November 16, 2011

பெரிய முள்ளை பதினோரு தடவை சுற்றிக் கொள்ளுங்கள்


டாடா மோட்டார்ஸ் சந்திரசேகர் காரில் என்னை அழைத்துப் போகவில்லை என்றால் இறகுப் பந்து(ஷட்டில்) விளையாடப் போயிருக்க மாட்டேன்.  வார்சாவுக்குப் போனதிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தவறாமல் போய்க் கொண்டிருக்கிறேன். வீட்டிலிருந்து பத்துக் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அந்த விளையாட்டு மைதானத்திற்கு நடந்து போக முடியாது. பஸ்ஸில் போவதென்றாலும் ஒரே பஸ்ஸில் போய்த் திரும்ப முடியாது.

அரசாங்கத்தின் பராமரிப்பில் அந்த விளையாட்டு மையம் தான் இயங்குகிறது. அங்கே எல்லா விளையாட்டுக் களுக்குமான அரங்குகள் வாடகைக்குக் கிடைக்கின்றன. வெளிப்புற விளையாட்டுக்களான டென்னிஸ், கால்பந்து, ஹாக்கி போன்றனவும் இருக்கின்றன. இறகுப் பந்து, பூப்பந்து, போன்ற உள்ளரங்கு விளையாட்டு மைதானங்களும் இருக்கின்றன,  ஒருமணி நேரத்திற்கு இவ்வளவு என வாடகை நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த நாள் இந்த மணி நேரம் எனச் சொல்லி முன்பதிவு செய்து வைத்து விட்டால், அந்த நேரம் மைதானம் நமக்காகக் காத்துக் கிடக்கும். நாம் விளையாண்டாலும் விளையாடா விட்டாலும் கட்டிய பணம் வாபஸ் ஆகாது.
போலந்தில் வசிக்கும் இந்தியர்கள் இவர்கள் விளையாடுவதற்காகச் சந்திக்கிறார்களா? சந்திப்பதற்காக விளையாடு கிறார்களா? என்பதை இப்போதும் உறுதியாகச் சொல்லி விட முடியாது. சோலக் எனப் பெயர் தாங்கிய விளையாட்டு மைதானத்தில்  எட்டிலிருந்து பத்துபேர், இரண்டு மணிநேரம் கோர்ட்டை வாடகைக்கு எடுத்து விளையாடுவதும் இந்திய சினிமா, இந்திய அரசியல் எனப் பேசிக் கொள்வதும் தேவையான ஒன்றாக இருக்கிறது. அந்தப் பத்துப் பேரில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள் என்று நினைத்தேன். ஆனால் தமிழ்நாட்டுக்காரராக இல்லாத போதும் தமிழ் பேசுகிறார்கள்; தமிழ்நாட்டுக்காரரும் இந்தி பேசுகிறார். ஆக இந்தியும் தமிழும் அனைவருக்கும் புரியும் மொழியாக இருக்கிறது. ஜார்க்கெண்டைச் சேர்ந்த பங்கஜும் அனூப்பும் சேர்ந்து ஓரணியாகவும் ஆந்திராவைச் சேர்ந்த விக்னேஷும் சீனிவாஸும் ஓரணியாகவும் நின்ற போது ராஞ்சி பிரதர்ஸ் x ஆந்திரகாரு எனக்கிண்டலாகச் சொன்னார் சீனிவாஸ்.
