December 27, 2011

சிங்கத்திடமிருந்து தலைவரை யாராவது காப்பாற்றுங்கள்


தமிழ்நாட்டில் பேராசிரியராக இருந்து தமிழைக் கற்றுத் தந்தேன். ஆனால் வார்சாவில் வருகைதரு பேராசிரியராக வந்து தமிழைச் சொல்லிக் கொடுக்கிறேன். ஆம்,”கற்றுத் தருதல்” ”சொல்லித் தருதல்” என்ற இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து கவனமாகவே சொல்கிறேன்.வார்சாவில் எனது வேலை போலந்து மாணவ, மாணவிகளுக்குத் தமிழ் பேசக் கற்றுக் கொடுப்பதுதான். மாணவ, மாணவிகள் என்று சொல்வதற்குப் பதிலாக மாணவிகள் என்றே குறிப்பிடலாம். ஒன்பது பேரில் ஒருவர் மட்டுமே மாணவர்; எட்டுப்பேர் மாணவிகள். 


ஒவ்வொரு வகுப்பிலும் ஓரிடத்தை மையப்படுத்தி சூழலை விளக்கி உரையாடலை உருவாக்குவதுதான் சொல்லித் தருவதில் முக்கியமான வேலை. வினாக்களை எழுப்புவது எப்படி? அதற்கு விடை சொல்வது எவ்வாறு என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டும். பேச்சுத்தமிழின் கூறுகளை விளக்கிக் கூறி விட்டு தினசரி அவர்களுக்குப் பேச்சுப் பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கு நான் அதிகமும் கவனம் செலுத்தும் பகுதி இலக்கணம். அதிலும் சொல் இலக்கணம் என்று குறிப்பாகச் சொல்லலாம். பேச்சுத்தமிழில் சொற்களும் சொற்றொடர்களும் அடையும் மாற்றங்களும் அதன் பின்னணியில் இலக்கணமரபு எவ்வாறு பின்பற்றப்படுகிறது அல்லது எவ்வாறு மீறப்படுகிறது எனச் சொல்லிப் பேச்சுப் பயிற்சி அளிப்பதற்கு வினா, சுட்டு என்னும் எளிய இலக்கணப் பகுதிகளில் புலமை இருந்தாலே போதும். பள்ளிக்கல்வியின் ஆரம்பநிலையிலேயே இடம்பெறும் கூறுகள் இங்கு அதிகம் இலக்கணக் கலைச்சொற்களைப் பயன்படுத்தாமல் உலகம் தழுவியதாகக் கருதப்படும் மொழியியல் கலைச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது மட்டுமே  முக்கியமான வேறுபாடு.
போலந்து மாணவிகளுக்குச் சொல்லித் தருவதற்காக முதுகலையில் விருப்பமில்லாமல் படித்த தொல்காப்பியச் சொல்லதிகாரத்தையும், இக்கால மொழியியல் நூல்களையும் திரும்பவும் படித்துக் கொண்டிருக்கிறேன் அதிலும் போலந்து மாணவிகள் ,நம்மூர் மாணவிகளைப் போல சொல்வதை யெல்லாம் கேட்டுக் கொண்டு சும்மா போய்விட மாட்டார்கள். கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்து எடுத்துவிடுகிறார்கள்.. நம்மூரில் எந்தப் பாடத்திலும் மாணவ மாணவிகளுக்கு சந்தேகமே எழுவதில்லை. திணை.பால், எண், இடம், காலம்  என மொழியின் அடிப்படைக் கூறுகள் பற்றிய பாடத்திலும் சந்தேகம் கேட்க மாட்டார்கள். இடுகுறிப் பொருள், காரணப் பொருள் என ஆழ்நிலைக் கூறுகள் பற்றி விளக்கினாலும் ஐயங்கள் தோன்றாது. உரையாடுதல் கற்றலின் ஒரு பகுதி என நம் கல்விமுறை பழக்கப்படுத்தவில்லை. ஆசிரியர் செய்வதை அப்படியே செய்யும் போலச் செய்யும் குருகுல முறையையே ஆகச் சிறந்த முறையாக நம்பும் இந்தியக் கற்கை நெறி போலந்தில் எடுபடாது. ஒவ்வொரு வகுப்பிலும் கேள்வி நேரமும் விவாதமுறையும் தவறாமல் நடக்கும் ஒன்று.
