November 01, 2011

வலதுசாரியாக மாறியாக வேண்டும்


பல்கலைக்கழகம் வரை அழைத்துச் செல்ல வந்து கொண்டிருந்த மாணவிகள் வாபஸ் வாங்கிக் கொண்டார்கள். வீட்டிலிருந்து கிளம்பிப்  பல்கலைக் கழகத்திற்கு வந்து சேரும் பாதையைப் புரிந்து கொண்டு விட்டேன் என்ற உறுதி எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. பாதை பிடிபட்டு விட்டது என்று நான் சொல்லவும் இல்லை; ஆனால் அந்த முடிவை அவர்களே எடுத்து விட்டார்கள். ஏதாவது பிரச்னை என்றால் தொலை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி இரண்டு தொலைபேசி எண்களைக் கொடுத்து விட்டு வாபஸான போது கொஞ்சம் கலக்கமாகத் தான் இருந்தது.


இருபது நிமிட டிராம் பயணம் தான் என்றாலும் இருபதுக்கு மேற்பட்ட நிறுத்தங்களில் நின்று செல்கின்றன டிராம்கள். ஒவ்வொரு நிறுத்தத்திலும் எந்த நிறுத்தத்தில் நிற்கிறது என்பதும், அடுத்த நிறுத்தம் (ப்ரெஸ்தனக்) எது என்பதும் சில டிராம்களில் குரலாக வருகின்றன. புதிய டிராம்களில் குரலோடு டிஜிட்டல் எழுத்துக்களும் சேர்ந்து கொள்கின்றன. இதற்குப் பிறகும் மாணவிகளின் உதவியை நாடினால் ஆசிரியர் விவரமில்லாத ஆசாமி என முடிவு செய்யக் கூடும் என்ற பயத்தில் அந்த வாபஸை மனமுவந்து ஏற்றுக் கொண்டேன்.
தங்கியிருக்கும் இடத்திலிருந்து கிளம்பும் பேருந்து எண்களும், டிராமின் எண்களும் என்னிடம் இருக்கின்றன என்றாலும் பேருந்துப் பயணத்தை விட டிராம் பயணம் தான் சரியானது. நான் தங்கியிருக்கும் அல்-லோட்னிக் கோவ்லிருந்து பல்கலைக்கழகம் இருக்கும் க்ரோலெஸ்கோவ்க்குப் போக வேண்டுமென்றாலும், இந்தியத் தூதரகம் இருக்கும் ரகோவிச்காவிற்குச் செல்வதென்றாலும் 4 -ஆம் எண் டிராமில் ஏறினால் போதும். இந்தியத் தூதரகத்தைத் தாண்டித் தான் பல்கலைக்கழகம் இருக்கிறது. ஆனால் அல்-லோட்னிகோவிலிருந்து கிளம்பும் எந்தப் பேருந்தும் நேரடியாகப் பல்கலைக்கழகத்திற்கோ, தூதரகத்திற்கோ போகாது.
அல்-லோட்னிக்கோவ், ரகோவிச்கா, க்ரோலெஸ்கோவ் - இந்த மூன்று நிறுத்தங்களின் பெயர்களையும் பல தடவை மனதுக்குள் சொல்லி மனப்பாடம் பண்ணிப் பார்த்தேன். நிற்க மறுத்து விட்டன. கையில் உள்ள பேசியின் குறிப்பேட்டில் சிக்கெனப் பிடித்துக் கொண்டேன். ஏற்கெனவே ஒவ்வொரு நிறுத்தத்திலும் வித்தியாசமான அடையாளங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் மனதில் பதித்துக் கொள்ள விரும்பவில்லை. எனக்கு இப்போதைக்குத் தேவை இந்த மூன்று நிறுத்தங்கள் தான். அவற்றை அடையாளம் காணும் விதமாகச் சிலவற்றை மனது பதிய வைத்துக் கொண்டது. ஒவ்வொரு நாளும் மூன்று வகுப்புகள். ஒரு வகுப்பு என்பது 90 நிமிடம். கணக்குப் பார்த்தால் மனோன்மணியத்தில் வகுப்பில் மாணாக்கர் களைச் சந்தித்த நேரத்தை விட அதிகம். ஆனால் வாரத்தில் இரண்டு நாட்கள் தான் வகுப்பு. மற்ற நாட்கள் ஊர் சுற்றலாம்; அல்லது வீட்டில் இருக்கலாம். வகுப்பு இருக்கும் நாளில் மட்டும் போனால் போதும்.
