July 07, 2015

தினங்களைக் கொண்டாடுதல்எல்லா தினங்களையும் கொண்டாடித் தீர்ப்பதென்று முடிவெடுத்துக் கொண்டாடி மகிழ்கின்றோம். நேற்று 06-07-2015 உலக முத்த தினம். முகநூலில்  வாசித்த முத்தக்கவிதைகளைத் தொகுத்தால் சத்தமிடும் முத்தம் என்றொரு தொகுதி நிச்சயம் கிடைக்கும். முத்தமிட்டுக்கொள்ள வாய்ப்பற்றவர்கள் சத்தமாய்ச் சொல்லிக் கவிதையெழுதியிருக்கிறார்கள். சொல்லாமல் முத்தமிட்ட ஜோடிகள் சில கோடிகள் இருக்கலாம்.

முத்தத்திற்காக என்றில்லை, மொத்தத்தில்  கொண்டாட்டம் மகிழ்ச்சியானது. நிரந்தரவலிகளில் இருப்பவர்களுக்கு கொண்டாட்டங்கள் தரும் திளைப்பு தற்காலிகவிடுதலை. பதினைந்து தினங்களுக்கு முன்பும்(21-06-2015) ஒரு தினம் வந்தது. தந்தையர் தினம். காலையிலிருந்து வாழ்த்துகள் வந்தவண்ணம் இருந்தன. ஆண்களும் பெண்களும், பெரியவர்களும் சிறியவர்களும் எனப் பலரிடமிருந்தும் வருகின்ற வாழ்த்துகளைப் புன்னகையுடன் கடத்திக் கொண்டிருந்தேன். ஆசிரியராக நினைத்து மரியாதையோடு அழைத்துக் கொண்டிருந்த பலரும் தந்தையாக நினைத்துக் கொண்டு அந்நியோன்யம் காட்டினார்கள்.
யாரோ ஒருவர் அனுப்பும் - எங்கிருந்தோ ஓர் அமைப்பிடமிருந்து வரும் - அறிவிப்பை ஏற்று நமது பாத்திரம் உருவாகிக்கொள்கிறது. காலை தொடங்கி நள்ளிரவுவரை நமது பாத்திரங்கள் ‘தந்தையர்’ என்று கட்டமைக்கப்பெற்றுவிட்டது. அதனை ஏற்று நடித்தோம்; நடிப்போம். அன்றையைப் போலவே நாம் எத்தனையோ தினங்களில் அதனதன் பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறோம்?. மகளிர் தினம்,  பெற்றோர் தினம், மூத்தோர் தினம், குழந்தைகள் தினம், ஆசிரியர் தினம், ஊனமுற்றோர் தினம், அகதிகள் தினம், வீரர்கள் தினம், தியாகிகள் தினம், காதலர் தினம், தொழிலாளர் தினம் இப்படிப்பல தினங்களும் அவற்றின் பாத்திரங்களும் வந்து போகின்றன.
அறிவிக்கப்படும் தினங்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டாடி விடுவதில்லை. கொண்டாட வேண்டிய அவசியமும் இல்லை. காரணம் ஒவ்வொன்றும் எல்லாருக்கும் நெருக்கமானதாக இருப்பதுமில்லை. அத்தோடு எப்படிக் கொண்டாடுவது என்றும் நமக்குத் தெரியாது. அவை இந்தியப் பண்பாட்டின் பகுதியாக இல்லை. அதற்குப் பதிலாக இந்திய மனத்திற்கு நெருக்கமானதாக பல தினங்கள் இருக்கின்றன. அவற்றைப் பண்டிகைகள் என அழைக்கிறோம். அவற்றையெப்படிக் கொண்டாட வேண்டுமெனவும் அறிந்திருக்கிறோம். பண்டிகைகளைக் கொண்டாட நாம் புத்தாடையும் புதுப் பொருட்களும் வாங்குவோம். சிறப்பான உணவுப் பண்டங்களைச் செய்து அல்லது வாங்கி உற்றார் உறவினரோடு உண்டு மகிழ்வது முக்கிய அம்சம். அவற்றின் கொண்டாட்ட வெளிகள் நமது குடும்பங்கள், தெருக்கள், ஊர்கள், நகரங்கள்.  குடும்பமாக, ஊராக, நகரமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகள் ஒருவிதத்தில் சமயங்களின் சடங்குகள். சடங்குகளை அல்லது பண்டிகைகளைக் கொண்டாடும் முறையைச் சமய நிறுவனங்கள் உருவாக்கித் தந்துள்ளன.
