மருமகள்கள் என்னும் ‘வந்தேறிகள்’

பெண் மையக்கதைகளின் மையவிவாதம் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது என்பதற்கு இதை உதாரணமாகச் சொல்லலாம். ஆண்களால் எழுதப்பட்ட கதைகளானாலும் பெண்களால் எழுதப்பட்ட கதைகளானாலும் இப்போதெல்லாம் கூட்டுக்குடும்பச் சிக்கல் முக்கியமான  பிரச்சினையல்ல.  அந்த மையம் நகர்ந்து கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. கதைகளின் மையமாக இல்லாமல் நகர்ந்து விட்டதால் அந்தப் பிரச்சினையைத் தமிழ்ச்சமூகம் தீர்த்துவிட்டது என்றும் பொருளில்லை. எல்லாவற்றையும் சரிப்படுத்தித் தீர்வுகண்டு ஏற்றுக் கொண்ட சமூகமாக ஆகிவிட்டது என்றும் நினைக்கவேண்டியதில்லை. அந்தப் பிரச்சினைகள் இன்னும் இந்திய/ தமிழ்ச் சமூகத்தின் பிரச்சினைகளாக இருந்துகொண்டுதான் இருக்கின்றன. செண்பகம் ராமசுவாமியும் அசோகமித்திரனும் எழுதிக்காட்டிய விதத்தைப் பார்க்கலாம்.
அந்தப் பிரச்சினை என்பது கூட்டுக்குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உருவாகும் உரசல்கள். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் மருமகள்களாக ஒரு பெண் ஒருவீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்குள் வந்தேறும் பிரச்சினை. இந்தப் பிரச்சினையை இப்போது தமிழ்ப்புனைவெழுத்தும் எழுத்தாளர்களும் தாண்டுகிறார்கள்; கடக்கிறார்கள்; முன்னேறுகிறார்கள். இந்திய/ தமிழ்ச்சமூகம் அங்கேயே நிற்கிறது. ஆனால் அப்படியே நிற்கிறது என்பதும் உண்மையில்லை. கால்நூற்றாண்டுக்கு முன்னால் விவாதிக்கப்பட்டதால் சில நெகிழ்ச்சிகளும் கொஞ்சம் புரிதல்களும் ஏற்பட்டிருக்கின்றன. கலை, இலக்கியங்கள் சமூகத்தளத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

இப்போதும் பெண் மையக்கதைகள் எழுதப்படுகின்றன. அவை கூட்டுக்குடும்பச் சிக்கல்கள் என்னும் விவாதப்பொருளைத் தாண்டி வெகுதூரம் வந்துவிட்டன. தனிமனிதனான ஆணும், தனிமனுசியான பெண்ணும் இணைவதில் ஏற்படும் உறவின் சிடுக்குகளும், அச்சிடுக்கின் தொடர் பரிமாணங்களுமாக இப்போதைய விவாதங்களைச் சொல்லலாம். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள மறுக்கும் போக்கும் ஒரு ஆணைப்போலவே பெண்ணுக்கும் நட்பும் காதலும் காமவிருப்பமும் ஆசைகளும் இருக்கும் என்பதை முன்மொழியும் சொல்லாடல்களும் இப்போதைய கதைகளின் மையவிவாதங்களாக ஆகியிருக்கின்றன.

ஒரு வீட்டிற்கு இன்னொரு வீட்டிலிருந்து ‘மருமகளாக’ வருபவளின் தவிப்பைப் பலவிதமாக எழுதிக் காட்டிய கதைகளை இப்போது 50 வயதைத்தாண்டியவர்கள் பலப்பலவாய் வாசித்திருப்பார்கள். புக்ககம், புகுந்தவீடு, என்னும் வெளிகளில் நிகழ்வுகளை உருவாக்கிக் கதாபாத்திரங்களை உலவவிட்ட கதைகளை, 1970 களிலும் 80 களிலும் பெண்ணியத்தின் முன்வைப்பாகப் பெண் எழுத்தாளர்கள் எழுதிக் காட்டினார்கள். பெண்ணிய ஆதரவு நிலைப்பாட்டோடு ஆண் எழுத்தாளர்களும் எழுதிக்காட்டினார்கள். எப்போதும் அம்மா பிள்ளைகளாக இருக்கும் கணவன்களைக் கண்ணீரோடு எதிர்கொள்ளும் மனைவிகளாகப் பெண்கள் சித்தரிக்கப்பட்டார்கள். குடும்ப அமைப்புக்குள் ஏற்கெனவே இருக்கும் பெண்களான மாமியார், நாத்தனார்களிடம் புதிதாக ‘வந்தேறிய’ மருமகள்கள் பட்ட பாடுகள் விதம்விதமானவை. மாமியார்- மருமகள்; மருமகள்- நாத்தனார்; உரசல்களை நுட்பமாக எழுதிய கதாசிரியர்களில், மருமகளின் பக்கம் நின்று வாதாடிய எழுத்தாளர்கள் முற்போக்கு நிரம்பிய எழுத்தாளர்களாகக் கருதப்பட்டார்கள். மாமியாருக்கு விட்டுக்கொடுத்து அனுசரிக்கும் மருமகள்களை எழுதியவர்கள் இருப்பை நிலைப்படுத்தும் எழுத்தாளர்களாகக் சித்திரிக்கப்பட்டார்கள். மாமியார்களின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமெனச் சொன்னவர்கள் பிற்போக்குக் கதாசிரியர்களாகக் கணிக்கப்பட்டார்கள்.