மூன்று மாதத்திற்கான சீசன் டிக்கெட் வாங்கியாகி விட்டது. கைவசம் இருக்கும் சீசன் டிக்கெட் நம்மூர் சீசன் டிக்கெட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.இது டிராமிற்குரியது; பேருந்துக்குரியது என்ற பாகு பாடெல்லாம் கிடையாது. இந்த டிக்கெட்டில் இந்தத் தடத்தில் பஸ்ஸில் அல்லது டிராமில் தான் போக வேண்டும் என்பதில்லை. மூன்று மாதத்திற்கு டிராமிலும் பேருந்திலும் பயணம் செய்து கொண்டே இருக்க லாம். ஒருநாள் டிக்கெட், மூன்று நாள், ஒருவாரம் வரை யார் வேண்டு மென்றாலும் வாங்கிக் கொள்ளலாம் போலும். ஆனால் ஒரு மாதம் அல்லது மூன்று மாதம் எனச் சீசன் டிக்கெட் வாங்க முதலில் நீண்ட வரிசையில் நின்று தினசரி பயணம் செய்ய வேண்டியவர்கள்(மாணவர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் போல) என்பதற்கான அடையாள அட்டையைப் பெற்றாக வேண்டும் .
அது புகைப்படம் ஒட்டிய டிஜிட்டலைஸ்டு அட்டை. அதை வாங்கி விட்டால் ஒவ்வொரு முறையும் நீட்டித்துக் கொள்வதில் சிக்கல் எதுவும் இல்லை. எனது பாஸ்போர்ட், பல்கலைக்கழகப் பேராசிரியர் என்பதற்கான கடிதம் ஆகியவற்றைக் காண்பித்து இரண்டாவது நாளே அடையாள அட்டையை வாங்கியதோடு மூன்று மாத சீசன் டிக்கெட்டையும் வாங்கிக் கொண்டேன். இனி நான் எல்லா இடத்திற்கும் அந்த அட்டையோடு போனால் போதும். பாஸ்போர்ட்டைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டிய தில்லை. போலந்து தேசம் தனது அரசாங்கத்தின் வாகனங்களில் பயணம் செய்யும் பயணியாக அங்கீகரித்ததின் மூலம் என்னைச் சொந்த நாட்டுப் பிரஜையாக ஏற்றுக் கொண்டதைப் போல உணர்ந்தேன். பொதுப் போக்குவரத்து இங்கு மட்டுமல்ல, எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் சிறப்பாக இருப்பதாகவே நண்பர்கள் சொல்கிறார்கள்.
அரசாங்கம் நடத்தும் போக்குவரத்து வாகனங்களில் நடத்துநர்கள் இல்லை. ஓட்டுநர்கள் மட்டும் தான். 30 கிலோ அளவுக்கு வீட்டுச் சாமான்களை வாங்கிக் கொண்டு பேருந்திலும் டிராமிலும் பயணம் செய்யும் பெரியவர் களும், குழந்தைகளைத் தள்ளுவண்டியில் தள்ளிக் கொண்டே வந்து வண்டியோடு ஏறுபவர்களும் மிகுந்த மரியாதையோடு இடமளித்து உள்வாங்கப் படுகிறார்கள். சிறுவர்களும் இளைஞர்களும் ஓரத்துச் சாலைகளில் ஓட்டி வரும் சைக்கிளை அப்படியே உள்ளே கொண்டு வந்து நிறுத்திக் கொள்கிறார்கள். அல்லது மடக்கி வைத்துக் கொள்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளின் வண்டிகள் வந்தால் டிராமின் பாதை வெளியே நீண்டு அவர்களை உள்வாங்கிக் கொள்கிறது. அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் பாதை திரும்பவும் பக்க வாட்டில் நீண்டு பிளாட்பாரத்தோடு இணைக்கிறது. பயணிகள் அவர்கள் இறங்க உதவுகிறார்கள். உதவ யாரும் இல்லையென்றால், டிரைவரே இறங்கி வந்து மாற்றுத்திறனாளியை இறக்கி வண்டியை நகர்த்தி விட்டுச் செல்கிறார்.
