சல்லிக்கட்டு: சில குறிப்புகள்

ஒழிக ! வாழ்க!! குரல்களின் ஒலியளவு
========================================
ஒவ்வொருமொழியிலும் சொற்கள் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன. அவை பெயர்(Noun) வினை(Verb). இவ்விரண்டையும் கூடுதல் அர்த்தப்படுத்தப்படுவனவே இடைச்சொற்களும் உரிச்சொற்களும். தமிழில் மட்டுமே இடை, உரி என்பன தனிப்பட்ட வகையாக இருக்கின்றன. இவைகளைப் பெரும்பாலான மொழிகள் முன்னொட்டுகளாகவும் சில மொழிமொழிகளில் பின்னொட்டுகளாகச் சொல்லப்படுகின்றன.
வாழ்க!, ஒழிக! இவை வினைமுற்றுகள்.
வேண்டும்! வேண்டாம் ! இவையும் வினைமுற்றுகளே
 முன்னிரண்டும் வியங்கோள் வினைமுற்றுகள்
பின்னிரண்டும் ஏவல் வினைமுற்றுகள்
போராட்டங்கள் ஒவ்வொன்றிலும் ஏவல் வினைமுற்றுகளும் பயன் படுத்தப்படும்; வியங்கோள் வினைமுற்றுகளும் ஒலிக்கும்
இவ்விரண்டிற்குமிடையேயுள்ள வேறுபாடுகளைத் தமிழை- மொழிப்பாடமாக - முதன்மைப்பாடமாகக் கற்றவர்கள் அறிவார்கள். அதை இங்கே திரும்பக் கற்றுக்கொடுக்க நான் நினைக்கவில்லை. அலங்காநல்லூரில் ஒலிக்கத் தொடங்கிய வியங்கோள் வினைமுற்றுகளையும் ஏவல் வினைமுற்றுகளையும் கடந்த நான்கு நாட்களில் தமிழர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குரியதாக ஆக்கிக்கொண்டுவிட்டார்கள்.
தமிழ்மொழி ஒலிக்கும் ஒவ்வொரு நிலப்பரப்பிலும் இன்று ”பீட்டா ஒழிக!” என்ற குரல்கள் ஆவேசமாகக் கேட்கிறது. அதைவிடவும் ஆவேசமாக ”சல்லிக்கட்டு வேண்டும்!” என்ற குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால் எதாவதொன்றை ’வாழ்க’ என்று சொல்லவில்லை. அதேபோல் ’வேண்டாம்’ குரல் ஒலிக்கக் காணோம். அப்படி ஒலிக்கவேண்டும் என்றால் அதற்குத் தேவை ஒரு தலைமையும் அமைப்பும். அந்தத் தலைமையும் அமைப்பும் தெளிவாகத் தெரிந்தால் அதை வாழ்க என்று சொல்லியிருப்பார்கள். அந்தத் தலைமை முன்வைத்து விமரிசிக்கும் ஒன்றை ஒழிக என்று குரலையும் எழுப்பியிருப்பார்கள்.
சல்லிக்கட்டை முன்வைத்துத் திரண்டிருக்கும் இளைஞர்களும் மாணவர்களும் “ பீட்டா ஒழிக “ என்று குரல் எழுப்புகிறார்கள். இந்தக் கோரிக்கை முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல. ஜனநாயக நாடுகளில் அரசாங்க அமைப்புகளுக்கு இணையாக மக்கள் நலச் சேவையில் ஈடுபடும் அமைப்புகள் பலவும் இயங்குகின்றன. அவற்றைத்தான் தன்னார்வ அமைப்புகள் என்கிறோம். இஹந்தியாவில் தன்னார்வ அமைப்புகள் பலவும் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் முதலாளிகளிடம் பணம் பெற்றுச் செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் உண்டு. அதை முற்றிலும் மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில் நமது ஊரில், தெருவில் பலரும்கூடி உருவாக்கும் நலச்சங்களும் ரசிகர் மன்றங்களும் கலைக்குழுக்களும் படிப்பகங்களும் கூடத் தன்னார்வ அமைப்புகள்தான். அவற்றின் செயல்பாடுகளை முற்றிலும் எதிர்மறையாகப் பார்க்கவேண்டியதில்லை.