எண்பதுகள் வரை இருந்த இந்தப்போக்கு, தொண்ணூறுகளில் மேலும் நகர்ந்து மாமனார்- மருமகள், மருமகள் - கொழுந்தன் என்ற முரணுக்குள் நுழைந்தன. நகர்வுகள் பலப்பலவாக இருந்தாலும், விவாதப்பொருளாக இருந்தது கூட்டுக்குடும்பம் என்னும் அமைப்புதான். இங்கே இரண்டு கதைகளை உங்கள் முன்னே வைக்கிறேன். முதல்கதை எழுபதுகளின் கதை. எழுதியவர் செண்பகம் ராமசுவாமி. கதையின் தலைப்பு: பொருதகர்

அந்தக் கதை மாமியார் - மருமகள் உறவில் இருக்கும் மிகநுட்பமான ஆதிக்கத்தைப் படிப்படியாக விவரிக்கும் கதை. அந்தக்கதையின் தொடக்கம் ஒளிவுமறைவில்லாமல் நேரடியாக விவாதத்தை தொடங்குவதாக ஆரம்பிக்கிறது:“ வாழ்க்கைத் துணை என்று புருஷன் பெண்டாட்டியை மட்டும் சொல்லும் பயித்தியக்காரத்தனத்தை என்ன சொல்வது?’ ஒரு பெண்ணுக்கு புருஷன் வீட்டிலே இருக்கிற எல்லோரும் தான் வாழ்க்கைத்துணையாகவோ, வயிற்றெரிச்சல் துணையாகவோ நிரந்தரமா அமைஞ்சுடறப்போ, சினிமா டூயட்டை மட்டும் மனசிலே வச்சுக்கிட்டு எல்லோரையும் விட்டுட்டு ரெண்டு பேர் மட்டும் தனியா வாழ்ற மாதிரி என்ன பேத்தல் வேண்டிக்கிடக்கு. வாழ்க்கைத்துணை அவரா, என் மாமியாரா என்பது எனக்குப் புரியவே போறதில்லை.
 
