September 27, 2009

தொடரும் துன்பக்கேணி : வண்ணநிலவனின் துன்பக்கேணி

திரும்பவும் கள்ளுக்கடைகள் திறக்கப்பட வேண்டும்; பனை மரங்களையும் தென்னை மரங்களையும் தங்கள் காடுகளிலும் தோட்டங்களிலும் வளர்த்திருக்கும் விவசாயி களுக்குப் பனை மரத்திலிருந்தும் தென்னை மரத் திலிருந்தும் கள் இறக்க அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துக் கொண்டிருக்கின்றன. பனங்கள்ளும் தென்னங்கள்ளும் அடிப்படை யில் போதை ஊட்டும் மதுபானங்கள் அல்ல; அவை உடல் நலத்திற்கு உதவக் கூடிய மருந்துகள் என்ற வாதம் கள் ஆதரவாளர்களிடமிருந்து வருகின்றது.


நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தெருவுக்கு ஒரு கடை என்று அரசின் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு மதுப்பிரியர்களின் தேவைகளை அரசே நிறைவேற்றி வைத்திருக்கும் இந்தச் சூழ்நிலையில் பாரம்பரிய மதுவான கள்ளைக் குடிப்பதற்கும், கள்ளை மரங்களிலிருந்து இறக்குவதற்கும் அனுமதி இல்லை என்பது ஒரு விநோதமான முரண் தானே எனக் கேட்கும் கள் ஆதரவாளர்களுக்கு எதிரான குரல்களும் இல்லாமல் இல்லை.

நமது தமிழ் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டாலும் அந்நிய நாட்டு மதுபானங்கள் என அழைக்கப்படும் ஒயின், ரம், விஸ்கி, பிராந்தி,பியர் போன்ற விலையுயர்ந்த மதுபானங்களை தினசரிக் கூலிகளான அடித்தட்டு மக்கள் தினசரி குடிக்க மாட்டார்கள்; குடிக்க முடியாது. எனவே எப்போதாவது வாரம் ஒருமுறையோ, விசேச நாட்களிலோ தான் குடிப்பார்கள். அதனால் மதுவுக்கு செலவழிக்கும் தொகை குறைவாகவே இருக்கும். அதற்குப் பதிலாகக் கள் இறக்க அனுமதி அளிக்கப் பட்டு கள்ளுக்கடைகள் திறக்கப் பட்டால்,அடித்தட்டு மக்கள் கள்ளுக் கடைகளுக்குச் செல்வதும், தினசரி கள்ளைக் குடிப்பதும் அதிகரித்து விடும். அடித்தட்டு மக்களைக் குடியின் பிடியில் கொண்டு போய்ச் சேர்க்கும் கள்ளுக்கடைகளை அனுமதிக்கக் கூடாது என்று அதன் எதிர்ப்பாளர்கள் வலுவான சமூகப் பொருளாதாரக் காரணங்களை வைக்கின்றனர்.

கள்ளை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்ற விவாதம் நடக்கும் அதே நேரத்தில் எல்லாவகை யான மதுக்கடைகளையும் மூடிவிட வேண்டும்; மதுப் பழக்கத்தால் தமிழ்ச் சமூகம் தன் சமகால வாழ்வை இழப்பது மட்டுமல்ல; எதிர்காலத் திட்டமிடலையும் இழந்து நாசமாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் குரல்களும் கேட்கின்றன. ஆனால் மதுவருமானத்தை அரசின் முக்கியமான வருவாய் இனங்களில் ஒன்றாகக் கருதும் அரசும், அதிகார மையங்களும் மதுக் கடைகள் மூடப் பட்டால் கள்ளச்சாராயம் பெருகும்; அதனால் உண்டாகும் உயிர் இழப்புக்களும்,சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளும் அதிகமாகும் என்ற வாதத்தை வைக்கின்றன.

