Huwebes, Agosto 27 2009

சொல்லும் செயலும் வேறெனக் கொண்டால்..?

2009 தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த போது இலங்கைப் பிரச்சினை உறுதியாகத் திசை திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதை மனம் சொல்லத் தொடங்கியது. தீவிரமாக நடந்த ஈழ யுத்தம் தேர்தலுக்கு முந்திய நாள் ஒரு முடிவுக்கு வந்து விட்டது போலச் சர்வதேச ஊடகங்கள் செய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்தன.ஒரு வேளை இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி மாறிப் புதிய ஆட்சி வந்தால் இலங்கைப் பிரச்சினை வேறு வடிவம் எடுக்கக் கூடும் எனக் கருதிய இலங்கை அரசு தீவிரமாகப் போரை நடத்தி முடித்து விட்டுத் தேர்தல் முடிவோடு சேர்த்து சொல்ல வேண்டும் எனக் காத்திருந்தது போல முல்லைத் தீவு வெற்றியைக் காங்கிரஸின் வெற்றியோடு சேர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தது.எனக்குக் கால் நூற்றாண்டுக்கு முன்பு எழுதப் பட்ட அந்தக் கதையைத் திரும்பவும் எடுத்து வாசிக்க வேண்டும் என்று தோன்றியது. எடுத்து வாசித்து விட்டு அடையாளத்திற்கு ஒரு தாளில், “சொல்லும் செயலும் வேறெனக் கொண்டால்” என எழுதி மூடி வைத்திருக்கிறேன். கதையின் தலைப்பு: ஒரு லட்சம் புத்தகங்கள். எழுதியவர் சுஜாதா. எழுதப் பட்ட ஆண்டு 1982.

பாரதி நூற்றாண்டை ஒட்டி ஆனந்த விகடன் அந்தத் தொடரை வெளியிட்டது. பாரதியின்வரிகளை மையப்படுத்திக் கதைகளை எழுதினார்கள் எழுத்தாளர்கள். மாலன் தொடங்கி வைத்த அந்த வரிசை பாலகுமாரன், ஸ்றீவேணுகோபாலன், வண்ணநிலவன், சுஜாதா, ராஜேஷ்குமார் வைரமுத்து என ஏழு பேருடைய கதைகளுடன் நின்று போனது. பாரதி நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக ஆண்டு முழுவதும் ஐம்பத்திரண்டு கதைகளை ஆனந்த விகடன் வெளியிடும் என எதிர்பார்த்தேன். நான் மட்டுமல்ல; என்னைப் போன்ற இலக்கிய மாணவர்களின் ஆசையும் அதுவாக இருந்தது. ஆனால் ஏழு கதைகளை வெளியிட்டதுடன் ஏன் நிறுத்தப் பட்டது என்று தெரியவில்லை. பின்னர் அந்த ஏழு கதைகளும் அதே ஆண்டிலேயே புத்தகப் பண்ணை வெளியீடாக பாரதிநிலையத்தால் வெளியீடப்பெற்றது. தொகுப்பின் தலைப்பு : பாரதி சிறுகதைகள்.
பத்திரிகையில் வந்தபோது வாசித்திருந்தாலும் புத்தகமாக வந்தபோதும் வாங்கி வைத்து அவ்வப்போது வாசித்துப் பார்த்துக் கொள்வேன். ஏழு கதைகளில் இரண்டு கதைகள் எப்போதும் மறக்காத கதைகள் எனச் சொல்வேன். இலங்கைத் தமிழரின் தனிநாட்டுத் தாகம் தீராததன் காரணமாகச் சுஜாதாவின் ஒரு லட்சம் புத்தகங்கள் மறக்காமல் இருக்கிறது என்றால் வண்ணநிலவனின் துன்பக்கேணி நினைவை விட்டு அகழாமல் இருக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. அக்கதை குறித்துப் பின்னர் எழுதலாம். இப்போது சுஜாதாவின் கதை.

’சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’ என்ற வரியைத் தனது கதைக்கான அடிக்கருத்தாக சுஜாதா தெரிவு செய்திருந்தார். சுஜாதாவின் கதைப்பின்னணியாக யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட ஆகஸ்ட் கலவரத்தில் அரசின் ஆதரவுடன், அதன் போலீஸ்காரர்களால் நூலகம் சிதைக்கப்பட்டதும், தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரியதான அந்த நூலகத்தின் ஒரு லட்சம் புத்தகங்கள் எரிக்கப் பட்ட நிகழ்வும் இருந்தது. அதை வாசிக்கும் போது சிங்கள அரசின் தமிழ் விரோதம் பளிச்சென வெளிப்படாமல் போகாது. தமிழ் அடையாளத்தின் ஆன்மாவாக இருக்கும் நூலகத்தை எரிப்பது மூலமாக தமிழர்களின் தனி நாடு கோஷத்தை இல்லாமல் ஆக்கி விடலாம் என அந்நாட்டு அரசு கருதியதும் அக்கதைக்குள் விவாதிக்கப் பட்டிருந்தது. அக்கதையை முதலில் வாசிப்பவர்களுக்கு சிங்கள அரசின் தமிழ் விரோதமே முதலில் தோன்றும் என்றாலும், சுஜாதாவின் முதன்மையான நோக்கம் அதுவல்ல என்பதை இன்னொரு முறை வாசிக்கும் போது தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

கதை நடக்கும் வெளி ஒரு கருத்தரங்க மாநாட்டுக் கூடம். கருத்தரங்கத்தின் பிற்பகல் அமர்வு தொடங்குவதற்கு முன்பு கதை அந்த அமர்வு நடந்து கொண்டிருக்கும் போது கதை முடிந்து விடுகிறது. கதையில் பெயர் குறிப்பிடப் படாமல் பல பாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. அவை எதுவும் கதைக்கு முக்கியமில்லை. கதையில் பெயர் குறிப்பிட்டு இடம் பெறும் ஆறேழு பாத்திரங்களும் கூட முக்கியமில்லை. முக்கியமான இரண்டு பாத்திரங்கள் டாக்டர் நல்லுசாமியும் செல்வரத்னமும் மட்டும் தான்.

பாரதி பற்றிய சிறப்புக் கருத்தரங்கில் தலைமை தாங்க வந்துள்ள டாக்டர் நல்லுசாமி. அறியப்பட்ட தமிழறிஞர். பாரதியின் கவிதைகளில் தோய்ந்த புலமையாளர். தமிழ் சார்ந்த மாநாடுகளில் கட்டுரைகள் வாசிப்பதற்காகப் பல நாடுகளுக்கும் சென்று வந்தவர். இந்தக் கருத்தரங்கின் முடிவில் சிறப்புரை ஆற்ற வரும் அமைச்சர் அவரது செயல்பாட்டைப் பார்த்து விட்டு அங்கேயே அவரைப் பாரதி பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக ஆக்க உள்ளதாகச் செய்தி அந்த அரங்கில் பரவி உள்ளது. கருத்தரங்கிற்கு வந்த பலரும் அதனை அறிந்து பாராட்டிக் கொண்டிருக் கிறார்கள். அந்த நேரத்தில் தான் அந்த இளைஞன் செல்வரத்னமும் வருகிறான்.

முதலில் அவருக்கு அவனை அடையாளம் தெரியவில்லை என்ற போதிலும், அவர் இலங்கை வந்த போது தனது வீட்டிற்கு வந்தது; விருந்துண்டது; இலங்கையில் இருக்கும் தமிழர்கள் இரண்டாம் தரக்குடிகளாகக் கருதப்படும் நிலை பற்றி உரையாடியது எனப் பழையனவற்றைச் சொன்னபின் நினைவுகள் திரும்பியவராய் அன்புடன் அளவளாவுகிறார். அவனது குடும்பம் பற்றியும்,வீட்டிற்குப் போன போது நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி என்ற பாரதியின் கவிதையைப் பாடலாகப் பாடிய அவனது தங்கச்சியையும் விசாரிக்கிறார். அங்கே நடந்த கலவரம் பற்றி அறியாமல் இருந்த அவருக்கு யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது; இளைஞர்கள் கொல்லப்பட்டது; இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டது பற்றிச் சொன்ன அவன், அந்தக் கலவரத்தில் அவன் குடும்பத்தில் அவன் மட்டுமே மிச்சமிருப்பதாகவும், அவன் தங்கை நடுவீதியில் துகிலுரியப்பட்டதையும் ஆவேசத்துடன் சொல்கிறான்.

கேட்டவர் பரிதாபப்பட்டு உங்களுக்கு எந்த வகையிலாவது எனது உதவிகள் தேவையா? எனக் கேட்கிறார். அதற்கு எனது சொந்த சோகத்தை விடவும் தமிழ் மக்களின் துயரமே இங்கு சொல்லப்பட வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் அந்த நிகழ்வுகளைச் சொல்ல விரும்புகிறேன். தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் மீது கொண்டிருக்கும் பற்று உண்மை யானதல்ல; வெறும் பேச்சளவில் தான் அவர்களது பற்று உள்ளது. உண்மையில் தமிழகத் தமிழர்களின் ஈழப்பற்று என்பது சுயநலம் சார்ந்தது; எதிர்பார்ப்புகளுடன் கூடியது. இதையும் அவன் சொல்லப் போவதாகவும், சொல்லி முடித்தபின் தமிழ்நாட்டுத் தமிழர்கள் சொல்லையும் செயலையும் பிரித்து வைத்திருக்கும் விநோதத்தைச் சுட்டிக் காட்டி இந்தக் கருத்தரங்க மலரை தனது பேச்சின் முடிவில் எரிக்கப் போவதாகவும் கூறுகின்றான்.

