காத்துக்கொண்டிருக்கும் பெண்கள்


காத்துக் கொண்டிருக்கும் பெண்கள் என்பது  தமிழ் இலக்கியத்தின் அடிப்படையான அடிக்கருத்து(Motif ) களில் ஒன்று. ஓதல், தூது, பகை காரணமாகப் பிரிந்து செல்லும் தலைவனுக்காகக் காத்திருக்கும் தலைவிகளைத் தமிழ்ச் செவ்வியல் கவிதைகள் விதம்விதமாக எழுதிக் காட்டியுள்ளன.  அன்பின் ஐந்திணைகளில் ஒன்றாகச் சொல்லப்படும் முல்லைத் திணையின் உரிப்பொருள் இருத்தல். முல்லையிருத்தலைப் பற்றிய விளக்கத்தைச் சொல்லும் உரையாசிரியர்கள்   ஆற்றியிருத்தலும் ஆற்றாதிருத்தலும் என இரண்டுவகைப்பட்டதாகச் சொல்வார்கள். பிரிவில் தலைவியும் தலைவனும் பிரிந்திருந்தாலும், தலைவன்களின் பிரிவினைவிடத் தலைவிகளின் பிரிவுத்துயர்களே அதிகம் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாகப் போர்க்களத்திற்குச் சென்ற தலைவன் வருவானா? சொன்னநாளில் வருவானா? ஒருவேளை வராமலேயே போய்விடும் வாய்ப்புகளும் இருக்குமோ என்ற தவிப்போடு காத்திருக்கும் தலைவிகளைச் செவ்வியல் கவிதைகளில் வாசிக்கமுடியும்.


அகக்கவிதைகள் சார்ந்த பிரிவே பின்னர் பக்திக்கவிதைகளில் இறைவனின் மீதுகொண்ட காதலில் பிரிந்திருக்கும் துறையாகப் பேசப்பட்டது. பக்திக் கவிதைகள் எழுதிய ஆழ்வார்களும் நாயன்மார்களும் பிரிவுத்துயரைப் பக்தியாக மாற்றிப் பேசிய கவிதைமரபு தமிழ்க்கவிதை மரபு. புறக்கவிதைகளில் மிகக்குறைவாக பிரிவுத்துயரம் இடம்பெற்றுள்ளன என்றாலும் போரின் காரணமாகப் பிரிந்திருக்கும் பெண்களின் கூட்டத்தைக் கலிங்கத்துப் பரணியில் விரிவாகக் காட்சிப்படுத்தியிருப்பார் செயங்கொண்டார். 
பழையன இருக்கட்டும் நிகழ்காலத்திற்கு வரலாம். நிகழ்காலத்தில் போரினால் ஏற்பட்ட பெரும் பிரிவுகளைத் தாங்கிய பெண்களைச் சந்திக்க விரும்பினால் நாம் தேடிப்படிக்க வேண்டிய கதைகள் இலங்கைத் தமிழ்க் கதைகள் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. முப்பதாண்டுகாலப் போரில் சொல்லிவிட்டுப் போன புதல்வர்களையும் சொல்லாமல் போன புதல்வர்களையும் ஈழத்துக் கவிதைகளிலும் கதைகளிலும் வாசித்திருக்கிறேன். இப்போது உங்களுக்கு இரண்டு கதைகளை அறிமுகம் செய்கிறேன். அந்த இரண்டு கதைகளும் இடம்பெற்றுள்ள தொகுப்பின் பெயரே போர்க்காலக் கதைகள் தான். (போர்க்காலக்கதைகள், தி.ஞானசேகரன் ( தொ.ர்) 32/9 ஆற்காடு சாலை, சென்னை-24/ஞானம் பதிப்பகம், கொழும்பு -06, இலங்கை) இரண்டு கதைகளில் ஒன்று முழுமையும் ஒருகடித வடிவில் இருக்கிறது. காணாமல் போனவனுக்கு ஒரு கடிதம்,(105-111) என்ற தலைப்பில் அமைந்த அந்தக் கதை இப்படித் தொடங்குகிறது:
அன்பான உங்களுக்கு -
இதுவரை எழுதாமல் தவித்து உள்ளுக்குள் பூட்டிப்பூட்டி ஒழித்து வைத்து, தாங்கமுடியாமல் போன ஒரு கணத்தில் கொட்டிவிடுகிறேன். எல்லாவற்றையும் எல்லாவற்றையுமே, உங்கள் முகவரி குறிப்பிடப்படாமையாமல் பலபேரின் பார்வையில்பட்டு இந்தக் கடிதம் படாத பாடுபடப் போகிறதெனத் தெரிந்தும்கூட.
