November 05, 2016

கவிதை முழுமையடையும் தருணம் விலகலாகும் வேளையும்


அனாரின் ஆழ்தொலைவின் பேய்மை
========================================
இப்போது வரும் கவிதைத்தொகுதிகளில் ஒன்றைக் கையில்கொடுத்து விமரிசனம் செய்யவேண்டும் அல்லது விளக்கிப்பேசவேண்டுமென்றால் திணறல் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. அந்தத் திணறல் காரணமாகவே தமிழின் முக்கியக் கவிகள் பலரைப்பற்றியும் எனது வாசிப்பனுபவத்தைப் பகிரிந்துகொள்ளாமல் தவிர்த்துக்/ தவித்துக்கொண்டிருக்கிறேன். அனாரின் கவிதைகளின் தொகுதியும்சரி, தனித்தனிக் கவிதைகளும்சரி அந்தத் திணறலை ஏற்படுத்துவதில்லை.


அச்சில் (தடம், நவம்பர்,2016) வந்திருக்கும் தனது கவிதையொன்றை அனார் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்தக் கவிதையின் தலைப்பு " ஆழ்தொலைவின் பேய்மை"
’ நீயொரு மாறுதலற்ற நிழல்
நான் பகலை முந்திச்செல்லும் இரவு’
என்பதான இருமைக்குள் விரியும் படிமக் காட்சிகள் பிறன்மை(Other) யையும் தன்னிலை(Self)யையும் அடுக்கிக் காட்டுகின்றன.
பகலை முந்திச்செல்லும் இரவு எனத் தன்னை ( ) முன்னிலைப்படுத்திக்கொண்டு, பிறன்மையை ஆழ்தொலைவின் பேய்மையாக உருவகித்துக்கொண்டு உரையாடலை நிகழ்த்துகிறது. தனக்கும் அதற்குமான தூரம் வெகுதூரமாக இருந்தபோதிலும் தனது இருப்பு, 'வெம்புக்காட்டின் சுருள்களுக்குள்
நாகத்தின் சீற்றம்' மின்வெட்டு, கரைந்தபடி அலையும் ஒற்றைக்காகம், ஜொலிஜொலிப்பாக விரியும் அமிர்தத்தின் குடுவை எனச்சொல்கிறது. என்றாலும் கணத்தில் சூழும் பேய்மைகள், மரணத்தை நினைவூட்டும் அச்சமாகச் சூழ்கிறது என விரிகிறது.
