June 03, 2014

கிராமங்களூடாகச் சில பயணங்கள்

போலந்தில் நானிருந்த  இரண்டாண்டுக் காலத்தில் ஐரோப்பிய நகரங்களைப் பார்க்க வேண்டும் என நினைத்ததை விடக் கிராமங்களைப் பார்க்கவே அதிகம் விரும்பினேன்; நினைத்தேன். நகரங்கள் பலவற்றிற்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதில் அக்கறை கொண்டதைவிடக் கிராமங்கள் சிலவற்றைப் பார்க்க வேண்டும்; அங்கே சில நாட்கள் தங்க வேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தது. போலந்தின் குறுக்கும் நெடுக்குமாக நான் மேற்கொண்ட கார்ப்பயணங்கள் அந்த ஆசையை மேலும் மேலும் அதிகமாக்கின

வானியல் அறிஞனோடு தொடர்புடைய தோரூன் சென்றபோது பனிக்குள் உறைந்து கிடந்த போலந்து கிராமங்களைக் கண்ணாடி வழியாக மட்டுமே காண முடிந்தது. காடுகள் மண்டிய கருமண் பிரதேசங்களில் அடுத்தடுத்துக் கிராமங்கள் வரவில்லை. தேசிய நெடுங்சாலையோரங்களில் ஒன்றிரண்டு வீடுகள் இருந்தன. சின்னச் சின்ன வீடுகள்.  கிராமங்கள் அங்கிருந்து விலகியே இருக்கின்றன. தோட்டங்களுக்குள் தெரியும் தேவாலயக் கோபுரங்கள் தான் ஆங்காங்கே கிராமங்கள் இருக்கின்றன என அடையாளப்படுத்தின. வாகனங்கள் செல்லும் சாலைகள் மட்டுமே பனிக்கட்டிகள் உடைக்கப்பட்டுப் பாதைகள் உருவாக்கப்பெற்றிருந்தன. காரோட்டியாக வந்த நண்பர் கிராமங்களுக்குச் செல்ல ஏற்ற காலம் இது அல்ல என்று முதலிலேயே சொல்லி விட்டார். விரும்பிய இடங்களில் மெதுவாகச் சென்றும், தேவைப்பட்டால் கிராமங்களில் நிறுத்தியும் பார்த்தோம். அவரது எச்சரிக்கையையும் தாண்டி போகும்போதும் வரும்போதும் ஒன்றிரண்டு கிராமங்களுக்குள் காரிலேயே சென்று திரும்ப வேண்டும் என அடம்பிடித்ததை அவர் ஏற்றுக் கொள்ளவே செய்தார்.
போலந்து நாட்டுக் கிராமங்கள் வழியாகப் பேருந்தில் பயணங்கள் செய்வது அவ்வளவு எளிதல்ல. அதுவும் குளிர் காலத்தில் உறைபனியில் வழுக்கிச் செல்லும் வாகனங்கள் ஆபத்தைச் சந்திக்குமோ என்ற அச்சம் எப்போதும் கூடவே இருந்து கொண்டே இருக்கும். மழையை விடவும் கெட்டியான பனிமழை பெய்து கொண்டிருக்கும்போது பக்கத்தில் இருப்பது கூட நமது கண்ணுக்குப் புலப்படாது.  முதல் வருடம் பனித் தூவல் வழியும் டிசம்பர் மாதம் தோரூண் பயணம். வார்சாவிலிருந்து வடக்குநோக்கிய பயணம் அது. பனிவிலகும் மார்ச் மாதத்தில் தெற்கு நோக்கிய பயணம்; க்ராக்கோ நகரத்திற்கு. க்ரோக்கோ போலந்தின் பண்பாட்டுத் தலைநகரம். இரண்டு மாதங்கள் கழித்து  மே மாதத்தில் கார்ப் பயணத்தைத் தவிர்த்து ஒரு முறை பேருந்துப் பயணம்; இந்தப் பயணங்கள் போலந்துக் கிராமங்களில் ஒன்றிரண்டு நாட்களாவது தங்க வேண்டும் என்ற ஆசையை அதிகமாக்கின.