சீனிவாஸும் விக்னேஷும் ஆந்திராக்காரர்கள் என்றாலும் தமிழ்ப் பேசுகிறார்கள். சென்னையில் படித்ததால் சென்னைத் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். ராம்குமார் புனேக்காரர். பெரும் பாலோர் சிட்டி பேங்க் கணிணிப் பிரிவுகளில் இருக்கிறார்கள். அடுத்த மாதம் கிளம்ப இருக்கும் சபரிநாத் கூட சிட்டி பேங்கிற்குத் தான் வேலை செய்கிறார். அவருக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி. நான் திருநெல்வேலியிலிருந்து வந்தவுடன் அவர் கிளம்புவதால் வார்சா ஒரு திருநெல்வேலிக் காரரைத்தான் தாங்கும் போலும் என்று கிண்டல் பேச்சுக் கிளப்பியது.  ராஞ்சி பிரதர்ஸ், ஆந்திரகாரு தமிழ்நாட்டு மச்சான்கள் என மாநில அணியெல்லாம் கிடையாது.  முதல் ஆட்டம் சேர்ந்து விளை யாண்டால் அடுத்த ஆட்டம் நிச்சயம் பிரிந்துதான். இந்தியாவில் இருக்கும் போது முகத்திற்கு முன்னால் வந்து நிற்கும் மாநில, மொழி வேறுபாடுகள் எல்லாம் காணாமல் போய் இந்தியர்கள் என்ற அடையாளம் ஒன்றாக்கப் பயன்படுவது ஆச்சரியமானதல்ல. விருப்பமான ஒன்றாகி விட்டது
திருநெல்வேலி, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ளரங்க விளையாட்டுகளுக்கு இந்த வசதி இருக்கிறது. மாதத்திற்கு இவ்வளவு என்று கட்டி உறுப்பினராக வேண்டும். பலபேர் உறுப்பினராகப் பணம் கட்டி விட்டு வர மாட்டார்கள்.  அண்ணா விளையாட்டு மைதானத்தின் அருகில் நான்கு வருடங்கள் குடியிருந்தேன். ஆனாலும் பணம் கட்டி விளையாடப் போனதில்லை. விளையாடப் பணம் கட்டுவதை மேட்டுக்குடி அடையாளமாக அப்போது நினைத்தது ஒரு காரணம். தினசரி காலையில் நடப்பதே போதுமான உடற்பயிற்சி என்பது எனது கணக்கு. மைதானத்தை 5 முறை சுற்றிவிட்டுக் கைகாலை ஆட்டிப் பயிற்சி செய்த பின் வீட்டுக்குப் போய்விடுவேன். பாண்டிச்சேரியில் இருந்த போதும், திருநெல்வேலி கட்டபொம்மன் நகருக்குப் போனபின்பும் நடைபயிற்சி என்பது நேர்கோட்டுப் பயணம் தான். ஒவ்வொரு நாளும் ஒரு பாதையில் இரண்டு கிலோ மீட்டருக்கும் குறையாமல் நடந்து விடுவேன். நடைப்பயிற்சி நிறுத்தப்பட்ட போதுதான் உடம்பின் எடை கூடி விட்டது. வார்சாவில் உடல் எடையைக் குறைத்து இளைமையைத் திருப்பிக் கொண்டுவர வேண்டும் என்ற நினைப்பே ஷட்டில் விளையாட்டு கொண்டு வந்திருக்கிறது வார்சாவில் வெள்ளிக்கிழமை (அக்டோபர்,8) இரவு இறங்கியவன் அடுத்து வந்த ஞாயிறு முதல் ஒவ்வொரு வாரமும் தவறாமல் போய்க் கொண்டிருக்கிறேன்.
அக்டோபர் 31, ஞாயிறு நாலாவது வாரம். காலையில் 07.30 க்கெல்லாம் வெளியில் செல்வதற்கான கவச உடைகளை அணிந்துமேலுடம்பை மறைக்கும் பனிக்கோட்டு, சாக்ஸ்,ஷூ, கையுறை, கழுத்தில் மப்ளர், தலையில் பனிக்குல்லாய் சகிதம்- தயாராக இருந்தேன். 07.40- க்கெல்லாம் சந்திரசேகர் முன்னறிவிப்பு செய்துவிட்டு அவர் வீட்டிலிருந்து கிளம்பி விடுவார். பத்து நிமிட நடையில் கார் வரும் பாதையில் நான் போய் நின்று விடுவேன். கடிகாரத்தைப் பார்த்தேன். சின்ன முள் நகர்வது தெரியாமல் நகர்ந்து எட்டைத் தாண்டி விட்டது. பெரிய முள் நின்று நின்று நகர்கிறது. ஒவ்வொரு வினாடியையும் பெருமூச்சுடன் நகர்த்துவதுபோல சின்ன ஓசையுடன் நகர்த்தியது. அரைமணி நேரம் அதிகமாகி விட்டது.