-------இப்படி ஆரம்பித்த அந்தக் கதை,
“வேறென்ன..? உங்கள் முகவரி எனக்குத் தெரியாமல் போயினும் எனது முகவரி நீங்கள் அறிந்ததுதானே. ஒரே ஒருமுறையாவது எனது துன்பங்களை அறிந்த பிறகாவது, மனதுக்கு ஆறுலாய்ப் பதில் போடமாட்டீர்களா? நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்றாவது
இப்படிக்கு
என்றும் உங்களவள்
== என்று முடிகிறது. இந்தத் தொடக்கத்திற்கும் முடிவுக்குமிடையே அந்தப் பெண்ணின் தவிப்பும், காதலும்,  வாழ்க்கை பற்றிய புரிதலும், கணவனை அனுப்பிவிட்டுக் கலங்காமல் இருக்கும் மனமும் தைரியமும் வெளிப்படும் சில பகுதிகளைப் படித்துப் பாருங்கள்.
எத்தனை வருஷங்கள்! எத்தனை வருஷங்கள் யுகங்களாய், மாறி வதைத்துக் கொண்டிருக்கின்றன. என்னைப் பிரிந்து ஒரு நிமிஷமென்றாலும் உங்களால் நிம்மதியாயிருக்க முடியாதே. இப்போது இந்த நீண்ட நிம்மதியற்ற வருஷங்களுக்கிடையே நீங்கள் எப்படி நெருக்குண்டீர்கள்? உங்கள் நினைவாய் நீங்கள் எனக்கு விட்டுப்போன எங்கள் செல்லமகள் தேன்கவி, வளர்ந்துகொண்டிருக்கிறாள்.
------------
வருகிற கிழமை அப்பாவின் திவசம் வருகிறது. உங்களுக்கு அப்பா போனது தெரியாது என்ன, நீங்கள் போனபிறகு இரண்டு வருஷத்துக்கு உயிரோடிருந்தார். அதற்குப்பிறகு “ டயபிட்டீஸ் கூடி அப்பாவுக்கு ஒரு காலை எடுக்கவேண்டி வந்தது. அதன்பின் தான் வீட்டுக்குப் பாரம் பாரம் என அப்பா நொந்து சொல்லிக் கொண்டிருந்தார். வாழ்தலினானான விருப்பம் அற்றுப்போனமாதிரி.. பிறகு அப்பா கணகாலம் வாழவில்லை.
------------------
அடியிலிருந்து உங்களது கல்யாணப்பட்டு வேட்டியின் விளிம்போரம் நீளவாக்கில் எலி தின்றுவிட்டது. அந்த எலியின் மேல் ஆத்திரம், ஆத்திரமாய் வந்தது. கையில் அகப்பட்டதை எடுத்து எறிவதற்குள் எலி கீச்சுக் கீச்சென்று கத்தியபடி மறைந்துவிட்டது
‘ உன்ரை கலியாணச் சீலையளைப்பார்பிள்ளை, அரிச்சுக்கொட்டிப் போட்டுதோவெண்டு..”
அம்மா சொல்ல எனக்கு எனக்கு ஆத்திரமும், அழுகையுமாய் வந்தது. உங்களுடையது போயிற்று. இனி எனக்கெதற்குச் சேலையும், அணிகலனும்? அம்மாவைக் கோவித்து என்ன பலன். என்னுடைய விதிக்கு.
இந்தத் தைரியமான பெண்ணைக் கலங்க வைக்கும் ஒன்றாக இருப்பது அவளின் தனிமையைச் சமூகம் பார்க்கும் பார்வைதான். தனித்திருக்கும் - கணவனைப் பிரிந்திருக்கும் ஒரு பெண், பாலியல்ரீதியாகத் தன்னை இன்னொருவனுக்குத் தரத்தயாராய் இருப்பாள் என நினைக்கும் சமூகத்தின் பொதுப்பார்வை அவளது மனத்தைரியத்தைக் கலங்கடிப்பதையும் அந்தக் கடிதத்தின் வரிகளாக அவள் எழுதுகிறாள். அந்த வரிகளைப் படிக்கும்போது காத்திருத்தலின் துயரமும் பெருவலியும் வாசிப்பவர்களை வந்து தாக்குவதைக் காணலாம்.