குறிப்பிட்ட வெளியைத் தாண்டி இயங்கும் தன்னார்வ அமைப்புகள் அரசாங்கம் செய்யமுடியாத வேலைகளைச் செய்யவும், அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்குள் எழுப்பமுடியாத உரிமைப்பிரச்சினைகளை எழுப்பவும் அவை முனைகின்றன. அதே நேரத்தில் அவைகளுக்கும் வரையறைகள் வேண்டும்; புரிதல் வேண்டும். உலகத்தின் ஒருமூலையில் ஒன்றைத் தடுக்கும் நோக்கம் கொண்ட நிகழ்வொன்று இன்னொரு இடத்தில் உயிராதாரமான அடிப்படையாக இருக்கும். அந்தப்புரிதல் ஏற்படவேண்டும் என்றால் ஒவ்வொரு அமைப்பும் ஜனநாயகத்தன்மையுடன் இயங்கவேண்டும். தமிழ்நாட்டில் இயங்கவேண்டுமென நினைத்துத் தொடங்கப்பட்ட பீட்டா இங்கு ஜனநாயகத் தன்மையுடன் இயங்கவேண்டும். இந்த நிலப்பரப்பின் ஒவ்வொரு சமூகக்குழுவுக்கும் உறுப்பினர் வாய்ப்பளிக்கவேண்டும்; குரலை ஏற்று நடக்க வேண்டும் அதை ஒவ்வொருவரும் வலியுறுத்தவேண்டும். அதற்கு மாறாகப் ”பீட்டாவைத் தடைசெய்” என்று குரல் எழுப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல.
போராடும் இளையோர்கள் “சல்லிக்கட்டு நடக்கவேண்டும்” என்ற குரலோடு, இதைத் தடுக்கும் நிலையில் இருக்கும் ஒவ்வொரு தடைக்கல்லையும் அறியவேண்டும். அவற்றிற்கெதிராகக் குரல் எழுப்பவேண்டும். கிடைக்கப் போகும் சல்லிக்கட்டு உரிமையைக்கூட ஜனநாயகப்படுத்தவேண்டும். அலங்காநல்லூரில் மட்டுமில்லாமல் தமிழகமெங்கும் நடத்தப்பட வேண்டிய தமிழ் அடையாளமாக ஆக்க முடியும். அதற்கு முதல்படியாக அதன் இறுக்கமான சடங்குகளைக் களையவேண்டும். அனைவரும் சுதந்திரமாகப் பங்கேற்கும் கொண்டாட்டமாக மாற்றவேண்டும். அதற்கு முதல் தடைக்கல் தமிழ்ச் சமூகத்தில் இயங்கும் சாதியமைப்பு. அதைப்பற்றியும் விவாதிக்க வேண்டும். அதையெல்லாம் செய்வதற்கு இப்போது இந்தப் போராட்டம் வெற்றி பெறவேண்டும்.
சல்லிக்கட்டு நடக்கவேண்டும்; பீட்டாவும் இருக்க வேண்டும்
============================== =========================
சாதியமைப்பு அழிக்கப்படவேண்டும்; பெரும்போராட்டங்கள் நடந்துள்ளன; இன்னும் பெரும்போராட்டங்கள் அதற்குத் தேவை. அதைக் காரணமாக்கி, தலித் ஆதரவு என்ற பெயரில் வெகுமக்கள் பண்பாட்டை-திரளும் வெகுமக்கள் போராட்டத்தை- திசை திருப்புபவர்கள் மற்றமைகளாக (Other)க் கருதப்பட மாட்டார்கள். எதிர்மை( Opponent )களாகவே கருதப்படுவார்கள்.

முன் அழைப்பும் பின் இழுப்பும்
================================
 அலங்காநல்லூர் என்ற ஊரின் பெயரைத் திரும்பத் திரும்ப ஊடகங்களின் ஒலியாகக் கேட்கும்போது, “தலையாலங்கானம்” என்ற சங்ககால இடம்பெயர் இதுதானோ என்று மனம் நினைக்கத்தொடங்கிவிட்டது. தனது இளம் வயதில் நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்னும் இடத்தில் எதிரிகளை வென்ற வரலாற்றை விரிவாக, அவனைப்பாடிய புறநானூற்றுப் புலவர்களின் பாடல்கள் காட்டுகின்றன. அவனது முன்னோன் ஒருவரின் பெயருக்கு முன்னால் “ ஆரியப்படை கடந்தவன்” என்ற முன்னொட்டு இருப்பதும் நினைவிலிருந்து தப்பவில்லை.
