தொல்காப்பியத் திணைக்கோட்பாடும் அகநெடும்பாடல்களும்

முன்னுரை:தொல்காப்பியப் பொருளதிகாரத்தை மையப்படுத்திச் சிந்திக்கும்போது அதன் முதன்மை நோக்கம்  பாவியல் அல்லது கவிதையியல் என்பதற்கான வரையறைகளை உருவாக்குவது எனக் கருதத்தோன்றுகிறது. அக்கருத்தின் அடிப்படையில் இக்கட்டுரை அமைகின்றது. கருத்தரங்கின் பொதுப்பொருள் தொல்காப்பிய மரபும் செவ்வியல் (சங்க இலக்கியங்களும்)என்பதனை மனங்கொண்டு, தொல்காப்பியர் கூறும் திணைப்பொருள் மரபை நவீன இலக்கியக் கோட்பாடான நிலவியல் பண்பாட்டியலோடு தொடர்புபடுத்தி அமைகிறது இக்கட்டுரை. தொல்காப்பியம் மூன்று பொருட்களைக் கவிதையின் உள்ளடக்கமாகக் கூறியுள்ளது இக்கட்டுரை கருப்பொருளின் இடம் பற்றிய நிலையை விவாதிக்கிறது. கட்டுரை உருவாக்கிக் கொண்ட கருத்தியல் நிலைபாட்டைப் பொருத்திப் பார்க்கும் தரவுகளாகத் தமிழ்ச் செவ்வியல் கவிதைகளில் அகநெடும்பாடல்கள் இக்கட்டுரைக்கான முதன்மைத் தரவுகளாக அமைகின்றன.

தொல்காப்பியரின் பாவியல் கோட்பாடு
            தொல்காப்பியம் ஒரு பாவிற்குள் இடம்பெறும் மனிதர்களின் வாழ்க்கைப் பொருளையும் அந்த பாவின் அர்த்தங்களையும் விளங்கிக் கொள்வதற்கான வழிமுறைகளை பொருளதிகாரத்தில் விளக்குகிறது. பொருளை அகப்பொருள், புறப்பொருள் என பிரித்துக் காட்டும் தொல்காப்பியர் அகப்பொருளின் வரையறையையோ, புறப்பொருளின் வரையறையையோ சுட்டிக் காட்டவில்லை. ஆனால் அவரது நூற்பாக்களிலிருந்து அகப்பாடல் எவ்வாறு அமையும் என்பதையும், புறப்பாடல் எவ்வாறு அமையும் என்பதையும் அறியமுடியும். அவற்றை விளக்குவதற்கு பயன்படும் இரண்டு நூற்பாக்கள் அகத்திணையியலின் கடைசிப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. மக்கள் நுதலிய அகன்ஐந்திணையும் சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்.” “புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே”   (தொல். பொருள். 1000,1001) என்பன அந்த நூற்பாக்கள்.அகப்பொருளை விரிவான நிலையில் களவுப்பொருள் , கற்புப்பொருள் எனப் பிரித்து இரண்டு இயல்களில் தொல்காப்பியம் விளக்குகிறது. அகவாழ்க்கையைக் களவு, கற்பு என இருபெரும் பிரிவுகளாக பிரித்துக் கூறும் தொல்காப்பியம் அதனை பேசும் பாடல்களில் வெளிப்படும் உணர்வுகளின் அடிப்படையில் மேலும் வகைப்படுத்துகிறது. அவ்வாறு வகைப்படுத்தும் போது அதனைத் திணை எனக் குறிப்பிட்டு விளக்குகிறது. தொல்காப்பியத்தில் இடம்பெறும் திணை என்னும் கலைச்சொல்லுக்கு பிரிவு, உணர்வு, ஒழுக்கம், நிலம் என பல பொருள்களை உரையாசிரியர்கள் சுட்டுகின்றனர். உயர்திணை, அஃறிணை என  சொல்லதிகாரத்தில் கூறும்போது அதன் பொருள் பிரிவு