September 29, 2009

கலையும் ஒப்பனைகள்


[இந்நாடகத்தை மேடையேற்றவிரும்புபவர்கள் தகவல் தெரிவித்து விட்டு மேடையேற்றிக் கொள்ளலாம் ]

காட்சி:1

[அவன் ஒரு புதுவகை ஈஸிசேரில் படுத்துக் கிடக்கிறான்.உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் ஓய்வு கொடுப்பது நோக்கம்.வெளிச்சம் நேரடியாக முகத்தில் இல்லை. முகம் கர்சீப்பால் மூடப் பட்டிருக்கிறது. நிழல் திசைமாறும் பொழுதெல்லாம் குரல் தொனி மாற்றி வந்து கொண்டிருக்கிறது].
'நோ..ந்நோ..இல்லை .. இது பொய். இது பொய்..
காதலாவது கத்தரிக்காயாவது; முடியாது ; ஒத்துக்க முடியாது
நான் ஒத்துக்க முடியாது.
எனக்கு என் அடையாளம் முக்கியம்; என் அந்தஸ்து முக்கியம்
எனது கடவுள் முக்கியம்; எனது சாதி முக்கியம்
எனது சமயம் ; எனது மக்கள்...
அவ்வளவு சுலபமா விட்டுவிட முடியாது.
உன்னோட ஆசை நிறைவேறும் சாத்தியங்களே இல்லை
எல்லாவற்றையும் மறந்துவிடு;
மறந்துவிடுவதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை'

[வசனப் பயிற்சிக்காகச் சொல்லப்படுவது போல் தூரத்திலிருந்தும் பக்கத்திலிருந்துமாக வருகிறது. ஆண்குரலிலும் பெண்குரலிலுமாக மாறிமாறி ஒலிப்பதற்கேற்ப அந்த உருவத்தின்மீது மாறி மாறி விழும் வண்ணம் விளக்கு வெளிச்சம் மெதுவாகவும் சடசடவென்றும் வந்து போகின்றன. நிழலும் நீள்வதும் குறுகுவதுமாக இருக்கிறது.விளக்கு,குரலின் ஓசை, நிழலின் அளவு என ஒவ்வொன்றும் ஒத்திசைவுடன் அமைய வேண்டும்
இந்த வசனப் பயிற்சியினூடாக தூரத்தில் ஒரு ஷூட்டிங்கின் பின்னணிக் காட்சிக்கான குரல்கள்-'லைட்ஸ் ஆன்' , சீன் தேற்ட்டி பைவ்; டேக் த்ரீ போன்ற குரல்கள் கேட்கின்றன. பின் திரையில் நிழல் உருவத்தில் இயக்குநர் காமிராக் கோணம்பார்ப்பது ,டிராலியில் காமிரா முன்னும் பின்னுமாக நகர்வது போன்றன இடம் பெருகின்றன. கடைசியில் இயக்குநர் குரல் ]

" ஷாட் ரெடி ... டேக்..ஆக்ஷன்.."

[ இந்தக் குரல் கேட்டதும் அந்த நபர் எழுந்து ஆவேசமாக இந்த வசனங்களைப் பேசிகிறான்]
"நோ..ந்நோ..இல்லை .. இது பொய். இது பொய்..
காதலாவது கத்தரிக்காயாவது; முடியாது ;ஒத்துக்க முடியாது
நான் ஒத்துக்க முடியாது.
எனக்கு என் அடையாளம் முக்கியம்; என் அந்தஸ்து முக்கியம்.
எனது கடவுள் முக்கியம்; எனது சாதி முக்கியம்.
எனது சமயம் ; எனது மக்கள்...
அவ்வளவு சுலபமா விட்டுவிட முடியாது.
உன்னோட ஆசை நிறைவேறும் சாத்தியங்களே இல்லை
எல்லாவற்றையும் மறந்துவிடு; மறந்துவிடுவதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை"
[இயக்குநரின் குரல் மட்டும் கேட்கிறது]


'ஸூபர்ப் சார்.. பின்னீட்டீங்க.. ஏய்ய்.. நாளைக்கு சாருக்கு எந்த ஷெட்யூல் ;
செக்கண்ட் ஷெட்யூலா.. ஓ.கே.. சார் .நாளைக்குப் பார்க்கலாம் ..'

[அருகில் இருப்பவரிடம் சொல்வதுபோல் மெதுவாக ]


'அனுபவசாலிகளோடு ஒர்க் பண்ற சொகமே தனி தாம்ப்பா..'
காட்சி:2


[ அவன் அதை நின்று கேட்டுக் கொண்டு மெல்லிய புன்னகையுடன் வெளியேறுகிறான்.]

[ நாற்காலியில் அமர்ந்திருக்கிறான்; அவனது அசைவு காரில் பயணம் செய்வது போல் இருக்கவேண்டும். தேவைப்படும் இடத்தில் எழுந்து நடித்துவிட்டுத் திரும்பவும் அசைவுரூபத்திற்கு வந்து விடவேண்டும்]