பொங்கலன்று முளைவிட்ட போராட்டக் கங்கு அலங்காநல்லூரின் வாடிவாசலுக்குள் அணைந்துவிடாமல் தடுத்தவை முகநூல், வாட்ஸ்- அப் போன்ற சமூக ஊடகங்கள். அதையே தமிழகத்தின் நகர்களெங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தவை 24 மணிநேரமும் செய்தி சொல்லும் அலைவரிசைகள் என்பதையும் மறுக்கமுடியாது. இவற்றின் வழியாகவே இன்று- உலகெங்கும் இருக்கும் தமிழர்களின் உணர்வாக மாறியிருக்கிறது. இந்த உணர்வைத் திசைதிருப்பும் குரல்கள் அறிவுவாதமாக வெளிப்பட்டாலும், ஆதரவுக்குரல்கள் போல வெளிப்பட்டாலும் தேவைப்படுவது எச்சரிக்கைதான்.
தலைமை, நோக்கம், இலக்கு, திட்டமிடல், முன்னெடுப்பு போன்ற கலைச்சொற்களைப் பயன்படுத்தி அரசியல் பேசுவதாக நினைப்பவர்கள் அரசியல் பேசட்டும். அரசியல் கட்சிகள் தங்கள் வளர்ச்சிக்காக இவற்றைப் பயன்படுத்தப் பார்ப்பது இயல்பு. ஆனால் மக்கள் திரளைச் சென்றடையும் ஊடகக்காரர்களின் கேள்விகளும் அந்தப் போக்கில் இருக்கவேண்டிய அவசியமில்லை. தொடர்ச்சியான அந்தக் கேள்விகள் அலுப்பூட்டும். திசைதிருப்பும். அவை முன்னெடுக்கப்பட்ட உணர்வை -திரட்டப்பட்ட திரளின் மன உறுதியைப் பின்னிழுப்பதாக ஆகிவிடும். இப்போதைய தேவை முன்னெடுக்கும் வாசகங்களே.
 
ஆதரிக்கிறேன்; மகிழ்ச்சி.
==========================
திரள்வதற்குப் பல காரணங்கள் தேவை இல்லை. ஒன்றேயொன்று போதும். அந்த ஒன்று அரசியல் கொள்கையென்றால், அதை ஏற்காத கட்சிகள் பங்கேற்காது. பொருளாதாரக் காரணமென்றால், அதனால் பலன் கிடைக்காது என நினைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நழுவிவிடுவார்க்ள். சமுதாயப் பிளவுகளில் ஒன்று காரணமாக இருந்தால்,அதற்கு வெளியிலிருக்கும் கூட்டம் விரோதமாகச் செயல்படும்.
பண்பாட்டு அடையாளம் என்றால் அதன் இயங்குநிலையே வேறு. ஒவ்வொருவரின் மூளைக்குள் -மனதிற்குள் - நினைவுக்குள் அலைந்து கொண்டிருக்கும். நிகழ்கால வாழ்வில் அந்த அடையாளத்திலிருந்து வெளியேறியவர்களாகக் கூட இருக்கலாம். ஆனால் அதைப் பார்க்கும் -பங்கேற்கும் - கொண்டாடும் விருப்பம் இருக்கவே செய்யும்.
ஏறுதழுவலாக - மஞ்சிவிரட்டாக -சல்லிக்கட்டாக அலைந்துகொண்டிருப்பது தமிழ் அடையாளமாக - பண்பாட்டுக் கூறாக அலையத்தொடங்கிவிட்டது. அதன் எதிர்நிலையில் - விலங்குகளை அறவுணர்வுடன் கையாளும் மனிதர்களுக்கான அமைப்பு[People for the Ethical Treatment of Animals (PETA)] இருப்பதால் அந்நியக் கரங்களின் நுழைவை எதிர்க்கும் வடிவமாக இருக்கிறது. இந்த அமைப்பின் புரிதலற்ற வாதத்தை ஏற்றுத் தடைவழங்கிய நீதிமன்றமும், அதில் தலையிடாமல் தவிர்க்கும் மத்திய, மாநில அரசுகளும் எதிர்மைகளாகவே ஆகிவிட்டன.
நட்புசக்திகளை வைத்துமட்டுமே போராட்டத்தை மதிப்பிட வேண்டும் ; ஆதரிக்க வேண்டும் என்பதில்லை. எதிர்க்கப்பட வேண்டிய தொகுப்பொன்றின் ஒரு கூறை எதிர்க்கிறார்கள் என்பதே போதும். ஆதரிக்கலாம்.  இந்தப் போராட்டம் ஆதரிக்கப்படவேண்டிய ஒன்று.