அந்த மாணவி இந்தக் கேள்வியைக் கேட்ட போது தமிழ்நாட்டைப் பற்றி பொதுவாகத் தெரிந்து கொள்வதற்காகத் தான்  கேட்கிறாள் என நினைத்து நானும் பதில் சொல்லத் தயாரானேன். இனி அந்த விவாதத்திற்குள் நுழையலாம்.
” தமிழ்நாட்டில் சிங்கங்கள் இருக்கா?“
“ஆமா.. இருக்கு”
“சிங்கங்களெ எங்கெ பார்க்கலாம்?”
“அடர்ந்த வனப்பகுதியிலெ இருக்கிறதாச் சொல்றாங்கெ.; நான் பார்த்ததில்லை.
ஆனா விலங்குகள் பூங்காவிலும், சர்க்கஸிலும் சிங்கத்தைப் பார்த்திருக்கேன்”
“தமிழ் நாட்டுச் சிங்கங்கள் மாமிச பட்சிணி கிடையாதா?
காட்டிலெ கெடைக்கிற செடிகொடிகளெயும் இலைதழைகளையும் தான் தின்னுமா?”
“ஏன் இப்படிக் கேக்கிறே . இந்தியச் சிங்கம் மட்டும் எப்படி சாக பட்சிணியா இருக்கும்?”
“தலைவரெ ஒன்னும் செய்யலயே?”
கேள்வி பொது விசயமாகவும் இல்லாமல் பேச்சுத்தமிழுக்கும், இலக்கண மரபுக்கும் தொடர்பு கொள்ளாமல் விலகிப் போனதால் கொஞ்சம் தயக்கம் காட்டினேன். அடிமைப் பெண் சினிமா பார்த்திருப்பாளோ என்றொரு சந்தேகம் தோன்றியது. அதில் தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆரிடம் சிங்கம் மண்டியிட்டுப் பின் வாங்கிப் போகும். அந்தச் சினிமாக்காட்சியை –சினிமாவில் பின் வாங்கும் சர்க்கஸ் சிங்கத்தின் குணத்தை ஒட்டுமொத்த இந்தியச் சிங்கங்களின் குணமாகச் சொல்ல முடியாது என்று விளக்கலாம் என நினத்துக் கொண்டு,
“தலைவர்ன்னா எந்தத் தலைவர்?” நான் திரும்பக் கேள்வியாகக் கேட்டேன்.
“அரசியல் தலைவரெ தான்” என்று பதிலை அவள் சொன்னாள்.
எனது குழப்பம் இன்னும் அதிகமாகி விட்டது. கொஞ்ச நேரம் அவளோடு விலாவரியாகப் பேசிய பின்னர் தான் அவள் அப்படிக் கேட்டதன் காரணம் புரிந்தது.
ஏதோ ஒரு தமிழ் சினிமாவில், ஒரு பாத்திரம் தொலைபேசியில் பேசிவிட்டுப் பக்கத்தில் இருக்கும் இன்னொருவரிடம், தொலைபேசியைக் கொடுக்கும்போது, “தலைவர் லைன்லெ இருக்கார்” என்று சொல்லி யிருக்கிறது. அதைக் கேட்டதும் லைன் என்ற ஆங்கில வார்த்தையை சிங்கம் என மொழி மாற்றி ”தலைவர் சிங்கத்திலெ இருக்கார் “ எனப் புரிந்து கொண்டு பதறிப் போயிருக்கிறாள். அத்தோடு சிங்கத்தின் பிடறியிலும், புலியின் முதுகிலும் பவனி வரும் நம்மூர் தெய்வங்களின் படங்களைப் பார்த்த அவளுக்கு, இந்திய அரசியல்வாதிகளுக்கு சிங்கங்களையும் புலிகளையும் கட்டுப் படுத்தி வாகனமாகப் பயன்படுத்தும் ஆற்றலும் இருக்கக் கூடும் என்ற நம்பிக்கையும் எழுந்து விட்டது. அந்த ஐயத்தின் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டுச் சிங்கங்களை சைவச்சிங்கங்கள் என முடிவுக்கு வந்து விட்டாள். இந்தியச் சிங்கங்கள் சைவச் சிங்கங்கள் என்றால் ஹரி+சூர்யா+அனுஷ்கா  கூட்டணியில் அதிரடி வெற்றி பெற்ற சிங்கம் படத்தின் கதி என்னவாகியிருக்கும் என நினைத்துக் கொண்டேன். மாணவிக்கு ’இந்த லைன், அந்த லைன் அல்ல’ என்று விளக்குவதற்குள் திணறல் ஏற்பட்டதென்னவோ உண்மை.
