தமிழர்கள் இப்படி மட்டும் தான் இருக்கிறார்களா ஜெயமோகன்?

இப்படி இருக்கிறார்கள் என்று தலைப்பு வைத்து ஜெயமோகன் http://www.jeyamohan.in/?p=36719 எழுதிய அந்தக் கட்டுரை ”இப்படிப் பட்ட ஒரு கூட்டம் தமிழ்ச் சமூகத்தில் இருக்கிறது” என்று எழுதிக் காட்டியதோடு முடித்திருந்தால் தனது வலைப்பூவில் அவர் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளில் ஒன்று என நினைத்து வாசிக்கப்பட்டு விடப்பட்டிருக்கும். அந்த வாய்ப்பை வழங்காமல் இப்படிப்பட்ட கூட்டம் இருப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து சொல்ல முயன்றதன் மூலம் தனது இலக்கு என்ன என்று அடையாளப்படுத்தி இருக்கிறார். அதைச் செய்யும்போதே தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் சரியானவர்கள் வளையத்துக்குள் நிறுத்திக் கொண்டு தனது பயணம் சரியாக இருக்கிறது எனக் காட்ட முயல்கிறார். ஆனால் தன்னைச் சுற்றி நிகழும் அற்பத் தனங்களாலும் அறிவற்ற செயல்களாலும் தாண்ட முடியாத தடைகள் தோன்றி அப்பயணத்தைத் தடுத்துக் கொண்டே இருக்கின்றன எனச் சலிப்படையவும் செய்கிறார்.