******* ******* *******
மருமகளை அந்த வீட்டின் உறுப்பினராக ஏற்கத்தயாராக இல்லாததை ஒவ்வொரு செயலிலும் நுட்பமாகக் காட்டும் சாதுர்யமான மாமியாரை அந்தக் கதையில் நாம் வாசிக்க முடியும். தன்னைத் தன் கணவனிடம் போட்டுக்கொடுக்கும் காரியத்தைச் செய்யும் மாமியாரின் திறமையை எழுதும் மருமகளின் கூற்றாகவே கதை நகர்கிறது. கதையின் தொடக்க நிகழ்வு இதுதான்:
“கோதுமை மாவு ரொம்பநாளா (அரைச்சு ரெண்டுநாள் தான் ஆகிறது!) சலிக்காம கெடந்தது, சலிச்சேன்! இப்ப என்ன அதுக்கு.
******* ******* *******
இவள் ஏன் இப்படி இருக்கிறா? தன்னால் முடிந்தபடி இருப்பது என்ற வெளிப்படையே இவளிடம் இல்லையே!. ஒவ்வொருத்தரிடமும் மனதைக்கவரும்படி மென்மையாகப் பேசி இம்ப்ரஸ் பண்ணுவதை ஒரு அற்புதமான கலையாக இவள் எப்படி வளர்த்திருக்கிறாள். ஆள் மறைந்தவுடன் இந்த நடிப்பு மறைந்துவிடும். பின்னால் இவள் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்க முடியாது.
“ இவளுக்கு நல்ல கொண்டாட்டம்தான்!” மாவுக்குவியலில் அவளும் ஹால் சோபாவில் நானும். “மனுஷருக்கு இது போதாதா!” இப்படி நினைத்தபடி ராதா மெல்ல எழுகிறாள்.
******* ******* *******
மகனிடம் எல்லாவற்றையும் இயல்பாகச் செய்வதுபோலத் தன்னை மாட்டிவிடும் மாமியாரைப் பற்றிய நினைவலைகளும் தொடர்நிகழ்வுகளும் காரணங்களும் தான் பொருதகர் என்னும் தலைப்பிலான கதை. மோதிப் பார்த்துவிடத்துடிக்கும் மனத்தை மாற்றிப் பொருத்துப் போகும்படி செய்தது அந்தப் பெண்ணின் அம்மாவின் வார்த்தைகள். திரும்பத் திரும்ப நினைத்துக்கொள்ளும் அந்த வார்த்தைகள் :
அம்மா அனுபவசாலி. மாமியார் மாதிரி இங்கிலிஷ் பேப்பர் படிக்கத் தெரியாது. ஆனாலும் இங்கிதமா ஒண்ணு சொல்லிவச்சா. “ராதா உன் மாமியார் பாவம்! சின்ன வயசிலே சந்தோஷமா இருந்ததேயில்லை. அவ ஆம்படையான் , அதான் உம் மாமனாரைப் பத்தி எல்லாம் கேள்விப்பட்டிருப்பியே! சாமியாராட்டம் ஏதோ ஆசிரமத்திலேயே இருந்து செத்தார். அத்தனை கசப்பும் இவ நெஞ்சிலிருந்து எப்படி போகும்? அதுதான் உன்னைப் பார்த்து இப்படி நெஞ்சுக்குள்ளே கரிக்கிறா! பார்த்தும் பார்க்காமப் போயிடு! என்ன செய்யறது”
******* ******* *******
அம்மா பொறுமை காக்கச் சொன்னதில் ஒரு மனோவியல் இருக்கிறது. சமூக மனிதனாகத் தன்னைக் காட்டிக்கொள்ள நினைக்கும் கணவனுக்காக நவீன உடைகளுக்கும், புதுமோஸ்தர் பழக்கவழக்கங்களுக்கும் மாறிய ராதா, கணவனோடு சேர்ந்து வெளியில் போவதில் தொடங்கி, சமூக நடைமுறைக்காக மது அருந்துவது வரை ஏற்றுக் கொண்டவளாக மாறுகிறாள். அந்த மாற்றம் எந்தவிதக்குற்றவுணர்வுமில்லாமல் நடக்கிறது. ஆனால் அவரது மாமியாரிடம் இருப்பது தயக்கம்; ஏமாற்றம், தனக்குக் கிடைக்காதது, இவளுக்குக் கிடைக்கிறதே என்ற பொறாமை எனக் கதையின் உணர்வெழுச்சிகள் நகர்த்தப்படுகின்றன.
 
ராதா உள்ளே நுழைந்து பிரிஜ்ஜைத் திறந்து ஒரு பாட்டிலை எடுத்துத் திறக்கிறாள். “நான் இன்னும் கொஞ்சம் எடுத்துக்கிறேன்” சங்கரிடம் அனுமதி கேட்டாள்
“ ஓ.கே!” என்றான் அவன். குரலில் எந்த உணர்வுமில்லை.
******* ******* *******
ஆனாலும் பக்கத்து அறைக்குள் புழுங்கிக் கிடக்கும் மாமியாரின் காதுகளில் இந்தச் சிரிப்பு கேட்கிறது. கொடுத்து வச்சவ! ஆம்படையானோடு குஷியா இருக்கா! நான் என்னத்தைக் கண்டேன்? ஒரு நாளாவது அந்தக் குடிகார மனுஷனோட இப்படிச் சிரிச்சிருக்கேனா? அதுக்கும் ஒரு உடம்பு வேணாமா?. என் ஜென்மம் இப்படி அமைஞ்சு போச்சு. இந்த ஒரு பிள்ளை பிறந்ததே ஏதோ தெய்வ அனுகூலம்!” அவள் மனம் புலம்புகிறது. அவள் சினிமாவே பார்த்ததில்லையானாலும் படித்த இங்கிலிஷ் கதைகள் ஏராளமே! அந்த புஸ்தகக் காதல் காட்சிகளில் மகனையும் ராதாவையும் இயங்க வைத்துக் கற்பனை பண்ணிக் கொள்கிறாள், வழக்கம்போல! ஒரு நீளமான பெருமூச்சு வெளிப்படுகிறது.
 
எழுபதுகளின் நடுத்தரவர்க்கக் கூட்டுக்குடும்பத்தை எழுதிக்காட்டிய செண்பகம் நிறைய எழுதியவர் என்றாலும், அவரது எழுத்துகளில் புனைவுகள் மிகவும் குறைவுதான். அதற்கு மாறாக நிறைய மொழிபெயர்ப்புகளும், ஆய்வுநூல்களும் எழுதிய பேராசிரியர். இன்னும் நிறைய எழுதியிருக்கக்கூடியவர். ஓய்வு பெறும் வயதுக்கு முன்பே மறைந்துவிட்டார்.
[செண்பகம் ராமசுவாமி, பொருதகர், கணையாழி, 1976, முதல் மனிதனும் கடைசிமனிதனும்/ 13 -24/ காவ்யா, பெங்களூர், 1999]
 