################################################################

உணர்தலும் உணர்தல் நிமித்தமும்
====================================
வண்ணமயமானவையாக
இருக்கின்றன திரட்சி
நிலத்தின் நிறங்களுக்கேற்ப 
வண்ணக்கலவையில் அடர்த்தி
பக்குவமில்லை என்றாலும்
பதற்றமுமில்லை.
கேட்கக் கிடைக்காத
குரல்கள் கேட்கின்றன.
பார்க்கக் கிடைக்காத
பச்சையங்கள்; பகட்டின்மை
இப்படியே இன்னும் சிலநாட்கள்.
நெகிழ்ச்சியாக இருக்கிறது.
நெருக்கடிகள் இன்னும்
உணரப்படவில்லை.
இலக்குகளும் முடிவுகளும்
இன்னும் தீர்மானமாகவில்லை
திறந்தே கிடக்கும்
வாடிவாசல்களில்..
நின்று நிதானமாக
ஒன்றும் அவசரமில்லை
வெளிவரட்டும் காளைகள்
போராட்டங்கள்
உணரப்பட வேண்டியவை
எதிர்ப்புகள்
உணர்த்தப்பட வேண்டியவை
################################################################
எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் மிகச் சிறிய குழு அதன் நுட்பமான திட்டமிடலால்- சட்டம் தரும் உரிமைகள் மற்றும் வரையறைகளைப் பின்பற்றிப் பெருந்திரளுக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றிபெறமுடியும். அப்படிப் பெறும் வெற்றி பிற நாடுகளில் வெளிப்படையாக முன்வைக்கப்பட்டு -விவாதிக்கப்பட்டுச் சிறுபான்மைக் கருத்து பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு வெற்றியாக மாறுகிறது.
இந்தியாவிலோ மிகக்குறைவான எண்ணிக்கையில் இருக்கும் சிறுபான்மையினரின் நுட்பமான திட்டமிடல் அல்லது புத்திசாலித்தனம் மூலம் ரகசியமாக முன்வைக்கப்பட்டுச் சட்டங்களாகவும் விதிகளாகவும் மாறிவிடுகின்றன. அதன்பிறகு மக்கள் மன்றத்திலிருந்து நீதிமன்றங்களுக்கு நகர்த்தப்படுகின்றன. இந்த நகர்வைப் புத்திசாலித்தனம் என்றும் சொல்லலாம்; சதித்திட்டம் என்றும் அழைக்கலாம்.
மன்னர்கள் காலத்தில் இச்சதிகளின் பங்குதாரர்களாகப் பிராமணர்களும் மன்னர்களும் இருந்தார்கள். இப்போது மன்னர்களின் இடத்தில் அமைச்சர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் பிராமணர்கள் ...?
அமைப்புகளின் பெயராலும் ஆலோசனைக்குழுக்களின் பெயராலும் அறிவுஜீவிகள் என்ற அடிப்படையிலும் அப்படியே அதே இடத்தில் இருக்கிறார்கள். அசையவே இல்லை. அசைப்பது அவ்வளவு எளிதானதும் இல்லை.
################################################################

பொங்கல் : எனது நினைவுகள்
================================================
மதுரை மாவட்டக்கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன் நான். சல்லிக்கட்டு தனியான விளையாட்டு அல்ல. போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் என 3 நாட்கள் கொண்டாடப்படும் விழாவொன்றின் பகுதி அது. மாடுகளும் ஆடுகளும் கோழிகளும் வளர்க்கப்பட்ட வீடுகளில் - கிராமங்களில் சாதிகள் வேறுபாடுகளை நினைக்காமல் கொண்டாடிய விழா பொங்கல் திருவிழா. வெள்ளையடித்தல், வீடு மெழுகுதல், புது அடுப்புப்போடுதல் தொடங்கி ஆடுமாடுகளும் கன்று காலிகளும் உழவுகருவிகளும் வண்டிகளும் கழுவிச் சுத்தமாக்கப்படும்போது பழையன கழிக்கப்படும். அந்தநாள் போகி.