கவிதைக்குள் இருக்கும் ‘சொல்லி’யின் தவிப்பும் நிலைப்பாடும் தனியொருவருக்குரியதாக இல்லாமல் பொதுநிலைக்குரியதாக ஆவதில், ஒவ்வொரு அகக்கவிதையும், பொதுநிலைக்கவிதையாக மாறிவிடும். அனாரின் இந்தக் கவிதை அதைத்துல்லியமாகச் செய்துகாட்டியிருக்கிறது.ஆணைச்சார்ந்து வாழும் பெண்மையாக மட்டுமல்லாமல், தனது படைப்பாற்றல், உற்பத்தித்திறன், பயணம் தரும் கொண்டாட்டத்தை அனுபவிக்கும் மனுசியாக உலகத்தின் பரப்பிற்குள் விரிக்கும் ஒரு பெண்ணைச் சூழும் பேய்ம்மைகள் பலவிதமானவை. அவற்றின்மீது அந்தப்பெண் கொள்ளும் கோபத்தின் ஆவேசத்தை, ஆவேசமான சொற்களைத்தவிர்த்து அதன் வீர்யம் குறையாத வேறுசொற்களால் நிரல்படுத்துவதில் அனார் கவனம் செலுத்துபவர். அந்த நிரல்படுத்தலில் தான் வாழும் நிலம்சார்ந்த காட்சிச்சித்திரங்களையும் தந்துவிடுவார். இந்தக்கவிதையிலும் அதை உறுதிசெய்திருக்கிறார். அச்சத்தின் சாயலும் பெருமிதத்தின் நிமிர்வுமெனக் கசியும் இந்தக் கவிதையில் ஒரு தமிழ்க்கவிதையின் அழகியலான முதல், கரு, உரி என்ற மூன்றும் சம அளவில் வெளிப்பட்டுள்ளது. அந்தச் சமநிலையில்தான் கவிதை முழுமையாகும். இந்தக் கவிதை அப்படியொரு முழுமையான கவிதை:
இனி முழுமையாக அந்தக் கவிதையைத் தருகிறேன்.
=========================
வெம்புக்காட்டின் சுருள்களுக்குள்
நாகத்தின் சீற்றமாக இருக்கிறேன்
மேகப்படைகள்
மழையை விரித்துக்கொண்டும்
சுருட்டிக்கொண்டும் இருந்தவேளை
மின்வெட்டாக….
சாம்பல் அந்திகளில் கரைந்தபடி
குறுக்கு மறுக்காக பறக்கும்
ஒற்றைக் காகத்தின் பரிதவிப்பாக
இரு மலை உச்சிகளின் நடுவே
விழும் பெருநீர்ப்பரப்பின் ஜொலி ஜொலிப்பு
குறைவான அமிர்தத்தின் குடுவை
கணத்தில் காணும் விபத்து
மரணத்தைக்கொண்டு நினைவூட்டும் அச்சம்
மிளகுக்கொடியின் அருகே பிறந்த
மலைப் பூனையின் வாசம்
பொங்கிவரும் நுரைத்துளிகளை
காய்ந்துறையச் செய்யும்
நினைவுகளின் வறண்ட பள்ளங்களில்
தேங்கிய கானல்
மலையைச் சுற்றிப்போகும் குளம்
ஆழ் தொலைவில்
பேய்த்தனமாய்ச் சிவந்து நீர்ச்சுடர்கள் மினுங்கும்
நீயொரு மாறுதலற்ற நிழல்
நான் பகலை முந்திச்செல்லும் இரவு’
சிபிச்செல்வனின் கவிதை(கள்)
======================