டிக்கெட் இல்லாப் பயணம் என்பது அதிகம் இல்லை என்றார்கள். ஆனால் ஒருநாள் எந்தச் சத்தமுமில்லாமல் பரிசோதகர்கள் ஏறி சோதித்துத் தண்டத்தை எழுதி ஒரு சில பயணிகளின் கையில் திணித்துச் சென்றதைப் பார்க்க முடிந்தது. அவர்களும் காரணங்கள் சொல்லாமல் வாங்கிக் கொண்டார்கள் .டிக்கெட் இல்லாத பயணிகளைக் குற்றவுணர்வுக்குள் தள்ளவில்லை. பரிசோதகர்கள் வரும்போது சீசன் டிக்கெட் அல்லது ஒருநாள் டிக்கெட் என எதாவது ஒன்றைக் காட்ட வேண்டும். நீங்கள் காட்டும் டிக்கெட் இன்றைக்குச் செல்லுமா? என்று மட்டும் தான் பார்க்கிறார்கள். செல்லாது என்றால் தண்டம் கட்ட வேண்டியது தான்..
கைவசம் கொண்டு போயிருந்த ஈரோவையும் டாலரையும் ஜுலாட்டியாக மாற்றிக் கொண்ட பின் தெம்பாக இருந்தது. ஜுலாட்டி மட்டும் தான் அங்கு செல்லுபடியாகும் பணம். ஒரு ஜுலாட்டியின் மதிப்பு 15 ரூபாய்க்கும் கூடுதலாக இருக்கிறது., அலைபேசிக்கு சிம்கார்டு வாங்கியதும் சீசன் டிக்கெட் வாங்கியதும் தான் முதலில் செலவழித்த முக்கியமான செலவுகள். நமது காலத்தில்  நம் வார்த்தைகள் நமக்கு முன்னே செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது; வார்த்தைகளின் பின்னே உடலின் பயணம். அப்புறம் தான் மனம்.
அன்று வகுப்பு இல்லை என்பதால் தூதரகத்திற்குச் செல்ல வேண்டும் என்பது திட்டம். இந்தியத் தூதரகம் தான் எனக்குச் சம்பளம் தரப்போகின்றது. அங்கிருக்கும் கணக்காளரிடம் நான் ஆரம்பித்துள்ள வங்கிக் கணக்கு எண்ணைத் தர வேண்டும். சிட்டி வங்கியில் தான் கணக்கு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதால் அந்தக் கணக்கை ஆரம்பித்த ஆதாரத்தோடு தூதரகம் சென்று அரை மணிநேரத்தில் திரும்பி விட்டேன்.. தூதரகத்திலிருந்து திரும்பி வரும்போது  இடைவெளி இல்லாமல் உயர்ந்து நிற்கும் கட்டிடங்களை நின்று நிதானமாகப் பார்க்கும் ஆசை கூடிக் கொண்டே இருந்தது. புத்தம் புதிய கட்டிடங்களாக இல்லாமல் பழைமை பூசிய கட்டிடங்கள். போலந்து நாட்டுத் தரையில் கால் வைத்து மிதித்துப் பார்க்கும் ஆசையும் இருந்தது. போட்டிருக்கும் ஷூவைக் கழற்றி விட்டு நாலெட்டு தான் வைத்தேன். குளிரின் வேகம் உள்ளங்கால் வழியாகச் சில்லிட்டு மேலேறியது. கடிகாரத்தில் மணி 11.40 என்றிருந்தது
நகரத்தெருக்களின் சாலைகளில் பெரும்பாலும் கற்கள் பாவப்பட்டிருந்தன. கருங்கற்களாக இல்லாமல் சிவப்பும் நீலமும் பிசைந்தோடிய கோடுகள் அவற்றில் நெளிந்தன. பழைய வார்சாவின் பெரும்பாலான தெருக்கள் கற்கள் பாவியன. அதைப் பார்த்த போது கற்கள் அதிகம் கிடைக்கும் இந்தியாவில் தார்ச்சாலைகளுக்குப் பதிலாகக் கற்களைப் பாவினால் என்ன? என்று தோன்றியது.  அடுத்த நாள் டாடா மோட்டார்ஸில் பொறியாளராக வேலை பார்க்கும் தமிழர் சந்திரசேகரின் காரில் பயணம் செய்த போது நினைவில் வைத்துக் கேட்டேன். கற்கள் பாவிய தெருக்கள் நவீன கார்களின் வேகத்திற்கு ஏற்றவை அல்லவாம். மழை நாட்களில் வழுக்கிக் கொண்டு போகும் ஆபத்தும் இருக்கிறதாம்.. தார்ச்சாலைகளும் சிமெண்ட் சாலைகளுமே நவீன அதிவேகக் கார்களுக்கு ஏற்றவை என்றார். நின்றிருந்த காரொன்றின் பின்னால் சென்று திரும்பவும் ஷூவை மாட்டிக் கொண்டு நடந்த போது 4 ஆம் எண் டிராம் வருவது தெரிந்தது. நான் போவதற்குள் நிறுத்தத்தை கடந்து விடும். போனால் போகட்டும். அதிகம் போனால் 15 நிமிடம் காத்திருக்க வேண்டும். இன்னொரு 4 ஆம் எண் டிராம் வந்து விடும். ஏறி உட்கார்ந்ததும் திரும்பவும் கடிகாரத்தைப் பார்த்தேன் மணி 12.05.