ஆங்கிலச் சொற்றொடரில் அமையும் எழுவாய், பயனிலை, வினை அல்லது செயப்படுபொருள் என்ற முக்கூறுகள் தமிழில் அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது. எழுவாயும், வினையும் பொதுவாக இருக்கும். பல நேரங்களில் வினைச் சொல்லின் வடிவங்களே தமிழில் பேசுவதற்குப் போதுமானது. தமிழின் வினைச்சொல் வடிவம் திணை, பால், எண், இடம், காலம் என ஐந்து கூறுகளையும் உள்ளடக்கியது .பாடினாள் என்ற வினைச்சொல் வடிவத்திற்குள் உயர்திணை, பெண்பால், படர்க்கை, ஒருமையும், அது கடந்த காலத்தில் நடந்தது என்ற காலக் குறிப்பும் இருக்கிறது. ஆனால் ஆங்கில வினைச்சொற்கள் அப்படிப் பட்டன அல்ல. தமிழில் எல்லாச் சொற்களும் – பெயர்ச்சொற்களாயினும் வினைச்சொற்களாயினும், பகுபதமாகவும், பகாப்பதமாகவும் இருக்கின்றன. பகுபதத்தைப் பகுதி, இடைநிலை, விகுதி என மூன்றாகப் பிரிக்கலாம். சில சொற்களில் சந்தி அல்லது சாரியை போன்றனவும் கூட இருக்கும். பகாப்பதத்தில் பகுதி மட்டுமே இருக்கும், பேச்சுத்தமிழில் சொல்லின் பகுதியில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்வதில்லை. இடைநிலை, சாரியை, விகுதி போன்றன மட்டுமே மாறக் கூடியன. தோன்றல், திரிதல், கெடுதல் ஆகிய மூவகை மாற்றங்கள் மூலம் எழுத்துத் தமிழ்ச் சொற்கள் பேச்சுத் தமிழ்ச் சொற்களாக மாறுகின்றன.
அதே போல் தமிழ் இலக்கணம் தற்பவம், தற்சமம் என்ற இரண்டு சொற்களை விளக்கியிருக்கிறது. கிரந்த எழுத்துகளான ஜ்.ஸ்,ஷ்,க்ஷ், போன்றவற்றைப் பயன்படுத்தி எழுதித் தற்பவமாகவும், இவற்றுக்கீடான தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தித் தற்சமமாகவும் ஆக்கலாம். இலக்கணங்கள் எழுதப்பட்ட காலத்தில் சமஸ்கிருதத்திலிருந்து மட்டுமே சொற்கள் தமிழுக்குள் வந்து நுழைந்தன என்பதால், அவற்றைத் தமிழில் எழுத- தமிழ்ச் சொற்களாக மாற்ற இவ்விரண்டும் போதும் என நினைத்திருக்கிறார்கள். ஆனால் இன்று தமிழில் – பேச்சுத்தமிழில் உலக மொழிச் சொற்கள் அனைத்தையும் அவை எந்த மொழியின் சொற்கள் எனத் தெரியாமலேயே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்.. ரெப்ரிஜிரேட்டரையும், மீடியா ப்ளேயரையும் தமிழர்கள் கண்டு பிடிக்கவில்லை என்பதால் அந்தப் பெயர்களை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். எல்லா மொழியிலும் இதுதான் நடக்கிறது.