 சமயத்தின் பகுதியான பண்டிகைகளைக் கொண்டாடிப் பழகிய நமக்கு அறிவிக்கப்படும் தினங்கள் சொந்தமாகத் தோன்றுவதில்லை. பொதுவெளியில் ஏற்பாடு செய்யப்படும் கொண்டாட்டங்களாகவே இருக்கிண்றன. தேசத்தின் சுதந்திரதினமும் குடியரசுதினமும் கூடச் சமயத்தின் சடங்காக இல்லாத நிலையில் நெருக்கமானதாக ஆனதில்லை; விடுமுறை கிடைக்கும் ஒருநாள் என்பதைத் தாண்டிச் சொந்தமாகவில்லை.
அவற்றைப்போலவே உலகம் முழுவதும் கொண்டாடப்படும்  இந்தத் தினங்களும் நமக்கு நெருக்கமானவை அல்ல; ஒருவிதத்தில் அந்நியமானவை. அந்நியத் தன்மைகொண்ட இந்தத் தினங்களை எப்படிக் கொண்டாடுவது என்பதும் நமக்குத் தெரியாது.  ஆனாலும் நமது ஊடகங்களும் இணையதளத் தொடர்புகளும் அந்தக் கொண்டாட்டங்களின் பகுதியாக - பங்கேற்பாளர்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. அப்படி ஆக்குவதின் பின்னணியில் அவற்றின் பொருளாதார உறவுகள் இருக்கின்றன.
தொலைக்காட்சிகள் தொடங்கி சமூக வலைத்தளங்கள் வரை அனைத்தும் நிகழ்கால வணிகத் தொடர்புகளோடு பிணைக்கப்பட்டவை. வணிகத்திற்குப் பண்டங்கள் வேண்டும். பருண்மையான இயற்கைப் பொருட்களும் செயற்கைப்பொருட்களும் அவற்றின் தேவை. பண்டங்கள் என்பன பயன்படுபொருட்களாகவும், நுகர்பொருட்களாகவும் இருந்த வியாபாரம் பழைய வியாபாரம். ஆனால்   நிகழ்கால வியாபாரம் முற்றிலும் வேறுபட்ட பரிமாணங்கள் கொண்டவை. இதன் விற்பனைப் பண்டங்கள், பருப்பொருட்கள் (Concrete) மட்டுமல்ல; அரூபப் பொருட்களும் ( Abstract) கூட. கச்சிதமான வியாபார உத்திகளைக் கொண்டு அரூபப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் திறன்கொண்டவை புதுவகை முதலாளியம். புதுவகை முதலாளியத்தின் உற்பத்தியாளர்கள் கண்ணுக்குப் புலப்படாதவர்கள். ஆனால் நுகர்பவர்கள் யார் என்பது வெளிப்படையாகத் தெரியும். கண்ணுக்குப் புலப்படாத உற்பத்தியாளர்கள் தனி மனிதர்களின் அன்பு, பாசம், காதல், நட்பு, தியாகம், சோகம், விரக்தி போன்ற அரூபங்களைப் பண்டங்களாக மாற்றுகிறார்கள். அவற்றை வாங்கும் நுகர்வோர் திரளையும் முடிவு செய்கிறார்கள்.  இரண்டும் உறுதியான பின் விற்பனை உத்தி ஒன்று தேவைப்படும் அல்லவா? அந்த உத்திக்கான பெயர்கள் தான் இந்தத் தினங்கள்.