அவருக்கு அது உவப்பானதாகப் படவில்லை. காரணம் அவரது பேச்சு மட்டுமே அன்று சிறப்பானதாகக் கவனிக்கப்பட வேண்டும் எனக் கருதுகிறார். இடையில் இவன் இப்படிப் பேசி எதையாவது செய்வதால், கருத்தரங்கம் திசை மாறி அமைச்சர் கோபம் கொள்ளக் கூடும். அதனால் தனக்குக் கிடைக்க இருக்கும் துணைவேந்தர் பதவி கூடக் கிடைக்காமல் போகும் வாய்ப் பிருக்கிறது எனக் கருதுகிறார். தனது மென்மையான பேச்சின் வழியாக அதைத் தடுக்கும் விதமாகப் பேசிப் பார்க்கிறார். நடப்பது பாரதிபற்றிய கருத்தரங்கம்; அதனால் அவனைப்பற்றிய கருத்துக்களைப் பேசுவதே சரியாக இருக்கும். இந்த மேடையை உங்கள் ஆவேசத்திற்குரியதாக மாற்றி விட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறார். ஆனால் அவன் பாரதியின் மனிதநேயக் கருத்துக்களை- பிஜித் தீவு மக்களுக்கும், பெல்ஜியத்திற்கும் புதிய ருஷியாவிற்கும் வரவேற்பு சொன்ன சர்வதேசக் கவிஞன். அவன் இருந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்காகக் கதறவே செய்திருப்பான். ஒரு லட்சம் புத்தகங்கள் எரிந்து விட்டது.நாடற்றவர்களாக நிற்கும் ஆறு லட்சம் மனிதர்கள் எங்கே போவார்கள். எனவே இங்கே சொல்வதே சரியானது என உறுதியாகச் சொல்லி விட்டுச் செல்கிறான்.
டாக்டர் இப்போது அதைத் தடுத்தாக வேண்டும் என நினைக்கிறார். மறைமுகமாக அதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி அடைகிறார். அவரது மனைவிக்குத் தொலைபேசியில் பேசி, அவளது அண்ணனை வைத்துப் போலீசுக்குப் பேசி,செல்வரத்னம் அவனது உரையை நிகழ்த்தாத வாறு தடுத்து விடுகிறார். அடுத்த நாள் செய்தித்தாளில் டாக்டர் நல்லசாமியை பாரதி விழாக் கூட்டத்தில் துணைவேந்தராக அறிவித்த செய்தி வந்திருக்கிறது. ஆனால் செல்வரத்னத்தின் விசா ரத்து செய்யப்பட்டு உடனடியாகத் திருப்பி அனுப்பப் பட்ட செய்தி வரவில்லை என்பதாகக் கதையை முடித்துள்ளார்.
இந்தக் கதை எழுதப் பட்ட 1982-க்குப் பிறகு ஈழப் போராட்டம் பலவிதமான பரிமாணங்களைத் தாண்டி விட்டது. ஒரு லட்சம் புத்தகங்கள் எரிக்கப் பட்ட இடத்தில் ஒரு லட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். அதற்கும் மேலான எண்ணிக்கையில் நாடற்றவர்களாக - அகதிகளாகத் தமிழர்கள் புலம் பெயர்ந்து அலைந்து கொண்டிருக்கிறார்கள். வழி நடத்திய தலைவர்கள் சோரம் போனார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள். இறுதியாக இரண்டு லட்சம் பேர் கம்பி வேலிக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். என்றாலும் ஈழ ஆதரவுக் கோஷங்கள் இன்னும் வெற்றுக் கோஷங்களாகவே இருக்கின்றன. இலங்கை அரசை எதிர்த்து இங்கே உண்ணாவிரதப் போராட்டங்களும் கண்டனப் பேரணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்திய அரசு இலங்கை அரசை ஆதரிக்கிறது எனக் கூறி, அதனை எதிர்த்துக் கண்டனப் பேரணி நடத்தவோ, இந்திய அரசின் நிலைபாட்டிற்கு எதிராக ஒரு உண்ணாவிரதத்தை நடத்திடும் தைரியம் ஒருவருக்கும் கிடையாது.
தீர்மானமான நிலைபாடுகளைச் சொல்லாமல் ஈழத் தமிழர்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளும் பற்றாளர்களும் திரும்பத் திரும்பச் செய்யும் மோசடிகளை இன்னும் இலங்கைத் தமிழர்கள் உணராமல் இருக்கிறார்கள்.முன்னணிப் படையாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் ஈழ ஆதரவாளர்களின் தமிழ்ப் பற்றும், ஈழப் பற்றும் எப்போதும் சுயநலம் சார்ந்ததாகவே இருக்கிறது என்பதை மறைமுகமாகச் சொல்லும் இந்தக் கதை எப்போதும் அதற்குச் சாட்சியாக இருக்கப் போகிறது.
ஆணெழுதும் பெண்ணெழுத்து : ஜெயந்தனின் அவள்

