June 03, 2014

மனிதநேயமும் நடப்பியல் வாதமும் :

மனிதநேயம் (Humanism) என்பது அடிப்படையில் தனிமனிதனின் கௌரவம் மற்றும் பெருமதியைக் குறித்த ஒரு தத்துவப் பார்வை. அதன் அடிப்படைக்கூறு, மனிதர்களுக்குள் செயல்படும் அறிவார்ந்த தன்மையையும் நல்லனவற்றிற்கும் உண்மைக்கும் பொறுப்பாக இருக்கும் குணங்களையும் கண்டறிந்து சொல்லுவது. இதன் தொடக்கம் 15 ஆம் நூற்றாண்டு.
மேற்கு ஐரோப்பிய நாடுகளின்  கலை இலக்கியவாதிகள், கிரேக்க, ரோமானிய செவ்வியல் இலக்கியங்களை மறுமலர்ச்சிக் கால வாசிப்புக்கு உட்படுத்தியபின் அவற்றின் ஊடாகக் கிறிஸ்தவ சமயத்தின் பொருத்தப் பாடுகளைப் பற்றி விவாதிக்கும்போது  ‘மனிதநேயம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர். அதற்குப் பிறகு கலை இலக்கியச் சொல்லாடல்கள் அதிகம் பயன்பட்ட வார்த்தையாக  ஆனது..
இத்தாலியின் பின்னிடைக்கால எழுத்தாளர்களான தாந்தே, க்ளோவன்னி பொக்காஸியோ, ப்ராங்செஸ்கோ போன்றவர்கள் மனிதநேயம் என்பதைத் தோற்றுவித்து அதற்கான படைப்படையாளங்களையும் உருவாக்கியவர்கள்.1453-ல் இன்றைய இஸ்தான்புல் (அப்போதைய காண்ஸ்டாண்டின் நோபிள்)நகரில் தோற்றுவிக்கப்பட்ட பிளாட்டினிக் அகாடமி மனித நேயக்கருத்துருவாக்கம் உருவாவதற்குக் காரணமாக இருந்தது. அதன் நிறுவனர் மார்சில்லோ ஃபிஸினோ போன்றவர்கள் கலை இலக்கியச் செயல்பாடுகளில் மனிதநேயம் வெளிப்பட வேண்டும் எனவலியுறுத்திப் பேசினர்.
பிரான்ஸ் நாட்டில் மனிதநேயம் அறிமுகமா பொழுது அதனை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றிய அறிஞர் டச் கிளரிக் டெஸிடெரஸ் எராஸ்மஸ்க்ஷ் . இவரே இங்கிலாந்திலும் மனிதநேயக் கருத்தோட்டம் அறிமுகமாகக் காரணமாகவும் இருந்தார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எராஸ்மஸ்ஸால் அறிமுகப் படுத்தப்பட்ட மனிதநேயம் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் செவ்வியல் இலக்கிய வல்லுநர்களான வில்லியம் க்ரொசின், தாமஸ்லினாக்ரெ போன்றவர்களால் உறுதியான வரையறைகளுடன் உருவாக்கப்பட்டது. பல்கலைக்கழகங்களுக்குள் நுழைந்த மனிதநேயக்கருத்தோட்டம் எலிசபெத்தியன் இலக்கியங்களின் வழியாகவும் பண்பாட்டின் வழியாகவும் ஆங்கிலம் பேசப்பட்ட நிலப்பரப்பெங்கும் பரவியது. ஐரோப்பிய இலக்கியத்தின் மிகமுக்கியமான காலகட்டம் மனிதநேயம் சார்ந்த மறுமலர்ச்சி காலகட்டம்தான். தொடக்கத்தில் பொத்தாம் பொதுவான மனிதநேயம் எனப் பேசிய இலக்கியங்கள் பின்னர் படிப்படியாக உழைக்கும் மக்களின் சார்பான மனிதநேயமாகவும் பெண்களின் சார்பான வெளிப்பாடுகளாகவும் மாறியது உலக இலக்கியத்தின் வரலாறு.
ஆங்கிலக் கல்வி மற்றும் சிந்தனைமுறைமேல் இன்று நம்மில் பலருக்கும் பலவிதமான காரணங்களுக்காக விமரிசனங்கள் இருக்கக் கூடும். ஆனால் அவை தான் இந்திய மனிதனை உலகச் சமுதாயத்திற்குரியவனாக ஆக்கியது என்பதை மறுத்துவிடமுடியாது. ஆங்கிலேயர்களின் இந்திய வருகைக்குப்பின்னால் வணிகநோக்கமும் காலனியாதிக்க விருப்பங்களும் இருந்தன. அதன் காரணமாக இந்தியப் பொருளாதார வாழ்வு எதிர்பாராத மாற்றங்களைச் சந்திக்க நேர்ந்தது. ஆனால் பண்பாட்டு வாழ்வில் அதன் தாக்கம் பலவிதமான நேர்மறையான அம்சங்களை உண்டாக்கிவைத்தன. ஆங்கிலக் கல்வி அதன் மொழியினூடாக வளமான இலக்கியப் பக்கங்களையும் இந்தியர்களுக்கு அறிமுகம் செய்தது. குறிப்பாக ஷேக்ஸ்பியரின் நாடகங்களும் ஐரோப்பாவின் மனிதநேயக் கவிகளும் அறிமுகமானதை எதிர்மறை அம்சங்களாக இன்றும்கூடக் கணித்து விட முடியாது. அந்த அறிமுகத்தின் பின்விளைவுகளே பாரதியும் புதுமைப்பித்தனும் திராவிட இயக்கச் சிந்தனைகளும்.
விடுதலைக்குப் பிந்திய இந்திய எழுத்துகளில் அனைத்துத் தரப்பினரும் மனிதநேய நிலைப்பாட்டோடு எழுதினர் என்றாலும், இடதுசாரிக் கருத்தியலை அறிந்த எழுத்தாளர்கள் தன்னுணர்வுடன் பின்பற்றினர். தன்னுணர்வின்றி நிகழும் சூழலுக்கேற்பச் சார்பெடுக்கும் வலதுசாரிகளிடம் அத்தீவிரம் இருந்ததில்லை. உலகம் முழுக்க இடதுசாரி அரசியல் மீது விமரிசனங்கள் எழுந்தபோது மனிதநேயக் கருத்தியல் மற்றும் எழுத்துகள் மீதும் விமரிசனங்கள் எழுப்பப்பட்டன. மனிதநேய எழுத்தின் வெளிப்பாட்டு வடிவமாக நடப்பியலே அதிகமாக இருக்கிறது. எனவே நடப்பியலும் மனிதநேயமும் கூடுதலான விமரிசனங்களை எதிர்கொண்ட போக்குகளாக எங்கும் அல்லாடிக் கொண்டே இருக்கின்றன. என்றாலும் தவிர்க்க முடியாதனவாக இருக்கின்றன.No comments :