மே மாதத்தில் நெடிதுயர்ந்து நிற்கும்  பைன், பர் மரங்களும் இளஞ்சிவப்பாய்த் துளிர்க்கும் ஆப்பிள் மரங்களுமாகக் கிராமங்கள் சிரிக்கின்றன. கொத்துக் கொத்தாகக்  காய்த்துத் தொங்கும் ஆப்பிள் காய்களின் பச்சை, வெண்பச்சை, இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு, மென்சிவப்பு வண்ணத் தோட்டங்களுக்கிடையே  ரத்தச் சிவப்பில் நிறைந்து கிடக்கும் செர்ரிப் பழத் தோட்டங்கள்.  கண்களுக்கு விருந்தளிப்பவை. ஆனால் அரைமணி நேரத்திற்கு மேல் இறங்கி நின்று ரசிக்க முடியாது. இந்தியக் குளிர்கால வாடையைப் போலத்தான் வசந்தத்தின் வருகை இருக்கும்.

க்ராக்கோ, தொரூண் மட்டுமல்லாமல் பல நகரங்களை நோக்கிய வாகனப் பயணத்தில் பல பெரிய, சிறிய கிராமங்களைக் கடந்து சென்றிருந்தாலும் ஒரு கிராமத்துக்குச் சென்று சில மணிநேரமாவது தங்கிச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை என் மாணாக்கர்களிடம் முதலில் இருந்தே சொல்லத் தொடங்கியிருந்தேன்.  அந்த ஆசையை முதலில் நிறைவேற்றி வைத்தவர் என் அன்பு மாணவி மரிஸ்யா ஜெவ்லொஸ்கா. நான் வார்சா பல்கலைக்கழகத்திற்குப் போவதற்கு முன்பே எனது முகநூல் பக்கத்தில் நட்புப் பட்டியலில் இணைந்தவர். அந்த இணைப்புக்குக் காரணம் அவருக்குத் தமிழ்ச் சினிமாக்கள் இருந்த வெறி. தமிழ் மொழியையும் வெகுமக்கள் பண்பாட்டையும் தமிழ்ச் சினிமாக்கள் மூலம் கற்றுத் தேர்ந்ததோடு ஆய்வுக் கட்டுரைகள் கூட எழுதியிருந்தார். நான் அங்கிருந்த காலத்திலேயே இந்திய அரசின் உதவித்தொகையில் தமிழ்நாட்டில் வந்து தங்கிவிட்டு வந்தார் என்பது கூடுதல் தகவல்.
மரிஸ்யாவின் கிராமம்  வார்சாவிலிருந்து  40 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. தினசரி அங்கிருந்து தான் பல்கலைக்கழகத்திற்கு வந்து போவார்.பேருந்து, ட்ராம், மெட்ரோ என மாறிமாறிப் பயணம் செய்து வீடு திரும்பும் மரிஸ்யாவுக்கு ஊர் சுற்றுவதும் சினிமா பார்ப்பதும் அலுக்காதவை. வார்சாவின் பல சாலைகளில் இருக்கும் காட்சிச் சாலைகளுக்கும் அருங்காட்சியகங்களுக்கும் நடந்தே அழைத்துப் போவார். திரையரங்குகள், நாடகசாலைகள் என அவர் காட்டிய இடங்களும், அவற்றைப் பற்றி அவர் சொன்ன தகவல்களும் அவருக்கிருந்த நிலவியல் மற்றும் வரலாற்று அறிவைக் காட்டுவன.