என்பதாகும். அகன் ஐந்திணை எனக் குறிப்பிடும்போது, அகத்தில் எழும் உணர்வு என்பது  பொருளாகும். நடுவுநிலைத் திணை, நடுவண் ஐந்திணை, திணை மயக்கம் என்று பயன்படுத்தும் போதும் இடம் என்ற பொருளில் வருவதை உணரலாம். திணைக்கு உரிப்பொருள் என்று சொல்லும் போது ஒழுக்கம் என்ற பொருளில் வருவதை உணர வேண்டிய ஒன்று. இவை அனைத்தையும் உள்வாங்கிய ஆய்வுகள், தொல்காப்பியருடைய அகப்பொருளை அகத்திணைக் கோட்பாடு எனவும், திணைக்கவிதை கோட்பாடு எனவும் விளங்கிக்கொள்ளலாம். அகப்பாடலை ஏழுவகையில் பிரித்து ஒவ்வொன்றுக்கும் உரிய கூறுகளை விளக்கி காட்டியுள்ளார். அகக்கவிதை ஏழு என்பதை தொல்காப்பியம் வரிசையாக சொல்லவில்லை என்றாலும் கைக்கிளை முதலாற்எனக் குறிப்பிடுவதைக் கொண்டும், நடுவணைந்திணை என்று குறிப்பிடுவதைக் கொண்டும்,ஏழு திணைகள் என்று உணரலாம். நடுவணைந்திணைகளாவன குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்பன. பின்னர் தொகுக்கப்பட்ட தமிழ்ச் செவ்வியல் பாடல்கள் இவ்வேழு திணைகளின் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளனஅகணைந்திணை பாடல்களுக்கு அதிகமாகவும், கைக்கிளை, பெருந்திணைகளுக்கான பாடல்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலும் தொகுக்கப்பட்டுள்ளன. பின்னர் வந்த புறப்பொருள் இலக்கணங்களால் கைக்கிளையும், பெருந்திணையும் புறப்பொருளாகக் கொள்ளப்பட்டது என்பதை புறப்பொருள் வெண்பாமாலை  மூலம் அறிகிறோம். தொல்காப்பியத்தின் வழியாகக்கிடைக்கும் கவிதையியலை கூடுதல் புரிதலுக்காக இங்கே தொகுத்துக் கொள்ளலாம்.
1.      ஒரு அகக்கவிதை பெயர்சுட்டப்பெறாமல் அமையும்
2. ஒரு அகப்பாடல் முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற மூன்றோடு அமையவேண்டும். இந்த மூன்றும் ஒரே கவிதையில் அமைவது கட்டாயமில்லை. முதல்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்ற மூன்றிற்கு எது முக்கியம் என்றால், உரிப்பொருள்தான் முக்கியமானது என்று தொல்காப்பியம் கூறுகிறது. முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே  நுவலுங்காலை முறைசிறந்தனவே பாடலுள் பயின்றவை நாடும் காலைஎனக் கூறும் தொல்காப்பியத்தின் நூற்பாவின் வழி இதனை உணரலாம். இந்நூற்பாவின் வழி உரிப்பொருள் இல்லாமல் அகப்பாடல் இல்லை என உணரமுடியும்.
3.         முதல்பொருளாவன நிலமும் பொழுதும். ஒவ்வொரு திணைக்கும் கருப்பொருள் தெய்வம், உணவு, மரம், விலங்கு, புள், கருவி, செய்தி, பண் போன்றவை. அகப்பாடலில் உரிப்பொருள் எப்பொழுதும் மாறாமல் இருக்கும். கருப்பொருள் மட்டும் மாறலாம், அதனை திணைமயக்கம் என கூறுகிறது தொல்காப்பியம்.