பெயர்களோடு வேற்றுமை உருபுகளான ஐ.ஆல்,கு,உடன்,ஓடு,இன்,அது, கண் போன்றவை சேர்வதிலோ, சேர்ப்பதிலோ சிக்கல்கள் எழுதுவதில்லை. அதே நேரத்தில் வேற்றுமொழி வினைச் சொற்களோடு வேற்றுமை உருபுகளோ, காலம் காட்டும் இடைநிலைகளோ சேராது. சமஸ்கிருதத்திலிருந்து வந்து தமிழ் வினைச்சொற்கள் போலவே ஆகி விட்ட யோசி, ஆலோசி, அவதானி, அனுக்கிரகி, பாவி போன்றன விதிவிலக்கு. ஆனால் இன்றைய காலகட்டத்தமிழர்கள் பெயர்களை அப்படியே ஏற்றுக் கொள்வதைவிடவும் தேவையான வினையடிகள் இருக்கும்போதே ஆங்கில வினையடிகளைக் கலந்து பேசுகிறார்கள். இன்று நவீனத் தமிழ் யுவதிகளும், யுவன்களும் பேசும் ஆங்கில மொழியின் பெயர்களும்,வினைகளும் தமிழில் கலக்கும்போது அதிகம் பயன்படும் ”–லே” மற்றும் “ – பண்ணி” களை ( கம்யூட்டர்லே ஒர்க் பண்ணி,  மீடியா ப்ளேயர்லெ ப்ளே பண்ணி, டிவிலெ வியூ பண்ணி, புக்லெ ரீட் பண்ணி,  ரோட்லெ டிரைவ் பண்ணி, ஸ்ட்ரீட்லெ வாக் பண்ணி) என்னவகை இலக்கணமரபாகச் சொல்வது?’. இதற்கெல்லாம் இலக்கண விதிகள் கூறுவது இயலாது. அடிமைகளாக இருந்ததால் ஏற்பட்ட பழக்கம் அல்லது அடிமைகளாக இருப்பதற்கான ஆசை எனச் சொல்லலாம் என விலாவரியாக விளக்கிக் கூறியதில் எல்லாவற்றையும் விளங்கிக் கொண்டார்களா? என்பதை அடுத்த வகுப்பில் எழப்பப்படும் கேள்விகளை வைத்துத்தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வளவையும் சொல்லி விட்டு ”தலைவர் தொலைபேசியில் உங்களோடு பேசுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதைத் தான் அந்தப் பாத்திரம் “ தலைவர் லைன்லெ இருக்கார்” என்று சொன்னது என விளக்கி முடிக்கும் முன்  அவள் அடுத்த கேள்விக்குத் தாவினாள். 
” லைன்லெ நின்னு டிக்கெட் வாங்கிட்டுப் போயி கூண்டிலெ இருக்கிறெ லைனெ தூரமா நின்னு பாருங்கன்னு சொன்னவர் பீடி பற்ற வைக்க மரத்துக்குப் பின்னால் ஒதுங்கினார்.
என்று எழுதப்பட்ட புத்தகம் ஒன்றை எடுத்துக் காட்டி, இதிலெ வர்ற லைனெல்லாம் எந்த லைன் என்று கேட்டாள். இந்த சொற்றொடரில் இருக்கும் –லைன்லெ- என்பது –வரிசையிலெ- என்னும் பொருளில் வருகிறது, இரண்டாவது –லைனெ- என உச்சரிப்பிலேயே எழுதப்பட்டிருப்பது -லயன் – அதுதான் ஒரிஜினல் சிங்கம் என விளக்கிச் சொல்லி, இந்தியாவிலும் சிங்கம் கூண்டில் தான் அடைக்கப்பட்டிருக்கும். இல்லையென்றால் ஆள் அரவம் இல்லாத காட்டுப் பகுதியில் தூங்கிக் கொண்டு இருக்கும். கிட்டப்போனால் மசால் தடவாமலேயே சதையைப் பிய்த்துச் சாப்பிட்டு விட்டு எலும்பை வீசி விட்டு ஏப்பம் விடும் என்று சொல்லிப் புரிய வைப்பதற்குள் பெரும்பாடுபட வேண்டியதாகி விட்டது.
தொலைபேசியில் தொடர்பு கொள்பவர்களின் வேண்டுகோளுக்குப் பாட்டுப் போடும் வானொலி, தொலைக்காட்சி வர்ணனை யாளர்கள் லையன்லெ இருக்கிறது யாரு? கொஞ்சம் லையன்லெயே இருங்க. அடுத்து லைனுக்கு வர்றது எனப் பேசிக்கொண்டிருக்கும்போது உண்மையான லையன் – சிங்கம் ஒன்று வந்து விட்டால் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்த்தேன். அவர்களைக் காப்பாற்ற சிங்கத்தின் பிடறி மயிரைப் பிடித்துச் சுழற்றும் ஈஸ்வரி வந்தால் தான் ஆச்சு; எந்தத் தலைவரும் வரமாட்டார்கள். அவர்களது குழுமத்தை நிர்வகிக்கும் நிர்வாகப் புலிகளும் கூடப் பயந்து ஓடத்தான் தயாராவார்கள். அப்போது இன்னொன்றும் தோன்றியது.