ஜெயந்தனுக்கு அந்தக் கதைக்கு ஒரு தலைப்பு வைக்க வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை. கதையின் தலைப்பே அவள் என்பது தான். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரு நிகழ்வாக மாறி விட்ட இலக்கியச் சிந்தனை, 1981 இல் வந்த சிறுகதைகளில் ஆகச் சிறந்த கதையாகத் தேர்வு செய்த கதை இது. தேர்வு செய்தவர் கிராமப் புற மனிதர்களை விதம் விதமாக எழுதிக் காட்டிய கி.ராஜநாராயணன்.
ஒரு படைப்பாளி வாசகனிடம் ஒரு பாத்திரத்தை முன்னிறுத்தப் பல காரணங்கள் இருக்கக் கூடும்.அந்தக் காரணங்கள் படைப்பாளிக்குப் படைப்பாளி மாறுபடுவதன் காரணமாகவே பலவிதமான கதைகள் கிடைக்கின்றன. ஒரு பேருந்தில் பயணம் செய்யும் அத்தனை நபர்களும் பார்த்து முகஞ்சுளித்த ஒரு நிகழ்வு படைப்பாளியின் கவனத்தில் முன்மாதிரி நிகழ்வாக மாறி விடும் அற்புதத்தை நீங்கள் கதையாக வாசித்திருக்கக் கூடும். ‘இவள் எல்லாம் ஒரு மனுசியா?’ எனக் காரித் துப்பி விட்டுப் போகும் ஒரு பெண்ணைத் தனது கதையின் நாயகியாக வைத்துக் கதை எழுதி வாசகனின் கவனத்தை ஈர்ப்பதில் தான் கதாசிரியனின் வெற்றி இருக்கிறது.
இந்தியப் புராணங்கள் முன் நிறுத்தும் நளாயினி, திரௌபதி, சீதை போன்ற பாத்திரங்களை இந்திய சமூகம் திரும்பத் திரும்ப நினைத்துக் கொள்வது எதற்காக? என்று யோசித்துப் பாருங்கள். அவர்களின் பொறுமைக்காகத் தான். அந்தப் பொறுமை என்பது பொதுவெளியில் காட்டிய பொறுமை அல்ல. ஏனென்றால் நமது மரபான சமூகமும் இலக்கியங்களும் பெண்களுக்கு பொதுவெளிகளையே உண்டாக்கித் தந்ததில்லை. குடும்ப வெளிக்குள் கணவனிடம் காட்டிய பொறுமையே முன்மாதிரியாகக் காட்டப்படும் பத்தினிப் பெண்களின் அடையாளங்கள். கணவனே கண் கண்ட தெய்வம் என்பதி லிருந்து இந்தியப் பெண் விலகிப் போய்விடக் கூடாது என்பதை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும் முன்மாதிரிகள்.ஒருவிதத்தில் இந்த முன்னிறுத் தல்கள் நிகழ்காலப் பெண்ணைத் தனியாகச் சிந்திக்க விடாமல் ஏற்கெனவே இருக்கும் புராணக் கதாபாத்திரத்தில் நீயும் பொருந்திக் கொள் எனச் சொல்லும் நோக்கங்கள் கொண்டவை.
ஒரு சம்பள நாளின் ஒரு மணி நேரத்தில் கண்ணுச்சாமி என்னும் பியூனின் அப்பாவி மனைவியாகிய அவளை ஒரு நிகழ்காலக் கண்ணகியாக ஆக்கிக் காட்டுகிறார் ஜெயந்தன். ஜெயந்தனின் அவள் கதைக்குப் பின்னாலும் இத்தகையதொரு நோக்கம் தான் இருக்குமோ? கதையைக் கொஞ்சம் நினைவுபடுத்திப் பார்க்கலாம்:
பார்ப்பது பியூன் வேலையென்றாலும் கண்ணுச்சாமி சதா தும்பை நிறத்தில் வேஷ்டியும் ஜிப்பாவுமாக, சட்டமும் சவடாலும் பேசிக்கொண்டிருக்கிறவனின் பொஞ்சாதி அவள். அன்று காலை அவளுக்கும் கண்ணுச்சாமிக்கும் இடையே நடந்த சண்டையில் , ‘இன்னிக்கி ஒன் ஆபீஸுக்கே வந்து ஒன் யோக்கித எல்லாத்தையும் எடுத்து வுடலே , நான் பெரியசாமி மக இல்லை ’ என்று சவால் விட்டு அதன்படி அவன் வேலை பார்க்கும் பஞ்சாயத்து ஆபிஸுக்கே போய் சம்பளம் போடும் மானேஜரைப் பார்த்து , ‘இன்னிக்குச் சம்பளத்தெ எங்கையில கொடுங்க, சாமி!’என்று கேட்டு விடுகிறாள். அவள் நிலையைக் கண்டு, சட்டத்திலும் நடைமுறையிலும் அப்படிக் கொடுப்பதற்கு இடமில்லை என்பதால் மானேஜர் கண்ணுச்சாமியை அழைத்துப் பேசி அவர் முன்னாலேயே அவனது சம்பளப் பணத்தே அவளிடம் தரச் சொல்கிறார். ஆனால் அவனிடமிருந்து வந்த பதில் அவரை மலைத்துப் போகச் செய்கிறது. “அப்படியொண்ணும் எங்குடும்பத்துக்கு நான் குடுக்கிறதுக்கு இன்னொருத்தர சாட்சி வச்சிக்கணும்னு தேவையில்ல சார் ” என்பது அவன் தந்த பதில்.
மானேஜரைத் தூக்கி எறிந்து விட்ட கண்ணுச்சாமியக் கமிஷனரிடம் காட்டி வழிக்குக் கொண்டு வரலாம் என்று நினைத்தாள். நினைத்துக் கொண்டிருந்த போது கமிஷனர் வெளியே வந்தார். திடுதிப்பென்று அவரைப் பார்த்ததில் அவள் நினைத்ததைச் செய்யவில்லை ; அவர் வெளியே போய்விட்டார். காலையில் புருஷனிடம் விட்ட சவால் நிறைவேறாமல் போய்விடுமோ என்று நினைத்தவளுக்கு என்ன ஆவேசம் வந்ததோ தெரியவில்லை. தனது ஒல்லி உடம்பை வைத்து அவனைக் கிடுக்கிப் பிடி போட்டாள். அத்தனை பேர் முன்னாலும் அவள் இறுக்கிப் பிடித்து மீற முடியாமல் நிறுத்தி விடுவாள் என்பதை எதிர்பார்க்காத கண்ணுச்சாமி வாயால் சண்டை போட்டான். கடைசிவரை அவள் பிடியை விடவில்லை. கடைசியில் பணம் தருவதாகச் சொல்ல அவள் பிடி விலகுகிறது. சொன்னவன் சொன்னபடி செய்வான் என அவள் நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை அடுத்த கணமே புரிய வைத்தான் கண்ணுச்சாமி.
தன் உடல் வலிமையை வீழ்த்திக் காட்டிய மனைவியை வெற்றி கொள்ள வேண்டுமென்று நினைத்தானோ என்னவோ, ‘பொது இடத்தில் இப்படி அடிக்கிறோமே’ என்ற நினைப்பே இல்லாமல் வலுவாகத் தாக்கி வீழ்த்தினான். அவனைத் தடுத்து நிறுத்தி விடலாம் என்று வந்த வாட்ச்மேன் போன்றவர்களுக்கோ ஏச்சு. விலகிப் போய்விட்டனர். மூர்க்கங்கொண்டவளாய் அவள் பின்னிருந்து அவனைத் தாக்கிச் சட்டையைப் பிடித்து, “என்னையும் எம் புள்ளைங்களையும் கொன்னு போட்டுட்டுப் போயிடு” என்று மறிக்கிறாள்.
அதற்கு அவன் தந்த பதில் “ சாவுங்க” என்று வயிற்றில் ஓங்கிக் குத்திய குத்து தான். தொடர்ந்து அவன் குத்த எத்தனித்த போது, ‘ராஸ்கல் , தாலி கட்டிட்டா கொன்னுடலாம்னு நெனப்பா?’ என்ற படி ஒரு அடி விழும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அப்படி அடித்தவர் கிராமசேவகர் சிதம்பரம். முரட்டு ஆசாமி. தனக்குச் சம்பந்தமில்லாத பல விசயங்களில் தன் கைவரிசையைக் காட்டியதால் அவருக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகளையெல்லாம் இழந்தவர்.அதை உணர்ந்து கொஞ்ச காலமாகத் தானுண்டு தன் வேலை யுண்டு என்று இருந்தவர் அப்படி இருந்தவரையே கண்ணுச்சாமியின் அந்த அடாவடித் தனம் கலைத்துப் போட்டு விட்டது.
தனது அடியை வாங்கிக் கொண்டு கண்ணுச்சாமி சும்மா இருக்க மாட்டான்; எதிர்த்து நிற்பான் எனக் கருதிய சிதம்பரம் கொஞ்சம் கூடுதலாகவே முரட்டுத்தனம் காட்டினார். அதை வரவேற்று அவள், “ அப்படிப் போடுங்க , சாமி.. மவராசன் நீங்க நல்லா இருப்பீங்க. சாவட்டும்.கொலைகாரப் பாவீ..!” என்று சொல்லி வரவேற்றாள். அவளது ஆதரவும் கிடைத்த விட்ட நிலையில் மேலும் இரண்டு அடி போட்டு கண்ணுச்சாமியை மேனஜருக்குப் பக்கத்தில் உட்கார வைத்து விட்டுத் தொலைபேசியை எடுத்துச் சுழற்றிக் காவல் நிலையத்தில் அவனை ஒப்படைப்பது என்று தீர்மானித்தார் சிதம்பரம்.
தன் கணவனை அடித்த போது நன்றாகப் போடுங்கள் என்று சொன்ன அவள் அடுத்துச் செய்த செயலை யாரும் எதிர்பார்க்கவில்லை; அவள் சிதம்பரத்தை நோக்கி ஓடி வந்தாள். இரண்டு கைகளையும் விரித்து, ‘ஐயோ வேணாம் சாமி, சொல்லாதீங்க. சொல்லிடாதீங்க’ என்றபடியே அவரது காலிலேயே விழுந்து விட்டாள். “போலீசில் மட்டும் பிடிச்சுக் கொடுத்திடாதீங்க; ஏற்கெனவே குடிச்சுட்டுப் போலீஸ்கிட்ட பண்ணியிருக்கிற தகராறுக்கு அவங்க அவரைக் கொன்னுப் போட்டுடுவாங்க ”
அடிச்சு அடக்கிய சிதம்பரம், இரண்டு மனசாக இப்போது சட்டம் இருக்கும் நிலையில் இவன் வேலை போனாலும் போய்விடும் என்று பரிதாபப் பட்டு விலகிப்போகிறார்.அப்போது கண்ணுச்சாமி சொல்லும் வார்த்தைகள் கவனிக்க வேண்டியவை. “ ஆளு வச்சு அடிக்கிற? இரு. வீட்டுக்குத் தாண்டி வருவே.. வா. அங்க வந்து இந்தக் கண்ணுச்சாமி யாருனு பாரு” அவளின் துயரம் தொடரப் போகிறது என்பதைக் காட்டும் வாக்கியம் அது.
அந்த வாக்கியங்களைக் கேட்டபடியே இவன் திருந்தப் போவதில்லை என எல்லோரும் நகர்ந்து போய்விடுகிறார்கள். கதையையும் இங்கே முடித்துக் கொள்கிறார் ஜெயந்தன்.ஜெயந்தன் தனது கதைக்கு மட்டும் தலைப்பு தரவில்லை என்று நினைக்க வேண்டாம். கதையின் தலைப்பாக ஆன அவளுக்கும் ஒரு பெயரையும் கூடத் தர வேண்டும் என நினைக்கவில்லை. இப்படி நினைப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஏனென்றால் இந்த அவள் ஒரு பெண் அல்ல. இந்தியப் பெண்களின் பெருங்கூட்டத்தின் ஒரு மாதிரி அவள்.
கதை நடந்த நேரம் மிகக் குறுகிய காலம். சரியாகக் கணக்கிட்டால் ஒரு மணி நேரம் இருக்கலாம். கதை நிகழும் இடம் 100 பேருக்கும் மேல் வேலை பார்க்கும் ஒரு பஞ்சாயத்து அலுவலகம். யோசித்துப் பார்த்தால் இந்தக் கதையின் நிகழ்வெளியாக இருக்க வேண்டிய இடம் இதுவல்ல. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நடக்கும் சண்டையை வாசகர்களின் பார்வைக்கு வைக்கும் அந்தக் கதையின் நிகழ்வுகள் அந்த அலுவலகத்தில் நடக்க வேண்டி யவை அல்ல;அவர்களின் வீட்டில் நடந்திருக்க வேண்டிய நிகழ்வுகளே.
தினசரி வாழ்வில் அந்த அவளும் அவளது கணவனும் அவர்கள் குடியிருக்கும் குடிசையில் போட்டுக் கொள்ளும் சண்டை இடம் பெயர்ந்ததால்- இடம் பெயர்ந்ததைக் கவனித்து எழுதியதால் தான் ஜெயந்தனின் கதை கவனிக்கத் தக்க கதையாக ஆகியிருக்கிறது. அவனது மனம் மாறும் விதமாக யாராவது தன் கண் முன்னே தண்டனை கொடுத்தால் அதை வரவேற்கும் நிலையில் இருக்கும் அவள், தன் கணவனைக் காவல் நிலையத்திற்கு அனுப்பக் கூடாது என்பதில் பிடிவாதம் காட்டுவது ஏன்? நம் காவல் நிலையங்கள் மேல் அவளுக்கு என்ன பயம். அவர்கள் அடித்தே கொன்று போடக் கூடும். அவர்கள் இவனைக் கொல்ல இந்த நிகழ்வு மட்டுமே காரணமாக இருக்கும் என்பதில்லை. ஏற்கெனவே அவன் செய்திருக்கும் அடாவடித்தனங்கள் ஏராளம்.
தன் புருஷன் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டு அவனது அலுவலகம் வரை போனதோடு அவனைக் கிடுக்கிப் பிடி போட்டு அடக்கி விட நினைக்கும் அவள் நிச்சயம் புராணக் கதாபாத்திரங்களின் மாதிரி அல்ல. அத்தோடு அங்கேயே அவன் மனம் மாறும் படி தண்டனை கொடுப்பது கூட அவசியம் என நினைக்கும் போது நிச்சயம் இவள் இதுவரை எழுத்தில் எழுதப்படாத பாத்திரம் தான் என்று தோன்றுகிறது. அடுத்த கணமே, தனக்குக் கட்டாயம் புருஷன் உயிரோடு வேண்டும் என நினைக்கும் போது அவளும் ஒரு புராணக் கதாபாத்திரமாக- மரபான பெண்ணாக ஆகிப் போகிறாள். இப்படி நினைப்பதில் தான் இந்தியப் பெண்களின் பொது உளவியல் இருக்கிறது போலும்.
இந்தியப் பெண்களின் பொது உளவியலை எழுதி, அவர்களின் பொறுமையை, தியாகத்தை , விட்டுக்கொடுத்தலை, அன்பைப் பேசுவது பெரும்பாலும் ஆண்களாகவே இருக்கிறார்கள். ஏராளமான பெண்கதாபாத்திரங்களை எழுதிக் காட்டிய ஆண்களிலிருந்து பெண்கள் எங்கே வேறுபடுகிறார்கள் என்றால், அவர்கள் பேசுவது பெண்களின் கோபத்தை, பொறுமையின்மையை, பற்றைத் துறந்து விலகிச் செல்வதை, தங்களின் சுதந்திரத்தை விட்டுக் கொடுத்துக் குடும்ப அமைப்பைக் காக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதைச் சொல்வதை. இந்த வேறுபாட்டை உணரும் போது ஆணெழுதும் பெண்ணெ ழுத்துக்கும்,பெண்ணெழுதும் பெண்ணெழுத்துக்கும் இடையேயுள்ள வேறுபாடு களும் புரியலாம்.

Miyerkules, Agosto 12 2009

பயணத்தின் நினைவுகள் :அம்பையின் வாகனம்.