நினைவில் இருக்கிறது
எனது நினைவில் இருக்கிறது.
எல்லாம் நினைவாய் இருக்கிறது.
எதில் தொடங்கி எங்கு முடியும் என் நினைவுகள்
எங்கள் ஊர் ஆலமரம்; அகன்று விரிந்த ஆலமரம்.
கிளைக்குப் பத்து விழுதுத் தூண்கள்.
விழுதுகள் தோறும் கிளிக்கூண்டு;
கூண்டுகள்தோறும் பச்சைக்கிளி..
...ஒற்றைக்கிளி.. இரட்டைக்கிளி..
கூண்டுகள் காணாப் பச்சைக்கிளிகள்.
மெல்ல வளைந்தோடும் உப்போடைப்பள்ளம்
மானம் பார்த்த அந்தப் பூமி
வடக்கே பார்த்தால் மேகங்களுக்கூடே
மெலிதாய் தெரிவது திடியன் கரடு
அதன் அடிவாரத்தில் அந்தவெள்ளைக் கோபுரம்.
இந்தப் பக்கம் தொழுகை போடும் சின்ன மசூதி.
வாப்பாவுக்குத் தெரியும் ஐந்து நேரத்தொழுகை;
எனக்கும் தெரியும்;
எனக்கு ஐந்து நேரத்தொழுகையுடன்
ஆறுகாலப் பூஜையின் நேரமும் தெரியும்.
காயத்திரி மந்திரம் கற்றுக்கொள்ள முயன்று தோற்றதும்
கண்ணுக்குள் நிறையும் பின்கூந்தல் அசைவும்
திரும்ப வரப் போவதில்லை.
எனது கிராமம் எங்கே போனது;
எனது இளமை எங்கே சென்றது;
நான் படித்த நடுநிலைப் பள்ளியில்
எட்டு வகுப்புக்குப் பதினொரு வாத்தியார்கள்.
பத்தைத் தாண்டிய ஒற்றை விரலாய்
இந்தி வாத்திச்சி; பர்வதவர்த்தினி;
அவர்தான் அப்புறம் கணக்கு டீச்சர்.
இந்தி வாத்திச்சி கணக்கு டீச்சர் ஆன கதை
என் நினைவில் இருக்கிறது.
பெருமாள் கோயில் அக்கிரகாரத்துக் கடைசி வீட்டில்
எங்கள் டீச்சர் இருந்தது வாடகைக்குத்தான்.
அவருடன் அவரது அம்மாவும் இருப்பார்.
கணக்கு வாத்தியார் தனசேகரபாண்டியன் தோட்டத்திலிருந்து
காய்கறிகளும் நல்ல தண்ணீரும் கொண்டு போய் இறக்க
எங்கள் வகுப்பில் ஏழு டீம் இருந்தது.
என்னுடைய முறை வெள்ளிக்கிழமை.
தொழுகைக்குப் போக முரண்டு பிடிக்கும் எனக்கு
அக்கிரகாரம் போக அலுத்ததே இல்லை.
குளித்து முடித்துக் கோதும் சிணுக்கருக்கியுடன்
எங்கள் டீச்சர் வாசலில் நிற்பாள்;
அவளுக்கு உவமை சொல்ல ஒரு சிற்பம்
மசூதியில் இருக்கவில்லை.
உவமை தேடிக் கோயிலுக்குப் போவேன்.
மலையடிவாரக் கோயிலுக்கு....
கோயிலெங்கும் கோலங்கள்; கோலமயில்கள்.
ஹிந்தி ஒழிக! தமிழ் வாழ்க!!
தமிழ் வாழ்க! ஹிந்தி ஒழிக!!
இந்திப் பேயை ஓட்டும் போரில்
இறங்கவேணும் இளைஞர்களே!
வேண்டும்! வேண்டும்!! தமிழே வேண்டும்;
எங்கும் வேண்டும்! எதிலும் வேண்டும்!!
புதுப்புனல் ஆறாய் எமது தாய்மொழி
பொங்கும் தமிழே எங்கும் வேண்டும்
வேண்டாம்! வேண்டாம்!! ஹிந்தி வேண்டாம்!
வடவராதிக்கப் பேயது வேண்டாம்.
ஆரிய பாஷை....அது நீசபாஷை..
ஆதிக்கம் செலுத்தவந்த அன்னிய பாஷை.
வேண்டாம்! வேண்டாம்!! ஹிந்தி வேண்டாம்!
பார்ப்பணக் கும்பலின் மொழியது வேண்டாம்.
கோஷம் போட்டபோது என்ன வயதிருக்கும்
நான் இளைஞனுமில்லை; என்னில் ஆர்த்தெழுந்த
திமில்கள் எதுவென அறிந்ததுமில்லை.
என்றாலும் கோஷங்கள் உண்டு; கோபங்கள் உண்டு;
கல்லெறி உண்டு; கதவடைப்பு உண்டு.
ஆனால் டீச்சரிடம் எனக்குக் கனிவ்¢ருந்தது.
தனசேகரபாண்டியன் சொன்னபோது
புரிந்தது கொஞ்சம்; புரியாதது எங்கும்;
என்ன செய்தார் பர்வதவர்த்தினி..?
எப்படி முடியும் அவரை எதிர்க்க...?
இந்தி வருது என்றபோது ; இல்லை
செதுக்கிய சிலையொன்று சிறு நடனம் புரிந்தது என்பேன்
அந்த வயதில் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதுதான்.
என்மனதில் இருந்தது என்னவென்று எனக்கே தெரியாது.
இந்தி எதிர்ப்புப் போரில் தனசேகரபாண்டியன் தான் தளபதி
முப்பதுகளில் இருந்த அவரது அடுக்குமொழித்தமிழ்
சொக்கவைக்கும் தேன்மதுரம்; அற்புதப் பல்வரிசை.
எங்கள் பள்ளியிலிருந்து ஹிந்தி போனபோது
பர்வதவர்த்தினிக்கு வேலை போகவில்லை;
பர்வதவர்த்தினி திருமதி தனசேகரபாண்டியன் ஆனாள்.
இரண்டு வருடங்களுக்குப் பின் ஹிந்தி டீச்சர்
எங்கள் பள்ளியின் கணக்கு டீச்சரானார்.
அக்கிரகாரத்துப் பர்வதவர்த்தினி
அகமுடையாளானாள்.
இந்தியை வெறுத்த தனசேகரபாண்டியனுக்கு
இந்தி டீச்சர் பிடித்தமானவளாக இருந்தது எப்படி..?
கேள்விகள் அப்பொழுது இல்லை;விடைகள் இருந்தன.
காதலுக்குக் கண் இல்லை;
காதலுக்குக் கண்மட்டும்தானா இல்லை...?
இப்பொழுது விடைகள் இல்லை.
கேள்விகள் இருக்கின்றன.