சந்ரு சொன்ன நேரத்திற்கு வருபவர். திருச்சி லால்குடிக்காரர் தான் என்றாலும் இந்தியன் பங்சுவாலிட்டிக்காரர் கிடையாது. சொன்ன நேரத்தில் சரியாக நிற்பார்.. வரத் தாமதம் ஆகுமென்றால் உடனடியாகப் போனில் தகவல் சொல்லி விடுவார். இதெல்லாம் ஐரோப்பிய நடைமுறை. அப்பா ராணுவத்தில் இருந்தததால் வட இந்தியாவிலேயே படித்து டாடா மோட்டார்ஸில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். இரண்டு மூன்று வருடம் லக்னோ, புனே எனப் பயிற்சியைக் கொடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். கடந்த 13  ஆண்டுகளாக வெளிநாடுகளில் தான் வாசம். இலங்கை, இங்கிலாந்து, போலந்து என  ஒவ்வொரு நாடாகப் போய்க் கொண்டிருக்கிறார். இனி இந்தியாவில் வேலை பார்க்கலாம் என்ற ஆசை கொஞ்சம் வரத்தொடங்கியிருக்கிறது. காரணம் அவரது செல்ல மகள் வைஷ்ணவியை சரியான உயர்நிலைப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற நினைப்பாக இருக்கலாம். ஆனால் அந்தக் குட்டிப் பெண்ணுக்கு இங்கிருந்து இந்தியாவிற்குப் போக வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை.
 அரைமணி நேரம் தாண்டியும் அவரிடமிருந்து போன் வராததால் நான் தொடர்பு கொண்டேன்.
என்ன சந்ரு.. இன்னைக்கு விளையாடப் போக வேண்டாமா?”
கட்டாயம் போறோம் சார், அதிலென்ன சந்தேகம்?”
எட்டு மணி தாண்டியாச்சே .. நீங்க கிளம்பலேயேன்னு கேட்டேன்.”
எட்டு மணியா? இல்லயே ஏழு பத்து தானே ஆகுது..”
அவர் சொன்னவுடன் என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். அதில் எட்டு பத்து ஆகியிருந்தது. தயக்கத்துடன்,
இல்ல சந்ரு. எட்டு பத்து ஆயிடுச்சு
”...ம்ம் சரி.. ஒங்க மொபைல்லே நேரம் என்னாகுதுன்னு பாருங்க
பார்த்தேன். ’ஏழு பத்துஎன இருந்தது. கைக் கடிகாரம் எட்டு பத்து என்றே இப்போதும் காட்டியது. கடிகாரம் ஒரேநாளில் ஒரு மணிநேரம் வேகமாகப் போவதற்கு வாய்ப்பில்லை என நினைத்துக் கொண்டிருந்த போது,
ஸாரி சார்.. ஐரோப்பா ஒரு மணி நேரத்தை முழுங்கி விடும் கதையை உங்களுக்குச் சொல்ல மறந்திட்டேன்.. அதெ நேர்ல சொல்றேன். இப்போதைக்கி ஒங்க வாட்சின் பெரிய முள்ளை  பதினோரு தடவை சுற்றி ஏழு பத்துன்னு மாத்திக்கிடுங்கசந்திரசேகர் சிரித்துக் கொண்டே சொன்னார்.