4.         அகப்பாடலில் மையமான வினைகள் இணைதலும், பிரிதலும் ஆகும். இணைதல் - பிரிதல் என்பது மனித வாழ்க்கையின் அடிப்படை வினைகள். இது குடும்ப வாழ்க்கையை சார்ந்தது மட்டுமல்ல இது சமூக வாழ்க்கைக்கும் பொருந்தக்கூடியது. ஒரு ஆணும் பெண்ணும் இணைவதன் மூலம் உருவாகும் குடும்ப அமைப்புதான் சமூக அமைப்பின் அடிப்படை அலகு. பல குடும்பங்களின் இணைவால் உருவாவது சமூகம். எனவே பாடல் அல்லது இலக்கியத்தில் அடிப்படையான உள்ளடக்கம் அனைத்துமே இணைதல் (Union), பிரிதல் (Subtraction) என்ற இரண்டு வினைகளின் அடிப்படையிலான உணர்வுகளே. இவை உலக இலக்கியம் அனைத்திற்கும் பொதுவானது. இவ்விரு வினைகளின் அடிப்படையிலேயே தொல்காப்பியரின் பாவியல் கோட்பாடும் அமைந்துள்ளது. புணர்ச்சி,பிரிவு இரண்டு அடிப்படையான வினைகளுக்கு இடையே ஊடல், இருத்தல், இரங்கல் என்னும் மென் உணர்வுகளுக்கும் தனித்தனி வகைகளை அதன் முதல் கரு உரியோடு பேசுவது தொல்காப்பியத்தின் தனிச்சிறப்பு. இவ்வைந்து திணைகளுக்கும் உரிப்பொருளையும் முதற்பொருளையும் கருப்பொருளையும் தனித்தனியாக குறிப்பிட்டு விளக்கும் தொல்காப்பியம், கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் அவ்வாறு பேசவில்லை. அவற்றிற்குரிய உரிப்பொருளை மட்டுமே சுட்டிக்காட்டும் விதமாக இரண்டு நூற்பாக்களை கொண்டுள்ளது.
அகக்கவிதைக்கான விதிகளைத் தொகுத்துக் கொண்டு மறுதலையாக புறக் கவிதைகளின் விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம்அவ்வாறு உருவாக்கிக் கொண்டதை குறிப்பாக சொல்லும் விதமாக புறனேஎன்ற வார்த்தையை திரும்ப திரும்ப பயன்படுத்துகிறது தொல்காப்பியம்.
அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்
 புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்
 வெட்சித்தானே குறிஞ்சியது புறனே
 உட்கு வரத்தோன்றும் ஈர்ஏழ் துறைத்தே”             (1002)
என்பது புறத்திணையின் முதல் நூற்பா. ஒரு அகப்பாடலுக்கு சொல்லப்பட்ட முதல, கரு, உரி போன்ற அனைத்தும் அதன் மறுதலையான புறத்திணைக்கும் பொருந்தக் கூடியது என்பதை தொல்காப்பியர் வலியுறுத்துகிறார் அகத்திணையின் முதல்பொருளும் கருப்பொருளும் புறனாக அமைய புறத்திணையில் போர் நிலைகள் புறப்பாடலின் உரிப்பொருளாக அமைந்து விடுகின்றன. அகப்பாடலில் இடம்பெறும் கூற்றுக்களுக்கு இணையாகப் புறப்பாடல்களில் அமையும் துறைப்பிரிவுகள் பொருந்தி விடுகின்றன.
            தொல்காப்பியம் தனது பொருளதிகாரத்தில் பல விதங்களில் விளக்கும் அகப்பாடல் விதிகளும், புறப்பாடல் விதிகளும் சாரமாக மூன்று பொருள்களை முக்கியப்படுத்துவதை இங்கே குறிப்பிட்டுச் சொல்லலாம்.
1. பாடலுக்குள் இடம்பெறு உணர்வு நிலை,
2. பாடலுக்கான நிலவியல் அடையாளங்களைத் தரும் முதல் மற்றும் கருப்பொருள்
3. இவ்விரண்டையும் ஏற்று வினையாற்றும் மாந்தர்கள்
இவற்றையே நிகழ்காலத்திறனாய்வு கவிதை உணர்வு, காலமும்வெளியும், கவிதைப் பாத்திரங்கள் எனப் பேசுகின்றன.