மூன்றாம் ஆண்டு மாணவிகளான மரிஸ்யாவும் காஸ்யாவும் என்னைக் கிராமங்களுக்கு அழைத்துச் செல்வதை ஒவ்வொரு திட்டமிடலிலும் நினைத்துக் கொள்வார்கள். முதலில் மரிஸ்யாவின் வீட்டிற்குப் போவது என்றும், அந்தக் கிராமத்தைப் பார்த்துவிட்டு மற்ற கிராமங்களுக்குப் போவது பற்றி யோசிக்கலாம் என முடிவானது. இரண்டு ஆண்டுகளுக்குள் காஸ்யாவின் கிராமத்திற்கும் போய்விடலாம்  என்பது திட்டமிடலில் இருந்தது. ஆனால் நடக்கவில்லை. காஸ்யாவின் ஊர் போலந்தின் வடக்குக் கோடியில் பால்டிக் கடலோரம் இருக்கும் ஒரு கிராமம். வார்சாவிலிருந்து 400 கி.மீட்டர் இருக்கும்.  பட்டப்படிப்பை முடித்தவுடன் வேறொரு துறையின் படிப்புக்காக இன்னொரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விட்டாள் காஸ்யா.
ஒரு சனிக்கிழமை மரிஸ்யாவின் வீடு இருக்கும் கிராமத்திற்குப் போனேன். கிளம்பும்போது மழை இல்லை. இடையில் ஒரு சிறு நகரத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த போது காஸ்யா வந்து சேர்ந்தாள். அவள் கூடவே மழையும் வந்தது.  ஐரோப்பியர்கள் தங்கள் வீட்டிற்குச் சும்மா அழைப்பதில்லை. தடபுடலான விருந்தோடுதான் அழைப்பார்கள். அந்த விருந்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது. அங்கு வந்தபின் அறிமுகமாகிப் பின்னர் நண்பர்களாக ஆகிக் கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். மரிஸ்யா வீட்டிற்குச் சென்ற போது தமிழ் மாணவிகளோடு அவர்களது காதலர்களும் வந்திருந்தார்கள். மரிஸ்யாவின் தங்கையின் தோழிகளும் நண்பர்களும் கூட அழைக்கப்பட்டிருந்தார்கள். பேருந்து நிறுத்தத்திற்கு வந்து அழைத்துப் போகும்போது தனது கிராமத்தின் அமைப்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வந்தார். ஒரு மணிநேரத்திற்கு ஒரு தடவை வரும் ஒரு பேருந்து மட்டும் அவர் வீட்டிற்கு அருகில் வரும் என்று சொன்னார். இறங்கி நடக்கும்போதே கிராமத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பேருந்தைத் தேர்வு செய்யச் சொன்னதாகக் கூறினார்.
மூன்று ஏக்கர் அளவுள்ள தோட்டத்திற்குள் இருந்தது அவளது வீடு. பெரிய படிப்பாளியான அவரது அப்பாவின் நூலகத்திற்கே ஒரு பெரிய விசாலமான அறை. இசைக்கருவிகள், ராணுவத் தளவாடங்கள், ஆடைகள், அணிகலன்கள் எனப் பழம்பொருட்கள் பத்திரமாக இருந்தன. இப்போது அவளது அப்பா இல்லை. ஐரோப்பியர்கள் அப்பா அல்லது அம்மா இல்லை என்று சொல்வதை உயிருடன் இல்லை என்று புரிந்து கொள்ளக் கூடாது. விவாக முறிவு காரணமாக அவர்கள் பிரிந்து வாழக்கூடும். கேட்டால் சொல்லவே செய்வார்கள் அதைத் தோண்டித் துருவிக் கேட்பது நாகரிகமும் கிடையாது என நினைத்து நான் கேட்பதில்லை.