போகியன்று மாலை கண்ணுப்பிளைச்செடி, மாவிலை, ஆவரம்பூ, வேம்பு சேகரித்து வைத்துத் தை முதல்நால் ஒவ்வொரு பொருளிலும் கட்டித் தொங்கவிடப்படும். வீடுகளின் நிலைப்படிதொடங்கி வண்டியின் ஆரக்கால், ஏரின் மேழி, கிணற்றின் படி, கமலையின் குறுக்குவட்டம் என ஒவ்வொன்றிலும் கட்டிமுடித்து வரும்போது வீட்டில் பொங்கல் வைக்கத் தொடங்கிவிடுவார்கள். அன்று மாலை கபடி போன்ற விளையாட்டுப்போட்டிகள் நடக்கும்.
அடுத்த நாள் மாட்டுப்பொங்கலன்றுதான் - எங்கள் கிராமத்தில் பொங்கல் கலைகட்டும். ஆடு மாடுகளுக்கு கொம்பில் வண்ணம் தீட்டுதல், மேனியெங்கும் புள்ளிக்கோலம் வைத்தல், வண்டிக்கு வர்ணமடித்தல் நடக்கும். பிற்பகலில் கொட்டத்தில் பொங்கல் வைக்கப்படும். பொங்கலும் தேங்காய் பழமும் மாடுகளுக்கு ஊட்டப்படும்.

பொங்கலோ பொங்கல்;
பால்பானை பொங்கல்
பட்டி பலுக;
பாரதம் படிக்க
மூதேவி போக;
சீதேவி வர
என்ற வரிகள் சொல்லப்பட்டு நீர் தெளித்து கொட்டங்களைச் சுற்றிவருவோம். அதுமுடியும்போது ஒவ்வொரு வீட்டிலிருந்து ஒரு மாடென வாடிவாசலில் கூடும். சல்லிக்கட்டுக்காக வளர்க்கப்பட்ட மாடுகள் முதலில் அவிழ்த்துவிடப்படாது. உழவுமாடுகள் முதலில் வெளியேறும். அதை அடக்கும் முனைப்பில் யாரும் வீழ்த்தமாட்டார்கள். தொட்டு ஒரு தட்டுத்தட்டி அனுப்பிவிடுவார்கள். அடுத்துவருவன சல்லிக்கட்டுக்காளைகள். அப்போது சிறுவர்களும் பெண்களும் வீட்டுமெத்துகளில் ஏறிக்கொள்ள இளைஞர்கள் அவற்றை அடக்குவார்கள். கொம்பில் கட்டப்பட்ட பரிசுப்பொருட்களை எடுத்துத் தனது காதலிகளையும் மனைவிகளையும் பார்க்கும் ஆண்களின் வீரம் அங்கே விளையும். பொங்கல் விழாவின் பகுதியான சல்லிக்கட்டு எல்லா ஊர்களிலும் இப்படி தையின் இரண்டாம் நாள் தான் நடக்கும். திரும்பவும் முன்னிரவில் ஊரில் இருக்கும் அனைத்து விலங்குகளும் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டு முன்னர் சொல்லப்பட்ட வரிகளைச் சொல்ல ஒவ்வொருவரும் சொல்லும் அந்தக்குரல் ஒரு பாடலாக மாறி ஒலிக்கும் முடியும்போது எழும் கரவொலியும் குழவையொலியும் இப்போதும் காதுகளில் ரீங்காரமிடுகின்றன
எங்கள் கிராமத்திற்குப் பக்கத்திலிருக்கும் எழுமலையில், கிருஷ்ணாபுரத்தில் நடந்த சல்லிக்கட்டுகளுக்காக எங்கள் ஊரின் மாடுகளோடு எனது பள்ளிப் பருவக் காலத்தில் அண்ணனோடு சேர்ந்து போயிருக்கிறேன். அலங்கா நல்லூரிலும் அவனியாபுரத்திலும் பாலமேட்டிலும் நடந்த சல்லிக் கட்டுகளை எனது கல்லூரிக்காலத்தில் சென்று பார்த்திருக்கிறேன். சிங்கம்புணரிக்கருகே நடக்கும் மஞ்சுவிரட்டுக்கு எனது வகுப்பு மாணவர்கள் அனைவரும் சேர்ந்து போயிருக்கிறேன். சின்னச்சின்னக் குன்றுகளுக்கிடையில் நடக்கும் மஞ்சி விரட்டில் நூற்றுக்கணக்கான மாடுகள் ஒரே நேரத்தில் அவிழ்த்துவிடப்படும். அங்கு வாடிவாசல் எதுவும் கிடையாது.