பண்பாட்டு நிலவியல்
            நிலவியல் (Geography) என்பது தொடக்க நிலையில் சமூக அறிவியலின் ஒரு பிரிவாக அறியப்பட்டது. ஆனால் இன்று அறிவியல் துறையோடு நெருங்கிய தொடர்புடைய ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது. மனிதர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய சமூக அறிவியல் மற்றும் அறிவியல் புலங்களை பயன்படுத்தி திறனாய்வு செய்ய முடியும் என கடந்த அரை நூற்றாண்டுத் திறனாய்வு வழிகாட்டியுள்ளது. இலக்கியத்திற்கே உரிய விதிகளோடு பிறதுறை அறிவை பயன்படுத்தி செய்யும் திறனாய்வு முறையை திறனாய்வு முறை(Critical Method), என்பதாக விளக்காமல் திறனாய்வு அணுகுமுறை (Critical Approach) என்பதாக விளக்குகின்றனர். சமூக அறிவியல் துறைகளான மானுடவியல், சமூகவியல் பொருளியல், உளவியல், வரலாற்றியல் போன்றன இலக்கியத் திறனாய்வுக்கு பயன்பட்டதன் தொடர்ச்சியாகவே மானுடவியல் அணுகுமுறை, சமூகவியல் அணுகுமுறை, பொருளியல் அணுகுமுறை (மார்க்சிய அணுகுமுறை), உளவியல் அணுகுமுறை, வரலாற்றியல் அணுகுமுறை போன்றன இலக்கியத் திறனாய்வில் தோற்றம் பெற்றன. இதைப்போலவே அறிவியல்  துறைகளான சூழலியல், அமைப்பியல் ஆகியவற்றை பயன்படுத்திய திறனாய்வு அமைப்பியல் அணுகுமுறை, சூழலியலில் அணுகுமுறை ஆகியவற்றையும் திறனாய்வு அணுகுமுறையாக மாற்றியுள்ளது. இந்த வரிசையில் அண்மையில் பயன்பாட்டுக்கு வந்துள்ள திறனாய்வு அணுகுமுறையாக பண்பாட்டு நிலவியல் அணுகுமுறையைச் சுட்டலாம்.
மனிதர்களை, மனிதர்களின் வாழ்வெளியால் உருவாக்கப்படும் பண்பாட்டுக் கூறுகளோடு இணைத்து ஆய்வு செய்யவேண்டும்என வலியுறுத்தும் பண்பாட்டு நிலவியல் அதனளவில் இலக்கியத்தோடு நேரடித் தொடர்பு கொண்டது அல்ல. ஆனால் மனிதர்களின் வாழ்க்கை மற்றும் மன அமைப்புகளே இலக்கிய உருவாக்கத்திற்கு காரணம் என்னும் பொது அடிப்படையில் பண்பாட்டு நிலவியல் இலக்கியத்தோடு உறவுடையதாக மாறுகிறது. எனவே பண்பாட்டு நிலவியல் எவற்றையெல்லாம் தன்னுடைய ஆய்வு கருவியாகவும் வெளியாகவும் கருதுகின்றதோ, அவற்றையெல்லாம் இலக்கியத் திறனாய்வு தனக்கான கருவியாக மாற்றி, நிலப்பரப்பிற்கு பதிலாக இலக்கியப் பிரதி/பனுவல் என்னும் பரப்பிற்குள் தேடி தொகுத்துக்கொண்டு பண்பாட்டு நிலவியல் அணுகுமுறை என்னும் புதுவகை அணுகுமுறையாக மாற்றம் பெற்றுள்ளது.