எட்டு பத்தெ, ஏழு பத்துன்ன்னு  மாத்த ஒரு சுத்துப் பின்னோக்கிச் சுத்தலாமேன்னு சொன்னேன்.
அப்படிச் செஞ்சீங்கன்னா நீங்க இன்னும் இந்தியாவில தான் இருக்கீங்கன்னு அர்த்தம்; கடிகாரத்தின் முள்ளை முன்னோக்கி மட்டும் தான் நகர்த்தனும்னு நினைக்கிறது ஐரோப்பிய மனம். நீங்க என்னவாக இருக்கீங்கன்னு மனசெக் கேட்டுக்கிட்டு கடிகாரத்தெ சுத்துங்கன்னு சொல்லி விட்டு போனை வைத்து விட்டார். எனது கை ஒரு சுற்று சுற்றி எட்டு பதினொன்றை ஏழு பதினொன்றாக்கிக் கொண்டது.
சந்திரசேகரின் நட்பு மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் வார்சாவில் கொஞ்சம் திணறித் தான் போயிருப்பேன். தாய்மொழி தமிழை அவருக்குப் பேச மட்டுமே தெரியும் அவருக்கும் போலிஷ் தெரியாது. ஆங்கிலம் தான்.. படித்ததெல்லாம் வட இந்தியாவில் என்பதால் இந்தி நன்றாகப் பேசவும் எழுதவும் தெரிந்திருக்கிறது.அயல் தேசங்களுக்குப் போன தமிழர் களுக்கெல்லாம் தமிழ்ப் பேச்சும் தமிழ்ச் சோறும் சாம்பாரும் தேவைப்படுகிறது. அதைக் குடும்ப அமைப்பின் வழியாக உருவாக்கிக் கொள்ளவும் முடிகிறது. தமிழ்ச் சினிமாவும் கூடத் தேவையான ஒன்றாக இருக்கிறது. அதை இன்றையத் தகவல் தொழில் நுட்பம் இலகுவாக்கி விட்டது. ஆனால் தமிழில் படிக்கும் வாய்ப்பும் இணையம் வழி சாத்தியம் தான் என்றாலும் அதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அப்படியொரு முயற்சியை மேற்கொள்ளும் தேவை ஏற்படவில்லை. தமிழ் வெறும் அடையாளம் மட்டும் தான். தேவையாகவும் பயன்பாடாகவும் இல்லை என்பதே அதன் இப்போதைய நிலை. அவசியம் பயன்படுத்தியாக வேண்டிய ஒன்றுதான் நிலைத்த வாழ்வுதனைக் கொண்டதாக இருக்கும். அயல்தேசத் தமிழர்களுக்குத் தமிழ் மொழி அடையாளமாக மட்டுமே தேவைப்படுகிறது. புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் திரும்பவும் தமிழைப் பயன்பாட்டு மொழியாகக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படும் என்பதால் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தைக் கை விடாமல் இருக்கிறார்கள். ஆனால் தாய்த் தமிழ்நாட்டுக்காரர்களுக்கு ஆங்கிலம் மட்டும் போதும். தமிழ்நாட்டிற்கு வேலை பார்க்க வந்தாலும் ஆங்கிலம் வழியாகவே அரசாங்கத்தையும் அடுத்தவர்களையும் தொடர்பு கொள்ள முடியும். அப்புறம் என்ன? தமிழ் அடையாளமாக மட்டும் இருந்தால் போதாதா? எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!! என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் அரசாங்கத்தோடு தமிழில் தான் தொடர்பு கொள்ள முடியும் என்று ஆக்கியிருந்தால் தமிழ் அடையாளமாக மட்டும் இல்லாமல் தேவையான மொழியாக வாசிக்கவும் எழுதவும் தெரிந்து கொள்ள வேண்டிய மொழியாக ஆகியிருக்கும். 45 ஆண்டுகளுக்குப் பின்னும் அதற்கான யோசனைகள் இல்லை என்பதுதான் துயரம்.