காட்சி:3

[ அது ஒரு விழா மேடை; வெள்ளிவிழாக் கொண்டாடிய
படத்தின் கேடயம் கையில் இருக்கிறது.விருதுவாங்கிய அவனிடம்
கேள்விகள் கேட்கும்விதமாகக் குரல்கள் வருகின்றன]


'இந்த விருதுவாங்கிய கணத்தெ எப்படி உணர்றீங்க..?'

"ரொம்ப சந்தோசமா இருக்கு.. ஒரு கலைஞனுடைய சந்தோசம் என்பது அவனது காரியத்தெப் பலரும் பாராட்றதிலதான் இருக்கு;
பணம்;வசதியெல்லாம் வரும் போகும்;ஆனால் ரசிகர்கள் மனத்தில் பிடிக்கிற இடம் ரொம்ப முக்கியமானது.புகழ் அதுக்குத்தலை வணங்காம இருக்க யாரால் முடியும். ரசிகர்களின் பாராட்டுக்கும் எதிர்பார்ப்புக்கும் ஏற்றவனாக என்றும் இருப்பேன் "

' இப்படியொரு கேள்வி கேக்கிறேனேன்னு கோபப்பட வேண்டாம்.இந்தப் படத்தில இந்த கேரக்டரச் செய்யும்போது இன்வால்வாகி செய்ய முடிஞ்சதா... இல்லேயின்னா வேறெ வழியில்லன்னு செய்ஞ்சீங்களா..?'

"இப்படியொரு கேள்வியெக் கேக்கிறதுக்கு என்ன காரணம்..?"

'அதாவது இதே படத்தில உங்களுக்கெதிராக நிக்கிற அந்தக் கதாபாத்திரத்த... ஐ மீன் அந்த முஸ்லீம் கதாபாத்திரத்த நீங்க இன்னும் நல்லா செஞ்சிருக்கலாமில்ல...?'

[ மனதிற்குள் கோபம் இருக்கிறது. ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளாமல் ]


"யூ..மீன் ஒரு பைத்தியக்காரனுக்கு மட்டும் தான் பைத்தியமா நடிக்கிறது சுலபம்னு சொல்லவர்ரீங்க.. அப்படித்தானே ."

'ஸாரி சார் ..அந்த அர்த்தத்தில சொல்லல '

"ஸாரி நானும் அந்த அர்த்ததில சொல்லல; ஒரு நடிகனெப் பொறுத்தமட்டில எல்லாம் கதாபாத்திரங்கள் தான்; நான் முஸ்லீம்கிறதுனால ஒரு முஸ்லீம் கேரக்டரெ நல்லாச் செய்ஞ்சிடுவேன்னு எதிர்பார்க்கிறது அபத்தம்ன்னு சொல்ல வந்தென்."

'அனுபவத்துக்கும் வெளிப்பாட்டுக்கும் சம்பந்தமே இல்லங்கிறீங்களா..?'

"சம்பந்தம் இருக்கலாம்; பயிற்சியே அதைவிட முக்கியம்னு சொல்ல வர்றேன்; நாய் வேஷம் போட்டா கொரைக்கப் பழகனும்; கழுதயின்னா கத்தப் படிக்கனும்."

[மேலும் கேள்விகள் வேண்டாமே என்னும் தொனியில் உடல் சாடை
காட்டிவிட்டு இறுக்கமான முகத்துடன் வெளியேறிய அவன்
பெரும்மூச்சுடன் படுத்துக்கிடக்கிறான். அவனுள்ளிருந்து முனகலாக
வரத்தொடங்கிய குரல் பிறகு வெடிக்கிறது]


அர்த்தங்கள்..அனர்த்தங்கள்
நிற்பதிலும் நடப்பதிலும் அர்த்தங்கள்;
உண்பதிலும் உறங்குவதிலும் அர்த்தங்கள்;
எல்லா அர்த்தங்களும் புரிகின்றன.
மோகம் கொள்வதற்கும் போகம் கொள்வதற்கும்
ஒரே அர்த்தந்தானா..அனர்த்தங்கள் எதுவுமுண்டா..?
கேள்விகளும் பதில்களுமாய் ..
பதில்களும் கேள்விகளுமாய்..
ஆலமரம் தாண்டி அம்மன் கோயில்; திரௌபதியம்மன்,
பாஞ்சாலியம்மன்; அஞ்சுபேருக்கு வாக்கப்பட்ட பாஞ்சாலி

[தெருக்கூத்தில் இடம் பெறும் பாஞ்சாலி- துச்சாதனன் துகிலுரியும்
காட்சியைத் தெருக்கூத்து நடிப்பாகக் காட்டவேண்டும்]