சென்னை போன்ற பெருநகரங்களுக்கு அடிக்கடி செல்லும் இக்கால மனிதர்கள் அம்பையின் இந்தக் கதையைக் காலப் பொருத்தமற்றது எனச் சொல்வார்கள். அல்லது பழைய கதை என்றாவது சொல்லக்கூடும். வாகனம் என்று தலைப்பிட்டு அம்பை எழுதிய அந்தக் கதை அவ்வளவு பழைய கதை அல்ல. பன்னிரண்டு வருடங்கள் தான் ஆகிறது.
ஒரு நல்ல சிறுகதைக்கான ஆரம்பம், முடிவு, குறைந்த கால அளவு, குறைவான பாத்திரங்கள் என எதுவும் இல்லாத கதை. ஆனால் ஒரு பெண்ணின் வாகன ஓட்டும் விருப்பம் என்ற ஒற்றை மையம் தாவித்தாவிப் பல பருவங்களுக்கும் செல்கிறது என்ற அளவில் அந்தக் கதையைச் சிறுகதை இலக்கணத்திற்குள் அடக்கி விட முடியும்.
பெண்ணின் இருப்பு, பெண் விருப்பத்திற்குத் தடை, பெண்ணுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை மறுக்கும் சமூகப் போக்கு, ஆணை முதன்மைப் படுத்தும் அன்றாட நிகழ்வுகள் , ஆண்களே தங்களை உயர்வாகக் கருதிக் கொண்டு பெண்களை விலக்கி வைக்கும் ஆணவ நிலை, அப்படியான சூழலில் தன் நிலையை உணர்த்தும் பெண்களின் மனோபாவம் எனப் பெண்களின் வெளிக்கும் மனநிலைக்கும் முக்கியம் தரும் அம்பை அதிகமும் சிறுகதை இலக்கணத்திற்கு முக்கியத்துவம் தருவதில்லை.
தனது குடும்ப வெளியில் மட்டுமல்லாது இந்தச் சமூக வெளியும் பெண்கள் வாகனங்களில் பயணம் செய்ய வேண்டியவர்கள் என்பதாகவே கருதுகிறது. அவள் ஒரு குழந்தையாக இருக்கும் போது கூட ஆண்பிள்ளைக்கு மூன்று சக்கர சைக்கிள் வாங்கித் தரும் உறவினர்கள் பெண்பிள்ளைக்கு அதை வாங்கித் தர வேண்டும் என நினைப்பது இல்லை என்ற மனநிலையிலிருந்து சைக்கிள் ஓட்டுவது, மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, கார் ஓட்டுவது, குதிரைச் சவாரி செய்வது, கடலுக்குள் படகில் போவது எனப் பெண்களின் விருப்பங்கள் எதுவும் சாத்தியப் படாமல், இவற்றில் எல்லாம் ஆணின் துணையுடன் பயணம் செய்யும் சாத்தியங்கள் மட்டுமே வாய்க்கின்றன என்பதைச் சொல்கின்றது கதை.
திட்டமிட்டுத் திட்டமிட்டு வாகனத்தைச் சொந்தமாக்கிட முயன்ற எல்லா முயற்சிகளுக்குப் பின்னால் எந்தத் திட்டமும் இல்லாமல் ஒரு வாகனம் அவள் வசமாகிறது. கணினியின் மௌஸ் என்னும் மூஞ்சிரு வாகனம் அது. மூஞ்சிரு வாகனம் அவளின் கை வழியாக கற்பனைச்சாலைகளில் தூர தேச நாடுகளுக்குள்ளும் பயணம் செய்கிறது. சினிமா, காதல், புரட்சி எல்லாம் நிரம்பிய பாரிஸ் நகருக்குள்ளும் சென்று வருகின்றாள் அந்தப் பெண் என்பதாக முடிகிறது அந்தக் கதை.
1997 இல் ஒரு பொங்கல் மலரில் அச்சாகி இருந்த இந்தக் கதை எனக்கு மறந்து போகாமல் இருக்க வலுவான ஒரு காரணமும் உண்டு. நான் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு ஆசிரியராக வந்த போது டாக்டர் வசந்திதேவி துணைவேந்தராக இருந்தார். ஒருவர் பெண்ணாக இருப்பதாலேயே பெண்ணிய வாதியாக ஆக முடியாது; தன்னைப் பெண்ணியவாதியாகக் கருதிக் கொள்ள வேண்டும்; செயல் பட வேண்டும்; செயல் படுத்த வேண்டும்; தன்னோடு உள்ளவர்களைச் செயல் படச் செய்ய வேண்டும் எனக் கருதுபவர் அவர். அவரது மேற்பார்வையில் பல்கலைக் கழகத்தில் முன் வைக்கப் படும் ஒவ்வொரு திட்டமும் பெண்களை எவ்வாறு வளர்த்தெடுக்கும் என்ற நோக்கத்தில் பார்க்கப் பட்டே முன் எடுக்கப் பட்டது. ஆண்களை வெறுத்து ஒதுக்கி விட்டுப் பெண் முன்னேற்றம், பெண் உரிமை என்பன சாத்தியம் இல்லை என்பதில் உறுதியாக இருந்தவர் அவர்.
வகுப்பறைக்கும் வெளியே கற்க வேண்டிய உள்ளன என்பதை உணர்த்துவதற்காக ஏற்படுத்தப் பட்ட நாட்டுநலப் பணித்திட்டத்தில் பெரும்பாலும் மாணாக்கர்களை பக்கத்தில் உள்ள கிராமங் களுக்கு அழைத்துச் சென்று புள்ளி விவரங்கள் சேகரித்தல், தெருக்களைச் சுத்தம் செய்தல், சாலை போடுதல், மரம் நடுதல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். பெருநகரக் கல்லூரிகளாக இருந்தால் போக்குவரத்துக்கு உதவுதல், மருத்துவமனைப் பணிகளுக்கு உதவுதல் போன்ற பணிகளில் ஈடுபடுபவர். உடல் உழைப்பு சார்ந்த தொழில்களையும் மக்களையும் விட்டு விலகி விடுவதாகக் கல்வி ஆகி விடக்கூடாது என்ற நோக்கத்தோடு பண்டித நேரு திட்டமிட்டுத் தந்த திட்டம் அது.
மூன்று நாள் முகாம், பத்து நாள் முகாம் எனத் திட்டமிட்டுக் கொண்டு நடத்தப் படும் நாட்டு நலப் பணித் திட்ட முகாம்களில் மக்களை நேரடியாகச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு உண்டு என்பதைத் தாண்டி மாணாக்கர்கள் கற்றுக் கொள்வது என்பது அதிகம் இருக்காது. அதிலும் திருநெல்வேலி போன்ற கிராமப் புறக் கல்லூரிகளில் பயில்பவர்கள் உடல் உழைப்பையும் சேர்த்தே செய்பவர்கள் தான். பல்கலைக்கழகத்திற்குப் படிக்க வரும் மாணாக்கர்களில் பாதிப்பேர் விவசாய வேலைகளில் ஈடுபடுகிறவர்களாகவே இருக்கின்றனர். பெண்களும் கூட தங்கள் பெற்றோருக்கு உதவியாக வீட்டு வேலைகளையும் விவசாய வேலைகளையும் செய்துவிட்டு வருவதையே இன்றும் காண்கிறேன். கல்வியின் காரணமாக அதிகமும் அந்நியமாக நிலை இன்னும் இங்கு தொடரவே செய்கிறது.
நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பில் பெண்களுக்குச் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்கும் பயிற்சி முகாம் ஒன்றை நடத்த வேண்டும் என டாக்டர் வசந்தி தேவி எங்களை அழைத்துச் சொன்னார். உடனடியாக அந்தத் திட்டம் நிறைவேற்றப் பட்டது. பால் கேனைக் கட்டிக் கொண்டு சைக்கிள் விடும் பெண், கணவனைப் பின்னால் உட்கார வைத்து மண் சாலையில் சைக்கிள் ஓட்டிச் செல்லும் பெண், இரு பக்கமும் தண்ணீர்ப் பானைகளைக் கட்டித் தொங்க விட்டுச் செல்லும் பெண் எனப் புகைப்படங்கள் பெரிய அளவில் புளோ-அப் செய்யப்பட்டு அந்தப் பயிலரங்கில் நிறுத்தப் பட்டன. மூன்று நாளில் ஏறத்தாழ 100 மாணவிகளுக்குச் சைக்கிள் ஓட்டக் கற்றுத் தரப்பட்டது. ஒவ்வொரு பெண்கள் கல்லூரியிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப் பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப் பட்டது. கற்றுக் கொண்ட ஒவ்வொரு பெண்ணும் அடுத்த ஆண்டிற்குள் ஒரு பத்துப் பேருக்குச் சைக்கிள் விடக் கற்றுத் தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப் பட்டது.
அம்பையின் வாகனம் கதையைத் துணைவேந்தர் வசந்திதேவியும் வாசித்திருப்பாரோ என்று நானே கேட்டுக் கொண்டு, ‘இல்லை ; வாசித்திருக்க மாட்டார்’ என்றும் சொல்லிக் கொண்டேன். காரணம் அம்பையின் கதை வாகனம் ஓட்டும் ஆசையை நினைப்பாகவே நிறுத்திக் கொண்டு செயலைக் கைவிட்டு விடும் தன்மை கொண்டது. கடைசியில் கணினியின் மூஞ்சிறு வாகனத்தில் பயணம் செய்து அது தரும் இன்பத்தில் திருப்திப் பட்டுக் கொள்ளும் பாத்திரத்தைப் படைத்திருக்கிறது. ஆனால் வசந்திதேவியின் எண்ணங்கள் இந்த சமூகத்தில் பெண்கள் வாகனங்களைக் கையாளும் சாத்தியங்களை உருவாக்கித் தர வேண்டும் என்பதின் வெளிப்பாடு.
சிந்தனையோடு நின்று போன அம்பையின் பாக்கியம் என்ற கதாபாத்திரத்தின் செயல்படு நிலையைச் சாத்தியமாக்கிக் காட்டியது வசந்திதேவியின் திட்டங்கள். இந்த அடையாளப் பயிலரங்கின் விளைவுகள் பலவிதமானவை. தமிழக அரசு பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்த போதும் எனக்கு அம்பையின் வாகனம் கதை நினைவுக்கு வந்தது. கிராமப் புற மாணவிகள் பள்ளிக்கூடச் சீருடையில் கூட்டம் கூட்டமாகச் சாலைகளில் சைக்கிள் ஓட்டிச் செல்லும் போது, ஆணுக்குப் பெண்ணிங்கே இளைப்பில்லை காண் என்று சொல்லிக் கொண்டதெல்லாம் இப்போது வேடிக்கையாகத் தோன்றுகிறது.
ஆம். ஒரு பதினைந்து ஆண்டுகளில் வாகனமோட்டும் பெண்களின் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றம் அபரிமிதமானது. சென்னையின் ஒரு முச்சந்தியில் அல்லது நாற்சந்தியில் அவசர நேரம் எனச் சொல்லப்படும் காலை எட்டரைக்கும் பத்துக்கும் இடையிலோ, மாலை ஐந்து மணிக்கும் பிறகோ நின்று வேடிக்கை பார்த்தால் போதும். பெண்கள் வாகனங்களைக் கையாளும் லாவகம் புரிய வரும். குறிப்பாக இரண்டு சக்கர மோட்டார்களில் பயணிக்கும் பெண்களின் வேகமும், அனாயசமான நோக்கும் இலக்கை எட்டிவிடத்துடிக்கும் மனநிலையும் புரிய வரும். மஞ்சள் விளக்கு எரிந்து பச்சை விளக்கு வருவதற்கு முன்பாக உள் நுழைந்து பக்கத்தில் நிற்கும் ஆணைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறும் வேகத்துடன் அவள் பயணம் செய்கிறாள். இவள் அம்பையின் கதையில் பாக்கியத்தின் செயல்வடிவம் மட்டும் அல்ல; சிந்தனையின் கருத்துருவமும் கூட.
சென்னை நகரச் சாலைகளில் சைக்கிளில் பயணம் செய்யும் பெண்கள் குறைவாக இருக்க இரண்டு சக்கர மோட்டார் வாகனங்களை ஓட்டிச் செல்லும் மொத்தக் கூட்டத்தில் 33 சதம் பெண்கள் இருப்பது உறுதி. ஆனால் ஆண்கள் நிரம்பிய அரசும், பாராளுமன்றமும் அந்த 33 சதவீத இடத்தைத் தருவதற்கு இன்னமும் தயங்கிக் கொண்டிருக்கின்றன.
குறியீட்டுக் கதைகள் தரும் சுதந்திரம்.
--------------------------------------------------------
சுந்தரராமசாமியின் பல்லக்குத்தூக்கிகளும் மேல்பார்வையும்
.