நகரத்தின் நடுவில் எட்டு வழிச் சாலைகள் அளவுக்குப் பெரிய சாலைகள் பேருந்துகள் ஓடும் சாலைக்கு இணையாகவே டிராம் வண்டிகளுக்கான தண்டவாளங்கள். டிராமிலிருந்து இறங்கி பேருந்திலும் பேருந்திலிருந்து இறங்கி டிராமிலும் செல்லும் விதமாக அருகருகே நிறுத்தங்கள். ஒவ்வொரு நிறுத்தத் திலும் இறங்கி ரயில்வே பாலங்களில் ஏறி இறங்கிச் சென்று டிக்கெட் வாங்க வேண்டும் என்ற தொல்லையில்லாத வகையில் கட்டண அமைப்புடன் கூடிய பயணச்சீட்டுகள்.  நடந்து செல்பவர் களுக்கெனச் சாலையோரங்களில் மரங்கள் நிரம்பிய நடை பாதைகள். நடைபாதைகளை ஆக்கிரமிக்க முடியாத கடைகள். பயணம் செய்யும் ஆசையும் விருப்பமும் இருந்து விட்டால் மட்டும் போதும் போய்க் கொண்டே இருக்கலாம். வார்சாவின் சாலைகளில் இன்னும் ஒருவாரத்தில் குறுக்கும் நேடுக்குமாகப் பயணம் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.
வெளியில் போய் விட்டால் வீடு திரும்ப மனம் வராது என்பது போல வீட்டிற்கு வந்து விட்டால் வெளியே கிளம்புவதும் கஷ்டமான ஒன்றுதான். பாண்டிச்சேரியிலும் திருநெல்வேலியிலும் பர்முடாஸும் டிசர்ட்டுமாகக் கிளம்பி மீன் வாங்கவும் சிக்கன் வாங்கவும் கிளம்பும் ஆசாமி நான். காலில் வெறும் ஹவாய்ச் செருப்புக்கள் போதும். ஆனால் இங்கு அப்படிக் கிளம்பி விட முடியாது. நாம் குடியிருக்கும் வீட்டின் வாசல் கதவைத் தாண்டும் போது ஜீரோ டிகிரிக்கும் கீழுள்ள குளிரில் நுழைகின்றோம் என்பது நினைவுக்கு வர வேண்டும். குளிராடைகள் அணிவதின் சிரமங்கள் மட்டுமல்ல, அவற்றைக் களைவதும் ஒரு பயிற்சி தான். ஒரு கட்டடத்தை விட்டு வெளியேறும் போது காலில் ஸாக்ஸுகள், ஷூக்கள் மட்டுமல்லாமல் உடலோடு ஒட்டிப் பிடித்திருக்கும் இன்னர்களும் அணிந்தாக வேண்டும். அவற்றின் மேல் ஜீன்ஸ் அல்லது காட்ராய் பேண்டுகள் அணிவது உத்தமமானது. இடுப்புக்கு மேலும் உள்ளாடை களோடு ஸ்வொட்டர்கள், கைகள், தலை என மொத்தமாக மறைத்துக் காட்டும் குளிர் தடுக்கும் கவச ஆடைகள் அணிந்த பின் கைக்கும் க்ளவுஸ்கள் போட்டாக வேண்டும். அல்லது பேண்டுப் பாக்கெட்டுகளுக்குள் கையை விட்டுக் கொண்டு நடக்க வேண்டும். தலையில் குல்லா போடுவதுடன் கழுத்தில் மப்ளர் கட்டுவது மிக முக்கியம். குளிரின் நுழைவிலிருந்து அதிகம் காப்பாற்ற வேண்டிய பகுதிகள் கழுத்து, காது, கால்கள், கைகள் எனப் பலரும் எச்சரித்து விட்டனர். கைகளும் கால்களும் விறைத்துப் போவதை விட ஆபத்தானது தொண்டை கட்டிக் கட்டிக் கொள்வது. கம்பளியால் ஆன மப்ளர்களைக் கழுத்தில் கட்டிக் கொள்ளாமல் வெளியே கிளம்புவது எந்த விதத்தில் சரியல்ல என்பதை மாணவிகளும் சொன்னார்கள்; நண்பர்களும் உறுதி செய்தார்கள்.