ஒரு பாவில் அல்லது கவிதையில் மூன்று கூறுகள் இடம் பெறுதல் அவசியம். அவை முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பன. இந்த மூன்றும் ஒரே கவிதையில் அமைவது கட்டாயமில்லை. முதல்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்ற மூன்றில் எது முக்கியம் என்றால், உரிப்பொருள்தான் முக்கியமானது என்பதை வலியுறுத்த.  முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே,  நுவலுங்காலை முறைசிறந்தனவே. பாடலுள் பயின்றவை நாடும் காலை”  (அகத்திணையியல்.3)
என எழுதியிருப்பதை நினைவில் கொள்வது அவசியம்உரிப்பொருள் இல்லாமல் கவிதை அல்லது இலக்கியம் இல்லை. ஆனால் அவ்வுரிப்பொருள் கருப்பொருள்களால் விளக்கம் பெறுகிறது . “ தெய்வம் உணாவே மா மரம் புள் பறை , செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ ,அவ் வகை பிறவும் கரு என மொழிப. (அகத்திணையியல்.20 ) என்பது கருப்பொருள் குறித்த தொல்காப்பிய வரையறை. உரிப்பொருளும் கருப்பொருட்களும் முதல்பொருளால் அர்த்தம் பெறுகின்றன. முதல் பொருள் என்பன நிலம் பொழுதும் (Time and Space). இலக்கிய உருவாக்கத்தை நாடகத்தினூடாக விளக்கும் அரிஸ்டாடில் இவ்விரண்டையும் மையப் படுத்தியதோடு பாத்திரங்களையும், அவற்றின் வினைகளையும் மையப்படுத்தியே விளக்கங்கள் அளித்துள்ளார். மூவோர்மைகள்(three unities) - காலம், இடம், பாத்திரங்கள் ஆகிய மூன்றிற்கும் இடையேயுள்ள வினையோர்மைகள்பற்றிய அரிஸ்டாடிலின் கோட்பாடே உலக இலக்கியத்தின் அடிப்படை என்பதை நினைவில் கொள்வோம். அவர் சொன்ன  பாத்திர முரண் சார்ந்த தொடக்கம் , சிக்கல், வளர்ச்சி, உச்சநிலை, வீழ்ச்சி, முடிவு என அமையும் நாடகவடிவம் நல்திற நாடகவடிவமாக உலகம் முழுவதும் இலக்கியம் கற்பிக்கும் துறைகளில் இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால் கவிதையின் வடிவம் பற்றிப் பேசும் தொல்காப்பியரின் கோட்பாடு தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் விளங்கிக் கொள்ளப்படவில்லை என்பதை வருத்தத்தோடு சொல்லவேண்டியுள்ளது. இலக்கியத்திறனாய்வு செய்பவர்களும் உணரவில்லை என்பதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.வடிவம் பற்றிய விரிவான கருத்துகளைச் சொல்லும் தொல்காப்பியரும் அரிஸ்டாடிலும் உள்ளடக்கத்தைப் பற்றி விரிவாக பேசவில்லை. காரணம் அவை பேசி முடிக்கக் கூடியன அல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது இயங்குதலுக்கும் காரணங்கள் வேறாக இருக்கும் என்பதால் உள்ளடக்கத்தை வரையறை செய்யும் முயற்சியை இருவருமே செய்யவில்லை. என்றாலும் நமது மரபைத் தீர்மானித்தது தொல்காப்பியக் கவிதையியல் என்பதை உலகத்திற்குச் சொல்லிப் பெருமைகொள்ளத் தயக்கம் காட்ட வேண்டியதில்லை.
