November 28, 2011

;கலைப்பாடங்களின் அழிவு


ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்னும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கற்றுத்தந்த பாடங்கள் மூன்று பெரும் பிரிவுகளாகவே இருந்தன, இன்றளவும் கூடப் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் அறிவியல் புலம், சமூக அறிவியல் புலம், மொழிப்புலம் என மூன்று புலங்கள் தான் இருக்கின்றன.
ஆனால் இம்மூன்று புலங்களும் பல்வேறு துறைகளைக் கண்டறிந்து வளர்ச்சி பெற்ற நிலையைத் தொண்ணூறுகள் வரை ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் காண முடியும்,
தொடக்கத்திலிருந்தே மொழிப்புலங்கள் இந்திய மொழிகளையும் காலனியாட்சியாளர்களின் மொழியான ஆங்கிலத்தையும் கற்றுத் தருவதில் அதிகக் கவனம் செலுத்தின. ஆனால் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தேவையையொட்டி பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் போன்ற ஐரோப்பிய மொழிகளோடு ஜப்பானிஷ், சீனம், மலாய் போன்ற ஆசிய மொழிகளையும் மொழிப்புலங்கள் கற்றுத் தரும் துறைகளைத் தொடங்கி நடத்துகின்றன.
அதே போல் அடிப்படை அறிவியல் துறைகளான கணிதம், இயல்பியல், வேதியியல், உயிரியல் ஆகியனவற்றைக் கற்றுத்தரும் துறைகளைக் கொண்டிருந்த அறிவியல் புலம் ஒவ்வொரு அடிப்படை அறிவியல் துறைகளிலிருந்தும் புதிய புதிய துறைகளைத் தொடங்கிக் கொண்டது.  உயிரித் தொழில் நுட்பவியல், கடல்சார் உயிரினவியல், சுற்றுச் சூழலியல், புள்ளியியல், கணினி அறிவியல், கனிம வேதியியல், மருந்தாக்க வேதியியல், அணுநிலை இயல்பியல், நானோ தொழில்நுட்பவியல் போன்ற அறிவியல் துறைகள் புதிதாகத் தோன்றி மாணாக்கர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் கலைப்பாடங்கள் என அழைக்கப்படும் சமூக அறிவியல் புலத்தின் நிலையோ இதற்கு மாறான வரலாற்றோடு விளங்குகிறது.
மனிதர்கள் தனிமனிதர்களாகவும் கூட்டமாகவும் வளர்ந்து நாகரிகம் அடைந்த வரலாற்றையும் இருப்பையும் எதிர்காலத்தில் உருவாகப்போகும் சிக்கல்களையும் படிப்பதற்கும் விளக்குவதற்கும் உதவும் துறைகளாகக் கருதப்பட்ட சமூக அறிவியல் துறைகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் கல்வித்துறை தொடர்ந்து ஊக்கமளித்து முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தது. மைய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் உதவியோடு கால் நூற்றாண்டுக்கு முன்னால் பல்வேறு சமூக அறிவியல் துறைகள் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தொடங்கப்பட்டன. மானிடவியல், உளவியல், தத்துவம், இறையியல், பண்பாட்டியல், சமயவியல், நாட்டார் பண்பாட்டியல் போன்றன அப்படித் தொடங்கப்பட்ட துறைகளில் முக்கியமானவை.
மனித நாகரிகத்தின் வரலாற்றில் நீண்ட தொடர்ச்சி கொண்ட இந்திய துணைக்கண்டம் சமூக அறிவியல் துறைகளின் ஆய்வுக்கான களமாக இருக்க முடியும் என்ற அடிப்படையில் தொடங்கப்பட்ட இத்துறைகள் எல்லாம் பல்கலைக்கழகங்களிலேயே மாணவர் சேர்க்கை இன்மையால் மூடப்படும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன, ஆய்வுத்துறைகளின் நிலைமை மட்டுமல்ல அடிப்படைக் கலைப்பாடங்களான வரலாறு, சமூகவியல் , புவியியல், பொருளாதாரம், போன்ற பாடங்களுக்கே சேர்க்கை விகிதம் நம்பிக்கை ஊட்டும் விதமாக இல்லை. அதற்கான அடிப்படைக் காரணம் நாம் நமது இளைய தலைமுறையினரிடம் கல்வியைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் மனநிலை தான் எனச் சொல்லத் தோன்றுகிறது. பள்ளிக் கல்வியை முடிக்கும் ஒவ்வொரு மாணாக்கரும் வேலை வாய்ப்புள்ள பொறியியல் துறைப்பாடங்களையும், மருத்துவத்துறைப் பட்டங்களையும், தகவல் தொழில் நுட்பவியல் பட்டங்களையுமே நாடிச் செல்லும்படி தூண்டப்படுகின்றனர். இந்தப் போக்கு ஆரோக்கியமான போக்கு அல்ல. வேலைக்கானது கல்வி என்ற மனநிலையை உருவாக்கி விட்ட நாம் அவற்றிலிருந்து சுலபமாக இளைய தலைமுறையைத் திருப்ப முடியாது என்ற போதிலும் சமூக அறிவியல் துறைகளான சமூகவியல், வரலாறு, மானிடவியல், பொருளாதாரம், ஊடகவியல், தத்துவம் போன்ற பாடங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
மனிதர்களின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பேசுவதற்கான மனிதர்களும் விளக்குவதற்கான அறிஞர்களும் இல்லாமல் போகும் ஒரு சமூகம் ஆபத்தான சமூகமாக ஆகி விடும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அத்தோடு மொழியின் நுட்பமான விளையாட்டுக் கருவியான இலக்கியத் துறையும் வளர்த்தெடுக்கப் பட வேண்டும். மனிதவாழ்வு சார்ந்த சிக்கல்களும் ரசனையுமே நம்மைத் தொடர்ந்து சிந்திக்கின்றவர்களாகவும் சிக்கல்களை விடுவிக்கின்றவர்களாகவும் வளர்த்தெடுக்கும். இது புரியாவிட்டால் கலைப்பாடங்களின் அழிவு ஆபத்தான எதிர்காலத்தின் அடையாளம் என்பதை நாம் உணர முடியாது.

No comments :