நீங்கள் காணாமல் போனபிறகு கூடுதல் அக்கறை காட்டியவனு அவன் தான். கொஞ்சநாட்களுக்கு எதுவும் வித்தியாசமாய்த் தெரியவில்லை. வித்தியாசமாய்த் தெரியவில்லையா அல்லது உங்களைப் பற்றிய கவலை அதைக் கவனிக்க வைக்கவில்லையோ தெரியவில்லை. ஒருநாள் சாடையாய் உமா என்னிடம் கேட்டாள். ஒருநாள் சாடையாய் உமா என்னிடம் கேட்டாள். “தவனீதனிடம் உனக்கென்ன அப்படி அக்கறை? என்று. நான் அதிர்ந்துபோய் அவளைப் பார்த்தேன். அவள் என்னை நேராகப் பார்க்கவில்லை. எங்கேயோ பார்த்துக் கொண்டு  அலுவலகத்தில் தாறுமாறாய் கதை உலவுவதாய்ச் சொன்னாள். உமாவுக்கு என் நலனில் அக்கறை உண்டு. அவள் சொல்வதை நம்பாமல் இருக்க முடியவில்லை.
=============
காணாமல் போன கணவன் வரக்கூடுமென ஆற்றியிருந்த பெண்ணின் மன உணர்வுகளுக்கு மாறான பேரழுகையைச் சொல்லும் கதையாக இருக்கிறது தாமரைச் செல்வியின் அடையாளம் கதை. (42-48) அந்தக் கதையின் தொடக்கத்தை வாசித்தால் யார் கூற்றாக கதை நகர்கிறது என்பது புரியலாம்:
இன்றைய பொழுது மிகவும் கவலையான மனநிலையுடன் ஆரம்பித்ததில் எனக்கும் வருத்தம் தான். என்றைக்கு காவல் பணிமனையினுள் நீலச்சிருடையுடன் ஒரு பணியாளனாய் நுழைந்தேனோ அன்றையிலிருந்தே என் மன உணர்வுகளைச் சமனப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் இன்றைய பொழுதுபோலவே பலபொழுதுகளில் அந்தச் சமப்படுத்துதல் எனக்குள் நிகழாமலே போய்விடுகிறது.  
இந்தக் கதை ஆரம்பத்தில் யாருடைய கூற்று என்பது மட்டும் வெளிப்படவில்லை. கதையின் ஒவ்வொரு நிகழ்வும், ஒரு காவல் துறைப் பணியாளரின் மன உணர்வையே குலைத்துப் போடும் நிகழ்வுகள் என்பதையும் காட்டிவிடுகிறது. நிகழ்வுகள் சிலவற்றை வாசித்தாலே கதையில் காட்டப்படும் அல்லது கண்டுபிடிக்கப்படும் அடையாளங்கள் என்பன உயிர்வாழ்தலுக்கான அடையாளமல்ல; செத்துப் போன மனிதர்களின் எலும்புக்கூடுகளை அடையாளப்படுத்தும் நிகழ்வுகள் என்பது புரியவரும்.
கதை நிகழும் அந்தக் காவல் நிலையம் இருக்கும் பகுதி கிளிநொச்சிப் பகுதி என்ற தகவலோடு விரியும் முதல் நிகழ்வு: .
கிளிநொச்சி நகரத்தை மீட்டெடுத்த இந்த ஒருவருட காலமாக இப்படி எத்தனை எலும்புக்கூடுகளைக் கண்டு எடுத்தாயிற்று. வாய்க்கால் கரைகளில், பற்றைகள் மூடிக்கிடந்த கொல்லைப்புறங்களில்.. மலசலக்கூடங்களின் குழுகளில்.. கிணறுகளின் அடியில்.. அதுவும் நகரத்திற்கு மக்கள் திரும்பிக் கொண்டிருக்கும் இந்த நாட்களில்.. அதிகமாகவே கண்டுபிடிக்கப்படுகிறது.
====== சில நாட்கள் கழித்து ஒரு எலும்புக்கூட்டின் அடையாளங்காணல்.
இளவயது மனிதன் இவனுடைய பெயர் பரமுவாகவோ, பாலச்சந்திரனாகவோ இருக்கலாம். இவனுக்கு ஓர் இளம் மனைவி இருக்கக் கூடும். இரண்டோ மூன்றோ குழந்தைகளும்கூட. மூன்றோ நான்கோ வருஷங்களாய் இவனைக் காணாமல் அவர்கள் எவ்வளவு தவித்துப் போயிருப்பார்கள்.
