துலிப் மலர்க்காட்சி: நன்றியின் வண்ணங்கள்.

அந்த விழாவைக் காணும் வாய்ப்புக் கொஞ்சம் தவறிவிட்டது.  கனடாவில் தேசியத்தலைநகர் ஒட்டாவிற்கு இன்னும் இரண்டு நாள் கழித்து வந்திருந்தால் அந்தப் பெருவிழாவைக் கண்டு களித்திருக்கலாம். ஒவ்வோராண்டும் 5 லட்சம் பேருக்கும் அதிகமாக வந்து களித்துக் கொண்டாடிப் போகும் துலிப் மலர்க்காட்சி விழாவிற்காக ஒட்டாவா நகரம் தயாராகிக் கொண்டிருக்கிறது இந்த ஆண்டுக்கான (2016) துலிப் மலர் விழா மே, 12 முதல் 23 வரை நடக்கப்போகும் இன்னும் இரண்டு நாள் கழித்து வந்திருந்தால் விழாவில் பங்கேற்றிருக்கலாம். என்றாலும் மலர்கள் வந்திறங்கிவிட்டன. நடப்பட வேண்டிய இடங்களில் நட்டுவிட்டார்கள். மொட்டாகவும் விரிந்தும் மலர்கள் வண்ணவண்ணமாய் விரிந்துகிடக்கின்றன.

இரண்டு நாட்களுக்குப் பிறகு வந்திருந்தால், அந்த விழாவிற்குப் பின்னால் இருக்கும் இந்தக் கதையை ஆங்கிலத்திலோ பிரெஞ்சிலோ பெண்ணொருத்தி விரிந்து சுருங்கும் கண்களோடும் முகபாவங்களோடும் சொல்வதைக் கேட்டிருக்கலாம். அதுவும் தவறிப்போய்விட்டது
அதைக் கதையென்று சொல்லக்கூடாது;  வரலாறு.
ஒவ்வொரு ஆண்டின் வசந்தகாலத்தின் தொடக்கமாக அமையும் அந்த விழா உலகப்போர்க்கால நினைவாகவும் அமைந்துவிட்டது.  இப்போது ஒவ்வோராண்டும் 5 லட்சம் பார்வையாளர்கள் வந்து மலர்களைப் பார்த்துச் செல்கின்றனர். 1967 இல், நெதர்லாந்தின்(ஹாலந்து) அரசி ஜூலியானா வந்து மலர்க்காட்சியில் கலந்துகொண்டதும்,  2002 இல் 50 ஆம் ஆண்டுவிழாவிற்காக அப்போதைய நெதர்லாந்து அரசியாக இருந்த மார்க்கிரியெட்டும் கலந்துகொண்டார்கள் என்பதற்குப் பின்னால் அந்த வரலாற்று நிகழ்வுகள் இருக்கின்றன.  
1940 இல நாஜிகளின் படையெடுப்பால் நெதர்லாந்து நெருக்கடியைச் சந்தித்தது. ராணி வில்ஹெமினா உள்பட அரசகுடும்பம் இங்கிலாந்தின் ஆளுகைக்குட்பட்ட நாடொன்றுக்குத் தப்பிப்போய்த் தலைமறைவாக இருப்பது என முடிவு செய்தது. தொடர்ந்து அரச குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் கனடாவின் ஒட்டாவா நகருக்குக் கப்பல் மூலம் வந்து சேர்ந்துள்ளனர். வந்தவர்களில் இளவரசி ஜுலியானாவும் அவரது மகள்களான பியட்ரிக்ஸ், ஐரினெ ஆகியோரும் உண்டு. ஒட்டாவாவிற்கு வருவதற்கு முன்பு துறைமுக நகரமான ஹாலிபாக்ஸில் இருந்த  ஒரு மாளிகையில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். ஸ்டோர்னொவே என்றழைக்கப்பட்ட அந்த மாளிகை இப்போது எதிர்க்கட்சித்தலைவரின் மாளிகையாக இருக்கிறது.
கனடாவில் தஞ்சம் புகுந்திருந்த இளவரசி ஜூலியானா,  ஒட்டாவிலிருக்கும் மார்க்ரியட் பொதுமருத்துவமனையில் 1943, ஜனவரி, 19 இல் பிள்ளையைப் பெற்றிருக்கிறாள். நெதர்லாந்தின் அரசபரம்பரை வழக்கப்படி, தங்கள் நாட்டுக்கு வெளியே பிறந்த ஒருவருக்கு அரச உரிமை கிடையாது.  கனடாவில் பிறந்ததால் அந்தக் குழந்தை அரசுரிமையைப் பெறாமல் போய்விடக்கூடாது என்பதற்காகக் கனடா நாட்டின் பாராளுமன்றத்தில் இருக்கும் அமைதிக் கோபுரத்தின் மீது டச்சுக் கொடியை ஏற்றி அந்தப் பகுதியை ஹாலந்து நாட்டின் பகுதியாக ஒட்டாவா அரசாங்கம் அப்போது  அறிவித்துள்ளது. தங்கள் அரச குடும்பத்தின் வாரிசு சொந்தநாட்டில் பிறந்ததாக நாட்டு மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கிறார்கள். அதற்கான நன்றியறிவிப்புதான் இந்த விழாவின் பின்னணியிலிருக்கும் மனவோட்டம்.

அரசகுடும்பத்தினர் 1945, மே 2 அன்று சுதந்திரமடைந்த ஹாலந்து நாட்டிற்குத் திரும்பியிருக்கிறார்கள். அவர்களோடு பாதுகாப்பிற்காக ராணுவவீரர்களும் வந்துள்ளனர். அந்த 5 ஆண்டுகள் தங்கள் நாட்டு அரசகுடும்பத்திற்கு அடைக்கலம் கொடுத்ததோடு, பாதுகாப்பு வீரர்களையும் அனுப்பிவைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் படைவீரர்களுக்குப் பரிசுப்பொருள்களை ஏராளமாகக் கொடுத்துள்ளனர். அத்தோடு கனடாவிற்கு 100000 துலிப் மலர்க் கன்றுகளையும் அனுப்பிவைத்துள்ளனர். அடுத்தாண்டு இன்னும் கூடுதலாக 20,500 துலிப் செடிகளை அனுப்பி ஒட்டாவா பொதுமருத்துவமனையின் தோட்டவளாகத்தில் நட்டு வளர்க்கச் செய்திருக்கிறார்கள்.
1948 இல் ஜூலியானா நெதர்லாந்தின் அரசியானார். அதுமுதல் ஒவ்வோராண்டும் துலிப் மலர்கள் அனுப்புவது தொடர்ந்துள்ளது. அவள் அரசியாக இருந்த  1980 வரை தொடர்ந்த அந்த வழக்கம் அவளையடுத்து அரசியான பியட்ரிக்ஸ் ஆட்சி தொடங்கியபோது முடிவுக்கு வந்துள்ளது.

இந்த மலர்க்காட்சி விழாவாக மாறியதற்குக் காரணம் உலக அளவில் புகழ்பெற்ற மலக்கர்ஷ் புகைப்படக்காரர் தான். நெதர்லாந்திலிருந்து வந்து பரப்பி வைக்கப்பட்ட மலர்களை விதம்விதமாகப் படம்பிடித்து பத்திரிகைகளில் அவரது வேண்டுகோளை ஏற்று, கனடா நாட்டின் தேசியத் தலைநகரின் வணிகக்கழகம் மே மாதத்தில் துலிப் மலர்க்காட்சித் திருவிழாவைக் கொண்டாட முடிவு செய்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்