"அடேய்..துச்சாசனா... இழுத்து வாடா.அவளை..
ஏளனம் செய்து கொல்லென்று சிரித்த அந்தப் பாஞ்சாலியை
இழுத்து வாடா.அவளை..அடேய்..துச்சாசனா...
கண்ணாடி மாளிகை கட்டியழைத்து
கலகலவெனக் குலுக்கியெடுத்து
கதிகலங்கடித்த அந்தப் பாஞ்சாலியை
அடேய்..துச்சாசனா... இழுத்து வாடா.அவளை.
என்ன காரணமென்று நான் யோசிக்க ,
என்னைக் கொல்ல வந்ததந்தச் சிரிப்பதுதான்
என்பதை உணர்ந்தேன் சோதரா...
இழுத்துவாடா அவளை.. என் தொடைமீது உட்கார்ந்து
சுண்ணாம்பு தடவிய வெற்றிலை மடித்திட
இழுத்து வாடா அவளை..
இங்கே இழுத்து வாடா அவளை...
சூதாட்டக் களத்தில் வைத்திழந்த பொருளாய்
நேர்ந்திட்டபின்னரும் இன்னுமென்ன இருக்கு
அவளுக்குக் கர்வங்கள் தானெததற்கு..
இழுத்து வாடா அவளை..துச்சாசனா..இழுத்து வாடா அவளை.
[துரியனாய் இருந்தவன் துச்சாதனனாய் மாறி துகிலுரியும்
காட்சிக்குத்தயாராக வேண்டும்].
'ஆணைகள் தானேயிட்டார் எங்கள் அண்ணா
'ஆணைகள் தானேயிட்டார்;எனக்கு
ஆணைகள் தானும் இட்டார் .
இழுத்துவரச் சொல்லி ஆணைகளும் இட்டார்
அந்தப்புரம் செல்வேன்; நானே அந்தப்புறம் செல்வேன் .
அந்தப் பாஞ்சாலி தங்கிடும் அந்தப்புரமும் செல்வேன்
ஐம்பத்தாறு தேசத்து ராசாக்களும் அவள் அலறலைக்
கேட்டு ரசிக்கவே இழுத்தே நான் வருவேன்.
இழுத்தே நான் வருவேன்.
எங்கள் அண்ணன் நோகச் சிரித்த
கோமளவல்லியை இழுத்து நான் வருவேன்.
என் அண்ணன் இடது தொடையின் உயிர்த்தள மேடையில்
உட்கார்ந்து ரசித்திட இழுத்து நான் வருவேன்".

[கூத்து நடிப்பிலிருந்து விடுபட்டு இயல்பு நிலையில் ]


இழுத்து வரமாட்டேன். நான் இழுத்து வரமாட்டேன்.

( நின்று நிதானமாக அசைந்து அசைந்து)
மாட்டேன்.. இழுத்து வரமாட்டேன்.
எனக்கு துஷ்டன் துச்சாதனனாக நடிக்கப்பிடிக்கவில்லை.
பாஞ்சாலியைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்
அஞ்சு பேருக்குப் பத்தினியான அந்தப்
பாஞ்சாலியைக்கூட விட்டு விடுங்கள்.
பாரதமாதாவைப் பாருங்கள் கௌரவர்கள்
மட்டுமா துகிலுரியக்காத்திருக்கின்றனர்.
பாண்டவர்களின் ஆசை கூட துகிலுரிந்து பார்ப்பதில்தான்
திருப்தி கொள்ளும் போலும்.
கௌரவர்களும் சபைகளில் மட்டுமல்ல
பாண்டவர் சபைகளிலும் நிர்வாணக் கோலம்.
துரியோதனாதிகள் -இந்த தேசத்தின் துரியோதனாதிகள்
கௌரவர்கள்.. கௌரவங்கள்..தேசத்தின் கௌரவங்கள்..
பாண்டவர்கள்.. ஆண்டவர்கள். தேசத்தை ஆண்டவர்கள்
ஆள்பவர்கள்..மாள்பவர்கள்..ஆண்டவர்கள்.
கண்டவர்.. விண்டிலர்.. விண்டவர்.. கண்டிலர்..

(திரும்பவும் வேகம் பிடித்தவனாய் அடவுகள் போடத்தொடங்குகிறான்.)


எச்சபை தன்னிலும் திரௌபதியை இழுத்து வரமாட்டேன்.
துகிலுரியும் காட்சி ஒரு நடிகனின் நடிப்புக்கு சவால் விடும் காட்சி தான்.
துரியோதனனாக நடிப்பது எனக்கும் கூட அல்வா சாப்பிடுவது போலத்தான்.
ஆனால் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
பாஞ்சாலியை அல்ல; பாரததேவியை
இங்கு கௌரவர்கள் மட்டுமா துகிலுரிகிறார்கள்.
பாண்டவர்களுக்குக் கூட துகிலுரிந்து பார்க்கத்தான் ஆசை.
சந்தடி சாக்கில் துரோணாச்சாரியார்களும் வீஷ்டுமாச்சார்களும்கூட
அந்த வாய்ப்புக் கிடைத்தால் சந்தோசம் என்கிறார்கள்.

[திரும்பவும் கூத்து அடவுகளுடன் பாடு ஆடுகிறான்]


நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் -என்னை
நல்கு முரிமை அவர்க்கில்லை-புலைத்
தாயத்தி லேவிலைப் பட்டபின் - என்ன
சாத்திரத் தாலெனைத் தோற்றிட்டார்? -அவர்
தாயத்தி லேவிலைப் பட்டவர்;- புவி
தாங்குந் துருபதன் கன்னிநான்,-நிலை
சாயப் புலைத்தொண்டு சார்ந்திட்டால் -பின்பு
தாரமுடைமை யவர்க்குண்டோ?..
"கௌரவ வேந்தர் சபைதன்னில் -அறங்
கண்டவர் யாவரு மில்லையோ? -மன்னர்
சௌரியம் வீழ்ந்திடு முன்னரே - அங்கு
சாத்திரஞ் செத்துக் கிடக்குமோ?-புகழ்
ஒவ்வுற வாய்ந்த குருக்களும்-கல்வி
ஓங்கிய மன்னருஞ் சூதிலே- செல்வம்
வவ்வுறத் தாங்கண் டிருந்தனர்
மானமழிவதுங் காண்பரோ?
இன்பந் துன்பமும் பூமியின் -மிசை
யாருக்கும் வருவது கண்டனம்: -எனில்
மன்பதை காக்கும் அரசர்தாம் -அற
மாட்சியைக் கொன்று களிப்பரோ?-அதை
அன்புந் தவமும் சிறந்துளார் -தலை
அந்தணர் கண்டு களிப்பரோ?
[திரும்பவும் தளர்ந்த நிலைக்கு வந்து கால்கள் பின்னிப்பின்னி நடந்தபடி ]