சந்ரு வந்து நிறுத்தியவுடன் காரில் ஏறிக் கொண்டேன். அவரது மனைவியும் இடையில் இருக்கும் நீச்சல் குளத்தில் இறங்கிக் கொள்வார்கள். அவர்களுக்கு நீச்சல் தான் உடல் பயிற்சி. அவர்கள் இறங்கியவுடன் காலத்தை முழுங்கும் கதையை ஆரம்பித்தார். அக்டோபர் மாதம் கடைசிச் சனிக்கிழமை இரவு 12 தாண்டி ஞாயிறு இரண்டு மணி நேரம் கடந்ததும் தகவல் தொடர்பு சாதனங்கள் வழியாகத் தானாக நேரத்தை மாற்றும் கணிணி, மொபைல் போன்றன திரும்பவும் ஒரு மணி என்றே காட்டுமாம். அப்போது நீங்கள் விழித்திருந்தால் உங்கள் கைக்கடிகாரங்கள், வீட்டு நிலைக்கடிகாரங்கள், டிஜிட்டல் வாட்சுகள் போன்றவற்றைக் கையால் சுற்றி ஒரு மணி நேரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அக்டோபரில் ஸ்வாகாப் பண்ணி முழுங்கிய நேரத்தைத் திரும்பவும் மார்ச் கடைசிச் சனி இரவில் உமிழ்ந்து நீட்டிக் கொள்வார்களாம். அக்டோபரில் இருட்டு நேரம் கூடிக் கொண்டே போகுமாம். ஆமாம் இப்போதெல்லாம் மாலை நாலரை மணிக்கெல்லாம் இருட்டி விடுகின்றது. மார்ச்சுக்குப் பிறகு இரவிலும் சூரியன் இருக்குமாம்.
வடதுருவ நாடுகளில் அக்டோபரில் குறைப்பதும் மார்ச்சில் கூட்டுவதும் நடக்கும் என்றால் தென் துருவ நாடுகளில் மார்ச்சில் குறைத்து விட்டு அக்டோபரில் கூட்டிக் கொள்வார்களாம். பூமத்திய ரேகையைத் தனது இடுப்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்தியாவில் இந்த மாதிரிப் பிரச்சினைகள் எல்லாம் இல்லை. சரியாகப் பன்னிரண்டு மணிநேரம் ராத்திரி; பன்னிரண்டு மணி நேரம் பகல். கையில் காசிருந்தால் மூணுவேளை மூக்குப் பிடிக்கச் சாப்பாடு, பொழுதுபோக்குக்குக் கடவுள்கள், சாமியார்கள், கிரிக்கெட் மாட்சுகள், அடிதடி சினிமா, அர்த்தமில்லாத அரசியல் என எல்லாம் நமது கைக்குள் இருக்கிறது. ஆனால் உலகின் பல நாடுகளில் இயற்கையின் கட்டுப்பாட்டுக்குள் மனிதர்கள் இருக்கிறார்கள்.