தொல்காப்பியம் படித்துக் கவிதை வாசிக்கும் நான் வாசிப்பு மகிழ்ச்சியளிக்கக்கூடியதாக - உவகையளிக்கக்கூடியதாக- இருக்கவேண்டும் என்று மட்டுமே நினைப்பதில்லை. மகிழ்ச்சியை - உவகையைத் தொல்காப்பியம் கடைசியாகத் தான் சொல்கிறது. அதிர்ச்சியையும் அளிக்கலாம். எதையுமே அளிக்காமலும் போகலாம். கவிதை வாசிப்பை அளவிடும் பயன்மதிப்பு இதுதான் என்று சொல்லும் வரையறைகள் இல்லையென்று வாதிடவும் செய்யலாம்.
தொல்காப்பியம் சொல்லும் இந்த எட்டுவகையான உணர்வில் - நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம்,வெகுளி, உவகை - ஏதாவது ஒன்றாவது இருக்கிறதா எனத்தேடும் பழக்கம் இருக்கிறது. 35 வருடப் பழக்கத்தை அவ்வளவு சுலபமாகக் கைவிட முடியவில்லை.
இந்தமாதக் காலச்சுவடில் வந்துள்ள இந்தக் கவிதையைத் திரும்பத்திரும்ப வாசித்தேன். உருளைக்கிழங்கு என்னும் பெயர்ச்சொல்லை வைத்து உருட்டும் அந்தக் கவிதை அதன் வடிவம், நிறம், சுவை என எனக்குள் சில மருட்கையுணர்வை உண்டாக்கியது. அத்தோடு கவியும் பணிப்பெண்ணும் நடத்தும் உரையாடல் வடிவத்தைக் கொண்டிருக்கும் கவிதைக்குள் ஒருவன் வந்து
” பெட்டாட்டோ பொட்டாட்டோ எனக் கேட்கிறான்
தற்போது”
என்றொரு வாக்கியம் வருகிறது. பணிப் பெண்ணுக்கும் கவிக்கும் இடையில் வந்து கேட்டுவிட்டுப்போகும் அவன் யார்? ஏன் இந்தக் கேள்வியை மட்டும் கேட்டுவிட்டுக் காணாமல் போய்விட்டான். அவன் பெட்டாட்டோ, பொட்டாட்டோ எனக் குழறுவதற்கு ஏதாவது அர்த்தம் இருக்குமா?
இந்தச் சந்தேகம் தீராமலேயே கவிதையை வாசித்து முடித்துவிடலாம் என்று தொடர்ந்தால்,
”தேடிக்கொண்டிருக்கிறேன் மறைந்திருக்கும் ஒன்றை”
என்ற வரியில் உருளைக்குழங்கை உருட்டும் கவிதை முடிந்துபோனதாகத் தெரிகிறது. அப்படித் தோன்றுவது எனக்கு மட்டும் தானா?
அதற்குப் பிறகு இருக்கும் இரண்டு பத்திகளும் குழந்தைமை- முதுமை என்பதான இன்னொரு நிகழ்வுக்குள் நகர்ந்துள்ளது. உருளைக்கிழங்குக்கு இளமை - முதுமை என இருப்பதாக எனது நடப்பியல் அறிவு ஏற்க மறுக்கிறது. ஒருவேளை கவிதையின் நகராரூபத்தில் அது சாத்தியமா?
நவீனக் கவிதையைப் பாடம் சொல்லும் கட்டாயத்திலிருக்கும் இந்த ஆசிரியரின் சந்தேகத்தைத் தீர்க்க தமிழின் நவீனப் பெருங்கவிகளோ! இளம்கவிகளோ!! முயல்வார்களாக.
புகைப்படத்தில் வாசிக்கச் சிரமப்படுவீர்கள் என்பதால் நானே தட்டச்சில் தருகிறேன். கவிதைக்குத் தலைப்பெல்லாம் இல்லை.
==========================================
உருளைக் கிழங்கு
உருளைக் கிழங்கு எனக் கேட்கிறாள் பணிப்பெண்
அது என்ன?
அது என்ன நான் கேட்கிறேன்
பெட்டாட்டோ பொட்டாட்டோ எனக் கேட்கிறான்
தற்போது
எனக்கு உருளைக் கிழங்கும் தெரியாது
பொட்டாட்டோவும் தெரியாது எனச்சொன்னால்
கேலியாகச் சிரிக்கிறாள்
இது உருளைக்கிழங்கிற்கும்
பொட்டாட்டோவிற்கும் தெரியுமா எனக் கேட்டு
அதிர்ந்து நிற்கிறது
உருண்டு திரண்டு நிற்கிற அந்த காபிநிற
உருண்டைவடிவில் நிற்கிற காய்.
ஆமாம்
நீங்கள் அறிவீர்களா?
உருளைக்கிழங்காவது
அல்லது
பொட்டாட்டோவையாவது
அறிந்தவர்கள்
சொல்லுங்கள்
பணிப்பெண்ணிடம்
உருளைக்கிழங்கின் குணங்களை
அதன் நிறங்களை அதன் அதிசயங்களை
அதன் பூர்வீகத்தை
அதன் வரலாற்றை
குறைந்தபட்சம் அதன் வாசனையைச் சொல்லுங்கள்
நான் ரஸித்துக்கொண்டிருக்கிறேன்
அதுவரை
ஒரு உருளைக்கிழங்கின் மூன்று பக்கங்களை
கூடவே
தேடிக்கொண்டிருக்கிறேன் மறைந்திருக்கும் ஒன்றை
கண்களை உருட்டிஉருட்டிப் பார்க்கிறது
குழந்தை
அதனைப் போலிசெய்து
நானும் கண்களை உருட்டிஉருட்டிப் பார்க்கிறேன்
குழந்தையின் உருட்டலில் கண்களில்
குழந்தைமை வழிகிறது
நான் அதைப் போலிசெய்ய
என் முதுமை நழுவிச்செல்கிறது.

No comments :