பாஞ்சாலியின் எல்லாக் கேள்விகளும் அர்த்தம் பெற்றனவாகிவிட்டது உங்களுக்கு புரியவில்லையா.?கௌரவர்களும் பாண்டவர்களும் இன்று இல்லைதான்.அஸ்தினாபுரிகளுக்குப்பதிலாகவும் சைபர் பிரதேசங்களில் நடக்கின்றன சூதாட்டங்கள்.இந்திரப்பிரஸ்தத்துக் கண்ணாடி மாளிகைக்கீடாக புலப்படா அறிவு வாதமும் நம்முன் நிற்கின்றன.
வட்டாடும் மேஜைகளின் நிறங்களும் மாறிவிட்டன.
நீள அகலங்களும் கூட மாறித்தான் போய்விட்டன.
உருட்டப்படுவது ஜோலிகளும் சொக்கட்டாங்காய்களும் மட்டுமல்ல;
சட்டங்களும் மரபுகளும் கூடத்தான்.
வைக்கப்படுவது டாலர்களுக்கீடாக மனிதமூளைகள்.
கம்யூட்டர் சிப்ஸ்களுக்கீடாக வேம்பின் விதைகளும் ஆவின் பால்ச்சத்தும்.
ஆட்டங்களும் ஆட்டவிதிகளும் மாறித்தான் போய்விட்டன.

காட்சி:4

[ஒரு ஓரத்தில் இருக்கும் ஆல்பம் ஒன்றை எடுத்து அதன் பக்கங்களைப்
புரட்டியபடியே பேச்சு தொடர்கிறது.]


ஆனால் என் விசயத்தில் எதுவும் இயல்பாயிருக்கவில்லை.
எனது காதலும் எனது நேசமும்
எனது நட்புக்களும்கூட.
எனது விண்ணப்பங்கள் வேறுவிதமாகப்பரிசீலனை செய்யப்படுகின்றன.
எனது இருப்பு சந்தேகத்துக்குரியதாவதெங்ஙனம்..?
எனது அழுகை புன்முறுவலாவது எப்படி..?
எனது அசைவுகள் மட்டும் கண்காணிப்புடன் அனுமதிக்கப்படுகின்றன.
கண்காணிக்கப்பட்டன;ஆம் கண்காணிக்கப்பட்டன.
அது எனக்குத்தெரியும்; அறிந்தே அதனைச் செய்தேன்
எனக்கு நிகழ்ந்தன போல் அல்ல
அவளது நுழைவு காற்றில் அலையும் மயிலிறகாய் இருந்தது
எனக்கோ எத்தனை தடைகள்; எத்தனை அவமதிப்புகள்
ஓரிடத்தில் எனது உயரம் அதிகமென்றார்கள்
இன்னொரு நபரோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கலாம் என்பார்
என்னுடைய பிளஸும் மைனஸும் எனக்குத் தெரியும்
நீளமுகத்தில் மூக்குமட்டும் துருத்திக்
கொண்டிருப்பதாகச் சொன்னவர்களுமுண்டு.

[அவன் ஒரு சதுரங்கப்பலகையை எடுத்து வைத்துக் காய்களை
அடுக்குகிறான்.அடுக்கியபடியே பேசுகிறான்.....]


அவையெல்லாம் கடந்தகாலம்;
எனது கடந்தகாலத்தில் மட்டுமல்ல.
இந்தக் கனவுலகத்திற்குள்ளும் அலையும்
மயிலிறகாகவே அவள் நுழைந்தாள்
அவளது வரவுக்காகக் கதவுகள் எல்லாம்
கரங்கூப்பி அழைத்தன.
இது பெண்களின் உலகமா..?
அப்பொழுது எவையும் புரிந்தன அல்ல.
கடந்தகாலத்தைப் புரிந்துகொள்ளத்தொடங்குவது
கசப்புகளையும் கயமைகளையும் கடந்து விடத்துடிப்பதா..?
ஆனாலும் அந்தச் சந்திப்புகளை நினைக்காமல் இருக்கமுடியாது.
அந்த உரையாடல்களைச் சொல்லாமலும் விடமுடியாது.

[காய்கள் அடுக்கி முடிந்திருக்கிறது.அவனுடைய வசனத்தை கறுப்புக்காயை
நகர்த்தியபடியும், அவளுடைய வசனத்தை வெள்ளைக்காயை நகர்த்திய
படியும் பேசுகிறான்]