குறியீட்டுத் தன்மை கொண்டதாக நவீன நாடகப் பிரதி ஒன்றை உருவாக்க வேண்டும் என முடிவு செய்த பின், தேர்வு செய்த கதை பல்லக்குத்தூக்கிகள். தமிழில் நவீன நாடகத்தைப் பிரதி வடிவில் ஆரம்பித்து வைத்தவர் ந.முத்துசாமி. அவரது தொடக்க நாடகங்களான நாற்காலிக்காரர், காலம் காலமாக,அப்பாவும் பிள்ளையும் ஆகிய மூன்று நாடகங்களும் அடங்கிய நாற்காலிக்காரர் தொகுப்பை வாசிக்கும் ஒருவர் நவீன நாடகம் என்பது கதைத் தன்மையைக் கைவிட்ட - குறியீட்டுத் தன்மை கொண்டதே நவீன நாடகம் என்று புரிந்து கொள்வார். பல்லக்குத்தூக்கிகள் சிறுகதையை நாடகமாக ஆக்கியதற்கு முன்பு ந.முத்துசாமியின் நாற்காலிக்காரர் நாடகத்தைப் பயிற்சியாகவும், இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களைப் பாடமாகவும் படித்திருந்தேன். ந.முத்துசாமியின் பாணியிலிருந்து மாறுபட்டது இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்கள். அவரது தொடக்ககால நாடகங்களான பசி, மழை, போர்வை போர்த்திய உடல்கள் போன்றவற்றில் ஒருவித கதைத் தன்மை உண்டு.
நாடகத்தின் நவீனத் தன்மையைப் புரிந்துகொண்டு பிரதிகளைத் தமிழுக்குத் தந்தவர்கள் வரிசையில் வயிறு நாடகத்தைத் தொகுப்பைத் தந்த ஞான .ராஜசேகரனுக்கும், மனுஷா மனுஷா தொகுப்பைத் தந்த ஜெயந்தனுக்கும் முக்கியமான பங்குண்டு. மதுரையில் செயல் பட்ட நிஜநாடக இயக்கத்தோடு முழுமையாக இணைந்து செயல்பட முடியாத நண்பர்கள் சுதேசிகள் என்றொரு கலை இலக்கிய அமைப்பை உருவாக்கி நாடகங்கள், கவிதா நிகழ்வுகள், பயிற்சிப் பட்டறைகள் போன்றன நடத்துவது என முடிவு செய்தார்கள். திட்டமிடல், விவாதித்தல், முறைப் படுத்தல் போன்றவற்றை ஜனநாயகப் பூர்வமான விவாதங்கள் அடிப்படையில் உறுதி செய்வதில் சுதேசிகள் கவனமாக இருந்தது. ஆனால் படைப்பாக்கச் செயல் பாட்டில் தனி நபரின் பங்களிப்பை எப்போதும் மறுத்ததும் இல்லை. பத்துக்கு மேற்பட்ட நாடகக் குழுக்களால் சில நூறு தடவைக்கு மேல் மேடையேற்றப்பட்டுள்ள பல்லக்குத் தூக்கிகள் பிரதியுருவாக்கத்தில் – நாடகமாக- மாறியதில் எனக்குக் கூடுதல் பங்கு உண்டு என்றாலும் நண்பர்களோடு நடத்திய விவாதங்களின் விளைவே அது என்பதையும் மறப்பதற்கில்லை.
நாடக இலக்கியத்தின் அடிப்படை அலகான முரண், வெளிப்படும் சிறுகதைகள் தமிழில் ஏராளமாக உண்டு. நவீன நாடகம் வெளிப்படையான பாத்திர முரண்பாட்டையோ, ஒரே பாத்திரத்திற்குள் அமுங்கிக் குமையும் தன் முரண்நிலையையோ ஏற்றதாகக் கருதுவதில்லை. படர்க்கை நிலையில் விலகி நின்று நிகழ்வுகளை அல்லது மனிதர்களை வேடிக்கை பார்க்கும் கதை சொல்லியைக் கொண்ட கதைகளே நவீன நாடகமாக ஆவதற்கு ஏற்றது என்ற எனது வாதம் ஏற்கப்பட்டுப் பல கதைகளை நண்பர்கள் வாசித்தார்கள்; முன் மொழிந்தார்கள்.
நான் அப்போது முன் மொழிந்த கதைகள் இப்போது நினைவில் இல்லை. ஆனால் புதுமைப் பித்தன், பிரபஞ்சன், ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், கோணங்கி,முதலானவர்களின் சில கதைகளை முன் மொழிந்துவிட்டுக் கடைசியாகச் சுந்தரராமசாமியின் பல்லக்குத்தூக்கிகள் இந்த நேரத்து சமூக, அரசியல் போக்குகள் சிலவற்றைக் குறியீடாக்கிக் காட்டுகிறது என வாசித்துக் காட்டினேன். நண்பர்கள் அந்த முன் மொழிதலை ஏற்றார்கள். ஏற்புக்குப் பின் நான் பல்லக்குத் தூக்கிகள் என்ற சிறுகதையிலிருந்து ‘பல்லக்குத்தூக்கிகள்’ என்ற நாடகப் பிரதி உருவாக்கப் பட்டது .
தனது கதைகளில் குறிப்பான காலம், குறிப்பான வெளி என்பதைக் காட்டிக் கொள்ளத் தயங்காத சுந்தரராமசாமி, பாத்திரங்களை உருவாக்கும் போது பெரும்பாலும் குறியீட்டுத் தன்மையையே அதிகம் கையாண்டிருக்கிறார். நாடார் சார், ரத்னாபாயின் ஆங்கிலம், செங்கமலமும் ஒரு சோப்பும், ஆத்மாராம் சோயித்ராம், பக்கத்தில் வந்த அப்பா எனக் குறிப்பான பாத்திரங்களைத் தலைப்பாக்கிய கதைகளே கூட முதல் வாசிப்பில் யதார்த்தச் சித்திரிப்பு போலத் தோன்றினாலும் மறுவாசிப்பில் குறியீட்டுத் தன்மையின் பரிமாணத்தை வீரியத்துடன் காட்டக் கூடியன.
கதைகளின் வெளியாகக் கன்யாகுமரி மாவட்டத் தலைநகரமான நாகர்கோவில் மற்றும் சுற்றுப் புறக் கிராமங்களின் அடையாளங்களும், பாத்திரங்களின் உரையாடலுக்கு அவ்வட்டார பேச்சு மொழியின் தொனியும் தரப்பட்டிருந்தாலும் அக்கதைகள் தமிழகத்தையும் தமிழக எல்லை களையும் தாண்டி வாழும் தமிழ் வாழ்வின் அடையாளங்கள் கொண்டன என்பதை நுட்பமாக வாசிக்கிற போது உணர முடியும். இந்தக் காரணங்களால் தான் அவரது கதைகளை வட்டார இலக்கியம் என்கிற வரையறைக்குள் அடக்கிக் காட்ட இயலாது.
வழி நடத்துவதாக நம்பும் நிறுவனங்களுக்குள் விரும்பியும் விரும்பாமலும் நுழைந்து விடும் மனிதர்கள், அவற்றின் இழுப்புக்கும் சுழிப்புக்கும் இசைய வேண்டிய நெருக்கடிக்குள் சிக்கி விடுவதைத் தூர நின்று பார்த்து, நகைக்கும் ஒரு மனிதனாகத் தன்னை- அல்லது கதை சொல்லியை நிறுத்தி விடும் லாவகம் கைவரப் பெற்றவர் சுந்தரராமசாமி. இப்படி விலகி நின்று கதை சொல்கிறார் என்பதால் அவரது விருப்பு வெறுப்புகள் கதைக்குள் வெளிப்படாது என்பதல்ல. தன்மைக் கூற்று, முன்னிலைக் கூற்று கதை சொல்லலில் வெளிப்படும் சார்பு நிலைப் படர்க்கைக் கூற்று கதைகளில் சட்டென்று வெளிப்படாது என்பது மட்டும் தான் உண்மையே தவிர, சார்புநிலையே கிடையாது என்பதல்ல. ஜனநாயக அரசியலுக்குச் சார்பு நிலை இருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை படர்க்கைக் கூற்றுக் கதைக்கும் சார்பு நிலை உண்டு என்பது.
பல்லக்குத் தூக்கிகள் கதையை நாடகமாக ஆக்கி எட்டாண்டுகளுக்கு பின் அவர் எழுதிய கதை மேல்பார்வை. 1994-95 இந்தியா டுடே இலக்கிய ஆண்டுமலரில் அச்சான மேல்பார்வை கதையை வாசித்த உடனே அதை நாடகமாக ஆக்க வேண்டும் என நினைத்தேன். நவீன நாடகம் சார்ந்தவர்களிடையே விவாதப் பொருளாக ஆகி இருந்த அகஸ்டோ போவலின் கண்ணுக்குப் புலப்படா அரங்கு, விவாத அரங்கு போன்றவற்றின் பின்னணியில் நல்லதொரு நாடகப் பிரதியாக ஆவதற்குரிய கூறுகள் கொண்டதாக அந்தக் கதை எனக்குப் பட்டது. பல்லக்குத்தூக்கிகளில் செய்த அதே வேலையை மேல்பார்வையிலும் செய்தால் போதும் நல்லதொரு விவாத அரங்கிற்கான நாடகப் பிரதி கிடைத்து விடும்.
பல்லக்குத் தூக்கிகளில் செய்த வேலை என்பது அதன் கதை சொல்லியைக் கழற்றி விட்டது தான். பல்லக்குத் தூக்கிகள் உடல், நிறம், இருப்பு போன்றவற்றைப் பார்த்து அசூயையுடன் முகஞ் சுளிக்கும் கதை சொல்லியைக் கதை வெளிக்குள்ளிருந்து வெளியேற்றிய போது பல்லக்குத் தூக்கிகள் ,தங்களின் உரையாடல் வழியாக அவரவர் அடையாளங்களை உருவாக்கிக் கொண்டு தாங்கள் நால்வரும் ஒரே மாதிரியான வார்ப்பு அல்ல என்பதைக் காட்டிக் கொண்டார்கள். காட்டிக் கொண்டதோடு பல்லக்கு என்னும் நிறுவனத்தோடு பிணைக்கப் பட்டிருப்பதும், பல்லக்கில் அமரப் போகும் பெரியவர் மீது தங்களுக்குள்ள ஈடுபாடும் தாங்களே விரும்பி உருவாக்கிக் கொண்டதல்ல; கண்ணுக்குப் புலப்படாத கருத்தியல் வழியாக அவை நிகழ்ந்திருக்கின்றன என உணர்த்தினார்கள்.
மேல்பார்வையின் கதை சொல்லியை- அதன் மையக் கதாபாத்திரமான பொற்கொடியின் நிறம், திறம், உடல் வாகு, விளையாட்டு வீரர்களைக் கையாளும் லாவகம், விதிகளைக் கறாராகப் பின்பற்றும் நேர்மை, எடுத்த முடிவில் காட்டும் உறுதி ஆகியவற்றைப் பாராட்டிப் புளகாங்கிதம் அடைந்து கதை சொல்லும் கதை சொல்லியின் குறிப்புகளை வைத்துக் கொண்டு அவனைக் கதைக்குள் இருந்து கழற்றி விட்டால் நேரடியாகக் கதை நடக்கும் இடமான கூடைப் பந்தாட்ட மைதானத்திற்கு நாடக நிகழ்வைக் கொண்டு போய்ச் சேர்த்து விடலாம். உண்மையான ஒரு குறிப்பிட்ட பள்ளிக்கூட மைதானத்தில் நடக்கும் கதையைத் தமிழ் நாட்டின் எந்த இடத்திலும் இருக்கும் கூடைப் பந்தாட்ட மைதானமாக ஆக்கிக் கொள்ளலாம். அதன் தொடர்ச்சியாக அம்மைதான் நாடகத்தின் நிகழ்வு வெளியாகவும் ஆகிக் கொள்ளும்.
சிவப்புச் சட்டை அணியினர், நீலச்சட்டை அணியினர் என முரண்பட்ட வண்ணங்களோடு விளையாடத் தொடங்கும்- நடிக்கத் தொடங்கும் நடிகர்கள் நாடகத்திற்கான முரணைத் தோற்றுவிக்க, விளையாட்டின் நடுவராக இருக்கும் பொற்கொடியின் செயல்பாடுகளும், முடிவுகளும் மெல்ல மெல்ல நகர்ந்து விவாதப் பொருளாகி நாடக வளர்ச்சியையும் உச்சத்தையும் உண்டாக்கி விடுவதை கதைமுடிவு தருகிறது என்றால், அதன் தொடர்ச்சியாகப் பார்வை யாளர்களிடம் நடத்த வேண்டிய விவாதங்களுக்கான குறிப்புகளை எழுதிச் சேர்ப்பதன் மூலம் விவாத அரங்கின் - போரம் தியேட்டரின் - முழுப்பரிமாணம் கிடைத்து விடும்.