முழுமையான போலந்து உணவு வகைகள் என்று சொல்ல முடியாவிட்டாலும் விதம் விதமான காய்கறிகள், இறைச்சிகள், ரொட்டித்துண்டுகள் என நிரப்பி வைத்து தோட்டத்து அடுப்பில் சமையல் செய்தார்கள். தோட்டத்து அடுப்பு என்பது நமது  கிராமங்களில் விறகு வைத்து எரிக்கும் அடுப்புப்போல இருந்தது. சமையல் முடிந்து தோட்டத்திலேயே சாப்பிடலாம் என நினைத்தபோது மழையின் வாசம் விரட்டியது. சாப்பிட்டு முடித்துத் தோட்டத்தைச் சுற்றிக் காட்டினார் மரிஸ்யா. வாத்துகளும் கொக்குகளைப் போன்ற நீண்ட கால்கள் கொண்ட நாரைகளும் நடந்து கொண்டிருந்தன. முள்ளம்பன்றிக் குட்டி ஒன்று ஊர்ந்து போனது. செர்ரிக்காய்களும் ஆப்பிள் பிஞ்சுகளும் இன்னும் முற்றிப் பழுத்திருக்கவில்லை.
நெற்பயிர்களையொத்த தாள்களோடு கிழங்கு வகை ஒன்று
பசுமையாய் விரிந்து கிடந்தன. உணவுக்காக வளர்க்கப்படும் விலங்குகளைப் பத்திரப்படுத்தும் பெரும் கிட்டங்கிகள் போன்ற கட்டடங்கள் தனிநபர்களுடையதாகவும் கூட்டுப் பராமரிப்பிலும் கிராமங்களில் இருக்கின்றன. விவசாயம் நடக்காத காலங்களில் கால்நடைகளோடு கழிகின்றன அவர்களின் வாழ்க்கை. வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, காடுகள் உருவாக்கம், கட்டிடத்தொழில் என எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னிக் கிடக்கின்றன கிராமிய வாழ்வில். தேவையான தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கொண்டு தங்களின் மேற்பார்வையிலேயே வேலைகளைச் செய்கிறார்கள்.
மரிஸ்யாவின் வீட்டுக்குப் போனதற்குப் பின்பு ஒரு வருடகாலம் கிராமப்பயணம் வாய்க்கவில்லை. இந்திய ராம்லீலாவைப் போல வரலாற்று நிகழ்ச்சியைச் சடங்காக நடத்தும் திருவிழா ஒன்றின் வீடியோ காட்சியைக் காட்டிய மாணவிகள், அதனைப் பார்க்க நேரில் போகலாம் என்று சொல்லியிருந்தார்கள். திட்டமிடலையெல்லாம் குலைத்துப் போட்டுவிடும் பனியை வெல்ல முடியவில்லை.
முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்குக் கிராமத்தில் தங்கும் எனது ஆசையைச் சொல்லிப் புரிய வைக்கவே சில மாதங்கள் ஓடி விட்டன.  மக்தா என்ற மக்தலேனா தனது பாட்டியும் தாத்தாவும் இருக்கும் வடகோடிக் கிராமம் ஒன்றிற்கு அழைத்துப் போவதாகச் சொன்னாள். தனியாகப் போக வேண்டாம்; எனது  நண்பர்களோடு சேர்ந்தே போவோம்; இரண்டு நாட்கள் அங்கே தங்கலாம் என்றும் சொல்லியிருந்தாள். அந்தக் கிராமம் பற்றி அவள் சொல்லும் தகவல்கள்  திரும்பத் திரும்பக் கனவுகளாக விரிந்து கொண்டிருந்தன. அதற்கு அவள் சொன்ன விதம் ஒரு காரணம் என்றாலும் மாஸ்கோ பதிப்பகம் வெளியிட்ட ரஷ்ய மொழி  நாவல்களில் வாசித்த வர்ணனைகளும் சேர்ந்து கொண்டன. கனவுநிலமாக இருந்த சோவியத் யூனியனின் தரையில் கால் வைத்துவிட வேண்டும் என்ற ஆசை தான். அதுவும் நிறைவேறவே இல்லை.