” லைன்லெ நின்னு டிக்கெட் வாங்கிட்டுப் போயி கூண்டிலெ இருக்கிறெ லைனெ தூரமா நின்னு பாருங்கன்னு – இந்த வரியை எழுதிய எழுத்தாளரை மட்டுமல்ல, எந்த எழுத்தாளரும் ஆங்கிலம் கலந்து எழுதக் கூடாது என உத்தரவொன்றைப் போடச் சொல்லலாம். அத்தோடு தமிழ் வினையடிகளுக்குப் பதிலாக ஆங்கில வினைச் சொற்களைப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் எனக் கட்டாயம் உத்தரவிட வேண்டும்.  ஆனால் அந்த உத்தரவை யார் வைத்துப் போடச் சொல்வது. வேட்டைய மகராஜா போடும் உத்தரவை 23 ஆம் புலிகேசி மாற்றிவிடுவார். 23 ஆம் புலிகேசி போட்ட உத்தரவு என்றால் வேட்டைய மகராஜா கண்டு கொள்ள மாட்டார்.
ஆங்கிலம் மட்டுமல்லாமல் அந்நிய மொழிகள் அனைத்தும் தெரிந்ததாகப் பாவனை செய்வதில் தான் தங்கள் திறமை இருப்பதாகக் காட்டும் எழுத்தாளர்கள் யாருடைய உத்தரவுக்கும் கட்டுப்பட மாட்டார்கள். வரிசையில் நின்று அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டு கூண்டில் இருக்கும் சிங்கத்தைத் தூரமாக நின்று பாருங்கள் என எழுதினால் சிங்கம் காட்சி தராது; செத்துப் போகும் என வாதிடுவார்கள். பேச்சுத்தமிழில் அதிலும் ஆங்கிலம் கலந்து எழுதும் பேச்சுத்தமிழில் தான் உயிர் அல்ல ஜீவன் இருப்பதாக நம்புபவர்களின் நம்பிக்கை லேசுப்பட்ட நம்பிக்கை கிடையாதே.  எழுத்தாளர்கள் நிச்சயம் கேட்க மாட்டார்கள். அத்தோடு இந்தப் பண்டிதர்களுக்கு வேறெ வேலையே கிடையாது எனக் கிண்டலும் செய்வார். அதற்குப் பதிலாக ”வரிசையில் நின்னு டிக்கெட் வாங்கிட்டுப் போயி கூண்டிலெ இருக்கிறெ சிங்கத்தைத் தூரமா நின்னு பாருங்கன்னு” என எழுதலாமே எனக் கேட்டுக் கொண்டால் கொஞ்சம் சம்மதிக்கக் கூடும். முடிந்தவரை தமிழில் எழுதலாம் தானே. தமிழில் வார்த்தைகளே இல்லையென்கிற போதும், பயன்பாட்டுத்தமிழில் புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தினால் நிகழ்கால அர்த்தம் கிடைக்காது எனத் தோன்றும் போதும் வேற்றுமொழிச் சொற்களை தமிழ் இலக்கண விதிகளுக்குப் பொருந்துமாறி பயன்படுத்தினால் தவறில்லை என அனுமதிக்கலாம். எழுத்தாளர்களுக்கும் தமிழ்மொழி தனது தனித்த அடையாளத்தோடு இருப்பது விருப்பமான ஒன்று தானே. அவர்கள் தமிழின் எதிரிகளா என்ன?
இங்கு வந்தபோது பேச்சுத்தமிழ் கற்பிப்பது எளிதான ஒன்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. கவிதை உணர்த்தும் உணர்வு, நாடகத்தில் ஒரு பாத்திர உருவாக்கப்பின்னணி, நாவலின் பாத்திரம் அவ்வாறு இருப்பதற்கான இருப்பியல் காரணங்கள், பெண் உடலின் அங்கதத் தொனி, மொழியின் உள்ளார்ந்த அர்த்த வெளிப்பாட்டின் வழியாக எழுப்படும் தரிசனங்கள் என இலக்கியத் திறனாய்வு சார்ந்து பேசுவதும், மார்க்சியத் திறனாய்வின் அடிப்படைகள், நவீனத்துவ மனிதனின் பிளவு மனம், தலித்தியக் கலகத்தின் போதாமை, பின் நவீனத்துவக் கேளிக்கை எனச் சல்லியடிப்பதை விடத் தலைவரைச் சிங்கத்திடமிருந்து காப்பாற்றும் நபரைக் கண்டுபிடிப்பது  அவ்வளவு சுலபமல்ல என்பது உங்களுக்கும் தெரியும் தானே?  

1 comment :

மணிவானதி said...

பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.வார்சாவில் உங்களிடம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு என் வணக்கங்கள்,வாழ்த்துக்கள்.
மாணவிகள் கேட்கும் வித்தியாசமான வினாக்களுக்குச் சிறந்த விளக்கம் அளித்துள்ளீர்கள்.
உங்கள் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.