1995 வாக்கில் அந்த நாடகத்தை மேடையேற்றி இருந்தால் அக்கதையில் வரும் பொற்கொடி அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதாவோடு கனகச்சிதமாகப் பொருந்துவதைப் பார்வை யாளர்கள் சுலபமாகப் பார்த்திருப்பார்கள். ஜெ.ஜெயலலிதாவை மத்தியதர வர்க்கமும், பத்திரிகை களும் தொடர்ந்து விமரிசனம் செய்யலாம்; ஆனால் அவருக்கு கூடைக்காரிகள், மீன்காரிகள், உடனடி நிகழ்வுகளையும் செயல்பாடுகளையும் பார்த்துப் பாராட்டி விடும் அப்பாவிக் கிராமத்து மனிதர்களிடமும் உள்ள செல்வாக்கு நிரந்தரமானது எனச் சொல்லும் சார்பு நிலையையும் புரிந்து கொள்ள முடியும். அந்தக் கதையை நாடகமாக எழுதுவதை முதலில் செய்யாமல் அதற்கான விமரிசனமாக ஒரு குடலாப்ரேசன் விமரிசனத்தை அப்போது களம் புதிதின் எழுதினேன். அவ்விமரிசனம் அக்கதையை நேர்மறை நோக்கில் அணுகிய விமரிசனம் எனக் கவனிக்காமல் சு.ரா.வின் நண்பர்கள் பலரும் என்னிடம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். பல்லக்குத் தூக்கிகள் நாடகத்தை முதலில் பார்த்த சுரேஷ்குமார் இந்திரஜித் போன்ற நண்பர்கள் எதிர்மறையாகவே புரிந்து கொண்டார்கள் என்பதோடு சேர்த்துச் சிரித்துக் கொள்ள முடிந்தது.
குறியீட்டுக் கதைகள் எப்போதும் வாசகர்களின் வாசிப்புக்குச் சுதந்திரம் அளிப்பவை என்பதை உணர்த்தத் தமிழின் பிற ஆசிரியர்களின் கதைகளை உதாரணங்களாகச் சொல்வதை விடச் சுந்தரராமசாமியின் கதைகளை எடுத்துக் காட்டுவதே சரியாக இருக்கும். அந்த வாசிப்பின் சுதந்திரம் தான் அவரது கடைசிக் கதையான பிள்ளை கெடுத்தாள் விளையைப் பலரும் பலவிதமாக வாசிக்கும் படி செய்தது. ஆகச் சிறந்த குறியீட்டுக் கதைகள் எழுதியவர்களின் பட்டியலில் எப்போதும் சுந்தரராமசாமிக்குத் தனி இடம் அளிக்க வேண்டும் என்பது எனது வாதம்.
நல்ல மேய்ப்பர்கள் :
பிரபஞ்சனின் மரி என்னும் ஆட்டுக்குட்டி
-----------------------------------------------------------------
முன்பெல்லாம் தேர்வு முடிவுகள் வெளி வந்து மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து சிறப்புத் தேர்வுகள் நடைபெறும். பள்ளிக் கல்வியில் தேர்ச்சி பெறாமல் போன மாணவர்கள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அந்தச் சிறப்புத் தேர்வை எழுதித் தேர்வு பெற்று அடுத்த கல்வி ஆண்டுத் தொடக்கத்தில் கல்லூரிக்குள் நுழைவார்கள். பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி அடையாத வர்களுக்கு அந்த ஓராண்டு ஒரு விதத்தில் தண்டனை தான். இந்தத் தண்டனைக் காலத்தில் பலர் திசை மாறிப் போகும் வாய்ப்புக்களே அதிகம்.
இப்போது நிலைமை மாறி விட்டது. ஒன்றிரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக உடனடியாகச் சிறப்புத் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதன் மூலம் பள்ளிக் கல்வியை முடித்துக் கல்லூரிக் கல்வியைத் தொடர்பவர்கள் எண்ணிக்கை கூடியுள்ளது. பள்ளிக்கல்வி இயக்ககம் தொடங்கி வைத்த சிறப்புத் தேர்வு நடைமுறைகளை இப்போது எல்லாப் பல்கலைக் கழகமும் ஏற்றுக் கொண்டு உடனடிச் சிறப்புத் தேர்வுகளை நடத்துகின்றன.
இப்படி நடத்துவதைப் பல்கலைக்கழகங்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்கும் ஒரு நடைமுறை எனக் கணித்துக் குற்றம் சொல்பவர்கள் உண்டு. அவர்கள் எதிலும் சிறப்பானவர்கள் மட்டுமே மேலே வர வேண்டும்; மற்றவர்கள் அடித்தட்டு மக்களாக ஏவல் செய்யப் பிறந்தவர்கள் என்ற கருத்தியலில் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். அல்லது அரசும், அரசுத்துறை நிறுவனங்களும் எதைச் செய்தாலும் எதிர்மறை மனோபாவத்தில் கணித்து விமரிசனங்களை முன் வைப்பவர்களாக இருக்கலாம். ஆனால் சமூகநீதியின் மீது அக்கறை கொண்ட ஜனநாயகப் பற்றாளர்கள் இதனை விமரிசனம் செய்ய மாட்டார்கள் என்பது எனது கணிப்பு. இச்சிறப்புத் தேர்வு நடைமுறை யாருக்குப் பலனைத் தருகிறது எனக் கண்கூடாகக் காணும் இடத்தில் நான் இருக்கிறேன்.
சென்ற ஆண்டில் மாணாக்கர் சேர்க்கை நடந்த போது சிறப்புத் தேர்வு முடிவு வரும்வரை தனது விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது எனக் கோரிக்கை வைத்து விட்டு சோகம் கப்பிய முகத்துடன் வெளியேறிய அந்த மாணவி இப்போது முதுகலை இரண்டாம் ஆண்டில் படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் பட்டப் படிப்பில் எல்லா பாடங்களிலும்-குறிப்பாகப் பட்டப் படிப்பில் அவள் முதன்மைப் பாடமாக எடுத்திருந்த தமிழ் இலக்கியத்தாள்கள் அனைத்திலும்-நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருந்தாள்.
முதல் நான்கு பருவத்தில் படிக்க வேண்டிய ஆங்கிலப் பாடங்களிலும் மூன்றில் தேவையான மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றிருந்தாள். ஆனால் நான்கிலும் தேர்விலும் வெற்றி பெற்றால் தான், பட்டப் படிப்பை முடித்ததாகக் கணக்கிட்டுச் சான்றளிக்கப்படும். அந்தச் சான்றிதழ் கிடைத்தால் தான் பட்டமேற்படிப்பைத் தொடங்க முடியும். சிறப்புத் தேர்வு வாய்ப்பு வழங்கப் பட்டதால் ரூ.500/- கட்டி, அதை மட்டும் தனியாகப் படித்துத் தேர்வு எழுதி வெற்றி பெற்றாள். சிறப்புத் தேர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அவள் ஒரு தடுக்கி விழுந்தவளாக - டிராப் அவுட்டாக மாறி- கல்விப் பயணத்தைத் தொடர முடியாமல் போய்க் காணாமல் போயிருப்பாள்.
இப்போது தொடரும் பயணத்தில் ஒருவேளை அவள் முதுகலை வகுப்பில் சிறப்பான தகுதியுடன் வெற்றி பெற்று ஆய்வுப் பட்டங்களையெல்லாம் கூடப் பெறலாம். சிறந்த கல்வியாளராக அல்லது ஒரு திறனாய்வாளராக அல்லது படைப்பாளியாக வரலாம். தமிழ் இலக்கியம் படிப்பவர்களுக்கு மட்டும் தான் இந்தப் பிரச்சினை என்று நினைக்க வேண்டியதில்லை. எல்லாப் பாடங்களிலும் ஒன்று அல்லது இரண்டு தாள்களில் வெற்றி பெறாமல் போவதற்குப் பலவிதமான காரணங்கள் இருக்கக் கூடும். திடீரென்று ஏற்படக்கூடிய சுகவீனம், ஊரில் ஏற்படும் மோதல், குடும்பத்தில் ஏற்படும் உறவுச் சிக்கல்கள்,எனக் காரணங்கள் பலவாறாக விரியலாம். கல்விப் பயணத்திற்கான தடைக் கல்லை விலக்கிப் போடுவது தானே ஒரு நல்ல கல்வி நிறுவனத்தின் - ஆசிரியரின் வேலையாக இருக்க முடியும். இப்படிப் பட்ட ஆசிரியர்களை மனதில் வைத்தே வேதாகமத்தின் நல்ல மேய்ப்பன் என்ற சொற்றொடரை நினைத்துக் கொள்வதுண்டு.
தூரத்துப் பச்சையைப் பார்த்துத் தனியாகப் போய் மேயும் ஆடு கணக்கில் வராமல் போனால் மேய்ப்பன் மனம் படும் பாடு வார்த்தையில் சொல்ல முடியாதது. அந்தப் பச்சையின் சொந்தக்காரன் கல்லெறிந்து காலொடித்துப் போட்டிருக்கலாம். மேய்ப்பிடத்தில் வந்து காத்திருக்கும் வலிய மிருகங்கள் அடித்து இழுத்துக் கொண்டு போயிருக்கலாம். இறைச்சிக்காக யாராவது திருடிக் கொண்டு போயிருக்கலாம் எனப் பலவிதமாக நினைத்துப் புலம்புவான். அப்படியான புலம்பலை வெளிப்படுத்தும் ஒரு நல்ல மேய்ப்பனை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் ஒரு கதையப் பிரபஞ்சன் எழுதியுள்ளார். மரி என்னும் ஆட்டுக்குட்டி என்னும் அந்தச் சிறுகதை இந்தக் காரணத்திற்காக மட்டுமல்லாமல் வேறு சில காரணங்களுக்காகவும் எனக்குப் பிடிக்கும்.
ஒரு கதை உண்டாக்கும் நம்பகத்தன்மையே அதன் வாசகத் தளத்தை விரிவுபடுத்துகிறது. ஒரு சிறுகதையோ நாவலோ வாசகர்களைத் தன் பக்கம் இழுக்கவும், அவர்களுக்கு நெருக்கமானதாகத் தோன்றுவதற்கும் புனைவெழுத்தின் மூன்று அடிப்படைகளில் ஏதாவது ஒன்று அவனது சொந்த வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருந்தால் போதும். அந்தப் புனைவெழுத்தை - கதையை- வாசகர்கள் நடந்திருக்கக் கூடிய கதையாக அல்லது நடக்கக் கூடிய கதையாக நம்பி வாசிப்பர். காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றில் எதாவது ஒன்று தொடர்பு பட்டதாக இருந்தால் போதும். நம்பகத்தன்மை உண்டாகி விடும்.
பிரபஞ்சனின் கதைகள் உண்டாக்கும் நம்பகத்தன்மை என்பது அவர் வெளிகளை- இடங்களைச் சித்திரிக்கும் எழுத்துமுறையில் இருக்கிறது என்பது எனது கணிப்பு. குறிப்பான இடங்களில் கதை நிகழ்வதாக எழுதுவது மூலம் அக்கதையின் காலத்தையும், இடம் பெற்றுள்ள பாத்திரங்களையும் நம்பத் தக்கவர்களாக மாற்றி விடுவார்.வட்டாரம் சார்ந்த கதைகள் என்ற வகைபாடுகளின் பின்னணியில் அந்தந்தப் பிரதேசத்தின் வட்டாரமொழிப் பிரயோகம் இருக்கிறது என்றாலும், இடங்களைச் சித்திரித்துக் காட்டும் படைப்பாளியின் திறமையினால் தான் நம்பகத்தன்மை கூடுகிறது.
எட்டாண்டுக் காலம் பாண்டிச்சேரி என அழைக்கப்பட்ட புதுச்சேரியில் வாழ்ந்த நான் அவரது கதை வெளிகளை நேரில் பார்த்திருக்கிறேன். அங்குலம் மாறாமல் தெருக்களையும், வண்ணங்கள் மாறாமல் கட்டடங்களையும், வாசம் மாறாமல் சூழலையும் எழுதுவதன் மூலம் தனது கதைகளின் பாத்திரங்களை புதுச்சேரிக்காரர்களாகக் காட்டியிருக்கிறார் எனச் சொல்ல முடியும். இந்தக் கதையிலும் அந்த மாயத்தைச் செய்துள்ளார். அந்தக் கதை ஒரு பள்ளித் தலைமையாசிரியரும் தமிழாசிரியரும் நடத்தும் உரையாடலாகத் தொடங்குகிறது:

“தமிழ் சார் அந்த அற்புத மரிக்கு டி.சி. கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கிறேன்”என்றார் எச்.எம்.
“ எந்த அற்புத மரி” என்றேன் நான். கதாபாத்திரம் ஒன்றே கதைசொல்லியாக இருக்கும் முன்னிலைக் கதைசொல்லல் உத்தியில் எழுதப் பட்டுள்ள அந்தக் கதையில் வரும் அற்புத மரி, 18 வயதில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டி ருப்பவள். பள்ளிக் கூடத்தில் எழுதப் படாத சட்டங்களாக இருக்கும் உடை ஒழுங்கு, நேர ஒழுங்கு, ஆசிரியர்களிடம் காட்ட வேண்டிய பவ்யம் என எதையும் பின்பற்றாமல் அடுத்தடுத்த வருடங்களில் அடுத்தடுத்த வகுப்புகளுக்குப் போகாமல் உடம்பை மட்டும் வளர்த்துக் கொண்டிருக்கும் தடிமாட்டுக் கழுதை என்பது தலைமையாசிரியரின் கருத்து.
அவளின் ஒழுங்கீனங்களைக் காட்ட பல நிகழ்வுகளை- ஆசிரியர்களை மட்டம் தட்டியது, கிண்டல் செய்தது,தன்னையே எடுத்தெறிஞ்சு பேசியது எனப் பலவற்றைக் கூறி அதற்கான தண்டனையாக அவளுக்கு டி.சி.யைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வேண்டும் என்பது அவரது நிலைபாடு. நிறுவன ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு கொண்ட பெரியவர் அவர். ஆனால் அவளது வகுப்பாசிரியரான தமிழாசிரியரோ இருபத்தொன்பது வயது இளைஞர், “ இப்போ போய் டி.சி.யைக் கொடுத்துட்டால், அவள் எஸ்.எஸ்.எல்.சி. எழுத முடியாமல் போய் அவள் வாழ்க்கையே வீணாய்ப் போய்விடும் “ எனக் கருதுவதோடு மரிக்கு வழி நடத்துதலும் ஆலோசனைகளும் தேவை என நினைப்பவர். அதைச் செய்யவும் துணிந்தவராக கதையை அமைத்துள்ளார் பிரபஞ்சன்.
தனது வீட்டுக்குப் பக்கத்தில் தான் மரியின் வீடு இருக்கிறது என்பதால், தனது மனைவியை அழைத்துக் கொண்டு மரியின் வீட்டிற்குப் போய் அவளது பிரச்சினைகள் என்னவாக இருக்கும் எனப் புரிந்து கொண்டால் அவளை வழிக்குக் கொண்டு வரலாம் என நினைத்துச் சொன்னபோது ’நமக்கேன் வம்பு’ என அவரது மனைவி சுமதி சொல்கிறாள். ஆனாலும் அவளைச் சம்மதிக்கச் செய்து மரியின் வீட்டுக்குப் போய் பேசிய போதுதான் மரியின் எதிர்மறை மனோபாவங் களுக்கான காரியத்தை அறிகிறார்.
பணக்கார வீட்டுப் பெண்ணான மரியுடன் அந்த ஆசிரியரும் அவரது மனைவியும் நடத்திய பக்குவமான உரையாடல்களாகவே பிரபஞ்சன் கதையை நகர்த்தி சென்று முடிக்கிறார். கதையை புரிந்து கொள்ளும் விதமாகச் சில பகுதிகள் இதோ:
“ வீட்டிலே யாரும் இல்லையா?” “ வீடா சார் இது? வீடுன்னா அப்பா, அம்மா இருக்கணும். அப்பா எப்பவோ போயிட்டாரு. போயிட்டாருன்னா செத்துப் போயிடலெ. எங்களை விட்டுப் போயிட்டாரு. அம்மா என்னைச் சுத்தமா விட்டு விடலை. அப்பப்போ நாங்க சந்திக்கிறோம். சமயங்களிலே இரண்டு நாளுக்கு ஒரு முறை நாங்க பார்த்துக் கொண்டால் அது அதிகம்.” ....
“ சாப்பாடெல்லாம் எப்படிம்மா?”
“பெரும்பாலும் பசி எடுக்கறப்போ, எங்க தோணுதோ அங்கே சாப்பிடுவேன். ஓட்டல்லே தான். அம்மா வீட்டிலே தங்கியிருந்தா ஏதாவது செய்வாங்க, அம்மா சமையலைக் காட்டிலும் ஓட்டலே தேவலை. நல்லாயிருக்காதுன்னு சொல்லலை. அம்மான்னு நினைச்சு சாப்பிட முடியலே. பொண்ணுன்னு நினைச்சு அவங்களும் பண்ணலை.
சுமதி என்னை முந்திக் கொண்டு கேட்டாள் : “ உன் அம்மாதானே அவங்க?” “ ஆமாங்க, இப்போ வேறு ஒருத்தரோட அவங்க இருக்காங்க. அவரை எனக்குப் பிடிக்கலை.என்னையும் அவருக்குப் பிடிக்கல. சரி அவங்க வாழ்க்கையை அவங்க வாழறாங்க. என் வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டு தீர்க்கிறேன்.” .... ... ...
“ மரி.. ஸ்கூலுக்கு வந்தால், ஒரு மாறுதலா இருக்குமில்லே?”
” நான் யாருக்காக சார் படிக்கணும்” “ உனக்காக” “ பச் !” என்றாள் அவள். இதற்கு மேல் எதுவும் பேசக்கூடாது என்று தோன்றவே,
“பீச்சுக்குப் போகலாம். வாயேன்” “ வரட்டுமா சார்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.
வா என்று அழைத்துப் போனத் தமிழாசிரியரும் அவரது மனைவியும் அவளைத் தங்களின் சிநேகிதியாக- குடும்பத்தில் ஒருத்தியாக நினைத்துப் பழக அவளும் தினசரி காலையும் மாலையும் அவர்கள் வீட்டிற்கு வந்து அவர்கள் வீட்டுச் சாப்பாட்டை ருசித்துச் சாப்பிட்டாள். சுமதிக்கு வெங்காயம் நறுக்கித் தந்தாள். சில நாள் கழித்து அந்த மரிக்குட்டி ஆசிரியரிடம் பேசினாள்.
” சார் ஒண்ணு சொல்லட்டுமா?” “ ஊகூம் , ரெண்டு மூணு சொல்லு”
“சீரியஸாகக் கேட்கிறேன். சார். இங்கே வந்து போறதிலே உங்களுக்குத் தொந்தரவு இல்லையே சார்?” “ சத்தியமாக் கிடையாது” கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து விட்டு அவள் சொன்னாள்.
“ ஏன் சார் .. கெட்டுப் போனவள்னு எல்லோரும் சொல்கிற என்னை எதுக்கு உங்க வீட்டிலே சேர்த்து, சோறும் போடறீங்க?”
“ பைத்தியமே! உலகத்திலே யார்தான் கெட்டுப் போனவங்க? யாராலும் கெட முடியாது. தெரியுமா? மனசுக்குள்ளே நீ கெட்டுப் போனவள்னு நினைக்கிறியாக்கும். அதை விட்டுடு. நீயும் கெட்டவள் இல்லை. உங்க அம்மாவும், அப்பாவும் யாருமே கெட்டவங்க இல்லே.”
அவள் சொன்னாள். “எங்க அம்மாவைப் பழி தீர்க்கணும்னு தான் அப்படியெல்லாம் நடந்துக்கிறேன் சார்” “ எனக்கும் தெரியும் ” இதற்குப் பிறகு பத்து நாள் கழித்து ஒருநாள்,
“ சார்.. ஏன் நான் ஸ்கூலுக்கு வர்றதே இல்லைன்னு நீங்க கேட்கவில்லை?” அவர் பேசாமல் இருந்த போது, “ நீங்க கேட்டிருக்கணும் சார். ஏண்டி ஸ்கூலுக்கு வரலன்னு என்னை அறைஞ்சு கேட்கணும் சார். அப்படி யாரும் என்னைக் கேட்க இல்லேங்கிறதுனால தானே இப்படி விட்டேத்தியா இருக்கேன்... கண்களில் நீர்த்திவலைகளுடன் பேசியவளிடம் , “ உனக்கே அது தோணனும்னு தானே நான் காத்திருக்கேன். அதனாலே என்ன? ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை. இன்னைக்குப் புதுசா ஆரம்பிப்போம். இன்னைக்குத் தான் டென்த் கிளாஸ்லே நீ சேர்ந்தேன்னு வச்சுக்கோ, நாளையிலேர்ந்து நாம் ஸ்கூலுக்குப் போறோம்” என்று சொல்ல, அவள் முகத்தை மூடிக் கொண்டு விசும்பி விசும்பி அழுதாள்.
என்னுடைய வேலை வகுப்பறையில் பாடம் நடத்துவதோடு முடிந்து விட்டது என நினைக்கும் ஆசிரியர்கள் கூட்டத்தில் இந்தத் தமிழாசிரியர் மரி என்னும் ஆட்டுக்குட்டியை வழி நடத்திய நல்ல மேய்ப்பர் தானே. அந்த ஆசிரியரைப் போல நான் மாற வேண்டும் எனத் தூண்டிய இந்தக் கதையைப் படித்த நான் பிரபஞ்சன் விவரித்த அந்த ரயில் நிலையத் தெருவில் நடக்கும் போது எதிர்படும் பெண்களில் மரிக்குட்டி இருப்பாளோ என்று தேடியது கூட உண்டு.
ஈழம்:மாற்றுவிவாதங்களை முன் வைக்கும் கருத்துரைகள்
1.ஈழம்:தேவை- ஒரு நேர்மறையான மீளாய்வு,
புதிய ஜனநாயகம் வெளியீடு, இரண்டாம் பதிப்பு, ஜுன்,2009
110.இரண்டாம் தளம், 63,என்.எஸ்.கே.சாலை,கோடம்பாக்கம், சென்னை-600 024
2.ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும் நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்
புதிய ஜனநாயகம் வெளியீடு, இரண்டாம் பதிப்பு, ஜுன்,2009