அகநெடும்பாடல்களும் கருப்பொருளும்

பத்துப்பாட்டில் இடம் பெற்றுள்ள அகநெடும்பாடல்கள் 4. முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை என்பன. வேம்புதலையாத்த என்னும் சொற்றொடர்வழியாக அகமா? புறமா? என்ற விவாதம் இருந்தாலும் நெடுநல்வாடையின் அமைப்பும் சொல்முறையும் நோக்கமும் அகப்பொருள் நுதலுதலே என்பதால் அகமாகக் கொள்ளப்பட்டுள்ளது
முல்லைப் பாட்டில் கருப்பொருள் பற்றிய தகவல்கள் மூன்று இடங்களில் விரிவாக இடம் பெற்றுள்ளனமுதுபெண்டிர் விரிச்சி கேட்கும் இடத்தில் யாழிசை, நெல், முல்லைப்பூ, ஆகிய கருப்பொருட்கள் இடம் பெற்றுள்ளன(7-11 ).  இரண்டாவதாக யானை, கரும்பு, வயல், ஆகியன நகரவீதியைப் பற்றிச் சொல்லும்போது இடம்பெறுகின்றன. மூன்றாவதாக தலைவன் வந்த பாதையைச் சொல்லும்போது மான்கள், பூக்கள், வரகு, நீர்நிலை முதலான கருப்பொருட்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இம்மூன்று குறிப்புகளுமே முல்லையின் உரிப்பொருளான இருத்தலையும் இருத்தல் நிமித்தத்தையும் கூடுதல் அர்த்தத்தில் தரும் பின்னணி கொண்ட கருப்பொருட்களாக இருக்கின்றன.
குறிஞ்சிப்பாட்டில் இடம்பெறும் கருப்பொருட்கள் இரண்டு வகைப்பட்டவை. நெல் யானை, சிறு தினை,கலி கெழு மரம் (35-40) பற்றிய குறிப்புகள் தலைவன் வரும் பாதையைப் பற்றிய வருணனையிலும் காந்தள் தொடங்கி மலை எருக்கு வரையிலான 99 வகைப்பூக்கள் பற்றிய வருணனை (61-98)யைத் தலைவனை எதிர்கொள்ளக் காத்திருந்த தலைவிமற்றும் தோழியின் செயலாகக் கூறுமிடத்தும் அடுக்கிவிட்டு அங்கு எழும் ஓசைகளையும் கூறுகின்றார்.
அகமா? புறமா? என்ற விவாதத்திற்குள்ளாக்கப்பெற்ற நெடுநல்வாடையில்  மா, மந்தி கறவை கன்று புன் கொடி முசுண்டை வான் பூ,பொன் போல் பீர்க்கு, , பைங் காற் கொக்கின் செவ் வரி நாரை ஆகியன மதுரையின் புறநகரில் இருந்தன என்ற குறிப்பாக வருகிறது (8-20). அதன் நிறைவுப் பகுதியில் (176-187)
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்ட, பின்னர்,
மணி புறத்து இட்ட மாத் தாள் பிடியொடு
பருமம் களையாப் பாய் பரிக் கலி மா
இருஞ் சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்ப, 180
புடை வீழ் அம் துகில் இடவயின் தழீஇ,
வாள் தோள் கோத்த வன்கண் காளை
சுவல் மிசை அமைத்த கையன், முகன் அமர்ந்து,
நூல் கால்யாத்த மாலை வெண் குடை
தவ்வென்று அசைஇ, தா துளி மறைப்ப, 185
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்,
சிலரொடு திரிதரும் வேந்தன்,
என்ற பதிவு காணப்படுகிறது. இவ்வரிகளில் வரும் வேம்புதலையாத்த வேந்தன் பாண்டியனே என்றாலும் ஒரு குறிப்பிட்ட பாண்டிய அரசன் எனக்கொள்ள முடியாது. அதற்கு மாறாக வாடைக்காலத்தில் அரண்மனையில் காத்திருக்கும் தலைவியை ஆற்றுவிக்க வரும் தலைவனோடு இணைந்த நிலையிலேயே இக்கருப் பொருட்குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. எனவே நெடுநல்வாடையின் உரிப்பொருளாக இருத்தலையும், இருத்தல் நிமித்தத்தையும் உறுதியாகக் கூறலாம்.
முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, நெடுநல்வாடை ஆகிய மூன்று பிரதிகளுக்குள் உரிப்பொருளை விளக்கும் விதமாக அமையும் கருப்பொருட்களே பின்னணியாகத் தரப்பட்டுள்ளன எனலாம். ஆனால் நான்காவதாக உள்ள அகநெடும்பாடலான பட்டினப்பாலையில் வேறுவிதமான தன்மையில் கருப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்அப்பிரதிக்குள் கிடைக்கும் பொருள்களின் பெயர்களைத் தேடி வாசிக்கும் ஒரு வாசிப்பில் கிடைத்த பெயர்ச் சொற்கள் பின்வருவன: வெள்ளை உப்பு, நெல், கதவு, கல்லெறியும் கவண், துகிர்(ஆடை), தாது (தேன்), கரும்பு,அரிசி, நெய், மணி, பொன், ஆரம், அகில், முத்து, புரவி, சிறுதேர், தளி உணவு, தெங்கு, வாழைக்குலை, கமுகு, மஞ்சள், மா, சேம்பு, இஞ்சி, கனங்குழை, அட்டில், கஞ்சி,கிடுகு, எஃகு, நடுகல், பண்டசாலை,முழவு, நந்தா விளக்கு  எனப் பொதுநிலைப் படுத்திக் கூறலாம். பட்டினப்பாலையில் இடம்பெறும் பொருட்களில் அதிகமாக இடம்பெறுவன உணவுப் பொருட்கள் சார்ந்தனவே . அவை தங்கள் நிலப்பரப்பில் உற்பத்தி செய்யப்படாத நிலையில் பிற பரப்புகளிலிருந்து - நாடுகளிலிருந்து பெறப்பட்டுள்ளன. உடை மற்றும் உறையுள் என்னும் அடிப்படைத் தேவையோடு அழகூட்டும் தேவைக்காகவும் பொருட்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன. தொழில்சார்கருவிகளும் அவற்றில் உள்ளன. அழகியல் வெளிப்பாட்டின் பகுதியான இசைக்கருவிகளும் அணிகலன்களும் பட்டினப்பாலையில் இடம் பெற்றுள்ளன. கிடைக்கின்ற பொருட்களின் பெயர்களைக் கொண்டு காவிரிப்பூம்பட்டினம் என்னும் வெளி ஒரு தேவைகளுக்கான பொருட்களை உற்பத்தி செய்து கொள்ளும் வெளியாகவும், பிற இடங்களிலிருந்து பெற்று நிறைவு செய்து கொள்ளும் வெளியாகவும், தன் தேவைக்கதிகமான பொருட்களை மற்ற வெளிக்கு அனுப்பித் தரும் இடமாகவும் இருந்துள்ளது எனக் கூறலாம். இப்படியான வருகை அல்லது பதிவு பாலைத்திணை என்னும் அகத்திணையின் உரிப்பொருளான பிரிவும் பிரிவு நிமித்தமும் என்பதற்கான அர்த்தத்தை மிகுவிப்பதாக இல்லை. அதற்கு மாறாக ஒரு புறப்பாடலில் இடம் பெறும் நாட்டுவளத்தைப் பட்டியலிடுவன போல உள்ளது.
முடிவுரை
அகநெடும்பாடல்களில் கிடைக்கும் கருப்பொருட்களின் வருகை, அவை கவிதையின் மையமான உரிப்பொருளோடு பொருந்தும் நிலை என்பதைக் கொண்டு வாசித்துப் பார்க்கும்போது தொல்காப்பியரின் பாவியல் கோட்பாடான அகம், புறம் என்பதைக் கூடுதலாக விளக்க முடியும் எனத் தோன்றுகிறது. அந்த வகையில் புதிதாக வந்துள்ள நிலவியல் பண்பாடு என்னும் அணுகுமுறை தமிழ்ச் செவ்வியல் கவிதைகளை வாசிப்பதற்கான புதிய கருவியாக அமையக்கூடியது எனவும் கூறலாம்.

 சேலம் மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரியில் பிப்ரவரி 18-20 தேதிகளில் நடந்த தொல்காப்பிய மரபும்  சங்க இலக்கியங்களில் செல்வாக்கும் என்னும் பொருளிலான கருத்தரங்கில் வாசிக்கப்படும் கட்டுரை. வாசிப்பு நாள்: 20 -02-2015, வெள்ளி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்