கிளம்பும் போது அணியும் இத்தனைப் பாதுகாப்புக் கவசங்களையும் ஒரு கட்டிடத்திற்குள் நுழைந்தவுடன் கழற்றியாக வேண்டும். இல்லையென்றால் உங்கள் உடல் புழுக்கத்தை உணரும். கொஞ்ச நேரத்தில் வியர்வை முதுகில் ஓடக் கூடும். ஏனென்றால் ஒவ்வொரு கட்டிடமுமும் குறிப்பிட்ட வெப்பத்தில் இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கின்றன. நாம் உணராத வகையில் வெப்பம் ஒவ்வொரு அறையிலும் பரவிக்கொண்டே இருக்கிறது. வெப்ப நாடுகளில் ஏர்கண்டிஷண்டு அறைகளில் – காற்றைக் கட்டுப்படுத்திக் குளிரூட்டம் செய்வதுபோல் ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் வெப்பமூட்டும் வேலையைச் செய்திருக்கிறார்கள். ஒரு வீட்டிற்குள் நுழையும் போது காலணிகள் வைப்பதற்கு இடம் ஒதுக்குவது போல, ஒவ்வொரு கட்டடத்திற்குள்ளும் கோட்டுகளையும் தொப்பிகளையும் கழற்றித் தொங்க விடுவதற்கெனத் தனி இடங்கள் உள்ளன.  நமது உடைகளை அங்கு தொங்க விட்டு விட்டுப் போனால் தான் உள்ளே நாம் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய முடியும்.
நிறுத்தங்களிலிருந்து பேருந்துக்குள் நுழைபவர்களும் சரி, டிராம்களுக்குள் புகுந்து கொள்பவர்களும் சரி நுழைந்தவுடன் செய்வது கவச ஆடைகளைத் தளர்த்துவதுதான், ஏனென்றால் போக்குவரத்து வாகனங் களும் வெப்பம் பரவும் வசதியுடன் தான் உள்ளன. 12.05 –க்குத் தூதரகத் திலிருந்து வந்து நான் ஏறிய  வண்டி அடுத்த நிறுத்தத்திற்குச் செல்வ தற்குள் மப்ளரையும் தொப்பியையும் தளர்த்தி விட்டேன். பத்துக்கும் அதிகமான நிறுத்தங்களைத் தாண்ட வேண்டும், மதிய வேளை என்பதால் டிராமில் அவ்வளவு கூட்டமில்லை. இரண்டு மூன்று நிறுத்தங்களைத் தாண்டிய பின் டிரைவரிடமிருந்து ஏதோ அறிவிப்பு வந்தபோது எல்லாரும் இறங்கினார்கள். அறிவிப்பின் அர்த்தம் தெரியாமல் நான் உட்கார்ந்திருந்தேன், டிரைவர் என்னருகே வந்து எதோ சொன்னார். வெளியே கையைக் காட்டிப் பேசினார். வெளியில் போலிஸ்காரர்கள் ஒரு வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். எதிரே வரும் தண்டவாளத்திலும் ஒரு டிராம் நின்று கொண்டிருந்தது. வெடிகுண்டு அச்சுறுத்தல் எதுவும் இருக்குமோ என்று மனம் நினைத்தது. கொஞ்சம் பதற்றத்தோடு இறங்கியபோது பத்துப் பன்னிரண்டு பேர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். டிராம் உரசிச் செல்லும் மின்சார வயர்கள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தன, தரையிலும் விழுந்து கிடந்தன.. உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டதால் டிராம் போக்குவரத்துத் தானாக நின்று போனது என்பது எனக்குப் புரிய ஆரம்பித்தது.