இந்த வாதங்கள், வாதங்களாக நடந்து கொண்டிருக்கும் பின்னணியில் மது பானம் சார்ந்த நேரடி நினைவுகளும், அனுபவங்களும் வந்த போதிலும் வண்ண நிலவனின் துன்பக்கேணி அவை எல்லாவற்றையும் உள்ளே அமுக்கி விட்டு விரிவதைத் தடுக்க என்னால் முடியவில்லை. அந்தக் கதை கள்ளுக் கடைகளும் சாராயக் கடைகளும் இல்லாதிருந்த தமிழகத்தைப் பின்னணி யாகக் கொண்ட கதை. அவை இல்லை என்பதற்காகச் சாராயமே இல்லாமல் இருந்த தமிழகம் என்று நினைத்து விடக்கூடாது.கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், அதனைக் கள்ளத்தனமாக விற்பனை செய்வதும், கள்ளத் தனமாகவே அதைக் குடிப்பதும் நடந்து கொண்டிருந்த ஒரு சூழல். அந்தச் சூழலையும் பின்னணி யையும் வெளிப்படுத்தும் வண்ணநிலவனின் அந்தக் கதை இன்றுள்ள தூத்துக் குடி மாவட்டக் கிராமங்களில் ஒன்றில் நடப்பதாக எழுதப் பட்டுள்ளது.

பிரிக்கப் படாத திருநெல்வேலிமாவட்ட (இப்போதுள்ள தூத்துக்குடி மாவட்டமும் அடங்கியது) மனிதர்களையும் கிராமங்களையும் மொழியையும் கதைகளாக மாற்றிய வண்ணநிலவனின் கடல்புரத்தில் தமிழில் எழுதப் பட்ட முதல் கடலோர நாவல். கடலும் கடல் சார்ந்த நிலத்தைத் நெய்தல் எனப் பிரித்துப் புரிந்து கொண்ட தமிழ்ச் சமூக வரலாற்றிலும், நாவல் வரலாற்றிலும் உறுதியான இடத்தைப் பிடித்துள்ள கடல்புரத்தில் என்னும் நாவல் மட்டும் அல்ல அவரது கம்பாநதி, ரெயினிஸ் அய்யர் தெரு போன்ற நாவல்களும் தென் மாவட்ட மனிதர்களின் வாழ்க்கைப் பதிவுகளே. அவள் அப்படித்தான் என்ற மாற்றுச் சினிமா முயற்சியில் உடன் இருந்த வண்ணநிலவன் அதிகம் பணியாற்றிய இடங்கள் பத்திரிகை அலுவலகங்களே. அவரது மொத்தச் சிறுகதைகளும் இப்போது வண்ணநிலவன் கதைகள் எனத் தனியாக ஒரே தொகுதியாகக் கிடைக்கிறது.

எப்போதும் தென்மாவட்ட வாசனையைக் கக்கிக் கொண்டே இருக்கும் பாத்திரங்களை எழுதிய வண்ணநிலவன், வெறும் மொழிநடையில் மட்டும் அல்லாமல் மனித மனம், பிடிவாதம், முரண்டு என அசலான திருநெல்வேலி மனிதர்களை எழுதிக் காட்டியவர். துன்பக்கேணி கதையின் பாத்திரங்கள் பேசுவதாக இடம் பெற்றுள்ள உரையாடல்களை வாசித்துப் பாருங்கள் : “இது எதுக்கு மாமோய்? வயசு காலத்துல நீங்களே புள்ள குட்டியள வச்சுக்கிட்டு அநேகம் பாடுபடுதீய, இதுல எஞ்சொமை வேறயா ஒங்களுக்கு?”

“ ஏழைக்கு ஏழைதான தொணை.. என்ன பெரிய சொமை? பத்தோட பதினொண்ணுன்னு நீயும் எனக்கு ஒரு மவ. அம்ம்புட்டுத்தானல்ளா.!..

இந்த உரையாடல் அந்தக் கதையின் மையப் பாத்திரங்களான வண்டி மலைச்சியும் நம்பித் தேவரும் பேசும் பேச்சு. இதே வண்டிமலைச்சி, சாராயத்தை நடுராத்திரியில் தேரிக்காட்டில் தூக்கிப் போகும் இரு ஆண்களுடன் பேசும் பேச்சாகப் பின்வரும் உரையாடல் அமைகிறது.

