July 13, 2009

வளர்ச்சியின் அடையாளங்கள்: இமையத்தின் உயிர்நாடி


சொந்தக் கிராமத்திற்குப் போய்விட்டுத் திரும்பிய எனக்குத் திரும்பத் திரும்ப இமையத்தின் அந்தக் கதை ஞாபகத்திற்கு வந்து கொண்டே இருந்தது. கதையின் தலைப்பு உயிர்நாடி.வாசந்தி பொறுப்பில் இந்தியா டுடே வெளியிட்ட இலக்கியச் சிறப்பு மலர்கள் போல டைம்ஸ் ஆப் இந்தியா வுக்காக டைம்ஸ் இன்று என்ற தலைப்பில் ஒரு சிறப்பு மலரை 2008 ஆம் ஆண்டில் - பொங்கல் சமயத்தில் சுஜாதா தொகுத்தார் என்பதாக ஞாபகம். அந்தத் தொகுப்பில் தான் இமையத்தின் உயிர்நாடி கதை அச்சாகி இருந்தது.

கவிதைகள், கதைகள் அதிகமாகவும் கட்டுரைகள் குறைவாகவும் இருந்த டைம்ஸ் இன்று தொகுப்பில் அச்சான இமையத்தின் கதை- தனது நிலத்தை அதிக விலை தருகிறான் என்பதற்காக முகம் தெரியாத அந்நியனுக்கு - வேற்று மாநிலத்துத் தொழில் அதிபருக்கு விற்கச் சம்மதிக்காத சிறுவிவசாயியின் பிடிவாதத்தை- விவரித்திருந்தது. கதையைப் படித்து விட்டு இமையத்திடம் தொலைபேசியில் பேசிய போது கூட அதன் உள்ளடக்கம் சார்ந்து அதிகம் விவாதிக்காமல், கதை எழுதப் பட்டுள்ள முறையைக் குறித்தே அதிகம் பேசியது இப்போது நினைவுக்கு வந்தது.

நடைமுறையைப் பேசாமல் இலட்சியத்தை முன்னிறுத்துவதற்காக அதிக வார்த்தைகளைச் செலவு செய்திருப்பதாக நான் சொன்ன போது இமையம் கதையின் ஆன்மா நிலத்தைத் தக்க வைப்பதில் இருக்கிறது என்று வாதாடினார். மின்சார மயமான கிராமத்து விவசாயத்தோடு சேர்ந்து சொல்லாடலாக மாறிய பசுமைப் புரட்சி தமிழ் நாட்டுக் கிராமங்களை- கிராமத்துச் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கிய கொடுங்கனவை நேரடியாகப் பார்த்து அனுபவித்தவன் நான். எண்பதுகளின் இறுதியில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பல கிராமங்களில் அன்றாடக் கூலிகளும், விவசாயம் சார் தொழில் செய்தவர்களும் துண்டைத் தோளிலிருந்து உருவி வீசி விட்டு வளரும் தொழில் நகரங்களான திருப்பூர், சிவகாசி, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை என நகர்ந்த போது பிடிவாதமாக நிலத்தோடு பிணைத்துக் கட்டிய சங்கிலியைக் கழற்ற முடியாமல் தவித்த நடுத்தர விவசாயக் குடும்பத்து உறுப்பினராக இருந்தவன் நான்.

பசுமைப் புரட்சியின் அகோரப் பசியைத் தோட்டத்துக் கிணற்றின் நிலத்தடி நீரும் ரசாயன உரங்களும் தீர்க்காத போது போட்டது போட்ட படி திருப்பூருக்குப் போய் பனியன் கம்பெனியில் இரண்டு ஷிப்ட் வேலை செய்தார்கள். ஓராண்டு முடிவில் சிறு பட்டறை உரிமையாளர்களாக மாறிய பின்பு மாரியம்மன் கோவில் திருவிழாவை ஊரில் வந்து கொண்டாடி விட்டுத் திரும்பவும் போனார்கள். ஒன்றிரண்டு நடுத்தர விவசாயிகள் நிலத்தை விற்று முதலீடு செய்து பட்டறை முதலாளிகளான கதை யதார்த்தம். ஆனால் கூடுதல் விலை தந்தாலும் வட நாட்டு முதலாளிக்கு விற்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்யும் இமையத்தின் கதை இலட்சிய வாதம் என்றே தோன்றியது.

சிறு விவசாயிகள் விற்ற நிலத்தை வாங்கிய பெரு விவசாயிகளும் வேளாண் தொழிலைக் கைவிட நேர்ந்த கதைதான் பசுமைப் புரட்சியின் - நவீன வேளாண்மையின் வெற்றிக் கதை என்பதை சொல்லி முடிக்கும் முன்பே இப்போது வேறு சில காட்சிகளும் அரங்கேறத் தொடங்கியுள்ளன. விவசாயம் செய்யப்படாமல் ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் மேய்ச்சல் நிலங்களாக இருந்த மலையடிவாரப் புஞ்சைகளும் நத்தம் புறம்போக்குகளும் சுற்றி வளைக்கப் படுவதை இந்த முறை எனது கிராமத்திற்குப் போன போது பார்க்க முடிந்தது. சில பத்தாயிரம் ரூபாய்கள் மதிப்புடைய மேய்ச்சல் நிலங்களை பல லட்சங்கள் கொடுத்துக் கொத்துக் கொத்தாக யார் யாரோ வாங்கிப் பத்திரம் பதிகிறார்கள் என்கிற தகவல் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