அந்தக் கிராமத்திலிருந்து நான் வெளியேறிப்பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் வெளியேறும்போதே ஆடுகளும் மாடுகளும் குறைந்துவிட்டன. சேவல் கூவும் அதிகாலைகள்கூட இல்லாமல் போய்விட்டன. ஆனால் பொங்கல் கொண்டாடப்படுகிறது. 3 நாட்கள் விழா இன்னும் இருக்கிறது. சல்லிக்கட்டு இல்லை. அடையாளமாக ஒன்றிரண்டு மாடுகள் ஓடுகின்றன.
மனிதர்கள் இருக்கும் வரை விழாக்களும் அவற்றின் அடையாளங்களும் இருக்கும். தேவையற்றவை எனக் கருதப்படுபவை கைவிடப்படும். அதைச் செய்யவேண்டியவர்கள் அவர்கள்தான். இன்னொரு பண்பாட்டைச் சேர்ந்தவர்களோ, அல்லது இன்னொரு பண்பாட்டுக்குள் இருப்பவர்களோ, மற்றமைக்குள் நுழைந்துவிட்ட நானோகூட அதைத் தடைசெய்ய அனுமதிக்க மாட்டார்கள். அப்படி நினைத்தால் நானும் வேற்று ஆளாகத்தான் நினைக்கப்படுவேன். இது நபர்களுக்கு மட்டும் பொருந்துவதல்ல; அமைப்புகளுக்கும் அரசுக்கும்கூடப் பொருந்தும். கிராமம் அவர்களுடைய வெளி; அது வெறும் மண்ணாலான வெளியல்ல; பண்பாட்டு நடவடிக்கைகளால் ஆனவெளி. அதைப் புரியாதபோது ஏற்படும் கலவரங்களுக்குக் காரணம் இன்னதென்று விளக்கமுடியாதனவாக இருக்கும்.

இன்னொரு வாய்ப்பு கூடிவரப்போவதில்லை
================================================
உணர்ச்சிகரமான மனவோட்டங்கள் தலைவர்களை உருவாக்கும்.புதிய இயக்கங்களைச் சமூகத்திற்கு அடையாளம் காட்டும் மெல்லமெல்லக் கனிந்து வந்த இந்தி எதிர்ப்பு மனநிலைதான் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தமிழ்நாட்டிற்கான அரசியல் இயக்கமாக அடையாளங்காட்டியது. அதன் தலைவர் சி.என். அண்ணாதுரையை ஆட்சிக்குரியவர் என நம்பவைத்தது. நிதானமாக யோசித்துப் பார்த்தால். இந்தி எதிர்ப்புப்போராட்டம் என்பது ஒட்டு மொத்தத் தமிழர்களின் பிரச்சினையில்லை. நடுத்தரவர்க்க மனிதர்களின் பிரச்சினைதான். ஆனால் தாய்மொழியின் வழியாகத் தொடர்புகொள்ளுதல் என்பது தமிழ்நாட்டின் - தமிழர்களின் பிரச்சினை
சல்லிக்கட்டும் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் பிரச்சினை அல்ல அது ஒரு வட்டாரப்பண்பாட்டின் அடையாளம் தான். ஆனால் அது நிகழும் நாள் முக்கியமானது. பொங்கல் கொண்டாட்டத்தோடு இணைந்த ஒன்று சல்லிக்கட்டு. அதனை மையமாக்கி ஒட்டுமொத்தத் தமிழர்களின் மனவோட்டத்தையும் - உணர்வெழுச்சியையும் தூண்டமுடியும். அப்படித் தூண்ட ஏற்கெனவே அறிமுகமான இயக்கமோ தலைமையோ முயற்சி செய்யாதபோது புதிய இயக்கம் அதை முன்னெடுத்திருக்கலாம். புதிய தலைமை ஒன்று உருவாகியிருக்கலாம். இந்த ஆண்டைவிடவும் அதற்கான தருணம் இன்னொருமுறை கனிந்துவரும் என்று தோன்றவில்லை.
தமிழர்களின் ஒட்டுமொத்த மனவெழுச்சியையும் ஒருமுனைப்படுத்தும் நல்லவொரு தருணத்தைத் தவறவிட்ட அந்தத் தலைமை - அந்த இயக்கம் எதுவென என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் தவறவிட்டுவிட்டார்கள். இன்னொரு வாய்ப்புக் கூடிவரும் என நம்பிக்கையில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்