“ மணி என்ன இருக்கும்” என்று படுத்துக் கொண்டாள் வண்டி மலைச்சி. டின்னைச் சுமந்து வந்ததில் பிடரியும், தோள்களும் ரொம்பவும் வலித்தன. மணி வானத்தை அண்ணாந்து பார்த்தான். “ என்ன மிஞ்சி மிஞ்சிப் போனா ஒண்ணு ஒண்ணரை இருக்கும்!!..” என்றான். “ ஒடம்பு வலிக்கிற வலியில இந்தக் காத்தும், நெலா வெளிச்சமும் எம்புட்டுச் சொகமா இருக்குது தெரியுமா? அப்படியே படுத்துத் தூங்கிறலாமான்னு இருக்குது..”
“ அதுக்குத் தான் ஒரு ரெண்டு செரட்டை குடிச்சியானா கெச்சலா இருக்கும்.. என்றான் மணி.”
“ குடிக்கலாந்தான்.. ஆனா வவுத்துல புள்ளண்டு ஒண்ணு கெடக்குதே. அது என்னம்மாவது ஆயிப்போச்சின்னா?..” வண்டி மலைச்சியின் நிலை இது.அவளைச் சாராய டின் தூக்க அழைத்து வந்த சங்கரபாண்டியிடமும் மணியிடமும் கேட்கும் கேள்வியாக,
“ எடே!.. இது ஆரு? .. ஏ. இது நம்ம கிட்ணத்தேவர் மவ வண்டிமலைச்சியில்லாடே?.. இவ எங்கன கிடந்து ஆம்புட்டா?..
என்று ஆச்சரியத்தோடும் பிரியத்தோடும் கேட்டார் நம்பித்தேவர் என்று கதையைத் தொடங்கும் வண்ணநிலவன், “ இந்தத் திமிருனாலதாம்லே தேவமாருக கெட்டுக் குட்டிச் சொவராப் போறானுக.. அந்தப் பெய சம்முகம் மட்டும் சயிலுக்குப் போவாம இருந்தான்னாக்க இந்தப் புள்ள இன்னைக்கு இப்பிடியா சாராய டின்னு தூக்க வந்திருக்கும் ?... என்று சொல்லும் இன்னொரு உரையாடல் வழியாக அந்த வண்டிமலைச்சியின் வாழ்க்கை ஒரு துன்பக்கேணியாக உருவகம் செய்து உருவாக்கிக் காட்டுகிறார்.
வண்டி மலைச்சியின் புருசன் சண்முகம் அவளைக் கல்யாணம் செய்து கொண்டு ஆரம்பத்தில் அவளைச் சந்தோசமாக வைத்திருந்த காலத்தை அவளது நினைவலைகளாகத் தருவதோடு, தன்னுடைய அவசரப் புத்தியாலும், கர்ப்பமாக இருக்கும் மனைவி என்ன பாடுபடுவாள் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் ஒருவனோடு சண்டையிட்டு, அவனை வெட்டிக் கொன்று போட்டு விட்டு இப்போது திருச்செந்தூர் சப் - ஜெயிலில் இருக்கிறான் என்பதையும் , அவன் ஜெயிலுக்குப் போன பின்பு கர்ப்பமாக இருக்கும் வண்டி மலைச்சி, அவளது அண்ணனிடம் போனாள் என்றும், கல்யாணத்துக்கு முன்பு ‘தங்கச்சி, தங்கச்சி’ என்று பாசங்காட்டிய அண்ணனும் அவளுக்குச் சேர வேண்டிய எதையும் தராமல் அவளைப் பாரமாகக் கருதி பேச்சு வார்த்தையே ஆகி விட்டான் என்பதையும் அவளது நினைவுகள் வழியாகவே தருகிறார்.
கணவன் இல்லாத நிலையில் பல வேலைகள் செய்து பார்த்தும் வாழ்க்கையை ஓட்ட முடியாத நிலையில் தான் நடுராத்திரியில் அவள் சாராய டின் சுமக்க வந்திருக்கிறாள். அவளை அழைத்து வந்த சங்கர பாண்டி யும் மணியும் அவள் மீது கொண்ட இரக்கத்தால் தான் அவளை அழைத்து வருகின்றனர். அவர்களுக்கு வேலை தரும் நம்பித்தேவர் அவள் மீது பரிவும் பாசமும் கொண்டு, இந்த வேலையை அவள் செய்ய வேண்டாம் என்று கூறி சிறிது பணம் கொடுத்து அனுப்ப நினைக்கிறார். ஆனால் அவள் அதை ஏற்காமல் அந்த வேலையை- கள்ளச் சாராய டின்களைத் தூக்கிக் கொண்டு போய் அதனைத் திருட்டுத்தனமாக விற்பனை செய்யும் நபர்களிடம் சேர்க்கும் வேலையை ஏற்றுச் செய்கிறாள். அவளது போதாத காலம் மறுநாள் திருச்செந்தூர் சப்-மாஜிஸ்டிரேட் கோர்ட்டில், சங்கரபாண்டி, மணி இவர் களோடு, வண்டி மலைச்சியும் உட்கார்ந்திருந்தாள் என்று கதையை முடிக் கிறார் வண்ணநிலவன்.