பிப்ரவரி 12 ,  5 ரூபாய்க்கு விற்ற ரோஜாப்பூ பிப்ரவரி 14 இல் பத்துமடங்கு விலை கூடி 50 ரூபாய் ஆகிவிடுகிறது. பிரியமான காதலிகளுக்கு காதலன்கள் ஒற்றை  ரோஜாவை மட்டும் கொடுத்தால் போதுமா? தொடரவேண்டிய காதலின் நீட்சிக்கேற்பக் கொடுக்கவேண்டிய பரிசுப்பொருட்களின் அளவும் பெரிதாகவேண்டியது கட்டாயம் அல்லவா?  போன வருடம், ஆசிரியர் தினத்திற்குச் சாக்லேட் மட்டும் கொடுத்து வாழ்த்துச் சொன்ன மாணாக்கர்கள் இந்த வருடம் ஒன்றாகச் சேர்ந்து நினைவுப் பரிசொன்றைக் கொடுத்தார்கள். ஒரே வண்ணத்தில் ஆடைகள் உடுத்திப் படம் எடுத்துக் கொண்டார்கள். அடுத்தவருடம் ஒவ்வொருவரும் ஒரு பரிசுப்பொருளைத் தரக்கூடும். கல்யாண நாளன்று கிடைத்ததைவிட விலையுயர்ந்த சேலைகள் அன்னையர் தினத்தன்று எனது மனைவிக்குக் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது.  அறிவிக்கப்படும் ஒவ்வொரு தினமும் வரும்போது அந்தந்தப் பாத்திரங்களை ஏற்பவர்களுக்கு ஏதோவொரு பரிசுப்பொருட்கள் கிடைக்கவே செய்யும். பரிசுப்பொருட்களின் விலைகள் பேரம்பேசி வாங்கப்படுவன அல்ல.
தனிமனிதர்களின் பாசங்களும் நேசங்களும் உரிமைகளும் விற்பனைப் பண்டங்களானதுபோல் பெருந்திரளின் கனவுகளும் நினைவுகளும் கூட விற்பனைப் பண்டங்களாக ஆக்கப்படும் காலம் நமது காலம். தமிழில் நவகவிதை உருவெடுத்தபோது வண்ணநிலவன் ஒரு கவிதை எழுதினார். அதன் தலைப்பு :
=====================
மெய்ப்பொருள்
===========================
எல்லாம் விலை குறித்தனவே
எல்லாம் விற்பனைக்கே
ஹே, அர்ஜுனா,
விற்பனைத் துணை கொள்
காய்ந்த விறகோ, ஹரி கதையோ
பழைய இந்து பேப்பரோ, மகனோ
கலையோ, கருமாரியம்மனோ..
வேஸ்ட் பேப்பருக்கும்
வேசிக்கும் சமவிலைதான்.
சூரியனுக்குக் கீழுள்ள
சகலமும் விற்பனைக்கே
விற்பனை செய்வாய், விற்பனை செய்வாய்.
மியூஸிக் அகாடமியில் கலை விற்பனை
கந்தவிலாஸ் கடையில் ஜவுளி விற்பனை, 
அரபுதேசத்தில் இளைஞரும்
சீரணி அரங்கில் அரசியலும்
’பாக்கு மன்னன் பூச்சி?
டிரேட் மார்க்கில் கவனம் வை.
மரமும் மகனும்
காய்த்துக் கனி தருவர்.
உட்லண்ட்ஸ் ஹோட்டலில் டிபனுற்பத்தி
பழனியில் பஞ்சாமிர்த உற்பத்தி

கலைப்படம் கான்ஸ்டாண்டி நோபிளுக்கு
கமர்ஷியல் படம் காரைக்குடிக்கு
ஐயப்பசாமிக்கும், ஐயனார் காபிக்கும்
பிராஞ்சுகள் திற,
மாடர்ன் ஆர்ட்டுக்கு மார்க்கெட் தேடு
ஓய்ந்த நேரத்தில்
நட்பு செய்தாலும்
நாய் வளர்த்தாலும் -- நல்ல 
லாபமுண்டு 

No comments :