அக்டோபர் முடிந்து நவம்பர் தொடங்கும் போது பனிக்காலம் தொடங் குகிறது. பனிக்காலத்தைத் தங்கள் முன்னோர்களை நினைத்துக் கொள்ளும் சடங்கோடுதொடங்குகிறார்கள். போலந்து நாட்டு எட்டு விடுமுறை நாட்களில் ஒன்றான மரித்தோர் தினம் (All saints day) நவம்பர் 2 ஆம் தேதி வருகிறது. அன்று எல்லாக் கடைகளும் அடைக்கப் படுகின்றன. கல்லறைத் தோட்டங் களுக்குப் போய் இறந்தவர்களை - தங்கள் குடும்பத்து உறுப்பினர்களை மட்டுமல்லாமல் நண்பர்கள், தெரிந்த வர்கள், முகம் தெரியாத தியாகிகள் என ஒவ்வொருவருக்கும் சில பொருட் களைப் படைக்கிறார்கள். படையலில் முக்கிய இடம் பிடிப்பது மெழுகு வர்த்திகள். மெழுகுவர்த்தியோடு வண்ண வண்ணப் பூங்கொத்துக்களும் கல்லறைகளில் வைக்கப்படுகின்றன. மரித்தவர்களுக்கு விருப்பமான உணவுப் பண்டங்களும் மதுபானங்களும் கூட படைக்கப்படுகின்றன. மதுபானங்களின் மூடியைத் திறந்து ஒரு மிடக்குக் குடித்து விட்டு மீதியைக் கல்லறையைச் சுற்றி ஊற்றுவார்களாம். பண்டங்களையும் கொஞ்சம் கடித்துத் தின்று விட்டு அங்கே வைத்து விட்டுத் திரும்புகிறார்கள். அவற்றை இறந்தவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை அதற்குள் இருக்கிறது.
இறந்தவர்கள் புண்ணியச் செயல் களையும் பாவச் செயல்களையும் சமமாகச் செய்திருந்தால் பரலோகத் திற்கும் போகாமல் நரகலோகத்திற்கும் போகாமல் கல்லறையிலேயே ஆவியாக இருப்பார்களாம். அந்த ஆவியைச் சொர்க்கத்திற்கு அனுப்பு வதற்காகத் தங்களின் புண்ணியச் செயலின் ஒரு பங்கைக் காணிக்கை யாகக் கொடுத்து அவர்களைச் சொர்க் கத்திற்கு  அனுப்பி வைப்பதே இந்த நாளின் முக்கியமான வேலை. ஒரு வேளை இவனது செயல்களில் பாவச் செயல்களே அதிகம் இருந்தால் அந்த ஆவி நரகத்திற்குப் போகவும் வாய்ப்புண்டு என்பதை நினைத்துக் கொள்வார்களா என்று தெரியவில்லை. இறப்பிற்குப் பின்னும் நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதை எல்லாச் சமய நம்பிக்கைகளும் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றன. இறந்து போன தனது குடும்பத்து உறுப்பினர்களுக்குப் பதினான்காம் நாள் கருமாதி செய்வதோடு, வருடந்தோறும் திதி கொடுக்கும் வைதீக நம்பிக்கைக்குப் பின் இருக்கும் நம்பிக்கையும் இத்தகைய ஒன்றுதான். செத்துப் போன சைவனை மகாசிவராத்திரியன்று முழு ராத்திரியும் விழித்திருந்து கைலாயத்துக்கு அனுப்பலாம் என நினைக்கும் சைவர்களைப் போல வைஷ்ணவர்கள் வைகுண்ட வாசலைப் பார்க்க இரவு முழுவதும் உணவுப் பண்டங்களை இலையில் படைத்து வைத்துக் காத்திருப்பதும் அத்தகைய நம்பிக்கைகளின் நம்பிக்கைகளின் நீட்சிகள்.
நாம் செய்வதில் எது பாவச் செயல் என்று தெரிந்தால் நாம் ஏன் செய்யப்போகிறோம். செய்யும் எல்லாம் புண்ணீய காரியம் என்று தானே நமது மனம் சொல்கிறது. மது, மாது, மாமிச போகங்கள் பாவம் எனச் சொன்ன சமய நம்பிக்கைகள் ஜனநாயக அரசியல் தத்துவக் காலத்தில் காலாவதியான நம்பிக்கைகள் என்பது நமக்குப் புரிந்து விட்டது. ஆனால் லஞ்சமும் ஊழலும் அடுத்தவன் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதும் நரகத்திற்குப் போகும் வழியைக் காட்டுமா? சொர்க்கத்தை நிர்மாணம் செய்யும்  நிலையை உருவாக்குமா என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது

No comments :