வெடிகுண்டு அச்சுறுத்தலும் இல்லை; விபத்தும் நேரவில்லை என்பது மனத்திற்கு ஆறுதலாக இருந்தாலும் எப்படி வீடு போய்ச் சேருவது என்பது இப்போது  எனது கவலையாகி விட்டது.  டிராம் தவிர நான் இருக்கும் இடத்திற்குப் பஸ்ஸில் இதுவரை போனதே இல்லை. இரண்டு தடவை காரில் போயிருக்கிறேன். டாக்ஸியில் ஏறலாம் என்றால் ஆங்கிலம் தெரிந்த டாக்ஸி டிரைவர் அகப்பட வேண்டும். பொதுப்போக்குவரத்தோடு ஒப்பிட டாக்ஸிகள், கார்கள் பல மடங்கு அதிகம். மாணவிகள் தந்த தொலைபேசியில் அழைத்து என்ன செய்யலாம் என்று கேட்கலாம் என்றால் இந்த நேரத்தில் அவர்கள் வகுப்பில் இருப்பார்கள். அப்படி அழைத்துத் தொல்லை தருவது ஒரு ஆசிரியருக்கு அழகல்ல என்று மனம் சொன்னது. நடராஜா சர்வீஸ் தான் சரியென தைரியமாக முடிவெடுத்து நடக்கத் தொடங்கினேன். கையில் காமிரா வேறு இருந்தது.
இலையுதிர்க் காலத்து மரத்தடிகளையும் வண்ணம் மாறிய இலைகளையும், வெளிச்சமின்றிச் சிணுங்கும் பூக்களையும் காமிரா உள்ளே வாங்கிக் கொண்டே வர நடந்து கொண்டிருந்தேன். கையில் காமிராவுடன் இருந்ததால் படம் எடுக்கவே இப்படி நிற்கிறேன் எனவும், நடக்கிறேன் எனவும், கருதி, என் எதிரே வருபவர்கள் பலரும் என் மேல் மோதுவது போல வந்து அருகில் வந்தவுடன் விலகிச் சென்றார்கள்.  அப்போதுதான் முதல் நாள் மாணவி மர்ஷியா சொன்னது நினைவுக்கு வந்தது. வலது நமது பக்கம் என்பதுதான் அவர் சொன்னது.
இங்கே நாம் வலதுசாரியாக மாறித் தான் ஆக வேண்டும்.  வலது பக்க மாகவே நடக்க வேண்டும். பாதாள சாலைகளுக்குள் ஏறி இறங்கும் எக்ஸ்கிலேட்டர்களில் வலது புறம் தான் நிற்க வேண்டும். இந்தியாவில் நடப்பது போல இடது புறமாக நடப்பதும், இடது பக்கம் தான் நிறுத்தம் இருக்கும் எனத் தேடுவதும் கூடாது எனச் சொல்லியிருந்தார். ஆனாலும் கால்கள் இடது புறத்தையே நாடிச் செல்கின்றன. இந்தியர்கள் இடதுசாரி களாக இருப்பது கம்யூனிச நாடுகளின் நட்பால் விளைந்த பயன் அல்ல. உலகின் அதிதீவிர வலதுசாரி நாடான இங்கிலாந்தின் காலனியாக இருந்ததின் பலன். ஆம். இங்கிலாந்தும் அதன் காலனித்துவத்தை ஏற்றுக் கொண்ட நாடுகளும் தான் இடதுசாரிப் பாதைக் கொள்கையைப் பின்பற்றுகின்றன. மற்ற நாடுகள் பெரும்பாலும் வலது பக்கச் சார்புதான். அதுதான் அவற்றின் பயணக் கொள்கை. நான் கொஞ்சம் கொஞ்சமாக வலதுசாரியாக மாறிக் கொண்டிருக்கிறேன்.                                           

No comments :