'பர்வதவர்த்தினியைப் பார்க்கமுடியுமா..?'
"தினசரி நான் பார்த்துவிடுகிறேன், "
'இன்னுமா கனவில் வருகிறார்கள்..?'
"நேரில் தான்.. .. நீ இருக்கிறாயே ; உனது திரும்புதலெல்லாம்
இந்தி டீச்சரின் சாயல்தான், என்றேன்".
'கனவில் நான் வருவதேயில்லையா..?'
"கனவுகள் வருகின்றன;ஆனால்
கனவில் வருவது இந்த நகரமல்ல;
பெருமாள் கோயில் வீதி.. பர்வதவர்த்தினிக்குப்பதிலாக நீ.
கைவிரல் பிடித்து நடப்பது நான்."
கனவுகள்தான்.. எல்லாம் கனவுகள் தான்..
எங்கள் இருவரின் உலகமும் கலை உலகம்.
நானும் நடிகன்; அவளும் நடிகை
தமிழ் கூறும் நல்லுலகத்திற்குக் காதலைக் கற்றுத்தரும் கலையுலகம்
நாங்கள் கற்றுக்கொண்டது
தோல்வியின் வலிமையை...துயரத்தின் சாயலை;
என்ன நேர்ந்தது இடையில்.எதுவுமே சொல்லப்படவில்லை.
மறந்துவிடச் சொன்ன நாள் மட்டும் நினைவில் இருக்கு
கண்களில் உருண்டு திரண்ட கண்ணீருடன் அவள் ஆடிய நடனக் காட்சி
அந்த வெள்ளிவிழாப்படத்தின் இடைவேளையாய் மட்டுமல்ல.
எங்கள் காதலின் நினைவுக்காட்சியாகவே ஆகிப்போனது.
நினைவுகள் அழியக்கூடாது என்பதற்காகவே
கடந்தகாலத்தைப் புரிந்துகொள்ள முயன்றதில்லை.
அவள் மாடப் புறா; எனது சிறகடிக்கும் மாடப்புறா.
எல்லாமும் அற்புதத் தருணங்கள்.
நினைவில் இருத்திக் கொள்ளவேண்டிய தருணங்கள்தான்.
எங்களது பயணம் இலக்குகள் இன்னும்
எனக்கு நினைவில் இருக்கின்றன.
எனது நினைவில் இருக்கின்றன.
....ம் எல்லாம் நினைவாகவே இருக்கின்றன.
"மனிதன் எவ்வளவு மேன்மையானவன்; அவனால் மட்டும்தான் அன்பு செலுத்தமுடியும்;
அவனால் மட்டும்தான் சகமனிதனுக்காக இரங்கவும் உதவவும்இயலும்;
அவனால் மட்டும்தான் காதல் செய்யமுடியும்;
காதலுக்கு மட்டும் தான் எந்த வேறுபாடுகளும் கிடையாது."

[ சதுரங்க விளையாட்டுக் குலைக்கப்படுகிறது ]

கொலை கொலையா முந்திரிக்கா
கொலஞ்சு போச்சு கத்திரிக்கா
எம்பேர்ப் பேரிக்கா....................
ஆம் எல்லாம் குழைந்து குழைந்து போய்விட்டன;
உங்களுக்கு அறிவுஜீவி என்றால் என்னவென்று தெரியுமா..?
நான் ஒரு அறிவுஜீவி..எனது வாழ்தல் எனது அறிவால் நடக்கிறது.
என் தந்தையும்கூட அறிவுஜீவிதான்.
ஆனால் தனது வாழ்தலுக்கு அறிவை மட்டும் நம்பியவரல்ல
அவருக்குத் தெரிந்தது நாடகம் மட்டுமில்லை.
நாடகம் தெரியும் ; நாற்று நடவு தெரியும்
முந்திரித்தோப்பில் குடியிருக்கவும் தெரியும்
ஆனால் அறிவுஜீவியான கதை ரொம்ப சுவாரசியமானது
எனது அறிவுஜீவி நண்பர்கள் என்னை கூட்டாளியாக்கியது ஏனென்று தெரியுமா.?
நான் பேசிய ஆங்கிலம்தான்.
ஆங்கிலம் கற்றுக்கொள்ள நான் பட்டபாடு நாய்பட்டபாடுதான்.
அந்த நேரத்தில் கிடைத்தவேலையைத் தக்கவைக்க ஒரே வழி ஆங்கிலம்தான்.
வாடிக்கையாளர்களிடம் நான் உரையாடவேண்டும்.
அவர்களைத்திருப்திப் படுத்த தரமான பொருள்களை விட
நுனிநாக்கு ஆங்கிலம் போதும்.
ஏற்கனவே சிவப்புத்தோல் வரமாகிவிட்டது.
சிவப்புத் தோலுக்கும் நுனிநாக்கு ஆங்கிலத்திற்கும் உள்ளமரியாதைகளை அனுபவித்தவர்கள்தான் சொல்லமுடியும்; நான் அனுபவித்திருக்கிறேன்.
நல்லவிதமான பலன்கள் தான்.
என்னை நடிகனாக்கியதுகூடப் பெரிய காரியமில்லை.
நட்சத்திர விடுதியின் பணியாளாக்கியதே அவைதான்.
அறிவுஜீவிகள் எப்பொழுதும் நிற்பது தோற்றுப் போகின்றவர்களின் பக்கம்தான்.
நானே பலதடவை தோற்றுப்போயிருக்கிறேன்.
சின்னச் சின்ன வெற்றிகளோடு பெரிய பெரிய தோல்விகள்.. தோல்விகளின்மேல் தோல்விகள்.. தொடர் தோல்விகள்..
இப்பொழுது சொல்லுங்கள் நான் அறிவுஜீவிதானே.
போட்ட கணக்குத் தப்பாய்ப் போக ......
ஒன்றிலிருந்து திரும்பவும் தொடங்கலாம்.
கணக்கு..கணக்கு..
கொலை கொலையா முந்திரிக்கா
கொலஞ்சு போச்சு கத்திரிக்கா
எம்பேர்ப் பேரிக்கா....................காட்சி:5[சோர்ந்து விழுந்து கிடப்பவனைக் கிழிக்கும் வேகத்தில் வரும் ரயில்களின் சப்தம் எழுப்பி விடுகிறது. இரண்டு மூன்று ரயில்கள் குறுக்கும் நெடுக்குமாகப் போகின்ற ஓசை. தூரத்தில் அந்த ஓசை போய் மங்கிய பிறகு திரும்பவும் அவன் பேசுகிறான்.
அவன் பேசுகிறபோது பின்னால் கோயில்கள்,அரண்மனைகள், மசூதிகள், ஸ்தூபிகள், நினைவுத்தூண்கள் என சரித்திரத்தின் ஆதாரங்கள் படங்களாக வந்து போகின்றன.]வரலாறு என்பது என்ன.?
அந்தக்காலம்.. அப்படியொரு காலம்.. அது ஒரு காலம்..


அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்;
இற்றைத்திங்கள் இவ்வெண் நிலவில்
வென்றுஎறி முரசின் வேந்தரெம்
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே
காலம்தான் வரலாறா.. இருக்கலாம் என்பது எனது எண்ணமாக இருந்தது;
ஆனால் எல்லாரும் அப்படி நம்புவதில்லை போலும்.
'ஒருநண்பர் சொல்வார் கடந்தகாலம் பழிவாங்கத்தூண்டும்' என்று.