இயற்கையோடு இயைந்த வாழ்க்கையில் பனை மரத்திலிருந்தும் தென்னை மரத்திலிருந்தும் கிடைத்த கள்ளைக் குடித்து உழைப்பின் வலியைப் போக்கிக் கொண்ட பாட்டாளி மக்கள், தங்களுக்குக் கூடுதலான போதை வேண்டுமென்ற போது கண்டு பிடித்த சரக்கு தான் சாராயம். அந்தச் சாராயம் சீமையிலிருந்து வந்ததால் சீமைச்சாராயம் என அழைக்கப் பட்டது. அதையே கள்ளத்தனமாகக் காய்ச்சி,கள்ளத்தனமாக விற்றுக் கள்ளத்தனமாகக் குடித்த வாழ்க்கையைத் தான் வண்ணநிலவன் துன்பக்கேணி என்று உருவகப் படுத்துகிறார். இன்று கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் விற்பதும் குடிப்பதும் நின்று போய்விட்டன. கள்ளச்சாராயச் சாவுகளும் இல்லாமல் போய்விட்டன. ஆனால் அரசே நடத்தும் டாஸ்மாக் கடைகளில் தனது வருமானத்தின் பெரும்பகுதியைச் செலவழித்து விட்டுக் குடும்பம் குழந்தைகளை மறந்து வாழ்க்கையைத் தொலைக்கும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை துன்பக் கேணியாக இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆத்திரமும் வறுமையும் ஓர் எளிய குடும்பத்தைத் துன்பமென்னும் கேணிக்குள் தள்ளியதாக உருவகப் படுத்தியுள்ள வண்ணநிலவன் தனது முன்னோடி களிடமிருந்து விலகிச் செல்வதுபோல தோன்றினாலும் அந்த உருவகம் ஒவ்வொருவரிடமும் பெண்களின் துயர நிலைக்கே படிமமாகி இருக்கின்றது என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. தமிழின் நவீன மனநிலையைத் தொடங்கி வைத்த இரு பெரும் ஜாம்பவான்களான கவிபாரதியும், சிறுகதை முன்னோடியான புதுமைப்பித்தனும் துன்பக்கேணி என்னும் உருவகத்தை பெண்கள் சார்ந்தே உண்டாக்கி உள்ளனர். கரும்புத் தோட்டத்திலே கவிதையில் வரும் அந்த வரிகள்,

நாட்டை நினைப்பாரோ? – எந்த நாளினிப்
போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்
கேட்டிருப்பாய் காற்றே! துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்
மீட்டும் உரையாயோ? - அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டும் போயினர்.

தமிழ்ப் பெண்கள் கரும்புத் தோட்டத்தில் பட்ட துயரத்தைத் துன்பக் கேணியாகப் பாடிய பாரதியின் வரிகளை நீண்ட கதையாக மாற்றிய புதுமைப் பித்தன் அக்கதையின் வெளியாக இலங்கைத் தீவின் மலையகத் தேயிலைத் தோட்டமாக மாற்றிக் கட்டமைத்து அச்சொற்சேர்க்கையையே – துன்பக்கேணி உருவகத்தைப் படிமமாகக் காட்டுகிறார். அக்கதையில் வரும் மருதியின் இன்னொரு வடிவமாக வண்ணநிலவன் வண்டிமலைச்சியை உருவாக்கிக் காட்டியுள்ளார்.
அந்த வகையிலும் துன்பக்கேணி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

No comments :