======= இப்படி அடுத்தடுத்து வந்து தன் கணவனைக் காணாமல் போன அந்தப் பெண் கடைசியில் வருகிறாள்:
போனதடவை இந்தப் பெண்ணுடன் எட்டுவயதுப் பையனும் வந்திருந்தான். எலும்புக்கூட்டைக் கண்டுவிட்டு அவன் பயந்து அலறிய, அலறலில் கட்டடமே ஆடிப்போய்விட்டது. இன்றைக்கு அவனைக் கூட்டிவராமல் முதியவரோடு வந்திருந்தாள்
===
தனது கணவர்களை, தமது பிள்ளைகளை எப்போதோ ஒரு நாளைக்கு எலும்புக்கூடாகவேணும், மீட்டுத் தரப்போகின்ற ரட்சகர்களாக எங்களை நினைத்துத் தங்களது துயரக் கதைகளைக் கொட்டித் தீர்ப்பவர்களும் இருக்கிறார்கள். காணாமற்போன தங்கள் உறவுகள் உயிரோடு இருக்கிறார்களா, அல்லது இறந்துவிட்டார்களா என்று இருகேள்விகளுக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்
கதையின் முடிவில் அவள், தனது கணவனை- கணவனின் எலும்புக்கூட்டைக் கண்டுபிடித்துவிட்டாள். அவள் கண்டுபிடித்தது எதற்காக? இப்படியொரு கதறலைத் தந்துவிட வேண்டும் என்பதற்காகத் தானோ?
“ அய்யோ என்ர அவர்தான். இது என்ர அவர்தான் என்ர கடவுளே...” அந்தப் பெண்ணின் ஓவென்ற அலறல் சுவரெங்கும் மோதி அறைந்து ஒலித்தது.
இலங்கைத் தமிழர்களின் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து நடந்த ஈழப்போரின் பின்னணியில் எழுதப் பெற்ற ஏராளமான கதைகளில் இருபதை மட்டும் தேர்வு செய்து தொகுத்துள்ள தி. ஞானசேகரன், அந்தப் போரின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை விரித்திருக்கிறார். பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதப்பெற்ற இந்தக் கதைகளுக்குப் பின்னும், ஈழ மண்ணில் போர்கள் நடந்தன; மனிதர்கள் காணாமல் போனார்கள்; கூட்டங்கூட்டமாய் மாண்டும் போனார்கள்.
காணாமல் போனவர்களும் மாண்டுபோனவர்களும் திரும்பவும் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் பெண்களின் வாழ்தல் அங்கே உண்மையாகவும் இருக்கிறது; எழுத்தாளர்களின் கதைகளில் புனைவுகளாகவும் ஆகிக் கொண்டிருக்கின்றன. ஒருவழியாகப் போர் முடிவுக்கு வந்தபின் போர்க்காலச் சிறுகதைகள் குறைந்து போர்க்கால நாவல்கள் எழுதப்படுகின்றன. ஈழப்போர் பற்றிய எழுத்துகள் நவீனச் செவ்வியல் எழுத்துகளாக மாறிக் கொண்டிருக்கின்றன; அதனை வாசிக்கும் மனிதர்கள் இலக்கியமாக அதனைக் கொண்டாடலாம். ஆனால் காணாமல் அவளோட கணவனின் எலும்புக்கூட்டைக் கண்டு கதறி அழுவதுபோல நமது மனம் கதறுவதிலும், சோகத்தைப் புரிந்துகொள்வதிலும் இருக்கிறது இலக்கிய வாசிப்பு.


கருத்துகள்

கோ.புண்ணியவான் இவ்வாறு கூறியுள்ளார்…
காத்திருத்தலை மையமாக வைத்து சங்ககாலந்தொட்டு சமீக கால வரலாற்றை மிகக் காத்திரமாகப் பதிவு செய்திருகிறீர்கள். அதலும் சங்க கால வரலாறு மிக பழைய கதையாகி விட்டதால் பெண்களின் காத்திருத்தல் இலக்கியமாகவே நின்றுவிட்டது. ஆனால் ஈழப் பெண்களின் காத்திருத்தலின் பரிதவிப்பு ரத்தமாக கசிகிறது. இந்தத் தொகுப்புகளை எப்படிப் பெறுவது என்று மனம் தவித்தாலும் அதனை வாசிக்கும் மனத்திடம் வருமா எனபதில் எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

கோ.புண்ணியவான்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்