பல தடவை தனது ஆசிரியரை ஏமாற்ற விட்டோம் என்ற குற்ற உணர்வில் மக்தாவும் அவளது நண்பர்களும் திடீரென்று ஒருநாள் கிராமத்துக்குப் போகிறோம்; தயாராக இருங்கள் என்று தகவல் அனுப்பினார்கள். நேரமும் வர வேண்டிய இடமும் கூட அந்தத் தகவலில் இருந்தன. நான் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் இருக்கும் மெட்ரோ ஸ்டேசனான சுலூட்ச்ஸின் ஏறுபடிகளின் அருகில் அவர்கள் சொன்னபடி காத்திருந்தேன். வார்சாவின் மெட்ரோ தென்வடலாக நகரத்திற்குள் ஓடும் ஒற்றையடிப்பாதை. மெட்ரோ ரயில் கிராமத்திற்குப் போகாது என்பது எனக்குத் தெரியும். மெட்ரோவில் போய் நகர் மையத்தின் ரயில் நிலையத்திலிருந்து கிராமத்திற்குச் செல்லும் ரயிலில் செல்ல வேண்டியதிருக்கும் என நினைத்துக் கொண்டு தயாராக இருந்தேன்.
மெட்ரோவின் வாசலையே பார்த்துக் கொண்டிருந்த எனக்குப் பின்னால் முதுகில் கை வைத்துத் தட்டிய உருவத்தைத் திரும்பிப் பார்த்தேன். மக்தா மட்டுமல்ல; அவளோடு எனது மாணவர்கள் ப்யோதரும் குபாவும் இருந்தார்கள். மக்தாவின் நண்பன் வராததால் இவர்களே பயணத்தில் இணைந்து கொண்டார்கள். தூரத்தில் இருந்த காரை நீட்டி ஏறச் சொன்னார்கள். ப்யோதர் நல்ல காரோட்டி எனவும், இந்தக் கார் அவரது தாத்தாவின் பரிசு என்றும் சொன்னார் குபாவ்.  போகப் போகும் கிராமம் மக்தாவிற்குத் தெரிந்த கிராமம் அல்ல; குபாவ்வின் முன்னோர்கள் இருந்த கிராமம் என்ற தகவலையும் சொல்லிவிட்டுக் காரை கிளப்பினர்.
க்ரச்ஸ் என்று உச்சரிக்க வேண்டும் அதன் பெயரை. வார்சாவின் மையத்திலிருந்து இரண்டு மணிநேரப் பயணம்.. போலந்து கிராமங்கள் பலவற்றின் மாதிரி வடிவம் அது. ஒரு முதன்மைத் தெரு. அதிலிருந்து பிரிந்து போகும் சிறு சாலைகள். அந்தச் சாலைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள். அடுத்தடுத்து வீடுகள் என்பது முதன்மைத் தெருவில் மட்டும் தான். பல வீடுகள் தோட்டத்தின் நடுவில் உள்ளன. ஒருவரது தோட்டமும் வீடும் பிரிக்க முடியாதனவாக இருக்கின்றன. போலந்தின் முக்கியமான விளைபொருட்கள் உருளைக்கிழங்கும் ஆப்பிளும். பனிக்காலத்தில் உறைபனியாகிவிடும் நீர் நிலைகள். பனிக்காலம் முடியும்போது உருகிக் குளமாகவும் சிற்றாறுகளாகவும் ஓடிக் கொண்டிருக்கின்றன. சிற்றாறுகள் பலவும் பேராறான விஸ்துலாவில் போய் கலக்கின்றன. போலந்தின் குறுக்காக வற்றாத நதியாக விஸ்வா என அழைக்கப்படும் விஸ்துலா எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறது. தெற்கே இருந்து வடக்கு நோக்கி ஓடும் விஸ்வா ஆறுதான் போலந்தின் முக்கியமான நீராதாரம்.