செண்பகம் அவர்களின் கதையின் இன்னொரு பரிமாணம் போலத் தோன்றினாலும், முக்கியமான நகர்வொன்றை முன்வைத்த கதை அசோகமித்திரனுடையது. மாமியார் – மருமகள் முரண்பாட்டுக்கு மாறாக, மாமனார் – மருமகள் முரண்பாட்டை அந்தக் கதை விவாதமாக்கியுள்ளது. மாமியாரின் இடத்தைப் பிடிக்கும் மாமனாரின் சீண்டலும், வார்த்தைகளும் புத்திசாலித்தனமாக இருக்கவில்லை. அதற்கு மாறாகக் குரூரமாக இருக்கிறது. சொல்லால் அடித்துத் துவம்சம் செய்யும் ஒரு மாமியாரை முன்நிறுத்தும் அந்தக் கதையின் தலைப்பு: குற்றம் பார்க்கின். அந்தக் கதையின் போக்கை எளிமையான உரையாடல்களின் வழியாகவே நகர்த்துகிறார் அசோக மித்திரன்.  கீழே தந்திருக்கும் உரையாடல்களை வாசித்தாலே கதையின் போக்கும், கதைக்குள் குரூரம் ததும்ப நிற்கும் மாமனாரையும் நீங்கள் சந்திக்கலாம்:
 
‘ரேவதி உனக்கு உடம்பு ஏதாவது சரியில்லையா?’
 
‘ இல்லையே; நான் நல்லாத்தானே இருக்கேன்?’
 
“ஊருக்குப் போகணும்னு சொன்னதிலேந்து நீ ஏதோ மாதிரி இருக்கே”
 
அதெல்லாம் ஒண்ணுமில்லை; நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்”
 
“எப்பவும் போல் இருந்தால் சரி”
 
இருமுறை இந்தப் பேச்சு வந்துவிட்டது.

******* ******* *******

சந்திரனுக்கு அவள் சொன்னது உடனே புரியவில்லை, “என்ன சொல்றே” என்று கேட்டான்.
“நீங்களும் குழந்தையும் மட்டும் ஊருக்குப் போயிட்டு வந்துடுங்களேன். இரண்டு நாள் நான் வீட்டைப் பார்த்துண்டு இருக்கேன்.
“ என்ன பேசுறே நீ? அங்க ஒத்தாசைக்குன்னு உன்னைத்தானே கூப்பிட்டிருக்கா? நான் வரதே உன்னைக் கொண்டுவிடறதுக்குத்தானே”

******* ******* *******
“ நான் கத்தினேனா”
“ஆமாம் உன்னை குலுக்கி நான் தான் நிமிர்த்தி உட்கார வைத்தேன்”
ரேவதி சாய்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டாள்

******* ******* *******
“சரி அதுக்கென்ன?”
“ அப்பவே அப்பா கோவிச்சுண்டார்”
“எதுக்கு”
” தலைமயிரைக் கத்திரிச்சுண்டதுக்கு”
“அப்படியா”
“அப்ப அவர் சொன்னது ரொம்பக் கலக்கிடுச்சு”
“என்ன சொன்னார்”
“வேண்டாம்”
” எனக்குத் தெரியவேண்டாமா ரேவதி”
“எம் பிள்ளை போகறதுக்கு முன்னாலியே முடியை எடுத்துடறியான்னு கேட்டார்”
இதைச் சொல்லிவிட்டு ரேவதி அழ ஆரம்பித்தாள்

******* ******* *******
சந்திரன் பதில் சொல்லாது இருட்டைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய அப்பா ரேவதியிடம் கடுமையாகப் பேசியிருக்கிறார் என்று தெரிந்தது. அவனுக்குப் வருத்தமூட்டியிருக்கக்கூடிய மிகச்சிறிய விஷயத்தை மனைவி பெரிதுபடுத்துகிறாளே என்றும் சோர்வடைந்திருக்கக்கூடும். சிலமாமனார், மாமியார்கள் மருமகளை எப்படி எல்லாமோ சித்திரவதை செய்கிறார்கள். ரேவதிக்குக் கல்யாணம் முடிந்ததிலிருந்து தனிக்குடித்தனம்தான். அப்படியிருந்தும் ஒருசிறு சந்தர்ப்பம் கிடைத்தபோது மாமனார் ,அவர்  “மாமனார்” என்று காண்பித்துக் கொண்டுவிடுகிறார்.
******* ******* *******
அசோகமித்திரன், குற்றம் பார்க்கில் (1989), அசோகமித்திரன் கதைகள், 1/ 374-379/ அருந்ததி நிலையம், சென்னை, 2000
=====================================
நன்றி/ மின்னம்பலம்/ 4/4/2016

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்