கலவர பூமியாக இருந்த திருநெல்வேலிக்குப் புதிய தொழில் திட்டங்களாக நாங்குநேரி தொழில் நுட்பப் பூங்காவும், கயத்தாறு தொழில் பேட்டையும் அறிவிக்கப் பட்ட போது அதன் சுற்று வட்டார நிலங்களை வாங்கியவர்களில் பாதிப்பேர் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. மொத்தம் மொத்தமாக பல ஏக்கர் கணக்கில் வடநாட்டு முதலாளிகள் வாங்கிப் போட அயல் நாடுகளில் வேலை செய்யும் திருநெல்வேலிக்காரர்கள் தங்கள் சேமிப்புகளை வீடுகளுக்கான மனைகளில் முதலீடு செய்து விலையேற்றத்துக்கு உதவினார்கள். பத்தாண்டு களாகப் பேசப்படும் தொழில் பூங்கா இன்னும் வந்த பாடில்லை. ஆனால் வீட்டடி மனைகள் மட்டும் ஏறு முகத்தில் தான் இருக்கின்றன.

திருநெல்வேலிக்கு அருகில் அறிவிக்கப் பட்ட நாங்குநேரி திட்டம் போல மதுரை மாவட்டத்தின் வறட்சிப் பகுதியான சேடபட்டி, உசிலம்பட்டிப் பகுதியில் புதிய பொருளாதார மண்டலமும், தொழில் பேட்டைகளும் வர இருக்கின்றன என்ற தகவல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே டெல்லியில் கசியத் தொடங்கியிருக்கும் போலும். வட இந்தியப் பணக்காரர்கள் பண மூட்டைகளோடு தரகர்களைப் பிடித்துக் கொண்டு அப்பகுதிக் கிராமங்களுக்கு வந்து காடுகளையும், மலைகளையும், ஏரிகளையும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மாரியம்மன் திருவிழாவிற்கும், காளியம்மன் கொடைக்கும் கிராமத்திற்கு வர வேண்டும் என்ற ஆசையோடு பட்டா நிலங்களைத் தரிசு போட்டு விட்டுத் திருப்பூருக்கும் கோயம்புத்தூருக்கும் பிழைக்கப் போனவர்கள் திரும்பவும் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். ஒரு காணி நிலத்துக்கு ஒரு லட்சம் அதிகம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்குப் பத்து முதல் பதினைஞ்சு லட்சம் கிடைக்கிறது. தங்கள் நிலம் அதிக விலைமதிப்பில் விற்கப்படுகிறது என்ற சந்தோசத்தில் பத்திரத்தில் கையெழுத்துப் போடும் போது, தனக்குச் சொந்தமாக இருந்த விலை மதிப்பில்லா சொந்தக் கிராமம் அந்நியமாகிக் கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். நினைத்துக் கொள்வதற்குக் காரணமாக இருந்த பூவரச நிழலும், தாழை யூத்து அருவியும், கம்பு தின்ன வந்த மயில் கூட்டமும், விலகி விலகிப் போய்க் கொண்டே இருக்கின்றன என்பதை அவர்கள் அறியவில்லை. அவை அவர்களை அந்நியர்களாக்கிக் கொண்டிருக்கின்றன.

வடநாட்டு முதலாளிகளுக்கும் கேரளத்துப் பண்ணைகளுக்கும் மொத்தமாக நிலத்தை வாங்கிக் கொடுத்து பண்ணைகள் அமைக்கும் முயற்சியில் ஏஜெண்டுகளும் புதிய புதிய ஆட்களும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். வாங்க ஆளில்லாமல் கிடந்த மலையடிவாரப் புஞ்சைக் காடுகள் எல்லாம் பெரிய பெரிய தோப்புகளாக ஆகிக் கொண்டிருக்கின்றன. வரப் போகும் முதலாளியப் பொருளாதாரம் சிறு விவசாயிகளைக் கொலை செய்து விட்டுப் பண்ணை வேளாண்மையை வளர்க்கப் போகிறது.

சொந்தக் கிராமத்திலிருந்து திருநெல்வேலிக்கு வந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் இமையத்தின் உயிர்நாடி கதை இடம் பெற்றிருக்கும் அவரது சமீபத்திய சிறுகதைத் தொகுதியான வீடியோ மாரியம்மன் தொகுப்பை எடுத்து அந்த நீண்ட கதையை வாசித்து முடித்த போது வளர்ச்சியின் அடையாளம் அல்ல; இது அழிவின் அடையாளம் என்று இமையம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் அரசியல் கதையை எழுதியிருக்கிறார் என்பது உரைத்தது.

உயிர் நாடி,
வீடியோ மாரியம்மன்(43-84),2008, க்ரியா , பிளாட் 3, எச்.-18, தெற்கு அவென்யூ, திருவான்மியூர், சென்னை-600041

No comments :