'ஒரு நண்பர் சொல்வார் கடந்தகாலம் பழிவாங்கத்தூண்டும்' என்று.
வரலாற்றில் பல வக்கிரங்கள் நடந்தேறி இருக்கின்றன;
முல்லைக்குத்தேர் தந்த பாரியின் வாரிசுகள்
கந்துவட்டிக்கடை நடத்த நேர்ந்தால்
பாரிமகளிரைக் கழுவேற்ற முடியுமா..?
நந்தனை எரித்த மிச்சம் காக்கப்படுகிறதென்றால்
தீவட்டி ஏந்தலாம்;
அக்கிரகாரங்கள் அடையாளமிழந்தபின்
பூணூல் அணிவதும் பூணூல் அறுப்பதும்
வீரவிளையாட்டுக்களா...?
வரலாற்று விளையாட்டுக்களா...
அதிகாரங்கள் இடித்த கோட்டைகளுக்கு
அப்பாவிகள் எப்படிப் பொறுப்பாக முடியும்..?
நாலு தலைமுறைக்குச் சேர்த்த சொத்தாய்
நயவஞ்சகம் இருந்தால்
ஆடிப்பார்க்க வேண்டியது வெறியாட்டங்கள்தான்.
நீர்வழிப்படூஉம் புனைபோல நீந்தித்திரியும்
எனது தேசம் எது ..? யார்தான் கேளிர்...?
யாரைப் பழிவாங்குவது நான் ...?
என்னையே நானா..?
நானே எனது அடையாளத்தையா.....?
அடையாளம் ...எனது அடையாளம்..
அழிக்கமுடியாத எனது அடையாளங்கள்
எனக்கென்றொரு கருத்து இருப்பது எனது அடையாளமா..?
உருவாக்கிக்கொண்டதென் அடையாளங்களில்லையா...?
விட்டுவிடுதல் சாத்தியமில்லையென்றால்
திணிப்பதுமட்டும் பொருந்திப்போவதெப்படி..?
எனது பெயர் சந்தேகத்துக்குரியதா..?
எனது செயல்களுக்கு உள்நோக்கமுண்டு
எனச் சொன்னது யார்..?
இப்பொழுதெல்லாம் இப்படித்தான் நடக்கிறது.
நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
[ரயிலில் ஓட்டப்பின்னணியில் சில உருவங்கள் அதன் போக்கில்
அசைவதாகக் காட்சிகள் அமைக்கப்படவேண்டும்]


யார் அந்த உரையாடலைத் தொடங்கியது .
தொடங்கியது நானில்லை; என்றாலும்
என்னில் வந்து மையம் கொண்டது.
ஏன் இப்படி நடக்கிறது;
எல்லாம் கேள்விகள் தான்..
பதில்கள் தேடும் கேள்விகள்.
"நாளைக்கு சூட்டிங் இருக்காது ;
அப்படியே குன்னூர் போயிட்டு வந்துரலாம்"
'குன்னூரில்தானே சூட்டிங்; போயிட்டு எங்கெ வரப்போறீங்க.'
"இல்ல, ஊட்டியில தான் சூட்டிங்;அங்கெ
சூட்டிங் நடத்திறதில் பிரச்சினை இருக்காது.'
"ரிஸ்க் எடுக்க டைரக்டர் தயாராயில்லை;
அதானால நாளைக்கு ரெஸ்ட் தான்."
'நேத்து நடந்தா மாதிரி இருக்கில்ல ; ஆனா
நடந்து ஆறு வருஷமாயிப்போச்சு..?'
"இல்ல பன்னிரண்டு வருஷமாச்சு"
' எதெச் சொல்றீங்க; கோவைக் கலவரத்தயா..
மும்பை வன்முறைகளயா..?'
" இல்ல என் நினைவில் இருப்பது 1992,
டிசம்பர்,6 பாப்ரி மஜ்ஜித் இடிக்கப்பட்ட நாள்"
' ஏன் உனக்கு மும்பையில் நடந்த வெறியாட்டம் நினைவில் இல்ல'
"எல்லா ஆட்டங்களும் நினைவிலிருக்கிறது எனக்கு
நான் ஆடாத ஆட்டங்களா.. கோலாட்டம்..,கும்மியாட்டம்
கரகாட்டம்.., காவடியாட்டம்... சிலம்பாட்டம்...., தப்பாட்டம்....
"உடம்புக்குள்ளெ அதிர்வுகள நுழைக்கச் சொல்லி
நான் எல்லா ஆட்டங்களும் ஆடியிருக்கிறேன்...
ஏனோ பரதநாட்டியத்தை மட்டும் விரும்பியதில்லை.
அதில் உடம்பின் அதிர்வுகள் இல்லையென்று
தோழர் சொல்லியிருந்தது காரணமாக இருக்கலாம்
ஆளும் வர்க்கக் கலையில் உழைப்பின் அதிர்வுகள்
எப்படி நுழைய முடியும்.. ? இதுவும் அவர் கேட்ட கேள்விதான்.
கலையை நேசிப்பதிருக்கட்டும் முதலில் மனிதனை நேசி என்பார்.
மனிதன் என்றால் அவரைப் பொறுத்தவரைக்கும்
உழைக்கின்ற மனிதனாய் இருக்கிறவன் தான்
மனிதன் மனிதனாகத்தான் இருக்கமுடியும்
நானும் அப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறேன்
கொஞ்சம் வித்தியாசங்களுடன்..
உழைக்கின்ற மனிதன் இந்துவாகவும் இருக்கிறான்
முஸல்மானாகவும் இருக்கிறான்....
வேதக்காரனாகவும் இருக்கிறான்..
மனிதன் என்பவன் மனிதன் தான்
"மனிதன் எவ்வளவு மேன்மையானவன்;
அவனால் மட்டும்தான் அன்பு செலுத்தமுடியும்;
அவனால் மட்டும்தான் சகமனிதனுக்காக இரங்க முடியும்."
இல்லை இல்லை இதுவும் உண்மையில்லை
அவன் தான் கருத்துக்களை கட்டமைக்கிறான்
அவன் தான் வேறுபாடுகளைக் காட்டிச் சிரிக்கிறான்.
ஆறு ஆண்டுகளுக்குப் பின் அந்த நண்பன் கேட்டபோது
நாடி நரம்புகள் தளர்ந்து போய்விட்டன.
அவனை அவ்வாறு கேட்கத்தூண்டியது எது..?