110.இரண்டாம் தளம், 63,என்.எஸ்.கே.சாலை,கோடம்பாக்கம், சென்னை-600024
3.இந்திய அரசே நியாயந்தானா?
முதல்பதிப்பு: ஏப்ரல், 2009,சி.மகேந்திரன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142,ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600 014
====================================================================================
ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக இருந்து அரசியல் விடுதலை அடைந்துள்ள பின்காலனிய நாடுகளில் இன்றளவும் தொடரும் உள்நாட்டுப் பிரச்சினைகளின் மூலத்தைத் தேடிப் போனால் அவற்றின் தொடக்கப் புள்ளியாக, காலனிய ஆதிக்கவாதிகளின் தேச உருவாக்கமே காரணமாக இருப்பதை அறியலாம். காலனிய ஆதிக்கவாதிகள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஒன்றிணைத்து ஏற்படுத்திய தேசம் என்னும் ஒற்றைக் கட்டுமானம் தொடர்ந்து தன்னைத் தக்க வைக்க முடியாமல் தவிக்கும் தவிப்பின் விளைவுகள் பலவிதமானவை.
ஐரோப்பியக் காலனி ஆதிக்கவாதிகள் வருவதற்கு முன்பு செயல்பட்டுக் கொண்டிருந்த நூற்றுக் கணக்கான அரசர்களும் சிற்றரசர்களும் தந்திரங்கள் மற்றும், படைபலத்தின் மூலமும் அடக்கித் தனி நாடுகள் உருவாகின. அரசுரு வாக்கம், நிர்வாகம் என்ற அளவில் உருவாக்கப் பட்ட தேசம் என்னும் ஒற்றை அடையாளம் அக்காலனி ஆதிக்கவாதிகளின் வெளியேற்றத்திற்குப் பின்பு கேள்விக்குள்ளாகின. கேள்விக்குள்ளாக்குவதின் பின்னணியில் பருண்மையான காரணங்களும் கருத்தியல்களும் இருந்தன. அத்தகைய காரணங்களுள் முதன்மையானதும் முக்கியமானதுமான வெளிப்பாடு பெரும்பான்மை x சிறுபான்மை முரண்பாடுகள்.
பெரும்பான்மை x சிறுபான்மை என்ற முரண்பாட்டின் பின்னணியில் இந்தியா, பாகிஸ்தான், பர்மா, இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் இன்றளவும் தொடரும் உள்நாட்டுப் பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரே காரணம் இருக்க வில்லை. பாகிஸ்தானில் மொழி காரணமாக இருந்தது. அதனால் பாகிஸ்தான், வங்க தேசம் என இரண்டு நாடுகள் உருவாகின. இந்தியாவில் பல மொழிகள், பல சமயங்கள், பல இனங்கள் இருப்பதால் முரண்பாடுகள் முற்றாமலும், முழுமை அடையாமலும், ஒற்றை அடையாளம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. என்றாலும் சமயம் சார்ந்து முரண்பாடுகள் அண்மைக் காலங்களில் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றன என்பதும் உண்மை. இலங்கையில் மொழியும் சமயமும் முக்கிய காரணிகளாக இருந்து அம்முரண்பாட்டைக் கூர்மைப் படுத்தி முப்பது ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப் போராட்டத்தைத் தூண்டி விட்டது.
சாத்வீகப் போராட்டங்களில் தொடங்கி ஆயுதம் தாங்கிய யுத்தமாக மாறி, தங்களுக்கான நிலப்பரப்பாக ஈழம் என்பதை அடையாளம் கண்ட இலங்கைத் தமிழர்களின் வெற்றி, அண்டை மற்றும் உலக நாடுகளின் அங்கீகாரம் இல்லாததால் திரும்பவும் ஆரம்பக்கட்டத்திற்குப் போய்விட்டது. ஏறத்தாழ இலங்கையின் விடுதலைப் போராட்டமும், அதனை முன்னணிப் படையாக நின்று நடத்திக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளும் இன்று ஒடுக்கப் பட்டுள்ளனர்.
வெற்றியின் விளிம்பில் இருந்த ஒரு விடுதலைப் போராட்டம் ஒடுக்கப் பட்டதின் காரணங்கள் பலவாக இருக்கலாம். இருபத்தைந்து ஆண்டுகளாக ஆயுதம் தாங்கிப் போராடிய புலிகளை அடக்க முடியாமல் தத்தளித்த இலங்கை அரசு, கடந்த ஆறு மாதங்களில் தீவிரமாக யுத்தத்தை நடத்தி முடித்து விட்டது. மாறிவிட்ட உலக அடுக்குகள், உலகமயப் பொருளாதாரத்தில் வளரும் நாடுகள் தங்களுக்கான சந்தைகளை உருவாக்கிட நடத்தும் போட்டிகள், அண்டை நாடான இந்தியாவுடன் கொள்ள வேண்டிய பிராந்திய ஒத்துழைப்பு போன்றவற்றை ஓரளவு சரியாகக் கணித்து முடிவுகள் எடுத்து அதற்கேற்பச் செயல்பட்ட இலங்கையின் அதிகார மையமான ராஜபக்‌ஷே குழுவினரின் விட்டுக் கொடுத்தல் மற்றும் ராஜ தந்திர உபாயங்கள் மூலம் வெற்றியை அடைந்துள்ளனர். இவற்றிற்கு மாறாக, தங்களின் விடுதலை உணர்வின் தீவிரம், தங்களால் ஆயுதபலத்தைப் பெருக்கி இலங்கை அரசுக்கு ஈடாக யுத்தத்தை நடத்திட முடியும் என்ற தீர்மானமான நம்பிக்கை , தமிழ் என்னும் மொழி சார்ந்த உணர்வின் தீவிரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்ட ஆதரவு சக்திகளின் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனத்தைச் சரியாகக் கணிக்க இயலாமல் போன விடுதலைப் புலிகளும் ஈழப் போராட்டமும் தோல்வியைத் தழுவியுள்ளது.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் எல்லா நேரத்திலும் தமிழக மக்களும் இந்திய அரசில் மையமாகச் செயல்பட்டவர்களும் சம அளவு அக்கறைகளோடு இருந்துள்ளனர். ஆனால் அக்கறைகளின் நோக்கங்கள் ஒருவழிப் பட்டன அல்ல; எதிர்நிலைப் பட்டவை. நமது மொழிபேசும் உறவு, நமது இனம் படும் இன்னல்கள், ஒரே பண்பாட்டு அடிப்படைகள் கொண்ட தொப்புள் கொடி உறவு என்ற உணர்வு சார்ந்த திரளாகத் தமிழக மக்களின் ஆதரவு எப்போதும் ஈழப் போராட்டத்தின் பக்கம் இருந்துள்ளது. ஆனால் இந்திய அரசு, அப்படி ஒற்றைத் தளத்தில் இயங்காமல் தனது தேசப் பாதுகாப்பு, அண்டை நாடுகளுடான உறவும் முரணும் என்பதில் கொள்ள வேண்டிய நிலைபாடு, தென்கிழக்காசிய நாடுகளில் இந்திய முதலாளிகளுக்கு சந்தைகளை ஏற்படுத்திக் கொடுத்துத் தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவுதல் என்னும் பல தளங்களின் ஊடாகவே இலங்கைப் பிரச்சினையை அணுகியது.
இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் சுயாதிக்க உரிமைக் குரல்கள் எழாமல் அடக்கிய இந்திய அரசு,இலங்கையில் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவளித்து முதலில் பயிற்சி முகாம்கள் அமைத்திட உதவிய ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் நடவடிக்கைகளும்சரி, ஈழமக்களின் போராட்டத்தை அடக்கி ஒடுக்கி அமைதிப் பிரதேசமாக, இறையாண்மைக்குள் கட்டுப்பட்ட பிராந்தியமாக ஈழமும் இருக்க வேண்டும் என முடிவு எடுத்து இலங்கை அரசுக்குத் தீவிரமாக உதவிய அண்மைக்கால நடவடிக்கைகளும் சரி உள்நோக்கம் கொண்டவை என்பதை ஈழப் போராட்டத்தை நடத்தியவர்களும், அதனை ஆதரித்த தமிழகத் தலைவர்களும் புரிந்து கொண்டிருந்தார்களா? என்ற ஐயம் தொடர்ந்து எழுப்பப்பட்டது. இந்த ஐயத்தை எழுப்பும் குரல்களின் வெளிப்பாடுகள் அவ்வப்போது சிறு சிறு நூல்களாக வெளி வந்துள்ளன.
ஈழப்போராட்டம் அசைவற்ற நிலையை அடைந்துள்ள இத்தருணத்தில் வெளி வந்துள்ள இம்மூன்று சிறு நூல்களும் அந்நிலையை அடைந்ததற்கான காரணங்களை முன் வைத்துள்ளன. எல்லாவற்றையும் தர்க்க ரீதியாகவும், தத்துவ நோக்கிலும் புரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் வாசிக்க வேண்டிய கருத்துரைகள் இவை. இவைகளை வாசிக்கும் முகமாக ஈழப் போராட்டம் புதிய உருவில் புதிய பாதையில் செல்லும் போது அதன் ஆதரவு சக்திகள், எதிரிகள் சரியாகத் தீர்மானமாகக் கூடும்.