க்ர்ச்ஸ் என்ற அந்தக் கிராமம் சமதளமாக இல்லாமல் மேடுபள்ளமாக இருப்பதுபோலத் தோன்றியது. ஒரு தெருவின் வீடுகளிலிருந்து இன்னொரு தெருவின் வீடுகள் இறக்கத்தில் வரிசையாக இருந்தன. மலைப்பகுதிச் சரிவுகள் அமைக்கப்படும் தெருக்கள் போல. என்றாலும் அந்த ஊரில் மலையென எதுவும் இல்லை. நிலப்பரப்பே அப்படி இருந்தது.. ஒவ்வொரு கிராமத்திலும் பழைமையான - பெரிய கட்டடமாக மரியாளின் கோயில் இருக்கிறது. நான் போன அந்த ஊரில் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறு கோட்டை ஒன்றும் இருந்தது. அந்த ஊர் எப்போது கிறிஸ்தவ மதத்திற்கு மாறியது, எப்போது ராஜ குடும்பம் வந்தது, சிதைந்தது போன்ற குறிப்புகள் கல்வெட்டுகளாக இருக்கின்றன. சோசலிச காலக் கட்டடங்கள் பல சிதைந்தும் சில சிதையாமலும் இருக்கின்றன. கிராமப் புற மக்களின் மனதில் சோசலிச காலம் இன்னும் பொற்கால நினைவுகளாகத் தான் இருக்கின்றன. நகரம்- கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் வாழ்க்கை முறை ஒன்று போல இருந்ததாகச் சொல்கிறார்கள். வறுமையும் வளமையும் சமமாகப் பகிரப்பட்ட காலம் அது. இப்போது முட்டி மோதுபவர்கள் வளமாக இருப்பதாக நினைக்கிறார்கள். முடியாதவர்கள் வறுமைக்குள் போவதைத் தடுக்க முடியவில்லை

பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தில் எட்டு ஆண்டு காலமும், திருநெல்வேலியில் பதினான்கு ஆண்டுகளும்  பணியாற்றிப் பெற்றிருந்த அனுபவத்தில் நான் உருவாக்கியிருந்த மாணவ நட்பும் அது பற்றிய எனது  கணிப்புகளையும் வார்சா பல்கலைக்கழக வளாகம் தூள் தூளாக்கியது என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. எனது வழிகாட்டுதலில் பயணங்கள் என்பதற்கு மாறாக மாணாக்கர்களின் வழிகாட்டுதலில் ஆசிரியனின் பயணங்கள் என்பது நினைக்க நினைக்க இனிமையானவை.  இளமை ததும்பும் மாணவக் கூட்டத்தினூடே இரண்டு ஆண்டுகள் இருந்த அந்த நாட்கள் என் வாழ்நாளின் இனிய கனவாக இருக்கப் போகிறது. எல்லா வகை உறவிலும் தங்கள் சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் விடாப்பிடியான ஆளுமையை வெளிப்படுத்தும் ஐரோப்பிய மாணாக்கர்களின் உலகம் இந்திய இளையோர்களுக்கு எப்போது கிடைக்கும் எனத் தெரியவில்லை. கிடைத்தாலும் அதனை ஏற்று முழுமையாகக் கொண்டாடுவார்களா? என்ற ஐயமும் எனக்கிருக்கிறது. ஐயத்தோடுதான் அந்த உலகத்தை நான் விவரித்துக் கொண்டிருக்கிறேன். மாணாக்கர்களுக்கிடையேயான உறவிலும், ஆசிரியர் - மாணாக்கர் உறவிலும், ஐரோப்பிய மாதிரிகளை நாம் பின்பற்றுவோம் என்ற நம்பிக்கை இல்லை என்ற போதும் அதனைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருப்பவர்களுக்காக இதனைச் செய்கிறேன்.No comments :