை கி.ரா, வட்டார வழக்கிலான கட்டுரை என்றதற்கு இப்படி சொல்லியிருந்தார்:
' மொழி, பேச்சு வழக்கை தாங்கி வந்த பிறகு அது கட்டுரையாகாது. கட்டுரையில் இடையில் இடம்பெற்றாலும அதன் வடிவம் கதையாகவே மாறிவிடுகிறது'

-இதன் அடிப்படியில் கொள்ளாவிட்டால் கூட, மீரானின் படைப்புகள் இந்த வழக்குச் சொற்களிற்காகவே அதிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கருதுகிறேன். இது வாசிப்பு வேகத்தை மட்டுப்படுத்துகிறது என்பதை ஏற்க முடியவில்லை.

நன்றி.
அருமையான விஷயங்களை எழுதிவருகிறீர்கள். வாழ்த்துகள்.

egjira@gmail.com

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்