[கூடைப்பந்து மைதானத்தில் தரையில் பந்தைத் தட்டிக்கொண்டே
விளையாடுவதாகப் பாவனை. இவனுடன் இன்னும் சிலர் விளையாடிக்
கொண்டிருக்கின்றனர். விளையாட்டின் போக்காகவே உரையாடல்
நடக்கிறது]


'அயோத்தியில் கோயில் இடிக்கப்பட்டபோது
நீ எங்கே இருந்தாய்..?'


"இல்லை இடிக்கப்பட்டது கோயில் இல்லை; மஜ்ஜித்..
மஜ்ஜித் என்பது மசூதி..."


'ஆ..ங். கோயில் இல்லை மசூதி..அதிருக்கட்டும்
அப்போது நீ எங்கிருந்தாய்..?'


"எதிருக்கட்டும் மசூதியா...? கோயிலா...?"


'அதைப்பற்றியல்ல நான் பேசவந்தது. நான் கேட்பது நீ எங்கே இருந்தாய் என்பதைத்தான்..'


"எனக்கு நினைவில் இல்லை; தெரிந்து என்ன செய்யப் போகிறாய்..?
ஆனால் அடுத்து வந்த நாட்களில் நான் வீட்டில்தான் இருந்தேன்.
அடுத்தநாள் மட்டும் அல்ல; ஒருமாதம் வீட்டில் தான் இருந்தேன்."
'காரணம் ..?'


"காரணம் ..யாரையாவது தாக்கிவிடுவேன் என்று
அவர்கள் நினைத்திருக்கக் கூடும்."


'உன்னை யாராவது தாக்கிவிடலாமென்று நினைத்திருக்கலாமில்லயா..?
"வெறிநாய்களுக்குத்தான் கூண்டுகள் தேவை."


'விலைமதிப்பில்லாப் பொருள்களும் பாதுகாக்கப்பட வேண்டியவை தான்'
"இன்று நான் சொல்லிக்கொள்ளலாம்; விலைமதிப்பில்லாப் பண்டமென்று.
அன்று நினைக்கப்பட்டது வெறிநாயாகத்தான்."


'அப்படியொரு மனநிலை உன்னிடம் இருந்தது இல்லையா..?'


"அன்று இருந்ததில்லை ;ஆனால் இன்று இருக்கிறது.
இன்னுமொரு மசூதி இடிக்கப்படும்போது என்னருகில்
நீயிருந்தால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது"


'என்ன நடந்து விடமுடியும்..?'
"ஒருவேளை உனது காதைக் கடித்துவிடுவேனாக இருக்கலாம்."


'இப்படிச் சொல்ல உனக்குக் கூச்சமாக இல்லை.'


"இல்லை; இல்லை; இல்லவே இல்லை.
என்னிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்க நீ கூச்சப்படாதபோது
அப்படியொரு பதில்சொல்ல நான் ஏன் கூச்சப் படவேண்டும்."


கேள்விகளும் பயணங்களும் மட்டுமில்லை
எல்லா ஆட்டங்களும் நினைவில் இருக்கத்தான் செய்கிறது.
கோலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம்,
பறையாட்டம்,தப்பாட்டம், மட்டும் அல்ல.
வெறியாட்டங்களும்கூட நினைவில் இருக்கின்றன.
வெறியாட்டம்;ஆம் வெறியாட்டம்.
1992-ல் உத்தரபிரதேசத்தில் பாப்ரி மஜ்ஜித் காரணமாய்
1994......., 1998....,2000...., 2002....,2004
மும்பை ....,கோவை..., கோத்ரா.....ஹாஷியாபாத்...,
இடையிடையே நடந்த கிரிக்கெட் ஆட்டங்களும்
ஒருநாள் ஆட்டங்கள்...டெஸ்ட் ஆட்டங்கள்..
நல்லெண்ணப்பயணங்கள்..,கலாசாரத்திருவிழாக்கள்....,
திரும்பத் திரும்ப அரிதாரங்கள்
திரும்பத் திரும்ப ஒப்பனைகள்
கலைக்கப்படும் ஒப்பனைகள்நடிப்புக்கலையின் அரிச்சுவடி
ஆனால் வாழ்க்கை.. ஒப்பனைகளோடு ... வாழ்தல் .. எப்படிச்சாத்தியம்.
ஒப்பனைகளின்றி வாழுதல் வேண்டும்;
கனவுகளோடு வாழ்தல் வேண்டும்;
நினைவுகளோடு வாழ்தல் வேண்டும்
ஒப்பனைகளின்றி வாழுதல் வேண்டும்.
நான் மட்டும் அல்ல; நாங்களும்
நீங்கள் மட்டுமல்ல;நாம்.
ஒப்பனைகளின்றி வாழுதல் வேண்டும்;
கனவுகளோடு வாழ்தல் வேண்டும்;
நினைவுகளோடு வாழ்தல் வேண்டும்
ஒப்பனைகளின்றி வாழுதல் வேண்டும்.
=======================================
=================================================


.

No comments :